மகாபாரதம்-அறத்தின் குரல்/4. தூது சென்ற இடத்தில் ...
கண்ணனும் திரெளபதிக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்ட தருமன் மனம் துணுக்குற்றான். ‘நம்முடைய விருப்பப்படி சமாதானமாகப் போக இவர்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறதே! எப்படியும் போரை உண்டாக்கி விடுவார்கள் இவர்கள்’ என்று வருந்தினான். “சினங் கொள்ளுகின்றவர்கள், முனிவர்கள், நிறைகுணமற்றவர்கள், நோயாளிகள், அறிவிலிகள், அறத்தை உணராதவர்கள், பெண்கள் இவர்களெல்லாம் இருக்கும் இடத்தில் அரசியலைப் பற்றிய பிரச்னைகளைக் கலந்தாலோசிக்கக் கூடாது எனப் பெரியோர் கூறுவர். அது இப்போது பொருத்தமாகிவிட்டது!” என்று கூறிவிட்டுக் கண்ணனை நோக்கினான், தருமன். மந்திராலோசனை முடிந்தது. பாண்டவர்கள் சார்பாகக் கண்ணன் சமாதானத் தூது புறப்பட்டான். பலவகை மரியாதைகளோடு கண்ணனைத் தூதனுப்பினர் பாண்டவர்கள். கண்ணன் அத்தினாபுரத்தை அடைந்து நகருக்கு வெளியே உள்ள சோலை ஒன்றில் தங்கினான். தன் வரவைத் துரியோதனனுக்குச் சொல்லி அனுப்பினான். துரியோதனன் கண்ணனை வரவேற்று எதிர் கொண்டழைத்து வருவதற்குச் சிறப்பான ஏற்பாடுக்களைச் செய்தான்.
“துரியோதனா! நீ உயர்குலத்தில் பிறந்த பேரரசன். கண்ணன் இடைக்குலத்தில் தோன்றிய சிற்றரசன். அவனை நீ போய் எதிர்கொண்டழைத்து வருவது உன் பெருமைக்கு இழுக்கு. அழைப்பும் வரவேற்பும் அவனுக்கு வேண்டாம். அவன் தானாகவே வரட்டும்.” -என்று சகுனி தடுத்து விட்டான். இதனால் துரியோதனன் வரவேற்பு ஏற்பாடுகளைக் கலைத்துவிட்டுத் தானும் போகாமல் இருந்துவிட்டான். ஆனால் வீட்டுமன். விதுரன், துரோணன் முதலிய பெரியோர்கள் கண்ணனை வரவேற்றுக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். துரியோதனன் தன்னை அவமதிக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்ட கண்ணன், வேண்டுமென்றே அவன் அரண்மனைக்குப் போகாமல் விதுரனுடைய அரண்மனையில் போய் விருந்தினனாகத் தங்கினான். கெளரவர்கள் நிலை பற்றி விதுரனைக் கலந்தாலோசித்தான்.
“துரியோதனாதியர்கள் எதற்கும் அஞ்சாத தீயவர்கள். சிந்தித்துப் பார்க்கும் அறிவும் அற்றவர்கள். ஆகவே அவர்களிடம் சமாதானத்தை நாடிக் கொண்டிருப்பதில் பயனில்லை. போர் செய்து கொன்று குவித்தாலொழிய அவர்கள் நாட்டைத் தரமாட்டார்கள். பாண்டவர்களால் சாக வேண்டுமென்பது அவர்கள் தலையெழுத்தானால் அது வீண் போகுமா?” என்றார் விதுரன்.
“துரியோதனாதியர்கள் மட்டுமென்ன? உலகத்தில் எல்லாருமே கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கிற கைக்குத்தான் பயப்படுகின்றார்களே ஒழிய அணைக்கிற கைக்குப் பயப்படுவதில்லை. உலக இயற்கை அப்படி இருக்கிறது. என்ன செய்யலாம்?” -அன்று முழுவதும் கண்ணன் விதுரன் மாளிகையிலேயே தங்கியிருந்தான். வேறெங்கும் போகவில்லை. மறுநாள் காலை பொழுது புலர்ந்ததும் நீராடல் முதலிய காலைச் செயல்களை முடித்துக் கொண்டு துரியோதனன் அவைக்குப் புறப்பட்டான். துரியோதனனுடைய அவை அன்று கோலாகலமாகக் கூடியிருந்தது. கண்ணன் அங்கு வருவதற்கு முன்பே அவையிலிருந்தவர்களுக்கு ஒரு கட்டளையை வற்புறுத்தி இட்டிருந்தான் துரியோதனன்; “கண்ணன் அவைக்குள் நுழைந்ததும் அவையிலுள்ள எவரேனும் எழுந்திருந்தோ, வரவேற்றோ, எதிர்கொண்டு வணங்கியோ மரியாதை செய்தால் அவர்கள் வாழுமிடம் தீ வைத்து அழிக்கப்படும். கண்ணனுக்கு யாரும் மரியாதை செய்யக் கூடாது.” கண்ணன் தனியனாக அந்தப் பேரவைக்குள் நுழைந்தான். துரியோதனனுக்குப் பயந்து பெரும்பான்மையானவர்கள் மரியாதையும் வரவேற்பும் செய்யாமல் இருந்த இடத்திலேயே இருந்து விட்டனர். ஆனால் விதுரன், வீட்டுமன், முதலியவர்கள் அவனுடைய அசட்டுக் கட்டளையைப் பொருட்படுத்தாமல் கண்ணனை எதிர் கொண்டழைத்து வணங்கி வரவேற்றனர். துரியோதனன் தன் அரியணையிலிருந்து எழுந்திருக்கவுமில்லை. “கண்ணா உட்கார்!” என்று மரியாதைக்குக் கூடச் சொல்லவில்லை. கண்ணன் தானாகவே ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தான்.
