மகாபாரதம்-அறத்தின் குரல்/3. எல்லாம் முடிந்து விட்டது

3. எல்லாம் முடிந்து விட்டது

துரியோதனனுடைய உயிர்நிலை எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், ‘இனி இவனை அழிப்பது கடினமில்லை’ என்று தோன்றியது வீமனுக்கு. உடனே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டிக் கதையை ஓங்கித் துரியோதனனின் தொடையில் அடித்தான். பலமாக விழுந்த அந்த அடியைத் தாங்க முடியாமல் தலைகிறங்கிச் சோர்ந்து அலறிக் கொண்டே கீழே வீழ்ந்தான் துரியோதனன். அவன் கீழே விழுந்த பின்பும் வீமனுடைய சினம் அடங்கவில்லை. மார்பில் ஓங்கிக் குத்தினான். கன்னங்களில் அறைந்து பற்கள் சிதறி வாயிலிருந்து இரத்தம் ஒழுகுமாறு செய்தான். துரியோதனன் சிரசில் அணிந்து கொண்டிருந்த பொற்கிரீடம் உருண்டு மண்ணில் புதைந்தது. தோள்களிலும், மார்பிலுமாக வீமனிடமிருந்து துரியோதனன் வாங்கிக் கொண்ட அடிகள் கணக்கு வழக்கிற்கு அடங்காதவை. கடித்துக் குதறி எறியப்பட்ட மாமிசப்பிண்டம் போலத் தரையில் கிடந்தது துரியோதனனின் உடல், “ஏ கண்ணா! நீ சூழ்ச்சிக்காரன். நீ செய்ததெல்லாம் எனக்குத் தெரியும். அர்ச்சுனன் மூலமாக என் உயிர் நிலை எது என்பதை நீ குறிப்பாக வீமனுக்குத் தெரியப்படுத்திவிட்டாய். இல்லையானால் வீமன் இப்படி என்னை நொறுக்கித் தள்ளுவானா? ஆனால் உன்னுடைய இந்தச் செயல் பெரிய வஞ்சகம். நேர்மையான போர் முறை ஆகாது இது. நீ ஓர் இடையன், பெருந்தன்மை இல்லாதவன். ஆகவேதான் நீ இப்படிப்பட்ட கேவலமான செயலைச் செய்தாய், பரம்பரை அரச குலத்தில் பிறந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்யக் கூசுவார்கள்” என்று வேதனைமிக்க குரலில் கதறினான் துரியோதனன். அடிபட்டு இரணமாகியிருந்த உடலின் வலி வேதனை அவன் குரலில் தொனித்தது.

சிறிது நேரம் இவ்வாறு முனகிக்கொண்டும் கதறிக்கொண்டும் கிடந்தபின், திரும்பவும் வீமனோடு போர் செய்வதற்கு எழுந்தான் துரியோதனன். அவன் எழுந்திருப்பதைப் பார்த்து, “துரியோதனா! உன் உடலில் எழுந்திருப்பதற்குக் கூடவா இன்னும் வலிமை மீதமிருக்கிறது? இதோ பார்! அந்த வலிமையையும் போக்கிவிட்டு மறுவேலை பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவனைக் கால்களால் உதைத்துக் கீழே தள்ளினான் வீமன்.

