மகாபாரதம்-அறத்தின் குரல்/4. இந்திரன் கட்டளை

அடக்கமே உருவாக வீற்றிருக்கும் இந்த இளைஞரைச் சாதாரண மானிடர்களில் ஒருவனாக எண்ணி விடாதீர்கள். இவன் பாண்டவ சகோதரர்களில் ஒருவனாகிய அர்ச்சுனன். இவனுடைய வீரத்தையும் போர் செய்கின்ற ஆற்றலையும் அளவிட்டுச் சொல்லவே முடியாது. நானும் என்னுடைய மேகப் படைகளும் சேர்ந்து தடுத்தும் கூட காண்டவ வனம் எரியும்போது அதை அவிக்க விடாமல் எங்களை எதிர்த்துப் போர் செய்தவன் இவன் தான். இவனுடைய வீரத்திற்கு வானுலகப் பெருமக்களின் சார்பில் நாம் நன்றி செலுத்த வேண்டும்” என்று கூறிக் கற்பகப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்றை அர்ச்சுனனுக்குச் சூட்டினான் இந்திரன்.

மற்றும் பல தேவர்கள் அர்ச்சுனனை மனமகிழ்ச்சியோடு பாராட்டிப் பலவகை அன்பளிப்புகளை வழங்கினர். அன்று இந்திரனும் அர்ச்சுனனும் அருகருகே அமர்ந்து உணவுண்டனர். அதனைக் கண்ட இந்திரனின் கோப்பெருந்தேவியாகிய இந்திராணி அசூயையும் சினமும் கொண்டாள். “ஒரு மண்ணுலகத்து மானிட இளைஞனை வானுலக மன்னராகிய நீங்கள் அருகே அமர்த்திக் கொண்டு உண்பது தகுதியுணராத செயல்” என்று அவள் கூறினாள். இந்திரன் இவ்வாறு கூறிய தன் மனைவியை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே சமாதானமாக விடை கூறலானான்.

“அரசீ! இவனை மானிடனென்று தாழ்வாகப் பேசாதே! உண்மையில் இவன் தேவர்களைவிடப் பன்மடங்கு உயர்ந்தவன். எனக்கு மகன் முறையுடையவன். எல்லாம் வல்லமாயனாகிய கண்ணபிரானுக்கு மைத்துனன், உலகத்தின் சம்ஹாரகர்த்தாவாகிய சிவபெருமானுடனேயே துணிந்து எதிர்த்துப் போர் செய்தவன்” என்று கூறி இந்திராணிக்கு அர்ச்சுனனுடைய தகுதியை உணருமாறு அறிவுறுத்தினான். பெரிய வில்லாளனும் தெய்வீகக் கண்ணனுக்கு மைத்துனனுமாகிய அர்ச்சுனனுடைய வரவினால் தேவலோகத்துக்கு ஏதாவது பெரிய நன்மை ஏற்படலாம் என்று தேவர்கள் கருதினர். ஒரு நாள் இந்திரனும் அர்ச்சுனனும் தனியே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இந்திரன் அர்ச்சுனனிடம் அப்போது ஒரு வேண்டுகோள் விடுத்தான்;

“அர்ச்சுனா! எனக்கும் என் நாட்டிற்கும் தேவர்களுக்கும் எப்போதும் தீமைகளை செய்து கொண்டிருக்கிற அகரர்கள் சிலர் இருக்கிறார்கள். எனக்காக அந்தக் கொடியவர்களை அழிக்கும் பொறுப்பை நீ மேற்கொள்ள வேண்டும். அன்பு உரிமையோடு இந்தப் பணியை ஒரு கட்டளையாகவே இடுகிறேன்.”

“தங்கள் கட்டளை எதுவானாலும் பணிவோடு நிறைவேற்றுவதற்குக் காத்திருக்கிறேன். தெளிவாகக் கூறியருள வேண்டும்.”

