மகாபாரதம்-அறத்தின் குரல்/4. ஐந்து நாட்களுக்குப் பின்


4. ஐந்து நாட்களுக்குப் பின்

ஆறாவது நாள் காலையில் போர் தொடங்கும் பொழுது இரு திறத்துப் படையினரும் தத்தம் படைகளைப் புது வியூகங்களில் வகுத்து நிறுத்தினர். பாண்டவர் சேனையைத் துட்டத்துய்ம்மன் மகரமீன் வடிவமாகவும், கெளரவர் சேனையை வீட்டுமன் அன்றில் பறவையின் வடிவமாகவும், வகுத்து நிறுத்தியிருந்தார்கள். போர் தொடங்கியதும் இதுநாள் வரை இல்லாத அபூர்வ சந்திப்பாக வீமனும் துரோணரும் தங்களுக்குள் நேர் எதிரெதிரே வில்லும் கையுமாகச் சந்தித்தார்கள். தனக்கு ஆசிரியராக இருந்த துரோணரோடு கூட அஞ்சாமல் ஆண்மையோடு விற்போர் புரிந்தான் வீமன். துரோணனையும் அவனுடன் சேர்ந்து மற்ற ஆட்களையும் வீமன் தாக்கிக் கொண்டிருக்கும்போது சல்லியன் குறுக்கிட்டு, “ஏ! வீமா... இதோ நான் தயார்! என்னோடு போருக்கு வா!” -என்று வீமனை அழைத்தான். வீமன் சல்லியனைப் பார்த்து ஏளனமாக நகைத்துக் கொண்டே “என்னுடன் சரிசமமாக எதிர் நின்று போர் செய்ய உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? நீ ஏற்கனவே பல முறை எனக்குத் தோற்றவனாயிற்றே?” என்று இகழ்ந்து கூறிப் போர் தொடங்கினான். சல்லியனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. வீமன் சல்லியனுடைய வில்லை முறித்து வீழ்த்தி விட்டு அவனைத் தேரோடு தூக்கித் தரையில் ஓங்கி அடித்தான். எதிர்பாராத இந்த அதிர்ச்சியினால் சல்லியனுடைய வலிமை முற்றிலும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது. சல்லியன் தளரவும் துரியோதனன் சில ஆட்களோடு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனனும் அவனுடன் வந்தவர்களுமாகச் சேர்ந்து வீமன் மேல் அம்பு மழை பொழிந்தார்கள். அதைச் சமாளிப்பதற்காகத் திட்டத்துய்ம்மன், கடோற்கசன் முதலியவர்கள் வீமனுக்கு உதவியாக வந்தனர். வீமனும் கடுமையாகப் போர் செய்தான். துரியோதனன் தம்பியர்களில் சிலர் அன்று வீமன் கைக்கணைகளால் இறந்தனர். வீமன் செய்த போரை மானசீகமாகத் தேவர்களும் பாராட்டினர். இவர்கள் இவ்வாறு போர் செய்து கொண்டிருக்கும்போது விகர்ணனும் அபிமன்னனும் களத்தின் வேறோர் புறத்தில் போர் செய்து கொண்டிருந்தனர். தனக்கு எதிரே வந்த வேகத்திலேயே விகர்ணனின் தேரை அடித்து முறித்தான் அபிமன்னன். தேர் ஒடிந்ததும் தனக்கு அருகே நின்று கொண்டிருந்த சித்திரசேனன் என்பவனுடைய தேரில் ஏறிக் கொண்டு போர் செய்தான் விகர்ணன். ஏறக்குறைய இதே சமயத்தில் துரியோதனனின் தம்பிகளில் வேறு சிலரும், சயத்திரதன், பகதத்தன் ஆகியவர்களும் இன்னொரு பக்கத்திலிருந்த அபிமன்னனை எதிர்த்துக் கணைகளைத் தூவினர். அபிமன்னனோ அவர்கள் தன்மேல் செலுத்திய அம்புகளைத் தந்திரமாக விலக்கி விட்டுத்தான் அவர்கள் மேல் செலுத்துகிற அம்புகளை மட்டும் குறி தவறாமல் எய்தான். விகர்ணன் அபிமன்னனுடைய அம்புகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறினான். சயத்திரதன் பகதத்தன் முதலிய பெரிய பெரிய வீரர்கள் கூட அபிமன்னனை நெருங்க முடியவில்லை. துரியோதனன் அபிமன்னனை எதிர்க்க வழி தெரியாமல் மருண்டு போய்த் திகைத்தான். அற்புதமாகப் போர் புரிந்த அபிமன்யுவைப் பாண்டவர்கள் பாராட்டிக் கொண்டாடினர்.

