போதி மாதவன்/நகர் நீங்கு படலம்

ஐந்தாம் இயல்

நகர் நீங்கு படலம்


‘நீள்நில மீது நித்தியா னந்த
வாழ்வை அடையும் வழி இது என்று
தீவிர மான தியாகத் தாலும்,
ஓய்வில் லாத உழைப்பி னாலும்,
அறியலாம் என்னில் அறிந்து வருவேன் !
வாடி வருந்த மன்னுயிர் எல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன் !’

--ஆசிய ஜோதி

சாக்கிய சிம்மமாகிய சித்தார்த்தர் ஐம்புலன்களின் இன்பத்தை அறவே வெறுத்திருந்தார். இதயத்திலே விடம் தோய்ந்த கொடிய அம்பு குத்தியிருக்கையில் சீரிய சிங்கம் எவ்வாறு துயருற்று அதே சிந்தனையிலிருக்குமோ, அதுபோலவே அவர் துடித்துக் கொண்டிருந்தார். மேலும் மேலும் அவருக்கு இன்பமளிப்பதற்காக மன்னர் செய்த முயற்சிகள் யாவும் பாழாயின. இனிய இசைகள் அவர் செவியில் ஏறவில்லை. அவர் கண்கள் நடனத்தை நாடவில்லை. மாதர்களின் மையல் விழிகள் அவரிடம் தம் வல்லமையை இழந்தன. கலைகளில் எதுவும் அவர் கருத்தை மாற்ற முடியவில்லை.

கடைசிக் காட்சி

அப்போது வசந்த காலம். மாம்பூக்களும் அசோக மலர்களும் எத்திசையிலும் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. மரங்கள் எல்லாம் பழைய சருகுகளை உதிர்த்து விட்டுப் புதிய தளிர்களால் புத்தாடை புனைந்து பொலிவுடன் விளங்கிக் கொண்டிருந்தன. தாமரை, தாழை, சண்பகம், மாதவி முதலிய மலர்களின் மகரந்தத்துடன் மலைக் காற்று தவழ்ந்து வீசிக் கொண்டிருந்தது. எனவே ஒரு நாள் சித்தார்த்தர். மீண்டும் வெளியே சென்று அருகே யிருந்த வனங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டார். வண்டுகள் இசை பாடவும், கிளிகள் கொஞ்சவும், குயில்கள் அமுத கீதம் இசைக்கவும், வசந்தம் கொலுவீற்றிருப்பதைக் கண்டு வந்தால் தமது உள்ளத் திற்கு அமைதி ஏற்படும் என்று கருதி, அவர் அருமைத் தந்தையிடம் அனுமதி வேண்டினார்.

அரசரும் மகிழ்ச்சியடைந்து இளவயதுள்ள செல்வர் பலரையும், பரிவாரங்களையும் அவருக்குத் துணையாக அனுப்பி வைத்தார். இளவரசர்க்கு உரிய எழிலுடைய கண்டகம் என்னும் குதிரையைச் சந்தகன் கொணர்ந்து நிறுத்தினான். அதன் மீது தங்கத்தினால் செய்த சேணம் அமைக்கப்பெற்றிருந்தது; கடிவாளமும் தங்கம்; அதன் செவிகளின் அருகே தங்கப் பிடிகளில் அமைந்திருந்த கவரிகள் கட்டப் பெற்றிருந்தன. குதிரைமீது சித்தார்த்தர் ஏறிச் சென்றது இந்திரன் பவனி வருதல் போலிருந்தது.

போகின்ற வழியிலே சாலையின் இருமருங்கிலும் உழவர்கள் கழனிகளில் உழுது கொண்டிருந்தார்கள். நகருக்கு வெளியே காடும் கழனிகளும் அழகாய்த்தான் இருந்தன. ஆனால், கழனிகளைப் பண்படுத்த ‘மக்களும் எருதுகளும் படும்பாடுதான் பெருந் துயரமாகத் தோன்றியது. நீரில் நீந்திச் செல்வது போலவே ஏர்கள் நிலத்தைப் பிளந்து நீந்திக் கொண்டிருந்தன. புற்களும் செடிகளும் முளைத்திருந்த மண் கட்டிகள் உழவுசாலின் இரு பக்கங்களிலும் சிதறி விழுந்திருந்தன. பூமிக்குள் இருந்த பல புழுக்களும் பூச்சிகளும் உழவு சால்களின் பக்கங்களில் வதையுண்டு கிடந்தன. நல்ல வெய்யிலிலே நின்று மெய் வருந்தி வேலை செய்த உழவர்களின் உடல்களில் சேறும் நீரும் தெறித்திருந்தன. உழைப்பினால் அவர்கள் உலைந்திருந்தார்கள். கதிரவன் உதிக்கு முன்பே கலப்பையில் பூட்டிய மாடுகள் களைத்துப் போயிருந்தன. மக்கள், மாடுகள் ஆகிய எல்லா உயிர்களிடத்திலும் அண்ணலின் செழுங்கருணை ஓடிப் பெருகிக் கொண்டிருந்தது.

வனத்தை அடைந்ததும், இளவரசர் குதிரையி லிருந்து இறங்கி நடந்து சென்றார். அங்கே ஓரிடத்தில் தம் தோழர் அனைவரையும் இருத்திவிட்டுச் சிறிது தூரத்திற்கு அப்பால் சென்று, இலைகள் அடர்ந்த ஒரு நாவல் மரத்தை அடைந்தார். ‘இனிது இனிது, ஏகாந்தம் இனிது’ என்பதை அவர் அந்த இடத்திலே முதல்முறை யாக உணர்ந்தார். இயற்கையில் அமைந்திருத்த சாந்தி அவர் உள்ளத்திலும் நிறைந்திருந்தது.

அங்கே பச்சைப் பட்டு விரித்தது போலப் படர்ந்திருந்த பசும்புல்லின் மீது அமர்ந்து கொண்டு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் மாற்றத்தையும் பற்றி அவர் சிந்திக்கலானார். சிந்தனையில் திளைக்கத் திளைக்க, அவர் உள்ளம் தெளிவும் உறுதியும் பெற ஆரம்பித்தது. உலகப் பற்றுக்கள் நீங்கி, உள்ளம் தூய்மை பெற்று, ஆழ்ந்த தியானமாகிய சமாதி நிலையை அடைந்தது. அந்நிலையில் உலகின் துயரமும் துன்பங்களும், மூப்பு, பிணி, மரணங்களால் விளையும் அழிவும் அவருக்குத் தெளிவாக விளங்கின. ‘அன்ன விசாரம், அதுவே விசார'மாக அலைகின்ற மக்கள், பிணி, மூப்பு, சாக்காடுகளிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாத நிலையில், தங்களுக்குள் வயோதிக மடைவாரையும், பிணியாளரையும், மரண மடைவாரையும் வெறுத்து அலட்சியம் செய்யும் அறியாமையைப் பற்றி அவர் வருத்தமடைந்தார். ‘இங்கேயுள்ள நான் என்னைப் போன்ற ஒரே தன்மையுள்ள மற்றொரு வரை வெறுத்து ஒதுக்குவது எனக்கு அழகாகுமா? அது நியாயமா?’ என்று எண்ணினார்.