“கடற்பகுதிகளின் இடையே ‘தோயமாபுரம்’ என்ற தலைநகரை அமைத்துக் கொண்டு ‘நிவாதகவசர்’ என்னும் பெயரையுடைய அசுரர்கள் வசித்து வருகிறார்கள். தெய்வங்களும் தேவர்களுமே அந்த அசுரர்களை எதிப்பதற்கு அஞ்சி ஒடுங்கி அவர் செய்யும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்! உலகமே ஒன்று திரண்டு போரிட்டு வெல்ல முடியாத தீரர்கள் நிவாதகவுசர்கள். அவர்களுடைய போர் வலிமையும் தவவலிமையும் அழியாத இயல்புடை யவை. இன்று வரை மற்றவர்களை அழித்திருக்கிறார்களே ஒழிய தங்களுக்குச் சிறு அழிவையும் கண்டதே இல்லை. மூன்று கோடி எண்ணிக்கை உடையவர்களாகிய நிவாதகவுசர்களை நீ உன்னுடைய தனிச்சாமர்த்தியத்தாலேயே அழித்தொழிக்க முடியும். நீ சென்றால் வெற்றியுடனேயே திரும்பி வருவாய் என்று நம்புகின்றேன்.”

“சந்தேகமே வேண்டாம்! உங்கள் அன்பும் ஆசியும் இருந்தால் நிவாதகவசர்களை மட்டும் இல்லை. அவர்களைக் காட்டிலும் சூராதி சூரர்களைக் கூட வென்று வாகை சூடி வருவேன். விடை கொடுங்கள். வெற்றியோடு திரும்பி வருகிறேன்.” அர்ச்சுனன் இந்திரனுக்கு வாக்களித்தான். இந்திரன் விடை கொடுத்தான். பொற்கவசம் ஒன்றையும் சிறந்த தேரையும், தேரோட்டும் தொழிலில் வல்லவனாகிய ‘மாதலி’ என்னும் பாகனையும் அர்ச்சுனனுக்கு இந்திரன் அளித்தான். அர்ச்சுனன் பெற்றுக் கொண்டு போருக்குப் புறப்பட்டான். வானுலகம் முழுவதுமே அவனை வாழ்த்தி வழியனுப்பியது.

மாதலி தேரைச் செலுத்தினான். தேரில் அர்ச்சுனன் போர்க்கோலம் பூண்டு நின்றிருந்தான். தேர் சென்று கொண்டிருக்கும்போதே பாகனை நோக்கித் தோயமாபுரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை விசாரித்தான். கீழ்க் கடலின் இடையே அந்த அரக்கர்களின் தலைநகரம் அமைந்திருப்பதாகவும் அங்கே போக வேண்டும் என்றும் அவன் கூறினான். மாதலியின் ஏற்பாட்டால் அர்ச்சுனனுக்கும் அவனுக்கும் தோயமாபுரத்திற்குத் தேர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுவதற்காகச் சித்திரசேனன் என்பவனும் உடன் வந்தான். வானுலக வீதிகளைக் கடந்து அர்ச்சுனனுடைய தேர் சென்ற போது மேல் மாடங்களில் நின்று கண்ட தேவருலகப் பெண்கள் அவனை இகழ்ச்சி தோன்ற நோக்கி நகைத்தனர். அவன் நிவாதகவர்களை அழிக்க முடியாது என்று எண்ணியே தேவமாதர்கள் அவ்வாறு செய்தனர். அர்ச்சுனனோ தேரில் சென்று கொண்டே அந்தப் பெண்களின் அறியாமையை எண்ணித் தனக்குள் நகைத்துக் கொண்டான். ஆனால் அர்ச்சுனனுடைய பேராண்மையையும் வீரத்தையும் உணர்ந்தவர்களோ ‘இவனுடைய ஆற்றல் தேவர்களுடைய ஆற்றலைவிடப் பெரியது! நிச்சயமாக இவன் நிவாதகவர்களை வென்று வாகை சூடி வருவான்’ என்று பேசிக் கொண்டார்கள்.

இவ்வாறு அர்ச்சுனனைப் பற்றி அறிந்தோர் புகழ்ந்தும், அறியாதோர் இகழ்ந்தும், பேசிக் கொண்டிருந்த வானுலக எல்லையைக் கடந்து தேர் தோய்மாபுரத்து வழியில் தனியே செல்லலாயிற்று. “மாதலி! அந்த அசுரர்களைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறு. கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன். உன் கருத்துக்கள் எனக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்.” என்று அர்ச்சுனன் கேட்டான். மாதலி, உடனே நிவாதகவசர்களைப் பற்றித் தனக்குத் தெரிந்திருந்த விவரங்களை எல்லாம் கூறத் தொடங்கினான்.