“ஐயோ! அப்பா! கொல்கிறானே?” என்று பரிதாபகரமாகச் சப்தமிட்டுக் கொண்டே திரும்பவும் கீழே விழுந்தான் துரியோதனன். வீமன் துரியோதனனைக் குற்றுயிரும் குலையுயிருமாக அடித்துக் கீழே தள்ளுவதைப் பார்த்துக் கொண்டிருந்த பலராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. துரியோதனனுடைய நிலை கண்டு அவன்மேல் இரக்கம் கொண்டு விட்டான் பலராமன். “அடே வீமா! நிறுத்து உன் சாகஸத்தை. நீங்கள் செய்வது போர் முறைக்குச் சிறிதும் பொருந்தாது. அப்போதிருந்து நடப்பதை எல்லாம் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். முறை தவறிய போரை யார் செய்தாலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் தம்பியான கண்ணனே இதற்குக் காரணமாக இருந்தாலும் நான் அதை வெறுக்கிறேன். கதைப் போர் செய்வதென்றால் அதற்கு ஓர் ஒழுங்கில்லையா? இடுப்புக்கு மேல் அடிப்பதுதான் கதைப் போர். இடுப்புக்குக் கீழே தொடையில் வீமன் துரியோதனனைத் தாக்கியிருக்கிறான். தட்டிக் கேட்க ஆளில்லை’ என்ற திமிரினால் தான் வீமன் இப்படிச் செய்திருக்கிறான். இதோ இந்த வீமனை நானே அடித்து நொறுக்கிவிடுகிறேன்” என்று ஆத்திரத்தோடு கூறிக்கொண்டே ஓர் இரும்பு உலக்கையினால் வீமனை அடிப்பதற்குத் தாவிப் பாய்ந்தான் பலராமன். அவனுடைய முன்கோபம் பயங்கரமாக இருந்தது. பலராமன் ஓங்கிய உலக்கையின் அடிமட்டும் வீமன்மேல் விழுந்திருக்குமானால் அவன் எலும்புகள் பொடிப் பொடியாக நொறுங்கியிருக்கும். கண்ணன் குறுக்கே பாய்ந்து தடுத்தனால்தான் வீமன் பிழைக்க முடிந்தது. “அண்ணா! பொறு! கோபப்படாதே. உன்னுடைய முன் கோபத்தால் எல்லா ஏற்பாடுகளும் கெட்டுப் போய்விடும். இவர்கள் பகையில் குறுக்கிடுவதற்கு நீ யார்? இளம் பிராயத்திலிருந்தே இவர்களுக்குள் கொடும்பகை நிலவி வருகிறது. அந்தப் பலநாள் பகையை இவர்கள் தங்களுக்குள் தாங்களே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு எவ்வாறு சாவு நேரும் என்பது பற்றி மைத்திரேய முனிவர் இட்ட சாபம் உனக்கு மறந்து விட்டதா? “துரியோதனனின் தொடை இரத்தத்தைப் பூசினாலொழியக் கூந்தலை முடியமாட்டேன்’ என்று திரெளபதி சபதம் செய்திருக்கிறாள். துரியோதனனைத் தன் கையாலேயே கொன்று முடிப்பதாக வீமனும் சபதம் செய்திருக்கிறான். அந்தச் சபதங்களெல்லாம் நிறைவேறியாக வேண்டாமா? நீயும், விதுரனும் தீர்த்த யாத்திரை சென்று விட்டு இப்போது தான் திரும்பி வருகிறீர்கள். கழிந்துபோன பதினேழு நாட்களாகப் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்த போரைப் பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. வீமன் துரியோதனனைக் கதாயுதத்தால் அடித்து விட்டதைப் ‘பெரிய வஞ்சகம்’ என்று கூறிக் குமுறுகிறாய் நீ! கடந்த பதினேழு நாட்களில் பாண்டவர்களுக்கு எதிராகத் துரியோதனன் செய்திருக்கும் அளவற்ற வஞ்சகங்களை நீ பார்த்திருந்தால் இப்படிப் பேசவே மாட்டாய், சிவேதன், அபிமன்னன் போன்ற பாண்டவர் தரப்பு வீரர்களையெல்லாம் துரியோதனன் வஞ்சகத்தினாலேயே கொன்றிருக்கிறான். அத்தகைய துரியோதனனை எதிர்த்து வீமன் எப்படிப் போர் புரிந்தாலும் தகும். ஆகவே அண்ணா நீ இதில் தலையிட்டுக்கொள்வது சிறிதும் பொருந்தாது” என்று பலராமனைத் தடுத்தான் கண்ணன். வீமனை அடிப்பதற்காக ஓங்கிய பலராமனின் கைகள் தயங்கின. இரும்பு உலக்கை கீழே விழுந்தது. பேசாமல் தலை குனிந்தவாறே அந்தத் தோட்டத்திலிருந்தே வெளியேறிவிட்டான் அவன். யாரிடமும் விடை பெற்றுக் கொள்ளக் கூட அவனுக்குத் தோன்றவில்லை.

