மகான் குரு நானக்/குருநானக் செய்த அற்புதங்கள்


9. குருநானக் செய்த அற்புதங்கள்

மயமலைச் சாரல்களின் ஒரு பகுதி காஷ்மீரம். அது இயற்கை அன்னையின் அழகுக் காட்சிகள் நிறைந்த ஓர் இடம்; எங்கு பார்த்தாலும் எழில் சிரிக்கும் வண்ண வண்ண வனப்புகள் மிகுந்த மலர்கள் காட்சி தரும் பகுதி. அழகு மிகு மலர்ச் செடிகள் அணிவகுத்து சிரிக்கும் இடம். வளைந்தாடும் கொடிகள் மக்களை வரவேற்று மகிழ்ச்சியூட்டும் நிலம்.

கனி குலுங்கும் மரங்கள். வெள்ளை வெளேர் என்ற காட்சி தந்து கொண்டே இருக்கும் பனிக் குவியல்கள். அந்தக் காஷ்மீரம் நாட்டின் தலைநகர் ஸ்ரீநகர். சத்குரு நானக்கும், அவரது மாணவர்களும் அந்த நகருக்குள் சென்றார்கள்.

குரு நானக் வருகை தருகிறார் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து, அவரது ஆசியையும், வாழ்த்தையும், அறிவுரைகளையும், அறவுரைகளையும் பெற்று ஞானத் திருவிழாவைப் போல வீதி வீதியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீநகரில் பிரம்மதாஸ் என்ற ஒரு பண்டிதர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஓர் அற்புதச் சக்தி கொண்ட பறக்கும் கம்பளம் ஒன்றிருந்தது. அவர் அந்தக் கம்பளத்தின் மேல் அமர்ந்து கொண்டு இமயமலைச் சாரல் மக்கள் இடையே சில அற்புதங்களைச் செய்து புகழ் பெற்றிருந்தார். நினைத்த இடங்களுக்கெல்லாம் பறந்து போவார், பறந்து வருவார். அதனாலே அவர் அப்பகுதியில் தான் ஒரு தெய்வீகச் சக்தியுடையவன் என்ற மனக் கர்வத்தில் இருந்தார்.

அந்த மாயக் கம்பளக்காரர், குரு நானக் காஷ்மீரம் வந்திருப்பதை அறிந்து, தன்னுடைய கம்பளத்தின் மீது பறந்து வந்து, சத்குருவை விட தான் சக்தி பெற்றவன் என்ற எண்ணத்தை அவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு, மக்களுக்கு தனது சக்தி குருநானக்கை விட ஆற்றல் பெற்றது என்பதையும் மெய்ப்பிக்க எண்ணினார்.

குருநானக் ஸ்ரீநகரில் கூடி தன்னை வரவேற்ற மக்களுக்குக் காட்சி தந்து, ஞான வழிபாடு செய்வதை கூட்டம் கூட்டமாய் கூடி நின்று மக்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் பிரம்மதாஸ் என்ற அந்தப் பண்டிதன் தன்னுடைய பறக்கும் கம்பளத்தில் ஏறி குருநானக் உபதேசம் செய்திடும் இடத்திற்கு வந்தார்.

கூட்டம் கூட்டமாய் அங்கே திரண்டிருந்த மக்களைப் பார்த்து, "எங்கே உங்களுடைய குரு? அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா?” என்று மனக்கர்வத்தோடும், ஆணவக் குரலோடும் அவர் கேட்டார்.

உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் சத்குரு நானக் இதோ உட்கார்ந்திருக்கிறார் என்று அவரைச் சுட்டிக் காட்டினார்.

எங்கே, எங்கே?' என்று மீண்டும் மீண்டும் அந்தப் பண்டிதர் கேட்டார். -

கோபம் கொண்ட ஏனய்யா பண்டிதரே. உமக்குக் கண் தெரிகிறதா? இல்லையா? இதோ அந்த மகான் உட்கார்ந்திருப்பதைப் பாரும் என்று குருவைக் காட்டினார்கள்.