“நிவாதகவசர்கள் கண்டவர் பயப்படும்படியான தோற்றத்தை உடையவர்கள். இடி முழக்கம் போலப் பேசுகிற சினம் மிக்க சொற்களை உடையவர்கள். மலைக் குகை போன்ற பெரிய வாயை உடையவர்கள். நெருப்புக் கோளங்களோ எனப் பார்த்தவர்கள் அஞ்சி நடுநடுங்கும் விழிகனள உடையவர்கள். போர் எனக் கேட்டதுமே பூரித்து எழுகின்ற தோள்களை உடையவர்கள். மகாவீரர்கள். ஈட்டி , மழு, வளைதடி, வில், வாள் முதலிய படைக் கலங்களைக் கொண்டு போரிடுவதில் நிகரற்றவர்கள். அவர்களை வெல்ல உலகில் எவராலும் முடியாதென்று மற்றவர்களை எண்ணச் செய்பவர்கள்.” மாதலி இவ்வாறு கூறி வந்த போதே தேர் தோயமாபுரத்தை அடைந்து எல்லைக்கு வெளியில் நின்றது. தங்களோடு வந்திருந்த சித்திரசேனனை நிவாதகவசர்களிடம் தூதாக அனுப்பினர் அர்ச்சுனனும் தேர்ப்பாகன் மாதலியும். சித்திரசேனன் அர்ச்சுனன் போருக்கு வந்திருக்கும் செய்தியை உரைப்பதற்காகத் தோய்மாபுரத்திற்குள்ளே சென்றான்.

மாதவி தேரைச் செலுத்தும்போது தேர்ச்சக்கரங்கள் உருண்ட ஓசையும் வில்லின் நாணை இழுத்து வளைத்து அர்ச்சுனன் உண்டாக்கிய ஒலியும் தோயமாபுர மக்களாகிய அசுரர்களின் செவிகளைக் கிடுகிடுக்கச் செய்தன. ஆனால் அவர்கள் அஞ்சவில்லை. சித்திரசேனன் நகருக்குள் நுழைந்து நிவாதகவுசர்களிடையே அர்ச்சுனன் போருக்கு வந்திருப்பதைக் கூறினான். அவர்கள் இதைக் கேட்டு இடியடி யென்று சிரித்தனர்.

“இந்த நகரத்து வீரர்களாகிய புலிகளுக்கு நடுவே ஒரு பூனை போருக்கு வந்திருக்கிறது போலும் வரட்டும் வரட்டும், அது சாவதற்குத் தான் வந்திருக்கிறது. நாட்டையும், உடைமைகளையும் பறித்துக் கொண்ட துரியோதனாதியர்களை எதிர்க்கத் தெரியாத அந்த அப்பாவி அர்ச்சுனன் எங்களை எதிர்த்தா போருக்கு வந்திருக்கிறான்? வெட்கக் கேடுதான்” என்று அவமதித்துப் பேசினார்கள் நிவாத கவசர்கள்.

மூன்று கோடி அசுரர்களுக்கும் சினம் மூண்டது. மனம் கொதித்துப் படைகளோடு அர்ச்சுனனை எதிர்க்கப் புறப்பட்டனர். கடல் ஒன்று அலைமோதிக் கொந்தளித்துத் திரண்டு வருவதைப் போல் அசுரர் கூட்டம் ஊர் எல்லையில் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைத் தனித் தேரை நோக்கிப் பாய்ந்தது. அம்புகள் எட்டுத் திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன. அவனும் தன் கைவில்லை வளைத்து அம்புகளைப் பாய்ச்சினான். “அசுரர்களே! நான் இங்கு வில்லோடு வந்திருப்பதைக் கொண்டே உங்களுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இது வரையிலும் உங்களை எதிர்த்து வந்து உங்களோடு போர் புரிந்து தோற்றுப் போனவர்களைப் போல் என்னையும் எண்ணிவிடாதீர்கள். நான் உங்களை அழித்தொழிப்பதற்கென்றே வந்திருக்கிறேன்.” இவ்வாறு கூறிக்கொண்டே எதிரே கடல் போலச் சூழ்ந்து நிற்கும் அசுரர்களின் மேல் அம்பு மாரி பொழிந்தான் அர்ச்சுனன்.

“உங்கள் மனைவி திரெளபதியை அவமானம் செய்தும், சூதாடி நாட்டை அபகரித்துக் கொண்டு உங்களுக்குத் துன்பமிழைத்த கெளரவர்களை அழிக்கத் தெரியாத நீ எங்களிடமா வீறு பேசுகிறாய்? அழியப் போவது நீதான்! நாங்களில்லை” -என்று கூறிக் கொண்டே நிவாதகவசர்கள் அவனை நெருங்கினர்.

