மகாபாரதம்-அறத்தின் குரல்/3. தீயவன் தீர்ந்தான்

3. தீயவன் தீர்ந்தான்

குருதி வெள்ளத்தின் இடையே நின்று கொண்டிருந்த கர்ணனைத் தருமன் விட்டுச் சென்றதும் துட்டத்துய்ம்மனை மீண்டும் பிடித்துக் கொண்டான். சகாதேவன், தண்டதரன் தண்டகன், சித்திரதேவன் என்னும் பெயர்களை உடைய துட்டத்துய்ம்மனின் தம்பிமார்களும் அவனோடு கூடப் போருக்கு வந்திருந்தனர். ஆனாலும் கர்ணனுக்கும் துட்டத்துய்ம்மனுக்கும் நிகழ்ந்த போரில் இம்முறையும் துட்டத்துய்ம்மனே தோல்வியடையும் நிலைக்கு இளைத்துத் தளர்ந்து போனான்.

அந்த இக்கட்டான சமயத்தில் தருமன் தன்னுடைய படைகளோடு துட்டத்துய்ம்மனுக்கு உதவுவதற்காக அவனோடு வந்து சேர்ந்து கொண்டான், தனக்குத் தேரோட்டியாக இருந்த சல்லியனின் உதவியால் கர்ணன் உடலில் பல இடங்களில் காயம்பட்டிருந்தும் பொறுத்துக்கொண்டு ஆவேசத்தோடு போரிட்டான். தருமன் திரும்பவும் கர்ணனுடைய வில்லை ஒடித்தான். தேர்ச் சட்டங்கள் சிதறிப் போகுமாறு ஒடித்துத் தள்ளினான். தேரோட்டியாகிய சல்லியனின் உடம்பு சல்லடைக் கண்களாகுமாறு துளைத்தான், சல்லியனின் உடலில் அம்பு பாய்வதற்கு இனி இடமே இல்லை என்று சொல்லுமாறு அணுவளவு இடங்கூட எஞ்சவிடாமல் அம்புகள் பாய்ந்துவிட்டன. தேரின் முன்புறம் கட்டப்பட்டிருந்த குதிரைகளும் அம்புக்கு இரையாயின. கர்ணனுக்குத் துணையாக வந்திருந்த வடகலிங்கத்து வீரர்களைத் திக்குமுக்காடச் செய்து விட்டான் தருமன்.

