மகுடபதி/அந்தகாரம்
எட்டாம் அத்தியாயம் - அந்தகாரம்
இருட்டறைக்குள் இருந்த மகுடபதிக்கு ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையெல்லாம் நன்றாய்க் காதில் விழுந்தன. குரலிலிருந்து, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொண்டான். செந்திரு கொஞ்சமும் பயப்படாமல் பேசிய தீரம் நிறைந்த மொழிகள் அவனுடைய காதில் விழுந்த போதெல்லாம், அவனுக்கு மயிக்கூச்செறிந்தது. அந்தச் சமயம் செந்திரு சாதாரணப் பெண்ணாகவே அவனுக்குத் தோன்றவில்லை. காவியங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப்படும் வீர நாரீமணியாகவே தோன்றினாள். இவளுக்காக ஓர் உயிரை அல்ல, நூறு உயிர் ஒருவனுக்கு இருந்தால் அவ்வளவையும் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஓடைக் கரைக் காட்சியும், அங்கே அவளுக்கு, தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தன. அந்த வாக்குறுதியை இத்தனை நாளும் நிறைவேற்றாமலிருந்ததை எண்ணி அப்போது வெட்கத்தினால் அவனுடைய உள்ளம் குன்றியது. அதற்கெல்லாம் இப்போது பரிகாரம் செய்து விட வேண்டுமென்றும் இந்த இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் உறுதி கொண்டான். இப்பேர்ப்பட்ட ஆபத்தான சமயத்தில் தன்னை அந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்த தெய்வச் செயலை எண்ணி அதிசயித்தான். இப்படியெல்லாம் பலவித எண்ணங்கள் அவனுடைய உள்ளத்தைக் குழப்பினவே தவிர, செந்திருவை எப்படி இவர்கள் கையிலிருந்து தப்புவிப்பது என்பதற்கு மட்டும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
இந்த நிலைமையில்தான் தங்கசாமிக் கவுண்டர் பிரம்பினால் செந்திருவை அடிக்க, அவள் வீரிட்ட குரல் மகுடபதியின் காதில் விழுந்தது. பிறகு அவனால் அந்த இருட்டறையில் சும்மா இருக்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான்.
அறைக்குள்ளிருந்து ஓடிவந்த மகுடபதியைப் பார்த்ததும், தங்கசாமிக் கவுண்டருக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் கோபத்தையும் சொல்லத் தரமல்ல. "இதெல்லாம் நிஜமாக நடப்பவைதானா? இந்திரஜாலக் கனவா?" என்று சந்தேகப்பட்டவர் போல், அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார்.
"தங்கசாமி! நான் சொன்னபோது நீ நம்பவில்லை. இப்போது தெரிந்து கொண்டாயா! சிநேகிதப் பெண்ணைப் பார்க்க வந்தது என்பதெல்லாம் பொய் என்று தெரிகிறதா?..." என்றார் கார்க்கோடக் கவுண்டர்.
தங்கசாமிக் கவுண்டரின் கண்களில் தீப்பொறி பறந்தது. "பாவி, என்ன காரியம் செய்தாய்? குலத்தைக் கெடுக்கவா நீ வந்தாய்?" என்று சொல்லி அவர் மறுபடியும் செந்திருவை நோக்கிப் பிரம்பை ஓங்கினார்.
அப்போது சில நிமிஷநேரம் அந்த ஹாலில் பெருங்குழப்பம் உண்டாயிற்று.
மகுடபதி ஓடி வந்து, தங்கசாமிக் கவுண்டருடைய கைப்பிரம்பைப் பிடிக்க முயன்றான். பெரியண்ணன் குறுக்கே வந்து, மகுடபதியைப் பிடித்து இழுத்தான். "பாட்டா! நீ சும்மா இரு. ஒரு பேடி ஒரு சிறு பெண்ணைப் பிரம்பால் அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு நிற்கிறாய். என்னையும் சும்மா இருக்கச் சொல்கிறாயா?" என்று மகுடபதி சொல்லிக்கொண்டே, பெரியண்ணனிடமிருந்து திமிற முயன்றான். பெரியண்ணன் அவனை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் கட்டிக் கொண்டு கீழே விழுந்தார்கள். பெரியண்ணனுடைய தலை அரிக்கன் லாந்தர் மீது படாரென்று மோதிற்று. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்து அவிந்தது. ஒரு நிமிஷம் அந்த ஹாலில் இருள் சூழ்ந்தது.
செந்திரு, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள்.
