மகான் குரு நானக்/எங்கும் இறைவன்



7. எங்கும் இறைவன்

சத்குரு நானக், சில ஆண்டுகள் கழித்து, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனது ஞானோபதேசங்களைப் போதிக்கப் புறப்பட்டு விட்டார். அவருடன் மாணவர்கள் மர்தானாவும், பாலாவும் சென்றார்கள்.

நீண்ட நெடுந்தூரப் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இது. சிறு சிறு மலைக் குன்றுகள், பாலைவன மணல் வெளிகள் போன்ற இடங்களை எல்லாம் கடந்து செல்ல வேண்டிய பயணமாகையால், நடந்து போவதின் களைப்பைக் கண்டு சலிக்காமல் இருக்க மர்தானா தனது ரூபாய் இசைக் கருவியால் இன்னிசை பொழிவான். அவனா பொழிகிறான் அந்த நாதத்தை உடன் செல்லும் சத்குரு அருளாசியால், அந்த இசைக் கருவியின் கம்பிகளில் மர்தானா விரல்களை வைத்து அசைப்பான்! அவ்வளவுதான். ரூபாய் இன்னிசைக் கருவி தேவகான மழைகளைப் பொழிந்து, கால்நடைப் பயணத்தின் களைப்பைப் போக்கும்! சலிப்பு ஏற்படாமல் நடந்து கொண்டே செல்வர் மூவரும்!

மர்தானாவிடம் இருந்த ஓர் அதிசய சக்தியைப் போல பாலாவிடமும் ஒரு அபூர்வ சக்தி அமைந்திருந்தது. என்ன சக்தி அது?

ஒரு செய்தியை அல்லது விஷயத்தை தனது செவிகளால் கேட்டு விட்டானேயானால் அதை அப்படியே நினைவில் நிறுத்திக் கொள்ளும் ஓர் அதிசய சக்தி படைத்தவனாக இருந்தான் பாலா. எங்கெங்கே, எவ்வெப்போது, என்னென்ன சம்பவங்களைப் பார்க்கின்றானோ அல்லது கேட்கின்றானோ,அவற்றையெல்லாம் பாலா தனது மனதுள்ளே பசுமரத்தானி போல பதித்துக் கொள்வான். அதற்குப் பிறகு, எத்தனை ஆண்டுகள் கழித்து அவனிடம் கேட்டாலும், தான் கண்டவற்றை அல்லது கேட்டவற்றை அப்படியே திருப்பிக் கூறிடும் தனித் தகுதி பெற்ற திறமையாளனாக இருந்தான் அந்த பாலா.

இந்த தனி ஆற்றல், தெய்வீகத் திறன் அவனுக்கு வந்தது எப்படி? மர்தானாவுக்கு தனது குரு அருளாசியால் எவ்வாறு ரூபாய் இசைக் கருவியை மீட்டிடும் சக்தி வந்ததோ, அதே போன்ற சக்திதான் இந்த பாலாவுக்கும் சத்குரு அருளால் வந்ததெனலாம். சரி, இந்த சக்தியால் சத்குரு நானக்குக்கு என்ன பயன்?

சத்குரு நானக் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றாரோ, எந்தெந்த சம்பவங்களில் கலந்து கொண்டாரோ, என்னென்ன நிகழ்ச்சிகளை செய்து காட்டினாரோ, எங்கெங்கே என்னென்ன பாடல்களைப் பாடினாரோ, எத்தகைய போதனைகளை ஆற்றினாரோ அவற்றை எல்லாம் ஒரு வரிகூட விடாமல், குன்றாமல், மிகாமல் உண்மையை உள்ளவாரே, அப்படியே எப்போதும், யார் கேட்டாலும், நடந்த சம்பவக் காட்சிகளை நடந்தது நடந்தபடியே ஒப்புவிக்கும் மன ஆற்றலைப் பெற்றிருந்தான் பாலா. அவற்றைப் பிற்கால வரலாற்றாசிரியர்கள் அல்லது எழுத்தாளர்கள் அப்படியே எழுதிக் கொண்டார்கள். சத்குரு நானக்கின்போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது எல்லாமே. பாலாவின் மனப்பாடத் திறனால் கிடைத்தவையே தவிர, சத்குரு நானக் அவர்களால் எழுதி வைக்கப்பட்டவை என்று ஒன்று கூட இல்லை.

சத்குரு நானக் என்ற ஞானியாவது பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பன்னூறாண்டு களுக்கு முன்பே வாழ்ந்தவர்களது ஞானப் புதையல்கள் எல்லாம், அவர்களுக்குப் பின்னே வந்த பேரறிவாளர்களின் பேராற்றல்களால் தொகுக்கப்பட்டனவே தவிர, அந்த ஞானப் பெருமகன்களால் எழுதி வைக்கப்பட்ட அறிவுக் கருவூலங்களல்ல!

