மணி பல்லவம் 4/20. காளி கோட்டத்துக் கதவுகள்

20. காளி கோட்டத்துக் கதவுகள்

ள்ளிரவு நெருங்க நெருங்கப் பூம்புகாரின் பட்டினப்பாக்கத்து வீதிகளில் ஓசை ஒலிகள் சிறிது சிறிதாக அடங்கி மௌனம் கவிந்து கொண்டிருந்தது. தொலைவில் எங்கோ ஒரு கூத்தரங்கத்தில் பதினாறு மாத்திரைக் கால அளவு ஒலிக்கும் மிகப் பெரிய பார்வதிலோசனம் என்ற தாளத்தை யாரோ ஆர்வம் மிக்க கலைஞன் ஒருவன் வாசித்துக் கொண்டிருந்தான். ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடந்த அகலமான தெருக்களில் ஏதோ பயங்கரமான காரியத்திற்குச் சங்கேதம்போல இந்தத் தாளத்தின் ஓசை எதிரொலித்து அதிர்ந்து கொண்டி ருந்தது. ‘திடுதிம்’ ‘திடுதிம்’ என்று குடமுழாவில் இந்தத் தாளம் வாசிக்கப்படும் ஒலியைக் கேட்டபடியே இதற்கேற்ப வேகமாகப் பாதம் பெயர்த்து நடந்து பெரு மாளிகைக்குச் சென்றுகொண்டிருப்பது போல் தனிமையான வீதியில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் மிக விரைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

‘நள்ளிரவுக்கு இரண்டு நாழிகை இருக்கும்போதே வந்து விடுகிறேன்’ என்று பெருநிதிச் செல்வருக்குக் கொடுத்து விட்டு வந்திருந்த வாக்கைக் காப்பாற்று வதற்காகத் தன் மனம் அப்போது நினைத்துக் கொண்டு தவிக்கிற வேகத்திற்கு ஏற்பக் கால்களால் நடக்க முடியவில்லையே என்ற பரபரப்போடு போய்க் கொண்டிருந்தான் நாகர் குலத்து அருவாள மறவன்.

பிறரைப் பயமுறுத்துவதற்காகவும், கொலை செய் வதற்காகவும் நான் எத்தனையோ முறை கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறேன். ஆனால் இன்று மாலை என்னைக் கூப்பிட்டனுப்பி என்னிடம் பெருநிதிச் செல்வர் வேண்டிக் கொண்ட காரியமோ என்னையே பயமுறுத்தி விட்டதே!’ என்று அப்போது அருவாள

ம-47 மறவனுடைய மனம் எண்ணியது. கொடுமைக்கு எல்லாம் பெரிய கொடுமையாகிச் சூழ்ச்சிக்கு எல்லாம் பெரிய சூழ்ச்சியாகித் தங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டும் மாபெரும் கொடிய சக்தியாயிருந்த நகைவேழம்பரையே கொன்று தீர்த்துவிடச் சொல்லித் தன்னை அவர் தூண்டுவதை எண்ணியபோதே அருவாளனுக்கு உடம்பு சிலிர்த்தது. வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படுகிற நிலை அருவாளனுக்கு இன்றுவரை ஏற்பட்டதில்லை. இவ்வளவு பெரிய பூம்புகார் நகரத்தில் இரண்டே இரண்டு பேர்தான் அவனுக்கு வியப்பையும், மலைப்பையும் உண்டாக்கியிருக்கிறார்கள். அந்த இருவரில் ஒருவரை அவன் இன்றிரவு தன் கையாலேயே கொல்லப் போகிறான், இந்தக் கொலையைச் செய்வதன் மூலமே மற்றொருவருக்கு நன்றி செலுத்தப் போகிறான். கடைசியில் இந்த நகரில் இனிமேல் அவனுடைய மலைப்புக்குரியவராக ஒரே ஒருவர்தான் மீதமிருக்கப் போகிறார். அந்த ஒருவர் யாரோ அவருக்கு இனி அவன் ஆட்பட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால், நீண்ட நாட்களாக அவன் அவருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறான். சோற்றுக் கடனும் நன்றிகடனும் படுவது பொருட்கடன் படுவதைவிட வேதனையானது என்று, இந்த விநாடியில் தான் செய்வதற்குப் போய்க் கொண்டிருந்த காரியத்தினால் நன்றாக உணர்ந்திருந்தான் அருவாளன். இந்த அருவருப்பும், உணர்ச்சியும் அவன் மனத்தினுள் ஏற்பட்ட கணத்தில் தொலைவாக எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த பார்வதிலோசனம் என்ற தாளம் குபீரென்று முன்பு ஒலித்ததை விடக் கடுமையாகிப் பெரியதாய் அதிர்ந்து பூம்புகார் நகரத்தையே கிடுகிடுக்கச் செய்வது போலப் பிரமையை உண்டாக்கிற்று. அருவாளனால் அந்த நேரத்தில் கேட்டுப் பொறுத்துக்கொள்ள முடியாத கொடுமையான ஒலியாயிருந்தது அது.

