மகாபாரதம்-அறத்தின் குரல்/9. களப்பலியும் படைவகுப்பும்

417674மகாபாரதம்-அறத்தின் குரல் — 9. களப்பலியும் படைவகுப்பும்நா. பார்த்தசாரதி

9. களப்பலியும் படைவகுப்பும்

கண்ணனுடைய ஏற்பாட்டின்படி பதினான்காந் திதியாகிய சதுர்த்தசியன்றே முனிவர்களும் பெரியோர்களும் அமாவாசை திதிக்குரிய கிரியைகளையெல்லாம் செய்தனர். பெரிய பெரிய முனிவர்கள் எல்லோருமே இப்படிச் செய்வதைக் கண்டு, “உண்மையில் இன்றைக்குத்தான் அமாவாசையா? அல்லது நாளைக்கா?” -என்று சூரியனுக்கும் பாவ சந்திரனுக்குமே சந்தேகமாகப் போய்விட்டது. சூரியனும் சந்திரனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் சந்தித்து அமாவாசை என்றைக்கு என ஆராய்ந்தனர். அவர்கள் இருவரும் மறுநாள் அமாவாசை திதியில் சந்திக்க வேண்டியதை மறந்து திகைப்பினால் முறைதவறி அன்றைக்கே சந்தித்துவிட்டதனால் அமாவாசையும் அப்போதே சதுர்த்தசி நாளிலேயே உண்டாகிவிட்டது. பாண்டவர்கள் இதைக் கண்டு திகைத்து வியந்தனர்.

“தருமா! என் மாயத்தினால் உனக்கு வாக்களித்த படியே அமாவாசையை ஒரு நாள் முன்பே வரவழைத்து விட்டேன். துரியோதனன் பாவம்! நாளைக்குத்தான் அமாவாசை என்றெண்ணிக் கொண்டு பேசாமலிருப்பான். போரில் யார் முதல் முதலில் களப்பலி கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி. தயங்காமல் இன்றைக்கே துரியோதனனை முந்திக் கொண்டு உன் சார்பில் நீ களப்பலி கொடுத்து விட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்!”

“நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் யாரைக் களப்பலி கொடுப்பது?” -தருமன் கேட்டான். அவன் இதைக் கேட்கும்போது அரவானும் அருகில்தான் இருந்தான். அவன் ஏற்கனவே துரியோதனனுக்கு வாக்களித்திருந்ததனாலும், சிறிதும் இரக்கமின்றி, “நீ உன் உயிரைக் களப்பலியாகக் கொடு!” -என்று கேட்பதற்கு அச்சமாக இருந்ததனாலும் பாண்டவர்கள் அவனிடம் கேட்காமலிருந்தனர். அரவானாக வலுவில் முன்வந்து ஏற்றுக் கொள்வான் என்று எதிர்ப்பார்த்தார்கள். அதுவும் வீணாயிற்று. அரவானை வழிக்குக் கொண்டு வருவதற்குக் கண்ணன் ஒரு நாடக மாடினான்.

“சரி தருமா! களப்பலியாக முன்வருவதற்கு இங்கு எல்லோருமே தயங்குகிறார்கள் போலிருக்கின்றது. உங்களுக்காக நான் தயார்! இதோ, எனது இந்த உடலை உங்கள் வெற்றிக்காகப் பலி கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்கவில்லை. உங்கள் நன்மை பெரிது! என் உயிர் அதற்கு முன் சாமானியமான பொருள்!” -என்று கண்ணன் இவ்வாறு கூறவும் பாண்டவர்கள் வெலவெலத்துப் போனார்கள். அவர்கள் உடலும் உள்ளமும் ஒருங்கே நடுங்கின.

“கண்ணா! என்ன வார்த்தை கூறினாய்? உன்னைப் பலி கொடுத்துப் பெறப் போகிற வெற்றியை விட இப்போதே அடைகின்ற தோல்வி போதும் எங்களுக்கு. நீ இல்லாதபோது எங்களுக்குப் போர் எதற்கு? வெற்றி எதற்கு? அரசாளும் உரிமைதான் எதற்கு? எங்களைச் சோதிக்காதே! நாங்கள் இப்போதே போர் எண்ணத்தைக் கைவிட்டு விடுகிறோம்” என்று கண்ணன் திருவடிகளில் விழுந்து கதறினான் தருமன். கண்ணன் தனது மாய நாடகத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

