மகாகவி பாரதியார்/அலங்காரக் குறும்பு!

பாரதியார்
அலங்காரக் குறும்பு !



ஊராரே கேளுங்கள் இந்த ஒருசேதி !
பாரதியார் என்மகனைப் பார்த்துப் பரிகசித்தார்.


ஏன் பாரதியாரே, என்மகன்உம் காரியத்தில்
தான்வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா?
இல்லைஎன்று சொல்கின்றீர், அவ்வா றிருக்கையிலே
தொல்லை தரும் வார்த்தை என்மகனைச் சொன்னதேன்?


ஏழ்மை கிழத்தன்மை நோய்கள் இவற்றையெல்லாம்
ஆழக் குழிதோண்டி அப்படி யே புதைத்துத்,
தேசத்தை மேல்நிலையிற் சேர்ப்ப தெனும் உங்கள்
ஆசையோ பேராசை ! அப்படித்தான் ஆகட்டும் !
அச்செயலை நான் ஒன்றும் ஆக்ஷேபம் பண்ணவில்லை;
கச்சைகட்டி ஆடுங்கள் ! கைதட்டிக் கூவுங்கள் !
எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்றவிதம்
உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும் !


'இளமையிற்கல் இளமையிற்கள்' என்றந்த
இளம்பையன் வீதியிலே சொன்னான் எனில், நீர்
'முதுமையில் மண் முதுமையில் மண்' என்றே
எதிர்வந்து சொன்னீரே ! எல்லாரும் கேட்டுக்
குலுங்க நகைத்தாரே ! ஐயா, குறும்பில்
அலங்காரம் சேர்த்தீரோ அங்கு?









குறிப்பு: (பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக்

கூறியது கற்பனை.)