மணி பல்லவம் 4/10. காவியத்தில் கற்ற காதல்



10. காவியத்தில் கற்ற காதல்

'நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும் என்று தன் தலைவி சுரமஞ்சரியை வாழ்த்திவிட்டு அப்பாற் சென்ற வசந்தமாலை, சில நாழிகைகள் கழித்து மீண்டும் திரும்பி வந்த போது சுரமஞ்சரியை முற்றிலும் புதிய சூழ்நிலையில் புதிய கோலத்தில் பார்த்தாள். அவளைச் சுற்றிலும் அந்தப் பெருமாளிகையிலிருந்த பழைய ஏட்டுச்சுவடிகள் குவிந்து கிடந்தன.

சுரமஞ்சரியின் மாடத்தில் விதம்விதமான ஓவியங்கள், வகைவகையான காவியங்களின் ஏட்டுச் சுவடிகள், சீனத்துப் பட்டுக்கள், யவனக் கைவினை, நயம் மிக்க நுண் பொருள்கள், பாண்டி நாட்டுச் சிற்பிகள், ஐம்பொன்னிற் செய்த அழகிய சிற்பங்கள் எல்லாம் நிறைய இருந்தன. ஒவ்வொரு வகைப்பொருளை ஒவ்வொரு காலத்தில் விரும்பித் தேடிச் சேர்த்திருந்தாள் அவள். இந்த வகையில் அவள் ஆசையோடு தேடிச் சேர்த்த கடைசிப் பொருள் அல்லது பொருளோடு தேடிச் சேர்த்த கடைசி ஆசை இளங்குமரனின் ஓவியம்தான். அந்த ஓவியத்துக்கு ஆசைப்பட்ட பின் வேறு எதையும் தேடிச் சேர்க்கிற ஆசையே அவளுக்கு ஏற்படவில்லை. தொடர்ந்து வேறு ஆசைகளுக்கு மனம் தாவி விடாதபடி தன் எல்லையிலேயே மனத்தை நிற்கச் செய்யும் பரிபூரணமான ஆசைகளும் உலகத்தில் உண்டு. மலை உச்சியிலிருந்து உருண்டு விழுகிற கல் கடைசியாக ‘இனிமேல் இதற்கு அப்பால் உருள முடியாது’ என்பதுபோல ஒரு நிலையாகத் தங்கி விடுகிற எல்லையும் உண்டு அல்லவா? இளங்குமரன் என்ற எல்லையில் சுரமஞ்சரியும் அப்படித்தான் கடைசியாகவும் நிறைவாகவும் தன் நினைவைத் தங்க விட்டுவிட்டாள்.

அந்த எல்லைக்கு அப்பால் அதைவிட நிறைவாகவோ அதைவிட அழகாகவோ ஆசைப்படுவதற்கு வேறு ஏதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு. பண்ணோடு கலந்து நின்று இனிமை தரும் இசையைப் போல் அதற்கப்பால் விலகாமல் அதிலேயே பொருந்தி விட்டது அவள் ஆசை. தன்னுடைய பேதைப் பருவத்தில் உடம்பை அழகு செய்யும் பட்டுக்களுக்கும், அணி கலன்களுக்கும் வகை வகையாக ஆசைப்பட்டிருக்கிறாள் அவள். நினைவு தெரிந்து அறிவு வளர்ந்தபின் சுவடிகளுக்கும் ஓவியங்களுக்கும் ஆசைப்பட்டிருக்கிறாள். இந்த ஒவ்வொரு வகை ஆசையிலும் மனம் பித்தேறி அழுந்தியதைப் போலவே ஒரொரு சமயங்களில் சோர்ந்து சலித்துப் போகிற அநுபவமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. வீதியெல்லாம் சுற்றிவிட்டு நிலைக்கு வந்த தேரின் சக்கரத்தில் அப்போது தரையைத் தீண்டிக் கொண்டு இருக்கிற பகுதி ஏதுவோ அதுவே அதற்கு நிற்குமிடமாகி விடுவதுபோல் முன்பு சேர்த்த சுவடிகளையெல்லாம் ஊன்றிக் கற்க வேண்டுமென்ற ஆவலை அன்று அவள் அடைந்திருந்தாள். இளமையில் காவிரிப்பூம்பட்டினத்திலேயே புகழ்பெற்ற பெரும்புலவர் ஒருவரைக்கொண்டு தந்தையார் அவளுக்கும் வானவல்லிக்கும் இலக்கியங்களையும், காவியங்களையும் கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அவள் அவற்றைக் கற்ற காலமும் குறைவானது. கற்பிக்கப்பட்ட சுவடிகளும் குறைவானவை. தகடாக அறுத்து இழைத்த யானைத் தந்தத்திலும் மெல்லிய சந்தனப் பலகைகளிலும் உறையிட்டுப் பட்டு நூல்களால் இறுக்கிக் கட்டி அடுக்கப்பட்டிருந்த அந்த ஏட்டுச் சுவடிகளின்மேல் இன்று மறுபடியும் சுரமஞ்சரியின் கவனம் சென்றது. பெருமாளிகையின் சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் மறந்து விட்டு நினைவுகளின் தரத்தையும் எண்ணங்களின் உயரத்தையும் வளர்த்துக் கொள்வதற்காகக் காவியங்களிலும் இலக்கியங்களிலும் தன்மானத்தைச் செலுத்த வேண்டுமென்று தோன்றியது சுரமஞ்சரிக்கு. தான் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறவருடைய மனத்தின் உயரத்துக்குச் சமமாக இல்லாவிட்டாலும் மிகவும் குறைவாயில்லாமல் தன்னுடைய எண்ணங்களை வளர்த்துக் கொள்வதற்கு நினைத்தாள் அவள்.

