போதி மாதவன்/தேவதத்தனும் அஜாசத்துருவும்

பதினெட்டாம் இயல்

தேவதத்தனும் அஜாதசத்துருவும்

‘அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
எரிசுடர் மரைமலர் எனவிடும் அடியினை!
அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ்துமிழ்
முகில்புரி இமிழ் இசை நிகர்தரும் மொழியினை!’

தேவதத்தன் கோலிய மன்னரான சுப்பிரபுத்தரின் மைந்தன், புத்த பகவருடைய மைத்துனன், அநுருத்தன் முதலானோருடன் அவன் சங்கத்தில் சேர்ந்ததிலிருந்தே, மற்றவர்களைப்போல், ஒழுக்க முறைகளிலும், தியான முறைகளிலும் கருத்தில்லாமல், பெருமானுக்கு ஏற்பட்டு வரும் மரியாதைகளையும் புகழையும் கண்டு பொறாமைப் பட்டுக் கொண்டிருந்தான். ஒரு சமயம் அவன் புத்தரிடம் சென்று தனக்கு இருத்தி முறையைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டான் அவர் மறுத்துவிட்டார். ‘விநய ஒழுக்க முறைப்படி நீ நடந்து வந்தால் மெய்யறிவும், இருத்தி ஆற்றலும் தாமாகவே உண்டாகும்’ என்று அவர் கூறி அனுப்பினார்.

பிறகு தேவதத்தன் கௌண்டின்யர், அசுவஜித், பத்ரிகர் முதலியோரிடம் சென்று வேண்டினான். அவர்களும் அஷ்டாங்க மார்க்கத்தின்படி அவன் நற்காட்சி முதலிய படிகளில் பயிற்சி பெறவேண்டும் என்று கூறியனுப்பினர். அதன்பின் அவன் தசபால காசியபரிடம் சென்றான். மகா ஞானியாகிய அம்முனிவர் அவனுக்கு இருத்தி பெறுவதற்குரிய வழிகளை விளக்கிக் கூறினார். அது முதல் அவன் ஊண், உறக்கம் முதலியவைகளைக் கூடக் கவனியாமல் தியானத்திலே அமர்ந்திருந்தான். விரைவிலே அவனுக்கு இருத்தி ஆற்றலெல்லாம் உண்டாகி தன்னைப் போலவே வேறு உருவங்கள் தோன்றும்படி செய்தல், எல்லா உருவங்களையும் ஒன்றாக்கிக் காட்டுதல், தன்னைக் கட் புலனாகாதபடி மறைத்துக் கொள்ளல், நினைத்தபடி வானத்திலே பறந்து செல்லுதல் முதலிய பல சக்திகள் அவனுக்கு உண்டாகி விட்டன.

அந்த நிலையில் அவன், பிம்பிசாரருடைய குமாரன் மகத நாட்டு இளவரசனான அஜாதசத்துருவைத் தோழனாக்கிக் கொண்டு, அவன் மூலம் பிம்பிசாரரையும் புத்த பகவரையும் ஒழித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டான். புத்தரை ஒழித்துவிட்டு அவருக்குப் பதிலாகத் தானே பிக்குக்களின் தலைவனாக வரவேண்டும் என்பதே அவனுடைய ஆசை. அப்படி வரும்போது, தன்னையும் தன் பிக்குக்களையும் ஆதரித்து உதவி புரிவதற்கு உரிய வள்ளலாக அஜாதசத்துருவை முதலில் அரசனாக்கவேண்டும் என்றும் அவன் கருதினான்.

புத்தர் கௌசாம்பி நகரில் இருந்த சமயத்தில் ஒருநாள் தேவதத்தன் இராஜகிருகத்தில் ஆகாய மார்க்கமாக அரண்மனைக்குப் பறந்து சென்று, அஜாதசத்துருவைக் கண்டு, தன் இருத்தி ஆற்றல்களை அவனிடம் காட்டினான். மன்னன் ஒரு பக்கம் பயமும், ஒரு பக்கம் வியப்பும் கொண்டு, தேவதத்தனுக்காகத் தான் எது வேண்டுமானலும் செய்யத் தயாராயிருப்பதாக அறிவித்தான். இரண்டு இளவரசர்களும் நெடுநேரம் சதி செய்து கலந்து பேசிக் கொண்டார்கள். முதலில் அஜாதசத்துரு தன் தந்தையைக் கொலை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பெற்றது.

புத்தரைச் சந்தித்தல்

புத்ததேவர் இராஜகிருகத்திற்கு வந்திருந்த சமயத்தில் தேவதத்தன் அவரிடம் சென்று வணங்கித் தன் விருப்பம் ஒன்றைத் தெரிவித்தான். இறைவ! பகவருக்கு இப்போது வயதாகிவிட்டது; வாழ்வின் கடைசிப் படியை எட்டியாகிவிட்டது. இனிப் பகவர் கவலையில்லாமல் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டிய காலம். பிக்குக்களின் சங்கத்தை என்னிடம் ஒப்படைத்தால், நான் கவனித்துக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்!’ என்று அவன் கூறினான் அதற்குப் பகவர், ‘போதும், தேவதத்தா! பிக்குக்களின் சங்கத்தை ஏற்று நடத்த நீ விரும்ப வேண்டாம்!’ என்று சொல்லிவிட்டார்.

இரண்டு, மூன்று முறைகள் தேவதத்தன் தன் வேண்டுகோளைக் கூறினான். முந்திய மறுமொழியையே பகவர் திரும்பச் சொல்லிவிட்டு, ‘சாரீபுத்திரர், மகா மொக்கல்லானா (மௌத்கல்யாயனர்) ஆகியவர்களிடமே சங்கத்தைக் கவனிக்கும் பொறுப்பை நான் ஒப்படைக்க மாட்டேன்; எச்சில் பொறுக்கி உண்ணும் தீயோனாகிய உன்னிடமா ஒப்படைக்க முடியும்!’ என்று தெரிவித்தார்.

