போதி மாதவன்/புத்தரின் அவதாரம்
முதல் இயல்
புத்தரின் அவதாரம்
‘இந்த உலகத்திலே, ஏதோ ஒரு காலத்தில், மிக அருமையான, ஒப்பற்ற ஒருவர் தோன்றுகிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? அவரே பூரண ஞானமடைந்து உயர்நிலை பெற்றுள்ள ததாகதர்.’
—புத்தர்
வட இந்தியாவில் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் அமைந்திருந்த ராஜ்யங்களில் முக்கியமானவை இரண்டு : அவை கோசல நாடும், மகத நாடும். கோசல நாட்டின் தலைநகர் சிராவஸ்தி.[1] மகதத்தின் தலைநகர் இராஜ கிருகம். மகத நாடு பிற்கால இந்திய சரித்திரத்தில் எல்லை யற்ற புகழ் பெற்றது. சந்திரகுப்தர் மகத சக்கரவர்த்தியாக வந்த போது அதன் தலைநகர் பாடலிபுரம். கௌதம புத்தர் காலத்தில் பாடலிபுரம் ‘பாடலிகாமா’ என்ற கிராமமாகவே இருந்தது.
மகதத்திற்கு வடக்கே வைசாலியைத் தலைநகராகக் கொண்ட விரிஜி[2] நாடு இருந்தது. அதற்கும் அப்பால் மல்லர் என்ற வகுப்பினர் வாழ்ந்து வந்தனர்.
கோசத்தின் வட எல்லையில் சாக்கிய வகுப்பினர் வாழ்ந்து வந்தனர். சாக்கிய நாடு கோசலத்திற்கு உட்பட்டது. சாக்கிய நாட்டை அடுத்துக் கீழ்த்திசையில் கோலிய வகுப்பினர் வாழ்ந்து வந்தனர்.
சாக்கியரென்ற பெயரே ஆற்றல்மிக்க வீரர்களைக் குறிக்கும். சாக்கியர் க்ஷத்திரிய வகுப்பினர்; தாம் வீரமிக்க தனி வகுப்பினரென்று அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். நெல் வயல்களும், நெடிய சோலைகளும் நிறைந்த அடிவார நிலத்திலும், இமயமலைச் சாரலிலும் அவர்களுடைய நாடு பரவியிருந்தது. மழை வளத்தாலும், ஆறுகளின் வெள்ளத்தாலும் நாடெங்கும் முத்துப்போன்ற செந்நெல் சிந்தும் வயல்களோடு, சந்தன மரங்களும், தேக்கு, தேவதாரு, கருங்காலி மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன.
கபில வாஸ்து
சாக்கிய மன்னர்களின் தலைநகர் கயிலவாஸ்து[3]. முற்காலத்தில் அங்கே கபில முனிவர் தங்கியிருந்தாராம். இக்ஷ்வாகு வமிசத்தைச் சேர்ந்த நான்கு அரசிளங்குமரர்கள், தங்கள் தந்தையின் விருப்பப்படி, தங்கள் நாட்டைத் தம்பிக்குக் கொடுத்துவிட்டு, அங்கே வந்து, கபிலரின் உதவியால் அந்நகரை அமைத்து ஆண்டுவந்த தாகக் கூறப்படுகிறது. கபிலரின் நினைவு நீங்காதிருப்பதற்காக அந்தக் கடிநகருக்குக் கபிலவஸ்து[4] அல்லது கபிலை என்று பெயரிடப்பட்டது.
நீல முடி தரித்த பல மலைகளுக்குத் தென்பால், சால மரங்களும், ஆலமரங்களும், மற்றும் பல அழகிய காட்டு மரங்களும் அடர்ந்த குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த சமவெளியில் அந்நகரம் அமைந்திருந்தது. எங்கனும் நறுமணம் வீசும் ஜவந்தி, தகரம், பத்திரம், ஜம்பு, அசோகம் முதலிய மலர்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. தெளிந்த நீருள்ள நீர்நிலைகள் பலவற்றிலும் தாமரை, குமுதம் போன்ற மலர்கள் நிறைந்திருந்தன. ஏரிகளின் கரைகளிலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள் கொத்துக் கொத்தான பூக்களுடன் ஏரிகளுள் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. சுற்றியிருந்த வனங்களில் மான்களும், யானைகளும், சிங்கங்களும் ஏராளமாகத் திரிந்து கொண்டிருந்தன. அருகே உரோகிணி ஆறு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு ஒருமுறை அவதரிக்கும் புத்தர் தன் மடிமீது வந்து தவழப் போகிறார் என்ற செருக்குடன், ஆனந்தமாக ஆடிப் பாடி ஆரவாரம் செய்து ஒடிக் கொண்டிருந்தது. இத்தனை இயற்கை அழகுக்கும் நடுவே, விண்ணை மூடிக்கொண்டு உயர்ந்து நின்ற கோட்டை கொத்தளங்களும், அரண்மனைகளும், மாளிகைகளும், விசாலமான வீதிகளும், கடைத் தெருக்களும், நகரை அணி செய்து கொண்டிருந்தன.
சுத்தோதன மன்னர்
இன்றைக்கு 2,500 ஆண்டுகட்டு முன் அத் திருநகரில் அமர்ந்து அரசு புரிந்துகொண்டிருந்த மன்னர் சுத்தோதனர். அவர் கெளதம கோத்திரத்தைச் சேர்ந்தவர் அக்காலத்து அரசர் பலரும் தம் குல குருவின் கோத்திர்த்தையே தம் கோத்திரமாகக் கொண்டிருந்தனர். மல்லர்கள் வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். சுத்தோதனர் ஆட்சியில் அறம் நிலைத்து றின்றது; தானமும் தருமமும் பல்கி வளர்ந்தன. மக்கள் பலவகைச் செல்வங்களையும் பெற்றுப் பயமின்றி வாழ்ந்து வந்தனர். நீதி வழுவாத நெறிமுறையால் எங்கணும் இன்பம் கொழித்துக்கொண்டிருந்தது.
சுத்தோதன மன்னருக்கு சுக்கிலோதனர், தெளதோதனர், அமிருதோதனர் என்ற மூன்று சகோதரர்களும், அமிருதை, பிரமிதை என்ற இரு சகோதரிகளும் இருந்தனர்[5]. அவருக்கு மாயாதேவி, கௌதமி[6] என்ற இரு மனைவியர் இருந்தனர். இவர்கள் கோலிய மன்னர் அஞ்சனரின் குமாரிகள் இவர்களுடைய அன்னையின் பெயர் யசோதரை. அஞ்சனர் கபிலவாஸ்துவின் அருகேயிருந்த தேவதாக நகரில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்.