எதிரிகள் யாவரையும் தோற்கச் செய்து முடித்தவுடன் தன் வெற்றிச் சங்கத்தை விண்ணதிர மண்ணதிர, எண்திசைகளுமதிர, எடுத்து முழங்கினான். ஈரேழு பதினான்கு புவனங்களிலும் அந்த வெற்றி முழக்கம் கணீரென ஒலித்து அடங்கிற்று. வெற்றி முழக்கத்திற்குப் பின் சிறிது நேரம் அமைதியிற் கழிந்தது. கர்ணன் தன் பாசறைக்குச் சென்று மீண்டும் படையெடுத்து வருவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். தருமன் முழங்கிய வெற்றிச் சங்கொலி ஓய்கிற நேரத்துக்கு இன்னொரு சங்கொலி அதனினும் பெரியதாக எதிர்ப்புறமிருந்து கிளம்பிற்று. தருமன் அந்தப் புதிய சங்கொலியைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கர்ணன் தேரில் நின்று சங்கு முழங்கியவாறே படைகளோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். தருமனுக்கு அருகில் வந்ததும் வில்லை வளைத்து அம்புகளைத் தொடுத்தான் அவன். திடீரென்று ஏற்பட்ட இந்தத் தாக்குதலைத் தருமன் சமாளிக்க முற்படுவதற்குள் அவனுடைய மார்பிலும் தோளிலும் சில அம்புகள் ஆழமாகப் பாய்ந்து விட்டன. தருமனுடைய தேரின் பல பகுதிகளிலும் அம்புகள் சடசடவென்று மோதியதால் தேர்ச்சங்கரங்களும் அச்சுகளும் முறிந்தன. தேர்ச் சாரதியின் உடலில் அம்புகள் மார்பு வழியே முதுகில் ஊடுருவிப் பாய்ந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. கர்ணன் தர்மனைப் பழிக்குப் பழிவாங்க எண்ணுகிறவனைப் போல ஆக்ரோஷமாகப் போர் செய்து கொண்டிருந்தான். தருமனும் கர்ணனை எதிர்த்து அம்புகளைச் செலுத்திக் கொண்டுதான் இருந்தான். ஆனால் கர்ணன் கைகளே மேலோங்கியிருந்தன. ஏனோ தெரியவில்லை. தருமனுடைய மனத்தில் தளர்ச்சியும் பயமும் தோன்றிவிட்டன. அன்று தருமனுக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை அதற்கு முன் என்று மேற்பட்டிராததாகும். சமயசஞ்சீவியைப் போல வீமன் தன் படைகளோடு அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வீமனைக் கண்டதும் தருமனை விட்டுவிட்டுக் கர்ணன் அவனோடு போர் செய்ய முன் வந்தான், கர்ணனுக்கும் வீமனுக்கும் போர் ஆரம்பித்து விடவே இடையிலிருந்த தருமனுக்கு ஓய்வு கொள்ள அவகாசம் கிடைத்தது. வீமனிடம் கர்ணனுடைய திறமைகள் பலிக்கவில்லை. வீமன் அவனை எதிர்த்துக் கடும் போர் செய்தான் மார்பில் ஆழமாகப் பாய்ந்த ஓர் அம்பு கர்ணனுக்குத் தாங்க முடியாத வேதனையைக் கொடுத்தது. அவன் அப்படியே தன் நினைவு இழந்து மூர்ச்சையாகித் தேர்த் தட்டில் வேரறுபட்ட அடிமரம் போற் சாய்ந்தான்.

அதைக் கண்ட சல்லியன் கர்ணனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிவதற்கான சிகிச்சைகளைச் செய்யலானான்.

இதனால் சிறிது நேரத்தில் கர்ணனுக்கு மூர்ச்சை தெளிந்தது. பிரக்ஞை பெற்று எழுந்திருந்த கர்ணன் முன்னினும் அதிக ஆவேசத்தோடு போர் செய்யத் தொடங்கினான். அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் பலருடைய உயிர்களைப் பறித்தன, சிங்கசேனன் என்ற மகாவீரன் உட்பட ஏழுபாஞ்சாலர்களைக் கொன்றான் கர்ணன். அவனுடைய ஆவேசத்தைக் கண்டு வீமனே பயந்து போய்விட்டான். வீமனும் அவனுடைய படைகளும் போர்க்களத்திலிருந்து கர்ணனுக்கு எதிர் நிற்க முடியாமல் தறிகெட்டு ஓடத்தலைப்பட்டனர். கர்ணன் ஓடுகிறவர்களைத் துரத்த முற்படுவதற்குள் அர்ச்சுனன் படைகளோடு வந்து அவனை வழி மறித்துக் கொண்டான். இருவருக்கும் போர் ஏற்பட்டது. கர்ணன் படையிலும், அர்ச்சுனன் படையிலும், அவரவர்களுக்குத் துணையாகச் சில சிற்றரசர்களும் வந்திருந்தனர். எல்லோருமே வில்யுத்தத்தில் வல்லவர்களாக இருந்ததனால் இருதரப்புப் படைகளுக்கும் இடையே விற்போர் தொடங்கிற்று. கர்ணன் படையினரும் அர்ச்சுனன் படையினரும் எய்து கொண்ட அம்புகள் வான்வெளி யெங்கும் நீக்கமற நிறைந்து ஒரே அம்பு மயமாகக் காட்சியளித்தது. இவர்கள் இருவருக்கும் இந்த மாதிரிப் போர் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அசுவத்தாமன் தன் படைகளோடு தானும் வந்து கர்ணன் பக்கத்தில் சேர்ந்து கொண்டான்.