அவர்களுடைய தாக்குதலுக்குத் தான் ஆளாகாமல் சமாளித்துக் கொண்டு தன் அம்புகளால் அவர்களை அழித்துக் கொண்டிருந்தான் விசயன். நிவாதகவசர்கள் தேருக்கருகில் நெருங்கி ஒரேயடியாகத் தேரை அமுக்கிக் கொன்று விட வேண்டும் என்று ஆக்ரோஷமடைந்தனர். அந்த எழுச்சியின் வேகத்தைத் தவிடுபொடியாக்குவதைப் போல அர்ச்சுனன் பிரம்மாஸ்த்ரத்தை எடுத்துச் செலுத்தினான். சக்திவாய்ந்த அந்த அஸ்திரத்தின் விளைவாக அசுரர்களில் பெரும் பகுதியினர் உயிரிழந்தனர். எஞ்சியிருந்தவர் அவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். அர்ச்சுனனும் கை ஓயாமல் வில்லிலிருந்து கணைமழை பொழிந்து கொண்டிருந்தான். நிவாதகவசர்கள் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே இருந்தனர். நல்லவர்களுடைய செல்வம் வளர்வது போல அர்ச்சுனனுடைய ஆற்றல் பெருகியது. வஞ்சகர்களின் செல்வம் அழிவது போல நிவாதகவசர்களுடைய ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது.

ஆயிற்று. எல்லா அசுரர்களும் ஏறக்குறைய அழிந்து விட்டனர். இன்னும் சில நூறு பேரே எஞ்சியிருந்தார்கள். அர்ச்சுனன் மனமகிழ்ச்சியோடு அவர்களையும் அழிக்கும் செயலில் ஈடுபட்டிருந்தான். அப்போது அவன் திடுக்கிட்டு மலைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. என்ன மாயமோ? சூனியமோ? திடீரென்று செத்தும் உடல் சிதைந்தும் கிடந்த எல்லா அசுரர்களும் உயிர் பெற்று எழுந்து போருக்கு வந்தார்கள். இறந்தவர் பிழைத்து எழுந்து வரும் அந்த விந்தையைக் கண்டு அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் அவனைச் சூழ்ந்து வளைத்துக் கொண்டு தாக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தத் திடீர்த்தாக்குதல் அவனை தன்னம்பிக்கை இழக்கச் செய்து விட்டது. அவன் சோர்ந்து போய் நின்றான். ஆசரிரீயாக ஒரு குரல் அவனுக்கு அந்த நிலையில் ஊக்கமளிக்கும் அருமருந்து போல் செவிகளில் நுழைந்தது.

“பாசுபதாஸ்திரத்தைப் பயன்படுத்து. வெற்றி பெறுவாய்.”

அர்ச்சுனன் உடனே, தவமிருந்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை எடுத்து வில்லில் வைத்துத் தொடுத்தான். சிவபெருமானால் அளிக்கப்பட்ட மாபெரும் ஆற்றலமைந்த அந்த அஸ்திரம் மூன்று கோடி அசுரர்களையும் ஒரு நொடியில் சாம்பலாக்கியது. தோயமாபுரம் சூனியமாகியது. அங்கே வாழ்ந்து வந்த தீமையின் உருவங்கள் அழிந்து விண்ணகம் புகுந்துவிட்டன. வெற்றி வீரனாக அர்ச்சுனன் தேரில் வீற்றிருந்தான். மாதலிதேரை வானவர்கோ நகரமாகிய அமராபதியை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். மகிழ்ச்சியால் விரைந்த அவர்கள் உள்ளங்களைப் போலவே தேர்ச்சக்கரங்களும் உருண்டன.