பட்டத்து ராணியான மாயாதேவி பேரழகும் பெருங்குணமும் பெற்றிருந்தாள். திருமகள்போல் எழிலுள்ள அவ்வரசி தன்னைச் சுற்றியிருந்த மக்களனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர்களின் துயரங்களைக் களைந்து வந்தாள். கௌதமிக்கு அவளிடம் பொறாமையிருந்து வந்தது. இவ்விருவருக்கும் நெடுங்காலம் மக்கட்பேறில்லாததால், மன்னரும், தமக்குப் பின்னால் தமது குலத்தை விளக்க ஒரு குழந்தையில்லையேயென்று, வருந்தி வந்தார். அந்நிலையில், அவரும் அவருடைய தேவியரும் செய்த தவத்தாலோ, மாநிலமே செய்த மாதவ மகிமையாலோ, மாயாதேவி, தனது நாற்பத்தைந்தாவது வயதில் கருவுற்றாள். வையகத்தின் வாட்டத்தை யெல்லாம் மாற்ற வந்த புத்தரே அவ்வம்மையின் மணிவயிற்றிலே கோயில் கொண்டிருந்தார்.
புத்தர் பூமியில் தோன்றுவதற்குரிய காரணத்தையும், விவரத்தையும் புராணக்கதைகள் பலவகையாக விரித்துக் கூறுகின்றன. கௌதம புத்தருக்கு முன்னால் உலகில் ஆறு புத்தர்கள் அவதரித்தனரென்று ‘மகாபதான சூத்திர'த்திலும், இருபத்து நான்கு புத்தர்கள் இருந்ததாகப் ‘புத்த வம்ச'த்திலும், ஐம்பத்து நான்கு புத்தர்கள் என்று ‘லலித விஸ்தர'த்திலும், நூற்றுக்கு மேற்பட்டவரென்று, ‘மகா வஸ்து’ விலும் கூறப்படுகிறது. ‘மணிமேகலை’ ‘எண்ணில் புத்தர்கள்’ என்று கூறும். இது எவ்வாறிருப்பினும், சரித்திரம் ஒப்புக் கொண்டு மக்கள் நினைவிலிருந்துவரும் புத்தர் கௌதம புத்தர் ஒருவரே. பௌத்த நூல்களின்படி இனிவரப்போகும் புத்தர் மைத்திரேய புத்தர்.
கௌதமர் முன்னம் ஒரு பிறவியில் தீபங்கரரென்ற குருவின் முன்னிலையில் தாம் புத்தராகத் தோன்றவேண்டு மென்று உறுதி செய்துகொண்டு, பின்பு தெய்வலோகங்களுள் ஒன்றாகிய துஷித உலகில் இருந்து வந்தார். தெய்வ லோகங்களிலுள்ளவர்களுக்கும், தேவர்களுக்கும், மற்றும் யாவருக்குமே பிறப்பும் இறப்பும், இன்பமும் துன்பமும் உண்டென்பது பௌத்த நூல்களின் கூற்று. பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் பிரம பதவி, இந்திர பதவி முதலிய பதவிகளை அவ்வக் காலத்தில் வகிப்பவர்களேயன்றி நிலையானவர்களல்லர். எவர்களும் அந்தப் பதவிகளை அடைய முடியும். மனிதர், தம் தவவலியால் தேவராகப் பிறக்கலாம்; ஆனால், முடிவில் மனிதராகப் பிறந்து, ஆசைகளை அகற்றி, நிருவாண மோட்சம் பெற்றால் தான் பிறவித்துன்பம் நீங்குமென்று அந்நூல்கள் கூறுகின்றன.
கௌதமர் தம் இறுதிப் பிறவியில் உலகில் புத்தராகத் தோன்றுவதற்குரிய காலம் வந்ததும், எந்த இடத்தில், எந்தக் குலத்தில் அவதரிக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலானார். துஷித உலகிலிருந்த அந்தக் காலத்தில் அவருக்குப் பிரபாபாலர் என்று பெயர். பின்னால் புத்தராவதற்குரிய பண்பும் தகுதியுமுள்ளவர்களைப் போதி சத்துவர் என்றழைப்பது பௌத்த மரபு. பிரபாபால போதிசத்துவர், ஜம்பூத்வீபத்திற்கு அடிக்கடி போய்ப் பழக்கமாயிருந்த சுவர்ணபூதி யென்ற தேவனை அழைத்து, அவனிடம் விசாரித்தார். ‘தேவபுத்திரா! நீ ஜம்பூத்வீபத்திற்குப் பன்முறை போயிருக்கிறாய். எனவே, ஆங்குள்ள நகரங்கள், கிராமங்கள், மன்னர்களின் மரபுகள் முதலியவற்றையெல்லாம் நீ அறிந்திருப்பாய். போதி சத்துவர் எடுக்கவேண்டிய கடைசிப் பிறவியில், எந்தக் குடும்பத்தில் பிறக்கலாமென்பதற்கு ஆலோசனை கூறுவாய்!’ என்று கேட்டார்.
தேவன், இந்திய நாட்டிலிருந்த பல ராஜ்யங்கள், நகரங்கள், கிராமங்களைப்பற்றி யெல்லாம் விவரமாகக் கூறினான். எதிலும் பிரபாபாலரின் மனம் பற்றவில்லை. கோசலம், விரிஜி, மாவந்தி, வடமதுரை, அஸ்திநாபுரி, மிதிலை முதலிய எந்த இடமும் அவர் மனத்தைக் கவர வில்லை. தேவன், மத்திய தேசத்தின் எல்லைப்புற ராஜ்யங்களில் ஆண்டுவந்த உத்தமமான பிராமண குலத்தினரைப் பற்றிக் கூறினான். பிரபாபாலர், தாம் உயர்ந்த க்ஷத்திரிய மரபிலேயே தோன்ற விரும்புவதாயும், பெற்றோர் ஒழுக்கமும் பண்பும் நிறைந்தவராயிருக்க வேண்டுமென்றும், நாட்டு மக்களும் அறத்தில் நாட்டமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். முடிவில் சுவர்ணபூதி, ‘புராதனமான இக்ஷ்வாகு வமிசத்திலே தோன்றி, மக்களும் தேவரும் வணங்கத் தகுந்த சுத்தோதன மன்னர் கபிலவாஸ்து நகரில் செங்கோலோச்சி வருகிறார். அந்தக் குலத்தில் பிறக்கலாம்!’ என்று கூறினான். போதிசத்துவரும் அந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தாய்வழியும் தந்தை வழியும் தலைமுறை தலைமுறையாக மாசு மருவின்றித் தூய்மையானவையென்றும், போதிசத்துவர் பிறப்பதற்குரிய அறுபத்து நான்கு உயரிய பண்புகளும் சுத்தோதனர் குலத்தில் விளங்குவதாயும், அவருடைய அன்புக்குரிய மாயாதேவி, அழகும் குணமும் ஒருங்கேயமைந்து, தம்மைக் கருவிலே தாங்குவதற்குரிய முப்பத்திரண்டு சீரிய பண்புகளையும் பெற்றிருப்பதாயும் கூறி, பிரபாபாலர் பூவுலகில் அவதரிக்கத் தீர்மானித்தார்.