மிகச் சிறிய கிளையில் தொங்கும் கனமான பெரிய பழத்தைப்போல் அவள் மனம் தாங்கிக் கொண்டிருக்கிற ஆவல் அவளுடைய ஆற்றலைக் காட்டிலும் பெரிதாயிருந்தது. அந்த ஆசைக்கு உரியவனோ, ‘பெண்ணே! உன்மேல் கருணை செலுத்த முடியும். அன்பு செலுத்த முடியாது’ என்று இறுமாப்போடு மறுமொழி சொல்லு கிறவனாக இருக்கிறான். அந்த இறுமாப்பை இளக்குவதற்குத் தன்னால் முடியுமா என்று அவள் பயந்த காலமும் உண்டு.

முதன் முதலாகக் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் யவன மல்லனை வெற்றி கொண்ட வீரனாக அவனைச் சந்தித்தபோது காவிரிப்பூம்பட்டினத்திலேயே திமிர் மிகுந்த அழகனாக அவனை உணர்ந்தாள் அவள். அடுத்தமுறை கப்பல் கரப்புத் தீவில் தனிமையில் சந்தித்த போது தன்மானம் நிறைந்த இளைஞனாக உணர்ந்தாள். அதற்குப் பின்பு நெடுங்காலத்துக்கு அப்புறம் நாளங்காடி யில் சமய வாதம் புரியும் ஞானச் செல்வனாகச் சந்தித்தபோது, பிறருடைய துக்கத்துக்கு இரங்கும் மனம் தான் செல்வம் என்று கூறி அருள்நகை பூக்கும் கருணை மறவனாகச் சந்தித்தாள். அதற்கும் அப்புறம் தன்னுடைய பூக்குடலையிலிருந்து அவனைக் கொல்லப் புறப்பட்ட பாம்பைக் கண்டு எல்லாரும் தன்மேல் சீறியபோது புன்னகையோடு தன்னைப் பொறுத்த அவனிடம் ‘நீங்கள் மகாகவிகளுக்கு உத்தம நாயகனாகிக் காவியங்களில் வாழ வேண்டிய பேராண்மையாளர்’ என்று, தானே அவனைப் புகழ்ந்து கூறியதையும் நினைத்துக் கொண்டாள், சுரமஞ்சரி. அந்தக் கருணை மறவன் மேல் தான் கொண்டிருக்கிற காதல், காவியங்களில் வருகிற அன்பைப்போல் அழியாததாகவும் நிலையான தூய்மை உடையதாகவும் இருக்க வேண்டும் என அவள் மனத்தில் உறுதி பிறந்திருந்தது. அந்த உறுதி ஒன்றுதான் அவள் மனத்தின் ஆசை நிரந்தரமாக நின்ற கடைசி எல்லையாக அவளை ஆக்கியிருந்தது.

இலக்கியங்களையும், காவியங்களையும் தங்கள் உறவையும் எண்ணிப் பார்த்துப் பழகிய காரணத்தால் ஏட்டுச் சுவடிகளில் வாழும் அந்த உணர்வுகளின் மணத்தில் திளைத்துத் திளைத்துத் தன் மனம் நிற்கும் எல்லையைத் தனது தவமாகவே ஆக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற பிடிவாதம் பிறந்தது அவளுக்கு. இந்தப் பிடிவாதம் பிறந்த பின்னால் தான் இருக்கும் மாடம், தன்னோடு துணையிருக்கும் வசந்தமாலை, தன் தந்தை, நகைவேழம்பர் எல்லாரும் எல்லாமும் அவளுக்கு மறந்தே போயினர்.

அன்று காலையில் சுரமஞ்சரியின் கையிற் கிடைத்த முதற் சுவடியில் அவள் மனத்தின் தவிப்புக்களையே மேலும் வளர்ப்பதுபோல் ஒரு பழைய பாடல் வந்து வாய்த்தது.

"வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும், இவ் உலகத்துக்
காணீர் என்றலோ அரிதோ
அதுநனி பேணிர் ஆகுவீர்...”