அவனது நாடகம் அவன் எதிர்பார்த்த பலனைக் கொடுத்தது. கண்ணனின் விழிகள் அரவானை ஊடுருவி நோக்கின. அரவானின் விழிகள் கண்ணீரால் நனைந்திருந்தன. அவன் கண்ணனையும் தருமனையும் நோக்கி, “இதோ நான் இருக்கிறேன். என்னைக் களப்பலி கொடுங்கள். களப் பலியாவதற்கென்று அன்றே என் தலையில் எழுதியிருக்கிறது. துரியோதனனுக்குக் களப்பலியாவதாக ஏமாந்து போய் நேற்றே வாக்குக் கொடுத்தேன். இன்றைக்கு நீங்கள் களப்பலி கொடுக்காவிட்டால் எப்படியும் நாளைக்கு அவன் என்னைக் களப்பலி கொடுத்து விடுவான். அமாவாசையன்று பலியாவதாக வாக்குக் கொடுத்தேன் அவனுக்கு இன்று தான் அமாவாசை. ஆனால் என்னைப் பலி கொடுக்க அவன் இன்னும் வரவில்லை. குறிப்பிட்ட நல்லவேளை தவறிவிடக் கூடாது. அவன் பலியாக்க வேண்டிய உடலை நீங்கள் பலியாக்கிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை” -என்று கூறினான்.

“எதற்கு அப்பா உனக்கு வீண் சிரமம்? பாண்டவர்களுக்காக நானே பலியாகி விடுகிறேன். நீ துரியோதனனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்று” -என்று கண்ணன் மீண்டும் போலிச் சோக நடிப்பு நடித்தான்.

“இல்லை! நீ போருக்கு உறுதுணைவனாக உயிருடன் இருந்து பாண்டவர்களுக்கு எல்லா உதவியும் செய்து வெற்றியை வாங்கிக் கொடு. பலியாக வேண்டிய பாக்கியம் எனக்கே இருக்கட்டும். அதோடு எனக்கு ஒரு வரத்தையும் கொடு! பலியாக வேண்டும் என்ற ஆசையோடு, மற்றோர்புறம், பாண்டவர்களும் கெளரவர்களும் செய்யும் இந்தப் போரை உயிரோடிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும் என் மனத்தில் அகலாமல் நிறைந்து நிற்கிறது. அதனால் இன்று இன்னும் சிறிது நேரத்தில் நான் களப்பலியாகி இறந்து போய் விட்டாலும் பின்பு போர் தொடங்கியதும், உயிர்பெற்றுச் சில காலம் போர்க்களக் காட்சிகளையும் காண்பதற்கு வேண்டிய வரத்தை எளியவனாகிய என் பொருட்டு நீ வழங்க வேண்டும்” -என்று அரவான் நீரொழுகும் கண்களோடு வேண்டினான். அரவானின் வேண்டுகோளுக்குக் கண்ணன் இணங்கினான். அதற்கு வேண்டிய வரத்தையும் தருவதாக ஒப்புக் கொண்டான். அரவான் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டான்.