இருள் போர்வைக்குள் உலகமும் ஒளியும் மூழ்கி இரண்டறக் கலக்கும் நேரம். கீழே அடிபட்டு விழுந்த துரியோதனன் வேதனை தாங்காமல் மெல்லிய குரலில் முனகிக் கொண்டிருந்தான். சூரியன் மறைகின்ற நேரமும் அவனுடைய வாழ்வு மறைகின்ற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தன.

“சரி வாருங்கள் போகலாம். இனி இவன் விதியை இவனே கவனித்துக் கொள்ளட்டும்” என்று கூறிப் பாண்டவர்களையும் விதுரனையும் அழைத்துக்கொண்டு சென்றான் கண்ணன். எல்லோரும் சமந்தபஞ்சக மலைத் தோட்டத்திலிருந்து கிளம்பினர். மன்னாதி மன்னனாகிய துரியோதனன் மட்டும் கவனிக்க ஆளின்றி அநாதைபோல் வீழ்ந்து கிடந்தான். அவனுடன் இருந்தவை அவநம்பிக்கை, வேதனை, சிந்திய ரத்தம், ஏமாற்றம் இவைகளைத் தவிர வேறெவையும் இல்லை.

மலையிலிருந்து புறப்பட்ட பாண்டவர்கள் நேரே குருக்ஷேத்திரத்திலுள்ள தங்கள் பாசறைக்குப் போய்த் தங்க வேண்டுமென்றார்கள். “இன்றிரவு பாசறையில் தங்கக்கூடாது. அதனால் எவ்வளவோ கெடுதல்கள் விளையலாம், இது இராஜீய இரகசியம். வெற்றிபெற்ற அரசர்கள் தோல்வியுற்றவனின் படைகளுக்கருகே உள்ள தமது பாசறையில் வசிப்பது பலவிதத்திலும் ஆபத்தைத் தரக்கூடியது. நீங்கள் பேசாமல் என்னோடு வாருங்கள். நம்முடைய படைகள் வேண்டுமானால் பாசறையிலேயே தங்கியிருக்கட்டும். அவற்றைப் பற்றிக் கவலை இல்லை. நாம் மட்டும் பக்கத்தேயுள்ள ஒரு காட்டில் போய்த் தங்கி இரவுப் பொழுதைக் கழிப்போம்” என்று கூறி அவர்களை ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றான் கண்ணன், பாண்டவர்களும் அந்த யோசனைக்கு ஒப்புக் கொண்டு கண்ணனோடு காட்டிற்குச் சென்றனர்.

இதற்குள் துரியோதனன் சமந்தபஞ்சக மலையிலுள்ள பூஞ்சோலையில் குற்றுயிரும் குலையுயிருமாக அடிபட்டுக் கிடக்கிறான் என்ற செய்தி அசுவத்தாமன் முதலிய கெளரவப்படை வீரர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. கெளரவர்படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் செய்தியைக் கேள்விப்பட்ட மறுகணமே சமந்தபஞ்சக மலைக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். அங்கே சென்றதும் இரத்த வெள்ளத்தினிடையே கிடக்கும் துரியோதனனுடைய உயிர் நீங்கப் போகிற உடலைத் தாங்கிக் கொண்டு கதறியழுதான் அசுவத்தாமன்.

“ஐயோ! உன் கதி இப்படியா ஆகவேண்டும்? மகாமன்னனாக வாழ வேண்டிய நீ இப்படி மண்ணிலா கிடப்பது? பாண்டவர்களை நாளையே தோற்று ஓடச் செய்து இந்த மண்ணுலகத்தின் ஏக சக்ராதிபதியாக உன்னை ஆக்கவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேனே? அந்தக் கனவையெல்லாம் பாழாக்கி விட்டாயே, என்னை முன்பே படைத் தலைவனாக ஆக்கியிருந்தால் உனக்கு இந்தக் சுதி நேராதபடி உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்பேனே? யார் யாரோ திறமையற்றவர்களை எல்லாம் படைத் தலைவர்களாக்கி உன் வினையை நீயே தேடிக் கொண்டாய். அந்தோ! உன் நிலை பரிதாபத்துக்குரிய தாகிவிட்டது. இவற்றையெல்லாம் இப்போது பேசி என்ன பயன்? விதி முடிகின்ற நேரம் இது. ஆயிற்று. எல்லாமே முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் துரியோதனா ஒரே ஒரு வாக்குறுதி மட்டும் உனக்கு நான் இந்த அந்திம காலத்தில் அளிக்கின்றேன். உன் உயிர் சாவதற்குள் உன் கண்கள் காணும்படியாகவும், காதுகள் கேட்கும்படியாகவும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுகின்றேன். பார்த்து விட்டு அல்லது கேட்டுவிட்டு அதன் பிறகு நீ மாண்டு போகலாம்.

