18. உலகத்துக்கு ஒரு பொய்!

த்திரமடைந்து துரத்திக் கொண்டு வந்த கூட்டத்தினரிடமிருந்து வீர சோழிய வளநாடுடையார் தப்பி விட்டார். துரத்தி வந்தவர்கள் சிறிது நேரம் காளிகோவில் சுற்றுப் புறங்களில் தேடிப் பார்த்துவிட்டு, அப்பாலுள்ளவை மயானப் பகுதிகளாதலால் அங்கே நுழைந்துபோக அருவருப்பும் கூச்சமும் கொண்டு, வந்த வழியே திரும்பிவிட்டார்கள். அவர்கள் திரும்பிச் செல்கிறவரை மௌனமாய், மூச்சுவிடுகிற ஒலிகூட இரைந்து கேட்டுவிடாமல் இருளில் மறைந்திருந்த முனிவரும் வளநாடுடையாரும் சற்றே வெளிப் பக்கமாக நகர்ந்து வந்து காளிகோவில் குறட்டில் எதிரெதிராக உட்கார்ந்துகொண்டார்கள். சோகம் மிகுந்து நாத்தழுதழுத்துத் துக்கம் விசாரிக்கிற குரலில் பேச்சை ஆரம்பித்தார் வளநாடுடையார்.

“முனிவரே! உங்களுடைய தவச்சாலை முழுதும்...”

“நெருப்பு வைக்கப் பெற்று அழிந்து போய்க் கொண்டிருக்கிறதென்பதைத் தெரிந்து கொண்டுதான் இந்தக் காளி கோவிலில் இருட்டில் உட்கார்ந்திருக்கிறேன். தவச்சாலை எரிந்ததனால் எனக்கு ஒன்றும் இழப்பே இல்லை. அங்கிருந்து என்னென்ன பொருள்களை நெருப்புக் கிரையாகாமல் காத்துக் கொண்டு வர வேண்டுமோ அவற்றை நான் கொண்டு வந்து விட்டேன். உடையாரே, இதோ பாருங்கள், தவச்சாலையில் எரி மூள்வதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பே நானும் இந்தப் பொருள்களும், அங்கிருந்து சுகமாகத் தப்பி இந்த இடத்துக்கு வந்தாயிற்று.”

இவ்வாறு கூறிக் கொண்டே அந்தக் கோயிலின் இருண்ட மூலையிலிருந்து சுவடிகள், மான்தோலாசனம், கமண்டலம், யோகதண்டம் முதலிய பொருள்களையெல்லாம், ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தார் முனிவர்.

“தவச்சாலைக்கு யாரோ தீ வைக்கப் போகிறார்களென்று உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் போலிருக்கிறதே, முனிவரே?”

“ஆகா! தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும். யார் எதற்காக என்ன நோக்கத்துடன் தீ வைக்க வரப் போகிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியும் உடையாரே. எந்த நாழிகையில் நெருப்பு வைக்க வருவார்களென்பதும் தெரியும். அதனால் தானே உங்கள் இல்லத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்தேன்.”

“முனிவரே! நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள் முன்பே தெரிந்திருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்துவிட்டீர்களே! என்னிடம் சொல்லியிருந்தால் எப்படியாவது முன்னேற்பாடு செய்து இது நடக்காமல் காத்திருக்கலாமே?”

“இருக்கலாம்! ஆனால் இதுதான் நடக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கும்போது நீங்கள் எப்படி இதைத் தடுக்க முடியும்? இன்று என்னுடைய தவச்சாலை தீப்பற்றி எரியாமற் போயிருந்தால்தான் நான் வருத்தப்பட நேர்ந்திருக்கும். அப்படியில்லாமல் அது அடியோடு எரிந்து போனதில்தான் எனக்குப் பெரு மகிழ்ச்சி.”

இதைக் கேட்டு, முனிவர் தம் நினைவோடுதான் பேசுகிறாரா அல்லது மனம் வெறுத்துப் போய் இப்படிப் பிதற்றுகிறாரா என்று புரியாமல் திகைத்துப் போய் விட்டார் வளநாடுடையார்.