‘பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக்
கெடுவழிக் கரைசேர்க் கொடு மரக் கலத்தை’[1]

அவர் நன்கு தெரிந்து கொண்டார். மெல்லிய தோற் போர்வையுடன் விளங்கும் உடல் புண்கள் நிறைந்த கூடு; இதில் ஆயிரம் ஆயிரம் துவாரங்களிலிருந்து, திறந்த புண்ணில் நாற்றம் வீசுதல் போலத் துர்க்கந்தம் வந்து கொண்டேயிருக்கிறது.[2] இது

‘ஐவர் கலகமிட்(டு) அலைக்கும் கானகம்,
சலமலப் பேழை. இருவினைப் பெட்டகம் ![1]

இவ்வுடலோடு வாழ்தல் சிறை வாழ்வை ஒத்தது. சிறையில் அடைபட்டுத் துயரில் உழலுவோன் தன் விலங்குகளை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்லத் துடித்துக் கொண்டிருப்பான். அதே போலப் பிறவி தோறும் எல்லையற்ற துன்பம் நிறைந்த சிறையே மனிதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது; விலங்குகளை உடைத்துக் கொண்டு தப்ப முயல்வதே அறிவுடைய செயலாகும். பிறவிக் கடலிலே வீழ்ந்தவனை ‘நான்’ என்னும் முதலை வாய் பிளந்து விழுங்க வருகின்றது; இரு வினைகள் என்னும் அலைகள் அவனை அங்குமிங்கும் அலைக்கின்றன. இந் நிலையில் அறிவு ஒன்றே அவனுக்குத் தெப்பமாக உதவும். அதையும் கைவிட்டு மதிமயங்கித் திரியும் மக்கள் நற்கதி அடைவது எங்ஙனம்?[3] இத்தகைய கருத்துக்களைப் பற்றியெல்லாம் சிந்தனை செய்கையில் சித்தார்த்தருடைய வீரியம், இளமை, வாழ்க்கை ஆகியவற்றால் ஏற்பட்டிருந்த களிப்பெல்லாம் ஒரே கணத்தில் மறைந்து போய்விட்டது.

அவருக்கு எக்களிப்பு இல்லை, துயரமும் அவரை விட்டு அகன்றுவிட்டது. தயக்கமோ, குழப்பமோ இன்றி, அவர் சிந்தனை நேராகச் சென்று கொண்டிருந்தது. விருப்பும் வெறுப்பும் அவர் உள்ளத்தைவிட்டு வெளியேறிவிட்டன. அறிவின் கதிர்களால் அவர் முகம் ஒளி மயமாகத் திகழ்ந்தது.

அந்த நேரத்தில் காவியுடை அணிந்த துறவி ஒருவர் வேறு எவரும் அறியா வண்ணம், மெதுவாக வந்து அவர் முன்பு தோன்றினார்.

சித்தார்த்தர் : தாங்கள் யார் ?

துறவி : நான் ஒரு சிரமணன். முதுமை, நோய், மரணம் ஆகியவை பற்றி மனம் வருந்தி, முக்தி வழியை நாடி நான் என் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். எல்லாப் பொருள்களும் அழிவை நோக்கியே விரைந்து செல்கின்றன; உண்மை ஒன்று தான் எக்காலத்தும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு பொருளும் மாறி விடுகின்றது; எதுவும் நிலையாத இவ்வுலகில் புத்தர்களின் உபதேசங்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. அழிவில்லாத ஆனந்தத்தை நான் நாடுகிறேன்; அதுவே பெயராத பெருஞ் செல்வம்; அதுவே ஆரம்பமும் அந்தமும் இல்லாத அழியா வாழ்வு. ஆதலால் உலகப் பற்றுள்ள என் சிந்தனையை யெல்லாம் அழித்துவிட்டேன். மக்களின் அரவமில்லாத ஒரு குகையிலே நான் ஏகாந்தத்தில் ஒதுங்கியுள்ளேன்; உணவுக்காகப் பிச்சையெடுத்துக் கொண்டு, என் ஒரே குறிக்கோளை அடைவதிலேயே நான் ஈடுபட்டிருக்கிறேன்.

சித்தார்த்தர் : சஞ்சலம் மிகுந்த இவ்வுலகில் சாந்தி பெற முடியுமா? இன்பங்களின் வெறுமையை நான் கண்டு கொண்டேன்; அதனால் காமத்தை வெறுத்துவிட்டேன். எல்லாம் எனக்கு வேதனையாகவே உள்ளன, வாழ்க்கை கூட எனக்குத் தாங்க முடியாத துயரமாகிவிட்டது.

துறவி : சூடுள்ள இடத்தில் குளிர்ச்சியும் இருக்கும். உயிர்கள் வேதனைக்கு உட்பட்டிருக்கின்றன என்றால், அவை இன்பம் நுகரவும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ் விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. இவ்வாறு, எங்கே துன்பம் பெருகியுள்ளதோ, அங்கேயே அளவற்ற இன்பமும் விளையக் கூடும் ஆனால் கண்ணைத் திறந்து பார்த்து நாம் அதைக் கண்டு கொள்ள வேண்டும். குப்பைக்குள்ளே விழுந்தவன் அருகேயுள்ள தாமரைத் தடாகத்தைத் தேடவேண்டும்; அதுபோல், பாவத்தைக் கழுவி நீக்குவதற்கு நித்திய ஆனந்தமாகிய நிருவாண நீர் நிலையைத் தேடுவாயாக!

சித்தார்த்தர் : இந்த நேரத்தில் தாங்கள் கூறியது எனக்கு நற்செய்தியாகும்; இனி என் காரியம் கைகூடும். நான் வாழ்க்கையில் ஈடுபட்டு எனக்கும் என் குடும்பத் திற்கும் பெருமையளிக்கும் முறையில் உலக சம்பந்தமான கடமைகளை நிறைவேற்றி வரவேண்டும் என்று என் தந்தையர் எனக்கு அறிவுறுத்தி வருகிறார். நான் மிக்க இளமையாயிருப்பதாயும், எனது நாடித் துடிப்புக்குத் துறவு வாழ்க்கை ஒவ்வாது என்றும் அவர் கூறுகிறார்.