ஏழாம்நாள் காலையில் போர் தொடங்குகிறபோது பாண்டவர்கள் சேனை சர்ப்பவியூகமாகவும், கெளரவர் சேனை சக்கரவியூகமாகவும் நிறுத்தப்பட்டிருந்தது. பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்திருந்த பாண்டிய மன்னன் துரோணரை எதிர்த்துப் போர் செய்தான். கடோற்கசனும் போர்க்களத்தில் சுறுசுறுப்போடு தோன்றிப் போர் செய்து கொண்டிருந்தான். துரியோதனாதியரைச் சேர்ந்தவனாகிய ‘சுதாயு’ என்பவன் சாத்தகியை எதிர்த்தான். சகுனியும் சல்லியனுமாகச் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்துத் தாக்கினார்கள். ஆனால் சீக்கிரமே வீமனுடைய வில்லுக்கு முன் நிற்க இயலாதவர்களாகித் தோற்று ஓடினர். கண்ணனைத் தேர்ப்பாகனாகக் கொண்ட அர்ச்சுனனுக்கும் வீட்டுமனுக்கும் விற்போர் கடுமையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. வீட்டுமன் எய்த அம்புகளை ஒன்றுகூடத்தன்மேல் விழாமல் அர்ச்சுனன் தடுத்தான்! அர்ச்சுனன் எய்த அம்புகளை ஒன்றுகூடத் தன்மேல் விழாமல் வீட்டுமனும் தடுத்தான்! ஒருவர் அம்பு மற்றவரைப் பாதிக்காமலே நீண்ட நேரம் இருவரும் சாதுரியமாகப் போரைச் செய்து கொண்டிருந்தனர். முருகக் கடவுளும், தாரகாசுரனும், இந்திரனும், பலாசுரனும், இராமனும், இராவணனும் முறையே தங்களுக்குள் செய்த போரைப் போலச் சிறப்பாக வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்தார்கள். முடிவில் இருபுறத்துப் படைகளிலும் சரிசமமான அளவில் அழிவு ஏற்பட்டிருந்தது. பெருவாரியான வேந்தர்கள் உடலில் காயமுற்றிருந்தார்கள். எட்டாம்நாட் காலை போர் தொடங்குகிற போது பாண்டவர்கள் சகடவியூகமாகப் படையை அணிவகுத்து நிறுத்தினர். துரியோதனாதியர் படையை வீட்டுமன் தூசி வரிசையாக அணிவகுத்து நிறுத்தினான். போர் தொடங்குவதற்கு முன்பே தனக்குள் “வீமனை அன்று எப்படியும் கொன்று தீர்த்துவிட வேண்டும்” -என்று ஒரு சபதம் செய்து கொண்டிருந்தான் துரியோதனன். எனவே தானும் தன் தம்பியர்களில் சிலருமாக ஒன்று கூடிக் கொண்டு வீமனை எதிர்ப்பதற்கு வந்து நின்றான். வீமனோ, “துரியோதனனின் தம்பிமார்களில் முன்பு ஐந்து பேர்களைக் கொன்றது போல இன்றைக்கு ஒரு ஏழெட்டுப் பேர்களையாவது கொன்றுவிட வேண்டும்” -என்று தனக்குள் உறுதி செய்து கொண்டிருந்தான். துரியோதனன் கோஷ்டிக்கும் அவனுக்கும் போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. வீமன் தன் எண்ணப்படியே துரியோதனன் தம்பியர்களை ஒவ்வொருவராகத் தீர்த்துக் கட்டுவதற்குத்  தொடங்கினான், முன்பு இறந்திருந்த ஐந்து பேர்களுக்கு மேலே வரிசையாக இன்று எட்டுப் பேர் இறந்திருந்தனர். பதின்மூன்று தம்பியர்களைப் பறி கொடுத்திருந்தான் துரியோதனன். மனம் உடைந்து போன துரியோதனன் நேரே வீட்டுமனிடம் போய்த் தன் மனத்திலுள்ளவைகளை எல்லாம் பிரலாபித்து அழுதான்.