பளிச்சென்று டார்ச் லைட்டின் வெளிச்சம் அடித்தது. கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்துதான் டார்ச் லைட் பிரகாசித்தது. வெளிச்சம் பெரியண்ணன் - மகுடபதியின் மேல் விழுந்தது. பெரியண்ணன் பிரக்ஞையற்றுக் கிடந்தான். மகுடபதி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
கார்க்கோடக் கவுண்டரின் கர்ண கடூரமான குரல், "தங்கசாமி! அந்தப் பையனை சோபா காலோடு சேர்த்துக் கட்டு" என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.
பெரியண்ணன் கீழே பிரக்ஞையற்றுக் கிடப்பதைப் பார்த்து செந்திரு அலறிக் கொண்டு அவன் அருகில் வந்து முகத்தை உற்று நோக்கினாள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த மகுடபதியைக் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டுவந்து சோபாவின் காலோடு சேர்த்து கட்டினார்கள். மகுடபதி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி ஒன்றும் பலிக்கவில்லை.
செந்திரு பெரியண்ணனுடைய மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தபின், மூச்சு வருவது தெரிந்ததும், கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. முகத்தில் தெளிக்கத் தண்ணீர் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தாள். மகுடபதி சோபாவின் காலில் கட்டுப்பட்டிருப்பதையும் அவன் பக்கத்தில் இரண்டு கவுண்டர்களும் நிற்பதையும் கண்டாள். கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்த டார்ச் லைட் கட்டுப்பட்டிருந்த மகுடபதியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மகுடபதியின் அழகிய முகம் அப்போது மிகவும் பயங்கரத் தோற்றமடைந்திருந்தது. அளவில் அடங்காத கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் அவன் முகத்தின் நரம்புகள் எல்லாம் புடைத்திருந்தன. நெடிய பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. கண்கள் தணலைப் போல் சிவந்திருந்தன.
"பேடிகளா! என்னை ஏன் கட்டிப் போடுகிறீர்கள்? ஆண் பிள்ளைகளாயிருந்தால் கட்டை அவிழ்த்து விடுங்கள் - இப்படிப்பட்ட அக்கிரமங்களை ஏன் செய்கிறீர்கள்? ஆஹா! இந்தப் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியைப் போன்ற உத்தமரும் பிறந்தார் - உங்களைப் போன்ற பாதகர்களும் பிறந்திருக்கிறார்களே!..." என்றான் மகுடபதி.
"அடே! நிறுத்தடா, உன் அதிகப் பிரசங்கத்தை!" என்று சீறினார் கார்க்கோடக் கவுண்டர். மேலும் ஏளனம் செய்யும் குரலில் அவர் கூறினார்:
"மகாத்மா காந்தியினுடைய அந்தரங்க சிஷ்யனல்லவா நீ? அதனால் தான் மைனர்ப் பெண்ணைத் திருட்டுத்தனமாய் அழைத்துக் கொண்டு ஓடப்பார்த்தாயாக்கும்!... ஆஹா! நல்ல காந்தி சிஷ்யன், அப்பா! தங்கசாமி! எங்கே பிரம்பை எடு! இன்றைக்கு இவன் சிநேகிதர்கள் கடைத் தெருவில் சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கினார்கள். இவன் மட்டும் அவர்களுக்குக் குறைந்து போகலாமா? அப்புறம் காந்தி மகாத்மா இவனைப்பற்றிக் குறைவாக எண்ணிக் கொள்ளமாட்டாரா?... சேச்சே! எங்கே அந்தப் பிரம்பை எடு!"
தங்கசாமிக் கவுண்டர் அப்போது பிரம்பை எடுத்துக் கார்க்கோடக் கவுண்டர் கையில் கொடுத்தார்.
இதுவரையில் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு, "சித்தப்பா! அவர்மேல் ஒரு குற்றமும் இல்லை. அவர் என்னை அழைத்து வரவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் சிநேகியைப் பார்க்க நானாகத்தான் வந்தேன். பாட்டன், கடுதாசிகூடக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தான். அவரை விட்டுவிடுங்கள். அவரை விட்டுவிட்டால், இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன். அவரை ஏதாவது செய்தீர்களோ, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுவேன்" என்று சொல்லிக் கொண்டு செந்திரு ஜன்னல் பக்கம் போனாள்.
"தங்கசாமி! அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோட கட்டு!" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.
செந்திரு எவ்வளவோ திமிறியும் பயன்படவில்லை. தங்கசாமிக் கவுண்டர் அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டார்.
கார்க்கோடக் கவுண்டர் சொன்னார்: "தங்கசாமி! காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. இரண்டில் ஒன்று உடனே தீர்ந்துவிட வேண்டும். இந்தப் பையன் இரண்டு விஷயத்துக்குச் சம்மதிக்கிறானா என்று கேள். மைனர்ப் பெண்ணைக் கடத்தி வந்த குற்றம் செய்ததாகவும், மன்னிக்கும்படியும் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிமேல் கள்ளுக்கடைப் பக்கம் போவதில்லை. மதுவிலக்குப் பிரசாரம் செய்வதில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். மகாத்மா காந்திமேல் ஆணை வைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். சம்மதிக்கிறானா, கேள்!"
