மகான் குரு நானக்/எது உண்மை? எது பொய்?
அமெனாபாத் நகரத்திலே தங்கியிருந்த குரு நானக்கும், மந்தானாவும் ஏழை தச்சர் வீட்டிலே இருந்து மீண்டும் ஊர் ஊராக ஞானோபதேசப் பயணம் செய்திடப் புறப்பட்டார்கள். இருவரும் ஒரு காட்டுப் பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.
இடையில் மாண்வன் மர்தானாவுக்கு ஒரே பசி! அவனுடைய கண்கள் இருண்டன. நடை மிக தளர்ந்தது. நகரங்களின் வழியாகச் சென்றால், கடைகள் இருக்கும். உணவுகளை வாங்கி உண்ணலாம். ஆனால், நகரங்களிற்குள் குரு போவதில்லை. பெரும்பாலும் சிற்றூர்கள், பேரூர்களுக்கே செல்கிறார். அதனால், அவனது பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் மாணவனுக்கு!
இருந்தாலும், அவனால் பசியை அடக்க முடியவில்லை. மனம் விட்டே கேட்டுவிட்டான் மர்தானா தனது குருவை! "நகரத்துக்குள்ளே நீங்கள் ஏன் போக மறுக்கிறீர்கள். இப்போது எனக்குப் பசி! எங்கே செல்வேன் பசியாறிட! எதையாது உண்டால்தான் என்னால் நடக்க முடியும் என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான் மர்தானா!
நானக் மாணவனைப் பார்த்து, ஒரு சிறு சிரிப்பை சிரித்துக் கொண்டு, மர்தானா, நகரங்கள் பாபத்தின் இருப்பிடங்கள். அதனால்தான், நான் நகரத்தினுள் அதிகம் செல்வதில்லை. உனக்கு பசி தானே எடுக்கிறது? இதோ இந்தக் காகிதத்தைக் கொண்டு போய் நகரத்தில் உள்ள மக்களிடம் காட்டு. இதில் எழுதி இருக்கும் வாசகத்தின் உட்பொருளை உணர்பவர் எவரோ, அவர் உனக்கு உணவு வழங்குவார் என்று சொல்லி ஒரு காகிதத்தை மர்தானாவிடம் கொடுத்தார்.
அந்த காகிதத்தில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? எது உண்மை, 'எது பொய்?' என்பதே அந்தக் காகிதத்தில் எழுதப் பட்டிருந்த சொற்றொடர்கள். எனவே, அந்தக் காகிதத்தை எடுத்துக் கொண்டு மர்தானா நகருக்குள் நுழைந்தான்.
யார் யார் தன்முன் எதிர்பட்டார்களோ அவர்களிடம் எல்லாம் அந்தக் காகிதத்தைக் காட்டினான். அதன் உட்பொருள் எவருக்கும் புலப்படாதது மட்டுமன்று, படித்தவர்களில் பலர் அவனைப் பற்றி மேலும் கீழுமாகப் பார்த்தார்கள். சிலர் அலட்சியமாகச் சென்றனர். வேறு சிலர் கேலியாகவும், கிண்டலாகவும் பேசிக் கொண்டார்கள். ஒருவரும் உணவு தர முன் வரவில்லை. பசி அவனை நறநறவென்று மென்று கொண்டே இருந்தது.
இறுதியாக, ஒரு ரொட்டிக் கடைகாரனை மர்தானா அணுகி காகிதத்தைக் காட்டினான். அவன் அந்த சொற்களைப் படித்தான். எடுத்தான் எழுதுகோலை. உடனே எழுதினான் பதிலை. வாழ்க்கை என்பது பொய் மரணம் தான் மெய் என்று. காகிதத்தை மர்தானாவிடம் திருப்பிக் கொடுத்தான். அவனுக்கு வேண்டிய உணவுகளை வயிராறக் கொடுத்தான். அவனும் உண்டு மகிழ்ந்தான். ரொட்டிக் கடைக்காரன் மர்தானா பசியாறிய பின்பு தன்னருகே அழைத்து, இந்தக் கேள்விகளை எழுதியது யார் என்று கேட்டான். அதை எழுதியவர் எனது மதிப்பிற்குரிய குருநானக்தான் என்றான் மர்தான ரொட்டிக் கடைக்காரன் நானக்தான் எழுதினார் என்பதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். உடனே, சத்குரு நானக்கை நேரில் பார்ப்பதற்கு கடைக்காரன் புறப்பட்டான்.
இருவரும் ஒரு காட்டிற்குள் சென்றார்கள். நானக்கைக் கண்ட ரொட்டிக் கடைக்காரன் மகிழ்ச்சியின் சிகரத்திற்கே சென்றான். அந்த மகிழ்ச்சிக்கு இடையில் கடைக்காரன் அக்கேள்விகளை நானக்கைப் பார்த்து சத்குருவே எனக்கும் ஓர் உண்மை வழியைக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டான்.
