மணி பல்லவம் 1/036-039
ஊழிக் காலமே நெருங்கி வந்து விட்டதோ என அஞ்சினான் இளங்குமரன். கீழே அலை அலையாக நீர்க் கடல், மேலே அலை அலையாக மேகக் கடல். நெடுந்தொலைவுக்கு அப்பால் இருப்பது போல் தெரிந்து இல்லாததாய் முடியும் தொடுவானம் இப்போது தெரியவில்லை. தன்னையும், தன்னால் காப்பாற்றப்பட்டவளையும், இருவருடைய உயிர்களையும் பற்றியே நம்பிக்கையையும், அதன் விளைவுகளையும் தெய்வத்தினிடம் ஒப்படைத்து விட்டுப் படகினுள் சோர்ந்து ஒடுங்கிப் போய் வீற்றிருந்தான் இளங்குமரன். காலையா, நண்பகலா, மாலையா என்று பொழுதைப் பற்றியே தெரிந்து கொள்ள இயலாதபடி மழை மூட்டடத்தில் சூழ்ந்து பொய்யிருள் ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொழுதும் அந்தப் பொய்யிருளில் மறைந்திருந்தது.
இளங்குமரன் இருந்த படகு சங்கமுகத்தைக் கடந்து பல நாழிகைத் தொலைவு கடலுக்குள் அலைந்து திரிந்தாகி விட்டது. காவிரியின் சங்கமுகத்துக்குக் கிழக்கே தொலைவில் நடுக் கடலுள் ‘கப்பல் கரப்பு’ என்ற ஒரு திடல் இருந்தது. மண் திடலாகச் சிறிய மலை போன்று உயர்ந்து தோன்றும் மேட்டு நிலத்தீவு அது. தென்னை மரங்கள் நெருக்கமாகச் செழித்து வளர்ந்து தோன்றும் அந்தத் தீவுக் குன்றம் நீலக் கடலின் இடையே மரகதப் பச்சை மலை போல் அழகாய்த் தெரியும். சங்கமுகத்திலோ, அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலோ நின்று கடலுள் பார்த்தால் நன்றாகத் தெரியக்கூடிய அந்தத் தீவும் மழைமூட்டத்தினால் இன்று தெரியவில்லை. காவிரியிலும் கடற் பரப்பினுள்ளும் இவ்வாறு அமைந்திருந்த நிலத் திடல்களுக்குத் ‘துருத்தி’ என்று பெயரிட்டிருந்தார்கள். இத்தகைய தண் மணல் துருத்திகளும், தாம்பூந்துறைகளும், நீர்ப்பரப்பைச் சூழ்ந்த பெரிய பெரிய சோலைகளுக்கு நடுவே அமைக்கப்பட்ட ‘படப்பை’ என்னும் வேனிற் காலத்து வீடுகளும் காவிரிப் பூம்பட்டினத்தைச் சுற்றி மிகுதியாக இருந்தன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகேயாவது தன் படகு ஒதுங்காதா என்று எண்ணித் தவித்தான் இளங்குமரன். படகு நெடுங்கடலுக்குள் சென்றுவிட்டபின் இப்படி எண்ணித் தவிப்பதற்கும் வழியில்லாமற் போயிற்று.
‘இனிமேலும் நாம் தப்பி உயிர்பிழைக்க... வழியிருக்கிறது’ என்று அவன் இறுதியாக நம்பிக் கொண்டிருந்த ஒரே இடம் ‘கப்பல் கரப்பு’ என்னும் தீவுத்திடல்தான், கடற்கரையோரங்களில் வசிக்கும் பரதவர்களும், துறை முகத்துக்கு வந்து போகும் கப்பல்களின் மீகாமகர்களும் ஒரு காரணத்துக்காக அந்தத் தீவைக் ‘கப்பல் கரப்பு’ என்று அழைத்தார்கள்.
காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிற கப்பல்களைக் கரையிலிருந்து பார்க்க முடிந்த கடைசி எல்லை அந்தத் தீவுதான். அதற்குப் பின் தீவின் தோற்றமே கப்பல்களைக் கண் பார்வைக்குத் தென்படாமல் மறைத்து விடும். அதுபோல வெளிநாடுகளிலிருந்து காவிரிப்பூம் பட்டினத்துக்குள் நுழையும் கப்பல்களும் கப்பல் கரப்புத் தீவுக்கு இப்பால் புகுந்ததும் அந்தப் பக்கத்திலிருந்து காண்பவர்களுக்குத் தோற்றம் மறைந்துவிடும். அப்படிக் கப்பல்கள் கண்பார்வைக்கு மறையக் காரணமாயிருந்த தீவு ஆகையினால் தான் கப்பல் கரப்பு என்று அழைக்கப்பட்டு வந்தது அந்தத் தீவு.