போதிசத்துவர் பூவுலகை நோக்கி இறங்கிவருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, கபிலவாஸ்துவில் இராணி மாயா தன் கணவரிடம் பேசிக்கொண்டிருந்தாள். ‘மகாராஜா! இன்றிரவுமுதல் நான் கடுமையான நோன்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அது என் உள்ளத்தையும் உடலையும் தூய்மை செய்து கொள்வதற்குரிய நோன்பு. உயிர்களுக்கு உறுகண் செய்யாமை, பொய், பொறாமையாகிய தீக்குணங்களை விலக்கல், ஐம்புல இன்பங்களைத் துறத்தல், நன்மைகளை மேற்கொள்ளல் முதலிய எட்டு வகை விரதங்களைக் கடைப்பிடிக்க நான் உறுதிகொண்டுள்ளேன். எல்லா உயிர்களிடத்தும் என் உள்ளத்தில் அருள் சுரக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்!’ என்று மகாராணி கூறினாள். உடனே மன்னர், ‘உன் சித்தப் படியே நடக்கட்டும்! நீ விரும்பிய வண்ணமே செய்வாயாக! உனது நோன்புக்கு இடையூறு ஏற்படுவதைவிட எனது ராஜ்யத்தையே இழந்து விடத் தயாராவேன்!’ என்றார். அந்தக் கணத்திலேயே அவர் தமது ஆசனத்தை விட்டெழுந்து விலகிச்சென்று, மாயாதேவியைத் தமது தாய் அல்லது தமக்கையென்று கருத ஆரம்பித்தார்; தமது உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டார். இதன் பின்னரே பிரபாபால போதிசத்துவர் ஆவிரூபமாக வந்து, மாயாதேவியின் மணி வயிற்றில் வலது புறமாகப் புகுந்து, அங்கே பூரண சாந்தியுடன் கோயில் கொண்டிருந்தார். போதிசத்துவர் வெள்ளை யானை உருவில் மண்ணுலகுக்கு இறங்கிவந்ததாகக் கதைகள் கூறும். வெள்ளை யானை அறிவுக்கும் ஆற்றலுக்கும் அறிகுறி.
போதிசத்துவர் பூமியில் வந்து சேர்ந்ததும் உலக மெங்கும் ஒரு பேரொளி துலங்கிற்று. அதனால், என்றுமே இருள் நிறைந்த மலைக் கணவாய்கள் கூடச் சோதி மயமாக விளங்கின. மக்களும், தேவரும், சமணரும், சதுர்மறையோரும், மாரனும், பிரமனும்யாவருமே அவ்வொளியைக் கண்டு வியந்தனர். ‘ஏது இந்தப் பேரொளி? இது எதற்கு அறிகுறி?’ என்று கண்டவரெல்லோரும் அதிசயித்துக் கேட்டனர். உடனே பூமி ஆறுமுறை அதிர்ந்தது. மலைகள் குலுங்கின, கடல்கள் குமுறின, ஆறுகளெல்லாம் வந்தவழியே திரும்பி மலைகளை நோக்கி ஓடின. வனங்களும் மரங்களும், செடிகளும், வண்ண வண்ணமான தங்கள் மலர்களையெல்லாம் மண் மீது தூவின. மண்ணும், விண்ணும் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்ததோடு, நீங்காத் துன்பம் நிறைந்த நிரயங்களும் இன்பத்தில் திளைத்தன, பேரொளி தோன்றியது. போதிசத்துவர் மெஞ் ஞானப் பேறுபெற்று, மண்ணக மக்களின் உள்ளங்களிலுள்ள அறியாமையிருள் அகலும்படி தம்முடைய நான்கு வாய்மைகளையும் போதித்து, அறிவுரை பகர்வாரென்பதைக் குறித்தது. பூமியதிர்ச்சிகளும் பிறவும் பூரண ஞானம் பெற்ற புத்தர் பெருமான், உலகைத் துன்புறுத்தி வந்த தீமைகள், பாவங்களையெல்லாம் சிதறடித்து, எல்லா மக்களையும் நிருவாண இன்பத்திற்கு அழைத்துச் செல்வாரென்பதை அறிவுறுத்தின. ஆறுகள் வந்தவழியே திரும்பிச் சென்றமை, அதுகாறும் மக்கள் இறந்திடப் பிறந்தும், பிறந்திட இறந்தும், ஜனன–மரணச் சுழலிலிருந்து தப்பமுடியாமல் அதிலேயே சிக்கியுழல்வதை மாற்றி, புத்தர் பிறப்பறுத்துப் பெரு வாழ்வடையும் மார்க்கத்தைக் காட்டுவாரென்பதைக் காட்டியது.
இந்நிலையில், மாநிலத்தின் மணிவிளக்கைத் திரு வயிற்றில் மைந்தனாகக் கொண்டிருந்த மாயாதேவி அன்றிரவு அழகியதோர் கனவு கண்டாள். ஆறு தந்தங்களுள்ள வெள்ளை யானை ஒன்று வானத்திலிருந்து இழிந்து, மாணிக்கம்போன்ற செவ்வொளியுள்ள தாரகையாக வலப்புறம் வந்து தன் விலாப் பக்கமாக வயிற்றினுள் புகுந்ததாக அக்கனவில் தோன்றிற்று. மறுநாள் காலையில் அவள் மன்னரிடம் தன் கனவைக் கூறி, ‘அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியைப்போல் வாழ்வில் என்றுமே கண்டிலேன்!’ என்றாள்.
மன்னர், மாமறையோர் சிலரை அழைத்து, அக் கனவின் கருத்தை விளக்கும்படி வேண்டினார். அவர்கள் அத்தகைய கனவுகளைப்பற்றி விவரித்துக் கூறினார்கள். சூரியன் தன் விலாப்புறம் நுழைவதாகத் தாய் கனவு கண்டால், சக்கரவர்த்தியாகத் திகழக்கூடிய மைந்தனைப் பெறுவாளென்றும், சந்திரன் அவ்வண்ணம் நுழைவதாகக் கண்டால், மைந்தன் மன்னர்களில் முதல்வனாக விளங்குவானென்றும், வெள்ளை யானை புகுவதாகக் கண்டால், உலகையும் மக்களையும் துக்கக் கடலிலிருந்து கரையேற்றும் மா நிலத்தின் தனி நாயகமான புதல்வனை அத்தாய் பெறுவாளென்றும் அவர்கள் கூறியதோடு, அதுமுதல் மாயா தேவியைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்துவர வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்கள்.
சுத்தோதனர் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை. கனவை விளக்கிய மறையோர்களுக்கு அவர் ஊணும், உடைகளும், பொன்னும், பூண்களும் பரிசளித்தார். நகர மக்களும் இந்த நற்செய்தியிற் களிக்க வேண்டுமென்று மலர்களையும், மற்ற, மங்கலப் பொருள்களையும், உண்டி களையும், இனிய பானங்களையும், உடைகளையும் அவர்களுக்கு அள்ளிக் கொடுத்ததோடு, ஆடுகள், குதிரைகள், வாகனங்களைக்கூடத் தானமாக வழங்கினார்.
மேகங்கள் மின்னற் கொடியைத் தம்மகத்தே வைத்துப் பேணுதல்போல மாயாதேவி தன் குலக்கொழுந்தை வயிற்றில் வைத்துப் பேணி வந்தாள். குழந்தையும், சிறிது - சிறிதாக வளராமல், ஆரம்பத்திலேயே முழுப் பருவமும் பெற்றிருந்தது. துன்பமோ துயரமோ இன்றி எந்த நேரமும் மாயா இன்பத்தில் திளைத்திருந்தாள். வாய்மையும் தூய்மையும் அவள் உள்ளத்தை வளஞ் செய்துவந்தன. அவள் நோற்காத நோன்பில்லை, செய்யாத பிரார்த்தனையில்லை. தீயவை யாவும் அவளிருந்த திசையைவிட்டே அகன்றுவிட்டன. பேயும் பிசாசும் அவள் முகவிலாசத்தைக் காண அஞ்சி ஓடி மறைந்தன. அவள் தொட்ட பொருள்களைத் தொட்ட மக்கள்கூட நோய் நோக்காடுகள் நீங்கிச் சுகம் பெற்றனர்.
