மணி பல்லவம் 4/5. கொதிப்பில் விளைந்த குரூரம்

5. கொதிப்பில் விளைந்த குரூரம்

ணிபல்லவத்துக்குச் செல்லும் கப்பலைப் பின் தொடர்ந்து படகில் சென்ற நகைவேழம்பரை எதிர் பார்த்துச் சீனத்துக் கப்பலின் தளத் திலேயே உச்சிப்போது வரை காத்தி ருந்தார் பெருநிதிச் செல்வர். பின்பு வெயிலின் கொடுமையைப் - பொறுத்துக்கொள்ள முடியாமல் கீழ்த்தளத்துக்கு வந்து அங்கிருந்தபடியே நகைவேழம்பர் திரும்பி வருவதை எதிர்பார்த்துச் சில நாழிகைகள் காத்திருந்தார். கற்பூரக் கப்பலின் உள்ளே கமழ்ந்த நறுமணம் ஏதோ ஒரு பெரிய கோவிலுக்குள் இருப்பது போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. வேறு ஒரு படகின் துணை கொண்டு கப்பலில் இருந்து கற்பூரம், பனிநீர், குங்குமம் முதலிய நறுமணப் பொருள்களை முழுவதும் பண்டகச் சாலைக்குள் இறக்கி முடிக்கும் போது கதிரவன் மறையும் தருணம் ஆகிவிட்டது. நகைவேழம்பர் சென்றிருந்த படகு திரும்பி வருகிறதா என்று பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்துப் போயிற்று. அவருக்கு. மேலும் சிறிது நேரம் பொழுதைக் கடத்துவதற்காக அந்தக் கப்பலின் தலைவனாகிய சீனனோடு அவர் பேச்சுக் கொடுத்தார். அதில் சிறிது நேரம் கடந்தது.

மருள் மாலை நேரம் முதிர்ந்து மெல்ல மெல்லப் போது இருட்டியது. கடற்கரையிலும், துறைமுகத்திலும் தீபங்கள் தென்பட்டன. கலங்கரை விளக்குகளின் உச்சியில் நெருப்பு மூட்டினார்கள். கடலுக்குள் சென்றிருக்கும் பரதவர்கள் திரும்பி வருவதற்கு அடையாளம் போல் கரையோரத்துப் பெருவீடுகளின் மாடங்களில் விளக்கு வரிசைகள் தோன்றின. பல்வேறு திசைகளின் நாடுகளிலிருந்து நீண்ட நாட்கள் கடற் பிரயாணம் செய்து கரையடைந்திருந்த கப்பற்காரர்களின் களியாட்டங்கள் தொடங்கி வளரும் நேரமாதலால் அப்போது பூம்புகார்த் துறைமுகம் இரவில் கொலுவிருக்கும் பேரரசிபோல் பொலியத் தொடங்கியிருந்தது. கப்பல்களின் தளங்களில் இருந்து இனிய இசைக் கருவிகள் ஒலித்தன. களிப்பில் மூழ்குவோர் கூவும் ஆரவாரக் குரல்கள் துறைமுகப் பரப்பின் எங்கும் எதிரொலித்தன. நடன நங்கையர்கள் ஆடும் நளின பாதசரங்களின் இனிய ஒலிகள் எங்கும் கிளர்ந்தன. துறைமுகத்தின் எதிரே கடற்பரப்பில் தொலைவிலிருந்து வரும் ஒளிப் புள்ளிகளை இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று எண்ணி எண்ணி அநுமானம் செய்தபின் அவை ஒன்றுமே அதுவாக இல்லாததை அறிந்து ஏமாந்து கொண்டிருந்த பெருநிதிச் செல்வர் இறுதியில், சீனத்துக் கப்பல் தலைவனிடமிருந்து ஒருவாறு விடை பெற்றுக் கொண்டு பெரு மாளிகைக்குப் புறப்பட்டு விட்டார். மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு போன நகைவேழம்பர் திரும்பி வந்தால் அவரிடம் தான் பெருமாளிகைக்குப் போய் விட்டதாகக் கூறி அவரையும் அங்கு அனுப்புமாறு சொல்லி ஏற்பாடு செய்துவிட்டுத் தாம் மட்டும் தனியாகவே திரும்பினார் பெருநிதிச் செல்வர்.