“தோல்விமேல் தோல்வியாக நாமே தோற்றுக் கொண்டிருக்கிறோம். உங்களை நம்முடைய படையின் தலைவராக அமைத்தால் உடனே வெற்றி கிட்டிவிடும் என்று நினைத்தேன். என் நினைப்பு ஏமாந்து விட்டது! முன்பு ஐந்து தம்பிமார்களைச் சாகக் கொடுத்தேன். இன்று எட்டுத் தம்பிமார்களை வீமன் கொன்று விட்டான்! பதின்மூன்று தம்பிமார்களைச் சாகக் கொடுத்ததைத் தவிர நான் கண்ட பயன் வேறு என்ன? ஒன்றுமே இல்லையே?” -என்று வீட்டுமனுக்கு முன் நின்று பரிதாபமாகக் கூறினான். வீட்டுமன் என்ன செய்வான்? பாவம்! ஆறுதலாகச் சில வார்த்தைகளைக் கூறினான்:-

“துரியோதனா! போர் என்றால் இந்த மாதிரி நிகழ்ச்சியெல்லாம் ஏற்படுவது சகஜம்தான். பகைவர்கள் பக்கமே எல்லாச் சாவுகளும் ஏற்பட்டுவிடுமோ? ‘போர்’ -என்றால் இரண்டு பக்கமும் நஷ்டங்கள், அழிவுகள் எல்லாம் ஏற்படத்தான் ஏற்படும். செல்வர்கள் செல்வத்தைத் தருமம் செய்வதற்கும் தாமே அனுபவிப்பதற்கும் பயப்பட மாட்டார்கள். இல்லறத்தார்கள் விருந்தினர்கள் எப்பொழுது வந்தாலும் வரவேற்றுப் பேணுவதற்குப் பயப்பட மாட்டார்கள். மெய்யறிவு பெற்று இந்த உலகத்தைப் பற்றிய உண்மையைத் தெளிந்து கொண்டவர்கள் சாவதற்கும் பயப்படமாட்டார்கள். இவற்றை எல்லாம் போல அரசர்களாகப் பிறந்த வீரக்குடிமக்கள் போருக்குப் பயப்படக்கூடாது! ஆனால் உன்னைப் பொறுத்த மட்டில் நீ இம்மாதிரிப் பயப்படுவதைத் தடுக்க முடியாது. அன்றிலிருந்து இந்த விநாடி வரை எதிலும் எதற்கும் ஒழுங்கையும் தருமத்தையும் மீறியே வாழப் பழகியிருக்கிறாய் நீ. இந்தத் தீய செயல்களின் பாவபலன்களை நீ அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கற்பின் செல்வியாகிய திரெளபதியை அவைக்கு நடுவே மானபங்கம் செய்கிறபோது இப்போது ஏற்படுகிற தீமைகளெல்லாம் ஏற்படும் என்று கருதித்தானே நாங்கள் தடுத்தோம். ஆனால் நீ அன்று எங்கள் அறிவுரையை இலட்சியம் செய்தாயா? விதுரன் மனம் புண்ணாகி உன்னை வெறுத்து வில்லை முறித்துப் போட்டு விட்டுப் போகும்படி செய்தாய்! சகுனி, துச்சாதனன், கர்ணன் முதலிய தீயவர்களின் சொற்களைக் கேட்டாய். தன்னை அதிரதனாக நியமித்தாலொழியப் போர் செய்ய முடியாது என்று உன் உயிருக்கு உயிரான கர்ணன் கூறிவிட்டுப் போய்விட்டான். எதிர்த்தரப்பில் உள்ள வீமன், அர்ச்சுனன், திட்டத்துய்ம்மன், முதலிய மகா வீரர்களைக் கவனிக்கும்போது நம்மிடம் படையே இல்லை என்றுதான் தோன்றுகிறது! வெற்றியோ? தோல்வியோ? விளைவை விதி உண்டாக்கும். நீ என்னிடம் வந்து பரிதாபப்பட்டு என்ன பயன்? யார் கையில் என்ன இருக்கிறது” -என்று நீண்டதோர் அறிவுரையை அவனிடம் கூறி அனுப்பிவிட்டுப் போர்க்களத்தில் படைகளிடையே புகுந்து சென்றான் தலைவனான வீட்டுமன்.