துறவி: உண்மையான ஆன்மிக வாழ்வுக்கு ஒவ்வாத காலம் எதுவுமே யில்லை என்பதை நீ உணர்ந்திருக்க வேண்டும்!

சித்தார்த்தரின் உள்ளத்தில் திடீரென்று உவகை மலர்ந்தது. ‘சத்தியத்தை நாடுவதற்கு இதுவே தருணம்; பூரணமான மெய்ஞ்ஞானம் அடைவதைத் தடைசெய்து நிற்கும் எல்லாப் பாசங்களையும் அறுத்துக் கொள்ள இதுவே தருணம்; ஆரணியத்திலே திரிந்து, ஐயமெடுத்து அரும்பசியை ஆற்றிக் கொண்டு, விடுதலை மார்க்கத்தை அடைவதற்கு இதுவே தருணம்!’ என்று அவர் கூறிக் கொண்டார்.

துறவி வேடம் பூண்டு நின்ற தேவரும், ‘ஆம், உண்மையை நாடுவதற்கு இதுவே தருணம். சித்தார்த்த! வெளியே புறப்பட்டு உன் இலட்சியத்தை நிறைவேற்று. நீ புத்தராகப் போகும் போதிசத்துவன், உலகில் அறிவொளியைப் பரப்ப வேண்டியவன் நீ! நீயே ததாகதன், பூரண மனிதன், தருமம் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் ராஜனாக விளங்க வேண்டியவன் நீ! நீயே பகவன், உலகைக் காப்பாற்றத் தோன்றிய இரட்சகன் நீ! எந்தக் காலத்திலும் கதிரவன் தன் வழியிலேயே சென்று கொண்டிருத்தல். போல, நீதி மார்க்கத்திலேயே சென்று கொண்டிருந்தால், நீ புத்தனாவாய்; இடைவிடாமல் உன் கடமையை உறுதியுடன் செய்து வந்தால், நீ தேடுவதை அடைந்தே தீருவாய்’ என்று கூறினார்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் விரைவாக வானத்திலே பறந்து மறைந்து விட்டார். சித்தார்த்தரின் இதயத்தில் அமைதி நிலைத்தது. தருமம் என்பதன் பொருள் முழுதும் அவருக்கு விளக்கமாயிற்று. அவர் முகம் நிறைமதி போல் சுடர் விட்டது. குகைபிலிருந்து மிருகேந்திரன் அறிவுற்றுப் பிடரி மயிர் பொங்கி, ஒளி வீசும் கண்களுடன் வெளியேறி நடப்பதுபோல், அவர் அங்கிருந்து எழுந்து சென்று தோழர்கள் தங்கியிருந்த இடத்தை அடைந்தார். மீண்டும் தமது பரியின்மீது அமர்ந்து நகரை நோக்கிச் சென்றார்.

மன்னரும் மைந்தரும்

அரண்மனையை அடைந்தவுடன், அவர் நேராக அரசரிடம் சென்றார். அவரை முறைப்படி வணங்கி, ‘மன்னர் மன்ன! பெருந்தன்மையோடு எனக்கு ஒரு வரம் அளிக்க வேண்டுகிறேன். நான் முக்தியை நாடித் துறவி வியாக விரும்புகிறேன். உலகில் எல்லாப் பொருள்களும் முடிவில் பிரிந்தே செல்கின்றன. பிரிவே எனக்கும் ஏற்பட்ட விதி. ஆதலால் நான். வனம் செல்வதற்கு அன்புடன் விடை தர வேண்டும்!’ என்று வேண்டினார்.

அம்மொழிகளைக் கேட்ட மன்னவர், யானையால் தாக்குண்ட மரம்போல், நிலை கொள்ளாது நடுங்கி ஆடி விட்டார். கண்களிலே நீர் வழிய, மைந்தரின் தாமரை போன்ற தடக்கைகளைப் பற்றிக் கொண்டு, அவர் மறு மொழி கூறலானார்: ‘என் அருமைக் குமர! இந்த எண்ணம் இப்போது வேண்டாம். துறவற வாழ்க்கைக்கு இது ஏற்ற பருவமன்று. இளமையிலே மனம் சலனப் பட்டுக் கொண்டிருக்கையில் துறவு வாழ்க்கை தவறாக முடியும் என்று பெரியோர் கூறுவர். உலகப் பொருள்களிலே ஆசையுற்ற புலன்களுடன், கருத்தில்லாத இளைஞன் தவத்திற்கேற்ற உறுதியின்றித் திரும்பி விடுவான். நற்பண்புகள் எல்லாம் நிறைந்த என் நாயகமே! எனக்குத்தான் வயதாகிவிட்டது! நாடாளும் பொறுப்பையும் சிறப்பையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டு, நான் தவம் புரியச் செல்கிறேன். மதிநலம் படைத்த நீ சிறந்த மன்னனாக விளங்குவாய் வீரமே உனது தருமம்; பெற்ற தந்தையைப் பிரிந்து செல்வது உனக்கு அறமன்று, அரச போகத்தில் ஆழ்ந்திருந்த நானே ஆரண்யம் செல்வேன். நீ உன் எண்ணத்தைக் கைவிட்டுவிடு!’

இனிமையான இசை எழுவது போன்ற குரலில் இளவரசர் பதிலுரைத்தார்: ‘அரசே! நான்கு விஷயங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொண்டால், நான் வனம் செல்லமாட்டேன். என் வாழ்க்கையில் மரணம் நேரலாகாது; என் உடல் நலத்தை நோய்கள் கெடுத்தலாகாது; என் இளமையை முதுமை வந்து பாழாக்கக் கூடாது; என் இன்பத்னதப் பீடை எதுவும் குலைத்து விடக் கூடாது.’

வேந்தர், ‘வேண்டாம், கண்ணே! வேண்டாம்! நாட்டை விட்டு அகலும் எண்ணத்தை அகற்றி விடு. இயலாத செயல்களில் முனைந்து நிற்பது ஏளனமாகும்!’ என்று கூறிவிட்டு மௌனமாயிருந்தார்.