அந்த இராப்போதில் அருவாளனும் அவனுடைய கூட்டாளியும் பெருமாளிகையை நெருங்கியபோது அது நிசப்தமாயிருந்தது. அன்று மாலையில் அருவாளனை அழைத்துப் போவதற்காக வந்திருந்த அதே காவலன் பெருமாளிகை வாயிலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அருவாளனையும் அவனோடு வந்த வனையும் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு சைகை செய்து அழைத்துக் கொண்டு போய் ஓசையற்ற இருண்ட மாளிகையின் முன்கூடங்களைக் கடந்து பெரு நிதிச் செல்வருடைய அந்தரங்கமான பகுதியில் கொண்டு சேர்த்தான் அந்தக் காவலன்.

ஏதோ பெரிய விளைவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற பரந்த மௌனம்தான் அங்கு நிலவியது. அருவாளனோடு உடன் வந்திருந்த மற்றொரு நாகனை வெளியே இருக்கச் செய்துவிட்டுப் பெருநிதிச் செல்வரும் அருவாளனும் தனியே சிறிது நேரம் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். சிறிது நாழிகைக்குப் பின்பு முன்னேற்பா!.டாகத் திட்டமிட்ட கொலை எண்ணத் தோடு நகைவேழம்பர் அடைக்கப்பட்டிருந்த நிதியறைக்குள் அவர்கள் மூவரும் இருண்ட நிழல்களே இருளில் படியிறங்கிச் செல்வது போலச் சென்றபோது அந்தக் காரியத்தைப் பார்க்க இரவுக்கே வெட்கமாக இருந்ததோ, என்னவோ? எங்கும் அடர்ந்து செறிந்து கொண்டு, இருளே, நாணத்தோடு இந்தச் செயலைக் கூர்ந்து கவனிப்பது போலிருந்தது அது.

அருவாளனும், பெருநிதிச் செல்வரும் தத்தம் கைகளில் உருவிய வாளுடனும் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறவனுடைய வரம்பில்லாத எதிர்ப்பை எந்தக் கணமும் தங்களுக்கு மிக அண்மையில் எதிர்பார்க்கிற கவனத்துடனும் நிலவறையில் இறங்கியபின் மூன்றாமவன் அவர்கள் செய்யப் போகிற காரியத்துக்கு ஒளி தருவதற்காகத் தன்னிடம் அவர்களே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி நிலவறைக்காகக் கீழே இறங்கும் வழியில் மூன்றாவது படியிலோ நான்காவது படியிலோ நின்று கொண்டு தீப்பந்தத்தைக் காண்பித்தான்.

ஆனால் அந்தத் தீப்பந்தத்தின் ஒளி நிலவறைப் படிகளுக்குக் கீழே பரவிக் கண்களுக்குப் புலப்பட வைத்த காட்சியைப் பார்த்த பின்புதான் அருவாளனுக்கும், பெருநிதிச் செல்வருக்கும் அப்போது தாங்கள் செய்ய வேண்டிய காரியத்துக்காக எடுத்துக் கொண்ட கவனமும், அடைந்திருந்த பரபரப்பும் அனாவசியமானவை என்று புரிந்தது. அந்தச் சமயத்தில் அவ்வளவு மிகையான முயற்சி செய்து தாங்க வேண்டிய எதிர்பையோ, தாக்குதலையோ – அங்கிருக்கும் எதிரியிடமிருந்து பெற வழியில்லை என்று அந்த எதிரி கிடந்த சூழ்நிலையிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. பெருநிதிச் செல்வர் அருவாளனின் காதருகே மெல்லச் சொன்னார்:–