முன்பு களப்பலியாக இறந்து போன அரவான், தான் கண்ணனிடம் கேட்டிருந்த வரத்தின்படி உயிர்பெற்றுப் போர்க்களத்திற்கு வந்து போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனும் வழக்கம்போல் மாயத்தன்மை பொருந்திய உருமாற்ற வித்தைகளின் மூலமாகப் போர் புரிந்து கொண்டிருந்தான். கடோற்கசனோடு போர் புரிந்து கொண்டிருந்த ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் தோற்று ஓடும்போது அருகில் நின்று கொண்டிருந்த அரவானைப் போகிற போக்கில் ஓங்கி வெட்டிவிட்டுப் போய்விட்டான். அரவான் வெட்டுப்பட்ட உடனேயே இறந்து போய் விட்டான். ‘அலம்பசன் அரவானைக் கொன்றுவிட்டான்’ -என்ற செய்தி ஒரு விநாடியில் போர்க்களம் எங்கும் பரவிவிட்டது. களத்தில் போர் புரிந்து கொண்டிருந்த அபிமன்னனுக்குச் சினம்பொங்கி விட்டது. “அரவானைக் கொன்ற கௌரவர் படையை அழித்துச் சாம்பலாக்கி விடுவேன்” -என்ற உறுதியோடு போரில் ஈடுபட்டான் அவன். வீமனும் அடக்க முடியாத மனக் கொதிப்போடு போர் செய்தான். துரியோதனனும் அவனுடைய தம்பிமார்களும் வீமனின் எதிரே போருக்கு நின்று கொண்டிருந்தார்கள்.

“ஏ! துரியோதனா? இது வரை பலமுறை இதே போர்க்களத்தில் எனக்கு எதிராக நீ நின்று போர் செய்திருக்கிறாய். என்ன பயன்? தோற்று ஓடியிருக்கிறாயே ஒழிய, ஒரு முறையாவது நீ என்னைத் தோற்கச் செய்திருக்கிறாயா? நீ தனியாகப் போருக்கு வராமல் உன்னோடு உன் தம்பிமார்களையும் அழைத்துக் கொண்டு வருகிறாய் என் கை அம்புகளால் சாவதற்கென்றே உன் தம்பிமார்கள் உன்னோடு வருகிறார்கள். ஏற்கனவே பதின்மூன்று தம்பியர்களைக் கொன்றாய்விட்டது. இப்போது ஓர் ஏழு பேரையாவது கொல்லலாமென்று நினைக்கிறேன். நீ உண்மையான வீரனானால் உன்னால் அவர்களைக் காப்பாற்ற முடியுமானால் அவர்களைக் காப்பாற்றிக் கொள்...” என்று துரியோதனனை நோக்கி அறைக்கூவி விட்டுப் போரைத் தொடங்கினான். சொல்லிய சபதத்தின் படியே கால் நாழிகையில் வரிசையாக இன்னும் ஏழு தம்பியர்கள் இறந்து போகும்படி செய்தான் வீமன். இறப்பின் எண்ணிக்கை இருபது ஆயிற்று. துரியோதனன் ஆத்திரம் நிறைந்த விழிகளால் வீமனைப் பார்த்தான். பார்ப்பதைத்தவிர அவனால் வேறென்ன செய்ய முடியும்?