புத்தர் பிறந்தார்!
கருவுற்ற பத்தாவது மாதத்தில் மாயாதேவி தேவதாக நகரில் தன் தந்தையின் அரண்மனைக்குச் செல்ல விரும்பினாள். உடனே அரசர் அவள் விரும்பிய வண்ணம் நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தார். கபிலவாஸ்துவிலிருந்து தேவதாக நகர்வரை சாலை முழுதும் செம்மையாக்கப்பட்டது. வழியெங்கும் வாசனை நீர் தெளிக்கப்பெற்று, மலர்கள் தூவப்பெற்றன. புனிதவதி மாயாவுக்கு அரண்மனையிலிருந்த நவரத்தினங்களிழைத்த நகைகள் பலவற்றையும் அணிவித்து, மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்தனர். அவள் ஏறியிருந்த முத்துச் சிவிகையைச் சுற்றி யானைகளும், குதிரைகளும், படையினரும் சூழ்ந்துவர, முன்னும் பின்னும் இசைகள் முழங்க, நடன மாதர்கள் பலர் தொடர்ந்து வர, நகரமே அவளோடு புறப்பட்டுச் செல்வதுபோலிருந்தது.
வழியிலே. தலைநகரிலிருந்து பன்னிரண்டு மைல்களுக்கப்பால் மன்னர்க்குரிய மாமலர்ச் சோலையான உலும்பினி வனத்தைக் கண்டதும், மாயாதேவி அங்கே தங்கி இளைப்பாற விரும்பினாள். அவ்வண்ணமே பல்லக்கு அவ்வனத்துள் கொண்டு செல்லப்பெற்றது. அங்கே கொண்டல்கள் முழங்கவும், குயில்கள் பாடவும், கிளிகள் மழலையரற்றவும், மரங்கள் ‘மலர் மழை பொழியவும், மயில்கள் ஆடவும், கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய காட்சிகள் நிறைந்திருந்தன. எங்கணும் இசை நிரம்பியிருந்தது. மாயா, பணிப்பெண்கள், நடனமாதர்களுடன், தான் விரும்பிய பக்கமெல்லாம் சென்று காட்சிகளைக் கண்ணுற்றுக் களித்துக் கொண்டிருந்தாள். மயிலின் தோகைபோல் இலைகளடர்ந்துள்ள ஒரு பலா மரத்தைக் கண்டு, அதனடியில் சிறிது நேரம் இளைப்பாற எண்ணி நின்றாள். அம்மரத்தின் கிளைகள் ஏதோ மாய சக்தியால் பணிவதுபோலத் தாழ்ந்து தொங்கின. அவள் அக்கிளை களில் ஒன்றைப் பற்றிக்கொண்டு உயரே வானத்தை நிமிர்ந்து பார்த்த காட்சி கார் காலத்திலே வானத்திலே தோன்றும் வானவில் போலிருந்தது.
காலையும், மாலையும் தெரியாத அந்தக் கற்பகச் சோலையிலே, நகைகளும், உடைகளும், மலர்களும், இலைகளும், தளிர்களும் பன்னிற ஒளிவீசக் கையில் கொப்புடன் வானவில்போல் வளைந்து நின்ற அன்னை பின் நிலையை வயிற்றிலிருந்து கொண்டே உணர்ந்த போதிசத்துவர், தாம் வெளிவருதற்குரிய காலம் வந்து விட்டதென்று அறிந்தார். அன்னையின் விலாப்புறத்தின் வழியே அறவாழி அந்தணர் உலகிலே அவதரித்தார்.
அந்தக் காலத்தில் வையகமெல்லாம் ஒரு பெருஞ் சோதி சூழ்ந்திருந்தது. முன்போலவே பூமியதிர்ச்சி உண்டாயிற்று. மேகங்களின்றியே இடிகள் முழங்கின. சாரல் துளிகள் பனிபோல் விழுந்து கொண்டிருந்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் மெல்லிய பூங்காற்று வீசிக் கொண்டிருந்தது.
தேவர்கள் நால்வர் தெய்வக் குழந்தையை மென்மை யான துணியிலேந்தி, அவரை உலகுக்கு ஈன்றளித்த பெருமாட்டியிடம் காட்டினர். ‘மாதரசே! உமது மகிழ்ச்சியே, மகிழ்ச்சி! உமக்கு வீரத் திருமகன் பிறந்துள்ளான்!’ என்று கூறினர். போதிசத்துவரின் உடல் பரிசுத்தமாக இருந்தது. அன்னையின் உடலும் யாதொரு தீங்கு மின்றித் தூய்மையாயிருந்தது. பின்னால் பகவான் புத்தரே தமக்குச் சொன்னதாக அவருடைய அணுக்கத் தொண்டர் ஆனந்தர் கூறிய வரலாற்றில், காசிப் பட்டில் ஓர் இரத்தினத்தை வைத்தால், இரத்தினத்தால் பட்டு அசுத்தமாகாது, பட்டாலும் இரத்தினம். அசுத்த மாகாது. ஏனெனில் அவையிரண்டுமே தூயவை. இது பொலவே புத்தர் பிறக்கும்போதே புனிதராகத் தோன்றுகிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
போதிசத்துவர் மண்ணகத்திற்கு வந்ததும், ‘இதுவே எனது இறுதிப் பிறப்பு; இனிமேல் பிறவியெடுக்க மீண்டும் கருக்குழியில் நான் விழமாட்டேன்! இனி என் மாதிரின் இலட்சியம் பூர்த்தியாகும், நான் புத்தராவேன்!’ என்று கூறினார். பிறகு எவர் உதவியுமின்றியே எழுந்து நின்று, ஒவ்வொரு திசையும் பார்த்து ஏழடி நடந்து சென்றார். அவர் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் அவர் திருவடிகளின் அடியிலே பூமியிலிருந்து ஒவ்வொரு தாமரை மலர் மலர்ந்தது. ஒவ்வொரு திசையையும் நோக்கி அவர், ‘நானே உலகின் தலைவன், நானே முதன்மையானவன்! இதுவே எனது இறுதிப் பிறவி! இன்று முதல் என் பிறவிகள் முடிந்தன. நான் புத்தராகிப் பூதலத்தின் துக்கத்தை வேரோடு பறித்தெறியப் போகிறேன்!’ என்று கூறினார். இவ்வாறு கூறியது குழவியின் மழலைச் சொற்களிலன்று, தேசிகர்களின் தெளிந்த ஞானம் போலிருந்தது. தேவர்களும் மனிதர்களும் உவகை கொண்டு உள்ளம் பூரித்தனர். குருடர்கள் கண்பெற்று உலகில் பரந்துள்ள புத்தொளியைக் கண்டு மகிழ்ந்தனர். ஊமையரும் செவிடர் களும் போதிமாதவரின் அவதாரம் பற்றிய நன்னி மித்தங்களைப் பற்றி இன்பமாக உரையாடிக் கொண்டிருந்தனர். கூனிக் குறுகியிருந்தவர்கள் கூனல் நிமிர்ந்தனர். நொண்டிகள் உற்சாகம் பெற்று ஓடிச் சாடித் திரிந்தனர். அடிமைகளின் விலங்குகள் அற்றுவிழுந்தன. பட்ட மரங்களும் தளிர்த்துப் பசுமை பெற்றன. நரகத்தின் நெருப்பும் நடுங்கி அவிந்தது. மாநிலமெங்கும் மதுரகீதம் நிறைந்தது. குவலயம் முழுதுமே குதூகல முற்றது.
