மகாபாரதம்-அறத்தின் குரல்/4. வேடம் வெளிப்படுகிறது!
அசுவத்தாமன் தோற்றோடியதுடன் போர் முடிந்து விடும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாகப் போர் மீண்டும் பெரிய உருவில் வளர்ந்துவிட்டது. வீட்டுமர், விதுரர் முதலிய நெருங்கிய உறவினர்களான பெரியோர்கள் துரியோதனனுக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடனுக்காக மனம் விரும்பாம்லிருந்தும் அர்ச்சுனனோடு போர் புரிய வந்துவிட்டார்கள். துரியோதனனோ யாரோடும் போருக்கு வராமல் தன்னைச் சுற்றி ஒரு மெய்காவற்படையைக் காவல் வைத்துக் கொண்டு பதுங்கியிருந்தான். நிலைமையைப் புரிந்து கொண்டு தானும் தன் கடமையைச் செய்யலாம் என்று தீர்மானித்துக் கொண்ட அர்ச்சுனன் தன்னை எதிர்த்து வளைத்துக் கொண்டு நின்றவர்கள் மேல் நான்கு திசையிலும் மழையைப் போல அம்புகளைத் தூவினான். அவனுக்கு வெறியே பிடித்து விட்டது. சக்கர வட்டமாகச் சுழன்று வன்மை வாய்ந்த அஸ்திரங்களை எல்லாம் தூவினான். அவன் வெறி தணிந்து வில்லில் அம்பு தொடுப்பதை நிறுத்தி விட்டுத் தன்னைச் சுற்றிப் பார்த்தபோது யாருமே இல்லை. இரண்டாம் முறை உற்றுப் பார்த்தபோது பலர் தொலைவில் ஓடிக் கொண்டிருப்பதையும் சிலர் கீழே விழுந்து கிடப்பதையும் பதுங்கிக் கிடப்பதையும் கண்டான்.
அப்படி விழுந்து கிடந்தவர்களில் துரியோதனன் முதலியவர்களும் இருந்தனர். அர்ச்சுனனும் அவனுக்குத் தேரோட்டியாக இருந்த உத்தரனும் தம் தேரிலிருந்து கீழே இறங்கி வெற்றிக்கு அடையாளமாக எவையேனும் வேண்டும் என்று கீழே விழுந்து கிடந்த துரியோதனன் முதலியவர் களுடைய ஆடையாபரணங்களைப் பறிக்கலாயினர். அந்த ஆடையாபரணங்கள் விராடன் மகளாகிய உத்தரையின் விளையாட்டுப் பொம்மைகளுக்கு ஆகுமென்று எண்ணிக் கொண்டான் அர்ச்சுனன். பறிக்க வேண்டியவற்றைப் பறித்துக் கொண்டு அர்ச்சுனனும் உத்தரனும் தேரில் ஏறிக் கொண்டதும் துரியோதனாதியர்கள் தப்பிப் பிழைத்தால் போதும் என்று எழுந்து ஓட ஆரம்பித்தார்கள். அப்போது தேரின் மேல் நின்று கொண்டே ஓடுகின்ற துரியோதனனின் முடியைக் குறிவைத்து ஒரு கூரிய அம்பைச் செலுத்தினான் அர்ச்சுனன். அந்த அம்பு துரியோதனனின் முடியைத் தாக்கி கீழே மண்ணில் விழுந்து புரளுமாறு உருட்டியது. தலையிலிருந்த முடி கீழே உருண்டதும் துரியோதனன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அர்ச்சுனனன் ‘கலகல'வென்று திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படியாக இகழ்ச்சிச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தான்.
“துரியோதனா! அன்றொரு நாள் எங்கள் மேலாடையை வலுவில் பறித்துக் கொண்டு எங்களைக் காட்டிற்கு அனுப்பினாய். நீ கீழே விழுந்து கிடக்கும்போதே அதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு உன் தலைமுடியைக் காலால் எற்றி விட வேண்டுமென்று எண்ணினேன். ‘விழுந்து கிடக்கும் போது முடியை ஏற்றுவது முறை அல்ல’ என்றெண்ணியே எழுந்திருந்து ஓடியதும் அம்பு எய்தேன். நினைவு வைத்துக் கொள்! பாண்டவர்கள் சக்தி, என்றும் உன்னையும் உன் அரசாட்சியையும் விடப் பெரியது” என்றான்.