“அப்பா துரியோதனா! உனது பாவத்தின் பயன்களை இதுவரை பார்த்தது போதுமா? இனிமேலும் உயிரோடு இருந்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாயா? உன் ஆசை தீர்ந்து விட்டதானால் உன்னுடைய இருபது தம்பியர்களும் எந்த இடத்திற்குப் போனார்களோ அதே இடத்திற்கு உன்னையும் அனுப்பி விடுகிறேன். இன்னும் உயிரோடு இருக்க வேண்டும் என்று உனக்கு ஆசை இருக்குமானால் பிழைத்துப் போ” என்றான் வீமன். இதைத் தன் செவிகளால் கேட்ட பின்பும் வெட்கத்தினால் வேறு மறுமொழி கூறத் தோன்றாமல் தலை குனிந்த வண்ணமே பாசறைக்குத் திரும்பினான் துரியோதனன். எட்டாம் நாட்போராகிய அன்றைய வெற்றி பாண்டவர்கள் பக்கமே மிகுதியாக இருந்தும் கூட அரவானை இழந்த துயரத்தால் அவர்கள் மனத்திலும் நிம்மதியே இல்லை. “இன்று களத்தில் இறப்பதன் முன் அன்றே களப்பலியாக இறந்தவன்தானே அரவான்! அவன் மாண்டதற்காக வருந்த வேண்டாம், வீர சுவர்க்கத்தில் நல்ல இடம் பெறுவான் அவன்” என்று கண்ணபிரான் பாண்டவர்களுக்கு அறிவுரை கூறி ஆற்றினான்.

எட்டாம் நாள் போரை முடித்துக் கொண்டு பாசறைக்குப் போன துரியோதனனின் மனம் சோகத்தினாலும் ஏமாற்றத்தினாலும் வெம்பிச் சாம்பியது. பாசறைக்குப் போன உடனேயே ஒரு காவலனை அழைத்துக் கர்ணனைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னான். கர்ணன் வந்தான். தம்பியர் இறந்து போனது பற்றித் துக்கம் விசாரித்தான். சிறிது நேரத்தில் கூப்பிட்டனுப்பிய காரணத்தை மெல்லக் கேட்டான், “கர்ணா! காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமா? போரில் எங்கள் நிலை எப்படி இருக்கிறது என்பதை நீயே தெரிந்துகொண்டுதானே இருக்கிறாய்? இன்று வரை என் தம்பியர்களில் இருபது பேர் இறந்து விட்டனர்! நானும் என்னைச் சேர்ந்தவர்களும் வில்லெடுத்துப் போர் செய்தால் என்ன? சும்மா இருந்தால் தான் என்ன? நீ வந்து வில்லெடுத்துப் போர் செய்ய வேண்டும்! அப்போது தான் அந்தப் பாண்டவர்கள் பயப்படுவார்கள்” என்று உருக்கம் நிறைந்த குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான் துரியோதனன்.

“வாஸ்தவம்தான்! ஆனால் வீட்டுமன் உயிரோடு இருக்கும் வரை நான் வில்லெடுக்கமாட்டேனே? அதற்கென்ன செய்யலாம் இப்போது? அவர், இனிமேல் போர் செய்ய முடியாது’ என்று பாண்டவர்களுக்கு முன்னால் தளர்ந்து விழுந்த பின் நான் உன் பக்கம் போர் செய்து வெற்றியை வாங்கித் தருகிறேன்” என்று மறு மொழி கூறினான் கர்ணன். கூறிவிட்டு உடனே துரியோதனனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் இருப்பிடம் போய்விட்டான். துரியோதனன் அப்போதே துச்சாதனன் மூலம் கர்ணன் கூறிய செய்திகளை வீட்டுமனுக்குக் கூறி அனுப்பினான். அவற்றைக் கேட்ட வீட்டுமன் மனம் வருந்தினான்.