‘அர்ச்சுனனுடைய சரீரத்தையே அம்புகளால் மூடிவிடுவேன்’ என்பது போல் ஒரே அசுர வேகத்தில் அசுவத்தாமன் அம்புகளைப் பொழிந்தான். அசுவத்தாமனுடைய தாக்குதலால் தளர்ச்சியடைந்த அர்ச்சுனன் திகைத்து நின்று விட்டான்!

உடனே கண்ணன், “அர்ச்சுனா! இந்த அருமையான சமயத்தில் தளர்ந்துவிடாதே மனத்தைத் திடப்படுத்திக்கொள். அசுவத்தாமனை எதிலும் சாதாரணமானவனாக நினைத்து விட்டுவிடாதே! இது சரியான சமயம் அர்த்த சந்திர வடிவான அம்பு ஒன்றை எடு. அவன் மார்பைக் குறிவைத்து அதைச் செலுத்து” என்று அர்ச்சுனனைத் தேற்றினான்.

கண்ணனுடைய ஊக்கம் மிகுந்த சொற்களால் தெளிவு பெற்ற அர்ச்சுனன் பிறைச் சந்திரனைப் போன்ற உருவத்தில் அமைந்த அம்பு ஒன்றை எடுத்து அசுவத்தாமன்மேல் அதைத் தொடுத்தான். அந்த அம்பு அசுவத்தாமனுடைய மார்பில் பாய்ந்து மார்பைப் பிளந்தது. அதே அம்பு வேறொருவனை அந்நிலையில் தாக்கியிருக்குமானால் அவன் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போயிருப்பான். ஆனால் அசுவத்தாமன் சிரஞ்சீவித்துவ வரம் பெற்றவன். எளிய முறையில் மரணம் அவனை அணுக முடியாது. எனவே அம்பு பாய்ந்ததும் இறந்து விடவில்லை, மெல்லத் தளர்ந்து தேரின் மேல் விழுந்தான். அவனை விழவிடாமல் ஓடிவந்து தாங்கிக் கொண்டான் துச்சாதனன். அசுவத்தாமனுடைய உடல் கெளரவர் பாசறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரத்தில் தெளிவும் வலிமையும் பெற்று இன்னோர் தேரில் ஏறிக்கொண்டு அர்ச்சுனனோடு போரிடுவதற்கு வந்தான் அசுவத்தாமன். அப்போது சித்திரவாகனன் என்னும் பாண்டிய மன்னன் அவனை வழிமறித்துக் கொண்டு போர் செய்ய ஆரம்பித்தான். பாண்டியனுக்கும் அசுவத்தாமனுக்கும் நிகழ்ந்த போரில் பாண்டியன் கை மேலோங்கியது. அவன் அசுவத்தாமனின் வில்லையும் தேரையும் தகர்த்தான். திரும்பிச் சென்ற அசுவத்தாமன் வேறு வில்லோடு வேறு தேரில் ஏறி வந்தான். பேரலைகளை வாரி இறைக்கும் மாபெருங் கடலையே வேல் கொண்டெறிந்து அடக்கிய பாண்டியனுக்கு அசுவத்தாமனையும் அவனோடு இருந்த சிறிய படையையும் அடக்குவது பெரிய செயலா? சித்திரவாகன பாண்டியனை எதிர்க்க முடியாமல் பல முறை புறங்காட்டினான் அசுவத்தாமன். கடைசி முறையாக ஆத்திரத்தோடு வந்த அசுவத்தாமன் பாண்டியனுடைய தேரை ஒடுக்கி நிறுத்திவிட்டான். சற்று நேரத்தில் தேர் ஒடிந்து போகுமாறு செய்யவே பாண்டியன் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு போரைத் தொடர்ந்தான். அசுவத்தாமன் அந்த யானையையும் அம்பு எய்து கொன்று விட்டான்.

