மணி பல்லவம் 4/12. வழி இருண்டது

12. வழி இருண்டது

தான் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் , எதிரி இரண்டாவது முறையாகவும் அதைச் சொல்லும்படி தன்னை அழுத்திக் கேட்கவே, பெருநிதிச் செல்வருக்குக் கலக்கம் ஏற்பட்டது. ‘இதை எதிராளி நம்புவானோ, மாட்டானோ’ என்று தானே பயந்தபடி சொல்கிற வார்த்தைகளை எதிராளியே இன்னொரு முறை சொல்லும்படி திருப்பிக் கேட்டுவிட்டால் பொய்யைப் படைத்துச் சொல்லியவனுக்கே தான் படைத்த பொய்யில் நம்பிக்கையும் பற்றும் குன்றிப் போய்விடுகிறது. இயல்பாக ஏற்படாமல் போலியாக ஏற்படுத்திக் கொண்ட ஆத்திரத்தினால், “செல்வம் செல்வம் என்று நீ பறந்த பேராசை திரும்படி உனக்கு வேண்டியதை இங்கிருந்து வாரிக்கொண்டு போகலாமே?” என்று பொருளையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பேசிவிட்டாலும் அதே பேச்சையே இன்னும் ஒருமுறை பேசும்படி நகைவேழம்பர் கேட்டபோது பழைய கொதிப்போடும், பழைய வேகத்தோடும் பேச வரவில்லை. ஏதோ பேசினோம் என்று பேர் செய்வது போல் பேசினார் அவர்.

“இங்கிருந்து உங்களுக்கு வேண்டியதை வாரிக் கொண்டு போகலாம் என்று சொன்னேன்...”

“வேண்டியதை என்றால்...?”

“எதை வேண்டுமானாலும் வாரிக்கொண்டு போகலாம் என்று சொல்கிறேன்.”

“இன்னும் ஒருமுறை நன்றாகச் சிந்தித்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்.... ‘எதை வேண்டுமானாலும்’ என்று நீங்கள் சொல்லுகிறபோது அதில் எல்லாமே அடங்கிவிடுகிறது. ஒன்றும் மீதமில்லை.”

“நீ நஞ்சினும் கொடிய வஞ்சக அரக்கன், எதையும் மீதம் வைக்கமாட்டாய் என்று உணர்ந்துதான் அப்படிச் சொல்கிறேன்.”

“உணர்ந்துதானே அப்படிச் சொல்கிறீர்கள். நன்றி ஐயா நன்றி! நான் இப்போது இங்கிருந்து எனக்கு வேண்டிய மிக முக்கியமானதொரு பொருளைத்தான் வாரிக் கொண்டு போக எண்ணுகிறேன். அந்த முக்கியமான பொருள் இங்கே குவிந்திருக்கிற செல்வங்களை விடப் பெரியது. அதாவது நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கேதான் இருக்கிறது” என்று உள்ளடங்கிய கொதிப்போடு சொல்லிக் கொண்டே வந்த நகைவேழம்பர் குபீரென்று எரிமலை யாய்ச் சீறிப் பாய்ந்து பெருநிதிச் செல்வரின் நெஞ்சுக் குழியில் கையை மடக்கி வைத்து அழுத்தினார். நெஞ்சுக்குழியில் பாராங்கல்லைத் தூக்கி வைத்ததைப் போலப் பாரம் நிறைந்ததாயிருந்தது அந்தக் கை.

“நான் வாரிக் கொண்டு போக வேண்டிய பொருள் இதோ இங்கே இருக்கிறது.”

இந்த வார்த்தைகளை மீண்டும் நகைவேழம்பர் கூறியபோது உலகம் அழிகிற ஊழியன் கடைசிக் குரல் போல் அவை பயங்கரமாய் ஒலித்தன. பெருநிதிச் செல்வரின் நெஞ்சு வெடித்துச் சிதறிவிடுவதற்குத் துடிப்பதுபோல் அவ்வளவு பரபரப்போடு அடித்துக் கொண்டது.

“இதோ புடைத்தும், தணிந்தும் இந்த இடத்தில் மூச்சு விட்டுத் துடிக்கிறதே! இந்த உயிரை முதலில் இங்கிருந்து நான் வாரிக்கொண்டு போக வேண்டும்.”