“இந்த அரைக் குருடனுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்ததே அதிகம். கப்பலில் வந்த களைப்புத் தாங்க முடியவில்லை. பெருமாளிகைக்குப் போய் உடலுக்கு இதமாகக் காய்ச்சிய தைலத்தைப் பூசிக் கொண்டு வெந்நீரில் ஆடவேண்டும். யாராவது ஒரு முரட்டு யவனப் பணியாளனைத் தைலம் தேய்த்துவிடச் சொன்னால் பயணம் செய்துவிட்டு சோர்வோடு வந்த உடலுக்குப் பரம சுகமாயிருக்கும். வெவெதுப்பாக அவி சுழலும் வெந்நீரில் குளித்துவிட்டு வயிறார உணவும் முடித்தால் இந்த உலகத்தையே விலையாகக் கொடுக்கலாம் போல் அவ்வளவு நல்ல உறக்கம் இரவில் வந்து கொஞ்சும். நன்றாக உறங்கிவிட்டு நாளைக்குப் பொழுது விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்! நகைவேழம்பர் திரும்பி வந்தாரா, வரவில்லையா என்பதைப் பற்றிக்கூட இனிமேல் நாளைக்குப் பொழுது விடிந்து கண் விழித்த பின்புதான் கவலைப்பட முடியும். வேறு எந்தக் கவலையும் குறுக்கிட்டு இன்று இந்தத் தூக்கத்தைக் கெடுத்து விடக்கூடாது. இன்று இப்போது நான் படுகிற கவலைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று நல்ல உணவு, இரண்டு ஆழ்ந்த தூக்கம். ‘கவலைதான் உறக்கத்துக்குப் பெரும் பகை’ என்று சுகபோகங்களைப் பற்றிய சுவையான சிந்தனையுடனே பெருமாளிகைக்குத் திரும்பியிருந்தார் பெருநிதிச் செல்வர். சொந்தச் சுகபோகங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குக் கூடத் தாம் தனியாயிருக்கும் போதுதான் அவருக்குச் சுதந்திரம். நகைவேழம்பர் கூட இருந்தால் சில பயங்களால் சொந்தச் சுகபோகங்களை நினைக்கக் கூடத் தோன்றாது அவருக்கு, தாம் சுகபோகங்களை ஆள முடிந்தவர் - என்றோ சுகபோகங்களுக்கு அதிபதி - என்றோ நினைப்புக்களை நினைத்துப் பெருமி தப்படுவதைக்கூட நகைவேழம்பர் தம் அருகிலிருக்கும் போது செய்வதற்குத் தயக்கமாகவோ அருவருப்பாகவோ இருக்கும் அவருக்கு. அதற்கு எத்தனையோ இரகசியக் காரணங்கள் இருந்தன. அவை பெருநிதிச் செல்வரே இரண்டாவதுமுறை சிந்தித்துப் பார்ப்பதற்கு அஞ்சுகிறவை. இன்று நகைவேழம்பர் அருகில் இல்லாததனால் தம் சுகபோகங்களைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. மனிதர்களில் சிலர் பக்கத்திலிருந்தால் தாங்கள் அப்படி யார் பக்கத்தில் நிற்கிறார்களோ அவர்களுடைய சிந்தனையே சுதந்திரமாக வளராதபடி செய்து கொண்டிருப்பார்கள். பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போல் பிறருடைய சிந்தனை தன்னிச்சையாக வளர முடியாமல் பிடித்துக் கொண்டு ஆட்டுகிற இத்தகைய மனிதர்களும் பேய்த்தன்மை பெற்றவர்களே. நகைவேழம்பரும் இப்படிப் பெருநிதிச் செல்வரைப் பேயாகப் பற்றிக் கொண்டு ஆட்டியவர்தான்.

இன்று இப்போது இந்த விநாடியில் அந்தப் பேய் தன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் தாம் சற்றே சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது பெருநிதிச் செல்வருக்கு சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்வதற்காகவாவது தன்னிச்சையாய் எதையேனும் செய்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர்.

