10. பெருமாளிகை நிகழ்ச்சிகள்

ன்பங்களும், வசதிகளும், கோநகரப் பெருவாழ்வின் சுக்போகங்களும் ஒன்றுகூடி நிறைவு பெற்ற பட்டினப்பாக்கத்து வீதிகளின் வழியே இளங்குமரன் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமந்து சென்றார்கள். தரையகன்ற ஆறு போல் வழியகன்ற பெரு வீதிகளின் இருபுறமும் உயர்ந்த மாடங்களோடு கூடிய மாளிகைகள் தோன்றின. பொதிய மலைக்கும் இமய மலைக்கும், பழமையான பூம்புகார் நகரத்துக்கும் அடுக்கடுக்காக வளங்கள் பெருகுவதல்லது ஒடுக்கமோ, நடுக்கமோ நிகழ்வதில்லை என்று சான்றோர்கள் புகழ்ந்து பாடியிருப்பதை உறுதிப்படுத்துவது போல் காட்சியளித்தன பட்டினப்பாக்கம் என்னும் அகநகரத்து அழகுகள். போகங்கள் பெருகிப் புகழ் நிலைபெறும் பூம்புகாரின் வளங்களெல்லாம் சேர்ந்து திகழும் செல்வம் மலிந்த பாக்கம் இது. திருமகள் விரும்பி உறையும் பொன்னான பகுதியும் இதுதான்.

அரசர், அமைச்சர்கள், ஐம்பெருங்குழுவினர், எண் பேராயத்தார், அளவிலடங்காத செல்வம் படைத்த வணிகர்கள், மறையோர்கள் முதலியோரெல்லாம் இந்தப் பட்டினப்பாக்கத்து வீதிகளில்தான் வசித்து வந்தார்கள் பெரு நிலக்கிழாராகிய வேளாளர்கள், மருத்துவர்கள், சோதிடர்கள் போன்றோரும் பட்டினப்பாக்கத்து வாசிகளேயாவர். பெருவீதிகளின் திருப்பங்களில் எல்லாம் வண்ண வண்ணக் கொடிகள் பறக்கும் தேர்கள், அங்கங்கே அழகுற அலங்கரிக்கப் பெற்று நின்றன. தங்கள் இல்லங்களில் நிகழவிருக்கும் மண விழாக்களுக்கோ, வேறு பல மங்கல நிகழ்ச்சிகளுக்கோ, பிறரை அழைக்கச் செல்லும் பெருஞ் செல்வ நங்கையர்கள் யானைகள் மேல் அம்பாரிகளில் அமர்ந்து மணிகள் ஒலிக்குமாறு சென்று கொண்டிருந்தனர். வீரர்களும், வேறு பலரும் அலங்கரிக்கப் பெற்ற குதிரைகளில் ஏறி வீதிகள் நிறையச் சென்று கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். எல்லா இடங்களிலும் அகன்றும், ஒரே அளவாயும் இருந்த வீதிகளில் விண்தொட நிமிர்ந்த வியன்பெரு மாளிகைகளின் மேல் மாடங்களிலிருந்து கிளிகளும், மணிப் புறாக்களும் பறந்து செல்வதும், வந்து அமர்வதுமாகக் காட்சியளித்தன. பட்டினப்பாக்கத்து வீதிகளுக்கு இயற்கையாகவே பொருந்தியிருந்த இந்த அழகுகளை இந்திர விழாவும் வந்து சேர்ந்து இருமடங்காக்கியிருந்தது. வீதிகளில் எல்லாம் விழாவுக்காகப் பழைய மணல் மாற்றிப் புது மணல் பரப்பியிருந்தார்கள். வாழையும் கமுகும் கரும்பும் நாட்டி வஞ்சிக் கொடிகளையும், மற்றும் பல பூங்கொடிகளையும் தோரணமாகக் கட்டியிருந்தார்கள். மங்கல நிறை குடங்களும் பொன்னாலாகிய பாவை விளக்குகளும் வீடுகளின் முன்புறங்களில் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு முன்புறத் தூண்களில் ஒளிக்கதிர் விரித்துக் குளிர் சுடர் பரப்பும் முத்துமாலைச் சரங்களைத் தோரணங்களாகக் கட்டியிருந்தார்கள். சில இடங்களில் சித்திரப் பந்தல்களும் போட்டிருந்தார்கள்.