ஒரு தலைவனிடம் அவனாற் காதலிக்கப்படும் காதலியின் தோழி ஒருத்தி சொல்வதாக இப்பகுதி அமைக்கப்பட்டிருந்தது. “வேகமாகத் தொடுக்கிற அம்பின் நிழல்போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் உண்டாகிய வேகம் தெரிவதற்கு முன்பே மறைந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய உலக வாழ்வின் நிலையை நீங்கள் காணாதவர் இல்லை. இதை உணர்ந்து என் தலைவியை விட்டுப் பிரியாமல் அவள் மேல் நீங்கள் அன்பு செலுத்த வேண்டும்” என்று தன் தலைவியின் சார்பில் அந்தப் பாடலில் வருகிற தோழி தலைவனிடம் கூறி வேண்டிக் கொள்வதாக இருந்த இப்பகுதியை ஏட்டிலிருந்து சுரமஞ்சரி படித்துக்கொண்டிருந்த போதுதான் வசந்தமாலையும் அவளருகே வந்து நின்றாள்.

‘வில்லில் நாணேற்றி வேகமாகத் தொடுக்கப்பட்டுச் செல்கிற அம்பின் நிழலைப் போல் இந்த வாழ்க்கையும் இதன் இளமைப் பருவத்துச் சுகங்களும் வேகமாக உண்டாக்கிய சுவடு தெரிவதற்கு முன்பே அழிந்து கொண்டிருக்கின்றனவே!’ என்ற கருத்துள்ள பகுதியை இரண்டாம் முறையாகப் படிக்கும்போது சுரமஞ்சரிக்குக் கண் கலங்கிவிட்டது. இதை இப்படியே அவரிடம் யாராவது போய்ச் சொல்லமாட்டார்களா? இதையும் சொல்லி, என் துக்கத்தையும் விவரித்து அவரை என் மேல் அநுதாபமும் கொள்ளச் செய்யும் திறமை வாய்ந்த தோழிகள் யாருமே எனக்கு இல்லையா? என்று எண்ணி எண்ணி அந்தப் பகுதிக்கு மேல் பாடலில் மனம் செல்லாமல் இளங்குமரனுடைய முகத்தை நினைத்துக் கொண்டாள் சுரமஞ்சரி.

மூன்றாவது முறையாக இதே பகுதியைத் தன் தோழி வசந்தமாலைக்கும் படித்துக் கூறிவிட்டு, “இப்படித் திறமையாக அவரிடம் பேசி என் உணர்ச்சிகளையெல்லாம் அழகான உவமானத்தினால் விளக்குவதற்கு உன்னைப் போல் ஒரு தோழியால் முடியுமோ? வசந்த மாலை!” என்று ஏக்கத்தோடு அவளைக் கேட்டாள் சுரமஞ்சரி.

வசந்தமாலை இதற்கு என்ன மறுமொழி கூறுவதென்று அறியாமல் திகைத்தாள்; சுரமஞ்சரி அவளுடைய திகைப்பைப் பார்த்துவிட்டு, “நான் சொல்லியதே உனக்குப் புரியவில்லை போலிருக்கிறதே வசந்தமாலை!” என்று தன் தோழியைக் கேட்டாள்.

“புரிகிறது அம்மா! ஆனால் உங்கள் துன்பத்தை அவரிடம் திறமையாக எடுத்துச் சொல்வதற்காகவாவது நான் ஒரு கவியாகப் பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் துன்பங்களையும் தப்புக்களையும் ஏக்கங்களையும்கூட அழகாகச் சொல்லுகிற திறமை கவிகளுக்கு மட்டும்தான் இருப்பதாகத் தெரிகிறது. அடுத்த பிறவியிலாவது உங்களுக்குத் தோழியாகப் பிறந்து கவியாகவும் விளங்கி நீங்கள் அன்பு செலுத்துகிறவரிடம் போய் உங்களுக்காக உவமைகளையும், உருவங்களையும் கூறி, அவருடைய மனத்தை இளக்க வேண்டும்போல எனக்கு ஆசையாயிருக்கிறது.’

“போடீ வேலையற்றவளே. இந்தப் பிறவியின் ஆசைகளே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதற்குள் நீ அடுத்த பிறவிக்குப் போய்விட்டாயே?” என்று தோழிக்குப் பதில் கூறியபோது சுரமஞ்சரியின் கண்களில் தெரிந்த அழுகை குரலிலும் ஒலித்தது. அப்போது அவள் கைகளிலிருந்த அந்த ஏடு கண்ணீரில் நனைந்து கொண்டிருந்தது. தன் தலைவியை அழச் செய்த அந்த ஏடுகளின்மேல் கோபம் கோபமாக வந்தது வசந்தமாலைக்கு. அதே சமயத்தில் தலைவி எதற்காக அழுகிறாள் என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டது. ஏட்டிலே கண்ட பாட்டுக்காக அழுகிறாளா, பாட்டிலே திகழும் கருத்தால் தன் மனம் எவனை நினைவு கூர்ந்ததோ அவனுக்காக அவனை எண்ணி அழுகிறாளா என்று ஒன்றும் தெளிவாகப் புரியாமல் மருண்டாள் வசந்தமாலை. இதுவரை என்றும் ஏற்பட்டிருக்க முடியாத நிறைந்த அநுதாபம் அன்று வசந்தமாலைக்குத் தன் தலைவியின்மேல் ஏற்பட்டது.