அப்போது அரசரும், அதிகாரிகளும், பல பிக்குக்களும் பகவரைச் சூழ்ந்து அமர்ந்திருந்தனர். எல்லோருடைய முன்னிலையிலும் பகவர் தன்னை இழிவுபடுத்தியும், சாரீ புத்திரரையும் மொக்கல்லானாவையும் உயர்வுபடுத்தியும் பேசியதை அவனால் தாங்கமுடியவில்லை. அவன் பகரை வணங்கிவிட்டு வெஞ்சினத்தோடு வெளியேறினான்.

பிம்பிசாரரின் சிறைவாசம்

அஜாதசத்துரு தேவதத்தனுடைய ஆலோசனைப்படி தன் தந்தையைத் தானே கொன்றுவிடவேண்டும் என்று பலநாள் முயன்றான். ஆனால் அதற்கு மனம் வரவில்லை. ஆதலால் அவரைச் சிறையில் அடைத்துவிட்டுத் தான் சிம்மாசனம் ஏறினான். பிம்பிசாரர் உயிரோடிருப்பதில் தேவதத்தனுக்கு மிக்க வருத்தம் ஏற்பட்டது. எனினும் புதிய அரசன் அஜாதசத்துரு அவனுக்குத் தனி விகாரை ஒன்றைக் கட்டிக் கொடுத்தான். ஐந்நூறு சீடர்களும் சேர்ந்தனர். அவர்களுக்கு அரண்மனையிலிருந்து நாள் தோறும் வண்டி வண்டியாக உணவும், மற்றைப் பொருள்களும் சென்று கொண்டிருந்தன.

சிறையிலே அடைக்கப் பெற்றிருந்த மன்னருக்கு உணவும் மறுக்கப்பட்டது. மகாராணி மட்டும் தினந்தோறும் அவரைச் சந்தித்து வந்தாள். அவள் சந்திக்கும் நேரத்தில் இரகசியமாகக் கொஞ்சம் உணவு கொண்டு போய்க் கொடுத்து வந்தாள். அதையறிந்த மன்னர் அவள் செல்வதையும் தடுத்துவிட்டான். ஆயினும் பிம்பிசாரர் சிறைக்கோட்டத்திலே கவலையில்லாமல் காலங்கழித்து வந்தார். உணவில்லாமல் உடல் தேய்ந்துகொண்டிருந்தும், அவர் உள்ளம் நிறைவு பெற்றிருந்தது. ஏனெனில், சிறையி லிருந்து கொண்டே அவர் போதி வேந்தரை ஒவ்வொரு நாள் மாலையிலும் தரிசிக்க முடிந்தது. அவர் அடைக்கப் பெற்றிருந்த அறையில் ஒரு சாளரம் இருந்தது. அதன் வழியாகப் பார்த்தால் கிருத்திரகூடம்.[1] என்ற மலை தெரியும் அங்கேயும் ஒரு விகாரை இருந்தது. பகவர் மாலை நேரத்தில் விகாரையிலிருந்து வெளிவந்து மலை மீது ஏறிச்செல்வது வழக்கம். அவர் நோக்கம் பிம்பிசாரருக்குக் காட்சியளிக்க வேண்டும் என்பதே. புத்த தரிசனம் ஒன்றே தமக்குப் போதுமானது என்று பிம்பிசாரர் ஆறுதல் கொண்டிருந்தார்.

இதை அறிந்த அஜாதசத்துரு சிறையிலிருந்த சாளரத்தையும் அடைத்துவிடுமாறு உத்தரவிட்டான். ஒருநாள் பகவர் மௌத்கல்யாயனரைப் பிம்பிசாரரிடம் அனுப்பி யிருந்தார். மௌத்கல்யாயனர் தமது இருத்தி ஆற்றலால் சிறையுள் புகுந்து வயோதிக மன்னருக்கு வேண்டிய ஆறுதல் மொழிகளைக் கூறினார்.

பின்னர் சில நாட்களில் அஜாதசத்துரு தன் குழந்தையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கையில், தன்னையும் தன் தந்தை எவ்வளவு பிரியமாக வளர்த்திருப்பார் என்று எண்ணித் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அவன் விடுதலை செய்யுமுன் அவரே முக்தியடைந்து விட்டார் என்று பழைய வரலாறுகள் கூறுகின்றன.

புதிய மன்னனிடம் தேவதத்தன் பரிசுகள் பெற்று வருவதையும், அரச சபையில் அவனுக்குப் புகழ் ஏற்பட்டு வருவதையும் பற்றிப் புத்தர் பிரான் தம் சீடர்களுக்குச் சில சமயங்களில் விளக்கிக் கூறி வந்தார். மூடனுக்கு ஏற்படும் புகழும், ஆதரவும், அவனது அழிவுக்கே காரணமாகும் என்று அவர் கூறினார். வாழை குலை தள்ளுவதும், மூங்கில் கனி பெறுவதும் அவைகளின் அழிவுக்காகவே என்பதை அவர் உபமானமாக எடுத்துக் காட்டினார். ‘நீங்கள் ஊதியங்களையோ, உபகாரங்களையோ, போலிப் புகழுரைகளையோ விரும்பாமலிருங்கள்!’ என்று பிக்குக்களுக்கு எச்சரிக்கையும் செய்தார்.[2]

தேவதத்தனின் கொலை முயற்சிகள்

தேவதத்தன் மன்னனின் உதவி கொண்டு, பெருமானை அழிப்பதற்காக ஐந்நூறு வில்லாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏராளமான பொன்னைப் பரிசளித்தான். ஆனால் அவர்கள் மனம் மாறிப் புத்த தேவரிடம் தரும் உபதேசம் கேட்கச் சென்று விட்டனர். பின்னால் கிரித்திரகூட மலையிலிருந்து ஒரு பெரும் பாறையைப் பகவர் அடிவாரத்தில் நடந்து செல்லும்போது அவர் மீது உருட்டி விட வேண்டும் என்றும் தேவதத்தன் ஏற்பாடு செய்தான். அதற்கு வேண்டிய எந்திரங்களும் அமைக்கப் பெற்றன. ஆனால் பாறை பகவர் தலைக்கு நேராகக் கீழே விழுந்த சமயத்தில், அது இரு துண்டு களாகி ஐயனின் இரண்டு பக்கங்களிலும் விலகிப் போய் விழுந்தது. எனினும் அதிலிருந்து சிதறிய சிறு கற்கள் ஐயனின் பாதத்தில் பட்டதால் புண் ஏற்பட்டது. அதனை அரசனுடைய புகழ்பெற்ற வைத்தியராயும், பகவரிடம் பக்தி கொண்ட சீடராயும் விளங்கிய ஜீவகர் மருந்திட்டுக் குணப்படுத்தி விட்டார்.