மாரிக்காலத்தே புதுவெள்ளம் வந்து ஆறுபோல் வீதிகள் நிறைவாகவும், கலகலப்பாகவும் இருந்தன. ஆனால் பல்லக்கில் அமர்ந்திருந்த இளங்குமரன் உள்ளத்தில் இவற்றையெல்லாம் பார்க்கப் பார்க்கத் தாழ்வுணர்ச்சி தான் அதிகமாயிற்று. அவனுக்கு எதிரே வீற்றிருந்த ஓவியனோ அரும்பெரும் புதையலைக் கண்டெடுத்த ஏழைபோல் பல்லக்குக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்து மகிழும் தாகத்தோடு வீதிகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். முன்னால் சுரமஞ்சரி என்னும் அந்தப் பெண்ணின் பல்லக்கும் அதைத் தொடர்ந்து இரண்டாவதாக இளங்குமரனும் ஓவியனும் இருந்த பல்லக்குமாகச் சென்று கொண்டிருந்தன. இரண்டு பல்லக்குகளின் முன்புறமும் ஆலவட்டம், சித்திரப்பட்டுக்குடை, தோரணம் முதலிய சிறப்புப் பரிவாரங்கள் சென்றதனால் இவர்கள் வீதியையும் வீடுகளையும் பார்த்தது போக, வீதியிலும் வீடுகளிலுமிருந்து இவர்களைப் பலர் வியப்போடு பார்த்தனர். அரச குடும்பத்துக்கு ஒப்பான பெருஞ்செல்வக் குடியினர் யாரோ பல்லக்கில் போகிறார்கள் போலும் என்ற வியப்பு அவர்களுக்கு.

பல்லக்கில் போகும்போது இளங்குமரனும், ஓவியன் மணிமார்பனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு அதிகமாக வாய்ப்பு நேரவில்லை. நாளங்காடியிலிருந்து புறப்பட்டுச் சிறிது தொலைவு வந்ததும், “பூதசதுக்கத்தில் படையலிட்டபின் உங்களுக்கும் எனக்கும் எள்ளுருண்டை கொண்டு வந்து கொடுத்தாளே, அந்தப் பெண் யார் ஐயா?” என்று ஓவியன் தற்செயலாகக் கேள்வியெழுப்பின போதுதான் இளங்குமரனுக்கு முல்லையின் நினைவு வந்தது. அதுவரை முல்லைக்குக் துணையாகவேதான் அங்கு வந்திருந்தோம் என்ற நினைவு அவனுக்கு இல்லை. அவன் அதை முற்றிலும் மறந்தே போயிருந்தான்.