உண்மையிலேயே பண்டிதரால் சத்குருவைப் பார்க்க இயலவில்லை. சரி சரி, சத்குருவைப் பார்க்க வந்ததே எனது தகுதிக்குக் குறைவுதான் என்று கூறியவாறே மீண்டும் வீடு சென்றிட தனது பறக்கும் கம்பளத்தருகே வந்து, அதைப் பறந்து போகுமாறு உத்தரவிட்டார்.

கம்பளம் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. பண்டிதர் தனது மாய மந்திர சக்தி அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தார். கம்பளம் பறக்கவில்லை.

கூடியிருந்த மக்கள் என்னய்யா பண்டிதரே, கம்பளம் பறக்க மறுக்கிறது என்று கூச்சல் போட்டார்கள். பண்டிதர் கூடியிருந்த மக்கள் முன்பு அவமானப்பட்டார். எதிர்பாராமல் ஏற்பட்டு விட்ட இந்த அவமானத்தை எண்ணி அவர் மனம் கொதித்தார். எனவே, அந்த இடத்தை விட்டுக் கால்நடையாகவே பண்டிதர் தனது வீடு போய்ச் சேர்ந்தார்.

ஸ்ரீநகர் மக்களுள் முக்கியமான பண்டிதரது நண்பர்கள். அன்று மாலையே அவரது வீட்டிற்குச் சென்று அவருக்கு உண்டான கேவலத்தை குறித்து கேட்டார்கள், வருந்தினார்கள் அவர்கள்.

அப்போதுதான் பண்டிதர், தன்னைத் தேடி வந்த முக்கியமான நண்பர்களைப் பார்த்து, குருநானக் எப்படிப்பட்டவர் என்ற விவரத்தை விசாரித்தார். நானக் தெய்வீகச் சத்தியை வந்தவர்கள் பண்டிதரிடம் கூறினார்கள்.

குருநானக்கைப் பற்றிய ஞானப் பெருமைகளை, அற்புதச் சக்திகளைக் கேட்டுக் கொண்ட பண்டிதர். உடனே சத்குரு தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து சென்றார். பண்டிதரைக் கண்ட குருபிான் அவரைப் பார்த்து, 'அன்பரே' என்று புன்முறுவலோடு கூப்பிட்டார்.

சத்குருவினுடைய கனிவானக் குரலைக் கேட்ட பண்டிதர், அவர் காலடியிலே கதறி விழுந்து என்னை மன்னித்து அருள் புரிக' என்றார்.

'அருளாளரே, நேற்று என்னால் ஏன் தங்களைப் பார்க்க முடியவில்லை?' என்ற விவரத்தைக் கேட்டார்.

அதற்கு சத்குரு, 'நேற்று உன் கண்களைக் கர்வம் என்ற இருள் மூடிக் கொண்டது. அதனால் என்னைப் பார்க்க முடியாது போயிற்று. உனது கம்பளத்தில் பறக்கும் சக்தி இருந்ததால், நீ தெய்வச் சக்தி உடையவன் என்ற அகம்பாவம் கொண்டாய். மாயாஜாலத்தில் பறப்பதனால் நீ உயர்ந்தவனா? தெய்வத் தன்மை உடையவனாக முடியுமா? ஈக்களும், கொசுக்களும் கூடத்தான்் பறக்கின்றன. அதனால், அவை உயர்ந்தவை ஆகிவிடுமா?' என்று குருநானக், பண்டிதரைப் பீடித்திருந்த அகம்பாவ உணர்வை, ஆணவத் திமிரை, மனக்கர்வ மமதையை கனிவோடு அகற்றி ஞானத்தை அவர் மனதிலே உருவாக்கினார். உடனே பண்டிதர் சத்குருவிடம், தனக்கு நல்ல வழிகளைக் கூறுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளவே. நானக் ஒரு பாடலை இசையுடன் பாடி, அதன் கருத்தை விளக்கினார். அதனால் மன அமைதி பெற்று பண்டிதர் வீடு திரும்பினார். அன்று முதல் மாயாஜால சக்தியையும், மந்திரங்களின் சக்தியையும் மறந்து, பண்டிதர் மனநிறைவு என்ற சாந்தியைப் பெற்று வாழ்ந்தார்.