ஆத்திரமடைந்த துரியோதனன், “வீட்டுமரே! நிபந்தனைப்படி இவர்கள் அஞ்ஞாதவாச காலத்திற்கு முன்னால் வெளி வந்தது பெரிய தவறு. அதனால் மீண்டும் இவர்கள் வனவாசத்திற்குப் போய்த் தீர வேண்டும்” என்று அடிப்பட்ட வேங்கை போல வீட்டுமரை நோக்கிக் கூறினான். இதைக் கேட்டு அர்ச்சுனன் இரைந்து சிரித்தான்.
“துரியோதனா! நீதான் அறிந்து கொள்ளாமல் மடத்தனமாகப் பிதற்றுகிறாய்! பாண்டவர்களின் அஞ்ஞாத வாசகாலம் நேற்றோடு முடிந்து விட்டது. நிபந்தனைப்படி அவர்கள் இன்று வெளிப்படுவது குற்றமில்லை. ஆகையால் அவர்கள் மறுமுறை வனவாசம் செய்ய வேண்டுவது அநாவசியம்” என்றார் வீட்டுமர். தன் அறியாமைக்கு வெட்கமுற்ற துரியோதனன் மறுபேச்சுப் பேசாமல் படைகளையும் பிறரையும் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். பாண்டவர்கள் நிபந்தனைகளை எல்லாம் கடந்து மீண்டும் வெளி வந்துவிட்டார்களே’ என்ற வயிற்றெரிச்சல் அவனுக்கு ஏற்பட்டிருந்தது. இங்கே வெற்றி வாகை சூடிய அர்ச்சுனனும் உத்தரகுமாரனும், களத்திலிருந்து விராட் நகரத்தை நோக்கிப் புறப்பட்டனர். அதற்குள் தென்பகுதியில் போருக்காகப் போயிருந்த விராட மன்னரும் கங்கர், பலாயனன் முதலியோரும் போரை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வந்திருந்தனர். வட திசையிலிருந்து வரும் வழியில் ஓர் பூஞ்சோலையில் சிறிது நேரம் உத்தரகுமாரனும் அர்ச்சுனனும் தங்கினர். வெற்றிப் பெருமையை எல்லாம் உத்தரகுமாரன் தலையில் சுமத்தி விட்டுத் தான் முன்போலவே பேடிப் பேரில் ஒளிந்து கொண்டு தேரோட்டிச் செல்லலாம் என்று தோன்றியது அர்ச்சுனனுக்கு. அப்படியே செய்யக் கருதி, “பேடியைத் தேரோட்டுபவளாக அமர்த்திக் கொண்டு சென்ற உத்தரகுமாரன் வடதிசையில் துரியோதனாதியர்களை வென்று வாகை சூடி வருகிறான்” என்று தூதுவன் மூலம் அரண்மனைக்கு முன் தகவல் சொல்லியனுப்பினான். ஏற்கனவே தென் திசையிலிருந்து அரண்மனைக்கு வந்திருந்த விராடன், ‘உத்தரன்’ போருக்குப் போயிருக்கிறான் என்பதைத் தன் மனைவி சுதேஷ்ணையிடம் கேள்விப்பட்டு, இருந்த நம்பிக்கையையும் இழந்து போயிருந்தான்.
“உத்தரன் வீரத்தை நான் அறிய மாட்டேனா? அவன் போர் செய்து உருப்பட்டாற் போலத்தான்! போதாக்குறைக்கு ஒரு பேடியை வேறு தேரோட்டக் கூட்டிக் கொண்டு போயிருக்கின்றானாம்” என்று தனக்குள் அலுத்துக் கொண்டான் அவன். அருகிலிருந்து அதைக் கேட்ட கங்கர், “அரசே! நீ வருந்த வேண்டாம். உத்தரனுக்குத் தேரோட்டிக் கொண்டு சென்றிருக்கும் பேடி சாதாரணமானவளல்லள். அவள் நிச்சயம் அவனுக்கு வெற்றியை வாங்கிக் கொடுத்தே தீருவாள்” என்றார்.