உண்மையை நிலை நாட்டிட நச்சுக் கோப்பையை ஏந்திக் குடித்த அறிவு மன்னன் சாக்ரடீஸ் பேசிய அறிவாய்வுரைகளை எல்லாம் பிளேட்டோ என்ற பேரறிவுச் சக்கரவர்த்திதான் எழுதி வைத்தான்!

சீன நாட்டு ஞான மாமன்னன் கன்பூசியஸ். பேசிய வித்தக விவேக தத்துவ ஞானங்களை அவனுக்குப் பிறகு வந்த சீனப் பேரறிவாளர்கள் எழுதி வைத்தவைதான் இன்று கன்பூசியஸ் மதமாக, தத்துவங்களாக உலகம் நம்பி ஏற்று உணர்கின்றது.

கெளதம புத்தர் தனது உபதேசங்களை எழுதி வைத்து விட்டுச் செத்தவரல்லர் அவர் உயிரோடு வடபுலத்தை உலாவந்த போது, எனது போதனைகள் எல்லாமே பெளத்த மதச் சிந்தனைகள்தான் என்று கூறவில்லை. அவர் மக்கள் வாழ்க்கை உய்திடுவதற்கான அறிவுரைகளை, கூறினார். அவ்வளவுதான்!

அந்த சித்தார்த்த மகானுக்குப் பிறகு வந்த அவரது வாரிசுகள் அவருடைய அறிவுரைகளைத் தொகுத்து புத்தமதம் என்ற பெயரைச் சூட்டி விட்டார்களே தவிர, சித்தார்த்தன் வைத்த திருப் பெயரல்ல பெளத்தம் என்ற மதச்சொல்!

அதே போன்று சமணமும், மகா வீரரின் பெயரால் தொகுக்கப் பட்ட அறவுரைகளே தவிர, மகாவீரரால் சமணமதம் என்று பெயர் கொடுக்கப்பட்டு அந்த மகானால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகள் அல்ல!

இவ்வளவு ஏன்? கிறித்துவ மதம் இயேசுநாதரால் நிறுவப்பட்ட மதம் என்பதற்கு ஏதாவது சான்று உள்ளதா? அவருக்குப் பிறகு வந்தோர் மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரவர்கள் கேட்டதை விசாரித்ததை எழுதி வைத்தார்களே தவிர இயேசுவைக் கண்ணால் பார்த்தவர்கள், அவர் அருளிய அறிவுரைகளைச் செவிகளால் கேட்டவர்களா எழுதி வைத்தார்கள்? இல்லை இயேசு பெருமான்தான் எழுதி வைத்தாரா?

சத்குரு நானக், படியாதவராக இருந்தாலும், ஒரு நாள் பள்ளி மாணவராக இருந்தாலும், அவருடைய சீடர்களிலே பாலா சத்குரு அருளாசி பெற்ற ஒரு நல்ல ஞான உரை தொகுப்பாளனாக விளங்கினான். பாலா நானக்குடன் இறுதிக்காலம் வரை சென்றிராமல் இருந்திருந்தால் சீக்கிய மதபோதகரின் அறிவுப் புதையல்கள் நமக்குக் கிடைத்திருக்குமா?

ஆனால் ஒன்று இங்கே கூற வேண்டி உள்ளது. திருவள்ளுவர் பெருமானின் பொதுமறை, எவராலும் தொகுக்கப்பட்ட நூலன்று: இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே அவரால் கைச்சான்றோடு எழுதப்பட்ட தமிழ் மறையாகும் அதனால்தான், இன்று மட்டுமன்று உலகம் உள்ளவரை திருவள்ளுவர் பெருமானுடைய திருக்குறள் அறறிெ இருக்கும் என்பது உண்மையிலும் உண்மையாகும்!

சத்குரு நானக், தம் சீடர்களான மர்தானா, பாலா இருவருடனும் முகமது நபிகள் நாயகம் நகரான மெக்காவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மெக்காவுக்குச் சில முஸ்லிம் பக்ரிகளும் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானுக்கும் அவர்தம் சீடர்களும் சேர்ந்து துணையாகச் சென்று கொண்டிருந்தனர்.

சத்குருவை நோக்கி ஒரு முஸ்லிம் பக்கிரி, நீங்கள் என்ன மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேட்டார்.

'ஒன்றே தேவன் என்பதை எந்த மதம் ஒப்புகின்றதோ, அந்த மதத்தைச் சேர்ந்தவன் நான்' என்றார் சத்குரு.