காஷ்மீர் மக்களிடம் தனது ஞான உரைகளை ஆற்றிய பின்பு, அவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெறும் நெறிகளைப் போதித்து, இமயமலையின் அடிவாரத்திலே உள்ள மற்றொரு நாடான திபெத் பகுதிக்குத் தனது சீடர்களுடன் பயணமானார்.

திபெத் லாமாக்கள் இடையே சத்குரு

திபெத் நாட்டுக்கு குருநானக் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட பெளத்த மதக் குருக்களின் தலைவரான லாமா, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வரவேற்றார்! சத்குரு நானக் ஓர் அவதார புருஷர் என்பதை தலைமை லாமா புரிந்து கொண்டார். அதனால், தனது மற்ற லாமாக்களுடன் சென்று, குரு நானக்கை அவர் எதிர்கொண்டு வரவேற்று, தங்களது மடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். விருந்து வைபவங்களை நடத்தினார்கள்.

மதங்களிலே உள்ள உண்மைகளை அவர்கள் கூடி உரையாடி, அதனால் பல அரிய கருத்துக்களை ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து மகிழ்ந்தார்கள். இறைவனைப் பற்றியும், அவருடைய படைப்பின் அற்புதங்கள் குறித்தும் சத்குரு பல பாடல்கள் மூலமாக அவர்களுக்கு விளக்கினார். அதைக் கேட்ட பெளத்த லாமாக்கள் வியந்தார்கள். சில சந்தேகங்களையும் கேட்டு அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

குரு நானக் தனது சீடன் மர்தானாவிடம் ரூபாய் இசைக் கருவியை வாசிக்கச் செய்து, அந்த இசையினால் இறைவழிபாடு செய்யும் இன்பத்தை லாமாக்களுக்கு விளக்கிக் காட்டினார்.

சில நாட்கள் லாமாக்கள் மடங்களிலே தங்கியிருந்த பின்பு, குருநானக் தாம் உருவாக்கி வரும் சீக்கிய மதத்தின் புனித, புதிய கருத்துக்கள் ஒவ்வொன்றையும் திபெத்திய மக்களுக்கு உபதேசம் செய்து விட்டு, அங்கிருந்து கைலாச மலையின் வழியாக மானசரோவர் வந்தடைந்தார்.

மானசரோவரில் குருநானக்!

மானசரோவரிலும், கைலாச மலையிலும் தவம் செய்து கொண்டிருந்த ஞான யோகிகள், மாமுனிவர்கள் பலர். சத்குரு நானக் வருவதை அறிந்து, அவரை அன்பு தவழ வரவேற்று, வருக வருக என்ற மகிழ்ச்சி ஒலிகளை எழுப்பினார்கள். மானசரோவர் மாமுனிவர்கள் நானக் செய்த புதிய மத உபதேசங்களைக் கேட்டு உற்சாகமடைந்தார்கள்.

பிரயாகையில் சத்குரு:

பிறகு அங்கிருந்து குருநானக் சீடர்களுடன் அலகாபாத் நகர் வந்தார் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று பேராறுகள் கூடும் இடத்தைக் கண்டுகளித்தார். சத்குரு அலகாபாத் நகர் வந்த தினம் சூரிய கிரகண நாளாகும். அன்று லட்சக்கணக்கான மக்கள் நதிகளில் நீராடுவார்கள். நதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் குளிக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆற்றுக் குளியலாடிய மக்கள், அங்கேயே இறை வழிபாடுகளைச் செய்து மகிழ்வர்.

