மணி பல்லவம் 4/பொற்சுடர்

பொற்சுடர்

பொருள்களில் பொன்னுக்கு மட்டும் தனித்தன்மை ஒன்றுண்டு. தன்னுடைய பிரகாசம் பிறரைச் சுடாமல் தனக்குப் பெருமையும் பிறர்க்கு ஒளியும் தருகிற ஒரே ஒரு திரவியம் தங்கம். தருக்க நூல்களில் பொருள்களுக்கு இலட்சணம் சொல்லும்போது தங்கத்தை நெருப்பு என்றே சொல்கிறார்கள், தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுக முடியாமை, தன்னிடமிருந்து ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தூயதாக்குதல் – ஆகிய இவை நான்கும் தங்கத்துக்கும், நெருப்புக்கும் ஒத்த குணங்கள். நெருப்பு என்பது சுடுகின்ற பொன், பொன் என்பது சுடாத நெருப்பு. வெதும்பி வாடி இளக இளகத் தம் ஒளி வளருதல் என்பது இரண்டுக்கும் பொதுத் தன்மை. சுடுவதும், சுடாமலிருப்பதும்தான் நெருப்புக்கும் பொன்னுக்குமுள்ள ஒரே வேற்றுமை.

தொட்டால் சுடுகின்றது என்ற ஒரே காரணத்தால் பொன்னைவிடப் பிரகாசமுள்ள நெருப்புக்கு மதிப்பும் விலையும் இல்லை. சுடாதது என்ற ஒரே காரணத் திற்காக நெருப்பினும் குறைந்து குளிர்ந்த பிரகாசமுள்ள பொன்னுக்கு மதிப்பு விலை எல்லாம் உண்டு. பொன்னுக்கும் மணிக்கும் முத்துக்கும் லைர வைடூரியங்களுக்கும்— அவற்றைச் சார்ந்துள்ள பிரகாசத்தின் காரணமாகத்தான் மதிப்பு என்றால் பிரகாசத்தையே மூவவடிவமாகக் கொண்ட அக்கினிக்கு இவற்றைவிட அதிகமான மதிப்பு இருக்க வேண்டும். நெருப்பாகிய சுடுகின்ற பொன்னுக்கு விலை இல்லை. பொன்னாகிய சுடாத நெருப்புக்கு விலை உண்டு. நிலம், நீர், தீ, காற்று, காலம், திக்கு, ஆன்மா மனம் என்று உலகத்துப் பொருள்களை ஒன்பது வகையாகப் பிரித்திருக்கிறது தருக்கம். இந்த ஒன்பது வகைகளில் தங்கம் என்னும் ஒளிமிக்க உலோகம் எவ்வகைக்குள் அடங்குமென்று ஆராய்ந்தால் நெருப்பில் அடங்கும், நெருப்பாய் அடங்கும். நெருப்பினாலே அடங்கும்.

என்றும் தான் ஒளிமயமாக இருத்தல். தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல்- ஆகிய பொன்னின் குணங்களோடு தன் கண்களின் நோக்கத்தாலேயே தீமைகளை எரிக்கும் சுடரின் குணத்தையும் சேர்த்துப் பெற்றிருக்கிற காரணத்தினால் இந்தக் கதையின் நாயகனாகிய இளங்குமரனின் நான்காம் பருவத்து வாழ்வைப் பொற்சுடராகவே உருவகம் செய்யலாம் என்று தோன்றுகிறது.

பொன்னுக்கு விலையும் மதிப்பும் எப்போது ஏற்பட்டிருக்கும்? யாரால் ஏற்படுத்தப் பட்டிருக்கும்? பொன்னின் ஒளியில் மதிப்பு வைக்கத் தெரிந்து கொண்ட ஒரு முதல் மனிதனும் அதைத் தொடர்ந்து அதன்மேல் அதே மதிப்பை வைக்கப் பழகிவிட்ட முடிவற்ற பல மனிதர்களும் பொன்னைப் பற்றி எண்ணி எண்ணிச் சுமந்து விட்ட எண்ணத்தின் கனம்தான் பொன்னின் கனம், பொன்னின் விலை! இவற்றை நீக்கி விட்டுப் பார்த்தால் பொன்னுக்கு விலை இல்லைதான்.

“அப்படியானால் பொன்னை மதித்து மதித்துப் பொன்னின் ஒளிக்கும் அடிமையாகி இருண்டுவிட்ட மானிட இனத்தின் கண்களுக்குப் பொன்னைவிடப் பிரகாசமான எதுவும் இன்றுவரை படவே இல்லையா?”