தேவதத்தன் மனிதரை ஏவிப் பகவரை அழிக்க முடி யாது என்று கண்டு, இரத்தினபாலன் என்ற மதயானையை அவிழ்த்து விட்டு, அதனைக் கொண்டு தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தீர்மானித்தான். அதன் பாகனைக் கண்டு பெருநிதி கொடுத்துக் குறித்த நாள் ஒன்றில் அதைத் தெருக்களிலே சுற்றி வரும்படி அனுப்ப ஏற்பாடு செய்தான். அரசனும் அதற்கு ஆதரவு அளித்தான்.

அன்று புத்தர் பிரான் இராஜகிருகத்தில் ஒரு பெருந்தனிகரின் வீட்டில் ஐயம் ஏற்றுக்கொள்ள இசைந்திருந்தார். அவருடன் ஐந்நூறு பிக்குக்களும் வந்து கொண்டிருந்தனர். நகரில் மதயானை வெளிவரப் போகின்றது என்று எச்சரிக்கை மணி எங்கும் ஒலித்தது. உடனே புத்தருக்கு விருந்தளிக்க இசைந்த செல்வரும் பல மக்களும் ஓடிச் சென்று விஷயத்தைச் சொல்லி, ஐயனும் பிக்குக்களும் நகருக்குள் வர வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர். ஆனால் பெருமான் அதற்குச் செவி சாய்க்கவில்லை. எதுவும் நிகழாதது போலே, அவர் வழக்கம்போல் நடந்து கொண்டே நகரை நண்ணினார்.

மதங்கொண்ட யானைக்கு வெறியளிப்பதற்காக மேற்கொண்டு மதுவும் கொடுக்கப்பட்டிருந்தது. குன்றம் உருண்டு செல்வது போல் அது முழக்கம் செய்து கொண்டு வீதிகளிலே ஓடிக் கொண்டிருந்தது ஜனங்கள் வீடுகளை அடைத்து விட்டு மாடிகளிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். விவரம் தெரியாமல் தெருக்களில் நடந்து வந்த மக்களிற் பலர் யானையால் மிதிக்கப் பெற்று உயிர் துறந்தனர். தேவதத்தன் உயர்ந்த மாடி. ஒன்றில் நின்ற வண்ணம் ஐயன் வரவை எதிர்பார்த்திருந்தான்.

புத்தரும் பிக்குக்களும் வீதிகளின் வழியாக நடந்து வந்தனர். மாடிகளிலே நின்ற மக்கள் அவர்கள் திரும்பச் செல்லும்படி கூக்குரலிட்டுக் கூவினர். பெருமான் எதையும் பொருட்படுத்தாமலே அமைதியோடு சென்று கொண்டிருந்தார். வழியிலே யானைக்குப் பலியானவர்களின் பிணங்கள் நசுங்கிக் கிடந்தன. திடீரென்று இரத்தின பாலன் பகவருடைய கூட்டத்தை நோக்கி ஆவேசத்துடன் ஓடி வந்தது. பெருமானைச் சூழ்ந்து சென்று கொண்டிருந்த பிக்குக்கள் நாலு பக்கங்களிலும் சிதறி ஓடிவிட்டனர்; பலர் ஆகாயத்திலே பறந்து சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. அணுக்கத் தொண்டர் ஆனந்தர் ஒருவர் மட்டுமே, ஐயனின் நிழலைப் போலே அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.

வீதிகளும், வீடுகளும் அதிரும்படி பாய்ந்து வந்த வேழத்தை நோக்கிப் பெருமான் எதிர்கொண்டு சென்றார். அவரைக் கண்டதும் யானை, மண் மீது மலை சாய்வதுபோல், அவர் பாதத்தடியில் வீழ்ந்து வணங்கியது. ஐயன் அதனைப் பார்த்து, ‘இன்று முதலே உன் வெறி, மயக்கம், கோபம் முதலியவற்றை ஒழித்து விடு! துக்கச் சேற்றில் நீ அழுந்தியது போதும்! இப்போதே நீ தீமைகளைக் கைவிடாவிட்டால், உன் பாவ மூட்டை மேலும் மேலும் பெருகிக் கொண்டேயிருக்கும்!’ என்று உபதேசம் செய்தார். மதயானையின் இதயம் சாந்தி பெற்றது. இக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த ஜனங்கள் பெருமானுக்குப் பல காணிக்கைகளைக் கொண்டு வந்து செலுத்தி வணங்கி நின்றனர்; உற்சாக மிகுதியால் தங்கள் நகைகளைக் கழற்றி ஐயனிடம் உபதேசம் பெற்ற யானைக்கும் அணிவித்தனர். அந்த யானையின் இயற் பெயர் 'மாலகிரி' என்றும், ஏராளமான இரத்தின ஆபரணங்களைப் பெற்றதால் இது ‘இரத்தினபாலன்’ அல்லது ‘தன பாலன்’ என்று பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. பௌத்த தருமத்தில் அதுவரை நிலைத்து நில்லாத பல மக்கள் அப்பொழுது முதல் அதிலே ஊக்கம் கொண்டனர். மன்னனும் இரத்தின பாலன் அடங்கி வணங்கிய செய்தி கேட்டு ஆச்சரியமடைந்தான். தேவதத்தன் மட்டும் தனது கடைசி முயற்சியும் தோல்வி யடைந்ததை எண்ணி மனம் புழுங்கிக் கொண்டிருந்தான்.