“இந்த ஒற்றைக் கண்ணனை எதிலும் முழுமையாக நம்பி விடுவதற்கு இல்லை. நீயும் நானும் அருகில் வருகிறவரை இப்படிச் சோர்ந்து சுருண்டு விழுந்து கிடப்பது போலப் பொய்யாகக் கிடந்து விட்டு நாம் இருவரும் பக்கத்தில் நெருங்கியதும் திடீரென்று எழுந்திருந்து பாய்ந்தாலும் பாய்வான்; உலகத்தில் உள்ள தீமைகள் எல்லாம் இவன் நினைவிலிருந்து தான் தொடங்க முடியும் என்பதை நீ மறந்து விடாதே அருவாளா!”

அப்போது அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டுவிட்டு ‘யாரைத்தான் இந்த உலகில் நம்ப முடிகிறது!’ என்று தன் மனத்திற்குள்ளேயே நினைத்துச் சிரித்துக்கொண்டான் அருவாளன்.

இவர் விழுந்து கிடக்கிற நிலையைப் பார்த்தால் எனக்கு அப்படித் தோன்றவில்லை ஐயா! அடிபட்டு விழுந்திருப்பது போல்தான் தெரிகிறது. அதோ பாருங்கள் குருதி கசியும் காயங்கள் தெரிகின்றன. தரையிலும் குருதி வடிந்திருக்கிறது. நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து கடலில் கற்பூர மரக்கலம் தீப்பற்றியதால் நீந்திக் கடந்து வந்தது தொடங்கி இவர் இந்த விநாடிவரை பட்டினி கிடக்கிறார் என்றும் தெரிகிறது. ஆகவே பொய்யாக நடித்து ஏமாற்ற வேண்டிய அவசியம் இப்போது இவருக்கு இல்லை. உங்களுக்குச் சந்தேகமாக இருந்தால் நீங்கள் விலகி நிற்கலாம். இவரை நான் கவனிக்கிறேன்” என்று பெருநிதிச் செல்வரிடம் கூறிவிட்டுக் கீழே குனிந்து நோக்கினான் அருவாளன், பெரு நிதிச் செல்வர் விலகியே நின்றார். அருவாளன் பார்த்ததில் நகைவேழம்பர் பிரக்ஞையின்றித் துவண்டு கிடந்தார். உடலில் பல பகுதிகளில் ஆழமான காயங்களும், ஊமை அடி களும் பட்டிருந்தன. முழங்கால் மூட்டியில் இரத்தம் பெருகி வடிந்து தணிந்திருப்பதைப் பார்த்துப் புரிந்து’ கொண்டான் அருவாளன்.

நகைவேழம்பருடைடய முழங்காலில் அந்த இடத்தை அருவாளன் தொட்டபோது கிணற்றுக்குள்ளிருந்து மரண வேதனையோடு பேசுகிறாற் போன்ற நலிந்த குரலில் வலியோடு அவர் முனகினார். ‘மூச்சு இன்னும் இருக்கிறது’ என்பதைத் தவிர அதிகமான பலம் எதுவும் அந்த உடம்பில் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. கற்பூரத் தீயினால் காந்திப்போய்க் கருகி, எரிந்த புண்களும் அங்கங்கே அந்த உடலிலே தெரிந்தன. மூடி அவிந்து போகாமல் பார்ப்பதற்கு மீதமிருந்த ஒரே ஒரு கண்ணும் கூடத் தளர்ந்து குழிந்து வாடிச் சொருகி இமையின் கீழ் இடுங்கியிருந்தது. புண்ணைப் பார்ப்பது போல் விகாரமாகத் தோன்றிய அந்தப் பூத உடம்பின் அருகேயிருந்து விலகி மெல்ல எழுந்து நின்று கொண்டு இன்னதென்று விளக்கிச் சொல்ல முடியாத ஏதோ ஒரு மாற்றம் தன்னுடைய குரலில் ஒளிப்பதைத் தானே தவிர்த்துக் கொள்ளவோ, மாற்றிக் கொள்ளவோ, முடியாமல் பெருநிதிச் செல்வரிடம் பேசினான் அருவாளன்.