“இல்லை.”

“பொன்னைவிடப் பிரகாசமான ஒரு பொருளி, லிருந்துதான் பொன்னே பிறந்தது!”

“அப்படியா? பொன்னுக்கும் முன் மூலமான அந்தப் பொருள் எது என்று தெரிந்தால் அதைப் பொன்னைக் காட்டிலும் அதிகமாக மதிக்கத் தொடங்கி விடலாமே?” "இனிமேல்தான் தொடங்க வேண்டும். என்பதில்லை! அதை நாம் மதிக்கத் தொடங்கிய போதுதான் நமது மறைகளின் முதற் குரல் திசைகளின் செவிகளில் முதற் கேள்வியாகி ஒலித்தது. அதை நாம் மதிக்கத் தொடங்கியபோதுதான் நமது வேள்விச் சாலைவில் அது முதல் தெய்வமாய் வளர்ந்து எரிந்து கொழுந்துவிட்டது. அதை நாம் மதிக்கத் தொடங்கியபோதுதான் நம்முடைய மதிப்பு உண்மையான ஒளியைப் புரிந்து கொண்டு மதித்துப் போற்றியது.”

“அதற்குப் பெயர்?” “சுடர்.”

“அந்தச் சுடர் பொன்னின் ஒளியிலும் இருக்கிறது! அல்லவா?”

“இருக்கிறது! ஆனால் நெருப்பின் சுடரில் பொன்னி லிருப்பதைக் காட்டிலும் அதிகமான ஒளி இருக்கிறது. இயற்கைப் பொருள்களில் ஒன்றாகிய நெருப்பின் ஓர் ஒளிக்கீற்றுதான் தங்கத்திலும் தங்கமாக இருக்கிறது. தங்கமில்லாமலும் உலகில் ஒளி உண்டு. உலகில் ஒளி இல்லாவிட்டால் தங்கமே இல்லை, ஒளி இன்றேல் தங்கத்தை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாற் போலத் தங்கமாக மதித்துப் புரிந்து கொண்டிருக்க முடியாது.”

“தங்கத்திலிருந்து சுடரை மட்டும் பிரித்து விட்டால்?”

“சுடரிழந்த தங்கம் அப்படி அதை இழந்துவிட்ட காரணத்தால் மண்ணாயிருக்கும்.”

“அதாவது மண்ணில் சுடர் கலவாது தங்கம் இல்லை! தங்கம் கலவாத சுடர் உண்டு.”

“தங்கம் மண்ணாயிருந்தால் அதைத் தங்கமாக மதிக்கக் காரணமாயிருக்கும் ஒளியை இதில் காண முடியாது, மண் கலவாத தனி ஒளியாயிருந்தால் அதுவே சுடும்! தங்கம் ஒளியாயிருக்கிறது. சுடவும் இல்லை. அதனால்தான் சுடுகின்ற ஒளியைக் காட்டிலும் தங்கமாகிய சுடாத ஒளிக்கு அதிக மதிப்பு.” இந்தக் கதையின் தலைவனும், திருநாங்கூரடிகள் உருவாக்கிய காவிய நாயகனுமாகிய இளங்குமரன் ஞானப் பசி தீர்ந்தும் தீர்த்தும் வெற்றிக் கொடி நாட்டிய பின் மணிபல்லவத்துக்குப் புறப்படுகிற சமயத்தில் பொன்னாகவும் இருந்தான், சுடராகவும் இருந்தான். முழுமையான பொற்சுடராகவே இருந்தான்.

தான் ஒளிமயமாக இருத்தல், தன்னை அணுகுவதற்கு அருமை, தன்னிடமிருந்து பிறர் ஒளி பெறுதல், தான் சார்ந்த இடத்தைத் தன்னுடைய சார்பால் தூயதாக்குதல் ஆகிய பொன்னின் குணங்களைப் பெற்றுத் தானே பொன்னாகி ஒளிரும் ஒருவன் வேறு பொன்னின் மேல் ஆசைப்பட என்ன இருக்கிறது? ஒன்றுமில்லைதான்! அவன் எல்லா ஆசைகளையும் உதிர்த்துவிட்டு நின்றபோது எல்லாருடைய ஆசைகளும் அவனைச் சூழ்ந்தன. இளங்குமரன் என்ற அந்தப் பொற் சுடருக்காக முல்லை ஏங்கினாள். சுரமஞ்சரி தவித்தாள். தன்னுடைய பெருமாளிகை நிறையக் குவிந்திருந்த அவ்வளவு பொன்னிலும் காணாத சுடரை இளங் குமரனுடைய கண்களில் கண்டு தவித்துக் கொண் டிருந்தாள் அந்தப் பட்டினப்பாக்கத்துப் பெண்.