‘ஆகா! என்ன தவறு செய்து விட்டேன்? முல்லை உடன் வந்தது எனக்கு எப்படி, மறந்து போயிற்று? புறப்படும் போது அந்தக் கிழவர் வீரசோழிய வளநாடுடை யார் என்மேல் சந்தேகப்பட்டது சரிதான் என்பது போலல்லவா நடந்து கொண்டு விட்டேன்! முல்லை யார் துணையோடு இனிமேல் வீட்டுக்குப் போவாள்? நாளங்காடிச் சந்தியில் தனியாக நின்று திண்டாடப் போகிறாளே’ என்று எண்ணி இளங்குமரன் தன்னை நொந்து கொண்டாலும், அவனால் உடனடியாகப் பல்லக்கிலிருந்து இறங்கி நாளங்காடிக்கு ஓடிப் போய்விடத் துணிய முடியவில்லை. எதிரே உட்கார்ந்திருக்கும் ஓவியனுக்கு வாக்களித்த உதவியைச் செய்யாமல் இறங்கிப் போவது பாவம் என்று எண்ணினான் அவன். முல்லை ‘எப்படியாவது தானாகவே வீட்டுக்குப் போய் விடுவாள்’ என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறொன்றும் செய்ய அப்போது அவனுக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த மனக் குழப்பத்தால் ‘முல்லை யார்’ என்று ஓவியன் கேட்ட கேள்விக்குப் பதிலும் கூறவில்லை அவன். அந்த நிலையிலும் மேலும் தூண்டித் தூண்டிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் இளங்குமரனுக்குக் கோபம் உண்டாகுமோ என்று பயந்து தான் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வராமலிருந்தும் மேலே ஒன்றும் கேளாமல் மௌனமாக இருந்துவிட்டான் மணிமார்பன்.

இதன் பின்பு இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல் பட்டினப்பாக்கத்து வீதிகளைப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். பட்டினப்பாக்கத்தின் சிறப்பான வீதி ஒன்றில் புகுந்து அதன் தொடக்கத்தில் வானளாவிக் காட்சியளித்த ஏழெடுக்கு மாளிகையின் பிரதான வாயிலில் நுழைந்து பல்லக்குகளும் பரிவாரங்களும் நின்றன். சுரமஞ்சரியின் தோழி வசந்தமாலை மாளிகைக்குள்ளே போய் இரண்டு இரத்தினக் கம்பள விரிப்புகளை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்தாள். மிக நீளமான அந்த விரிப்புக்களைப் பல்லக்குகள் நின்ற இடத்திலிருந்து மாளிகையின் உட்புறத்துக்கு ஏறிச் செல்லும் முதற் படிக்கட்டுவரை நடைபாவாடையாக இழுத்து விரித்தாள் வசந்தமாலை. அந்தப் பெருமாளிகையின் நடைமுறைகளும், உபசார வழக்குகளும் இளங்குமரனையும் ஓவியனையும் வியப்படையச் செய்தன. இரத்தினக் கம்பள விரிப்புக்களில் கால் வைத்து நடப்பதற்கு வசதியாகப் பல்லக்குகள் இறக்கி வைக்கப்பட்டன. இளங்குமரனும் ஓவியனும் அந்த விரிப்பின் அழகையும் மென்மையையும் பார்த்து அதில் கால் வைத்து இறங்கலாமா கூடாதா என்று கூச்சத்தோடு பல்லக்கிலேயே இருந்துவிட்டனர். அந்த மாளிகையைக் கண்டதும் தாழ்வு மனப்பான்மையும் அதனோடு தோன்றும் ஆற்றாமையின் சினமும் இளங்குமரனுக்கு உண்டாயிற்று.

தன் அன்னமென்னடைக்குப் பொன் அனைய கால் சிலம்பு தாளமிடப் பூங்கரத்து வளைகளெல்லாம் ஒலி பொங்கச் சுரமஞ்சரி பல்லக்கினுள்ளேயிருந்து இறங்கி விரிப்பின் மேல் கால் வைத்து நடந்தாள். நடந்து வரும்போதே பிறழ்ந்து பிறழ்ந்து சுழலும் கெண்டைமீன் விழிகளால் இளங்குமரனும் ஓவியனும் இன்னும் பல்லக்கினுள்ளேயே தங்கி வீற்றிருப்பதை அவள் பார்த்துக் கொண்டாள்.

“வசந்தமாலை! அவர்கள் இன்னும் பல்லக்கிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், பார். நீ போய் இறக்கி அழைத்துக் கொண்டு வா” என்று தோழியை நோக்கிக் கட்டளை பிறந்தது.

வசந்தமாலை அவர்கள் பல்லக்கின் அருகில் சென்று விநயமான குரலில் பணிவோடு அழைத்தாள்.