“எந்த உயிரை இந்த உடம்பிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று இவ்வளவு முன்னேற்பாடும் திட்டமும் செய்தீர்களோ, அந்த உயிருக்குரியவர் இப்போதே முக்கால்வாசி இறந்துபோய் விட்டார் போலத் தோன்றுகின்றதே ஐயா...”

அருவாளன் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டு இவற்றுக்காகப் பெரிதும் மகிழவேண்டும் போல ஆசை யாயிருந்தும்கூட அருவாளனுக்குத் தெரியும்படி இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று தந்திரமாக மாற்றிக்கொண்டார் அவர்.

“அப்படி முடிந்த முடிவாகச் சொல்லி விடாதே அருவாளா! இப்படிப்பட்ட மனிதர்களுக்குச் சாவதற்கு விநாடி நேரம் இருக்கும் போது கூட ஆவேசம் வருவதுண்டு.”

“முக்கால்வாசி தனக்குத்தானே செத்துப்போய் விட்ட உயிரை மேலும் வலிந்து கொல்ல வேண்டுமென்று கருதி வாளெடுப்பது வீரமுள்ளவர்களுக்குத் தகுமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா!” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்த்துத் தன் முகத்தை நோக்கிய அருவாளனைத் தனது பார்வையாலேயே அளந்தார் பெருநிதிச் செல்வர். அவருடைய சந்தேகத்தைப் புரிந்து கொண்ட அருவாள நாகன் அதை மாற்றிவிட வேண்டும் என்ற தீர்மானத்தோடு மேலே படியில் தீப்பந்தத்துடனே நின்ற தன் தோழனை இன்னும் கீழிறங்கி மிக அருகே வந்துவிடுமாறு கையை ஆட்டி அழைத்தான்.

‘சந்தேகமும் அவநம்பிக்கையும் இரட்டைப் பிறவிகள். இரண்டும் மனத்தின் பலவீனத்திலிருந்துதான் பிறக்கின்றன’ என்று எதிரேயிருந்த பெருநிதிச் செல்வருடைய முகத்தில் காணும் உணர்வுகளைக் கொண்டு நினைத்தான் அருவாளன். எதிர்த்துப் போரிடவோ, பாய்ந்து தாக்கவோ, நகை வேழம்பருடைய உடலில் அப்போது சிறிதளவுகூடத் தெம்பில்லை என்பதை அருவாள நாகன் அவருக்கு நிதரிசனமாக நிரூபித்த பின்புதான் அவனை நோக்கி வேறு ஒரு கட்டளையிட்டார் அவர்.

“அருவாளா! இது இந்த மாளிகையின் நிதி அறை! இவரைப்போல் மிகக் கொடிய ஒருவர் ‘இங்குதான் இறந்து போனார்’ என்ற கெட்ட நினைப்போடு இந்த இடத்திற்குள் நுழையும் போதெல்லாம் எனக்கோ என்னுடைய இந்தச் செல்வத்தை ஆளப்போகும் வழி முறையினருக்கோ சிறிதும் பயமோ அமங்கலமான எண்ணமோ ஏற்படக்கூடாது. நீயும், உன் கூட்டாளியும் பாவப் புண்கள் நிறைந்த இந்த உடம்பை இங்கிருந்து கடத்திக்கொண்டு போய்ச் சக்கரவாளத்தைச் சுற்றியிருக்கும் காடுகளில் எங்காவது போட்டு விட்டால் நல்லது. ஆனால் அப்படிப் போட்டு விட்டு உடனே திரும்பி வந்து விடாதே. இந்த மனிதரின் உடம்பில் இருந்த உயிர் பிரிந்து நீங்கிவிட்டது என்று முடிவாய் அறிந்து கொண்டு வந்து நீ எனக்குத் தெரிவித்த பின்புதான் என் மனத்தின் எல்லையிலிருந்து கவலைகள் பிரிந்து நீங்கும். விடிகிறவரை எவ்வளவு நேரமானாலும் நீ வந்து சொல்லப்போகிற செய்திக்காகக் காத்துக் கொண்டிருப்பேன் நான்.”