“நான் அரசாளும் தலைநகரத்திற்கு நீ நேற்றே வந்திருக்கிறாய்! ஆனால் என் வீட்டுக்கு வந்து விருந்தாளியாகத் தங்கவில்லை. இது என்னை நீ வேண்டுமென்றே அவமதித்ததாகும்” என்று இரைந்து கத்தினான் துரியோதனன்.
“துரியோதனா! அழைத்தால் தானே விருந்தினர்கள் வந்து தங்குவார்கள்? நான் இந்த நகரத்திற்கு வந்திருப்பது தெரிந்தும் நீ என்னை இலட்சியம் செய்யவில்லை. விதுரன் முதலியவர்கள் என்னை விரும்பி வரவேற்றார்கள். ஆகையால் தான் அங்கு விருந்தினனாகத் தங்கினேன்.”
“இது போலிக் காரணம்! உண்மையில் நீ என்னை அலட்சியம் செய்கிறாய். வேறொன்றும் இல்லை."
“நான் அப்படியே செய்தாலும் அதில் தவறு என்ன? நீ செய்வதைத் தானே நானும் செய்கிறேன். நான் பாண்டவர்களின் தூதனாக வந்திருக்கிறேன். உன் வீட்டில் விருந்துண்டு விட்டு உனக்கு மாறாகப் பாண்டவர்களை ஆதரித்துப் பேச வேண்டியிருக்கலாம். எனவேதான் நான் உன்பால் தங்க விரும்பவில்லை. உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்பவர்கள், பெரியோர் அறிவுரைகளை மீறியவர்கள், நன்றி மறந்தவர்கள், இவர்கள் பழி சூரியனும் சந்திரனும் உள்ள அளவு நீங்காது...”
“அதெல்லாம் இருக்கட்டும்! நீ வந்த காரியமென்ன? அதை முதலில் நான் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“வேறு ஒன்றுமில்லை! எல்லாம் உனக்குத் தெரிந்த காரியம்தான். பாண்டவர்களின் வனவாசம் முடிந்து விட்டது. மிகுந்த துன்பமுற்று நாளைக் கழித்து விட்டு வந்திருக்கி றார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய நாட்டைத் திருப்பிக் கொடுப்பது தான் ஒழுங்கு.”
“அது நடக்காது ! சூதாடித் தோற்றுப் போன நாட்டை மீண்டும் பெறுவது முடியுமா? யார் என்னைப் பழித்தாலும் சரி, நான் பாண்டவர்களுக்கு நாட்டைக் கொடுக்க மாட்டேன். எப்படிப்பட்ட பெரும்போர் இதனால் ஏற்படுவதாயிருந்தாலும் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இழந்தவை இழந்தவையே! இனிக் கிடைக்கப் போவதில்லை !”
“போனால் போகிறது. முழு நாட்டையும் கொடுக்க முடியாவிட்டாலும் அவர்களுக்குச் சேர வேண்டியதில் சரி பாதியாவது கொடு போதும்.”
“கொடுப்பதென்ற பேச்சே நம்மிடத்தில் கிடையாது. பாண்டவர்களின் ஆசை பயனில்லாதது.”
“துரியோதனா! பாண்டவர்களின் பகை பொல்லாதது! ஐந்து பேருக்கும் ஐந்து ஊர்களையாவது ஆளக் கொடு. அவர்கள் அதைக் கொண்டாவது திருப்தியடையட்டும்."
“ஐந்து ஊர்களின்றி ஐந்து வீடுகளைக் கொடுத்தாலும் அவர்கள் மாட்டேன் என்றா சொல்லிவிடப் போகிறார்கள்? ஆனால் இப்போது ஐந்து வீடுகளைக் கூட நான் அவர்களுக்குக் கொடுக்கத் தயாராக இல்லை.”