அன்னையையும் மதலையையும் மஞ்சன நீராட்டுவதற்குப் பக்கத்திலே நீரில்லையே யென்று பணிப் பெண்கள் தயங்கி நின்றனர். உடனே அவர்கள் கண் முன்பு வெந்நீரும் தண்ணீரும் நிறைந்த இரண்டு அழகிய தடாகங்கள் தோன்றின. அவற்றின் நீரால் மாயா தேவியை நீராட்டினர். அருகே வேறோரிடத்தில் திடீரென்று இரண்டு ஓடைகள் தோன்றின. அவற்றில், ஒன்றில் தண்ணிரும் மற்றதில் வெந்நீரும் ஒடிக்கொண்டிருந்தது. அவைகளில் போதிசத்துவரைப் புனித நீராட்டினர். தானே ஒளிவீசிக் கொண்டிருந்த குழந்தையின் மீது கதிரொளிபடாமல் தேவர்கள் தங்கப் பிடியுள்ள வெண்கொற்றக் குடை பிடித்து நின்றனர். சிலர் சாமரை கொண்டு விசிறினர். தேவர்கள் மலர்மாரி பொழிந்து கொண்டேயிருந்தனர்.
மன்னர்க்குப்பின் மாநிலமாள ஒப்பற்ற ஒரு மைந்தன் பிறந்தான் என்ற செய்தியை உலும்பினி வனத்திலே கேட்டறிந்த மதிமந்திரி மகாநாமர் விரைந்து சென்று மகாராஜாவிடம் சோபனச் செய்தியைத் தெரிவித்தார். மட்டற்ற மகிழ்ச்சியால், மன்னர் அவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தெரியாமல் தயங்கினார். மகாநர்மர், ‘எங்கள் இளவரசருக்கு இடைவிடாமல் தொண்டு செய்யும் பாக்கியத்தை அளிப்பதே எங்களுக்கேற்ற பரிசு’ என்றார். இருவரும் உடனே பரிவாரங் களுடன் உலும்பினி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
வழியில் சுத்தோதனர் தம் அமைச்சரை நோக்க, இந்தக் குழந்தை பிறந்ததில் ஏற்பட்டுள்ள அற்புதங்களை யெல்லாம் கவனிக்கும்போது, இன்பமடைவதா, துக்கப்படுவதா என்று என் உள்ளம் துளங்குகின்றது!’ என்று கூறினார். உடனே மகாநாமர் அவருக்கு வேண்டிய பல ஆறுதல் மொழிகள் கூறினார். முன்னால் பல பெரியார்கள் தோன்றும்போது பல அற்புத தருமங்கள் ஏற்பட்டதை எடுத்துக் காட்டி மன்னரின் கவலையை மாற்றினார். மறும்பினி வந்ததும், அவர்கள் அதனுள்ளே சென்று ஒரு புறமாக ஒதுங்கி நின்று, மன்னர் குழந்தையைப் பார்க்க வந்திருப்பதாக மகாராணிக்குச் செய்தியனுப்பினர். மகாராணியும் மன்னர் அப்போதே வரலாமென்று சொல்லியனுப்பினாள்.
மன்னரைக் கண்டதும் ஒரு பணிப்பெண், பட்டுக்துகிலில் பாலனை எடுத்துக்கொண்டு, அவர் முன்பு சென்றாள்; ‘இளவரசர் தம் தந்தையை வணங்குகிறார்!’ என்று கூறிப் புன்னகை பூத்து அவரிடம் பொற்பதுமை போன்ற குழந்தையைக் காட்டினாள். சித்தோதனர், முதலில் மந்திரி, மறையோர்களிடம் காட்டு, அதன் பிறகு குழந்தை என்னைப்பார்க்கட்டும்!’ என்றார். முதன் மந்திரியும், மற்ற மறையோர்களும் மன்னரையும் மைந்தனையும் வாயாரட் புகழ்ந்து வாழ்த்தினார்கள். ‘புனிதமான சக்கர வர்த்தி அவதரித்திருக்கிறார்! சாக்கியர் குலமே தழைத்து விட்டது!’ என்று கூறி மகிழ்ந்தார்கள். மன்னரும் போதி சத்துவரின் பேரழகையும் முகவிலாசத்தையும் கண்டு பெருமகிழ்ச்சியுற்றார். குழந்தையின் குரல் இமயமலைச் சாரலிலுள்ள கருவிகப் பறவைகளின் இசைபோல் இனிமையாயும் உள்ளத்தை உருக்குவதாயும் இருந்தது. மாயா தேவி மன்னரிடம் நெருங்கி வந்து ‘மகாராஜா! சக்கரவர்த்தியாக வரக்கூடிய இலக்கணங்கள் யாவை? தெரிந்தால், நானும் மற்றவர்களைப்போல் மகிழ்ச்சியடைவேன்!’ என்று கேட்டாள். சுத்தோதனர் கூட வந்திருந்த வேதியர் களைத் திரும்பிப் பார்த்து, அந்த இலக்கணங்களை எடுத்துக் கூறும்படி வேண்டிக் கொண்டார். அவ்வாறே அந்தணர்கள் விளக்கிக் கூறினார்கள்.
மக்களின் மகிழ்ச்சி
பல அற்புதங்களின் நடுவே பிறந்த தம் அற்புதக் குழந்தையை நகருக்கு அழைத்துச் செல்ல எந்த வாகனத்தை உபயோகிக்கலாம் என்று சுத்தோதனர் ஆலோசனை செய்தார் அவருடைய ஆலோசனை முடியு முன்னரே, தெய்வத் தச்சன் விசுவகர்மன் தெய்விகமான பல்லக்கு ஒன்றைத் தயாரித்து உலும்பினித் தோட்டத்திற்கு அனுப்பு வைத்தான். மானிடர் அதுவரை அறிந்திருந்த கலைகள் எவற்றினாலும் அத்தகைய சிவிகையை அமைத்திருக்க முடியாது என்று கருதும்படி, அது அவ்வளவு அழகாயிருந்தது.
தலைநகருக்குத் திரும்புவதற்குரிய ஏற்பாடுகள் விரை வாக நடந்தேறின. யானைகள், குதிரைகள், படைகளெல்லாம் திரண்டு சென்றன. மக்கள் பலரும் மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்து கொண்டு சென்றனர். மண்ணகத்தின் மகிழ்ச்சியிலே பங்கு கொள்ளத் தேவர்களும் உருமாறித் திரள் திரளாக வந்து கலந்து கொண்டனர், திசை காவலரான நான்கு தேவர்கள், வேற்றுருக் கொண்டு போகிகளாக வந்து, போதிசத்துவரின் பல்லக்கைத் தூக்கிச் சென்றனர்.