சரியாக அதே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல வடக்கே இருந்து வந்த தூதுவர்கள் அரசனுக்கு முன் தோன்றி, “அரசே! பேடியின் சாரத்தியத்துடனே போருக்குச் சென்ற உத்தரகுமாரர் முழு அளவில் வெற்றி வாகை சூடித் திரும்பி வருகிறார்” என்று கூறினர். அரசனால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. ஆனாலும் செய்தி என்னவோ உண்மையாகத்தான் இருந்தது.
“போகிறது. என் மகனும் ஒரு போரில் வெற்றியடைந்து விட்டானென்றால் அது ஆச்சரியத்துக்குரிய நிகழ்ச்சி தான்,” என்று மகிழ்ந்து மகனை ஆடம்பரமாக வரவேற்பதற்கு நகரத்தை அலங்கரிக்குமாறு ஆணையிட்டான் விராடன். “கங்கமுனிவரே! மகிழ்ச்சிக்குரிய செய்திகளே மேலும் மேலும் வந்து கொண்டிருக்கின்றன. மகனுடைய வெற்றித் தேர் இங்கு வந்து சேருகின்றவரை சிறிது நேரம் பொழுது போகச் சூதாடுவோம் வாருங்கள்” என்று விராடன் தருமனை அழைத்தான். தருமனுக்கோ, சூதாட்டம் என்ற சொல்லைக் கேட்டவுடனே ‘பகீர்’ என்றது. அவனுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்த சொல் அல்லவா, அது? தருமன் முதலில் தயங்கினான். விராடன் வற்புறுத்தவே மறுக்க முடியாத நிலையில் அவனோடு சூதாடுவதற்கு அமர்ந்தான்.
ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே விராடன், வேறோரு பேச்சை இடையிலே கிளப்பி வைத்தான், “கங்கரே! உத்தரன் செய்யும் முதற்போரே இது தான். ஆனாலும் எவ்வளவு மகத்தான வெற்றியை அடைந்து விட்டான் பார்த்தீரா?”
“தவறு அரசே! வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது அந்தப் பேடியாகத்தான் இருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை“ -தருமன் அழுத்தமாக இப்படிக் கூறினான். விராடனுக்குக் கோபம் வந்துவிட்டது.
“அதென்ன நான் சொல்கிறேன்! நீர் எதிர்த்துப் பேசுகிறீரே? என் மகன் ஒரு பேடியைக் காட்டிலுமா கேவலமானவன்?”
“அதற்குச் சொல்ல வரவில்லை அரசே பேடியால் தான் வென்றிருக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.”
“நிச்சயமாக நீர் அப்படித்தான் நம்புகின்றீரா?”
“கண்டிப்பாக அப்படித்தான் நம்புகிறேன்” விராடனுக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. கையிலிருந்த சூதாடும் வட்டைப் படீரென்று தருமனின் நெற்றியில் வீசி எறிந்து விட்டான். வேகமாக நெற்றிப் பொட்டில் போய்த் தாக்கிய வட்டு ஆழப் பதிந்து அங்கிருந்து ரத்தம் வரும்படியாகச் செய்து விட்டது. ரத்தம் வடியும் நெற்றியை வலது கையால் அமுக்கிக் கொண்டே விராடனைச் சாந்தம் தவழும் முகத்தோடு ஒரு பார்வை பார்த்தார் கங்கர். அப்போது அந்தப் பக்கமாக வந்த விரதசாரிணி இதைப் பார்த்து விட்டாள். உடனே அவள் தன் புடவை முந்தாணையைக் கிழித்துக் கங்கருடைய நெற்றியில் கட்டுப் போட்டாள். அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விராடன் மனத்தில் திகில் தோன்றிவிட்டது.