“கெளரவர் தலைவா! ஐந்து வீடுகளைத் தருவது உனக்கு அவ்வளவு கடினமாக இருக்காது, அவற்றையாவது கொடு!”
“கண்ணா ! உலகம் ஆண்மையும் வலிமையும் உடையவர்களுக்குச் சொந்தம். மற்றவர்கள் அதை அடையவோ, ஆளவோ, முயல்வது பயனற்றது.”
“நல்லது! உன்னுடைய தத்துவ விளக்கம் எனக்குத் தேவையில்லை. முடிவாகப் பாண்டவர்களோடு போர் செய்வதற்காகவாவது இணங்கு. உனக்கு உன்னைப் புரிந்து கொள்ளச் செய்ய அது தான் சரியான வழி. யார் வலியவர், யார் எளியவர்? என்பதைப் போரில் பார்த்து விடுவோம்.”
“நீயா இப்படி வீரமாகப் பேசுகிறாய்? இடைக்குலத்தில் பிறந்து ஆய்ச்சியர்களிடையே சிறுவயதில் நீ உற்ற துன்பங்களெல்லாம் எனக்குத் தெரியாதென்றா நினைத்தாய்? மத்தால் அடிப்பட்டும் உரலில் கட்டுண்டும் எத்தனை எத்தனை வேதனை அடைந்தாய்? இப்போது என்னைப் பாண்டவர்களோடு போருக்கழைக்கும் தூதுவனாக வந்திருக்கிறாய்! நான் போருக்குப் பயந்தவனில்லை. அந்தப் பாண்டவர்களை விட நாங்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? ஒரு தாய்க்கும் ஐந்து தந்தைகளுக்குமாகப் பிறந்து ஐவரும் ஒரு பெண்ணை மணந்து கொண்டவர்கள் தாமே பாண்டவர்கள்? அவர்களுக்கு நாடு ஒரு தேடா? ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?” இவ்வாறு பலவிதமாகக் கண்ணனையும் பாண்டவர்களையும் தூற்றிக் கொண்டே போனான் துரியோதனன்.
கண்ணன் சிரித்த முகம் மாறாமல் பொறுமையோடு யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். பின்பு விதுரனையும் அழைத்துக் கொண்டு அவனோடு அவன் மாளிகைக்குச் சென்றான். ‘வீமனும் அர்ச்சுனனும் போர் செய்ய ஆசை கொண்டிருப்பது வீண் போகாது’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் அவன். கண்ணனை மாளிகையில் கொண்டு போய் விட்டு விட்டு, விதுரன் மீண்டும் அவைக்கு வந்து சேர்ந்தான். துரியோதனனின் கோபம் முழுவதும் விதுரன் மேல் பாய்ந்தது. விதுரன் தனக்கு தந்தை முறையுள்ளவன் என்பதையும் மறந்து அவையெல்லாம் கேட்கும்படியாக அவனை மரியாதை மீறித் தூற்றலானான்:-
“நீ எப்போதுமே நன்றி கெட்டவன். என் எதிரிகளை ஆதரித்து அவர்களிடமிருந்து வந்திருக்கும் அந்த இடைப்பயலுக்குப் புகலிடம் அளித்திருக்கிறாய். நீ பொருள் கொடுத்தவர்களுக்கெல்லாம் தன் நலத்தை விற்கும் விலைமகளைப் போலக் கேவலமானவன். நீ என்னிடம் உணவு உண்டு எனக்கே துரோகம் செய்கிறாய்.” இதைக் கேட்டு விதுரனின் பொறுமை எல்லை மீறி விட்டது. அவன் ஆத்திரத்தோடு வில்லும் கையுமாக எழுந்தான்.
“அவையோர்களே! இப்போது இவன் மேல் எனக்கிருக்கும் ஆத்திரத்தில் இவன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன். ஆனால் ‘மகனைக் கொன்ற தந்தை’ என்று பழி ஏற்படுமே என அஞ்சுகிறேன். என் நன்றியையும் நற்பண்புகளையும் பற்றி முட்டாளாகிய உனக்குத் தெரியாவிட்டாலும் இங்குள்ள பெரியோர்களுக்கு நன்றாகத் தெரியும். இதோ இப்போது செய்கின்ற சப்தத்தைக் கேட்டுக் கொள்! நாளை ஏற்படப் போகிற போரில் நிச்சயமாக உன் பொருட்டு வில் எடுத்து உதவமாட்டேன். இது சத்தியம்” -இவ்வாறு கூறிக் கொண்டே தன் கையிலிருந்த வில்லை இரண்டாக முறித்துத் துரியோதனன் முன் எறிந்து விட்டுத் திரும்பிப் பாராமல் அங்கிருந்து வெளியேறித் தன் மாளிகைக்குச் சென்றான் விதுரன். அவ்வளவுதான் எரிமலை குமுறி ஓய்ந்து விட்டது!