“ஐயா, இறங்கி வாருங்கள். உள்ளே போகலாம்.”

இளங்குமரன் இறங்கி நடந்தான். ஆனால் வேண்டுமென்றே விரிப்பிலிருந்து விலகித் தரையில் நடந்தான். அவர்கள் அப்படிச் செய்யும்போது தான் மட்டும் விரிப்பில் நடந்து போவது நன்றாயிராது என்று எண்ணி இரண்டாவதாகப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிய மணிமார்பனும் இளங்குமரனைப் பின்பற்றித் தரையில் நடந்தான்.

இளங்குமரனின் தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் பார்த்தால் பேசுவதற்கு அச்சமும் தயக்கமும் ஏற்பட்டது வசந்தமாலைக்கு. ஆனாலும் அவற்றை நீக்கிக் கொண்டு, “ஐயா, விரிப்பின் மேல் நடந்து வாருங்கள், விரிப்பு உங்களுக்காகத்தான் விரித்திருக்கிறது" என்று மெல்லக் கூறினாள் அவள். எடுத்தெறிந்து பேசுவதுபோல்இளங்குமரனிடமிருந்து பதில் வந்தது அவளுக்கு. தனக்கே பன்மை மரியாதை கொடுத்துப் பேசினான் அவன்.

“பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்...”

இளங்குமரனின் இந்த மறுமொழியைக் கேட்டு முன்னால் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த சுரமஞ்சரி. திரும்பினாள், சிரித்தாள். சற்றே நின்று தலையை அழகுறச் சாய்த்து இளங்குமரனைப் பார்த்தாள். அந்த மயக்கும் நகையும் மகிழ்ச்சிப் பார்வையும் இளங்குமரன் முகத்தில் ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை. உடனே தான் வந்த வழியே திரும்பி நடந்து இளங்குமரனுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டு “உங்களை யாருடைய வழியிலும் நாங்கள் அடங்கி நடக்கச் சொல்லவில்லை. எங்கள் வேண்டுகோளை மறுக்காமல் இரத்தினக் கம்பளத்தில் மிதித்து நடந்து வாருங்கள். கால்களுக்கு மென்மையாகப் பூப்போலிருக்கும்!” என்று கூறி முறுவல் பூத்தாள் சுரமஞ்சரி. அவள் சிரிக்கும்போது அவளுடைய மூக்குத்தியின் ஒளி மிகுந்த வைரக்கற்களும் சேர்ந்து சிரிப்பது போலிருந்தது. அப்போது அந்த மூக்குத்தியில் நுண்ணியதொரு அழகும் பிறந்தது.

அவள் அருகில் வந்து தன்னிடம் இவ்வாறு கூறியதும் நடந்து கொண்டிருந்த இளங்குமரன் நின்றான்.

“அம்மணி! என்னுடைய பாதங்களைப் பற்றி நீங்கள் அதிகக் கவலை கொள்ள வேண்டாம். காவிரிப்பூம்பட்டினத்துக் கரடு முரடான பகுதியெல்லாம் சுற்றிச் சுற்றி வைரம் பாய்ந்த கால்கள் இவை. இந்தக் கால்களுக்கும் இவற்றிற்கு உரியவனின் மனத்துக்கும் எப்போதும் விரிந்த நிலத்தில் விரும்பியபடி நடந்துதான் பழக்கம். முழங்கையகல நடைபாவாடையில் முன்பின் நகரவோ, விலகவோ, இடமின்றி நடந்து பழக்கமில்லை! பழக்கப்படுத்திக் கொள்ளவும் இனிமேல் விருப்பமில்லை. அதற்கு அவசியமுமில்லை.”

“அழகுக்காகவும் சுகபோக அலங்காரங்களுக்காகவும் சில மென்மையான பழக்க வழக்கங்களை நீங்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.”