“இந்த கங்கர் யாராயிருக்கக் கூடும்? இவர் நெற்றியில் வழியும் இரத்தத்தைக் கண்டு இந்த வண்ணமகள் விரதசாரிணி ஏன் பதறிக் கட்டுப் போட வருகிறாள். முன்னொரு முறை இந்தப் பொண்ணுக்காகக் கீசகன் கொடுமைகளைச் சுட்டி இவர் என்னிடம் பேசினாரே” என்று எண்ணி ஐயமும் கொண்டான். கங்கரிடம் தான் சினத்தால் தகாத முறையில் நடந்து கொண்டு விட்டதாக அவன் உள்ளுணர்வு கூறியது. இவ்வாறிருக்கும்போது உத்தரனும் பேடியும் போர் களத்திலிருந்து வந்து சேர்ந்தனர். யாவரும் அவர்களை வரவேற்பதற்காக அரண்மனை வாயிலுக்குச் சென்றனர். கங்க முனிவரும் சென்றிருந்தார். தேரிலிருந்து இறங்கிய உத்தரனை விராடன் கட்டித் தழுவி வரவேற்றான். தந்தையின் அருகிலே நின்று கொண்டிருந்த கங்கரின் நெற்றியிலே இரத்தக் கறை கண்ட உத்தரன் மனம் பதறி “இது என்ன காயம்? எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டான். விராடன் நாணத்துடன் தலை குனிந்து நிகழ்ந்ததைக் கூறினான். உத்திரன் அதைக் கேட்டுப் பெரிதும் வருந்தித் தந்தையைக் கடிந்து கொண்டான்.
இதன் பிறகு தன் தந்தையை அழைத்துக் கொண்டு தாய் சுதேஷ்ணையைக் காண்பதற்குச் சென்றான். சுதேஷ்ணையின் அந்தப்புரத்தில் தாயும் தந்தையுமாக மகனை அன்புடன் அமர்த்தி உபசரித்து, “போர்க் களத்தில் எப்படி வென்றாயடா மகனே? நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் எங்களுக்குக் கூறு, கேட்பதற்கு ஆவலாக இருக்கின்றோம்” என்றனர். உத்தரகுமாரன் சிரித்துக் கொண்டே அவர்களை நோக்கிக் கூறலானான்:
“தாயே! தந்தையே! நீங்கள் எண்ணுவது போலப் போரில் வெற்றியைப் பெற்றவன் நான் இல்லை. படைகளைக் கண்டதுமே பயந்து ஓடிவந்துவிட முயன்றேன் நான். அப்போது பேடியாக மாறுவேடங்கொண்டு என்னுடன் இருந்த அர்ச்சுனன் நல்ல காலமாக என்னுடைய மானத்தையும் இந்த நகரத்தின் மானத்தையும் காப்பாற்றினான். இன்னொரு இரகசியம் பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியும் இந்த ஓராண்டு காலமாக நமது அரண்மனையிலேயே மறைந்து வசித்து வருகிறார்கள். இதை நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்துவிட்டோம். கங்கர்தாம் தருமர், பலாயனன் தான் வீமன், பேடியாக ஊர்வசியின் சாபத்தால் கிடைத்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு ‘பிருகந்நனை’ -என்ற பெயரோடு இங்கிருந்தவனே அர்ச்சுனன். தாமக்கிரந்தியாகவும், தந்திரி பாலனாகவும் இருந்தவர்களே நகுல சகாதேவர்கள். விரதசாரிணியே திரெளபதி. நாம் மகிழ்ந்து பெருமைப்பட வேண்டிய விஷயம் அல்லவா இது? கூடிய விரைவில் அவர்கள் தங்கள் சுயரூபத்தோடு வெளிப்படுவார்கள். அப்பா! தருமருடைய நெற்றியில் காயப்படுத்தியதற்காக நீங்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்கு என் அசட்டுத்தனத்தால் ஏற்பட விருந்த தோல்வியைத் தடுத்து வெற்றியை உண்டாக்கிக் கொடுத்த அர்ச்சுனனுக்கே என் தங்கை உத்தரையை மணம் செய்து கொடுக்க வேண்டும்” என்றான் உத்தரன்.