உன்னை இக்கதிக்கு உள்ளாக்கிய வீமனையும், அவனுடைய சகோதரர்களையும் கொன்று குவிக்கிறேன். இதை என்னால் செய்ய முடியுமா என்று திகைக்காதே. நான் செய்யத்தான் போகிறேன். தேவாதி தேவர்களின் கிருபையால் தவம் செய்து பெற்ற பல அஸ்திரங்கள் என்னிடம் உள்ளன. அவற்றையெல்லாம் இன்று பாண்டவர்கள் மேல் தொடுக்கப் போகிறேன். என் சொற்களை நம்பு” என்று வீர உரை பேசினான் அசுவத்தாமன்.

“செய் அசுவத்தாமா செய்! உன்னால் இதைச் செய்ய முடிந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இதோ என் அன்புக்கும், நன்றிக்கும் அடையாளமாக இதைப் பெற்றுக் கொள்” என்று கூறிக் கீழே உருண்டு கிடந்த தன் முடியிலிருந்து ஒரு மணியை எடுத்து நடுங்கும் கைகளால் அசுவத்தாமனிடம் கொடுத்தான் துரியோதனன். அசுவத்தாமனும் பயபக்தியோடு அதைப் பெற்றுக் கொண்டான். துரியோதனன் அளித்த மணியைப் பெற்றுக் கொண்ட பின் அசுவத்தாமன் முதலியோர் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு சமந்தபஞ்சகமலையிலிருந்து புறப்பட்டுத் தங்களுடைய பாசறையை அடைந்தனர். கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய இருவரோடும் கலந்து ஆலோசித்த பின் பாண்டவர்களைத் தாக்குவதற்குத் திட்டமிட்டான் அசுவத்தாமன். தாக்குதலின் போது அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக மற்ற இருவரும் ஒப்புக் கொண்டனர்.

பாண்டவர்களைத் தாக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நல்ல நிமித்தமும் தென்பட்டது. பாசறையின் அருகே இருந்த ஆலமரம் ஒன்றில் ஓர் ஆந்தை காக்கைகளை எதிர்த்துப் பூசல் செய்து கொண்டிருந்தது. பகலில் என்னைத் துன்புறுத்திய காகங்களை இரவிலே பழிவாங்குவேன் என்று முயற்சி செய்வது போல் ஆந்தை கூச்சலிட்டுக்கொண்டிருந்தது. ‘பகலில் நம்மை வென்ற பாண்டவர்களை நாம் இந்த இரவில் தான் வெல்ல வேண்டும். இதற்கு இந்த ஆந்தையின் செயல் ஒரு நல்ல நிமித்தம்’ என்று எண்ணிக் களிப்படைந்தான் துரியோதனாதியர் படையைச் சேர்த்த அசுவத்தாமன். இரவோடிரவாகப் பாண்டவர்களின் பாசறையில் திருட்டுத்தனமாய் நுழைந்து அவர்கள் ஐந்து பேரையும் ‘கொலை செய்து விடுவது’ என்று திட்டம் உருவாயிற்று. பாண்டவர்கள் பாசறையில்தான் தங்கியிருக்கிறார்களா? அல்லது வேறெங்காவது போய்த் தங்கியிருக்கிறார்களா? என்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவே இல்லை.

அசுவத்தாமன், கிருதவர்மன், கிருபாச்சாரியன் ஆகிய மூவரும் ஆயுதபாணிகளாக இருளில் பதுங்கிப் பதுங்கி மறைந்து மறைந்து பாண்டவர்கள் பாசறை வாசலை அடைந்தனர்.