“இருக்கலாம்! ஆனால் எனக்குத் தெரியாது. அழகைப் போற்றத்தான் எனக்குத் தெரியும். அழகைக் காலடியில் மிதித்துச் சுகம் காண முயல்வதும் எனக்குப் பிடிக்காது. அழகு நம்மைக் காலடியில் போட்டு மிதித்து அடிமையாக்க முயல்வதற்கும் நான் இடங்கொடுப்பதில்லை அம்மணி! அழகையே அடிமையாக்கவும் கூடாது. அழகுக்கே அடிமையாகவும் கூடாது. தேவையா, தேவையில்லையா, அவசியமா, அவசியமில்லையா என்று சிந்தித்துப் பாராமலே பொருத்தமின்றி எத்துணையோ சுகபோக அலங்காரங்களைப் பட்டினப்பாக்கத்துப் பெருஞ்செல்வர்கள் அனுபவிக்கிறார்கள். அவற்றை மதித்து வரவேற்க ஒருபோதும் என் மனம் துணிவதில்லை.”

“இந்த மாளிகையைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்களையும் புதிதாக வருபவர்களையும் வரவேற்பதற்கென்றே இங்கே சில உபசார முறைகள் இருக்கின்றன. அவற்றைப் புறக்கணிக்கலாகாது!”

“உங்கள் உபசாரங்களை ஏற்றுக் கொள்வதற்கு தான் இந்த மாளிகையின் விருந்தினனாக வரவில்லை, அம்மணி! இதோ என் பக்கத்தில் நிற்கிறானே, இந்த ஏழை ஓவியனுக்கு நூறு பொற்கழஞ்சுகள் கிடைக்க வேண்டு மென்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். ஓவியம் வரைந்து நிறைவேறியதும் நான் போக வேண்டும்.”

“அவ்வளவு அவசரமா உங்களுக்கு?”

“அவசரமில்லாத எதுவுமே என் வாழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை அம்மணி! என் வாழ்க்கையே ஒரு பெரிய அவசரம். என்னைத் தேடி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஓர் அவசரம். நான் தேடிக் கொண்டு போகும் செயல்களும் அவசரம் என்னுடைய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாழிகையும், ஒவ்வொரு விநாடியும் எனக்கு அவசரம்தான், நானே ஓர் அவசரம்தான். தயைகூர்ந்து விரைவாகப் படத்தை வரைந்து கொண்டு என்னை அனுப்பும்படி, செய்தால் நல்லது.”

“உங்களிடம் நிதானம் குறைவாயிருக்கிறது. பொறுமை சிறிதுமில்லை. பதற்றம் அதிகமாக இருக்கிறது.”

“தெரிந்து சொல்லியதற்கு நன்றி! ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லித் திருத்தத் தகுதி வாய்ந்த பெரியவர்கள் எனக்கு இருக்கிறார்கள். நீங்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் காரியத்தைப் பார்க்கலாம்.”