விராடன் உடனே கங்க முனிவராக இருந்த தருமனை வரவழைத்து, ‘தான் அறியாமல் செய்துவிட்ட பிழை’யை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். “நான் அதை அப்போதே மன்னித்து மறந்துவிட்டேனே!” என்று சிரித்துக்கொண்டே கூறினான் தருமன். உடனே வீமன், அர்ச்சுனன் முதலிய மற்ற சகோதரர்களையும் வருவித்து மகிழ்ச்சியோடு அவர்களுக்குரிய மரியாதையைச் செய்தான். மறுநாள் காலையில் பாண்டவர்களும் திரெளபதியும் தாம்தாம் கொண்டிருந்த அஞ்ஞாத வாசத்துக்குரிய மாறுவேடங்களை விட்டுவிட்டுச் சுயஉருவை அடைந்தனர். விராடன் காணாத விருந்து வரக் கண்டவன் போலப் பெருமகிழ்ச்சி அடைந்தான். ஏன்? விராட நகரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. தருமனுடைய நெற்றியில் ஏற்பட்டிருந்த வடுவை அர்ச்சுனன் இப்போது தான் பார்த்தான். மனம் பதைத்து, “அது எப்படி ஏற்பட்டது?” -என்று கேட்டான். அருகே நின்று கொண்டிருந்த திரெளபதி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள். அதைக் கேட்ட அர்ச்சுனனுக்கு அடக்க முடியாத சினம் வந்துவிட்டது.
“அப்படியா செய்தான் அந்த விராடன்? என்ன செய்கிறேன் பாருங்கள்! அவனையும் அவன் நகரத்தையும் தீ வைத்துக் கொளுத்தி விடுகிறேன். இந்த வில்லிருந்து புறப்படும் ஒரே ஒரு அம்பினால் விராடன் தலையை அறுத்து வீழ்த்தாவிட்டால் என் பெயர் அர்ச்சுனன் இல்லை” -என்று அர்ச்சுனன் தணிக்க முடியாத ஆக்ரோஷத்தோடு வில்லை நாணேற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டான், வீமனுக்கும் அந்த விஷயம் அப்போது தான் தெரிந்தது. அவனும் பெருஞ்சினம் கொண்டு கதையைத் தூக்கிக் கொண்டு விராடனைத் தாக்குவதற்குக் கிளம்பி விட்டான்.
இருவரையும் தடுத்து நிறுத்திய தருமன் சாந்தமாகத் “தம்பியர்களே! கீழ் மக்களைப் போல நடந்து கொள்ளாதீர்கள். ஒருவர் நம்மைக் கொலை செய்தாற்போன்ற பெருந்துன்பத்தையே நமக்குச் செய்திருப்பினும் அவர் செய்த ஒரே ஒரு சிறு நன்றிக்காவது அவரை நாம் வணங்க வேண்டும். விராடன் எத்தனை துன்பங்களைச் செய்திருந்தாலும் ஓராண்டுக்காலம் நாம் மறைந்து வாழுவதற்கு இடமளித்திருக்கிறான். அந்த நன்றியை நாம் மறக்கக் கூடாது.” விளக்கமாகத் தருமன் கூறிய இந்த அறிவுரையைக் கேட்டு அருச்சுனனும் வீமனும் சினம் நீங்கினர். அப்போது விராடன் தன் அமைச்சர்கள் புடைசூழப் பல பரிசுகளுடனும் காணிக்கைப் பொருள்களுடனும் அங்கே வந்தான். உத்தரகுமாரன், சுதேஷ்ணை முதலியவர்களும் உடன் வந்திருந்தனர். விராட மன்னன் பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். தருமனும் விராடனும் அன்பு மிகுதியினால் ஒருவரை ஒருவர் மார்புறத் தழுவி இன்புற்றனர்.