காற்று சீறிக் கடல் பொங்குகிற ஊழிக் காலத்தின் கொடுமையை நினைவூட்டுகிற சீரழிவின் சொல்லுருவமாய் இந்த வார்த்தைகள் மறுபடியும் நகைவேழம்பருடைய நாவிலிருந்து ஒலித்தன. இப்போது அவருடைய குரல் ஒலி முன்னைக் காட்டிலும் உரத்திருந்தது. சொற்கள் தடுமாறி உடைந்த குரலில் அவருக்கு மறுமொழி கூறினார், பெருநிதிச் செல்வர்.

“என்னிடமிருந்து நீ எடுத்துக்கொண்டு போக வேண்டிய பொருள் இதுதான் என்று உன் மனத்தில் உறுதி செய்து கொண்டு விட்டாயானால் உன்னை நான் மறுக்கவில்லை. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த உடம்புக்குள்ளிருந்து இது வாழ்வதற்குக் காரணமாயிருக்கிற விலைமதிப்பற்ற உயிர்ப் பொருளைக் கொள்ளை கொண்டு போகிறவன் நீயாகத்தான் இருப்பாய் என்று எனக்குத் தெரியும்! இது நான் எதிர் பார்த்ததுதான்.”

அப்படியானால் மிகவும் நல்லதாகப் போயிற்று. இதை நாம் இன்னாரிடம் இழந்துவிடுவோம் என்று எதிர்பார்த்து முன்பே இழப்பதற்கு ஆயத்தமாகிவிட்ட பொருளை இழப்பது வேதனைக்கு உரியதாக இராது.” "பேசு... நன்றாகப் பேசு... உனக்குத் தோன்றியதையெல்லாம் பேசு. இந்த மாளிகையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வளர்ந்து நான் உனக்கு அளித்த சோற்றுச் செருக்கு எல்லாம் தீரும் மட்டும் பேசிக் கொண்டிரு. இப்போது என் நெஞ்சை அழுத்திக் கொண்டு நிற்கிறாயே. இந்த முரட்டுக் கையில் ஓடுகிற வலிமை இதே பெருமாளிகையில் தின்று கொழுத்த வலிமை என்பதை நீ மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் மறந்துவிடுவதற்கு இயலாது. உலகத்தில் உதவிகளைப் பெற்றவர்கள் நன்றி மறந்து போய்விடும் கொடியவர்களாயிருக்கலாம். ஆனால் உதவி செய்தவர்கள் அப்படிச் செய்தோம் என்பதை மறந்து விட முடியாது.”

“இருக்கலாம். ஆனால் நன்றி பாராட்டுவதும் பழைய உதவிகளை எண்ணிக்கொண்டு புதிய கெடுதல்களுக்கு அடிமைப்படுவதும் கோழைகள் செய்ய வேண்டிய காரியங்கள்.”

“உதவியும் பயனும் தந்தவர்களைக் கொலை செய்ய வேண்டியதுதான் வீரன் செய்யும் காரியங்கள் போலிருக்கிறது.”

“உங்கள் மனத்தை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியை என்னிடம் எதற்காகக் கேட்கிறீர்களோ தெரியவில்லை. பலமுறை நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறீர்கள். ஒரு காரியத்தையே நீங்கள் செய்யும்போது அது வீரதீர சாதனையாகி விடுகிறது. அதே காரியத்தை நானும் செய்ய முன் வந்தால் அப்போது மட்டும் அதைக் கோழைத்தனம் என்கிறீர்களே, ஏன்? ஏழையின் திறமையை மட்டும் ஏன் இருட்டில் வைத்த ஓவியமாக்குகிறீர்கள்?”

இந்தக் கேள்விக்குப் பெருநிதிச் செல்வர் மறுமொழி கூறவில்லை. நகைவேழம்பரும் தமது பிடியை விடவில்லை. இருவருக்கும் இடையே அச்சமூட்டத்தக்க மெளனம் நிலவிய அந்த நேரத்தில் நிலவறைக்குள்ளே இறங்கும் படிகளில் சிலம்பொலியும் வளைகளின் ஒலியும் மெல்லக் கிளர்ந்து ஒலிக்கும்படி யாரோ நடந்து இறங்கி வருகிற ஒலி கேட்கவே, நகைவேழம்பர் பெருநிதிச் செல்வரைத் தம்முடைய முரட்டுப் பிடியிலிருந்து விடுதலை செய்துவிட்டுத் திரும்பினார். வருவது யார் என்று அறிந்துகொள்ளும் ஆவலில், பெருநிதிச்செல்வரின் கண்களும் படியிறங்குகிற பகுதியில் திரும்பின.