இரவு நேரம் வந்தது. அமாவாசை இருட்டு மைக்குழம்பெனக் கவிந்து உலகைக் கருமையில் மூழ்க அடித்திருந்தது. பாண்டவர்களின் ஜன்மபூமி குருநாடு அல்லவா? இரவோடிரவாக எவரும் அறியாமல் அரவானையும் அழைத்துக் கொண்டு தங்கள் ஜன்மபூமிக்குச் சென்றனர் பாண்டவர். தாங்கள் பரம்பரையாக வணங்கி வந்த காளி கோவிலுக்குச் சென்று நீராடிய ஈரம் உலராத ஆடையோடு அரவானைப் பலிபீடத்தில் நிறுத்தினர். களப்பலியாகப் போகிறவன் யாரோ அவன், தானே தன் கைவாளால் தன்னுடைய தலை முதலிய உறுப்புக்களை அறுத்து காளிதேவிக்கு முன் படைக்க வேண்டுமென்பது வழக்கம். பாண்டவர்கள் ஐவரும் கூப்பிய கரங்களுடன் தேவியைத் தியானிக்கிற பாவனையில் கண்களை இறுக மூடிக்கொண்டு மோனத்தில் இலயித்தனர். அரவான் மலர்ந்த முகத்தோடு இடைவாளை உருவிக் கையில் எடுத்துக் கொண்டான். மறுவிநாடி அவன் வலக்கை வாள் நுனியை அவனது கழுத்தை நோக்கியே கொண்டு போயிற்று. விநாடிகள் கழிந்தன. பலிபீடத்தில் பசுங் குருதி பாய்ந்து வழிந்து ஓடியிருந்தது. சிதறி அறுபட்டுக் கிடந்த அரவானின் உடலுறுப்புக்களுக்கிடையே வாளும் ஒரு மூலையிலே கிடந்தது. பாண்டவர்கள் ஈரம் கசியும் விழிகளின் துயரச் சுவடுகளைத் துடைத்துக் கொண்டே மேலே நிகழவேண்டிய தெய்வக் கடன்களைச் செய்தனர். ஐந்து பேரும் தனித்தனியே யானை, குதிரை முதலிய சில விலங்குகளையும் பலி கொடுத்தனர். குலதெய்வமான காளிதேவியை வெற்றி நல்குமாறு வேண்டிக் கொண்டு கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். ‘களப்பலி’ என்ற பெயரில் நிறைவேற வேண்டிய அந்தப் பயங்கரமான சடங்கு நிறைவேறிவிட்டது. படைகளை இருபுறமும் அணிவகுத்து, போர் தொடங்க வேண்டியதுதான் எஞ்சி நின்றது. மறுநாள் உதவியாக வந்திருந்த அரசர்களும் படைகளும் தங்கியிருந்த இடத்தில் பாண்டவர்களும் கண்ணனும் மற்ற மன்னர்களும் கூடிப் படைகளைப் பிரித்து அணிவகுப்பது பற்றிச் சிந்தித்தனர். பாண்டவர்கள், கெளரவர்கள் இருசாராரும் எதிர்த்துப் போர் செய்யத்தக்க போர்க்களமாகக் ‘குருட்சேத்திரம்’ என்ற மிகப்பெரிய வெளியைத் தேர்ந்தெடுத்திருந்தனர். தங்கியிருந்த இடத்திலிருந்து நால்வகைப் படைகளையும் போருக்கேற்ற முறையில் வரிசையாக அணிவகுத்துப் போர்களத்திற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது. கண்ணன், பாண்டவர்கள் சார்பில் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டிருந்த சிவேதனைக் கூப்பிட்டுப் படைகளை அணிவகுத்துக் களத்திற்கு நடத்திக் கொண்டு போக வேண்டிய பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தான். தேர்ப்படையில் முன்னணி நின்று போரிடுகின்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ‘அதிர தாதிபர்கள்’ -என்று பெயர். புதிய படை வகுப்புத் திட்டத்தின்படி சிவேதன், வீமன், அர்ச்சுனன், அபிமன்யு ஆகிய நால்வரும் முன்னணித் தேர்ப்படையினராக நியமனம் பெற்றனர். அதிராதிபர்களுக்கு அடுத்தபடி பெருந்தேர்களில் இருந்து போர் புரியக்கூடியவர்களுக்கு மகாரதாதிபர்கள் என்று பெயர். சிகண்டி, சாத்தகி, துட்டத்துய்ம்மன், விராடன், தருமன் ஆகிய ஐந்து பேரும் மகாரதாதிபர்களாக நியமனம் பெற்றனர். மகாரதாதிபர்களுக்கு அடுத்த வரிசையில் நின்று போர் செய்யக்கூடியவர்களுக்குச் சமராதிபர்கள் என்று பெயர். சமராதிபர்களுக்கும் அடுத்த வரிசையில் நிற்பவர்களுக்கு அர்த்தரதாதிபர்கள் என்று பெயர். நகுலன், சகாதேவன், கடோற்கசன் ஆகிய மூவரும் அர்த்தரதாதிபர்களாக நியமனம் பெற்றனர்.