நடுக்கடலில் தன் போக்காக விழுந்து மிதக்கும் மரகத மணியாரம் போன்ற அந்தத் தீவின் ஓரமாக ஏதாவதொரு பகுதியில் படகு ஒதுங்க வேண்டும் என்பதுதான் இளங் குமரனின் சித்தத்தில் அப்போதிருந்த ஒரே ஆசை. மழையும் புயலுமாயிருந்த அந்தச் சமயத்தில் கப்பல் கரப்பினருகே ஒதுங்கினால் மற்றொரு பயனும் கிடைக்கும். துறைமுகத்துக்கு வரும் கப்பல்களும், துறைமுகத்திலிருந்து போகும் கப்பல்களும், கப்பல் கரப்பை ஒட்டியே செல்வதனால், தீவிலிருந்து மீண்டும் நகர் திரும்ப எந்தக் கப்பலிலாவது சொல்லி உதவியை நாடலாம் என்று நினைத்திருந்தான் இளங்குமரன்.
அருட்செல்வ முனிவரின் மறைவு பற்றிய வேதனையையும் படைக்கலச் சாலையின் தனிமையையும் மறந்து காவிரித்துறை நீராட்டு விழாவில் ஆரவாரத்தில் கலந்து திரியலாம் என்றுதான் கதக்கண்ணனோடு வந்திருந்தான் அவன். ஆனால் நினைத்தபடி நடக்கவில்லை. நினையாதவையெல்லாம் நடந்துவிட்டன, ‘எந்தப் பெண் தண்ணீரில் மூழ்கினால் எனக்கென்ன வந்தது? அது அவளுடைய தலையெழுத்து’ என்று கதக்கண்ணன் நினைத்ததைப் போலவே தானும் நினைக்க முடிந்திருந்தால் இளங்குமரனுக்கு இந்தத் துன்பங்களெல்லாம் ஏற்பட்டிருக்கப் போவதில்லை. என்ன செய்வது? மனிதர்களை நினைத்தால் அவனுக்கு இரக்கமாயிருக்கிறது; அவர்களுடைய குணங்களைப் புரிந்து கொண்டால் கோபம் வருகிறது. முதன்முதலாக ஓவியன் மணிமார்பனுக்கு உதவ நேர்ந்ததை நினைத்துக் கொண்டான் அவன். பிறருக்காகத் துன்பப்படுகிறவர்கள் தங்களுக்காகவும் சேர்த்துத் துன்பப்பட வேண்டியிருக்கிறதென்பதை இளங்குமரன் பல அனுபவங்களால் விளங்கிக் கொண்டிருந்தாலும், பிறருக்கு உதவப் போனதன் காரணமாகத் தனக்கு வம்பிழுத்து விட்டுக் கொள்ளும் சம்பவங்களே தொடர்ந்து ஏற்படுவதனால் அவன் மனம் சற்றே இறுகியிருந்தது. எனினும் அது அடிக்கடி நெகிழும் சம்பவங்களும் நேர்ந்தன.
அன்று காவிரிக் கரையில் நின்று கொண்டிருந்த போது அந்தப் பெண் நீரில் மூழ்கியதைக் கண்டு அவனுடைய இறுகிய மனமும் இளகியது. வரும்போது உலக அறவியையும் இலஞ்சி மன்றத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருந்ததனால் காவிரித் துறையில் நிற்கும் போது உலகத்து இன்ப துன்பங்களை எண்ணி வியந்து நெகிழ்ந்து சிந்தனையிலாழ்ந்த மனத்தினனாக இருந்தான் அவன். காவிரியில் ஒரு பெண் மூழ்கியதைக் கண்டபோது அவன் தன் மனத்தில் ‘என்னுடைய தாயும் ஒரு காலத்தில் இப்படி இளம் பெண்ணாக இருந்திருப்பாள். இதுபோன்ற நீராட்டு விழா நாளில் அவல் அடக்கிக் கொண்டு காவிரியில் நீந்தியிருப்பாள்’ என்று எண்ணிக் கொண்டிருந்தான். ‘எவ்வளவுதான் திறமையாக நீந்தத் தெரிந்தவளாக இருந்தாலும் அவள் விக்கியாவது மூச்சடக்க முடியாமல் தவறிக் குடித்த நீருடன் புரையேறியாவது, நீந்த முடியாமல் தளர்ந்து விடுவது இயல்புதானே’ என்று நிலைமையைப் புரிந்து கொண்டுதான் உதவ முன் வந்திருந்தான் அவன். அது இவ்வளவு பெரிய உதவியாக நீண்டு விடும் என்று அப்போது அவன் எதிர்பார்க்கவில்லை.