இவ்வாறு மக்கள் நீராடி, அவரவர் பழக்க வழக்கப்படி இறைவழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு போலிச் சாமியார் தன்முன் ஒரு மேசையைப் போட்டுக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் இருந்தார்.

அதைக் கண்ட அலகாபாத் யாத்ரிகர்கள் அந்த மேசை மேலே காசுகளைப் போட்டுச் செல்வார்கள். ஒவ்வொரு முறையும் காசு மேசை மீது விழும் ஓசையைக் கேட்டதும் போலிச் சாமியார் தனது கண்களைத் திறந்து பார்ப்பார். பிறகு, அந்தக் காசுகளை எடுத்துத் தனது பையில் போட்டுக் கொள்வார். மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.

போலிச்சாமியார் செய்யும் இந்த வேடிக்கைக் காட்சியை, சத்குரு நானக்கும் அவரது சீடர்களும் நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சத்குரு சிரித்துக் கொண்டார். அதனால் அவர் ஒரு வேடிக்கை செய்தார். போலிச் சாமியார் மேசை அருகில் சென்று 'பெரியவரே என்ன செய்கிறீர்கள்?' என்று வேடிக்கை யாகக் கேட்டார்.

'அப்பனே! விளையாட்டாக எதையும் கேட்கக் கூடாது. பிள்ளாய், தியானத்தில் மூழ்கி, மூன்று உலகங்களையும் பார்க்கிறேன். உனக்கு இது தெரியவில்லையா அப்பனே!' என்றார் சாமியார். அந்த விநாடியே சாமியார் தனது கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கிவிட்டார்.

அந்த நேரத்தில் சத்குரு, மர்தானாவைப் பார்த்து ஜாடை காட்டினார். உடனே சாமியார் முன்பு இருந்த மேசையைத் துக்கிக் கொண்டு போய் வேறு ஓர் இடத்தில் வைத்து விட்டார் மர்தானா நீண்ட நேரமாக காசு விழும் ஒசை கேட்கவில்லை சாமியாருக்கு. உடனே அவர் கண்களைத் திறந்து பார்த்தார். மேசையைக் காணவில்லை. எங்கே என் மேசை என்று சாமியார் அலறினார்.

அப்போது சத்குரு, 'சாமியாரே உமது மேசை மூன்று உலகங்களுக்கும் போயிருக்கிறது' என்று வேடிக்கையாகவே பதில் கூறினார்.

போலிச் சாமியார் வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டே தரையைப் பார்த்தபோது, சத்குரு சாமியாரைப் பார்த்து, உண்மையாக வாழ்வது எப்படி? என்ற வழிகளைக் கூறினார். அறிவுரையைக் கேட்டுக் கொண்ட அந்தச் சாமியார் அலகாபாத் நகரை விட்டே ஓடிப் போய்விட்டார்.

அலகாபாத் நகரை விட்டு சத்குருவும், மாணவர்களும் புறப்பட்டார்கள். காசி, கயை, பூரி போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குத் தனது சீக்கிய மத நெறிகளை வெளிப்படுத்தினார். எது உண்மையான மார்க்கம் என்பதைத் தக்கச் சான்றுகளுடன் மக்களுக்கு விளக்கியபடியே சத்குரு பூரியில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

காமரூபத்தில் குருநானக்!