“உங்களைத் தேடிக்கொண்டுதான் நானும் தவச்சாலைக்கு வந்தேன். அங்கே சுவடி விரித்தபடியிருந்தது, தீபமும் எரிந்து கொண்டிருந்தது. ஆகையால் நீங்கள் உள்ளேதான் இருப்பீர்களென நினைத்தேன்”— என்று தொடங்கித் தவச்சாலையில் நிகழ்ந்தவற்றையும் தாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ஆட்களால் துரத்தப்பட்டதையும் முனிவருக்கு விரிவாகச் சொன்னார் வளநாடுடையார். எல்லாவற்றையும் கேட்டு விட்டு முனிவர் சிரித்தார்.

“துடைத்து வைத்தாற்போல் எல்லாவற்றையும் ஒழித்துக்கொண்டு வந்து விட்டால் தவச்சாலையில் யாருமே இல்லை என்று நெருப்பு மூட்ட வந்தவர்கள் நினைத்துக் கொண்டு பேசாமல் திரும்பிப் போயிருப்பார்கள். உள்ளே நான் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பாவனைக்காக அந்தச் சுவடியையும், தீபத்தையும் அப்படி வைத்து விட்டு வந்தேன். தீ வைத்தவர்கள் நான் தவச்சாலைக்குள்ளேயிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கி மாண்டு போக வேண்டுமென்பதற்காகத்தான் இந்தச் செயலிலேயே இறங்கினார்கள். இப்போது அவர்கள் அப்படி நினைத்து நான் தீயில் மாண்டுவிட்டதாக மகிழ்ந்து கொண்டுதான் போயிருப்பார்கள். அவர்கள் அப்படி நினைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தான் எனக்கும் ஆசை!”

“இது என்ன குரூரமான ஆசை? நீங்கள் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நீங்கள் உயிருடன் இருக்கும் போது தீயில் சிக்கி இறந்ததாக எல்லாரும் எதற்காக நினைக்க வேண்டும்? அதனால் உங்களுக்கு என்ன ஆக்கம்?”

“நிறைய ஆக்கம் இருக்கிறது உடையாரே! இத்தகையதொரு பொய்யான செய்தி உடனே மிக அவசியமாக அவசரமாக ஊரெங்கும் பரவவேண்டும். நான் உயிரோடிருப்பதாக வெளியுலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுடைய உயிருக்குப் பகைகள் நெருங்கிக் கொண்டேயிருக்கும். நான் உயிரோடில்லை என்று உலகம் ஒப்புக் கொள்ளும்படி செய்துவிட்டால் இளங்குமரன் உயிரோடியிருப்பதற்கு விட்டுவிட அவனறியாமலே அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பகைவர்கள் முன் வரலாம்.”

“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை! ஒரே குழப்பமாயிருக்கிறது. உங்கள் தவச்சாலைக்குத் தீ வைக்க வந்தவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமானால் எனக்கு ஏன் சொல்லக் கூடாது. நீங்கள் உயிருடனிருப்பது உலகத்துக்குத் தெரிகிற வரையில் இளங்குமரனுக்குப் பகைவர்கள் ஏற்படும் என்கிறீர்கள்! இதுவும் எனக்குத் தெளிவாக விளங்கவில்லை. மேலும் தவச்சாலையில் நெருப்புக்கு இரையாகாமல் நீங்கள் தப்பி வந்து இங்கே உயிரோடிருப்பதை நான் ஒருவன் பார்த்துத் தெரிந்து கொண்டு விட்ட பின்பு உங்களால் எப்படி உலகத்தை ஏமாற்ற முடியும்?”