தேர் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை வழியில் அர்ச்சுனன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். அந்தரத்தில் மறைந்து நின்று தொங்குவதைப் போலத் தொலைவில் ஒளிமயமான நகரம் ஒன்று மேகங்களுக்கிடையே தென்பட்டது. அர்ச்சுனன் தேர்ப்பாகனை வினவினான். “மாதலீ! அதோ தெரியும் நகரத்தின் பெயர் என்ன? அந்த நகரத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”

“பிரபு! அந்த நகரம் காலகேயர்கள் வசிக்கும் நகரம், காலகை, பூலோமை என்ற பெயரினரான இரண்டு பெண்களுக்குச் சொந்தமானது. அதிரூபவதியான அந்தப் பெண்கள் பிரம்மாவை நோக்கித் தவம் செய்து சாகாவரமும் மற்றும் பல அரிய வரங்களும் பெற்றுள்ளார்கள். நகரத்திற்கு இரணிய நகரம் என்று பெயர். காலகை, பூலோமை இருவருக்கும் மக்கள் முறை உடையவர்களாகிய அறுபதினாயிரம் மாவீரர்கள் அங்கு வாழ்கின்றனர். அந்த நகரில் வாழ்கிறவர்களுடைய அழகிய தோற்றம், கண்டவர்களை வணங்குமாறு செய்யும் இயல்பை உடையது. சுடச்சுடச் சுடரும் செம்பொன் போன்ற மேனி நிறத்தை உடையவர்கள். உலகெங்கும் தங்கள் பெயரை நிலை நாட்டிய பெருமையுடையவர்கள். இன்று வரை யாருக்கும் போரில் தோற்காதவர்கள் தேவர்கள் கூடக் காலகேயர்களின் இரணிய நகரத்துப் பக்கம் போவதற்கு அஞ்சுவார்கள்.“ என்று மாதலி விவரங்களைக் கூறினான்.

“நாம் அஞ்ச வேண்டாம்! அந்த நகரத்தை நோக்கி நம்முடைய தேரைச் செலுத்து. அவர்கள் இதுவரை என்னவென்று அறியாத தோல்வியை இன்று அவர்களுக்கு அறிவிப்போம்.”

மாதலி தயங்கினான். அவனுக்குப் பயம் தெளியவில்லை.

“தயங்காதே மாதலீ! காலகேயர்களை வென்று அடக்குவது என் பொறுப்பு! நீ பயப்படாமல் தேரைச் செலுத்து-” அர்ச்சுனன் மீண்டும் வற்புறுத்தித் தூண்டினான். மாதலி மறுக்க வழியறியாமல் காலகேயர்கள் வசிக்கும் இரணிய நகரத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனனுடைய தேர் இரணிய நகரத்து எல்லையை அடைவதற்கு முன்பே காலகேயர்கள் அவன் போருக்கு வருவதை எப்படியே உணர்ந்து விட்டார்கள். தேரேறித் துணிவோடு தங்களுடன் போருக்கு வரும் மானிடனை எண்ணித் தாங்களே பரிதாபப்பட்டுக் கொண்டனர். அறுபதினாயிர காலகேயர்களும் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கப் புறப்பட்டனர். கண்டவர்களை மயக்கும் அழகிய தோற்றம் உடையவர்களாகிய அவர்களுக்குப் போர்க் கோலமும் சினமும் கூடக் கவர்ச்சி நிறைந்தே தோற்றமளித்தது.

தேரில் நின்று கொண்டு வளைத்த வில்லும் தொடுத்த கணையுமாக அந்த அசுரர்களான அழகர்களைப் பார்த்த போது அர்ச்சுனனுடைய கைகளும் மனமும் ஒரு கணம் தயங்கின. இப்படிப்பட்ட அழகுள்ளவர்கள் தீயவர்களாக இல்லாமலிருந்தால் இவர்களைக் கொல்ல வேண்டாமே! இப்போது இந்த அழகைக் கண்டு மனம் பேதலிக்கிறதே! கைகள் தயங்குகின்றனவே? அர்ச்சுனன் வில்லை வளைப்பதை நிறுத்தினான். ஓரிரு விநாடிகள் தயங்கினான். வைத்த கண் வாங்காமல் அவர்களைப் பார்த்தான். ஆனால் அவனுடைய தயக்கத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல் காலகேயர்கள் பற்களை நறநற வென்று கடித்துக் கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டும் அவன் மேற் பாய்ந்தார்கள்.

“இவர்கள் புறத் தோற்றந்தான் அழகாக இருக்கிறது. உள்ளம் குருரமாக இருக்கிறது’ என்றெண்ணிக் கொண்ட அர்ச்சுனன் தயக்கத்தைப் போக்கிக் கொண்டு போரைத் தொடங்கினான். “தேவர்களே நுழைவதற்குப் பயப்படுகின்ற எங்கள் இரணிய நகரத்துக்குள் கேவலம் ஒரு மானிடனாகிய நீ எப்படித் துணிவோடு நுழைந்தாய்? போருக்கு வந்துவிட்டாய்! உன் முடிவு பரிதாபகரமாகத்தான் இருக்கப் போகிறது.”