ஆனால் சித்தார்த்தரேர் மேரு கிரி போல் உறுதியுடன் நிமிர்ந்து நின்றார். ‘நான் கேட்டதைச் செய்ய இயலாது போனால், என் வழியைத் தடை செய்யலாகாது; தீப் பற்றி எரியும் வீட்டிலிருந்து தப்பி வெளியேறுதல் தீமையா? அப்படிச் செல்லும் ஒருவனைத் தடுத்து நிறுத்துதல் நியாயமன்று!’ என்று அவர் எடுத்துரைத்தார். உலகில் எல்லோரும் பிரிய வேண்டியவர்களே. முடிவான அந்தப் பிரிவை யாரும் தடைசெய்ய முடியாது. அதற்கு முன்னதாக, இப்போது பெரியதோர் இலட்சியத்திற்காக நானாகப் பிரிவை வேண்டுகிறேன்’ என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அவருடைய உறுதியை அரசர் கண்டார். அவருடன் ‘மேற்கொண்டு வாதாடுவதில் பயனில்லை என்று கருதி, உன் பிரிவு உசிதமில்லை !’ என்று மட்டும் கூறி நிறுத்திக் கொண்டார். கனிகின்ற துயரோடு கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்த தந்தையைக் காணச் சகியாமல், சித்தார்த்தர் தமது அரண்மனைக்குத் திரும்பினார். சுத்தோதனர் முக்கியமான மந்திரிகள், பிரதானிகளை அழைத்துப் பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகளை நீதி நூல் முறைப்படி சித்தார்த்தருக்கு எடுத்துரைக்கும்படி அனுப்பி வைத்தார். வழக்கம்போல, இளவரசரின் அரண்மனைக்கு வெளியேயும், நகர வாயில்களிலும் அதிகக் காவலர்களும் நியமிக்கப் பெற்றனர். மன்னரின் சகோதரர்களும் நேரிலே சென்று காவலைக் கண்காணித்து வந்தனர்.

பெருந் துறவு

மாலை வந்து அகன்றது. இரவிலே வான வீதியில் முழுமதி தண்ணொளி பரப்பிக் கொண்டிருந்தது. அரண்மனை, தோட்டம், துரவுகள் எல்லாம் வெள்ளியால் செய்தவை போல, ஒரே வெண்மை மயமாகத் திகழ்ந்தன. சித்தார்த்தர் தமது அரண்மனை மாடியில் இசை மண்டபத்திலே உயர்ந்ததோர் பொற்பீடத்தில் அமர்ந்திருந்தார். நந்தவனத்தில் இளமான்கள் கூடியிருப்பதுபோல, நங்கையர் பலர் அவரைச் சூழ்ந்திருந்தனர். மேனகை போன்ற மெல்லியலார் சிலர் நடனமாடினர். குயிலையும் வெற்றிகொள்ளும் குரலில் சிலர் இனிமையாகப் பாடினர். வீணையும், முழவும், பிற கருவிகளும் காதுக்குக் குளிர்ச்சியான இசையைப் பரப்பிக் கொண்டிருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டாத கீதங்கள், பொன்னிறமான மின்னற் கொடிகள் அசைவது போன்ற ஆடல்கள், ஆராத அமுத மழை பொழிவது போன்ற இசைகள் ஆகியவற்றில் எதுவும் சித்தார்த்தர் கருத்தைக் கவரமுடியவில்லை. அவருடைய உடல்தான் அங்கிருந்ததே தவிர, உள்ளம் எங்கோ தொலை தூரத்தில் அருவிகள் பாயும் ஆனந்த வனங்களிலே திரிந்து கொண்டிருந்தது.

இரவு முழுவதும் அங்கே இசை வெள்ளமிட்டுப் பெருகிக் கொண்டிருப்பது வழக்கம். ஆனால் அன்று ஆடலும் பாடலும் திடீரென்று அமர்ந்து விட்டன. கலாப மயில்களைப் போல் ஆடிக்கொண்டிருந்தவர்களும், பட்ட மரம் தளிர்க்கு படி பாடிக் கொண்டிருந்தவர்களும் யாவர்களும் அவரவர் இருந்த இடங்களிலேயே அயர்ந்து படுத்துவிட்டார்கள். எல்லோரையும் உறக்கம் பற்றிக் கொண்டு விட்டது. துயில்கொண்ட தோகையர்களைச் சித்தார்த்தர் ஏறிட்டுப் பார்த்தார்.

அழகே உருக்கொண்டு விளங்கிய அணங்குகள் அலங்கோலமான பல நிலைகளில் சிதறிக் கிடந்தார்கள். கருமேகம் போன்ற கரிய கூந்தல்கள் தரைமீது அலையலையாகப் புரண்டு கொண்டிருந்தன. வாடி நொசிந்த கொடிகளைப்போல உடல்கள் நுடங்கிக் கிடந்தன. மீன்களைப் போல மிளிர்ந்து கொண்டிருந்த கருநீலக் கண்கள் முகிழ்த் திருந்தன. சிறிது நேரத்திற்கு முன்ன ல், வானத்திலே யுள்ள வானவில் போல், பல வண்ணங்களோடு சுடர் விட்டு உலவிக்கொண்டிருந்த அந்த உயிரோவியங்கள் அப்போது உயிரடங்கி ஒடுங்கிக் கிடந்தன. அம்மங்கையர் மூச்சு வாங்கும்போது பொங்கியெழுந்த மார்புகளையும், கனவுகளால் அவர் முகங்களில் தோன்றும் குறிகளையும் ஆங்கே தொங்கிக்கொண்டிருந்த பொன் விளக்குகளின் ஒளி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

ஒருத்தி புல்லாங்குழலைப் பற்றிய கையுடன், மார்பை மறைத்துக் கொண்டிருந்த வெண் துகில் அகன்றதை அறியாமலே உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருத்தி மத்தளத்தைக் காதலனைப் போல் இரு கைகளாலும் அணைத்த வண்ணம் துயின்று கொண்டிருந்தாள். பாடிக்கொண்டிருந்த ஒரு பாவையின் கை இன்னும் வீணைத் தந்திகளிலே மாட்டிக் கொண்டிருந்தது. சாளரத்தருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், அதைப் பிடித்தவண்ணம், வில்லைப்போல் வளைந்து, கவிழ்ந்த தலையுடன் மெய்மறந்திருந்தாள்; அவள் பெண்ணா, சலவைக் கற்சிலையா என்று தெரியாமலிருந்தது. மானுக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஒரு மாதரசி அப்படியே சாய்ந்து உறங்குகையில், மானும் அவள் மார்பில் தலை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. ஒருத்தி தன் பொற் சங்கிலிகளும், நகைகளும், உடைகளும் சுழன்று வீழ்ந்த நிலையில், யானையால் மிதிக்கப்பட்டவள் போலத் துவண்டு கொண்டிருந்தாள். எவ்வளவோ நாணத்தோடு விளங்கி வந்த நாகரிக நங்கையர் பலர் அப்போது பலமாகக் குறட்டை விட்டுக் கொண்டு, கைகளையும் கால் களையும் தாறுமாறாகப் பரப்பிக் கொண்டு, நெடுந் துயிலில் ஆழ்ந்திருந்தனர். முத்துக்கள் பதித்த செம்பவளச் செப்புக்களைப் போன்று சில பெண்களின் வாய்கள் பிளந்திருந்தன; சிலருடைய வாய்களிலிருந்து உமிழ்நீர் வழிந்து கொண்டிருந்தது. பூத்தொடுத்துக் கொண்டிருந்த பாவையர் சிலர் தங்கள் மீதும், அருகேயிருந்த தோழியர் மீதும் அம்மாலைகளைப் போட்டுக் கொண்டு உறங்கினர். மொத்தத்தில் உறக்கத்தால் ஒசிந்து வீழ்ந்திருந்த அந்தப் பெண்கள் மதயானை அழித்தெறிந்த மலர்க் கொம்புகள், கொடிகளைப் போலவும், புயலால் தாக்குண்ட பூத்தடங்கள் போலவும் காணப்பட்டனர். இடையிடையே சிலருடைய கால்களின் அசைவினால் சிலம்பொலி கேட்டது. சிலர் இன்பக் கனவுகள் கண்டு நகைத்தனர்; சிலர் தீய கனவுகள் கண்டு புலம்பினர். இவைகளையெல்லாம் கண்டும் கேட்டும் சித்தார்த்தர் தமக்குள்ளே சிந்தனை செய்து கொண்டிருந்தார்.