இங்கு இவ்வாறு போர் ஏற்பாடுகளும் அணிவகுப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருந்தபோது முன்பு துரியோதனாதியர் பக்கம் சேருவதாக முடிவு செய்திருந்த பலராமன் திடீரென்று மனம்மாறி “நான் இந்தப் போரில் இருவர் பக்கமும் சேரப் போவதில்லை. இருபக்கமும் எனக்கு வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் இந்தப் போர் முடிகிறவரை நானும் விதுரனோடு தீர்த்த யாத்திரை போய்விட்டு வரத் தீர்மானித்திருக்கிறேன்” -என்று கூறிவிட்டு விதுரனுடன் புறப்பட்டுவிட்டான். பலராமன் மனம் மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவன் கண்ணன். “கண்ணன் பாண்டவர்களுக்கு வேண்டியவனாக இருந்து உதவிகள் புரிந்து வரும்போது நாம் கெளரவர்கள் பக்கம் சேர்ந்து போரிடுவது நல்லதல்ல” -என்றெண்ணியே பலராமன் மனம் மாறினான். பலராமனின் இந்தத் திடீர் மாற்றம் துரியோதனாதியர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் பாண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் கொடுத்தது. தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை என்று நான்கு வகையாகப் பிரித்து அணி வகுக்கப் பட்ட பாண்டவர்களின் சேனை ஏழு அக்குரோணி எண்ணிக்கை பெற்றது. அணிவகுப்பு, வரிசை முறைப் பிரிவுகள், எல்லாம் முடிந்த பின் சிவேதன் படைகளைக் குருகுலப் போர்க்களம் நோக்கி நடத்திச் சென்றான். ‘திமுதிமு’ என்று ஆரவாரித்துப் பொங்கும் கடல் ஒன்று பெருகிக் புரண்டு செல்வது போன்ற பேரோசையுடன் படை நடந்தது. எக்காளங்களின் ஒலி, முரசங்களின் ஒலி, சங்கங்களின் ஒலி என்று படைவீரர்களிடமிருந்து கிளம்பிய வாத்தியங்களின் ஓசை வேறு விண்வெளியை அதிரச் செய்தது. வாள்களும், வேல்களும், மேகத்தைக் கிறுகிற மின்னல் துணுக்குகள் போல மின்னின. அந்தப் படையைத் தரையின் மேல் நடந்து வருகின்ற ஒரு பிரம்மாண்டமான புருஷாகாரத்துக்கு ஒப்பிடலாம். அந்தப் புருஷாகாரத்தின் பிராணன் கண்ணன்! மார்பு தருமன்! முகாரவிந்தம் சிவேதன்! அருச்சுன்னும் வீமனும் தோள்கள்! நகுலனும் சகாதேவனும் கண்கள்! படையூடே வருகின்ற சிறந்த அரசர்கள் யாவரும் அந்தப் பேருருவத்தின் மற்ற உறுப்புகளாக விளங்கினர். யானைகளும் குதிரைகளும், தேர்களும், கொடிகளுமாகக் காலாட்களோடு சென்று கொண்டிருந்தது பாண்டவர்களின் படை என்ற அந்தப் பேருருவம். பாண்டவர்களின் படை ஏற்பாடுகள் இவ்வாறிருக்க, அங்கே துரியோதனாதியர்களின் படை ஏற்பாடுகளும் அணிவகுப்புகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று பார்க்க வேண்டாமா?

திடீரென்று சற்றும் எதிர்பாராதவிதமாக இரட்டை ஏற்பாடுகள் ஏமாற்றங்களில் முடிந்துவிட்டன. அவர்களுக்கு. வில்லை ஒடித்துப் போட்டுவிட்டுத் தீர்த்த யாத்திரை கிளம்பிய விதுரனோடு பலராமனும் கிளம்பி விட்டானே என்பது முதல் ஏமாற்றம். களப்பலிக்குச் சம்மதித்திருந்த அரவானை முதல்நாளே பாண்டவர்கள் களப்பலி கொடுத்துவிட்டார்களே என்பது இரண்டாவது ஏமாற்றம், ஏமாற்றம் தாங்க முடியாத நிலையில் அவன் வீட்டுமனை நோக்கி, “வீட்டுமரே! இந்தப் பாண்டவர்கள் சுத்தப் பயந்தாங்கொள்ளிகளாக அல்லவா இருப்பார்கள் போலிருக்கிறது? நாம் களப்பலிக்காகப் பார்த்து வைத்திருந்த ஆளை நமக்கு முன்பே வஞ்சகமாகப் பலி கொடுத்து விட்டார்களே! எப்படிப் பார்த்தாலும் அவர்கள் நம்முடைய நிலைக்கு மிகவும் தாழ்ந்தவர்களே” -என்று கூறினான் துரியோதனன்.