அசாம் மாநிலத்திலே உள்ள காம ரூபம் என்ற இடத்திற்கு குரு நானக்கும், சீடர்களும் சென்றார்கள். அங்கே புகழ்பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று, ஓரிடத்தில் நானக் தங்கினார். காமாட்சி தேவி திருக்கோவிலின் ஒரிடத்தில் குருநானக் தங்கியிருந்தபோது, அவரது மாணவன் மர்தான்வுக்கு பசிப்பிணி உயிரை வாட்டியது. பசி எடுக்கிறது குருதேவா என்றான் மர்தானா. 'மர்தானா நகருக்குள் செல். உணவு கிடைக்கும். உண்டு வா!' என்றார். ஆனால் நீ எச்சரிக்கையோடு சென்று வர வேண்டும். நகரில் சூனியக்காரிகள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை' என்று கூறி அனுப்பினார்.

நகருக்குள் நுழைந்தான் மர்தானா. அவன் போவதை சூனியக்காரிகள் மூவர் பார்த்துவிட்டார்கள். ஒருத்தி ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறி ஒரு நூல் கயிற்றை மர்தானாவின் கழுத்தில் வீசினாள். மனிதனாகச் சென்ற மர்தானா நாயாக மாறிவிட்டான். சத்குரு அந்த நிகழ்ச்சியை தனது ஞானக்கண்ணால் அறிந்தார். உடனே நாயாக மாற்றப்பட்ட மர்தானா இருந்த இடத்திற்கு பாலாவுடன் விரைந்தார். சத்குருவைக் கண்டதும் இரண்டாவது சூனியக்காரி ஓடி வந்தாள். 'இதோ இந்த மனிதரையும் நாயாக மாற்றுகிறேன்' என்று நானக்கைச் சுட்டிக் காட்டினாள். மந்திரம் ஜபித்த நூலொன்றைச் சத்குருவின் மீது வீசினாள்.

சத்குரு உடனே அவளைப் பார்த்து நீயே நாயாவாய் என்றார். அடுத்தக் கணமே அவள் நாயானாள் குரைத்தாள்! நானக் பாலாவைப் பார்த்து, 'நாயாக மாறியுள்ள மர்தானாவின் கழுத்திலிருக்கும் அந்த நூலை எடு' என்றார். பாலா குரு கூறியபடியே செய்ய மர்தானா மீண்டும் மனிதனானான்.

மற்றொரு சூனியக்காரி அப்போது குருநானக்கின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்து ஓடி வந்தாள். அவளும் வேறோர் மந்திரம் ஜெபித்த நூலொன்றைக் குருநானக் மீது வீசிட கையைத் துக்கினாள். துக்கியகை உயர்ந்தபடியே நின்றுவிட்டது. இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வேறொரு சூனியக்காரி, தலைமை சூனியக்காரியிடம் ஓடி நடந்த விரவத்தை விளக்கினாள். சீறிய கோபத்தோடு தலைமை சூனியக்காரி விரைந்து வந்தாள். தனக்குள்ள முழு மந்திர ஆற்றலையும் ஜெபித்தாள். எதுவும் நடைபெறாததால் படுதோல்வி கண்ட அவள், சத்குருவின் காலில் விழுந்தாள்.

குருநானக் அவளையும், மற்ற சில சூனியக்காரிகளையும் மன்னித்தார். சூனிய வித்தைகளைப் பயன்படுத்தி மக்களைத் துன்பப்படுத்துவது பாபம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, குருநானக் தனது சீடர்களுடன் வழக்கம்போல தனது ஞான யாத்திரையைத் தொடர்ந்தார். அசாம் பகுதியிலே உள்ள அடர்ந்த காடுகளில் புகுந்து அவர்கள் மூவரும் நடந்து செல்லும் போது, சீடர்களைப் பார்த்து ஜாக்கிரதையாக என்னைப் பின்பற்றி வாருங்கள். பின் தங்கிட வேண்டாம். ஏன் தெரியுமா? மனிதர்களைக் கொன்று திண்பவர்கள் இந்தக் காட்டிலே இருக்கிறார்கள் என்று எச்சரித்தபடியே சென்றார். குரு கூறியதைக் கேட்டு பாலாவும், மர்தானாவும் பயந்து கொண்டே அவரைப் பின்பற்றினார்கள். அப்போது அவர்களைப் பசி நெருப்பாய் எரித்தது.