இதைக் கேட்ட பின்பு தன் மனம் எந்த உணர்வுகளையும் சிந்திக்க முடியாதபடி தான் அவருக்குப் பட்டிருந்த சோற்றுக் கடனைத் தீர்ப்பதற்கு முற்படுவது போல் எந்திரமாக மாறினான் அருவாளன். அவர் சொல்லியதைச் செயற்படுத்துகிறவனாகித் தன் வலிமையை எல்லாம் பயன்படுத்தி நகைவேழம்பருடைய உடம்பைத் தூக்கித் தோளில் சார்த்திக் கொண்டான். தீப்பந்தத்தை அங்கேயே வைத்துவிட்டுத் தன்னோடு பின் தொடருமாறு தன் கூட்டாளியிடம் கூறிவிட்டுப் படிகளில் ஏறினான் அருவாளன். திண்மை வாய்ந்த அவனுடைய தோள்களின் பலம் நகைவேழம்பருடைய உடம்பாகிய சுமையைத் தாங்குவதனால் குறையவில்லை. அந்தச் சமயத்தில் தன் மனம் சுமந்து கொண்டிருந்த நினைவுகளின் சுமைதான் தனது பலத்தைக் குறைக்கும் பெருந்துன்பமாயிருந்தது அருவாளனுக்கு.

நகைவேழம்பரைச் சுமந்துகொண்டு அருவாளனும் அவனுடன் வந்தவனும் பெருமாளிகையிலிருந்து வெளியேறுமுன், “அருவாளா! நினைவு வைத்துக் கொள். நாளைக்குப் பூம்புகாரின் கதிரவன் உதிக்கும்போது இந்த ஒரு கண்ணுக்கும் பார்க்கும் ஆற்றல் இருக்கக்கூடாது” என்று தம் கையிலிருந்த ஊன்றுகோலின் நுனியினாலேயே அலட்சியமாக அவன் தோளில் சுமையாகி யிருந்த நகைவேழம்பரின் உடம்பைச் சுட்டிக் காட்டினார் பெருநிதிச் செல்வர்.

‘செய்கிறேன் ஐயா! நாளைக்கு உங்களுக்கும் எனக்கும் பொழுது விடியும். இவருக்கு மட்டும் விடியவே விடியாது. அவ்வளவு செய்தால் போதும் அல்லவா?’ என்று ஒருமுறை திரும்பி அவரிடம் கேட்டுவிட்டு மேலே நடந்தான் அருவாளன். அதன்பின் அவன் அங்கிருந்து நடந்த வேகத்தை நடையா, ஒட்டமா என்று பிரித்துச் சொல்ல முடியாது.

நான்கு நாழிகைக்குப் பின் சக்கரவாளக் கோட்டத்துக் காட்டின் உள்ளே பாழடைந்த காளிக்கோட்டம் ஒன்றில் போய்த்தான் தன்னுடைய தோள் சுமையை அவனால் இறக்குவதற்கு முடிந்தது. நரிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தோடும் அடர்த்தியான புதர்கள் சூழ்ந்த அந்தக் காளிக் கோட்டத்தின் முன்புறத்தில் தான் சுமந்து வந்த உடலைக் கிடத்திவிட்டு, முடிந்து போய்க் கொண்டிருக்கிற இந்த உயிரை தாமே இன்னும் விரைவில் முடித்துவிட்டு அறிவிக்க வேண்டியவரிடம் போய் அறிவித்துவிடலாமா? அல்லது தானே முடிகிற வரை இதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டுப் போகலாமா? என்று தயங்கியபோது வேறு ஒரு புதிய யோசனையும் அவனுக்கு உண்டாயிற்று.

‘இவரோ இன்று நிச்சயமாகச் சாகப் போகிறார். அதற்கு முன்னால் இவரைக் கொஞ்சம் வாழச்செய்து பார்த்தால் என்ன! அப்படிச் செய்தால் சாவதற்கு முந்திய இவரது எண்ண்ங்களையாவது நான் அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுமே? என்று நினைத்தான் அருவாளநாகன், தான் நினைத்ததைச் செயற் படுத்துவதற்கு அந்த இடத்துச் சூழ்நிலை ஏற்றதுதானா என்று அறிந்துகொள்ள முயல்வது போலச் சுற்றும் முற்றும் பார்த்தான் அவன்.

'நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; எனக்கு என்ன வந்தது?’ என்று அவனுக்குத் தன் மொழியில் எடுத்தெறிந்து பதில் சொல்வதைப் போலக் காளிகோட்டத்துத் திரிசூலத்தின் நுனியில் உட்கார்ந்திருந்த கோட்டான் ஒன்று நாலைந்து முறை தொடர்பாகக் கத்திவிட்டு விருட்டென்று எழும்பிப் பறந்து சென்றது. மனிதத் தலைபோல் தலையும் பருந்து உடலும் கொண்டு மயானங்களில் திரியும் ஆண்டலை எனப்படும் கொடிய பறவைகள் நாலைந்து காளிக் கோட்டத்து இடி சுவரில் இருந்தன. பிரம்மாண்டமான மண் பிரதிமை ஒன்று கோட்டத்துக்குள் நுழைகிற இடத்தின் வலது பக்கமாகத் தன் குழிந்த கண்களை உருட்டி விழித்தபடியிருந்தது. வேறு எந்த அத்திய மனிதர்களின் அரவமும் அப்போது அங்கே இல்லை.

“தம்பி! காளி கோட்டத்தின் உட்பக்கம் யாராவது இருக்கிறார்களா என்று போய் பார்த்துவா” என உடனிருந்த தோழனை ஏவினான் அருவாளன். அவன் போய்ப் பார்த்துவிட்டு உள்ளே வந்து காளி சிலையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகச் சொன்னான்.

அப்போது கீழே கிடத்தியிருந்த நகைவேழம்பரின் உடல் மெல்ல அசைந்தது. ஈனசுவரத்தில் அவர் ஏதோ முனகுவதும் கேட்டது. அவரருகே சென்று மண்டியிட்டு அமர்ந்துகொண்டே அருவாளன், “தம்பீ! இப்போது இவருக்குச் சற்றே சக்தியூட்டிச் சிறிது நேரம் இவரைப் பேசச் செய்தால் ஏதாவது பயனுள்ள செய்திகள் இவரிடமிருந்து நமக்குத் தெரியலாமென்று நான் எண்ணுகிறேன். நீ போய்ப் பக்கத்தில் எங்காவது தண்ணீர் இருந்தால் கொண்டு வா. தண்ணீர் மட்டும் போதாது. இதோ இந்தத் திரிசூலத்துக்கு மேலே உள்ள நெல்லி மரக்கிளையில் அம்மானைக் காய்களைப் போல் முற்றிக் கனிந்த பெரிய பெரிய நெல்லிக்கனிகள் சரம் சரமாய்த் தொங்குகின்றன. அவற்றில் நாலு கனிகளைப் பூறித்துக் கல்லில் தட்டி நீரில் கலந்து, அந்தச் சாற்றை இவருடைய வாயில் ஊற்றிப் பார்க்கலாம். இந்த இடத்தில் அதைவிட, அதிகமாகச் சத்துள்ள உணவு எதையும் இப்போது நாம் இவருக்குத் தருவதற்கு வழியில்லை” என்று அங்கே அருகில் தன்னுடன் இருந்தவனை ஏவினான். ‘பெருநிதிச் செல்வருக்கும் நகைவேழம் பருக்கும் என்ன காரணத்தினால் இத்தனை பெரிய முறிவு ஏற்பட்டது? இவரைக் கொன்று தீர்த்து விட்டுத் தாம் மட்டும் தனியே நிமிர்ந்து நிற்க வேண்டுமென்று ஆசைப்படும் அளவுக்கு அவர் இவர்மேல் வைரம் கொண்டது என்?’ என்பன போல் தன் மனத்தினுள் விடைபெறாத மலட்டு வினாக்களாய் நிற்கும் பல சந்தேகங்களைச் செத்துப் போவதற்கு இருக்கும் இந்த ஒற்றைக் கண் மனிதர் உயிருடன் இருக்கும் போதே இவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டுவிட வேண்டு மென்று அந்தரங்கமாக உண்டான நைப்பாசையை அருவாளனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

‘கொடுமையின் இலக்கணமாக விளங்கிய இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு இப்படி ஒரு பரிதாபமான சாவா?’ என்று எண்ணும்போதே இதன் இரகசியத்தை அறிந்து கொண்டு விட வேண்டும் என்ற ஆவல் அவனுடைய மனத்தில் உந்தியது.