பிற்காலத்தில் புத்த சரித்திரத்தைச் சித்திரங்களாகத் தீட்டியுள்ள விகாரைகளிலும், ஆலயங்களிலும் மதயானை பெருமானைத் துரத்தி வருவதும், அவர் அதனை ஆட் கொள்வதும் அழகிய சித்திரங்களாக எழுதப்பெற்றிருக்கின்றன. அஜந்தா, அமராவதி போன்ற இடங்களிலும், வெளிநாடுகளிலுள்ள ஆலயங்களிலும் இந்தச் சித்திரங்களை இப்போதும் காணலாம்.

ஜீவகர்

பகவரிடம் அன்பு பூண்டு அவர் அருளைப்பெற்ற அடியார்களுள் அநாத பிண்டிகர், விசாகை முதலியவர் களோடு ஜீவகருடைய பெயரும் அடிக்கடி கூறப்படும். ஜீவகர் அக்காலத்திலே தலைசிறந்த மருத்துவராக விளங்கி வந்தவர். அவர் மகத மன்னர் பிம்பிசாரருக்கு அரண்மனை வைத்தியராக இருந்தார். பின்னால் அஜாதசத்துருவுக்கும் அவரே வைத்தியர்.

பிம்பிசாரருடைய மற்றொரு மைந்தனான அபயன் என்பவனுக்கும் புகழ்பெற்ற சாலாவதி என்ற தாசிக்கும் மைந்தராகப் பிறந்தவர் ஜீவகர் என்று கூறுவர். அவர் பிறந்த செய்தி எதுவும் இளவரசருக்குத் தெரியாது. குழந்தை பிறந்ததும், அதை ஒரு கூடையில் வைத்து அருகிலிருந்த ஒரு வனத்திலே கொண்டுபோய் வைத்து விட்டு வரும்படி சாலாவதி ஏற்பாடு செய்திருந்தாள். அவ்வனத்திலே வேட்டைக்குச் சென்ற அபயன் குழந்தையின் குரலைக் கேட்டு அதை அரண்மனைக்கு எடுத்துவந்து வளர்த்து, அதற்கு ஜீவகன் என்று நாமகரணம் செய்தான்.

ஜீவகர் சிறு வயதிலேயே மகா புத்திசாலியாக விளங்கினார். ஆனால் தமது தாய்தந்தையர் எவரென்று தெரியாததால் அவர் மிகவும் துயரமடைந்தார். அந் நிலையில் கல்வி கேள்விகளிலே பயிற்சிபெற்றுத் தாம் உயர்ந்த நிலையை அடையாவிட்டால், வாழ்க்கை பெருந்துன்பமாகவேயிருக்கும் என்று உணர்ந்து, அவர் தட்சசீலம் சென்று, அங்குள்ள கலாசாலையில் படித்து வந்தார். ஆரம்பத்திலிருந்தே மருத்துவத்திலே அவர் மனம் பற்றுக்கொண்டிருந்ததால், அதையே அவர் பயின்றார். சில ஆண்டுகளுக்குள்ளே அவர் அதில் தேர்ந்து விளங்கினார். கல்வி முடிந்தபின் ஆசிரியர் அவருக்கு வழிச்செலவுக்குப் பொருள் கொடுத்து, ஆசி கூறி, அனுப்பிவைத்தார்.

வருகின்ற வழியிலே சாகேத நகரில் ஒரு செல்வச் சீமாட்டிக்குப் பல ஆண்டுகளாக ஏற்பட்டிருந்த தலை வலியை ஜீவகர் நிவாரணம் செய்து, பெருஞ்செல்வமும் புகழும் பெற்றார். மிக்க சிறப்போடு அவர் இராஜகிருகத்தில் அபயனைச் சென்று கண்டார். இடையில் அபயன் ஜீவகர் தமது குமாரரே என்பதை விசாரித்து அறிந்து கொண்டிருந்ததால், அவர் வந்ததும், தானே அவர் தந்தை என்பதையும், சாலாவதி அவர் தாய் என்பதையும் தெரிவித்தார்.

நாள்தோறும் ஜீவகரின் புகழ் அதிகரித்து வந்தது. மன்னர் பிம்பிசாரருக்கும் அவரே வைத்தியம் செய்து வந்தார். காசி, உஜ்ஜயினி முதலிய பெரு நகரங்களிலிருந்து செல்வர்கள் பலர் அவரைத் தேடிவரலாயினர். ஒரு சமயம் புத்தர் பெருமான் உடல் நோயுற்றிருக்கையில், ஆனந்தர் ஜீவகரை அழைத்துச் சென்றார். ஜீவகர் தாம் பிறவி யெடுத்த பெரும்பேறு கிடைத்துவிட்டது என்று அக மகிழ்ந்து, பெருமானுக்கு வைத்தியம் செய்தார். நோயின் காரணங்கள் மூன்று என்று கண்டு, அவர் மூன்று தாமரை மலர்களைப் பெருமானிடம் கொடுத்து, அவைகளை முகர்ந்து பார்த்தால் நோய் நீங்கும் என்றார். அம்மலர்களிலே உடலில் சேரவேண்டிய மருந்துப் பொடிகள் சேர்ந்திருந்தன. பெருமான் அவர் கூறியபடியே செய்ததில், பிணி உடனே குணமாகிவிட்டது. பின்னால் தேவதத்தன் வீசிய பாறையிலிருந்து தெறித்த கற்களால் அவருடைய பாதத்தில் ஏற்பட்ட புண்ணையும் ஜீவகரே குணப்படுத்திய செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. பெருமானுக்கு ஜீவகரிடத்தில் அளவற்ற பிரியமுண்டு. கல்வி, கேள்வி, ஒழுக்கம், தரும விருப்பம் முதலியவற்றிலே ஜீவகர் சிறந்து விளங்கியதால், அவர் எது சொன்னாலும் ஐயன் அதை அன்போடு கேட்டுக் கொள்வது வழக்கம். ஜீவகர் வேண்டுகோளுக்கு இணங்கியே பிணி வந்த காலத்தில் பிக்குக்கள் மருந்துகளை உபயோகித்துக் கொள்ளலாம் என்று அவர் அனுமதித்தார்.