குருதேவா எனக்கு அதிகமாகப் பசி துன்புறுத்துகின்றது என்று மர்தான்ா வழக்கம் போலச் சொன்னான். உடனே குரு தேவர் 'உனது பசி எனக்கும் தெரிகிறது. இதோ இந்த வழியாகச் செல். அந்த திசையில் உணவு உனக்குக் கிடைக்கும்' என்றார் அவர்.

சத்குரு காட்டிய திசையிலே சிறிது தூரம் சென்றான். இரண்டு மலைவாசிகள் திடகாத்ரமான உடல் பலத்தோடு ஓடி வந்து மர்தானா மீது பாய்ந்து, குண்டுகட்டாகக் கட்டித் துக்கிக் கொண்டு அவர்களது தலைவன் முன்னே கொண்டு போய் போட்டார்கள். மர்தானாவை ஒரு மரத்தில் பலாத்காரமாகக் கட்டினார்கள். அந்த மரம் எதிரே, ஒரு கொப்பரையில் எண்ணெய் கடும் சூட்டோடும், நெருப்போடும் கொதித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மர்தானா உடல் துடித்தான் எதற்காக எண்ணெய் கொதிக்கிறது?

காட்டிலே செல்வோரை மலைவாசிகள் துக்கிக் கொண்டு வந்து உயிரோடு கொதிக்கும் கொப்பரை எண்ணெயில் போட்டுப் பொரித்துத் தின்பார்கள். அதுபோல மர்தானாவையும் வறுத்துத் தின்றிடத்தான் அந்த எண்ணெய் கொப்பரையிலே கொதித்துக் கொண்டிருந்தது. அதனால்தான் எண்ணெய் கொதிப்பதைக் கண்டு மர்தானா நடுங்கி விட்டான்.

என்ன ஆனான் மர்தானா என்பதை சத்குரு தனது ஞானக் கண்ணால் அறிந்தார். உடனே தனது சீடன் இருக்கும் இடம் நோக்கி அவர் விரைந்தார். குருநானக் வந்ததும் அந்த மலை வாசிகள். அவரையும் பிடித்துக் கட்டிப் போட ஓடிவந்தார்கள்.

என்ன நடந்தது தெரியுமா அப்போது? எந்த இடத்தில் ஒவ்வொரு மலைவாசியும் நின்று கொண்டிருந்தார்களோ, அவர்கள் அந்தந்த இடங்களை விட்டு ஆடவுமில்லை, அசையவு மில்லை. அப்படியே மரம்போல நின்று விட்டார்கள். சத்குருவின் தெய்வீக ஆற்றல் அவர்களை ஒரடிகூட நகராமல் செய்துவிட்டது எனலாம். உடனே, பாலா மர்தானா உள்ள இடத்துக்கு ஓடி அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடுதலை செய்தான்

மலைவாசிகள் அனைவரும் குருநானக்கின் ஆற்றலையும், அருட்தன்மையினையும் பார்த்து,அவர்கள் அப்படியே மனம் மாறிவிட்டார்கள். பிறகு அவர்கள் நின்ற இடங்களில் இருந்தவாறே 'மகானே எங்களை மன்னித்து அருளாசி வழங்குங்கள்' என்று கதறியழுது கண்ணீர் சிந்தினார்கள். நானக்தான் இரக்க சுபாவமும், கருணையுள்ளமும் கொண்டவராயிற்றே!

சத்குருவின் கருணை அன்பால் அவர்கள் எல்லாரும் நடக்கவும், நகரவும் சக்தி பெற்றார்கள். அவர்கள் சத்குரு நின்றிருந்த இடத்திற்கு ஓடிவந்து அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நானக் அவர்களை மன்னித்தார். சீக்கிய நெறிகளை அவர்களுக்குப் போதித்தார். மனம் மாறிய அந்த மலைவாசிகள் சீக்கிய மதவழியிலே நின்று வாழ்ந்தார்கள்.

