33. பூமழை பொழிந்தது!
பூம்புனல் பரந்தது!

றுநாள் பொழுது புலவர்வதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போதே கதக் கண்ணன் படைக்கலச் சாலைக்கு வந்து இளங்குமரனை நீராட்டு விழாவுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டான். இளங்குமரனுக்கும் அன்று தனியாகப் படைக்கலச் சாலையிலேயே அடைந்து கிடக்க விருப்பமில்லை; எனவே கதக்கண்ணன் வந்து அழைத்தவுடன் மறுப்புச் சொல்லாமல் உடன் புறப்பட்டு விட்டான்.

பூம்புகாரில் வழக்கமாக இந்திரவிழா நிறைவுநாளில் மழை பெய்வதுண்டு. சில ஆண்டுகளில் சாரல்போல் சிறிதளவு மழையோடு ஓய்ந்துவிடும். இன்னும் சில ஆண்டுகளில் மேக மூட்டத்தோடு வானம் அடைந்துக் கொண்டு தோன்றுமே தவிர மழை பேருக்குத் தூறி ஓய்ந்துவிடும். மிகச் சில ஆண்டுகளில் மட்டும் இந்திரவிழா இறுதியில் தொடங்குகிற மழை பெருங் கோடை மழையாக மாறி வளர்ந்து சில நாட்களுக்குத் தொடர்ந்து பெய்யும். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் அதன் சூழ்நிலைக்கும் ஏற்பத் தங்கள் வாழ்க்கையை அழகுற அமைத்துக் கொண்டிருந்த பூம்புகார். மக்கள் இதற்கு ‘இந்திரவிழா அடைப்பு’ என்று பெயர் சூட்டியிருந்தார்கள்.

அன்று காலை இந்திரவிழா அடைப்பும் பூம்புகாரின் மேல் வானவெளியை அழகிய மேகநகைகளால் அணி செய்திருந்தது. அலங்காரக் கோலத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டு நாணி அமர்ந்திருக்கும் புதுமணப் பெண்ணைப் போல் வானம் முகில்கள் நிறைந்து கவிந்து காட்சியளித்தது. பூஞ்சிதறலாக அங்கொன்றும். இங்கொன்றுமாய்ச் சில தூறல் தூறிக் கொண்டிருந்தது. பொற்பட்டறையில் தான் உருக்கிய விலைமதிப்பற்ற பொன் உருக்குக் குழம்பைக் கரிபடிந்த தன் உலைக்களத்துத் தரையில் வெட்பநடுக்குடன் தாறுமாறாக ஊற்றும் கொல்லனைப் போல் வெள்ளியுருக்கி வீசிய மின்னல்கள் கரிய வானில் நீண்டு ஓடிச் சரிந்து, மறைந்து கொண்டிருந்தன. கோடையிடிகள் வேறு கொட்டி முழங்கின. வானமும் திருவிழாக் கொண்டாடியது.

போது விழித்தும் புலரி விழியாத வானின்கீழ் இரவு விடிந்தும் இருள் விடியாத அந்த நேரத்தில் இளங்குமரனும், கதக்கண்ணனும் குதிரைகளில் சென்று கொண்டிருந்தார்கள். குளிர்ந்த சூழலும் மழைச்சூல் கொண்ட வானமும், அந்த நேரத்தின் அழகும், மக்களெல்லாம் காவிரி முன்துறைக்குப் போயிருந்ததனால் நகரமே அதிக ஓலிகளற்றிருந்த சூழலும், காவிரிப் பூம்பட்டினத்தைக் கண் நிறைந்த கனவு நகரமாகக் காட்டின. அந்த அழகை இளங்குமரன் ஆழ்ந்த சிந்தனையுடன் அனுபவித்துப் பார்த்து மகிழ்ந்தான்.

“மனிதக்கும்பலும் அவர்களின் ஓசைகளும், பூசல்களும் பிரிந்து தனியாகத் தெரியும்போது இந்த நகரம் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா கதக்கண்ணா?” என்று மனம் நெகிழ்ந்த குரலில் கூறினான் இளங்குமரன். இயக்கமும் ஓசை ஒலிகளுமற்றிருந்த கோலத்தில் நகரமே வானத்திலிருந்து நீள நெடுந்திரை காட்டிச் சுற்றிலும் தொங்கவிட்ட ஓர் பெரிய ஓவியம் போல் தோன்றியது அவனுக்கு.

