மகாபலிபுரத்து ஜைன சிற்பம்/சகர, சாகரர் கதை

சகர, சாகரர் கதை

ஜீத-சத்துரு என்னும் அரசன் பரத கண்டத்தை அரசாண்ட. காலத்தில், அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு அஜிதன் என்றும் இளைய குழந்தைக்குச் சகான் என்றும் அரசன் பெயரிட்டு வளர்த்தான். மூத்த குழந்தை வளர்ந்து வயதடைந்த பிறகு அஜீதநாதர் என்னும் தீர்த்தங்கரராக விளங்கி உலகத்திலே ஜைன மதத்தைப் பரவச்செய்து இறுதியில் வீடுபேறடைந்தார். இளைய பிள்ளையாகிய சகரன், பெரியவனாக வளர்ந்து, தனது தந்தைக்குப் பிறகு அரசாட்சியை ஏற்றுப் பரத கண்டத்தின் சக்கரவர்த்தியாக விளங்கினார். இந்தச் சகரசக்கரவர்த்தி அரசாட்சி செய்துவருங்காலத்தில், ஒரு சமயம் கண்டப்பிரபாத மலைக்குத் தன் மந்திரி முதலியவர்களுடன் சென்று நாட்யமாலகன் (இந்திரன்) என்னும் தெய்வத்தைக் குறித்து மூன்று நாள் நோன்பிருந்தார். இவர் நோன்பிருப்பதைத் தன்னுடைய சிம்மாசனம் துளங்கியதனால் அறிந்த நாட்டியமாலகன் என்னும் தெய்வம், சகரசக்கரவர்த்தியின் முன்பு தோன்றி, எண்ணிறந்த செல்வங்களைக் கொடுத்து. சக்கரவர்த்திக்கு வேண்டிய உதவிகளை எந்த நேரத்திலும் செய்யச் சித்தமாயிருப்பதாகத் தெரிவித்தது. அந்த வரத்தை ஏற்றுக்கொண்ட சகரசக்கரவர்த்தி, தனது மந்திரிகளைக்கொண்டு அந்தத் தெய்வத்திற்குச் சிறப்பு செய்வித்து அனுப்பினார். பிறகு சக்கரவர்த்தி கங்கைக்கரையை யடைந்து, நவநிதி என்னும் ஒன்பதுவிதமான செல்வங்களைப் பெறுவதற்காக மூன்று நாள் கடுநோன்பிருந்தார். நோன்பின் முடிவில் நவநிதிகள் அவருக்குக் கிடைத்தன. அந்த ஒன்பது வகையான நிதிகளாவன :—

1-நைசர்ப்பம் 2-பாண்டுகம் 3-பிங்கலம் 4-மகாபத்மம் 5-காலம் 6-மகாகாளம் 7-மானவம் 8-சங்கம் 9-சர்வரத்னம் என்பன.

இந்த நவநிதிகள் ஒவ்வொன்றுக்கும் தலைமையாக ஒவ்வொரு தேவகுமாரனும், காவலாக ஆயிரம் ஆயிரம் பூதங்களும் இருந்தனர். ஒன்பது நிதிகளுக்கும் தலைவராக இருந்த ஒன்பது தேவகுமாரர்களும் அந்தந்த நிதியின் பெயரைக்கொண்டவர்கள். நவநிதியோடு தோன்றிய இவர்கள், சகரசக்கரவர்த்தியைப் பார்த்து, " உமது நல்வினையால், நாங்கள் உமது ஊழியர்களானோம். நவநிதிகளாகிய எங்கள் துணையைக்கொண்டு உமது விருப்பப்படி எல்லா இன்பங்களையும் துய்ப்பீராக, பெரியதாகிய கடல் நீர் வரண்டாலும் வரண்டுவிடும். எங்கள் நிதிச் செல்வம் ஒருபோதும் குறையாது. சக்கரவர்த்தியாகிய தங்களது கட்டளைப்படி ஏவல் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். " என்று பணிந்து கூறின. இவ்வாறு பெறுதற்கரிய நவநிதிகளைச் சகரசக்கரவர்த்தி தமது புண்ணிய வசத்தினால் அடையப்பெற்றார்.