“விராடா! உன் போல் நற்பண்பு நிறைந்த மன்னர்களை உலகெங்கும் தேடித் திரிந்தாலும் காண்பது அரிது” என்று நன்றி சுரக்கும் உள்ளத்தோடு கூறினான் தருமன்.
“இல்லை இல்லை. அப்படிச் சொல்லாதீர்கள். நீங்கள் என் அரண்மனையில் என்னோடு நான் இன்னார் என்று அறிந்து கொள்ள முடியாமலே ஓராண்டு காலம் தங்கியிருக்கிறீர்கள். இது எனக்குக் கிடைத்த பெறும் பேறு. இதற்காக நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” -என்று உபசாரமாக மறுமொழி கூறினான் விராட மன்னன்.
“உன் அரண்மனையில் தங்கியிருந்தபோது எங்களுக்கு ஒருவிதமான குறைவும் இல்லை. இனியும் இங்கிருந்து வெளியேறிச் செல்கின்ற விசேஷத்தால் எங்களுக்கு யாவும் நலமே நிகழும். இழந்த நாட்டை மீண்டும் பெற்று அரசாளுவோம்” என்றான் தருமன், உடனே விராடனின் புதல்வனான உத்தரன் விராடனைப் போலவே தானும் நன்றி கூறலானான்:
“இந்த விராடநகரம் என்றும் தங்களுக்குப் பணிபுரியக் காத்திருக்கின்றது. எங்கள் படைகள் எந்தச் சமயத்திலும் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றன. என் தங்கை உத்தரையை அருச்சுனன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”
“உத்தரை வயதில் எனக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாதவள். அவள் சிறுமி. அவளை நான் மணம் செய்து கொள்வதற்கு இயலாது. ஒரு வேளை என் மகனுக்கு அவளை மணம் செய்து கொள்ள முடியலாம்” என்று திருமண வேண்டுகோளை அர்ச்சுனன் மறுத்து விட்டான். விராடனும் உத்தரனும் இதைக் கேட்டு முதலில் கொஞ்சம் வருத்தம் உற்றார்கள் என்றாலும் பின்பு மனத்தைத் தேற்றிக் கொண்டார்கள். தருமனின் வேண்டுகோளுக்கிணங்கப் ‘பாண்டவர்கள் வனவாசமும் அஞ்ஞாத வாசமும் முடிந்து சுயமாக வெளிப்பட்டிருக்கிறார்கள்’ என்ற செய்தியை நாடு நகரங்களிலெல்லாம் பரப்பும்படி தூதர்களை அங்கங்கே அனுப்பினான் விராட மன்னன். செய்தியறிந்ததும், முன்பு தருமனை விட்டுப் பிரிந்து சென்ற சிற்றரசர்கள் அவனைச் சந்திப்பதற்காக வந்தார்கள், துவாரகையிலிருந்து கண்ணபிரான், சுபத்திரை, அபிமன்யு, சிவேதன் ஆகியோர் வந்து சேர்ந்தனர். போஜகுலராஜர்கள் சிலரும் வந்தனர். சிவேதன் விராடனுடைய மூத்தமகன். ஒரு போரிலே கண்ணனுக்கு உதவிபுரிவதற்காகச் சென்றிருந்தவன், இப்போது தான் திரும்பி வந்தான். எல்லோரும் மனம் ஒப்பியபடி அர்ச்சுனனுடைய புதல்வனாகிய அபிமன்யு விராடன் மகளாகிய உத்தரையை மணம் புரிந்து கொண்டான். அர்ச்சுனன் எடுத்து வந்தன போக எஞ்சிய ஆயுதங்கள் காளிகோவில் வன்னிமரப் பொந்திலேயே இருந்ததனால் மற்றவர்களும் போய் அவரவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். துரியோதனாதியரிடமிருந்து தங்களுக்குரிய நாட்டை எவ்வாறு மீட்பது என்ற சிந்தனையே அப்போது யாவர் மனத்தையும் ஆட்கொண்டிருந்தது. அதைப் பற்றி யோசிப்பதற்காகக் கண்ணன் முதலியவர்களோடும் உபலாவியம் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர் பாண்டவர்கள்.