“அப்படியா? நான் தளர்ந்து விழுந்த பின்புதானா கர்ணன் வில்லெடுப்பான்? நாளை ஒரு நாளைக்குப் பொறுத்துக்கொள்ளச் சொல்! ஒன்றும் முடியாவிட்டால் நான் விழுந்து விடுவேன். பின்பு வெற்றியை வாங்கிக் கொடுக்க கர்ணன் வரட்டும்!” என்று விடைகூறி அனுப்பி விட்டான் வீட்டுமன். ஒன்பதாம் நாள் போரில் புதுமுறை அணிவகுப்பை மேற்கொண்டான் வீட்டுமன். துரியோதனன் களத்தின் நடுப்பகுதியிலும் ‘அலம்பசன்’ என்னும் அரக்கன் முன்னணியிலும் பகதத்தன் முதலியவர்கள் பக்கங்களிலுமாகச் ‘சாவதோபத்திரம்’ என்ற முறையில் படைகளை நிறுத்தினான். பாண்டவர்கள் தங்கள் படைகளை அகலவியூகமாக நிறுத்தினர். போர் தொடங்கியவுடன் அலம்பச அரக்கனுக்கும் வீமனுக்கும் வில்யுத்தம் ஏற்பட்டது. அலம்பசனுக்கு விற்போர் நன்றாகத் தெரியாது. வீமனை விற்போரில் சமாளிக்க முடியாத அலம்பசன் திடீரென்று வாளை உருவிக்கொண்டு வாட்போருக்கு அழைத்தான். வீமனும் வாளை எடுத்துக் கொண்டு அலம்பசனோடு வாட்போருக்குப் போனான். சிங்கத்தோடு சிங்கம் மோதுவதுபோல் அலம்பசனும் வீமனும் வாளோடு வாளும், தோளோடு தோளுமாக மோதிக்கொண்டார்கள் வாட்போரிலும் அலம்பசனுக்குத் தான் நிறையக் காயங்கள் பட்டன். உடனே அவன் வாட்போரையும் நிறுத்திவிட்டு மற்போருக்கு அழைத்தான்! வீமனும் அதை மறுக்காமல் சம்மதித்து அலம்பசனோடு மற்போருக்குப் போனான். சிறிது நேரம் இருவருக்கும் கடுமையான மற்போர் நடந்தது. மற்போரிலும் அலம்பசனே இளைத்தான்.

மீண்டும் திடீரென்று அவன், “மற்போர் போதும்! விற்போர் தொடங்குவோம்” என்று எழுந்து தேரில் ஏறி வில்லை எடுத்துக்கொண்டான். உடன் வீமனும் வில்லை எடுத்துக் கொண்டான். இருவருக்கும் பழையபடி விற்போர் தொடர்ந்து நடந்தது. வீமனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கக் கருதிய அலம்பசன், மீண்டும் திடீரென்று, “விற்போர் போதும்! மீண்டும் மற்போர் செய்யலாம் வா!” என்றான். வீமனும் மறுக்காமல் அவனுடன் மற்போர் செய்யமுற்பட்டான். இருவருக்கும் மற்போர் நடந்தது. மற்போர் நடந்து கொண்டிருக்கும் போதே போர் முறையை மீறி அலம்பசன் ஒரு பெரிய கல்லைத் தூக்கி வீமன் மேல் எறிந்தான். நல்லவேளையாக இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபிமன்னன் இரண்டு மூன்று அம்புகளை அந்தக் கல்லின் மேல் தொடுத்து அதைத் தூள் தூளாக நொறுக்கிக் கீழே விழுமாறு செய்து விட்டான். வீமன் கல்லடி பட்டு நொறுங்காமல் பிழைத்தான். ‘இனி இந்த அசுரனை உயிரோடு விட்டால் அவனால் வீமன் உயிருக்கு என்னென்ன துன்பம் நிகழுமோ?’ என்று பயந்த அபிமன்னன் ஒரு வேலை எடுத்து அலம்பசனின் மார்பிற்குக் குறிவைத்துப் பாய்ச்சி விட்டான். அலம்பச அசுரனைச் சேர்ந்த அரக்கர்கள் வேல் அவன் மேல் பாயாமலிருக்க வேண்டும் என்பதற்காக இவனைச் சுற்றி வளைத்து நின்று கொண்டார்கள். உடனே வீமன் தன் கதாயுதத்தால் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றவர்களை நையப் புடைத்து விலக்கினான். அபிமன்னன் எறிந்த வேல் அலம்பசனின் மார்பிலே பாய்ந்துவிட்டது. அலம்பசன் வீறிட்டு அலறி மாண்டு வீழ்ந்தான். தன் தம்பி அரவானைக் கொன்றவனை அபிமன்னன் பழி வாங்கிவிட்டான் என்று போர்க்களத்தில் எல்லோரும் பாராட்டினார்கள். மேலும் அன்றைக்கு அர்ச்சுனன் செய்த போரில் துரியோதனனுக்குத் துணையாக வந்திருந்த பதினாயிரம் அரசர்களைத் தோற்கடித்தான்.