வழியிலே, கபிலவாஸ்துவுக்கு அருகில் ஒரு தேவாலயம் இருந்தது. போதிசத்துவரை அங்கு அழைத்துச் சென்றது பற்றி ஒரு கதையுண்டு. தொன்று தொட்டே சாக்கிய மரபினர் அங்குள்ள சிலையை வணங்கி வழிபடுதல் வழக்கம். சுத்தோதனரும் தம் அருமைக் குழந்தை அவ்வாலயத்துள்ள தெய்வத்தை வணங்குதல் நலமென்று கருதி, குழந்தையையும் பரிவாரங்களையும் உள்ளே அழைத்துச் சென்றார். குழந்தையை ஒரு பணிப்பெண் கையிலே வைத்துக் கொண்டு சிலையருகே சென்றாள். அந்த நேரத்தில் அபயன் என்னும் தேவனொருவன், அந்தச் சிலை போதிசத்துவரின் வணக்கத்திற்குரியதன்று என்றும், அதுவே அவரை வணங்குதற்குரியது என்றும் கருதி. பீடத்திலிருந்து சிலை இறங்கி வந்து போதிசத்துவர் முன்பு தரையில் தலை வைத்து வணங்கும்படி செய்தான். அப்போது அவன் பணிப் பெண்ணைப் பார்த்து, ‘அம்மா’ உன் கையிலிருப்பவர் உலகங்கெல்லாம் உவந்து வணங்குதற்குரியவர்! அவர் வணங்தற்குரியவர் எவருமில்லை!’ என்று கூறினன். இக்காட்சிகளைப் பார்த்தவர் யாவரும் பரவசமுற்றனர்.
தங்கள் இளவரசர் தலைநகருக்கு வருகிறார் என்றதைக் கேட்டதும், கபிலவாஸ்துவின் மக்கள் அனைவரும் நகரை அலங்கரிக்க ஆரம்பித்தனர். வீதிகளை விளக்கி, வாசல்களில் குலை வாழைகள் கட்டி, எங்கும் தோரணங்கள் நட்டு, மலர்ப்பந்தல்கள் அமைத்து, நகரம் முழுதும் நறுமணங் கமழச் செய்தனர். தெருக்களிலே பார்த்த இடமெல்லாம் பல வேடிக்கைகள் நடந்து வந்தன. புலி வேடம், கரடிவேடம் புனைந்து ஆடுவோரும், இசையும் முழவும் முழங்க, கால்களில் சலங்கைகள் கலீர் கலீரென்று ஒலிக்க, நாட்டியமாடும் மாதர்களும், உடல் வலிமையால் மல்யுத்தம் முதலிய பிரமிக்கத் தக்க காட்சிகள் காட்டுவோரும், மங்கல வாத்தியங்கள் பல வாசிப்போரும் ஆங்காங்கே மக்களை மகிழ்வித்து வந்தனர். எங்கணும் திருவிழாவாகவேயிருந்தது. இத்தனை மக்களும் அன்று வரை எங்கேயிருந்தனரென்று வியக்கும்படி ஜனங்கள் கூட்டங்கூட்டமாகக் கூடிக் கடலலைகள் போல் ஒலி செய்து கொண்டிருந்தனர்.
மன்னரின் உறவினர்களும், நகரின் செல்வர்களும், சாக்கிய குலதிலகங்களான் வீரர்கள் யாவரும் ஒருவருக் கொருவர் முந்திக்கொண்டு இளவரசரை ஆவலோடு வரவேற்றனர். அரண்மனை முழுதும் கோலாகலமாக விளங்கியது. சுத்தோதன மன்னர் அந்தணர் பலரையும் வரவழைத்து, தங்கக் கிண்ணங்களில் உணவளித்து. விலையுயர்ந்த ஆடைகளையும் வழங்கினார். இளவரசைக் கண்டு வணங்கப் பல இடங்களிலிருந்து வந்திருந்த வணிகர்கள் தங்கத் தாலங்களிலே சந்தனம், அகில், கஸ்தூரி, கற்பூரம் முதலிய கந்தப் பொருள்களையும், ஆவி விரியும் பால் நுரை போன்ற பட்டுக்கள், துணிகள். சல்லாக்கள். சால்வைகள், கம்பளங்களையும், கனகமணி மாலைகள், முத்துச்சரங்கள் முதலிய ஆபரணங்களையும் ஏந்தி வந்து, மன்னரை வாழ்த்தித் திறையாகச் செலுத்தினார்கள். மாடங்கள் கூடங்களெல்லாம் மங்கல கீதங்கள் முழங்கிக்கொண்டிருந்தன.
அசித முனிவரின் ஆசிகள்
ஒப்புயர்வில்லாத உலகச்சோதியான குழந்தை மாநிலத்தைத் தேடிவந்து மன்னர் மாளிகையிலே வளர்ந்து வந்த செய்தியையறிந்த அசித முனிவர் என்பார், அதைக் காண்பதற்காக மிக விரைவாக வந்து சேர்ந்தார். அவர் தவத்தாலுயர்ந்த தபோதனராதலால், மன்னர் அவரைக் கண்டதும் எழுந்து வணங்கி, வரவேற்று உபசரித்தார். முனிபுங்கவர் ஓர் ஆசனத்தில் அமர்ந்தபின், புதிதாய்ப் பிறந்த புனிதக் குழந்தையை அவர் பாதத்தடியில் கொணர்ந்து வைக்கும்படி அரசர் ஆணையிட்டார். அருந்தவம் புரியும் அசிதர் வாயால் செல்வச் சிறுவனை வாழ்த்திட வேண்டுமென்று அவர் விரும்பினார். தாமரைச் செல்வி தங்கப் பதுமையை ஏந்தி வருதல்போல், மாயாதேவி மைந்தனைப் பட்டுத்துகிலில் படுக்கவைத்து எடுத்து வந்தாள். கறுத்த முனிவரைக் கண்டதும், தேவி, குழந்தையின் முகத்தை அவர் பக்கமாகத் திருப்பி, ‘வேதிய ரிஷியை வணங்கு, என் செல்வமே!’ என்று கூறினாள். குழந்தை முகத்தை அவள் பக்கமாகவே திருப்பிக்கொண்டு, கால்களை முனிவர் பக்கமாக நீட்டிற்று. அன்னை மூன்று முறை முயன்றும், அசிதருக்கு நேராக அதன் திருவடிகளே தென்பட்டன. இந்த வேடிக்கையைக் கண்டு முற்றுந் தெரிந்த முனிவர் தமக்குள்ளே நகைத்துக்கொண்டு, ஆசனம் விட்டெழுந்து, தம் அங்கங்கள் தரையில் படும்படி வீழ்ந்து குழவியுருக் கொண்ட குருநாதரை வணங்கினார்.
‘மதலாய் நின்னடி மலரிணை தொழுதேன்!
அவனே நீயாம், ஐய மதற்கிலை!
உண்மை ஒளியால் உள்ளிருள் போக்கி,
நன்மை விளைக்கும் ஞாயிறு நீயே!’