இந்த ஒன்பது வகையான செல்வங்களின் இயல்பாவன:— கைசர்ப்பநிதி, வீடுகள் பாசறைகள் கிராமங்கள் அரண்பொருந்திய நகரங்கள் முதலியவற்றை அமைத்துக்கொடுக்கும். பாண்டுகம் என்னும் நிதி நெல், கோதுமை, பருப்பு வகைகள் முதலிய தானியங்களையும் உணவுப் பொருள்களையும் வேண்டிய அளவு உண்டாக்கிக் கொடுக்கும். பிங்கல நிதி, ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் யானை குதிரை முதலிய பரிவாரங்களுக்கும் உரிய அணிகலன்களை அமைத்துக்கொடுக்கும். மகா பதுமம் என்னும் நிதி, வெண்மை கருமை செம்மை முதலிய பலவித நிறங்களையுடைய பட்டினாலும் பருத்தியினாலும் ஆன உடைகளை பலப்பல உருவத்தில் அமைத்துக் கொடுக்க வல்லது. காலம் என்னும் நிதியானது, இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம் என்னும் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிவிப்பதோடு, உழவு கைத்தொழில் முதலியவற்றின் பலாபலன்களையும் முன்னதாகவே தெரிவிக்க வல்லது. மகாகாளம் என்னும் நிதியானது முத்து, பவழம், பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோகச் செல்வங்களை வேண்டிய அளவு அளிக்கவல்லது. - மானவம் என்னும் நிதியானது போருக்குரிய சேனைகளையும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் குறைவற அளிக்கவல்லது. சங்கநிதி குழல், யாழ் முதலிய இசைகளையும் நாடகம், பாட்டு, சிற்பம் ஓவியம், காவியம் முதலிய கலையின்பங்களை அளிக்கவல்லது. சர்வ ரத்தினம் என்னும் நிதியானது ஜீவரத்தினம் ஏழையும் அஜீவரத்தினம் ஏழையும் அளிக்கவல்லது. (ஜீவரத்தினம் ஏழாவன;— கிரகபதி, சேனாபதி, வில்வகர்மன், புரோகிதன், குதிரை, யானை, ஸ்திரீ என்பன. அஜீவரத்தினம் ஏழாவன:— சக்கரம், குடை, வாள், தண்டடம், சூடாமணி, தோல், காசிணி என்பன.) நவநிதிகளின் இயல்புகளையும் ஜீவ அஜீவரத்தினங்களின் இயல்பையும் ஜீவசம்போதனை என்னும் ஜைன நூலில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதனை இந்நூலின் கடைசியில் சேர்த்திருக்கிறேன், ஆங்குக் காண்க.

இவ்வாறு, நவநிதிகளையும் அடைந்து சக்கரவர்த்தியாகச் செங்கோல் நடாத்தி அளவற்ற இன்ப சுகங்களை அனுபவித்து வருகிற சகர சக்கரவர்த்திக்கு அறுபதினாயிரம் பிள்ளைகள் பிறந்தார்கள். அப்பிள்ளைகளுக்கு சாகரர் என்பது பொதுப்பெயர். அதாவது சகரன் 'பிள்ளைகள் என்பது கருத்து. இவர்களில் மூத்த மகன் பெயர் ஜானு என்பது.

(Upload an image to replace this placeholder.)