நகைவேழம்பரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் வாயில் இனிய நெல்லிக்கனிச் சாற்றோடு கலந்த நீரை ஊற்றியும் அந்த முகத்திலிருந்த ஒற்றைக்கண் விழித்துக் கொண்டு தன்னைக் காணச் செய்வதற்காக அருவாளன் செய்த முயற்சிகள் வீண் போகவில்லை. அவர் கண் திறந்தார், மெல்ல மெல்ல வாய் திறந்து பேசவும் செய்தார். தன் எதிரே நிற்கிற கொலை மறவர்கள், தான் அப்போது கிடத்தப்பட்டிருந்த இடம், தன் நிலை, எல்லாவற்றையும் பார்த்துக் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளாமல், தனக்குத் தானாகவே புரிந்து கொண்டு ஒரு நிதானத்துக்கு வந்தபின் கிடத்தப்பட்ட இடத்தில் இருந்தே தலையை மட்டும் மெல்ல நிமிர்த்தி, "நீ அலைவாய்க்கரை யவனப்பாடியைச் சேர்ந்த நாகர் குலத்து அருவாள மறவன் அல்லவா?’ என்று அவனை நோக்கி அவன் பெயரோ, ஞாபகமோ சிறிதும் குன்றாமல் தம் குரல் மட்டும் குன்றிப்போய்க் கேட்டார் அவர். ‘ஆமாம்’ என்பதற்கு அறிகுறியாக அவரை நோக்கித் தலையாட்டினான் அருவாளன். அடுத்தகணம் அவனை நோக்கி வேகமாக அவரே மேலும் சொல்லலானார்:

‘நான் இப்போது எந்த நிலையில் இங்கே கொண்டு வந்து எதற்காகக் கிடத்தப்பட்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நீ எனக்கு விளக்கிச் சொல்லுவதற்கு ஆசைப் படாதே அப்பனே! அதற்கு அவசியமே இல்லை. சொல்லாமல் எனக்கே எல்லாம் புரிகிறது. இந்த ஒரே ஒரு கண்ணுக்கு உலகத்தைப் பார்க்கும் ஒளி எந்தக் கடைசி விநாடி வரை இருக்கிறதோ, அதுவரை எல்லாமே புரியும். கண்ணெதிரே பார்ப்பவற்றில் எல்லாம் ஒருவன் தன்னுடைய சாவை மட்டுமே காண்பதுபோல் தவிக்கின்ற தவிப்புத்தான் மரண வேதனையாக இருக்குமானால், அதையே இப்போது நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்று நீ புரிந்து கொள்ளலாம். இந்த வேதனையை மீறிக்கொண்டு எழுந்து நிற்க இப்போது எனக்கு வலிமை இல்லை. காலிலும் எலும்பு முறிந்திருக்கிறது. என்னுடைய இயல்பைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரியும். தெரியாதவற்றைக் கேள்விப்பட்டும் இருப்பாய். என்னைப் போன்ற ஒருவனுக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டதென்றாவது தெரிந்துகொள்ள நீ ஆசைப்படலாம். அப்படி ஆசைப் படுவது மனித இயற்கைதான். நானோ என்றும் என்னை மனிதனாகவே நினைத்துக் கொண்டதில்லை. என்னை ஒரு பெரிய அரக்கனாகப் பாவித்துக்கொண்டு அந்தப் பாவனையினாலேயே நான் பலமுறை பெருமைப்பட்டு இருக்கிறேன். கடைசியாக இப்போதும் எனக்கு அந்தப் பெருமை இருப்பதைத்தான் நான் உணர்கிறேன். பலபேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று பழகிய எனக்கு நான் சாகவேண்டும் என்றும் செத்துப்போய்க் கொண்டிருக்கிறேன் என்றும் உணர்வதுகூடப் பெரிதாக எதையும் இழக்கப் போவதுபோல் ஒரு மலைப்புக்குரிய விஷயமாகத் தோன்றவில்லை. சாக வேண்டியதுதான். ஆனால் இப்படி நான் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு செத்துப்போக வேண்டாம்போல என்னுள் நானே வளர்த்துக் கொண்டிருக்கிற அரக்கத்தன்மை எனக்கு நினைவூட்டுகிறது. பலபேரை கொன்றபோதுகூட இப்படி வஞ்சகமாக ஏமாற்றித்தான் கொன்றிருக்கிறேன். என்றாலும் நானே இப்படிச் சாக வேண்டிய அவசியம் எனக்கு வந்திருக்கக்கூடாதுதான். நான் பிறருக்குத் தீமைகள் புரிவதற்காகக் கடைப்பிடித்த வழிகளை என்னைத் தவிரப் பிறர் புரிந்துகொண்டு என்னிடமே செயற்படக்கூடாது என்று நினைக்கிற பேராசைக்காரனாகவே இதுவரை வளர்ந்துவிட்டேன் நான். இன்னும் சிறிது காலம் வாழவேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. காரணம் என்ன தெரியுமா? அப்படி வாழ்ந்தால் இப்போது இப்படி நான் சாவதற்கு ஏற்பாடு செய்தவரை வாழ விடாமல் எமனுலகுக்கு அனுப்பியிருப்பேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. முடிய வில்லையே என்பதற்காகவும் நான் வருத்தப்படக் கூடாது. இன்னும் வாழ்வதற்கு முடியவில்லையே என்பதற்காகவே வருத்தப்படாமல் மிகவும் தைரியமாகச் சாக வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என் நினைப்பில் இப்போது ஏதோ ஒன்று குறைகிறது அப்பனே! நான் அரக்கனாகவே என்னை இது வரை பாவித்துக் கொண்டிருந்தது தவறு! நானும் ஏதோ ஒரு வகையில் வெறும் மனிதன்தான் என்று பொல்லாத குறும்புக்குரல் ஒன்று என் மனத்திலிருந்து இந்தச் சாவு வேளையிலே எனக்குக் கேட்டுக் கொண்டே இருக்கிறது!