ஒரு சமயம் உஜ்ஜயினி மன்னர் பிரத்தியோதர் தமக்கு ஏற்பட்டிருந்த காமாலையைக் குணப்படுத்தியதற்காக ஜீவகருக்கு மிக உயர்ந்த ஆடைகளைப் பரிசளித்தார். அவைகளைப் பார்த்ததும், ஜீவகர், ‘இவ்வளவு உயர்ந்த ஆடைகளைப் புத்த தேவருக்கே காணிக்கையாக அளிக்க வேண்டும்; இல்லாவிடில் மன்னர் பிம்பிசாரரே இவற்றிற்கு உரியவர்!’ என்று கருதினார். பிறகு அவ்வுடைகளைப் பெருமானிடமே கொண்டு சேர்த்து விட்டார். ‘நல்ல பொருள்களெல்லாம் நம்பிரானுக்கே உரியவை’ என்று அவர் கருதியதைக் கண்டு பெருமான் மனம் கனிந்திருந்தார். அவ்வமயம் ஜீவகர், ‘பொதுமக்கள் உவந்து அளிக்கும் உடைகளைப் பிக்குக்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்று பகவர் அனுமதியளிக்க வேண்டும். இதுவரை கிழிந்த கந்தல்களையும், பிணங்களுக்குப் போர்த்தும் துணிகளையுமே அவர்கள் அணிந்து வருகிறார்கள் இதனால் நோய்களும் ஏற்படுகின்றன’ என்று வேண்டினார். பெருமானும் அவ்வாறே அனுமதித்தார். அதைக் கேட்ட இராஜகிருக மக்கள், உடனே ஆயிரக்கணக்கான உடைகளை எடுத்துக் கொண்டு போய்ப் பிக்குக்களுக்கு அளித்தனர்.

அஜாதசத்துரு தருமத்தை ஏற்றல்

கோடை காலத்தில் ஒரு பூர்ணிமையன்று இராஜகிரு கத்தில் கோலாகலமான திரு நாள் ஒன்று நடந்தது. அன்று மாலை அஜாதசத்துரு மிக்க ஆடம்பரத்துடன் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். மந்திரிகளும் பிரபுக்களும் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது அவன் தன் மனத்திற்கு ஆறுதலளிக்கும் முறையில் யாரிடமாவது போய் அறவுரைகள் கேட்டு வரவேண்டும் என்று விரும்பினான். அவன் தன் தந்தையின் உயிரைப் பலி வாங்கியதிலிருந்து மனச்சாந்தியை இழந்துவிட்டான். இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. பிம்பிசாரரின் மரணம் அவன் உள்ளத்தைப் பெரும் பாறையைப்போல் நசுக்கிக் கொண்டேயிருந்தது.

மந்திரிகளும் பிரபுக்களும் சில பெரியோர்களுடைய பெயர்களைச் சொல்லி, அவர்களைப் போய்த் தரிசித்து வரலாம் என்றனர் ஒருவர் பூர்ண காசியபர் பெரிய மத குரு என்றும், அவரைக் காண்பது நலம் என்றும் கூறினார். அரசனின் மைந்தனான உதாயிபத்ரன் ஏதாவது ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்லலாம் என்று கூறினான். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ஜீவகர் மட்டும் வாய் திறந்து பேசவேயில்லை. ஏனெனில், அவர் ஆலோசனை சொல்வதானால், புத்தரிடம் செல்ல வேண்டும் என்றே கூறுவார்; ஆனால் பெருமானிடம் மன்னனுக்குப் பகைமை இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றிக் கூறுகையில், தாமும் பெருமானின் பெயரைச் சொல்லிக் குழப்பத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கருதியிருந்தார். ஆனால் அரசன் அவரைப் பார்த்து, ‘மற்றவர்கள் தத்தம் குருமார்களைப் பற்றி கூறுகையில் நீ மட்டும் மௌனமாயிருப்பதன் காரணம் என்ன? உனக்கு ஏதாவது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறதா?’ என்று வினவினார். அப்போது ஜீவகர், சமயம் வந்துவிட்டது என்பதை அறிந்து பேசலானார். போதிமாதவரின் பெருமைகளை எடுத்துச் சொல்லி ‘அநேகர் வணங்கி ஏத்தவும், பல்லாயிரவர் உபதேசம் கேட்கவும், அந்தக் கருணை வள்ளல் எனது மாந்தோப்பிலுள்ள விகாரையிலேயே இப்போது அமர்ந்திருக்கிறார்; அவரை நாம் போய்த் தரிசித்தல் நலம்!’ என்றார்