“அதிருக்கட்டும் அப்பா! மேலே செய்ய வேண்டிய காரியத்தைக் கூறு” -என்றான் வீட்டுமன்.

“செய்ய வேண்டியதென்ன? நம்முடைய படைகளைத் தக்க முறையிலேயே அணிவகுத்துப் புறப்படச் செய்யுங்கள். அதுதான் செய்ய வேண்டியது” -என்று கட்டளையிட்டான் துரியோதனன். வீட்டுமன் உடனே படைகளை வரிசை முறைப்படி அணிவகுத்து நிறுத்தத் தொடங்கினான். முன்னணித் தேர்ப்படையினராக, வீட்டுமன், துரோணர், அசுவத்தாமன் , பூரிசிரவா ஆகியோர் நின்றனர். மகாரதாதிபர்களாகச் சோமவரதத்தன், பகதத்தன், துன்மருஷணன் ஆகிய மூவரும் நின்றனர். சமராதிபர்களாக, கிருதவன்மனும், கிருபனும், சகுனியும் நின்றனர். இப்படி வீட்டுமன் படைகளை அணிவகுத்துக் கொண்டிருந்தபோதே கர்ணன் கண்கள் நெருப்பைக் கக்கின. அவன் நெஞ்சு ஆத்திரத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. தன்னையும் தன்னுடைய வீரத்தையும் மதித்து முன்னணித் தேர்ப்படையினராகிய அதிரதத்தலைவர்களில் ஒருவராக வீட்டுமன் தன்னைத் தேர்ந்தெடுப்பான் என்று எதிர்ப்பார்த்தான் கர்ணன். ஆனால் வீட்டுமனோ கர்ணனையும் அவனது வீரத்தையும் இலட்சியமே செய்ததாகத் தோன்றவில்லை. அதிரதாதிபர், மகாரதாதிபர், சமரதாதிபர் என்ற மூன்று அணிவகுப்புக்களிலும் வீட்டுமன் கர்ணனுடைய பெயரைப் பிரஸ்தாபிக்காமலே இருந்து விட்டான். கடைசியில் மிகவும் பின்னணிப் படையாகிய அர்த்தராதிபர்களில் கர்ணனை முதல்வனாக நியமித்துப் படைத்தளபதியாகிய வீட்டுமன் கட்டளை பிறப்பித்தான். அதைக் கேட்டானோ இல்லையோ, அதுவரை பேசாமல் இருந்த கர்ணன் கோபம் பொங்கிடக் குமுறியெழுந்தான். 

“ஏ கிழவா! உன்னைப் படைத் தலைவனாக நியமித்து கர்வத்தினால் தானே நீ இப்படிச் செய்கிறாய்? வேண்டுமென்றே என்னை அவமதிக்க வேண்டும் என்று இப்படிக் கடைசிப் படையில் நியமிக்கின்றாய் போலும்! இப்போது எனக்கு இருக்கின்ற ஆத்திரத்தில் உன்னை அப்படியே கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாம் போலத் தோன்றுகிறது. கையாலாகாத வெறும் கிழவனாகிய உனக்கு எவ்வளவு திமிர் இருக்கிறது?” -என்று கர்ணன் பேசிய விதத்தைப் பார்த்தால் அவன் உண்மையிலேயே வீட்டுமன் மேல் பாய்ந்து விடுவான் போலிருந்தது. நல்லவேளையாகத் துரியோதனன் அவனை நெருங்கி நயமாகவும் இதமாகவும் சில சொற்களைக் கூறிச் சமாதானப்படுத்தினான்.

“ஆயிரமிருந்தாலும் படைத்தலைவரென்று அவரை நியமித்து விட்டோம்! நல்லதோ, கெட்டதோ அவர் கூறுகிறபடி கேட்பதுதான் சிறந்தது. எல்லா விவரமும் தெரிந்த நீயே இப்படி ஆத்திரப்பட்டால் என்ன செய்வது? என் சிநேகிதத்துக்காகவாவது பொறுத்துப் போகலாகாதா? உனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது நான் சொல்ல?” என்று துரியோதனன் கூறவும் கர்ணன் சமாதானமடைந்தான்.