முஸ்லிம் பக்கிரிகளுக்கு குருநானக் பதில் வெறுப்பையே அளித்தது. அதனை குரு நானக்கும் நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் வழியிலே சேர்ந்த பயண நட்பு. மேலும் மக்கா செல்லும் வரை வழித் துணையும் வேண்டும் அல்லவா? அதனால் அந்தப் பக்கிரிகளுடன் சத்குரு சென்று கொண்டிருந்தார். அப்போது கடும் வெயில் நேரம். இருந்தாலும் வெயிலைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் மெக்கா நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சத்குரு நானக்கும், அவரது சீடர்களும், முஸ்லிம் பக்கிரிகளும் சென்று கொண்டிருக்கும்போது, ஓர் அற்புதம் நடந்தது.

முஸ்லிம் பக்கிரிகளும், சத்குரு நானக் அணியினரும் கடும் வெயிலில் மெக்காவை நோக்கி நடந்து கொண்டிருந்த போது, அவர்களது தலைகளுக்கு மேலே கருமேகங்கள் படர்ந்து வந்து குடைபிடிப்பது போல தவழ்ந்தன் அவர்கள் அனைவரும் நடக்க, நடக்க அந்த கருமேகமும் உடன் வந்து கொண்டே இருந்தது. அதனால், அவர்களுக்குக் கடுமையான வெயிலின் கொடுமை ஒன்றும் செய்யவில்லை. என்றாலும் அப்போது யாருக்கும் இந்த கருமேகம் குடைபிடிப்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதைப் பெரிதாகயும் அவர்கள் எண்ணவில்லை.

சத்குரு அணியினரும், முஸ்லிம் பக்கிரி அணியினரும் அன்றிரவு ஓரிடத்தில் தங்கினார்கள். வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த பக்கிரிகளுடன் அன்றிரவைக் கழிக்க குருநானக் மகான் விரும்பாததினால், அவர் தமது இரண்டு சீடர்களையும் அழைத்துக் கொண்டு அன்றிரவே, அவர்களுக்குத் தெரியாமல் மெக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

பொழுது புலர்ந்தது. அப்போதுதான் சத்குருவும் அவரது சீடர்களும் சென்று விட்டதை பக்கிரிகள் புரிந்தார்கள். அதனால் இவர்கள் கவலைப்படவில்லை. மதரீதியாக பக்கிரிகள் சத்குருவை விரோதிகளாகத்தான்ே மதித்தார்கள். அதனால் இந்துக்கள் பிரிந்து போனதைப் பற்றி முஸ்லிம்களுக்கு எந்தவித வருத்தமும் ஏற்படவில்லை. பிறகு தங்கள் மெக்கா பயணத்தை அவர்கள் தொடர்ந்தார்கள்.

வெயில் கடும் வெயில் நேரம் ஆக வெப்பம் கொதித்தது. கடுமையான சூடு அவர்களது தலையை தாக்கிற்று. கால்களால் நடக்க முடியவில்லை. பக்கிரிக் குழுவினர் திடீரென வானத்தை அண்ணாந்து நோக்கினார்கள்.

முதல் நாள் சத்குருவுடன் பக்கிரிகளும் சேர்ந்து வந்த போது, நடக்க நடக்கக் குடைபிடித்தது போன்று நகர்ந்து நகர்ந்து வந்த கருமேகத் திரள் இன்று எங்கே போயிற்று? அப்போதுதான் பக்கிரிகள் சத்குரு நானக் ஒரு பெரிய மகான்தான்் என்பதை உணர்ந்தார்கள். மேகம் குடைபிடித்து வந்த அதிசயத்தை அவர்கள் மறுநாள்தான் தெளிவாக அறிந்தார்கள். அடடா நானக்கை முகம் சுளித்து, வெறுப்புமிழ்ந்து வெறுத்ததை நினைத்து அவர்கள் வருந்தி நடந்தார்கள்.

சத்குரு நானக்கும். அவரது இரு மாணவர்களும் பல நாட்களுக்கு முன்பேயே மெக்கா நகரை வந்தடைந்து விட்டார்கள். எப்போதுமே சத்குரு திறந்த வெளியில்தான் படுத்து உறங்குவார். எங்கு போனாலும் அதே பழக்கத்தைத் தான் தவறாமல் கடைபிடிப்பார். அரேபியாவில் குருநானக் படுத்துத் துங்கிக் கொண்டிருந்தார். அவர் கால் நீட்டிக் கொண்டிருந்த திசையில் மசூதி ஒன்று இருந்தது.