ஏறிக் கொண்டு போர் செய்வதற்கு வேறு வாகனம் அகப்படாமல் திகைத்த பாண்டியன் தரையில் நின்று கொண்டே அசுவத்தாமனோடு போரிட்டான். பாண்டியன் செலுத்திய பல அம்புகள் அசுவத்தாமன் உடம்பைத் துளைத்துக் குருதி சிந்தச் செய்துவிட்டன. அம்புகள் பாய்ந்த வலியினாலும் பாண்டியன் மேலிருந்த கோபத்தினாலும் தூண்டப்பட்ட அசுவத்தாமன் சக்தி வாய்ந்த கணை ஒன்றை எடுத்துத் தொடுத்தான். அந்தக் கணை பாண்டியனுடைய மார்பில் பாய்ந்து ஊடுருவியது. பாண்டியன் அலறிக் கொண்டே கீழே விழுந்து உயிர் துறந்தான். அவனுடைய படைகள் பயந்து ஓடின, அசுவத்தாமனும் அவனைச் சேர்ந்த கெளரவர் படைகளும் வெற்றி முழக்கம் செய்தனர்.

அசுவத்தாமன் பாண்டியனைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியைத் தென்னாட்டின் மற்றோர் பேரரசனாகிய சோழ மன்னன் கேள்விப்பட்டான். ‘பாண்டியனைக் கொன்றவனைப் பழிவாங்காமல் விடமாட்டேன்’ என்று சோழன் போர்க்கோலம் பூண்டுவந்தான். சோழனும் பாண்டவர் பக்கமே தன் படைகளோடு சேர்ந்திருந்தான். பாண்டவர்களுடைய பாசறை ஒன்றில் அவன் ஓய்வு கொண்டு உட்கார்ந்திருந்த போதுதான் சித்திரவாகன பாண்டியனுடைய மரணச் செய்தி அவனுக்கு எட்டியது. உடனே படைகளோடு போர்க்கோலம் பூண்டு அசுவத்தாமனை எதிர்ப்பதற்குக் கிளம்பி விட்டான் அவன்.

“ஏ! அசுவத்தாமா! தரையில் நின்று கொண்டு போர் புரிந்த சித்திரவாகன பாண்டியனை நீதேர்மேலிருந்து அம்பு செலுத்திக்கொன்றது நீதியாகுமா? நீ ஓர் ஆண் மகனாக இருந்தால் இப்படிச் செய்ததற்கு வெட்கப் படவேண்டும். உன் தந்தையைக் கொன்றானே துட்டத்துய்ம்மன், அவனைப் பழிவாங்குவதற்குத் திறமை இல்லை உனக்கு. நீயும் ஒரு வீரனென்று பெருமைப் பட்டுக்கொள்கிறாயே? என்று இகழ்ந்து கூறிக்கொண்டே சோழன் அசுவத்தாமனோடு போரிட்டான். சோழன் எறிந்த வேல் பாய்ந்து அசுவத்தாமன் பிரக்ஞையிழந்து வீழ்ந்தான். அவனை அங்கிருந்து தூக்கிக்கொண்டு போய்த் துரியோதனனுடைய தம்பியர்களும் சகுனியும் பிரக்ஞை வரவழைப்பதற்கு முயன்றனர். சோழன் அன்று செய்த போரில் வேறு பல முக்கியமான எதிரிகள் இறந்தனர். துன்மருஷ்ணனின் அன்புக்குரிய மகன் சுவாகு, துன்முகனின் புதல்வனான சுவாது கர்ணன் குலக்கொழுந்தாகிய சங்கன் ஆகிய அரசிளங்குமாரர்கள் சோழனால் போரில் மாண்டு போயினர்.

இங்கு நிலைமை இவ்வாறிருக்க, போர்க்களத்தின் வேறோர் பகுதியில் வீமனும், துச்சாதனன் கோஷ்டியாரும் கடுமையான போரில் ஈடுபட்டிருந்தனர். துச்சாதனனுடன் அவனுடைய இளைய சகோதரர்கள் ஒன்பது பேர் உடனிருந்தனர். துச்சாதனன் தன் பலத்தையும் வலிமையையும் பெரிதாக நினைத்துக் கொண்டுவீமனை நோக்கி, “பாண்டவ வம்சத்தையே இன்று பூண்டோடு அழித்து விடுகிறேன். இது என்னுடைய சபதம்” - என்று கூறினான்.