இங்கே தான் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் கழார்த் துறையில் கதக்கண்ணன், முல்லை, வளநாடுடையார் மூவரும் தன்னைப் பற்றி என்ன நினைத்து எப்படி உரையாடிக் கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்ய முயன்றது அவன் சிந்தனை. மழையினாலும், காற்றினாலும் நீராட்டு விழாவே சீர் குலைந்து மக்களெல்லாம் தாறுமாறாகச் சிதறி நகரத்துக்குள் திரும்பிப் போயிருப்பார்களோ என்று அவன் ஐயமுற்றான்.
‘இதோ படகில் துவண்டு கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உதவ நேரும் என்பதற்காகவே இன்று நான் நீராட்டு விழாவுக்கு வர நேர்ந்திருக்க வேண்டும். என்னுடைய ஒவ்வொரு நாளும், நிகழ்ச்சிகளும், திட்டமும் தொடர்பில்லாமல் கழிவதாக நான் நினைப்பதுதான் பிரமை. தொடர்பில்லாமல் தோன்றும் ஏதோ ஒரு தொடர்பு திட்டமிட்டுத்தான் எல்லாம் செய்கிறது போலும்’ என்று நினைந்து மனத்தைத் தேற்றிக் கொண்டு கப்பல் கரப்புத் திடலின் கரை தென்படுகிறதா என்பதை ஆவலோடு கவனிக்கலானான் இளங்குமரன். கரை தெரியவில்லை. ஆனால் கரையை நெருங்கும் அறிகுறிகள் தெரிந்தன. கடல் அலைகளில் அழுகின தென்னை மட்டைகளும், சிறுசிறு குரும்பைகளும், வேறு பல இலை தழைகளும் மிதந்து வந்தன. இந்த அடையாளங்களைக் கண்டு அவன் முகம் சிறிது மலர்ந்தது. கப்பல் கரப்பில் இறங்கி அந்தப் பெண்ணின் மயக்கத்தைத் தெளியச் செய்து அவளையும் அழைத்துக் கொண்டு அவ்வழியாகத் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல் ஒன்றில் இடம்பிடித்து நகருக்குள் சென்றுவிடலாம் என்று அவன் தீர்மானம் செய்து கொண்டான். நகருக்குள் சென்று அந்தப் பெண்ணை அவள் இல்லத்திற்குக் கொண்டு போய்ச் சேர்த்த பின் நேரே புறவீதியை அடைந்து கதக்கண்ணனையும், முல்லையையும், அவர்கள் தந்தையையும் சந்திக்கலாமென எண்ணிக் கொண்டிருந்தான் அவன். நீராட்டு விழா விலிருந்து மழையினால் கலைந்து போய்க் கதக்கண்ணன் முதலியவர்கள் வீடு திரும்பியிருப்பார்களென்று அவன் அநுமானம் செய்து கொண்டிருந்ததனால் அவர்களைப் புறவீதியிலேயே தான் திரும்பிச் சென்று சந்திக்கலாமென்பது அவன் தீர்மானமாயிருந்தது.
சிறிது தொலைவு சென்றபின் ‘கப்பல் கரப்புத் தீவு’ மங்கலாகத் தெரிந்தது. காற்றில் அங்குள்ள தென்னை மரங்கள் பேயாட்டமே ஆடிக்கொண்டிருந்தன. அந்தத் தீவின் கரையைக் கண்டதும்தான் சம்பாபதித் தெய்வம் தன்னைக் காப்பாற்றி விட்டதென்று நம்பிக்கை இளங்குமரனுக்கு ஏற்பட்டது. படகிலிருந்து இறங்கிக் கரை ஏறுவதற்காக அந்தப் பெண்ணை அவன் தூக்கியபோது அவலும், நீருமாகக் குமட்டிக் குமட்டி, வாந்தி எடுத்தாள் அவள். இளங்குமரனின் பொன் நிறத் தோள்களில் அவள் உமிழ்ந்த அவலும் நீரும் ஒழுகி வடிந்தன. ஓர் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமிதத்தில் அவற்றை யெல்லாம் பொறுத்துக் கொண்டான் இளங்குமரன். ‘அழுக்குப் படாமல் பிறருக்கு உதவி செய்துவிட நினைத்தால் உலகத்தில் உதவிகளே இல்லாமற் போய் விடும்’- என்று நினைத்தபோது அவனுக்கு அவள் வாந்தி எடுத்தது வெறுப்பதற்குரியதாகப் படவில்லை.