புத்தர் பால் பற்றுடையவர்களிடத்திலே அஜாதசத் துருவுக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. ஏனெனில் பெருமானுக்கு அவன் அத்தனை தீங்குகள் செய்திருந்தான். ஆகவே, அவன் ஜீவகரிடத்தில் உண்மையைச் சொல்லும்படி கேட்டான். ‘என்னை ஏமாற்றவில்லையே? எதிரிகளிடம் என்னைக் காட்டிக் கொடுக்கும் சூழ்ச்சி எதுவும் இல்லையே? என் உயிருக்கு ஆபத்தில்லையே?’ என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டான். எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று ஜீவிகர் பதிலுரைத்தார். ஆயினும் தாங்கள் தனித்துச் செல்லாமல் தக்க பாது காப்புடனும், பெரும் கூட்டமான ஜனங்களுடனும் செல்வது நலம்’ என்றும் அவர் யோசனை கூறினார். எவரேனும் பகைவர் மறைந்திருந்து மன்னனுக்குத் தீங்கிழைத்தாலும், அந்தப் பழி தம்மையே சாரும் என்று அவர் அஞ்சினார். மேலும் பகவர் அவரவர் தகுதியை அறிந்தே உபதேசம் செய்ய இசைவர் என்பதையும், மன்னனுக்குத் தகுதியைப் பார்க்கினும் பாவமே அதிகமிருக்கும் என்பதையும் எண்ணி, அவர் ஏராளமான ஜனங்களுடன் செல்ல விரும்பினார். ஜனங்களிலே புண்ணியம் புரிந்தவர்கள் இருப்பார்கள் என்றும், அவர்களுக்காக ஐயன் அறவுரை கூறுவார் என்றும் அவர் கருதிருயிந்தார்.

கடைசியாக மன்னன் மருத்துவரின் யோசனைப்படியே புத்த தேவரைத் தரிசிக்கப் புறப்பட்டான். ஆண்களின் உடையுடன் ஆயுதந் தாங்கிய ஏராளமான பெண்களுடனும், பரிவாரங்களுடனும், பொதுமக்களுடனும், அவனும் ஜீவகரும் ஒரு யானை மீது அமர்ந்து கழுகுமலை மேல் அமைந்திருந்த விகாரையை நோக்கிச் சென்றனர். வானத்தில் பூர்ணச்சந்திரன் தன்ணொளி பரப்பிக் கொண்டிருந்தான். வழியெங்கும் மன்னன் மன அமைதி யில்லாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டேயிருந்தான்.

விகாரையை அடைந்ததும், யானையை ஒருபுறமாக விட்டுவிட்டு, மன்னனும் ஜீவகரும் மற்ற மக்களுடன் புத்த தரிசனத்திற்காகச் சென்றனர். அப்போது பால்போன்ற நிலவில், ஆயிரத்து இருநூற்றைம்பது சீடர்களின் நடுவிலே, போதிமாதவர் அமர்ந்திருந்தார். மன்னன் அந்தக் கூட்டத்திலே எவர் புத்தர் என்று ஜீவகரிடம் கேட்டான். பிக்குக்களின் நடுவே ஒப்பற்ற எழிலுடன் நடுநாயகமாக விளங்குபவரே அருள் வள்ளலாயிருக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். எனினும் அரசர்க்குரிய முறைப்படி தனக்குத் தெரியாததுபோல் கேட்டுக் கொண்டான். அவனுடைய கேள்வி, ‘பூமி எது?’ என்பது போலவும், ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே, சூரியன் எது? சந்திரன் எது?’ என்று கேட்பது போலவும், ஜீவகருக்குத் தோன்றிற்று. செந்தாமரை போன்ற மலர்ந்த முகமும், அண்டினோர் அனைவருக்கும் அபயமளிக்கும் அருட்கரமும் கொண்டு விளங்கிய பெருமானை அவர் சுட்டிக்காட்டி, ‘அவரே போதிமாதவர்!’ என்றார்.

அஜாதசத்துரு, தனது மேலங்கியைக் கழற்றி ஒரு தோளில் போட்டுக் கொண்டு, பகவரிடம் சென்று முழங்கால் படியிட்டுத் தரையைத் தொட்டு வணங்கினான். பின்னர் கைகளைக் கட்டிக் கொண்டு ஒருபுறமாக ஒதுங்கி நின்று, ‘பகவ! இங்கே பிக்குக்கள் அனைவரும் மன அடக்கத்துடன் சாந்தியோடு திகழ்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. இத்தகைய சாந்தி என் இளவரசன் உதாயிபத்ரனுக்கும் கிடைத்தால் பாக்கியந்தான்!’ என்று கூறினான்.

‘நன்று. நன்று, மகாராஜா! இளவரசனிடம் நீங்கள் அளவற்ற அன்பு கொண்டிருக்கிறீர்கள்! உட்காருங்கள்!’ என்று பெருமான் கூறினார்.

மன்னர் அவர் பாதங்களை மறுபடி வணங்கி, ஒரு பக்கத்தில் அமர்ந்துகொண்டு, ‘பகவர் அனுமதித்தால் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்’ என்று வேண்டினான்.

எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று பகவர் சொன்னார்.

அஜாதசத்துரு, ‘உலகத்திலே மக்கள் பல தொழில்களைச் செய்து அவற்றால் பயனடைவதுபோல், தருமத்தை மேற்கொண்டு, ஒழுக்கமும் பேணுவதால் வெளிப்படையாகத் தெரியக்கூடிய பயன் ஏதும் உண்டாகிறதா?’ என்று கேட்டான்.

அந்தக் கேள்வியை வேறு யாரிடமாவது அவன் கேட்டதுண்டா என்று பகவர் வினவினார். அதற்கு அவன், ‘ஆம்’ என்று சொல்லி, பூர்ண காசியபர், கோசாலி, சஞ்சயர், அஜித கேசகம்பளர், நிக்கிராந்தர், காத்தியாயனர் முதலிய சமயத் தலைவர்களிடம் முன்னால் தான் கேட்டதாகவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகப் பதிலுரைத்ததாகவும், எதுவும் தனக்குத் திருப்தியளிக்கவில்லை என்பதாகவும் கூறினான்.