மகுடபதியின் காதில் இது விழுந்ததும், அவன் பொங்கிக்கொண்டு கத்தினான்: "ஒரு நாளும் மாட்டேன். உயிர்போனாலும் மாட்டேன். என்னை என்னவேணுமானாலும் செய்யுங்கள். அந்தப் பெண்ணை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தீர்களோ, நீங்கள் செய்து வரும் அக்கிரமக் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் எழுதி, உங்கள் பெயர் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்றான்.
கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தார்.
"ஓகோகோ! அப்படியா சேதி? - இதுதான் கடைசி வார்த்தையா, கேட்டுவிடு தங்கசாமி!" என்றார்.
இடுப்பிலிருந்து ஒரு பெரிய பேனாக் கத்தியை எடுத்தார். அதன் மடலைப் பிரித்து டார்ச் லைட்டுக்கு நேரே பிடித்தார். கத்தியின் மடல் பளபளவென்று மின்னிற்று. அதன் விளிம்பு கூராயிருக்கிறதா என்று கவுண்டர் விரலால் தடவிப் பார்த்தார்.
செந்திருவுக்கு அடிவயிற்றை என்னமோ செய்தது. அவள் என்னவெல்லாமோ பேச வேண்டுமென்று நினைத்தாள். கூச்சல் போட விரும்பினாள். ஆனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து பேச்சு வரவில்லை; சத்தம் போடக்கூட முடியவில்லை.
கார்க்கோடக் கவுண்டர் ஒருகையில் டார்ச் லைட்டுடனும், ஒரு கையில் பிரித்த கத்தியுடனும் மகுடபதியை நெருங்கினார். "அடே! என்னடா சொல்கிறாய்?" என்று கர்ஜித்துக் கொண்டு கத்தியை ஓங்கினார்.
மகுடபதிக்கு அச்சமயம், "இதெல்லாம் நிஜமல்ல - கனவு கண்டு கொண்டிருக்கிறோம்" என்ற பிரமை உண்டாயிற்று. அவன் அண்ணாந்து, ஓங்கிய கத்தியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஓங்கிய கத்தி கீழே வரத் தொடங்கியது. அந்த வினாடியில் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. பெரியண்ணன் குறுக்கே ஓடிவந்து விழுந்தான். (சற்று முன்னால் மூர்ச்சை தெளிந்து அவன் இந்தக் கோரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.) கவுண்டரின் கத்தி, பெரியண்ணன் வலது மார்பண்டை ஆழமாய்ப் பதிந்தது. அவன் "ஆ" என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவனுடைய வாய் ஏதோ முணுமுணுத்தது. கார்க்கோடக் கவுண்டர் கீழே குனிந்து அதைக் கவனித்தார். "இரகசியம் ... இரகசியம் ... இத்தனை நாளாய் ... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. உடனே பெரியண்ணனுடைய தலை சாய்ந்தது; பேச்சு நின்றது.
கார்க்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டை நாலு புறமும் சுழற்றினார். செந்திரு மூர்ச்சையடைந்திருப்பதையும், அவளுடைய தலை தொங்குவதையும் கண்டார். பிரமித்து நின்ற தங்கசாமிக் கவுண்டரைப் பார்த்து, "ஏனப்பா, இப்படி நிற்கிறாய்? அவளுடைய கட்டை அவிழ்த்துத் தூக்கி கொண்டு போய்க் காரில் போடு, அவள் மூர்ச்சையானதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் ரொம்ப ரகளை செய்திருப்பாள்" என்றார்.
தங்கசாமிக் கவுண்டர் மறு வார்த்தை சொல்லாமல், செந்திருவைத் தூக்கிக்கொண்டு போனார்.
அவர்கள் போனதும், கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் டார்ச் லைட்டைக் கட்டுண்ட மகுடபதியின் மேலும், குத்துப்பட்டுத் தரையில் கிடந்த பெரியண்ணன் உடல் மீதும் செலுத்தினார். பயங்கரமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.
"அடே! 'ஜெயிலுக்குப் போகவும் தூக்குமேடை ஏறவும் தயார்' என்று ஆயிரம் கூட்டங்களில் பேசி வந்தாயல்லவா? இப்போது ஜெயிலுக்குப் போகலாம்; அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்" என்று அவர் சொன்னது கனவில் கேட்பது போல் மகுடபதியின் காதில் விழுந்தது.
அடுத்த நிமிஷம் கார்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டுடன் மச்சுப்படி இறங்கச் சென்றார்.
ஹாலில் அந்தகாரம் சூழ்ந்தது.