முனிவர் குழந்தையை அன்போடு கைகளில் வாங்கித் தம் ஆசனத்தமர்ந்து, அதை மடியில் வைத்துக்கொண்டார். மாயா அவரை நோக்கி, ‘அதன் முடி தங்கள் திருவடிகளில் படும்படி, வைத்துக்கொள்ளுங்கள்! என்று வேண்டினாள். அசிதர், ‘அம்மணி! இம்முடி எவரையும் வணங்காத் திருமுடி! நான் மட்டுமல்ல–தேவர்களும், யாவர்களுமே வணங்கிப் போற்றவேண்டிய குழந்தையல்லவா இது!’ என்று கூறினார்.
சுத்தோதனர், ‘பெருந்தவ முனிவ! என் மதலையைக் கண்டதும் தாங்கள் கண்ணீர் பெருக்கி வருந்தியதேன்?’ என்று வினவினார்.
அசிதர் உள்ளங் களிப்புற்றுக் கூறலானார்:
‘அரசே, பூரண சந்திரனைப் போல் நீ மகிழ்ந்து மலர்ச்சியடைய வேண்டும்! ஏனெனில், உத்தமமான ஒப்பற்ற புதல்வனை நீ பெற்றிருக்கிறாய்.
”நான் பிரமனைக்கூட வணங்குவதில்லை, ஆனால், இந்தக் குழவியை இறைஞ்சி ஏத்துகிறேன்! ஆலயந் தோறும் அமர்ந்துள்ள தெய்வங்கள் யாவும் தத்தம் பீடங்களை விட்டிறங்கி வந்து இவனை வணங்கும்.
‘எனக்கு வயதாகிவிட்டது. அந்த நினைப்பு உண்டானதும் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. ஏனெனில், என் முடிவு நெருங்கிவிட்டது. ஆனால், உன் மகன் இத்தரணியையெல்லாம் ஆளப்போகிறான்; ஜீவ ராசிகள் அனைத்திற்காகவுமே இவன் அவதரித்துள்ளான்.
‘கப்பலுடைந்து கடலுள் தத்தளிப்பவர்களுக்குத் தாரகமாகும் கரைபோல, இவனுடைய பரிசுத்தமான போதனை விளங்கும். இவனது தருமம் தண்மை நிறைந்த பொய்கையாயிருக்கும்; ஆசைத் தீயால் வெந்தவர்களும் நொந்தவர்களும் அப்பொய்கை நீரை அள்ளியள்ளிட் பருகலாம்.
‘காமக் குரோதங்களாகிய நெருப்பின் மேலே இவனுடைய கருணையாகிய கார்முகில் கவிந்துகொண்டு, தருமமாகிய மழைநீரால் அத்தீயை அணைத்துவிடும்.
‘ஏக்கமுற்றுத் தவிப்பவர்களுக்கு இவனே புகலிடம்; தாமே பின்னிக்கொண்ட அறியாமை, பாவம் என்னும் வலைக்கண்ணிகளிலிருந்து சகல ஜீவன்களுக்கும் கடைத் தேற்றமளிக்கும் வள்ளல் இவன்!
‘தருமராஜா வந்துவிட்டான்! ஏழைகளின் பங்காளன் வந்துவிட்டான்! துயரப்படுவோர், திக்கற்றவர் யாவரை யும் காப்பாற்றுவோன் வந்துவிட்டான்!
‘அரசே! இந்தக் குழந்தை அரசவமிசத்திலே தோன் றிய தெய்வத் தாமரை மலர்! ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு ஒரு முறை உலகில் மலரும் ஒண்மலரான உதம்பர மலர் இது! இந்த ஞாலமெல்லாம் இதன் ஞானத்தால் நறுமணங் கமழும்!’
மாமுனி கூறிய மாற்றங்களால் மன்னர் மகிழ்ச்சியும் துயர முங் கொண்டார். மைந்தனின் பெருமைகளைக் கேட்கும்போது அவர் உவகையடைந்தார். ஆனால், அவனியெங்கும் அறத்தின் அரசனாய்ப் போதனை செய்வான் என்றதைக் கேட்டதும் மைந்தன் நாட்டைத் துறந்துவிடுவானோ என்று வருந்தினார். எனினும், ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, மணிமாலைகள் முதலிய மதிப்புயர்ந்த அணிகள் பலவற்றை முனிவருக்குக் காணிக்கையாக வைத்து வணங்கினார். முனிவர் அந்த ஆபரணங்களை அப்படியே குழந்தைக்குக் காணிக்கையாக வைத்து, ‘மகுடபதி! நீ என் ஏற்றங்கருதி அளித்த பொருள்கள், என்னினும் ஏற்றமுள்ள இடத்திலே சேர்ந்துவிட்டன!’ என்று சொல்லிவிட்டு, அரிதில் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
குழந்தைக்குச் ‘சர்வார்த்த சித்தன்’ (விரும்பியதை யெல்லாம் பெற்றவன்) என்று பெயர் வைக்கப் பெற்றது.. பிறந்த அன்றே பெறவேண்டிய திருவனைத்தும் பெற் றிருந்ததால், சுத்தோதனர் இப்பெயரையே விரும்பிச் சூட்டினார். ஆயினும் இந்தப் பெயர் சுருக்கமாகச் ‘சித்தார்த்தன்’ என்றே கூறப்பட்டு வந்தது. சரித்திரத்திலும் சித்தார்த்தன் என்பதே நிலைத்துவிட்டது.
வேதியர் பலர் வந்து ஜாதகம் கணித்துச் சோதிடம் பார்த்துச் சொன்னார்கள். சித்தார்த்தன் முப்பத்திரண்டு சாமுத்திரிகா லட்சணங்களையும் ஒருங்கே பெற்றிருப்பதால், அவன் பருவமடைந்து பெரியவனாகும்போது குடும்பத்தோடு அரண்மனையில் தங்கியிருந்தால், அகிலத்தை ஆளும் சக்கரவர்த்தியாய்த் திகழ்வானென்றும், உலக இன்பங்களை உதறித் தள்ளி வெளியேறி விட்டால், அவன் பூரணஞானம் பெற்று உலக குருவாக விளங்குவானென்றும், இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் நடைபெறுமென்றும் அவர்கள் மகாராஜாவுக்கு விளக்கிச் சொன்னார்கள். அவர்கள் இரண்டாவதாகக் கூறிய பலனை எண்ணுந்தோறும் மன்னர் பெருந்துயரடைந்தார். ஆயினும், மைந்தனின் மதிமுகத்தைப் பார்த்துப் பார்த்து மனத்துயரை மறந்து வந்தார்.