பகவர் அவனுடைய கேள்விக்குப் பதிலாகத் தாமும் அவனை ஒரு கேள்வி கேட்க விரும்பினார்: ‘மகாராஜா! உங்களிடம் ஓர் அடிமை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவன் தன் விருப்பம்போல நடக்க முடியாது; தனக்கு என்று அவனுக்கு எவ்வித இன்பமும் கிடையாது; ஏவிய பணிகளைச் செய்வதே அவன் கடமை. அத்தகைய ஏவலாளன் தங்கள் அரண்மனையையும், அதிலே தாங்கள் உலகத்தில் அனுபவிக்க வேண்டிய செல்வங்களும் இன்பங் களும் நிறைந்திருப்பதையும் பார்த்து, ஒரு சமயம் இப்படி எண்ணக்கூடும்: “மகத மன்னரான வைதேகி புத்திரர் அஜாதசத்துருவும் ஒரு மனிதரே; நானும் மனிதனே! ஆனால் அஜாதசத்துரு, பூர்வ ஜன்மங்களின் புண்ணிய வசத்தால், இப்போது அரண்மனையில் வசித்து, மனிதர் அடையமுடியாத இன்பங்களையெல்லாம் துய்த்துக் கொண்டிருக்கிறார். நானும் நற்கருமங்களை மேற்கொண்டு புண்ணியத்தைத் தேடி அவரைப்போல் ஆக முடியும். நான் என் தலைமயிரையும் தாடியையும் மழித்து விட்டுக் காவியுடை அணிந்து, வீட்டு வாழ்க்கையைத் துறந்து துறவியாகிவிடுவேன்!”

‘அவன் எண்ணியபடியே துறவு பூண்டு, உயிர்க் கொலை புரிதல், களவு காமம், வேடிக்கை, விளையாட்டுக்கள், நிந்தனை, பேராசை, புறங்கூறுதல், பிறருக்குத் தீங்கு நினைத்தல் முதலிய பாவ கருமங்களையெல்லாம் விட்டொழித்துவிடுகிறான். அவனைத் தங்கள் அதிகாரிகள் கண்டுவந்து தங்களிடம் அறிவிப்பார்கள். அப்போது தாங்கள் என்ன செய்வீர்கள்? அந்தத் துறவியைப் பிடித்து வரச்சொல்லி, அவன் மறுபடி உங்கள் அடிமையாகவும், பணியாளாகவுமே இருக்கவேண்டும் என்று உத்தரவு போடுவீர்களா?’

அஜாதசத்துரு கூறினான்: ‘பகவ, அவ்வாறு செய்ய மாட்டேன்! அவனை நான் எந்த இடத்தில் கண்டாலும், அவன் முன்பு எழுந்து நின்று என் இரு கைகளையும் கூப்பி வணங்குவேன். அவன் அந்தத் துறவு வாழ்க்கையில் ஈடு பட்டிருக்கும்வரை நான் அவனுக்கு உடைகளும், உணவும். தங்குவதற்கு இடமும், மருந்துகளும் அளித்து வருவேன்!’

‘தருமத்தை மேற்கொண்டு ஒழுகுவதில் கண் முன்பு தெரியக்கூடிய பயன் விளைகிறது என்பது இந்த உதாரணத்தின் மூலம் தெரிகிறது அல்லவா?’ என்று பெருமான் கேட்டார்.

மன்னன் திருப்தியடைந்தான். பின்னர் அவன் அவருடன் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்தான். ஐயன் தருமத்தைப்பற்றி அவனுக்கு விரிவாக விளக்கி உரைத்தார்.[3]

முடிவில் அஜாதசத்துரு மனத்தெளிவுபெற்று, ‘நான் தருமத்தைச் சரணடைகிறேன்; புத்த பகவரே மெய்ஞ் ஞானி என்பதை மறுப்பதைப் பார்க்கினும் என் தலை அறுபடுவதையே நான் விரும்புவேன்; நான் சங்கத்தையும் சரணடைந்து உபாசகனாகிறேன்!’ என்று கூறினான் அவன் வெளியே சென்றபின், பெருமான், ‘இவன் இந்தப் பிறவியிலேயே அருகத்தாக விளங்கவேண்டியவன்; ஆனால் தந்தையைக் கொலை செய்த பாவம் குறுக்கே நிற்கிறது!’ என்று மொழிந்தார்.

தேவதத்தனின் முடிவு

தேவதத்தனின் துர்ப்போதனையைக் கேட்டே அஜாத சத்துரு பழைய மன்னரின் உயிரைப் போக்கினான் என்பதை அறிந்திருந்த அமைச்சர்களும். பிரபுக்களும், புத்தர் பெருமானின் ஏற்றத்தை எடுத்துக் காட்டி, மேற்கொண்டு தேவதத்தனுக்கும் அவனுடைய துறவிகளுக்கும் அரசன் எவ்வித உதவியும் செய்யவேண்டியதில்லை என்று ஆலோசனை கூறினார். அவ்வாறே உதவிகளை நிறுத்திவிடும்படி அரசனும் கட்டளையிட்டான். அரண்மனையிலிருந்து வண்டி வண்டியாக உணவுப் பொருள்கள் வருவது நின்று போகவே தேவதத்தனுடைய துறவிகள் அவனைக் கை விட்டனர். வறுமையாலும், மனவேதனையாலும் அவன் மிகவும் அவதிப்பட்டான். எனினும் மீண்டும் ஒருமுறை புத்தரைச் சந்தித்துத் தன் காரியம் கைகூடுமா என்று பார்க்க அவன் விரும்பினான்.

ஒருநாள் அவன் புத்தரிடம் சென்று, அவரை வணங்கி, ஐந்து வேண்டுகோள்களுடன் தான் வந்திருப்பதாகக் கூறினான். பெருமானும் அவற்றைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தார். அவன் வேண்டுகோள்கள் வருமாறு: பிக்குக்கள் மேற்கொண்டு நகரங்கள் கிராமங்களுக்கு அருகிலுள்ள விகாரைகளில் தங்காமல் காடுகளிலேயே இருக்கவேண்டும்; அவர்கள் ஐயமெடுக்கும் உணவைத் தவிர மக்கள் விகாரைகளில் கொண்டுவந்து அளிக்கும் உணவுகளைத் தீண்டக்கூடாது; இடுகாடுகளில் பிணங்களின் மீதுள்ள துணிகளைத் தவிர வேறு உடைகளைப் பிக்குக்கள் அணியக்கூடாது; அவர்கள் மரங்களின் அடியில் தங்கலாமேயன்றிக் கூரையுள்ள வீடுகளுக்குள் புகவே கூடாது; எந்தப் பிக்குவும் எத்தகைய புலாலையும் உண்ணக்கூடாது; இந்த ஐந்து விதிகளையும் புத்தர் உடனே அமலுக்குக் கொண்டு வரவேண்டும்.