வானவல்லி மெல்ல அடிமேல் அடி வைத்துப் படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் அவளுடைய அன்னையும் பெருமாளிகைப் பணிப் பெண்கள் இருவரும் ஆக நான்கு பெண்கள் நிலவறைக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன காரியத்துக்காக அப்போது அங்கே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தனக்கு ஒருவிதத்தில் மிகவும் அருமையான பயனை விளைவிக்கத் தக்கதாக, அவர்களுடைய குறுக்கீடு அமைவதை எண்ணி எண்ணி வியந்தார் பெருநிதிச் செல்வர். அவர் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நிகழ்ச்சியில் அவரை முற்றிலும் கைவிட்டு விடுகிறாற் போல் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிட இருந்தது. நிலவறைக்குள் நின்றுகொண் டிருந்த நகைவேழம்பரையும் அவரையும் பார்த்து விட்டு ‘இப்போது இங்கே நுழைய வேண்டாம்’ என்று குறிப்போடு, திரும்புகிற எண்ணத்துடன் அந்தப் பெண்கள் தயங்கி மேலே மீண்டும் போக இருந்தபோது பெருநிதிச் செல்வரே முந்திக் கொண்டார். “வானவல்லி! நீயும் உன் அன்னையும் ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே என்பதற்காக நீங்கள் தயங்கித் திரும்ப வேண்டியதில்லை. உங்களுக்கு ஏதாவது மாலையில் கோப்பதற்கு முத்துக்கள் வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். வாருங்கள் உங்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கிக் கொள்ளலாம். நகைவேழம்பர் வேறு துணையிருக்கிறார். முத்துக்களை பொறுக்கித் தேர்ந்தெடுப்பதில் இணையற்ற திறமையுடையவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே யாராவது அப்புறம் பார்த்துக் கொள்ளலாமென்று திரும்பிப் போவார்களோ, வேண்டிய முத்துக்களைத் தேர்ந்தெடுக்கலாம் வாருங்கள்” என்று நிறைந்த உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை அழைத்தார். அவர்கள் இறங்கி வந்தார்கள்.

“நகைவேழம்பரே! எங்கே உங்களுடைய திறமை யைக் காட்டுங்கள், பார்க்கலாம். இவர்களுக்கு ஒளியிற் சிறந்த நல்ல முத்துக்கள் வேண்டும்” என்று பெருநிதிச் செல்வர் அவரை முதுகில் தட்டிக் கொடுத்தபோது அவருக்கு உள்ளே சினம் கொதித்தாலும் வெளிப்படையாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. முத்துக்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் குவியலுக்கருகே அவர் அமர்ந்து குனிந்தார். அந்தப் பெண்களும் அருகில் வந்து அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டார்கள்.

அரை நாழிகைக்குப் பின் அவர்களுக்கு வேண்டிய முத்துக்களைப் பொறுக்கி அனுப்பிவிட்டு, பெருநிதிச் செல்வர் நிலவறையில் நின்றிருந்த துணருகே அடக்க முடியாத ஆத்திரத்தோடு நகைவேழம்பர் திரும்பிப் பார்த்தபோது அங்கே அந்தத் தூண்தான் நின்றது. அதனருகே நின்றவரைக் காணவில்லை; வஞ்சக எண்ணத்தோடு அவர் தூணின் மறுபுறம் ஒளிந்திருக்கலாமோ என்று கைகளை ஓங்கிக்கொண்டு தூணின் பின்புறம் பாய்ந்தார் நகைவேழம்பர். தன்னால் ஆத்திரத்தோடு தேடப்பட்டவர் அப்போது அந்த நிலவறையின் எல்லையிலிருந்தே தப்பிப் போய்விட்டார் என்று நகை வேழம்பருக்குத் தீர்மானமாகத் தெரிந்தபோது தலை போகிற வேகத்தோடு பதறிப் பறந்து நிலவறையிலிருந்து வெளியேறும் படிகளில் தாவியேறினார் அவர். கடைசிப்படிக்கு அப்பால் கனமான இரும்புக் கதவு அடைக்கப்பட்டு, அது அடைக்கப்பட்டதனால் அந்த இடத்தில் இருளும் கனத்திருந்தது. தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். அதற்கு அப்பால் அவர் செல்ல வேண்டிய வழி மூடப்பட்டு இருண்டு போயிருந்தது.