அதைக்கேட்ட வீமன் இகழ்ச்சி தொனிக்கும் குரலில் பெரிய இடிச்சிரிப்புச் சிரித்தான். சிரித்துவிட்டுத் துச்சாதனனை நோக்கிக் கூறலானான் :- “அடே! துச்சாதனா! நீயும் ஓர் ஆண்மகன் மாதிரி எண்ணிக்கொண்டு பேச வந்து விட்டாயே. உன் ஆண்மையைப் பற்றி ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இன்று உனக்குக் கேடுகாலம். இனிமேல் அதிக நாழிகை நீ உயிரோடிருக்கப் போவதில்லை. உன்னைக் கொன்று என் சபதத்தை இன்று நான் முடித்துக் கொள்ளப் போகிறேன். திரெளபதியும், தன் கூந்தலை முடிந்து கொள்ளப் போகிறாள். உன் தொடையைப் பிளந்து ஒழுகும் குருதியில் என் கைகள் இன்று படியப் போகின்றன. இன்று உன்னை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன். நாளை உன் தமையனாகிய துரியோதனனை எமனுலகுக்கு அனுப்பப் போகிறேன் எடு வில்லை” - என்று வீமன் இடிமுழக்கம் போன்ற குரலில் பேசி முடித்தான். துச்சாதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வில்லை வளைத்து வீமனுடன் போரிடத் தொடங்கினார்கள். வீமனும் அம்புகளைப் பொழிந்தான். துச்சாதனனின் சகோதரர்கள் ஒன்பது பேர் வரிசையாக அடுத்தடுத்து இறந்த வேதனை அவன் மனத்தை வாட்டியது. வீமனிடம் அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் போர் செய்தான். போரின் கடுமையால் இருவருடைய தேர்களும் அச்சு முறிந்து நொறுங்கிப் போயின. விற்போரை நிறுத்தி விட்டு, இருவரும் தரையில் குதித்தனர். கதாயுதங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் போரைத் தொடங்கினர்.

கதையோடு கதை மோதும் ஒலி விண்ணதிர எழுந்தன. மோதிய கதைகளில் சூடு பிறந்து கனற்பொறிகள் சிதறின. இருவரும் பாய்ந்து பாய்ந்து தாக்கினார்கள். அவர்களுடைய கண்கள் தழலெனச் சிவந்தன. உடலெங்கும் வியர்வை பெருகி வெள்ளமாக வழிந்தோடியது. அடியும் மோதலுமாக எவ்வளவு நேரந்தான் அந்தக் கதாயுதங்கள் தாங்கும் இருவர் ஆயுதங்களும் உடைந்து போயின. உடைந்த ஆயுதங்களைக் கிழே எறிந்துவிட்டு மற்போர் செய்ய ஆரம்பித்தார்கள் இருவரும். மூக்கு முகம் பாராமல் ஒருவரை ஒருவர் கடுமையாகக் குத்தித் தாக்கிக்கொண்டார்கள். ‘விண்’ ‘விண்’ - என்று குத்துக்கள் விழுந்தன.

வீமன் துச்சாதனனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மேல் ஏறி உட்கார்ந்தான். துச்சாதனன் திமிறினான்; முடியவில்லை. வீமனுடைய முரட்டுக் கைகள் துச்சாதனன் மார்பைக் குத்திக் கீறின. இரணியனைத் திருமால் நரசிம்மாவதாரத்தில் குடலைப் பிளந்தது போல் துச்சாதனனின் மார்பைப் பிளந்து அதிலிருந்து ஒழுகும் குருதியில் கைகளைக் கழுவிக் கொண்டிருந்தான் வீமன்.

அதன்பின் துச்சாதனன் எழுந்திருக்கவேயில்லை. இரத்த வெள்ளத்தினிடையே துடிதுடித்துக் கொண்டு கிடந்தது தீமையே உருவமாகிய அவனுடைய உடல், வீமனுடைய சபதமும், துச்சாதனனுடைய வாழ்வும் திரெளபதியினுடைய கூந்தலும், அன்று ஒரே சமயத்தில் முடிக்கப்பட்டன. தீமையின் உருவமொன்று அழிந்து விட்டது.