ரொட்டிக் கடைக்காரன் சத்குரு நானக்குடன் சில நாட்கள் தங்கியிருந்தான். எது உண்மையான வாழ்க்கை என்பதை நானக் அவனுக்கு எடுத்துரைத்து உணர்த்தினார். பிறகு, அதற்குரிய திருமந்திரத்தைப் போதித்து ரொட்டிக் கடைக்காரனுக்கு விடை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அவன் நானக்கை விட்டு பிரிய மனமிலாதவனாய் நகர்ந்தான்.
அந்த நகரைவிட்டு நானக் மீண்டும் தனது ஞானோபதேசப் பயணத்தைத் துவக்கினார். இடையிடையே அவரைத் தேடி வந்து பார்க்கும் மக்களுக்குத் தரிசனம் தந்து இறைவனை அடைவதற்கான மார்க்கத்தைக் கூறியபடியே பயணம் செய்து வந்தார். நாட்கள் நகர்ந்து, வாரங்களாக, மாதங்களாக மாறி, ஆண்டு களாகின. மர்தானாவும் - நானக்கும் எல்லா இடங்களுக்கும் சென்றபடியே இருந்தார்கள்.
சத்குரு நானக் எந்தெந்த பக்கம் நோக்கிப் பயணம் போக வேண்டும் என்பதைக் காட்ட, ஒளி வட்டம் ஒன்று அவருக்கு முன்பு சென்றபடியே இருந்தது. அதைப் பின் தொடர்ந்து குரு நானக் நடந்தார். அவரைப் பின்பற்றி மர்தானா நடந்தான்! மர்தானாவுடன் நானக்கின் மற்றொரு மாணவரான பாலா என்பவரும் பின் சென்றார். இந்த இரு சீடர்கள்தான் குருநானக் வாழ்க்கை முழுவதுமாக அவருடன் இருந்தவர்கள் ஆவர்.
குருநானக், மர்தானா, பாலா மூவரும் ஒரு நாள் மாலை, காட்டின் நடுப் பகுதியிலே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது காவி உடை பூண்டு, நெற்றியிலே பொட்டு வைத்துக் கொண்டு, இறைவன் அடியார் போல் வந்த ஒருவன். அவர்கள் மூவரையும் மனமுவந்து எதிர்கொண்டு அழைத்தான்.
அந்த அடியார், நானக்கையும் அவருடைய சீடர்கள் இருவரையும் கண்டு, "அன்புடையவர்களே நீங்கள் மூவரும் எனது குடிலுக்கு வந்து வாழ்த்துதல் வேண்டும்" என்று அவர்களது பாதங்களிலே வீழ்ந்து, பணிந்து வேண்டிக் கொண்டான்.
இறைவன் அடியார் போல வந்தவன், உண்மையில் அடியார் அல்லன். அவன் ஒரு கொள்ளைக்காரன். காட்டிலே வருபவர்களிடம் இரக்கம் உள்ளவனைப் போல கருணையோடு பேசி, தனது குடிசைக்கு அழைத்துச் சென்று, உணவு கொடுப்பான். உரையாடி மகிழ்வான்; பிறகு உறங்கவும் இடம் தருவான்.வந்தவர்கள் அயர்ந்து உறங்கும்போது, அவர்களைக் கொன்று, அவர்களிடமுள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கொள்வான். காட்டில் வருபவர்களைக் கொலை செய்வதும், கொள்ளை படிப்பதும் அவன் தொழில். அதே எண்ணத்தில் தான் குரு நானக்கையும், அவரோடு சென்ற இரண்டு சீடர்களையும் கொலை செய்யவே குடிசைக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று அவன் வேண்டிக் கொண்டான்.
ஞான மகான் குருநானக் அந்தக் கொள்ளைக்காரனை ஒரு முறைதான் கண்டார். அவனிடமிருக்கும் எண்ணற்ற விவரங்களை, விபரீதங்களை உடனே அறிந்து கொண்டார். பிறகு அந்த போலி இறையடியானைப் பார்த்து, 'உண்மையான இறையடியவனே! நாங்கள் யார் வீட்டிலும் தங்குவது இல்லை; ஆயினும் உனது அன்பான வேண்டுகோளை ஏற்று, உம் வீட்டு விருந்தினராக இருக்கிறோம். வானம்தான் எங்களுக்குக் கூரை! பூமிதான் வீடு! அதில்தான் நாங்கள் உறங்குவது வழக்கம் அன்பனே! என்றார்.
அந்த போலி இறையடியான் போல வேடமிட்ட கபட வேடதாரி பெயர் என்ன தெரியுமா? சஜ்ஜன் என்பதே. அந்தக் கொள்ளைக்காரனுக்கு அன்று மிகப் பேரானந்தம்! காரணம் மூன்று பேர்கள் அவன் விரித்த வலையிலே மாட்டிக் கொண்டார்களே அதனால்!
ஆனால் குருநானக், கண்ணாடியில் உருவத்தைப் பார்ப்பது போல, அந்த அடியானின் முகத்திலேயேள அவன் எண்ணங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டார். அதனால், அவர் தனக்குள்ளேயே சிரித்தார்.