அர்ச்சுனனின் இந்தச் செயலினால் வீட்டுமனுக்கு ஆத்திரம் மூண்டது. அவன் தன் படைகளை அழைத்துக் கொண்டு திட்டத்துய்ம்மன், சிகண்டி ஆகிய பாஞ்சால தேசத்து வீரர்களுக்கு முன்னால் போய்ப் போருக்கு நின்றான். பாஞ்சாலத்து வீரர்கள் வீட்டுமன் கணையால் படாதபாடு பட்டனர். இதனால் சினமடைந்த சிகண்டி வீட்டுமன் மேல் வில்லை வளைத்துக் கொண்டு பாய்ந்தான். சரமாரியாக அவன் தன்மேல் பொழிந்த அம்புகளை எதிர்க்கத் தோன்றாமல் திகைத்துப் போய் நின்று விட்டான். மார்பிலும் உடலிலுமாக அம்புகள் தைத்தன. இந்த நிலையில் சிகண்டியை எதிர்ப்பதற்காக ஓடிவந்தான் துச்சாதனன். துச்சாதனனுக்கும் சிகண்டிக்கும் போர் நடந்தது. சிகண்டியின் வில்லை முறித்துத் தேரை அழித்துத் திகைக்கச் செய்தான் துச்சாதனன். சிகண்டி துச்சாதனனிடம் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை அர்ச்சுனன் தொலைவிலிருந்து பார்த்துவிட்டான். அவன் உடனே சிகண்டிக்கு உதவியாக வந்து துச்சாதனனோடு போர் செய்து அவனைத் துரத்தினான், அர்ச்சுனன் துச்சாதனனைத் துரத்துவதைப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டுமன் அவனை எதிர்த்துத் தாக்குவதற்காக ஓடி வந்தான். வீட்டுமனை எதிர்ப்பதற்காக விராடராசனின் தம்பியும் மகாவீரனுமாகிய சதாநீகன் என்பவன் முந்துற்றான். ஆனால் சாமர்த்தியமாக சில கணைகளை ஏவிச் சதாநீகனை வந்த வேகத்திலே கொன்று தள்ளி விட்டான் வீட்டுமன். சதாநீகன் மரணத்தோடு ஒன்பதாம் நாள் போர் முடிந்தது.

பத்தாம் நாள் காலையில் போர் தொடங்குகிற போதே வீட்டுமன் மனக்குறளி அவனுக்குச் சொல்லி விட்டது. “உனக்கு இன்று மரணம்! உனக்கு இன்று மரணம்” என்று அவன் மனத்தில் எதோ இனம் புரியாத குரலொன்று கூவிக்கொண்டிருந்தது! போரைத் தொடங்குவதற்கு முன்பே அர்ச்சுனனிடம், கண்ணன் சூசகமாகச் சொல்லி விட்டான். “அர்ச்சுனா! இன்றைக்குத்தான் வீட்டுமனுக்கு மோக்ஷ பதவி அளிக்கவேண்டிய நாள். மறந்து விடாதே” என்று கண்ணன் கூறியிருந்தான்.