‘பாவம்! பசும் பொன்னால் செய்த உயிர்ப் பாவைகள் போல் விளங்கிய இப் பெண்கள், உறக்கம் வந்து கண்களை மூடியவுடன், எவ்வளவு அலங்கோலமாகக் காட்சியளிக்கிறார்கள்! அழகிய ஆடைகளிலும், அணியிழைகளிலும் மயங்கி நிற்கும் ஆடவர்கள் இப்போது இவர்களின் எழிலைப் பார்த்தால், உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்!’ என்று அவருக்குத் தோன்றிற்று.

ஆவர் அமர்ந்திருந்த இசை மண்டபத்தின் அருகே மண வறையில் தேவி யசோதரை மலரணைமீது துயின்று கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் கோவேந்தரின் குலக் கொழுந்தாகிய குழந்தை இராகுலன் வாடிய முளரிபோல், கண்ணயர்ந்திருந்தான். அன்னையின் மலர்க்கரம் அவன் தலைமீது கவிந்திருந்தது, சித்தார்த்தர் மெதுவாக அங்கே சென்று அவர்களைப் பார்த்தார். உயரேயிருந்து பொற் சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த பொன் விளக்குக்களின் ஒளியோடு, சாளரங்களின் வழியாக நிலவொளியும் வீசிக்கொண்டிருந்தது. சீதளம் மிகுந்த இமயமலைக் காற்று ஜில்லென்று வீசிக் கொண்டிருந்தது. நந்தவனங்களிலிருந்த சண்பகம், முல்லை, மல்லிகை முதலிய மலர்களின் நறுமணமும் அத்துடன் கலந்து வந்தது.

உறங்கிக் கொண்டிருந்த யாசோதரை ஏதோ தீக் கனவுகள் கண்டு, துக்கத்துடன் திடுக்கிட்டு எழுந்து, ‘நாதா’ நாதா!’ என்று கூவினள். சித்தார்த்தர் அருகே சென்று, என் உயிரே! என்ன நேர்ந்தது? ஏன் துயரப் படுகிறாய்?’ என்று கேட்டார். தேவி தான் கண்ட கனவுகளைப் பற்றிப் பதைபதைப்புடன் கூறினள். முதலாவது கனவில், கட்டுக் கடங்காத அழகிய காளை ஒன்று தலைநகரிலிருந்து தப்பி ஓடிவிட்டது; அவளே அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பிடித்து நிறுத்த முயன்றும், அது கட்டுக்கடங்காமல் பறந்தோடிவிட்டது; அந்தக் காளை போய் விட்டால் நகரின் மங்களச் சிறப்புக்கள் மறைந்து விடும் என்று இந்திரன் கோயிலிலிருந்து ஒரு சப்தமும் கேட்டது இரண்டாவது கனவில், இந்திரன் ஆலயத்தில் நாட்டியிருந்த பழைய பொற்கொடி அற்று வீழவும். அழகிய புதுக்கொடி ஒன்று உயரே ஏறிவிட்டது; அதில் பொருள் செறிந்த சில புதுமொழிகள் பொறிக்கப் பெற்றிருந்தன; அதன்மீது வானத்திலிருந்து மலர்மழை பொழிந்தது. மூன்றாவது கனவில், தேவியின் அறையிலிருந்த சித்தார்த்தர் திடீரென்று மறைந்து விட்டார்; அவருடைய துகில் ஒன்று மட்டுமே அங்கே கிடந்தது; அத்துடன் தேவியின் காற்சிலம்புகள் கழன்று விழுந்தன; கைக் காப்புக்களும் தறிப்புண்டு சிதறின.

சித்தார்த்தர் அவளுக்கு ஆறுதல் கூறினார். அவள் கனவுகளிலே கண்ட செய்திகள் நன்னிமித்தங்களே என்று எடுத்துக் காட்டினார். ஆனால் யசோதரை சாந்தியடை யாமல், ‘என் அன்பே! நகருக்கு வெளியே ஓடிவிட்ட காளை அங்கிருந்து கொண்டே உறுமிய ஒலி என் உள்ளத்தைக் கலக்கி விட்டது. மேலும், கோயிலின் கொடி மரத்தில் ஆடிக் கொண்டிருந்த கொடி, காற்றில் வீசி யடித்ததும் பயங்கரமாயிருந்தது. காற்றிலே கலந்துவந்த அசரீரியின் ஒலி, “காலம் வந்துவிட்டது! காலம் வந்து விட்டது!” என்று உரக்க ஒலித்துக் கொண்டேயிருந்தது. இவையெல்லாம் எனக்கு ஏதோ ஆகாத காலம் என் பதையே அறிவுறுத்துவதாக அஞ்சுகிறேன்!’ என்று கூறினாள்.