அவர்களுடைய குதிரைகள் நகரின் ஒரு பகுதியில் இருந்த உலக அறவி என்னும் பொது மன்றத்தைக் கடந்த போது அந்த மன்றத்தின் இருபுறமும் அகன்ற திண்ணைகளில் முடங்கிக் கிடந்த பலநூறு பிச்சைக்காரர்களைக் கண்டு வருந்தினான். இளங்குமரன், காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்வதற்கு வேறு வழியின்றி யாசிப்பதையே தொழிலாகக் கொண்டு வயிறு துடைக்கும் பாமரர்களின் உறைவிடம்தான் இந்த உலக அறவி. சோறூட்டும் விழாவுக்குத் தவிக்கும் இவர்களுக்கு நீராட்டு விழா ஏது?’ என்று எண்ணியபோது ‘உலகம் முழுவதிலும் ஏழைகளே இல்லாதபடி செய்து விட வேண்டும்’ போல் அந்தக் கணமே அவன் மனத்திலும் தோள்களிலும் ஒரு துடிப்பு ஏற்பட்டது. குதிரையை நிறுத்திக் கீழே இறங்கி உலக அறவியின் திண்ணையை ஒட்டினாற் போலச் சிறிது தொலைவு நடந்தான் இளங்குமரன். முன்னால் சென்றிருந்த கதக்கண்ணனும் குதிரையைத் திருப்பிக் கொண்டு வந்து இறங்கி இளங்குமரனோடு பின்னால் நடந்து சென்றான்.

தங்கள் பிச்சைப் பாத்திரங்களையே தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும், பாத்திரமுமில்லாமல் வெறும் முழங்கையை முடித்து வைத்துக் கொண்டு உறங்குபவர்களையும் வரிசையாகப் பார்த்துக் கொண்டே நடந்தான் இளங்குமரன். “என்னைப் போல் செல்வம் சேர்ப்பவர்களுக்கு வகுத்திருக்கும் விதியே தனி வகையைச் சேர்ந்தது தாங்கள் உண்மையைப் பொய்யாக்குவோம். பொய்யை உண்மையாக்குவோம்” என்று முதல் நாள் மாலை தன்னிடம் அழமுற்றத்தில் திமிர் கொண்டு பேசிய செல்வரையும், இப்போது கண்டுகொண்டிருக்கும் உலக அறவிப் பிச்சைக்காரர்களையும் சேர்த்து நினைத்துப் பார்த்தான் இளங்குமரன். படைத்தவனே கைத் தவறுதலாக ஏதோ பிழை செய்து விட்டது போல் உணர்ந்து மனம் கொதித்தான் அவன். சிறிது நேரத்துக்கு முன் கனவு நகரம் போல் அழகு கொண்டு தோன்றிய காவிரிப் பூம்பட்டினத்தின் தோற்றம் இப்போது அப்படித் தோன்றவில்லை அவனுக்கு. அந்த அழகின் மறுபுறம் வேதனைகள் நிறைந்திருப்பதாகத் தோன்றியது.

“என்ன பார்க்கிறாய், இளங்குமரா? இங்கே படுத்திருப்பவர்களில் யாரையாவது தேடுகிறாயா?” என்று கேட்டான் கதக்கண்ணன்.

“படைத்தவனின் அநியாயத்தைப் பார்க்கிறேன். நியாயத்தைத் தேடுகிறேன் இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சோறும், துணியும், வீடும், வாழ்வும் வேறு எவர்களிடம் இருக்க முடியுமென்று பார்க்கிறேன்” என்று குமுறியபடி பதில் வந்தது இளங்குமரனிடமிருந்து. கதக்கண்ணனுக்கு இவையெல்லாம் புதிய பேச்சுக்களாயிருந்தன. எதை விளங்கிக் கொண்டு எப்படி மறுமொழி கூறுவதென்றும் அவனுக்குத் தெரியவில்லை; ஆகவே அவன் மௌனமாக இளங்குமரனைப் பின் தொடர்ந்தான். அவர்கள் உலக அறவிக்கு அப்பாலிருந்த சக்கர வாளத்தையும், சம்பாபதி கோவிலையும் கடந்து மேலே சென்றார்கள்.

“என் தந்தையும், முல்லையும் நம் வரவை எதிர்பார்த்து அங்கே கழார்ப் பெருந்துறையில் காத்துக் கொண்டிருப்பார்கள். நாம் விரைவாகச் செல்வது நல்லது” என்று நடுவில் ஒருமுறை இளங்குமரனை அவசரப் படுத்தினான் கதக்கண்ணன்.