இதோ இந்தக் காளி கோட்டத்தின் பாழடைந்த கதவுகளைப் பார்! எவ்வளவு பழமையடைந்து விட்டன இவை சாகும்போது நானும் இப்படித்தான் ஆகி விட்டேன். என்னால் எல்லாவற்றையும் மூடி மறைக்க முடியவில்லை. என் மனத்தில் இறுகிப் போயிருந்த பல எண்ணங்கள் இப்போது உடைகின்றன. என்னால் எதையும் பாதுகாக்க முடியவில்லை! இந்தப் பழைய கதவுகளைப் போலவே எதையும் மறைத்துக் காக்க முடியாமல் நான் உடைந்திருக்கிறேன்.”

தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தவர் பேச்சை நிறுத்திவிட்டு அருவாள மறவனையும் அவனுடைய தோழனையும் உற்றுப் பார்க்கலானார்.

சில கணங்கள் மூன்று பேர்களுடைய கண் பார்வையும் ஒன்றிலொன்று இணைந்து பிரியாமல் இலயித்திருந்தது. காற்றின் ஒசை மட்டும்தான் அப்போது அப்பகுதியில் கேட்டது.

மறுபடியும் அவரே பேசத் தொடங்கினார்:

“தெரிந்தோ தெரியாமலோ இப்போது இந்தக் காளி கோவிலில் நீ என்னைக் கிடத்தியிருக்கும் இடம் நான் சாவதற்கு மிகவும் பொருத்தமானது. சந்தேகமாயிருந்தால் நீயே மறுபடி பார்! இப்போது நான் சாய்ந்துகொண் டிருக்கிற இடம் இந்தக் கோவிலின் பலிபீடம்.

இதில் ஒரு காலத்தில் நிறைய இரத்தக்கறை படிந்திருக்கும். மறுபடி இன்னும் படியப்போகிறது. அப்படிப் படியப்போகிற இரத்தம் என்னுடைய பாவ இரத்தமாக இருக்கும்.

“என்னைப் பலிகொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் பலி வாங்கிக் கொள்ள வேண்டியவர் மட்டும் ஏனோ இங்கு வரவில்லை. இந்தக் காளிகோட்டத்துப் புதரைச் சுற்றிலும் இப்போது ஊளையிடுகின்ற சுடுகாட்டு நரிகள் எல்லாம் என்னுடைய இரத்தத்துக் காகவும் இறைச்சிக்காகவும் ஊளையிட்டுக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து பார்க்க ஆசையாயிருக்கிறது எனக்கு. இந்தக் கற்பனையை எண்ணுவதில் எனக்குப் பயமே இல்லை.”