பாசறைக்கு இம்மாதிரி ஆபத்துக்கள் நேரலாம் என்பதை முன்பே எதிர்பார்த்திருந்த கண்ணன் மாயையினால் உருவாக்கப்பட்ட பயங்கரமான பூதம் ஒன்றைப் பாசறை வாயிலில் காவலாக நிறுத்தி வைத்திருந்தான். இப்படி ஒரு பூதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விஷயமும் அசுவத்தாமன் முதலியோருக்குத் தெரியாது. அவர்கள் மூவரும் பாசறை வாயிலை அடைந்தபோது பூதம் குபீரென்று பாய்ந்து பிடித்துக்கொண்டது. ‘ஐயோ! அப்பா! பூதம்! பூதம்!’ என்று அவர்கள் அலறினார்கள். அவர்கள் அலறலைப் பொருட்படுத்தாமல் நையப் புடைந்து விரட்டியது பூதம். கிருதவன்மாவும், கிருபாச்சாரியனும், பூதத்தினிடமிருந்து தப்பித்தால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிப்போய்விட்டனர். அசுவத்தாமன் பூதத்தை எதிர்க்க முயன்றான். அதன் விளைவாகப் பூதம் தன் கை வரிசையை அவனிடம் மிகுதியாகக் காட்டி வெளுத்து விட்டது. இனியும் இந்தப் பூதத்தினிடம் அகப்பட்டுக் கொண்டால் இது நம்மைக் கொன்றே போட்டுவிடும்’ என்று பயந்து ஓடினான் அவன். பாண்டவர்களின் பாசறை வாயிலில் பிடித்த ஓட்டம் தன் பாசறை வாசலில் இருந்த ஆல மரத்தடியில் வந்துதான் நின்றது. மூச்சு இரைத்தது. சோர்ந்துபோய் அப்படியே அந்த மரத்தடியில் உட்கார்ந்தான். அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.

“பாண்டவர்கள் ஐவரையும் கொன்று அவர்கள் தலைகளைச் சமந்தபஞ்சக மலைக்குக் கொண்டுவந்து காட்டுவதாகத் துரியோதனனுக்கு வாக்குறுதி அளித்து விட்டேன். அந்த வாக்குறுதியை இனி எப்பாடுபட்டாவது நிறைவேற்றித் தீரவேண்டும். நிறைவேற்றத் தவறிவிட்டால் என் வாழ்வே பயனற்றதாகிவிடும். கடைசியாக எனக்கு ஒரே ஒரு வழி புலப்படுகிறது. இறைவன் என்னைக் கைவிடமாட்டான். பாண்டவர்களை அழிக்கும் வலிமை வாய்ந்த அஸ்திரத்தைக் கொடுக்குமாறு இறைவனை எண்ணித் தவம் செய்கிறேன்” இந்தத் தீர்மானத்துடன் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை எண்ணித் தவம் செய்யலானான். அவன் தவம் பலித்தது. இறைவன் அவன் முன் தோன்றி, “அசுவத்தாமா! என்னை எதற்காக எண்ணினாய்! உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். “இறைவா! நீ கருணை வடிவினன். என் வரத்திற்குச் செவி சாய்த்து அருள். பாண்டவர்களைக் கொல்வதற்கு எனக்கு ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து உதவு” என்றான். இறைவன் அவனுடைய விருப்பப்படியே ஓர் அஸ்திரத்தைக் கொடுத்து விட்டுச் சென்றான்.

இறைவனின் அஸ்திரத்தை அடைந்த அசுவத்தாமன் புதிய ஊக்கம் பெற்றுக் கிருபனையும், கிருதவன்மாவையும் உடன் கூட்டிக்கொண்டு திரும்பவும் பாண்டவர்கள் பாசறையை நோக்கிச் சென்றான். மறுபடியும் இவர்கள் வருவதைக் கண்டு பூதம் ஆவேசமாகப் பாய்ந்தது. ஆனால் அசுவத்தாமன் தன்னிடமிருந்த தெய்வீக அஸ்திரத்தைக் காட்டியவுடன் பூதம் பயந்து போய் அங்கிருந்து ஓடிவிட்டது. பூதம் ஓடியபின் தன்னோடு வந்திருந்த இருவரையும் பாசறை வாயிலில் காவல் வைத்துவிட்டு ஆயுதங்களோடு தான் மட்டும் பாசறைக்குள் நுழைந்தான் அசுவத்தாமன்.