பூம்புகார் வீதிகளில் மீண்டும். அவர்கள் குதிரைப் பயணம் தொடர்ந்தது. ‘இலஞ்சிமன்றம்’ என்னும் பெரிய ஏரியின் கரையருகே வந்ததும், இளங்குமரன் மீண்டும் குதிரையை நிறுத்திக் கீழே இறங்கினான். அந்தக் குளத்தின் கரையிலுள்ள அம்பலத்தின் மேடைகளிலும், திண்ணைகளிலும் காவிரிப் பூம்பட்டினத்தின் அநாதை நோயாளிகள் நிறைந்து கிடந்தார்கள். மண்ணின் மேல் மனிதர்களுக்கு எத்தனை வகை கொடிய நோய்கள் எல்லாம் வர முடியுமோ, அத்தனை வகை நோய்களும் வந்த நோயாளிகள் இலஞ்சி மன்றத்தில் இருந்தார்கள். தூக்கம் வராமல் அலறித் தவிக்கும் நோயாளி, தூக்கமிழந்து வலியினால் துடிக்கும் நோயாளி, தொழு நோயாளி, புழு நோயாளி, நொண்டி, கூன் குருடு, இன்னும் சொல்லில் அடங்காத நோயாளிகளையெல்லாம் சேர்த்துப் பார்க்க முடிந்த இடம் இலஞ்சிமன்றம். அழுகை ஒலி, வேதனைக் குரல், அலறல், அரற்றல் நிறைந்த அந்தக் குளக்கரையில் நின்று சிந்தித்தபோது இளங்குமரனுக்கு உலகமே இருண்டு தோன்றியது. உலகமே நோய்மயமாகத் தோன்றியது.

“சொப்பனபுரியாகவும், கந்தர்வ நகரமாகவும் இந்தப் பட்டினத்தை வருணனை செய்து பாடியிருக்கிற கவிகளைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய், கதக்கண்ணா?”

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது? உள்ளவற்றில் நல்லவற்றைச் சிறப்பித்து மட்டும் பாடியிருக்கிறார்கள். அவர்கள் மரபும் அதுதானே?”

“மரபாக இருக்கலாம்! ஆனால் நியாயமாக இருக்க முடியாது. சோழ மன்னரும் அவருடைய அரண்மனையும் சுற்றியிருக்கும் எட்டிப்பட்டம் பெயர் செல்வர்களும் தான் காவிரிப்பூம் பட்டினம் என்றால் இந்தக் காவிரிப்பூம் பட்டினம் மிகவும் சிறியதாகக் குறுகிவிடும். செல்வமும் வீடும் தவிர வறுமையும் நோயும்தானே இங்கு மிகுதியாக இருக்கின்றன? அவற்றை ஏன் மறைக்கவேண்டும்?”

கதக்கண்ணன் இதற்கு மறுமொழி சொல்லி மேலே பேச்சைத் தொடர இடங்கொடுக்காமல் குதிரையில் தாவி ஏறினான். இளங்குமரனும் தன் குதிரையில் ஏறிக்கொண்டான். அவன் மனத்தில் பல வினாக்கள் ஏறிக் கொண்டு துளைத்தன. அவற்றுக்கு விடை கேட்கவும், விவாதம் செய்யவும் கதக்கண்ணன் ஏற்புடையவனாகத் தோன்றாததால் மனத்திலேயே அவற்றைச் சிந்தித்துக் கொண்டு செல்வதைத் தவிர வேறு வழி அவனுக்குப் புலப்படவில்லை.

அவர்கள் காவிரியின் கழார்ப் பெருந்துறைக்குப் போகும் திருமஞ்சனப் பெருவழியில் நுழைந்தபோது நன்றாக விடிந்து ஒளி பரவத் தொடங்கியிருந்தது. முன்பு பூஞ்சிதறலாக இருந்த மழைத் தூற்றல் இப்போது சாரலாகப் பெய்து கொண்டிருந்தது. காவிரித்துறை நெருங்க நெருங்கச் சாலையில் கூட்டமும், தேரும், யானையும், குதிரையும் மிகுந்து நெருக்கமான போக்குவரவு இருந்ததனால் அவர்களால் தங்கள் குதிரைகளை விரைந்து செலுத்த முடியவில்லை. மெல்ல செலுத்திக் கொண்டு சென்றார்கள்.