இவைகளில் ஒவ்வொன்றையும் மறுத்துப் போதி வேந்தர் பதிலளித்தார். உடலை மிகவும் வருத்தக்கூடிய தவத்தையும், உலக போகங்களில் ஆழ்ந்திருப்பதையும் மறுத்து, நடுவழியான தருமத்தை அவர் உபதேசித்து வந்ததால், மிகவும் கடுமையான விதிகளை விதிக்க விரும்பவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த விதிகளைக் கூட அவர் பின்னால் தளர்த்திவிட்டார். தேவதத்தனுடைய நோக்கம் சங்கத்தில் பிக்குக்களே இல்லாமற் செய்து விட வேண்டும் என்பது. அதை அறிந்த புத்தர் பெருமான், வயோதிகர்களும், குழந்தைகளும், பெண்களும்கூடச் சங்கத்திலிருப்பதால், எல்லோரும் வனங்களிலேயே இருக்க வேண்டும் என்று கூறுவது தவறு என்றும், ஊர்களுக்கு அருகே இருந்தால்தான் பிக்குக்கள் அடிக்கடி மக்களுக்கு உபதேசிக்க முடியும் என்றும், விருப்பமுள்ளவர்கள் மட்டும் வனங்களில் வசிக்கலாம் என்றும் கூறினார். இவ்வாறே மற்ற வேண்டுகோள்களையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் புலால் உணவு பற்றி அவர் கூறுகையில், உணவுக்காக உயிர்க்கொலை புரிதல் கூடாது என்றும், ஆனால் மக்கள் அளிக்கும் புலால் உணவுகளைப் பிக்குக்கள் ஏற்றுக்கொள்வதைத் தாம் தடுக்க இயலாது என்றும், பிக்குக்கள் அவர்கள் இருக்கும் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களின்படி நடந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என்றும், எந்த உணவானாலும் நாவுக்கு அடிமைப்பட்டிருக்கக் கூடாது என்பதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

தேவதத்தன் தன் முயற்சியில் தோல்வியுற்றுத் திரும்பி விட்டான். பின்னர், தன்னை விட்டுச் சென்ற துறவிகளைச் சமாதானப்படுத்தி மீண்டும் தன் விகாரைக்கு அழைத்து வந்தான். அந்தத் துறவிகளின் வாழ்க்கை வீணாகாமல் அவர்களை உய்விக்கக் கருதிப் புத்தர் பிரான் சாரீபுத்திரரையும், மௌத்கல்யாயனரையும் அவர்களிடம் அனுப்பிவைத்தார்.

அவர்கள் தேவதத்தனுடைய விகாரைக்குச் சென்ற சமயத்தில், அவன் புத்தரைப் போலப் பாவனை செய்து அமர்ந்துகொண்டு, சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தான். அவன் அவர்களைப் பார்த்ததும், அவர்களும் தன் கட்சிக்கு வந்துவிட்டதாக எண்ணி, மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான். சிறிது நேரத்திற்குப் பின், அவன் களைப்படைந்திருக்கையில் சாரீபுத்திரர் பிக்குக்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் சிறிது நேரத்தில் பிக்குக்கள் அனைவரும் அவர் மொழிகளில் ஈடுபட்டுப் புத்தர் பெருமானிடம் பக்தி கொண்டனர். இடையில் தேவதத்தன் களைப்பினால் உறங்கிவிட்டான். அவன் விழித்துப் பார்க்கையில், அங்கு அவனைத் தவிர வேறு ஆளேயில்லை; எல்லோரும் ஜேதவன விகாரைக்குச் சென்று விட்டனர்!

தேவதத்தன் வீதிகளிலே சென்று ஐயமெடுக்கவும் வழியில்லை; ஜனங்கள் உணவளிக்க மறுத்ததோடு, அவனுடைய திருவோட்டையும் உடைத்தெறிந்து விட்டனர். அவன் உள்ளமுடைந்து, ஒன்பது மாதம் நோயுற்றுக் கிடந்தான். அக்காலத்தில் அவன் புத்த தேவருக்குத் தான் இழைத்து வந்த கொடுமைகளை யெல்லாம் எண்ணி வருந்தினான். பெருமான் எவரிடத்தும் பகைமை கொள்ளாதவர் என்பதால், தன்னிடத்தும் அவர் கருணை காட்டுவார் என்று அவன் கருதினான். அந்த எண்ணத்தோடு அவன் ஐயனைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான் அப்போது சிலர் அவனை ஒரு டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு போய் ஜேதவனத்தில் இறக்கினர். அவர்கள் கை, கால்களைக் கழுவிக் கொள்ளச் சென்றிருந்த சமயத்தில், தேவதத்தன் அவசரமாக எழுந்து டோலியிலிருந்து தரையில் காலை வைத்தான். ஐயனை உடனே தரிசிக்க வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது. ஆனால் அவன் கால் வைத்த இடத்தில் பூமி பிளந்து, நெருப்புப் பிழம்பாக எரிய ஆரம்பித்தது அவனும் அக்கினிப் பிழம்பில் கலந்து வெடிப்பின் வழியே பாதலம் சென்று விட்டான்.

  1. கிருத்திர கூடம்– கழுகுக் குன்றம், அல்லது கழுகு மலை.
  2. சுத்த நிபாதம்
  3. அஜாதசத்துரு ஐயனைச் சந்தித்த இவ்வரலாறு ‘சிரமண பால சூத்திர'த்திலுள்ளது.