ஆசைகளை அவித்து, லிருப்பு வெறுப்புக்களைக் களைந்து, எல்லா உயிர்களிடத்தும் சமமாகக் கருணை பொழிந்து கொண்டிருந்த நிலையில் சித்தார்த்தர் தம் அருகே வாடித் துடித்துக் கொண்டிருந்த அருமைக் காதலிக்கு இயன்றவரை ஆறுதல் கூறினார். ‘உலகில் நான் அறியாத இடங்களில் எங்கெல்லாமோ சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அனைவரையும், மற்ற உயிர்களையும் என் உற்றார் உறவினராக நினைத்து யான் அன்பு செலுத்துகிறேன். இந்த நிலையில், இத்தனை நாளும் ஒரே உயிர் போல் என்னுடன் வாழ்ந்து வந்த உன்னிடத்தும் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. சில நாட்களர்க எல்லோருடைய துக்கத்தையும் மாற்றுவதற்கு உரிய வழியைப் பற்றிய சிந்தனையிலேயே நான் ஆழ்ந்திருக்கிறேன். காலம் வரும்போது என் கருத்தும் கை கூடும். எல்லோர்க்குமாக நான் தேடுவது முக்கியமாக உனக்கும் பயன்படும். நீ கண்ட கனவுகள் எதிர்கால நிகழ்ச்சிகளையே குறிப்பிடுவனவாகவும் இருக்கலாம். ஆனால், எது எப்படியாயினும், என் யசோதரையிட நான் கொண்டுள்ள அன்பு என்றும் மாறாது!’ என்று பல இனிய மொழிகள் கூறி, அவளை அச்சமின்றி மறுபடி துயில் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே அவள் மைந்தனை ஒரு கையில் அணைத்தவண்ணம் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.

ஜவந்தி மலர்களும், முல்லையும், பிச்சியும், ரோஜா இதழ்களும் பரப்பியுள்ள மலர் அமளி மீது பள்ளி கொண்டிருந்த தாயையும் சேயையும் நின்று பார்த்தார் சித்தார்த்தர். தம் அருமைக் குழந்தையைக் கையிலெடுத்துக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘இராணியின் கையைத் தூக்கி வைத்து விட்டு என் மைந்தனை எடுத்தால், அவள் விழித்துக் கொண்டு விடுவாள்; நான் வெளியேறுவதற்கு அது இடையூறாகும். நான் புத்தனான பிறகு மீண்டும் வந்து என் செல்வனைப் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று அவர் தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டு முதலில் எழுந்த எண்ணத்தைக் கைவிட்டார். யசோதரை நித்திரை செய்து கொண்டே, தான் முன்புகண்ட கனவின் நினைவில், காலம் வந்துவிட்டது! காலம் வந்துவிட்டது!’ என்று புலம்பினாள்

“காலம் வந்து விட்டது!’ என்ற சொற்கள் சித்தார்த்தரின் மௌனத்தைக் கலைத்து விட்டது. தாம் நாட்டையும் நகரையும் துறந்து, உற்றார் உறவினரையெல்லாம் பிரிந்து, வெளியேற வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். மாநில ஆட்சியை அவர் மதிக்கவில்லை. உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அவர் அலட்சியம் செய்தார். பட்டாடைகளுக்கும் பொன்னாடைகளுக்கும் பதிலாகத் தாழ்த்தப் பெற்ற சண்டாளரின் உடைக்கு மேலானது தமக்குத் தேவையில்லை என்று தீர்மானித்தார். அரண்மனையின் அறுசுவை உணவுக்குப் பதிலாகப் பிச்சைச் சோறே இனித் தமது உணவு என்று உறுதி செய்து கொண்டார்.

உலகத்து உயிர்களின் புலம்பலெல்லாம் அவர் திருச் செவிகளில் ஒரே ஒலியாக ஒலித்துக் கொண்டிருந்தன. அதனால் அவருடைய ஆருயிர் துன்புற்று உருகியது. உயிர்களின் துக்கத்தை நீக்கும் வழி யாது? அதை அறிய வேண்டும். அது எதுவாயினும், வழி ஒன்று உண்டென்று அவர் நெஞ்சில் உறுதியாகத் தெரிந்தது. ஆறறிவு பெற்ற மனிதரைக் காப்பாற்றும் வழியைக் கண்டு கொண்டால், அதுவே ஏனைய உயிர்த் தொகுதிகளையும் காக்க உதவும் என்ற துணிவு ஏற்பட்டது அவருடைய அருமைத் தந்தையர் கூறியபடி வயோதிகம் வந்த பிறகு துற வறத்தை மேற்கொள்வதில் பொருளில்லை என்று அவருக்குத் தோன்றிற்று. கைக்கு எட்டிய ஆட்சியையே கைவிட வேண்டும்; இன்பங்களை நுகர்வதற் கேற்ற இளமையும், எழிலும், ஆண்மையும் நிறைந்துள்ள போதே போகங்களை ஒதுக்கிவிட்டுத் துறவு கொள்ள வேண்டும்; சுய நலத்திற்காக அல்லாமல் மண்ணகத்து மக்களுக் காகவே சகல பாக்கியங்களையும் இழக்க வேண்டும்: இவ்வாறு முற்றும் துறந்து முனைந்து தேடினால், மெய்ப் பொருளை எப்படியும் கண்டு விடலாம் என்று அவர் வைராக்கியம் கொண்டார். ‘இனி மண்ணே எனக்கு. மலரணை, காடுகளே எனக்கு வீடுகள்!’ என்று அவர் சொல்லிக் கொண்டார்.

பங்கயச் செல்விபோல் படுத்துறங்கும் கற்புக்கரசியை மீண்டும் நோக்கி, ‘இன்பக் கனியமுதே! அளப்பரிய அன்பினால் உன்னையும் துறக்கத் துணிந்து விட்டேன்! என் முயற்சியால் உலகம் உய்ய நேர்ந்தால், அதனோடு (சேர்ந்த உனக்கும் உய்வுண்டாகும்!’ என்று கூறி, அவள் அரவணைப்பிலிருந்த குழந்தையையும் கண்குளிரக் கண்டு விட்டு, வெளியே வானத்துத் தாரகைகளை நோக்கினார். நேரமாகிவிட்டது என்ற துடிப்புடன், முத்துச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்ற கட்டிலை வேகமாய்ச் சுற்றி வந்து வெளியேற முயன்றார். மூன்று முறை வெளியேறிய அரசர் பெருமகனார் மீண்டும் மீண்டும் அறைக்குள்ளேயே திரும்பி விட்டார். அவ்வளவு வலிமை பெற்றிருந்தது தேவியின் அந்தமில்லாத அழகு, ஐயனும் அவள்பால் அவ்வளவு அன்பு கொண்டிருந்தார்! அந்த நேரத்தில், பெற்ற தாயினும் உற்ற தாயாக விளங்கிய உத்தமி கௌதமி யையும், அல்லும் பகலும் கவலையுடன் தம்மை வளர்த்து வந்த தந்தையையும், தம்மிடம் தணவாக் காதல் கொண்டிருந்த நாட்டு மக்களையும் மனத்திலே நினைத்துக் கொண்டார். ‘என் பிரிவால் உங்களுக்கு உண்டாகும் சிறு துயரை நீங்கள் அனை வரும் பொறுத்தருள வேண்டும்; ஏனெனில் உங்களுக்காகவே நான் செல்கிறேன்!’ என்று கூறிக்கொண்டு அவர் அங்கிருந்து விரைவாக வெளியே வந்தார்.