காவிரியில் நீராடுவதற்காகத் தோழிகள் வாசனைத் தைலங்கள் பூசவும், ஆலவட்டம் வீசவும், பட்டுக்குடை பிடிக்கவும், பணிப்பெண்கள் புடைசூழச் செல்வக்குடி நங்கையர்கள் அலங்காரமான சூழ்நிலையின் நடுவே விளங்கித் தோன்றினர். தங்களுக்கு நீந்தத் தெரியாததனால் தோழிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவரோடொருவர் கரங்கோத்தபடி நீரில் இறங்கின செல்வப் பெண்களைக் கரையிலிருந்த நீந்தத் தெரிந்த பெண்கள் நகைத்து ஏளனம் செய்தனர். தண்ணீரில் இறங்க மனமின்றிச் சாரலில் நனைந்து கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தவர்களை அவர்கள் நண்பர்கள் பின்புறமாக வந்து பிடித்துத் தள்ளி வேடிக்கை பார்த்தார்கள். மற்றொரு புறத்தில் ஆண்களும் பெண்களுமாக இளம் பருவத்தினர் சிறுசிறு படகுகளை விரைந்து செலுத்தி எவரால் வேகமாகப் படகு செலுத்த முடிகிறதென்று தங்கள் திறமையைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர்ப் பரப்பிலேயே மிதக்கும் சிறு வீடுகளை போல் அணி செய்து அமைக்கப்பட்டிருந்த நீரணி மாடம் என்னும் படகு இல்லங்களில் மிதந்து சென்று நீராட்டு விழாவை அனுபவித்து கொண்டிருந்தார்கள் சிலர்.

[1] வாயில் நிறைய அவலை அடக்கிக் கொண்டு வாயையும் திறக்காமல் நீரையும் குடிக்காமல் உள்ளே அவலை மென்று தின்று கொண்டே வேகமாக நீந்தும் விளையாட்டு ஒன்றைப் பெண்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்படி நீந்தி முதலில் வருகிற வருக்கு வெற்றி என்று முடிவு செய்வது வழக்கம். இந்த விளையாட்டு நிகழ்த்து கொண்டிருந்த துறையில் பெண் களின் கூட்டம் கணக்கற்றுக் கூடியிருந்தது. துறையரு கிலும் மணற் பரப்பிலும், எங்கும் அவல் சிதறிக் கிடந்தது; ஆவலும் பரவித் தெரிந்தது. எல்லோருடைய உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தூண்டும். இந்த விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருந்த துறையருகே வந்ததும் இளங்குமரனும், கதக்கண்ணனும் தத்தம் குதிரைகளை நிறுத்திக் கொண்டு அவற்றில் அமர்ந்தபடியே பார்க்கலாயினர்.

அவலை வாய் நிறைய அடக்கிக் கொண்டு, பெண்கள் கூட்டம் ஒன்று காவிரி நீர்ப்பரப்பில் வரிசையாக அணிவகுத்துப் புறப்பட்டு நீந்தியது. அந்த வரிசையில் பன்னிரண்டு பெண்கள் நீந்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிது தொலைவு சென்றபின் இளங்குமரன் மறுபடியும் எண்ணிப் பார்த்தபோது பதினோரு பெண்கள்தான் தெரிந்தனர். “யாரோ ஒருத்தி நீரில் மூழ்கியிருக்க வேண்டும். அல்லது சுழலில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்” என்று தோன்றியது. தனக்குத் தோன்றியதைக் கதக்கண்ணனிடம் கூறினான் இளங்குமரன். “நீரில் மூழ்கியிருந்தாலுமே நாம் என்ன செய்ய முடியும்” என்று கதக்கண்ணன் பதில் சொன்னான். “என்னால் அப்படி நினைத்துப் பேசாமல் இருக்க முடியாது! அப்புறம் நானும் ஆண் பிள்ளை என்று நிமிர்ந்து, நடக்க என்ன இருக்கிறது?” என்று கூறிக் கொண்டே, குதிரையிலிருந்து கீழே குதித்து விரைந்தான் இளங்குமரன், ‘வேண்டாம் போகாதே’ என்று நண்பன் தடுத்துக் கூறியதை அவன் கேட்கவில்லை.

  1. இப்படி மகளிர் விளையாடும் ஆடல் ஒன்று அக்காலத்திலிருந்ததைப் புறநானூறு 63-வது பாடல் கூறும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_1/033-039&oldid=1149517" இலிருந்து மீள்விக்கப்பட்டது