பிறகு, கொள்ளைக்காரனும் மற்ற மூவரும் ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். சத்குரு நானக், மர்தானாவை அழைத்தார். ரூபாய் இசைக் கருவியை எடுத்து வாசி என்று குரு கேட்டு கொண்டார் மர்தானாவை, அவனும் அவ்வாறே வாசித்தான் அந்தக் கருவியிலே இருந்து கிளம்பிய இசை வெள்ளம், அந்தக் காடு முழுவதையுமே இசை இன்பத்தில் மூழ்கடித்தது. சஜ்ஜன் என்ற அந்தக் கபட வேடதாரி இசையை ரசிப்பது போல பாசங்குச் செய்து கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் குரு நானக் ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். அந்தப் பாட்டைக் கேட்டு, மரம், செடி, கொடி, புல்பூண்டுகள் எல்லாமே மயங்கி நின்றன. அவ்வளவு அற்புதமாக அந்த இசை அமைந்திருந்தது. நானக்கின் பாடல் சஜ்ஜன் அன்று வரை செய்திருந்த கொலைகளையும் கொள்ளைகளையும் பற்றிக் குறிப்புக் காட்டுவன போல விவரித்தது. அவன் செய்த பாவச் செயல்களுக்கு எல்லாம் ஒரே வழி நரகம்தான் என்பதையே அந்தப் பாடல் எதிரொலித்தது.
சஜ்ஜன் அந்தப் பாடலைக் கேட்டான் ஓ...! வென்று கதறி அழுதான் சத்குரு அவர்களே! நான் கொலைகாரன்தான்! கொள்ளைகாரன்தான் எண்ணிலாத கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான்! நான் அந்த பாவத்திலே இருந்து தப்புவதற்கு என்ன வழி? வழி என்ன குருவே! என்று குருநானக் கால்களிலே விழுந்து அழுதான்!
சஜ்ஜன் கொலை, கொள்ளைகளைச் செய்தவன்தான். ஆனாலும் தனக்கு மனசாட்சி உண்டு என்பதற்கு அவன் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குமளவுக்கு அவன் நானக்கின் ஞானப் பாடலால் திருந்திய மனிதனானான். சத்குரு பாடிய பாடல் அவனது பாவங்களைக் குத்திக்குடைந்து அவற்றைக் கொலை செய்து, அவனது மனத்தைத் தூய்மைப்படுத்தியது.
அப்போது சத்குரு நானக் அந்தக் கொலை பாதகனுக்கு ஓர் உய்யும் வழி கூறினார்! ஏ, சஜ்ஜனா உன்னுடைய பாவச் செயல்களிலே இருந்து நீ மீள வேண்டும் என்று நம்புவது உண்மையானால், நான் சொல்வது போலச் செய்தால் நீ மன்னிப்புப் பெறலாம்; மன்னிக்கப்படுவாய் என்றார்.
என்ன குருதேவா அது என்று கேட்டான். அதற்கு சத்குரு
"யார் யாரை நீ கொலை செய்தாயோ. எவரெவரை நீ கொள்ளையடித்தாயோ, அவர்களைத் தேடிச் சென்று, அவர்களுடைய குடும்பத்தினர்களைப் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவர் கால்களிலும் விழுந்து, நான் செய்தது தவறுதான். இப்போது மனம் திருந்திவிட்டேன். என்னை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கதறி அழுதுகேள்! என்ற அறிவுரையை சத்குரு நானக் கூறியதுடன், இல்லாமல் அதற்கான மந்திரத்தையும் போதித்து வழியனுப்பினார். இதுதானே சமுதாயத்தை திருத்த வந்த ஓர் சற்குருவின் ஞானோபதேசம்!
தவறு செய்தவன் தனது தவறைத் தெரிந்து அதை மீளவும் செய்யாத திருந்திய மனம் பெற்று விட்டாலே, பிறகு அவன் திருந்திய ஆத்மாதானே!
சத்குரு வார்த்தை சத்திய வார்த்தை என்று நம்பிய சஜ்ஜன் அடுத்த கனமே புறப்பட்டுவிட்டான் அவன் யார் யாரைக் கொடுமை படுத்தினானோ, கொலை செய்தானோ, கொள்ளை படித்தானோ அவன் நினைவுக்குத் தெரிந்த வரையில் ஒவ்வொரு துடும்பங்களிடமும் சென்று மன்னிப்புக் கேட்டான். அக்குடும்பத்தாரின் கால்களிலே விழுந்து கதறி கண்ணீர் சிந்தினான்!
அப்போது பழிக்குப் பழியாகப் பலர் அவனுக்கு எண்ணற்றத் துன்பங்களைக் கொடுத்தார்கள். அடி உதைகளை அவன் பெற்ற போதும் கூட, அவர்களிடம் காலில் விழுந்து சத்குரு நானக் உபதேசம்படி மன்னிப்புக் கேட்டான். பாவங்களிலே இருந்து விடுதலையானான் இறைவா நீயே கதி என்று யோகமும் தியானமும் செய்து இறைவனையே எண்ணியெண்ணி மனமுருகினான் சஜ்ஜன்.