கப்பல் கரப்புத் தீவில் ஈரமான செம்மண் தரையில் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு நடந்தபோது இளங்குமரனின் மனம் கருணை மயமாக நெகிழ்ந்திருந்தது. பிறருக்கு உதவி செய்வதில் இருக்கிற மகிழ்ச்சி பிறரிடமிருந்து உதவியைப் பெறுவதில் இருக்க முடியாதென்று எப்போதும் அவனுக்கு ஒரு கருத்து உண்டு. அதையே மீண்டும் நினைத்துக் கொண்டு மகிழ்ந்தான் அவன்.
அந்தச் சமயத்தில் கப்பல் ஒன்று அவ்வழியே பூம்புகாரின் துறைமுகத்தை நோக்கி வருவதை அவன் கண்டான். உடனே தான் சுமந்து கொண்டிருந்த பெண்ணின் உடலை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டுக் கப்பலை அழைப்பதற்கு விரைந்தான். மழையும், காற்றுமான அந்த நேரத்தில்தான் உதவி கோருவது கப்பலிலிருப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத் தீவிலேயே மிகவும் மேடான ஓர் இடத்தில் போய் நின்று கூவினான் அவன். கூவியும் கைகளை ஆட்டியும் வெகுநேரம் முயன்றும் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் கவனம் அவன் பக்கம் திரும்பவில்லை. அவனுடைய கூக்குரலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. தோற்றத்தைத் தொலைவும் மழையும் தெரியவிடாமற் செய்துவிட்டன, ‘இன்னும் ஏதாவது கப்பல் வருகிறதா’ என்று கவனித்துக் கொண்டு அங்கேயே நின்றான் இளங்குமரன். கப்பல்கள் வந்தன, போயின. ஆனால் ஆதரவு தேடிக் கூக்குரலிட்ட அவனைத்தான் அவை கவனிக்கவில்லை. வெகுநேரத் துக்குப் பின்பு, ‘இனியும் கப்பல்களை நம்பிக் காத்திருப்பதில் பயனில்லை’ என்ற முடிவுடன் அந்தப் பெண்ணை விட்டு வந்த இடத்துக்குத் திரும்பினான் இளங்குமரன். மழை மூட்டப் பொய்யிருளோடு மெய்யிருளாகிய இரவின் கருமையும் கலந்த தீவினுள் ஒளி மங்கி அந்தகாரம் கவிந்து கொள்ள முற்பட்டிருந்தது. ‘இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடுமே’ என்ற கவலையோடு திரும்பி வந்த இளங்குமரன் அங்கே அந்தப் பெண் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான். அவளுடைய நிலை அவன் கவலையை ஓரளவு குறைத்தது. அவன் அருகில் வந்த போதும் அவள் அவனைக் கவனிக்கவில்லை. எதிர்ப் பக்கமாகக் கடலைப் பார்த்தவாறு கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
நீரில் நனைந்து வெளுத்திருந்ததனால் வெண் தாமரைப் பூப் போன்ற அவளுடைய சிறிய பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டினாற்போல் தீவின் ஈரச் செம்மண் நிறம் பூசி அலங்காரம் செய்திருந்தது. தெப்பமாக நனைந்த நிலையில் குளிரில் உதறும் மணிப்புறாவைப் போல் அவள் பொன்னுடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வெண் சங்குபோல் நளினமாகத் தோன்றிய அவள் கழுத்துப் பின்புறம் பிடரியில் முத்து முத்தாக நீர்த்துளிகள் உருண்டு ஒட்டியும் ஒட்டாமலும் சிதறின. அவை முத்தாரம் போல் தோன்றின. இளங்குமரன் மெல்லிய குரலில் அவளிடம் கூறினான்:
“பெண்ணே! உன்னைக் காப்பாற்றியதற்காகப் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவனை நீ சிறிது திரும்பிப் பார்க்கலாமே...”
தோகை பொலியத் தோற்றமளிக்கும் பெண் மயில் போல் அவள் திரும்பினாள்; அவள் முகத்தில் நகை மலர்ந்தது.
அந்த முகத்தைப் பார்த்து இளங்குமரன் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகத்தில் வெறுப்பும் கடுமையும் பரவின.
“நீயா?... உன்னையா நான் இவ்வளவு சிரமப்பட்டுக் காப்பாற்றினேன்?”
“ஏன்? நான் காப்பாற்றுவதற்குத் தகுதியுடையவளில்லையா?” என்று கேட்டாள் சுரமஞ்சரி. அவள் முகத்திலும், கண்களிலும், இதழ்களிலும் குறும்புச் சிரிப்புக் குலவித் தெரிந்தது. அவளுடைய இன்ப விழிகள் இரண்டும் அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தன.