சத்கருவின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. சத்குருவும்,மற்ற இரு மாணவர்களும் ஒருநாள் நடுக்காட்டில் நடந்து கொண் டிருந்தார்கள். மறுபடியும் மர்தானாவுக்குப் பசி வாட்டியது. அதை குரு உணர்ந்தார். அவர் மர்தானாவைப் பார்த்து, "மர்தானா உனக்குக் கடுமையான பசியோ என்றார். சரி, அதோ அந்தச் சிகைக்காய் மரத்திலே உள்ள பழங்களைப் பறித்துத் தின்னு. பசி தணியும். ஆனால் ஒரு நிபந்தனை. எவ்வளவு பழங்களை உன்னால் தின்ன முடியுமோ, அவ்வளவையும் அங்கேயே தின்னலாம். ஆனால், ஒரு பழத்தைக் கூட நீ எடுத்து வரக் கூடாது." என்றார் குரு.

'குருதேவா சிகைக்காய் கசக்குமே எப்படி நான் அதை தின்ன முடியும் என்றான் மர்தானா.

'மர்தானா பசி எடுக்கிறது என்கிறாயே! அதனால் சோன்னதைச் செய்” என்றார் சத்குரு.

மர்தானா ஆசையோடு சிகைக்காய் மரத்தின் மேலேறிப் பழத்தை வயிறு புடைக்கத் தின்றான். அவனுக்கு அம்மரத்தின் பழங்கள் கசக்கவில்லை. தேன் போல.இனித்தபடியே இருந்தது. பசியும் தணிந்தது. ஆனால், குரு கூறிய வார்த்தையை மர்தானா மறந்து விட்டான். மறுநாளுக்கும் வேண்டி பழங்களை பறித்துக் கொண்டு வந்தான் அவன்.

மறுநாள் பசி வருமுன்பே நேரத்திலேயே! தான் பறித்து வைத்திருந்த பழங்களைத் தின்றான். பாவம் ஒரே கசப்பு! எட்டிக் காயைப் போல வாயெல்லாம் கசந்து கொண்டே இருந்தது. உமிழ் நீரைத் துப்பியபடியே இருந்தான். அவன் வாயும் கசந்தது வயிறும் குமட்டிற்று. நாக்கு எச்சிலைத் தரையிலே சிந்தியபடியே இருந்தது! துப்பித் துப்பி வாயும் ஒய்ந்து விட்டது.

மர்தாமனாவின் செயல்களை எல்லாம் ஒன்றும் தெரியாதவாறு சத்குரு கவனித்தபடியே இருந்தார். பிறகு அவராலேயே அடக்க முடியவில்லை சிரிப்பை! மர்தானாவோ குருவுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொண்டு, கசப்பைத் தாங்க முடியாமல் இங்கும் அங்குமாக எச்சிலை உமிழ்ந்தபடியே கர் கர்ரென்று காறிக் காறித் துப்பிக் கொண்டே இருந்தான். மர்தானா நேற்று உனக்கு பசி எடுத்தது. தேவையேற்பட்ட போது உண்டாய். அதனால் அது இனித்தது. இப்போது ஆசையேற்பட்டதால் தின்றாய். அதனால் கசந்தது இல்லையா? என்றார் குரு.

குருதேவா என்னால் கசப்பைத் தாங்க முடியவில்லை. பேச முடியவில்லை என்றான் மர்தானா.

கவலைப் படாதே. ’சத்நாம்’ என்று சொல். கசப்பு மறைந்து விடும் என்றார் குரு.

அவ்வாறே கூறினான் மர்தானா. 'சத்நாம் என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தான் அவன், மறைந்தது கசப்பு. அவன் முகம் ஒளி பெற்றது. மகிழ்ச்சியடைந்தான் மர்தானா.