அவன் எதிர்பார்த்தது போல் பாண்டவர்கள் பாசறையில் இல்லை. படை வீரர்களும் தளபதி துட்டத்துய்ம்மனும் மட்டுமே அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர். உறங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்வது பாவம். ஆனால் அசுவத்தாமனின் ஆத்திரத்தில் பாவத்தையும் புண்ணியத்தையும் கவனிக்க நேரம் ஏது? துட்டத்துய்ம்மனைத் தூங்கிக் கொண்டிருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்தான் அவன். அந்தச் சப்தத்தில் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட சிகண்டி முதலிய பாஞ்சால தேசத்து வீரர்கள் அசுவத்தாமன் மேல் பாய்ந்தனர். ஆனால் தன்னிடமிருந்த ஆயுதத்தால் அவர்களையும் கொலை செய்தான் அவன். அப்போது பாண்டவர் சகோதரர்களின் புதல்வர்கள் ஐந்து பேரும் எழுந்திருந்து அசுவத்தாமனைத் தாக்க முயன்றனர். பாண்டவர்களின் புதல்வர்களும் பார்ப்பதற்குப் பாண்டவர்களைப் போலவே இருந்ததனால் அசுவத்தாமன் அவர்களையே பாண்டவர்கள் என்று எண்ணிக் கொண்டான். எனவே துரியோதனனிடம் வாக்களித்திருந்தபடி அவர்கள் ஐந்து பேருடைய தலைகளையும் அறுத்துத் தள்ளிவிட்டான். இளம் பாண்டவர்களாகிய ஐவரின் மக்களை அசுவத்தாமன் கொன்ற செய்தியை அறிந்து சோழமன்னனும் அவனுடைய வீரர்களும் குமுறி எழுந்தனர். அசுவத்தாமனை எதிர்த்தனர். ஆனால் அசுவத்தாமனிடம் இருந்த தெய்வீக அஸ்திரத்தால் சோழனும் அவன் படைகளும் தோற்று ஓட நேர்ந்தது. பாண்டவர்கள் பாசறையிலிருந்த யாவரையும் வென்று முடித்தபின் இளம் பாண்டவர்களின் ஐந்து தலைகளையும் எடுத்துக்கொண்டு சமந்தபஞ்சக மலைக்குக் கிளம்பினான் அசுவத்தாமன். சமந்தபஞ்சக மலையை அடைந்து துரியோதனன் கிடந்த பூந்தோட்டத்திற்குள் நுழைந்து, “துரியோதனா! இதோ என் சபதத்தை நிறைவேற்றிவிட்டேன். உன்னிடம் கூறிவிட்டுச் சென்றபடி பாண்டவர்களின் தலைகளை - அறுத்துக்கொண்டு வந்துவிட்டேன்” என்று கூறித் தலைகளை அவன் முன் வீசி எறிந்தான். அதைக் கண்டதும் துரியோதனனுடைய முகத்தில் மகிழ்ச்சி மலரும் என்று எதிர்பார்த்தான் அசுவத்தாமன்.

ஆனால் துரியோதனனுடைய முகம் சிவந்தது. அவன் திடுக்கிட்டான். எதற்குமே நடுங்காத அவன் சரீரம் நடுங்கியது. இரத்தம் கொதித்தது. மெல்ல எழுந்திருந்து தனக்கு முன் கிடந்த தலைகளை உற்றுப் பார்த்தான். அடுத்த கணம் ‘ஓ’வென்று அலறிக் கூச்சலிட்டான். “ஐயோ! பாவி! அசுவத்தாமா! என்ன காரியம் செய்தாய்? நீயும் ஒரு பிராம்மணனா? பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களின் புதல்வர்களைக் கொன்று தலையைக் கொண்டு வந்திருக்கிறாயே? அடே! பாதகா! நீ விளங்குவாயா? உன் குலம் உருப்படுமா? குருகுலத்தின் கொழுந்துகளாகிய இந்தப் பச்சிளம் பாலகர்கள் உனக்கென்ன தீமை செய்தார்கள்?” என்று தன் ஆத்திரத்தை அசுவத்தாமன் மேல் திருப்பினான் துரியோதனன்.