மாயாதேவியின் மறைவு
கருவுயிர்த்த ஏழாம் நாளில் அன்னை மாயாதேவி புன்னகையோடு அருந்துயில் கொண்டவள் மீண்டும் கண்ணை விழிக்கவேயில்லை. உறங்கிய வண்ணமே, யாதொரு நோயும் நொம்பலமுமின்றி, அவள் துறக்கம் சென்றடைந்து விட்டாள். உலகிலே வாழை, நண்டு, சிப்பி முதலியவை சூல் கொண்டு கருவுயிர்த்தபின் மரணமடைதல் போலவே, புத்தர்களைப் பெறும் அன்னையரும் பின்னால் வாழ்வது வழக்கமில்லை என்பர். மேலும், அறிவுக்களஞ்சியமான புத்தரைப் பெற்ற தாய் பின்னால் வேறு சூல் கொள்வதுமில்லை. மாயாதேவி கருவுற்றிருந்த, பத்துத் திங்களிலும் எல்லையற்ற இன்பப்பேற்றை அடைந்திருந்தாள். குழந்தை பிறந்த பின்பு அவ்வின்பம் போய்விட்டது. அத்துடன் போதிசத்துவர் பூமியில் அவதரித்ததிலிருந்து அவள் கண்ட அற்புதங்களும் அதிசயங்களும் அவளை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால், பேரழகும், பெருஞ்செல்வங்களும் பெற்றிருந்த அந்த வீரத்திருமகன் அரசுரிமை துறந்து, ஆண்டியாகித் துறவுக் கோலத்தில் துலங்குவானென்று சோதிடரும் மற்றோரும் கூறுவதைக் கேட்டு, அத்தகைய காட்சி நேரும்போது அவள் எப்படிச் சகித்துக் கொண்டிருக்க முடியும்! இத்தகைய காரணங்களால், அவள் தன் சகோதரி கௌதமியிடம், ‘புத்தரைப் பெற்ற மாதா பின்னால் வேறு குழந்தையை ஒருகாலும் பெறமாட்டாள். நான் விரைவில் இவ்வுலகையும், என் கணவராகிய மன்னரையும், என் குழந்தை சித்தார்த்தனையும் விட்டுச் செல்வேன். நான் போன பின்பு நீயே குழந்தையின் தாயாயிருந்து பேணி வளர்த்து வரவேண்டும்!’ என்று கூறியிருந்தாள். கௌதமி கதறிக் கண்ணீர் வடித்துக் கொண்டே ‘சரி’ யென்று உறுதி கூறினாள்.
சாக்கியரிற் பல பெரியோரும் அவளே சித்தார்த் தனுக்குக் தாயாயிருக்க விரும்பினர். அவ்வாறே கௌதமி, சிற்றன்னையாயில்லாமல், பெற்றவள போன்ற அன்புடனே குழந்தையை ஏற்றுக் கொண்டாள். அதைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வந்தாள். குழந்தையும் வளர் பிறை, மதியம் வளர்வது போல எழிலுடன் வளர்ந்து வந்தது.
குழந்தையின் நலனை எண்ணுந்தோறும் சுத்தோதனரின் மனம் மேலும் மேலும் தருமப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. இராஜ்யத்திலுள்ள கைதிகள் யாவரையும் அவர் விடுதலை செய்தார். கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றவர்களையும் விடுவித்து, மேற்கொண்டு அறவழியில் நடக்கும்படி ஆதரவோடு உபதேசஞ் செய்தனுப்பினார். தமது தருமங்கள் யாவும் குழந்தையின் சேமநிதியென்று அவர் கருதினார். தெய்வங்களுக்கெல்லாம் அவர் பிரார்த்தனை செய்தார். ஆலயங்களனைத்திலும் அர்ச்சனைகள் செய்துவர ஏற்பாடு செய்தார். நூறாயிரம் அந்தணர்களுக்கு உயர்ந்த கறவைப் பசுக்களைத் தானம் செய்தாரென்றும் கதைகள் கூறுகின்றன.
போதிசத்துவர் பிறந்த புனித பூமியாதலால் சாக்கிய நாட்டிலே பஞ்சமும் வறுமையும் நீங்கிச் செல்வம் கொழித்துக் கொண்டிருந்தது. மக்கள் அச்சமின்றி இன்பமாக வாழ்ந்து வந்தனர். எங்கும் அமைதி நிலவியிருந்தது. அந்நாட்டிலே புலன்களின் இன்பத்திற்காகக் காதலை நாடுவாரில்லையென்றும், ஆசைகளின் காரணமாகப் பொருள் சேர்ப்பார் எவருமில்லை யென்றும், செல்வஞ் சேர்ப்பதற்காகச் சமயச் சடங்குகளை மேற்கொள்ளவோர் எவருமில்லை யென்றும், மதத்தின் பெயரால் உயிர்ப்பிராணிகளுக்கு ஊறு செய்வார் எவருமில்லை யென்றும் புகழ்பெற்ற ‘புத்தசரிதை'க் காவியத்தின் ஆசிரியரான அசுவகோஷர் வர்ருணித்துள்ளார்.
புத்தர் பெருமான் தமது அவதாரத்தைப் பற்றிப் பிற் காலத்தில் தம் சீடர்களுக்கு உரைத்த சில வாக்கியங் களைப் பார்த்தால், உலகை உய்விக்கவே அவர் தோன்றி ளாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கும்.
‘ஓ பிக்குகளே! மாநில மக்களிடம் கொண்ட அன்பினாலே, அவர்களுடைய இன்பத்திற்காகவும், நலனுக்காகவும், தேவர்கள் மனிதர்களின் இன்பத்திற்காகவும், நலனுக்காகவும், ஒப்பற்ற ஒருவர் தோன்றுகிறார்.
‘இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞான மடைந்து உயர்நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார்.
‘அறிவு ஆற்றல்களினாலே ஒப்பற்ற ஒருவர் இவ்வுலகிலே அவதரித்திருக்கிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? இவரே பூரண ஞானமடைந்து உயர் நிலை அடைந்துள்ள ததாகதர் ஆவார்.’
-அங்குத்தர நிகாயம்
- ↑ சிராவஸ்தி (வடமொழி)- பாலியில்: சாவத்தி.
- ↑ விரிஜி (வடமொழி). - பாலியில்:வஜ்ஜி.
- ↑ கபிலவாஸ்து—உரோகிணி நதிக்கரையிலிருந்த இந்நகரம் இப்போது பாழடைந்து கிடக்கின்றது. இது உத்தரப் பிரதேசத்தில் (பழைய ஐக்கிய மாகாணத்தில்) பிரிட்ஜ்மாங்குஜ் என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது. இப்போது இதன் பெயர் பிப்ரஹவ என்று சொல்லப்படுகிறது. உரோகிணி நதி இக்காலத்தில் கொகானா என்று அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளை நதிகளுள் ஒன்று.
- ↑ கபிலவாஸ்து – கபிலர் இடம்.
- ↑ சுத்தோதனர் சிம்மஹணு மன்னரின் மூத்தகுமாரர். அவருடன் பிறந்த சகோதரர்கள் நால்வரென்றும், சகோதரிகள் நால்வரென்றும் சில வரலாறுகளில் காணப்படுகிறது.
- ↑ இவர்கள் சாக்கிய சுப்ரபுத்தரின் குமாரிகளென்றும், மாயா மூத்த மகளென்றும், கௌதமி கடைசி மகளென்றும், இவர்களுடைய சகோதரிகள் அறுவரைச் சுத்தோதனரின் சகோதரர்கள் மூவரும் தலைக்கு இரு மனைவியராக மணந்துகொண்டனரென்றும் பலவிதமான வரலாறுகள் உண்டு. கௌதமிக்கு மகா பிரஜாவதி என்றும் ஒரு பெயருண்டு.