வெளி மண்டபத்திலே துயின்று கொண்டிருந்த பெண்கள் பலரையும் மறுபடி பார்த்தார். பல்லாண்டு களாக அவருக்குப் பணி செய்வதையே பாக்கியமாகக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். அவர் மனத்தினால் அவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டார். இனிமை மிக்க தோழியரே! ‘இப்பொழுது மூச்சோடு உறங்குகின்றீர்கள். இதே போல, அழகும் இனிமையும் இழந்து, கடைசியில் மூச்சில்லாமலே நீங்கள் உறங்குவீர்கள் என்பதை எண்ணியே நான் பிரிகிறேன்! இப்போதே இந்த இடம் மயானம் போலவே தோன்றுகின்றது!’ என்று சொல்லிக் கொண்டு மெதுவாக அவ்விடத்தையும் விட்டு அகன்றார்.

சித்தார்த்தரின் உள்ளக் கருத்தை உணர்ந்த தேவர்கள் அரண்மனை வாயிற் கதவுகள் தாமாகவே திறந்து கொள்ளும்படி செய்தனர். துயிலையே கண்டறியாத காவலர்கள் அனைவரும் அந்நேரத்தில் அயர்ந்து துயில் கொண்டிருந்தனர். கதவுகள் திறந்திருப்பதைக் கண்ட இளவரசர், வேகமாக மாடியிலிருந்து கீழேயிறங்கி, சாரதி சந்தகனை மெதுவாகக் கூவி அழைத்தார். எந்த நேரத்திலும் அவருக்குப் பணி செய்வதற்காக அங்கேயே காத்திருந்த சந்தகன் உடனே எழுந்து ஓடிவந்தான். சித்தார்த்தர் அன்பும் உறுதியும் கலந்த குரலில் அவனிடம் தம் செய்தியைக் கூறினார்.

‘சந்தகா! பேரின்பத்தை நாடி நான் வெளியேறிச் செல்லத் தீர்மானித்துள்ளேன். என் கண்டகக் குதிரையை விரைவிலே கொண்டு வா! என் உள்ளத்தில் உறுதி பிறந்து விட்டது. சபதமும் செய்துவிட்டேன்.

‘இதுவரை தெய்வ மங்கையர் போல விளங்கிய என் தோழியர் பலரையும் இன்று தான் நன்றாகக் கண்டு கொண்டேன். அருவருக்கத் தகுந்த சடலங்களாக அனைவரும் தரைமீதுள்ள இரத்தினக் கம்பளங்களிலே உருண்டு கொண்டிருக்கின்றனர்!

எவ்வளவோ காவலுடன் பூட்டிப் பாதுகாக்கப் பெற்ற அரண்மனை வாயிற் கதவுகள் தாமாகத் திறந்து கிடப்பதைப் பார்! இந்த நாள் என் வாழ்க்கையின் சிகரமான நாள்! என் சங்கற்பம் நிறைவேறும் என்ற நன்னி மித்தங்களே எங்கும் காணப்படுகின்றன. ஆதலால் விரைவிலே பரியைக் கொணர்ந்து தருக!’

சந்தகன் நின்று யோசித்தான். மன்னரின் கட்டளையை அவன் மறக்கவில்லை. ஆயினும் இளவரசரை எதிர்த்துரைக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. தேவர்களின் உதவியால் அவன் உள்ளம் உறுதி கொண்டது. உடனே சென்று குதிரையைக் கொணர்ந்து நிறுத்தினான். கண்டகம் அசுவ இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த உயர்ந்த குதிரை. அகன்ற முதுகு, உயர்ந்து வளர்ந்த பிடரி, மானின் வயிற்றைப்போல் முதுகுடன் ஒட்டிய வயிறு, அகன்ற நெற்றி, வட்டமாக விரிந்து விசாலமான நாசித் துவாரங்களுடன் விளங்கிய தம் குதிரையைக் கண்டதும், இளவரசர் அதனருகே சென்று, தமது மலர்க்கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தார்.

‘அசுவ திலகமே! எத்தனையோ போர்களில் என் வீரத் தந்தைக்கு வெற்றி தேடிக் கொடுத்தனை! இப்போது நான் அழியா வாழ்வு பெறச் செல்கிறேன். அதற்கு உன் உதவி தேவை. செல்வச் செழிப்பிலும், போர்க்களத்திலும் நண்பர்கள் கூடுவர். ஆனால் தரித்திரத்திலும், தரும மார்க்கத்திலும் துணைவர் கிடைத்தல் அரிது. ஆயிலும் இப்போது என் உயிருக்கு உலகிலுள்ள எல்லோருமே துணைவராகி விட்டனர். நன்மையிலும் தின்மையிலும் மக்கள் அனைவரும் சகோதரர்களே. ஆகவே எனது உயர்ந்த இலட்சியத்திலும் எல்லோர்க்கும் பங்கு உண்டு. ஆதலால் உலகின் நன்மைக்காகவே நான் போகிறேன். இதில் நீயும் உன் சேவையைச் செம்மையாகச் செய்யவேண்டும்!’ என்று அதற்கு உபதேசமும் செய்தார்.

இளவரசர் குதிரைமீது அமர்ந்ததும், சந்தகன் அடடர்ந்து வளர்ந்திருந்த அதன் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். வெண் மேகம் வானத்தில் விரைந்து செல்வதுபோல் பாய்ந்து சென்றது கண்டகம். அதன் காலோசை கூட எவருடைய செவியிலும் கேட்க வில்லை. வழியிலே சித்தார்த்தர் தந்தையின் அரண்மனை வாயிலை அடைந்ததும், அத்திசை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு, விரைவிலே நகர எல்லையை அடைந்தார். கோட்டை வாயில்களும் தாமாகவே திறந்திருந்தன. அவைகளைக் கடந்ததும், நாட்டைத் துறக்கும் நற்றவமூர்த்தி, கன்னி மதிலும், காவலும் கொண்ட கபிலை நகரை ஒரு முறை நன்றாகத் திரும்பிப் பார்த்தார், ஜனன மரணங்களின் எல்லையைக் கண்டாலல்லாது இந்த அணி நகருக்கு இனித் திரும்பேன்!’ என்ற சொற்கள் அவர் வாயினின்று வெளி வந்தன.