“முடியும்! உங்களை என்னுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்படச் செய்துவிடலாம் என்று நான் நம்புவது சரியானால் நிச்சயமாக உலகத்தை ஏமாற்றிவிட முடியும். இன்று இரவு இரண்டாம் சாமத்தில் பூம்புகாரிலிருந்து மணிபல்லவத்துக்குப் புறப்படும் கப்பலில் ஏறி யாரும் அறியாமல் சென்றுவிடலாமென்று நினைக்கிறேன். நான், நேற்று முன் தினம் படைக்கலச் சாலையில் நீலநாக மறவரைச் சந்தித்து இளங்குமரனைப் பற்றி சில பொறுப்புகளை அவர் ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறேன். ஆயினும் நாளைக் காலையில் நான் தீயில் மாண்டு போனதாகச் செய்தி பரவும்போது நீலநாக மறவரும் அதை மெய்யெனவே நம்புவார். எவரும் மெய்யென்று நம்புவதற்கு ஏற்றாற்போலத்தான் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன். உண்மையில் நான் சாகவில்லை என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். விண்மகள் மண்மகள் சாட்சியாய்க் காலம் வருகிறவரை இந்த உண்மையை இளங்குமரன், உட்பட எவருக்கும் சொல்வதில்லை என்று இப்போது நீங்கள் எனக்குச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.”

“இந்த சத்தியத்தை நான் செய்து கொடுக்க மாட்டேனென்று மறுத்தால்...?”

“மறுத்தால் வேறு வழியில்லை, மெய்யாகவே நான் இறந்துபோக வேண்டியதுதான். சக்கரவாளக் கோட்டத்துப் பூதம் நின்ற வாயிலின் மேலே ஏறிப் பூதச் சிலையின் உச்சியிலிருந்து கீழே குதித்து ஊரறிய உயிரை விடுவேன், ஏனென்றால் எனக்கு என் உயிரைவிட இளங்குமரன் உயிர் பெரிது” என்றார் அருட்செல்வ முனிவர்.

இந்தக் குரலின் உறுதியைக் கேட்டபின் முனிவர் இப்படிச் செய்யத் தயங்கமாட்டார் என்று வளநாடுடையாருக்கு நன்றாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

“முனிவரே! இளங்குமரனுக்குக்கூட நீங்கள் உயிரோடிருப்பது தெரியக் கூடாதென்கிறீர்களே?” என்றார் வீரசோழிய வளநாடுடையார் வியப்புடன்.

“அப்படியல்ல, ஒரு குறிப்பிட்ட காலம் வருகிறவரை அவனுக்கு இது தெரிய வேண்டாம். அப்புறம் நானே தக்க சமயத்தில் தக்க ஆள் மூலம் உங்களையும் அவனையும் நான் இருக்குமிடத்துக்கு வரவழைத்து உங்கள் இருவரிடமும் இப்போது நீங்கள் தெரிந்து கொள்ளத் தவிக்கும் சில உண்மைகளைச் சொல்வதற்கு நேரிடும். அந்தச் சமயத்தில் ‘நான் இறக்கவில்லை’ என்று இளங்குமரனும் தெரிந்து கொள்ளலாம். அது வரையில் அவனுக்கும் இது தெரியாமலிருப்பதே நல்லது.”

“அந்தச் சமயம் எப்போது வருமோ, முனிவரே?”

“அநேகமாக அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் புத்த பௌர்ணமிக்குள் அந்த நல்ல சமயம் வாய்க்கலாம்.”

“இத்தனை வயதுக்குமேல் இந்த முதுமைக் காலத்தில் என்னை ஒரு பொய்யைக் காப்பாற்றுவதற்காகச் சத்தியம் செய்யச் சொல்லுவது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? இது அடுக்குமா முனிவரே...?”

“பொய் மெய் என்பதற்கு நான் இன்று காலை உங்களிடம் கூறிய விளக்கத்தை நினைத்துக் கொள்ளுங்கள். உடையாரே! பின்பு நன்மை பயப்பதற்குக் காரணமான பொய்யும் மெய்தான்! நீங்கள் செய்யப் போகும் இந்தச் சத்தியத்தினால் இரண்டு உயிர்களைக் காப்பாற்றும் புண்ணியத்தை அடைகிறீர்கள்...”

மறுபேச்சுப் பேசாமல் முனிவருடைய வலது கையில் தமது வலது கையை வைத்து ‘மண்மகள் விண்மகள் சாட்சியாக முனிவர் உயிரோடிருக்கும் மெய்யைக் கூறுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தார் வீரசோழிய வளநாடுடையார். அதைக் கேட்டு முனிவர் முகம் மலர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/018-039&oldid=1149496" இலிருந்து மீள்விக்கப்பட்டது