படைகளின் நடுவே மதிப்பிற்குரிய அரசர்களுக்கு மத்தியில் கர்ணன் தன்னை அவமதித்ததை வீட்டுமனால் பொறுக்க முடியவில்லை! துரியோதனன் கர்ணனைச் சமாதானப்படுத்தி விட்டு வந்தவுடன் வீட்டுமன் ஆத்திரத்தோடு அவனை நோக்கி ஒரு சபதம் செய்தான் -“துரியோதனா! இந்த நிகழ்ச்சி என் மனத்தையும் என் எண்ணங்களையும் மாற்றி விட்டது. படைத்தலைமை வகிக்க ஒப்புக் கொண்ட குற்றத்திற்காக அதை மட்டும் கைவிடத் தயங்குகின்றேன். இந்தப் போரில் நான் ஆயுதமெடுத்து சண்டை செய்யமாட்டேன். ஒதுங்கி நின்று அணிவகுப்பு யோசனைகளை மட்டுமே கூறுவேன். இது என் சபதம். இப்படி ஒரு கொடிய சபதத்தை வலுவில் கூறுகிற அளவிற்கு என் மனத்தைப் புண்படுத்தி விட்டது சற்றுமுன் நடந்த நிகழ்ச்சி” -என்று வீட்டுமன் இப்படிக் கூறிவிட்டு வில்லைக் கீழே எறிந்து விட்டான்.

“தவறாக நடந்துவிட்ட நிகழ்ச்சிக்காக என்னை மன்னித்துவிடுங்கள். அதற்காக இந்தச் சபதம் வேண்டாம், நீங்களில்லாத போர் என்ன போர்?” -என்று மன்றாடினான் துரியோதனன்.

“இல்லை அப்பா! நான் சபதம் செய்தது செய்தது தான். இனி அதை மீட்பதற்கில்லை” -வீட்டுமன் உறுதியிலிருந்து தளர மறுத்துவிட்டான். கடைசிக் கட்டத்தில் வேறென்ன செய்வது? படைகள் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டன. சபதப்படியே ஆயுதமில்லாமல் வெறுங்கையோடு தான் சென்றான் வீட்டுமன். துரியோதனன், கர்ணன் முதலியவர்களும் அணிவகுப்பு முறைப்படியே சென்றனர். பதினொரு அக்குரோணி அளவுள்ள கெளரவசேனை பேராரவாரத்தோடு களத்தை நோக்கி நடந்தது. குருகுலக் களத்தில் பாண்டவர் படைகளும் கௌரவர் படைகளுமாகப் பதினெட்டு அக்குரோணிப் படைகள் நின்றன. ஒரே படை வெள்ளம். இந்த மாபெரும் போரினால் ஈரேழு பதினான்கு புவனங்களும் என்ன ஆகுமோ என்று யாவரும் கலங்கினர். இவ்வளவு படைகள் நிறைந்த போர்க்களத்தை இதற்கு முன் கண்களால் பார்த்திராத துரியோதனன் நடுநடுங்கிப் பதறும் குரலுடன் வீட்டுமனை நோக்கி, “இவ்வளவு படைகளுமாகப் போரிட்டு யார் யாரால் எப்போது இந்த யுத்தத்தின் முடிவு தெரியுமோ?” என்று மலைத்துப் போய்க் கேட்டான்.

“முடிவு தெரியாமலென்ன? நான் எதிர்த்துப் போரிட்டால் இங்கு கூடியிருக்கும் பதினெட்டு அக்குரோணிப் படைகளையும் அழித்து ஒருநாள் பகற் போதுக்குள் முடிவு காட்டுவேன். துரோணர் போரிட்டால் மூன்று பகற் போதுக்குள் முடிவு காட்டுவார். கர்ணன் ஐந்து நாள் போரிட்டால் முடிவு காணமுடியும். துரோணர் மகன் அசுவத்தாமன் போரிட்டால் இவைகளை அழித்து ஒரே ஒரு நாழிகைக்குள் முடிவு காட்டுவான். நம் படைக்கு எதிராக அதோ பாண்டவர் படையில் முன்னணியில் நிற்கிறானே அருச்சுனன், அவன் மனம் வைத்தால் ஒரே ஒரு கணத்தில் எல்லாவற்றுக்கும் முடிவு காட்டி விடுவான்” என்று வீட்டுமன் துரியோதனனுக்கு மறுமொழி கூறினான். துரியோதனன் அது கேட்டு மலைத்துப் போய்ச் சிலையாகி நின்றான்.

(உத்தியோக பருவம் முற்றும்)