“தேவர்களை ஏமாற்றி அஞ்சச் செய்தீர்கள். என்னை ஏமாற்ற முடியாது. நான் உங்களைக் கொன்று உங்கள் குலத்தைப் பூண்டோடு அழித்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்.” அர்ச்சுனன் வீர முழக்கம் செய்தான்.

அவனுக்கும் காலகேயர்களுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில் தோயமாபுரத்திற் செய்தது போலவே பாசுபதா ஸ்திரத்தை எடுத்துச் செலுத்தினான் அர்ச்சுனன். பாசுபதாஸ்திரத்தின் விளைவாக காலகேயர்கள் எனப்படும் மாயத் தோற்றங்கள் அழிந்தன. புறத்திலே மினுமினுத்து அகத்திலே வஞ்சனை செறிந்த அந்தப் பொய்யுடல்கள் இருந்த இடம் தெரியாமற் பூண்டோடு போய் விட்டன. இரணிய நகரம் என்று மேகங்களின் ஊடே தெரிந்த அந்த நகரமும் மறைந்தது. வில் நாணையே வெற்றி முழக்கத்துக்குரிய வாத்தியமாகக் கொண்டு ஐங்கார நாதம் செய்தான் அர்ச் சுனன். ‘தேவர்கள் தங்கள் பகைவர்கள் யாவரும் தொலைந்தனர்’ என்றெண்ணி மகிழ்ந்தனர். மாதலி வெற்றி மிடுக்குடன் தேரை வானவருலகத்துத் தலைநகரை நோக்கிச் செலுத்தினான். தன் கட்டளைகளை நிறைவேற்றி அர்ச்சுனன் வெற்றி வாகை சூடி வருகிறான் என்று கேள்விப்பட்டான் இந்திரன்.

மாதலிக்கு வழிகாட்டிய சித்திரசேனன் தேர் வருவதற்கு முன்பே அமராபதிக்கு வந்து வெற்றிச் செய்திகளைக் கூறியிருந்தான். அதனால் விவரங்களை நன்கு அறிந்து கொண்டிருந்த இந்திரன் நகரெங்கும் சிறப்பான அலங்காரங்களைச் செய்யும்படி கட்டளையிட்டான். அர்ச்சுனனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கோலாகலமாகச் செய்து வைத்தான். தன்னாலும் வெல்ல முடியாதவர்களைத் தன் மகன் வென்று விட்டான் என்று அறிந்த போது அவன் உள்ளத்தில் ஏற்பட்ட பெருமிதமும் திருப்தியும் உவமை சொல்ல முடியாதவை. அமராபதியின் நகரெல்லையிலேயே எதிர்கொண்டு சென்று அர்ச்சுனனை வரவேற்றான். களிப்போடு அவனை மார்புறத் தழுவிக் கொண்டு தேவர்களின் சார்பாகப் பாராட்டினான். நன்றி செலுத்தினான். ஐராவதத்தில் அமரச் செய்து நகர்வலம் செய்தான். தோயமாபுரத்திலும் இரணிய நகரத்திலும் பகைவர்களை வென்ற நிகழ்ச்சிகளை ஆவல் தீரக் கேட்டு அறிந்தான்.

அர்ச்சுனன் இந்திரனோடு இவ்வாறு தங்கியிருக்கும் போது வனத்திலுள்ள தருமன் முதலிய தன் சகோதரர்களைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று அவனுக்கு. தன் விருப்பத்தை அவன் இந்திரனிடம் தெரிவித்தான். இந்திரனுக்குத் தன் மகனை அவ்வளவு விரைவில் பிரிய விரும்பவில்லை. இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கும் படி வற்புறுத்தினான். அர்ச்சுனனைப் பற்றிய செய்திகளை வனத்தில் வசித்து வரும் தருமன் முதலிய சகோதரர்களுக்குக் கூறி வருமாறு ‘உரோமேசர்’ என்னும் பெயரை உடைய தூதுவர் ஒருவர் இந்திரனால் அனுப்பப்பட்டார். அர்ச்சுனனும் இந்திரனுடைய விருப்பத்தை மறுக்க முடியாது. அங்கு தங்கியிருந்தான்.