அந்த ஊர் மெளலானாக்களின் சிலர் அதைப் பார்த்துத் திடுக்கிட்டார்கள். யாரோ ஓர் இந்து மசூதி இருக்கும் திசையின் பக்கம் தனது காலை நீட்டிக் கொண்டிருக்கிறானே என்று திடுக்கிட்டார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த மெளலானா, மசூதிக்குரிய மெளலானாவிடம் ஒடித் தகவலைத் தெரிவிக்கவே, அவர் மசூதியிலே இருந்து விரைந்து வந்து சத்குரு படுத்திருக்கும் காட்சியைக் கண்டார்.

கடுங்கோபம் வந்தது மசூதி மெளலானாவுக்கு காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் சத்குருவை வாயில் வந்தபடி ஏசினார். அத்தனை பேச்சுக்களையும் அமைதியாகப் பெற்றுக் கொண்ட குருநானக், மெளலானாவைப் பார்த்து, 'ஐயா, பெரியவரே, கடவுள் இருக்கும் திசையில் நான் காலை நீட்டிக் கொண்டிருப் பதாகக் கூறுகின்றீர். அப்படியானால், கடவுள் இல்லாத திசையில் எனது கால்களைத் திருப்பி வையுங்களய்யா' என்று கூறினார்.

குருநானக் ஓர் இந்து என்பது அப்போதுதான் புரிந்தது அந்த மெளலானாவுக்கு. அவர் மேலும் ஆத்திரமும் எரிச்சலும் அடைந்து, குரு நானக் கால்களை வேறு திசையில் கடுப்பாகத் திருப்பி வைத்தார். அந்த திசையில் மற்றொரு மசூதி காட்சி தந்தது. இதைக் கண்ட மற்ற முஸ்லிம்களும், பக்கிரிகளும் திகைத்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனாலும் மெளலானா விடவில்லை.

மறுபடியும் சத்குரு நானக்கின் இரண்டு கால்களையும் மிக எரிச்சலோடு பல திசைகளிலும் மாறி மாறித் திருப்பி வைத்தார். எந்தெந்தத் திசைகளிலே சத்குரு கால்களை மாற்றி மாற்றி திருப்பித் திருப்பி வைத்தாரோ அந்த மெளலானா, அந்த திசைகளின் பக்கங்களிலே எல்லாம் மசூதிகள் மாறி மாறி வந்து நின்று காட்சி தந்து கொண்டே இருந்தன. இதைக் கண்ட அரேபிய மக்களும், மௌலானாக்களும் திகைத்துப் பிரமிப்பு அடைந்தார்கள்.

குரு நானக் மெளலானாவைப் பார்த்து, அன்புடையவரே! ஆண்டவன் இல்லாத இடமே இல்லை! அவர் எங்கும் அங்கும் இங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை உமது செயல் நிரூபிக்கின்றதைப் புரிந்து கொண்டீரா? இதுதான் உண்மை என்று சுட்டிக் காட்டினார்.

மெளலானாக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் பெருமக்கள், பக்கிரிகள், மற்ற பொதுமக்களும் சத்குரு மீதிருந்த கோபம் தணிந்து, உண்மையை ஒப்புக் கொண்டார்கள். அரேபிய மக்கள் இடையே இந்த ஆன்மிக சம்பவம் புதியதோர் மறுமலர்ச்சியை உருவாக்கிற்று எனலாம்.

மெக்கா நகரை விட்டு, சத்குரு மதீனா நகர் சென்று மக்களுக்குரிய மார்க்க போதனையைச் செய்தார். பின்பு பாக்தாத் நகர் வந்தார். அந்த நகரிலே அப்போது ஒரு முஸ்லிம் துறவி வாழ்ந்திருந்தார். அவர் பெயர் ஹசரத் குவாஜா பிலால் என்ப தாகும். குரு நானக் அந்த முஸ்லிம் துறவியை நேரிலே சென்று சந்தித்தார். துறவியும் நானக்கைப் பற்றிக் கேள்விப்பட்டதைக் கூறி, இரு இறையன்பர்களும் அளவளாவி மகிழ்ந்தார்கள். குருநானக் அந்த துறவியாருடன் 15 நாட்கள் தங்கி பழகினார்கள்.

பாக்தாத் நகரை விட்டு குரு நானக், தனது மாணவர்களுடன் ஈரான் நாட்டிற்குச் சென்றர். அங்கே புகழ் பெற்றிருந்த சில இஸ்லாம் மத குருமார்களுடன் பேசி மகிழ்ந்தார். மறுபடியும் அங்கே இருந்து தனது இருப்பிடமான கர்தர்பூர் வந்து சேர்ந்தார். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தாம் கண்ட அனுபவங்களை குருத்துவாரம் பக்தர்களுக்கு விளக்கிக் கூறி மகிழ்ந்திருந்தார்.