அன்று பூர்ணிமை[4] நிறை மதியின் நிறைந்த ஒளியில் குதிரை மின்னல் வேகத்தில் ஓடிக்கொண் டிருந்தது. இருபத்தொன்பது ஆண்டுகளாகப் பூமியிலே மனிதர் அடையக் கூடிய உயர்ந்த செல்வங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்று வாழ்ந்திருந்த சித்தார்த்தர், ஒரு நொடியிலே அனைத்தையும் துறந்து, அந்தக் குதிரை ஒன்றையே துணையாய்க் கொண்டு, நாடும், காடும் கடந்து சென்று கொண்டிருந்தார்.

அன்று முதல் இன்றுவரை சித்தார்த்தரின் இந்தப் பெருந் துறவு ‘மகாபிநிஷ்கிரமணம்’ என்று போற்றப் படுகிறது. அவருடைய இளமை பற்றியும், இத்துறவு பற்றியும் பிற்காலத்தில் போதியடைந்த பின் அவர் தம் சீடர்களுக்கு எடுத்துரைத்த சில விவரங்கள் பௌத்தத் திருமுறைகளிலே காணக் கிடைக்கின்றன. இள வயதில் அவர் தந்தையரின் அரண்மனையில் மிகமிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாயும், தனித்தனியே வெள்ளைத் தாமரை, செந்தாமரை, நீலத் தாமரை மலர்கள் நிறைந்த மூன்று தடாகங்கள் அவருக்காக அமைந்திருந்ததாகவும், காசிச் சந்தனம், காசிப்பட்டு உடைகளைத் தவிர வேறு சந்தனத்தையோ உடைகளையோ அவர் தீண்டியதில்லை என்றும், அவர் இருந்த இடமெல்லாம் இரவும் பகலும் வெண் கொற்றைக் குடை பிடிக்கப் பெற்றதாகவும், தூசியோ பனியோ அவர் மீது பட்டுவிடாமலும், வெப்பமும் குளிர்ச்சியும் உடலைத் தாக்கி விடாமலும் அந்தக் கவிகை அவரைப் பாதுகாத்து வந்ததாகவும், அவர் வசிப்பதற்காக மூன்று அரண்மனைகள் தனியாக அமைக்கப் பெற்றிருந்ததாகவும், வேலையாட்களுக்கும் அடிமைகளுக்கும் மற்ற மாளிகைகளில் குறுணையும் கஞ்சியும் கொடுத்து வந்தது போலன்றி, மன்னரின் அரண்மனையில் அவர்களுக்கு நல்ல அன்னமும் இறைச்சியும் அளித்து வந்ததாகவும் அவர் கூறியுள்ள சில வாக்கியங்கள் ‘அங்குத்தர நிகாய’த்தில் இருக்கிறன.

துறவைப் பற்ற அந்த நூலிலுள்ள குறிப்புக்களில் சித்தார்த்தர் கிழவன், பிணியாளன், மரித்தவன், துறவி ஆகியோரைச் சந்தித்த விவரங்கள் இல்லை. மனிதன் முதுமையும், நோயும், மரணமும் தனக்கு இயல்பா யிருக்கையில், அந்நிலைமைகளை அடைந்த மற்றவர்களைப் பார்க்கும் போது வெறுப்பும், வேதனையும் வெட்கமும் அடைவது முறையில்லை என்று மட்டும் அவர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘மஜ்ஜிம நிகாயம்-அரிய பரியேசன சூத்திர’த்தில் பின்கண்ட விவரம் உள்ளது:

‘ஓ சீடர்களே! நான் போதியடைவதற்கு முன்னால், மெய்ஞ்ஞானம் பெறாமல் போதிசத்துவராக இருந்த காலையில், நானே மீண்டும் பிறவியெடுக்கும் நிலையிலிருந்ததால், பிறப்பின் தன்மையை ஆராய முயன்றேன்; நானே முதுமையடையக் கூடியவனானதால், முதுமையின் தன்மையை ஆராய்ந்தேன்; இவற்றைப் போலவே, பிணி, மரணம், துன்பம் பாவம் ஆகியவற்றையும் ஆராய நேர்ந்தது. அப்பொழுது, “பிறப்பு, முதுமை, பிணி, மரணம், துன்பம் ஆகியவை எனக்கும் உரியவையாயிருக்கையில், அவைகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்துப் பிறப்பற்ற பேரின்பமாகிய நிர்வாணத்தை அடைவதற்கு நான் ஏன் முயற்சி செய்யக் கூடாது?” என்று நான் எண்ணினேன்.’

மேலும், சித்தார்த்தர் மிக்க இளமையிலேயே, சிறு வனாயிருக்கும்போதே, துறவு பூண்டதாயும் இந்நூலில் அவர் கூறியுள்ளார் ஆயினும் அவருக்கு இராகுலன் என்ற குழந்தை இருந்ததை எல்லா வரலாறுகளும் எடுத்துரைப்பதால், அவனுடைய தோற்றத்திற்குச் சிலநாள் முந்தியோ பிந்தியோதான் சித்தார்த்தர் துறவு பூண்டி ருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது. ‘புத்த வமிசம்’ என்ற நூலில் புத்தரே கூறியதாகக் குறிக்கப் பெற்றிருக்கும் வாக்கியங்கள் இவை:

‘எனது நகரம் கபிலவாஸ்து. சுத்தோன மன்னர் என் தந்தையர். மாயாதேவி என் அன்னையர்.

‘இருபத்தொன்பது ஆண்டுகள் நான் இல்லத் தில் இருத்தேன். இராமம், சுராமம், சுபதம் என்னும் பெயருள்ள இணையற்ற மூன்று மாளிகைகள் எனக்கு இருந்தன.

‘ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப் பெற்ற நாற்பதாயிரம் மகளிர் எனக்குப் பணி விடை செய்து வந்தனர். பத்த கச்சனா (யசோதரை) எனது மனைவி. இராகுலன் எனது மகன்.

‘நான்கு விதமான நிமித்தங்களைக் கண்டு நான் குதிரை ஏறிப் புறப்பட்டுச் சென்றேன்...’

புத்த பகவருடைய வாக்கியங்களிலிருந்து அவருடைய சுய சரித்திரத்தில் சில பகுதிகள் மட்டுமே தெளிவாய்த் தெரிகின்றன. மற்றைப்படி பின்வந்த ஆசிரியர்களும், கவிஞர்களும் எழுதி வைத்த வரலாறுகள். காவியங்களிலிருந்தே சரித்திர விவரங்களை அறிய வேண்டியிருக்கின்றது. இவைகளுக்குள்ளே சில முரண்பாடுகள் இருப்பதும் இயற்கையேயாம்.

  1. 1.0 1.1 பட்டினத்தார்.
  2. ‘மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன்ஹா ).’
  3. தாயுமானவர்.
  4. அன்று ஈசான சகம் 96 (கி.மு.573) வைகாசி மாதம், 3-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.