தான் சார்ந்த இடங்களை ஒளியுறச் செய்யும் பொன்னைப் போல் அவர்கள் இருவருடைய ஆசையிலும் தான் இருந்து -- தன்னுடைய ஆசையில் அவர்கள் இருவரும் இல்லாமல் அவர்களுக்கு ஒளி தந்து கொண்டிருந்தான் இளங்குமரன்.

யாரை அல்லது எதை ஆசைப்படுகிறோமோ அவர் அல்லது. அது பரிசுத்தமாக இருந்தால் அந்த ஆசை விளைந்து வளர இடமாக இருப்பதன் காரணமாகவே அவை நிகழ்கின்ற மனத்துக்கும் முகத்துக்கும் அழகும் ஒளியும் உண்டாகும்! தெய்வத்தை ஆசைப்படுகிற பக்தனின் முகம், குழந்தையை ஆசைப்படுகிற தாயின் முகம், மெய்யான மாணவனை ஆசைப்படுகிற குருவின் முகம், இவைகளுக்கு வரும் அழகைப்போல் இளங் குமரனை ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அவனுடைய வர்கள் இசையில் தந்து ஒளியையும் தங்களுடைய ஒளியையும் சேர்த்தே வளர்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள்.

உலகத்தில் பொன்னுக்குப் பொன்னாசை இல்லை இளங்குமரனும் அப்படிப் பொற்சுடராக இருந்தான், தன்னுடைய மிகுந்த ஒளியினால் பிறருடைய ஆசை களையும் தன்னையறியாமலே எரித்துச் சுத்தமாக்கிக் கொண்டிருந்தான் அவன், பூம்புகார்த் துறைமுகத் திலிருந்து கப்பல் நகர்ந்தபோது தன்னையறியாமலே தான் முல்லையை மனம் வெதும்பச் செய்திருப்பதை உணர்ந்த சில கணங்களில் மட்டும் சுடுகின்ற தெருப் பாகவும் தான் இருந்து விட்டது போல் தோன்றியது இளங்குமரனுக்கு. அதற்காகத் தனக்குள் வருந்தினான் அவன்.

‘வாழ்க்கையில் பிறரோடு பழகும்போது கோடைக் காலத்து வெயில்போல் பழகினாலும் துன்பம்; குளிர் காலத்துச் சுனை நீர் போலப் பழகினாலும் துன்பம். கோடைக் காலத்தில் குளிர்ந்த நீர் போலவும், குளிர் காலத்தில் நல்ல வெயில் போலவும், பொருந்திச் சூழ்ந்துள்ளவர்கள் மனம் வெதும்பாமலும் ஒருகால் தன் மனத்தைச் சூழ்ந்துள்ளவர்கள் வெதும்பச் செய்து விட்டால் அதைத் தாங்கிக்கொண்டு மறந்தும் -- வாழத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்...’ என்று பொது வாழ்வுக்கு வேண்டிய ஒப்புரவு பற்றித் திருதாங்கூர் அடிகள் பலமுறை கூறியிருந்த பழைய அறிவுரையை எண்ணிக்கொண்டான் இளங்குமரன்.

முரடனாயிருந்து ஒளியற்றவனாகத் தோன்றினாலும் பிறர் வெறுப்பையும் - தூய்மையோடு பொற்சுடராயிருந்து ஒளிபரப்பினால் - பிறருடைய ஆசைகளையும், மோகங்களையும் எதிர்பார்த்து விலக்கிச் சுடாத நெருப்பாகவும் சுடுகின்ற தெருப்பாகவும் மாறிமாறி வாழ நேரும் வித்தையை எண்ணியபடியே கப்பலின் மேல் தளத்திலிருந்து வானத்தைப் பார்த்தான் இளங்குமரன். அவனுடைய முகத்திலும், தோளிலும், மார்பிலும் காலை வெயில் பட்டது. அவை தங்கள் களாகிய அங்கங்களாய் மின்னிப் பொற்சுடர் பரப்பின. உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒளிதரும் கதிரவனை வணங்கினான் ஒளிச் செல்வனாகிய இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மணி_பல்லவம்_4/பொற்சுடர்&oldid=1231606" இலிருந்து மீள்விக்கப்பட்டது