தக்க வயதடைந்த பிறகு, சாகர குமாரர்கள் அறுபதினாயிரவரும், தேசத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பினார்கள், விரும்பியபடியே அவர்கள் சக்கரவர்த்தியிடம் போய் உத்தரவு கேட்டார்கள். அவர்கள் விருப்பத்திற்கு இணங்கிய சக்கரவர்த்தி, ஸ்திரீ ரத்தினம் ஒன்று தவிர ஏனய ஆறு ஜீவரத்தினங்களையும் ஏழு அஜீவரத்தினங்களையும் அவர்களுக்குத் துணையாகக்கொடுத்து விடை கொடுத்து அனுப்பினான். பிறகு, சகர குமாரர்கள் புறப்பட்டுச்சென்று பலநாடு நகரங்களைச் சுற்றிப்பார்த்த பிறகு கடைசியாக அஷ்டாபதமலைக்கு வந்து சேர்ந்தார்கள்: அஷ்டாபதமலை என்பது கயிலாயமலை. இதற்கு ஹரார்த்திரி என்றும் ஸ்படிகாத்திரி என்றும் வேறு பெயர்கள் உண்டு.

(இந்தக் கயிலாய மலையில், சகர குமாரர்களின் முன்னோறான ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்தார். ரிஷபதீர்த்தங்கரரின் மகனான பரத சக்கரவர்த்தி, ரிஷபதீர்த்தங்கரர் வீடுபேறடைந்த இடமாகிய இந்தமலையிலே விலைமதிக்கமுடியாத செல்வங்களைக்கொண்டு சிறந்ததோர் திருக்கோயில் அமைத்திருந்தார். இத்திருக்கோயிலுக்கு எதிரில், ரிஷபதீர்த்தங்கரரின் உபதேசங்களைச் செவிசாய்த்துக்கேட்பது போன்று தன்னுடைய (பரதச் சக்கரவர்த்தியுடைய) உருவத்தையும் அவர் அமைத்திருந்தார்.)

கயிலாயமலைக்கு வந்த சாகர குமாரர்கள், பரத சக்கரவர்த்தி கட்டிய இக் கோயிலுக்குள் சென்று வணங்கினார்கள். பிறகு, மிக்க அழகுள்ளதும் விலைமதிக்கப்படாததுமான இப் பொற் கோயிலைப் பாதுகாக்கா விட்டால், வரப்போகிற துஷ்மயுகத்தில் மக்கள் இக்கோயிலிலுள்ள இரத்தினங்களயும் பொன்னையும் கொள்ளையடிப்பார்கள் என்று நினைத்து, அக் கோயிலுக்குப் பாதுகாப்பு அமைக்க முயன்றார்கள். கோயிலைச் சுற்றிலும் அகழிதோண்டி அதில் நீரை நிறப்பி விட்டால் ஒருவரும் கோயிலுக்குள் சென்று கொள்ளையிடமுடியாது என்று கருதினார்கள், கருதினபடியே, தம்மிடம் இருந்த அஜீவரத்தினங்களில் ஒன்றான, தண்ட ரத்தினத்தினால் கோயிலைச் சுற்றிலும் அகழி தோண்டினார்கள். ஆற்றல் மிக்க அந்தத் தண்ட ரத்தினம் ஆயிரம் யோசனை ஆழமாக நாகலோகம் வரையில் அகழ்ந்து விட்டது. அதைக்கண்ட நாகர்கள் அஞ்சினார்கள். ஜுவலனப்பிரபன் என்னும் நாகராசன் அவ்வகழியின் வழியாகப் பூலோகத்துக்கு வந்து கடுங்கோபத்துடன் சகர குமாரர்கணப்பார்த்து, "பவன லோகத்தை ஏன் அழிக்கிறீர்கள். அஜிதநாத சுவாமியின் தம்பியாகிய சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகளாகிய நீங்கள் இத் தகாத செயல ஏன் செய்கிறீர்கள்?" என்று வினவினான்.

நாகராசன் கோபத்தோடு வினவியதைக் கேட்ட, சாகரரில் மூத்தவனான ஜாலு, "உமது நாகலோகத்தை அழிக்க நாங்கள் நினைக்கவில்லை. ரிஷப தீர்த்தங்கரரின் கோயிலைச்சூழ்ந்து அகழி தோண்டினோம். தண்ட ரத்தினத்தின் ஆற்றலினால், அகழி நாகலோகம் வரையில் ஆழமாக அகழப்பட்டது. இனி உங்களுக்குத் துன்பம் உண்டாகாதபடி, பார்த்துக் கொள்கிறோம்" என்று விடையளித்தான். நாகராசன் "எங்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள்" என்று கூறி, மறுபடியும் நாகலோகம் போய்விட்டான்.