ஒளிமிக்க கருங்கல்லில் செதுக்கிய மல்லனின் சிலை போலிருந்த வலிய ஊழியன் ஒருவன் அவரை அமரச் செய்து மருந்துப் பொருள்கள் இட்டுக் காய்ச்சிய தைலத்தை உடம்பில் நன்றாக அழுத்தித் தேய்த்து விட்டான். தம்முடைய உடம்பின் தசைத் தொகுதியை அந்த ஊழியனின் கைகள் அழுத்திப் பிடித்துப் பிசையும் போது கடற்பயணத்தினால் ஏற்பட்ட சோர்வு பஞ்சாய்ப் பறந்து போனது போலிருந்தது அவருக்கு, வெந்நீரில் குளித்து முடித்தபின் விதவிதமான வகைகளில் சுவையோடு சமைத்திருந்த உணவை உடனே தூக்கம் வந்து விடுவதற்கான பெருஞ் சோர்வு ஏற்படும்படி அவர் நிறைய உண்டார். கண்ணிமைகளில் வந்து கொஞ்சும் உறக்கத்தோடு பஞ்சணையில் போய் விழுந்தார். அதற்குப் பின்பு மறுநாள் போது விடிந்ததைக்கூட அவர் காணவில்லை. அவ்வளவு சுகமான உறக்கம்.

உறக்கம் கலைந்து அவர் கண்விழித்து எழுந்து பள்ளியறை வாயிலுக்கு வந்தபோது பொழுது விடித் திருப்பதுடன் எதிர்ப்புறமிருந்து எதிர்பாராத பகை உதயமாகித் தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதையும் கண்டார்.

தீக்காயம் பட்டிருந்த முகமும் நடுநடுவே கசங்கிக் கடல் நீரில் நனைந்ததால் முடை நாற்றமடைந்து சில இடங்களில் கருகியிருந்த ஆடையுமாகப் பொழுது விடிந்ததனால் எங்கோ போய்விட்ட இருளே விடிந்ததைப் பார்க்கும் ஆசையோடு ஓர் உருவமாகி வந்தது போல நகைவேழம்பர் எதிரே வந்து கொண்டிருந்தார். முற்றிலும் களியாமல் காய் நிலைமை மெல்ல மாறி கனியத் தொடங்கியிருந்த நாவற்காய் போல் அவருடைய ஒற்றைக் கண் செக்கச் செவேலென்று கனன்று கொண்டிருந்தது. கடலில் நீண்ட தொலைவு நீந்தி வந்த துன்பம் அவர் நின்ற கோலத்திலிருந்தே தெரிந்தது.

முதல்நாள் இரவு தான் அநுபவித்த அற்பச் சுகங்களைப் பறித்துக்கொண்டு போக வந்த பூதம் போல் எதிரே பாய்ந்து வருகிற இந்த இருளைப் பெருநிதிச் செல்வர் மருட்சியோடு பார்த்தார்.

எதிர்ப்புறமிருந்து இடி முழக்கம் கேட்டது. மின்னல் சீறியது. செங்காய் போலக் கனன்று மின்னும் ஒற்றைக் கண் பாயும் புலிப்பார்வை பார்த்தது. சொற்கள் ஊழிப் பெரும் புயலாய் ஒலித்தன.

“நான் சாகவில்லை! உயிரோடு பிழைத்துத்தான் வந்திருக்கிறேன்!... ஆனால் இப்போது என் நெஞ்சும் கைகளும் துடிக்கிற துடிப்பைப் பார்த்தால் யாரையாவது சாகவைக்க வேண்டும்போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. இப்போது என் உடம்பில் ஊறும் கொலை வெறியை எதைச் செய்தாவது நான் தணித்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நான் யாரையாவது கொல்ல வேண்டும். அல்லது என்னையே நான் கொன்று கொள்ள வேண்டும்!.. என்ன சொல்லுகிறீர்கள் பெருநிதிச் செல்வரே?..."

பெருநிதிச் செல்வருக்குச் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. கண்கள் மட்டும் விரிய விரிய விழித்துக் கொண்டு எதிரே பயத்தோடு பார்த்தன.

சொப்பனம் கண்டது போல் சிறிது போதுக்கு மட்டும் வாய்த்திருந்த முதல் நாள் சுகங்கள் மறைந்த இடம் தெரியாது போக எதிரே வந்து நிற்கும் துன்பத்தை எப்படி ஆற்றி வழிப்படுத்த முடியும் என்று சிந்திக்கலானார் பெருநிதிச் செல்வர். கோபத்திற்கு பதில் கோபம் என்கிற முறையில் தாமும் சீறினால் காரியம் கெட்டுவிடும் என்று அவருக்குத் தோன்றியது. எதிரிகளை வெல்லும் தந்திரங்களில் தலையாய தந்திரம் எதிரி சீறும்போது நாம் பயப்படுவதுபோல் சிரித்துக் கொண்டே நிதானமாயிருந்து விடுவதுதான்! எதிரியின் கோபத்தைக்கூட அலட்சியம் செய்ய வேண்டிய நிலையில் அப்போது இருந்தார் அவர்.