“கண்ணா! என் அஞ்ஞானத்தை அகற்றி எனக்கு உறுதியை உபதேசித்தவன் நீ. நீ இடுகிற கட்டளையை நிறைவேற்றுவதற்கு எந்த நேரமும் இந்தக் கைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு நெருங்கிய பந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வில்லெடுக்க வேண்டுமென்று நீ சொன்னால் நான் அப்படியே செய்வேன்” என்று கூறிக் கண்ணனை வணங்கினான் அர்ச்சுனன். சரியாக இதே சமயத்திற்கு விட்டுமன் வில்லும் கையுமாக அர்ச்சுனனுக்கு எதிரே போருக்கு வந்து நின்றான். இருவருக்கும் போர் தொடங்கியது. அர்ச்சுனன் அருகிலிருந்த அரசர்கள் வேகமாக வீட்டுமன் மேல் நிறைய அம்புகளைச் செலுத்தி விட்டார்கள். முள்ளம் பன்றியின் உடலில் சிலிர்த்து நிற்பதைப் போல் வீட்டுமன் உடலெங்கும் அம்புகள் தைத்துச் சிலிர்த்து நின்றன. திடீரென்று ஆவேசமுற்ற வீட்டுமன் எல்லா அம்புகளையும் உதறிவிட்டு எதிர்த்தரப்பில் இருந்த அரசர்களை வன்மையாகத் தாக்கத் தொடங்கினான், அரசர்கள் வீட்டுமனுக்கு எதிரே நின்று போர் செய்ய முடியாமல் மிரண்டு ஓடினார்கள். இதைக் கண்ட அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்வதற்காகத் தானே நேருக்கு நேர் வில்லை வளைத்துக் கொண்டு வந்து நின்றான். வீட்டுமனுக்குத் துணையாக அசுவத்தாமன், கிருபாச்சாரியார், துரோணர், சகுனி, சயத்திரதன், பகதத்தன் முதலியவர்களை அனுப்பியிருந்தான் துரியோதனன். இவர்கள் எல்லோருமாக ஒன்று கூடிக்கொண்டு தனியே நின்ற அர்ச்சுனனை வளைத்துக் கொண்டார்கள். அர்ச்சுனனும் சும்மா விட்டுவிடவில்லை. தன்னுடைய ஒரே ஒரு வில்லினால் இவர்கள் இத்தனை பேருடைய வில்லுக்கும் ஈடு கொடுத்துப் பதில் சொல்லிக் கொண்டுதான் இருந்தான். இரண்டு கையாலுமே விற்போர் செய்தான் அர்ச்சுனன். அர்ச்சுனன் போர் செய்தது போதாதென்று வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக்கொண்டு எதிரிகளின் படை வகுப்புக்குள் புகுந்து சாடுவதற்குத் தொடங்கியிருந்தான். வீமனால் கெளரவர் படைக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. படையும் மிரண்டு ஓடத் தொடங்கியது. மனக் கொதிப்படைந்த துரியோதனன் வில்வித்தையில் கைதேர்ந்த ஓராயிரம் வீரர்களை அர்ச்சுனனுக்கு எதிராக அனுப்பினான். ஓராயிரம் வீரர்களுமாகச் சேர்ந்து கொண்டு அர்ச்சுனனைத் தாக்கிய போது வாயு அஸ்திரத்தைப் பிரயோகித்து அவற்றைத் தடை செய்தான் அவன். வீட்டுமன் போர் செய்து கொண்டுதான் இருந்தான். ஆனால் ஓங்கி நின்றது என்னவோ, அர்ச்சுனன், வீமன் முதலிய பாண்டவர்களின் கைகளே! துச்சாதனன், சகுனி, முதலியவர்கள் தோற்று ஓடினர். தருமத்தின் வெற்றி பாண்டவர்கள் உருவில் விளங்கப் போவதை எண்ணி வீட்டுமன் மனம் களித்தான். ஆனால் தனக்குச் சோறளித்த கெளரவருக்காகச் செய்ய வேண்டிய கடமையையும் மனமாரச் செய்து கொண்டு தான் இப்படி எண்ணினான்.