பிறகு சாகர குமாரர்கள், தம்மிடமிருந்த தண்டரத்தினத்தின் உதவியினால், கங்கையின் நீரைத் திருப்பிக் கொண்டுவந்து தாங்கள் தோண்டிய அகழியில் பாய்ச்சினார்கள். கடல் நீர் பெருக்கெடுத்தது போன்று கங்கை நீர் புரண்டோடி வந்து ஆயிரம் யோசனை ஆழமுள்ள அகழியை நிறப்பிற்று.

கங்கை, பாதாளம் வரையில் சென்று பாயவே, நாகலோகம் வெள்ளக்காடாயிற்று. நாகர்கள் அஞ்சி நடுங்கினார்கள். நாகராசனாகிய ஜுவலனப்பிரபன், அங்குசத்தால் குத்துண்ட மதயானை வெஞ்சினம் கொண்டதுபோல், கடுஞ்சினங் கொண்டு நாக குமாரருடன் புறப்பட்டுச் சாகரர் இடம்வந்து தீப்பொறி பறக்கும் தன் விஷக்கண்களினால், அறுபதினாயிரவரையும் விழித்துப்பார்த்தான். அப்பார்வையினால், சாகரர் அறுபதினாயிரவரும் எரிந்து சாம்பலாயினர்.

குமாரர்கள், இறந்த செய்தியைக்கேட்ட சகர சக்கரவர்த்தி ஆற்றொணாத்துயரம் அடைந்தார். இதற்குள், அரண்மனை வாயிலில் பெருங் கூட்டமாக மக்கள் கூ.டி பெருங்கூச்சலிட்டழுவதைக் கேட்டு, அவர்கள அழைத்து விசாரித்தார். "சாகர் குமாரர்கள் கங்கையை அகழியில் திருப்பி விட்டபடியால் அந்நீர் அகழியை நிறப்பியதோடு மேலும் மேலும் வெள்ளப் பெருக்கெடுத்து வந்து அங்குள்ள காடுகளையும் அவர்களையும் அழித்துவிட்டது. மேன் மேலும் வெள்ளம் பெருகிவருகின்றது. எங்களைக் காப்பாற்றவேண்டும்" என்று அவர்கள் முறையிட்டார்கள். இதைக்கேட்ட, சகர சக்கரவர்த்தி, தன்னுடைய பேரனான பகீரதனை அழைத்து, "நீ போய் கண்ட்டரத்தினத்தின் உதவியினால், ஊரை அழிக்கும் கங்கையைக் கொண்டுபோய், கடலிற் பாய்ச்சிவீட்டு வா" என்று கட்டளை யிட்டார். பாட்டன் கட்டளைப்படி, பகீரதன் கயிலாய மலைக்குச் சென்று தண்ட இரத்தினத்தின் உதவியினால் கங்கையை இழுத்துக் கொண்டு போய் கட்லில் பாயச்செய்தான்.

இதுதான். திரிசஷ்டி சலாகாபுருஷர் [அறுபத்து மூன்று பெரியார்] சரித்திரம் என்னும் ஜைன நூலிலே அஜிதநாத சுவாமி சரித்திரத்திலே கூறப்படுகிற சகர சாகரர்களின் கதை. இந்தக் கதையைத்தான், மகாபலி புரத்தில் உள்ள, சிற்ப உருவத்தில் விளக்கமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இனி, இந்தக்கதைக்கும் மகாபலிபுரத்துச் சிற்பத்துக்கும் உள்ள பொருத்தங்களை ஆராய்வோம்.

(Upload an image to replace this placeholder.)