அவளுக்கு இளங்குமரன் சுடச்சுடப் பதில் கூறினான். எத்துணை முறை சிரித்துச் சிரித்துப் பேசினாலும் தன்னைப் பற்றிய நளினமான நினைவுகளை அவன் மனத்தில் பயிர் செய்ய முடியுமென்று தோன்றவில்லை சுரமஞ்சரிக்கு. இளங்குமரன் அழகுச் செல்வனாக இருந்தான். ஆனால் அந்த அழகு நிலத்தில் அவள் இறைக்க முயன்றும் குன்றாமல் அகம்பாவம் ஊறிக் கொண்டிருந்தது. அது வற்றினால் அல்லவா அங்கே அவள் பயிர் செய்யத் துடிக்கும் இனிய உறவுகளைப் பயிர் செய்ய முயலலாம்? சுரமஞ்சரி அவனிடம் தனக்கு ஏற்பட்ட ஆற்றாமையை வெளிக் காட்டிக் கொள்ளாமல், “வசந்தமாலை! இவரை வற்புறுத்தாதே. எப்படி விரும்புகிறாரோ அப்படியே நடந்து வரட்டும்” - என்று சொல்லி விட்டு வேகமாக முன்னே நடந்தாள். இளங்குமரன் தன் போக்கில், மணிமார்பன் பின் தொடரக் கம்பீரமாக வீரநடை நடந்து சென்றான். மாளிகையைச் சூழ்ந்திருந்த பூம்பொழிலில் மயில்கள் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தன. புள்ளிமான்கள் துள்ளித் திரிந்து கொண்டிருந்தன. சிறுசிறு பொய்கைகளில் அல்லியும் கமலமும், குவளையும், நிறையப் பூத்திருந்தன. அழகுக்காக மரஞ்செடி கொடி வைத்துச் செயற்கையாகக் கட்டப்பட்டிருந்த செய் குன்றுகள் அங்கங்கே பூம்பொழிலினிடையே இருந்தன. மணிமார்பனோடு பூம்பொழிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த இளங்குமரன், “மணிமார்பா! இங்கேயே ஓரிடத்தில் நான் நின்று கொள்கிறேன். நீ ஓவியத்தை நிறைவு செய்யத் தொடங்கு. நமக்கு மாளிகைக்குள் என்ன வேலை? இங்கே வைத்தே படத்தை முடித்துக் கொடுத்து விட்டுப் புறப்படலாம்” என்றான்.

மணிமார்பனும் அதற்கு இணங்கி நாளங்காடியில் இருந்தது போலவே, இங்கே இந்தச் சோலையிலும் ஒரு கொடி முல்லைப் புதரைத் தேடி அதனருகே இளஙகுமரனை நிறுத்தி வரையலானான்.

அவன் வரையத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் சுரமஞ்சரி அங்கு வந்தாள். ‘அடடா! செல்வம் இருந்தால் எவ்வளவு வசதியிருக்கிறது. அதற்குள் உடைகளையும் அலங்காரங்களையும் மாற்றிக் கொண்டு புதுமைக் கோலத்தில் காட்சியளிக்கிறாளே’ என்று அவளைப் பார்த்ததும் இளங்குமரன் நினைத்தான். ‘முல்லைக்கு இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொள்ள வாய்ப்பிருந்தால் அவள் இன்னும் எவ்வளவு அழகாக இருப்பாள்?’ என்றும் கற்பனை செய்து பார்க்க முயன்றது அவன் மனம்.

ஆனால் அடுத்த கணம் சுரமஞ்சரி அவனை நோக்கிக் கேட்ட கேள்வி திடுக்கிட்டுத் தூக்கிவாரிப் போடச் செய்தது. ஓவியனும் திடுக்கிட்டான். இருவரும் அளவற்ற திகைப்பு அடைந்தார்கள். அவள் கேட்டது இதுதான்: “ஐயோ! நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களை யார் உள்ளே வரவிட்டது? படம் எழுதிக்கொள்ள இவ்வளவு பெரிய பட்டினத்தில் வேறு இடமா கிடைக்கவில்லை?” என்று சினத்தோடு கேட்டாள் அவள்.

‘ஒருவேளை அவள் சித்த சுவாதீனமில்லாத பெண்ணோ?’ என்று சந்தேகங்கொண்டு இளங்குமரனும் மணிமார்பனும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தனர். முகத்தையும் பேச்சையும் பார்த்தால் அப்படியில்லை என்று உறுதியாகத் தெரிந்தது, வேண்டுமென்றே தன்னைப் பழிவாங்கும் நோக்குடன் வம்பு செய்கிறாளோ என்றெண்ணிக் கொதிப்படைந்த இளங்குமரன், ‘செல்வர்களுக்கு உடை மாறினால் குணமும் மாறிவிடுமோ அம்மணி?’ என்று சூடாகக் கேட்க வாய் திறந்தான். ஆனால் அப்போது அவனை அதைக் கேட்க விடாதபடி எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/010-039&oldid=1149487" இலிருந்து மீள்விக்கப்பட்டது