மணி பல்லவம் 4/8. ஆரம் அளித்த சிந்தனைகள்
தெருவில் வசந்தமாலை சுட்டிக் காட்டியவர்களைப் பார்த்ததும் சுரமஞ்சரி சற்றே வியப்பு அடைந்தாள். “முன்பு ஒரு சமயம் புறவீதியில் நம் தேரை வழி மறித்துக் கொண்டு நின்று இளங்குமரனைப் பற்றிக் கேள்வி கேட்டாளே, அந்த மறக்குடிப் பெண்ணான அவள். உடன் போகிறவன் அவளுடைய அண்ணனாக இருப்பான் போல் தெரிகிறது” என்று வசந்தமாலைக்குப் பதில் கூறிக்கொண்டே அவளைத் தன்னருகில் காணாமல் சுரமஞ்சளி பின்னால் திரும்பியபோது வசந்தமாலை ஊன்றுகோலின் யாளி முகப்பிடியை அதன் தண்டிலே வேகமாகப் பொருத்தித் திருகிக் கொண்டிருந்தாள். ஒரு கணம் அந்தச் செயலால் தன் கவனம் கவரப்பட்டு நின்ற சுரமஞ்சரி, தான் அப்போது சொல்ல வந்ததை நிறுத்திக் கொண்டு தோழியிடம் வேறு ஒரு கேள்வியைக் கேட்டாள்.
“வசந்தமாலை! அந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைத்துத்தானே திருகுகிறாய்?’ என்று கேட்டாள் சுரமஞ்சரி.
தலைவியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்று சில விநாடிகள் தயங்கியபின்... “ஆமாம்” என்ற பதில் வசந்தமாலையிடமிருந்து வந்தது. ஆனால் இந்தப் பதிலைக் கூறும்போது அவளுடைய முகம் இயல்பான உணர்வுடன் இல்லை. எதையோ பேச நினைத்துக்கொண்டே அந்த நினைப்புக்கு மாறான வேறொன்றைப் பேசும்போது தெரிகிற இரண்டுங்கெட்ட நிலையையே தோழியின் முகம் காட்டியது. அந்த முகத்தையும் தன் பேச்சையும் சேர்த்தே வீதிக்குத் திருப்பினாள் தோழி.
“சில நாட்களுக்கு முன்னால் புறவீதியில் விசாரித்துத் தெரிந்துகொண்டேனம்மா! இப்போது வீதியில் போய்க்கொண்டிருக்கிறாளே அந்த மறக்குடிப் பெண்ணின் பெயர் முல்லை என்று சொல்லுகிறார்கள். இந்த இரவு நேரத்தில் இங்கே பட்டினப்பாக்கத்து வீதியில் அவளுக்கும் அவள் தமையனுக்கும் என்னதான் காரியமிருக்குமோ, தெரியவில்லை...”
“நீ சொல்வதைப் பார்த்தால் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்குமே இந்தப் பட்டினப்பாக்கத்து வீதியில் எந்தக் காரியமும் இருக்கக் கூடாதென்பதுபோல் அல்லவா பேசுவதாகப் படுகிறது! அவளுக்குப் பட்டினப்பாக்கத்தில் என்ன காரியமோ? எத்தனை காரியமோ?” என்று சிறிது கடுமையாகவே பதில் சொன்னாள் சுரமஞ்சரி. காரணமின்றித் தலைவியின் குரலில் கடுமை பிறந்ததைப் புரிந்துகொள்ள முடியாமல் ஊன்றுகோலைக் கீழே கொடுத்து அனுப்புவதற்காகப் பணிப் பெண்ணைத் தேடிக்கொண்டு செல்வது போல அங்கிருந்து விலகிச் சென்றாள் வசந்தமாலை. தலைவி ஐம்படைத் தாலியைப் பற்றிக் கேள்வி கேட்டபோது தான் வீதியில் போகிற முல்லையைப் பற்றிச் சொல்லிப் பேச்சை மாற்றியதால் அவளுக்கு கோபம் வந்திருக்கலாமோ என்ற சந்தேகம் அப்போது வசந்தமாலையின் சிந்தனையில் படர்ந்தது. ‘தான் எதற்காகப் பேச்சை மாற்றுவதற்கு முயற்சி செய்தோம்’ என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பயம் பிடித்துக்கொண்டது. தலைவிக்கு அப்போது தெரிய வேண்டாமென்று தான் மறைவாகச் செய்த தந்திரத்தை வெளிப்படையாகவே தெரிவித்துவிடலாமா என்றுகூட எண்ணினாள் அவள். தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் மனம் வெறுத்தது போலச் சுரமஞ்சரி சற்றுமுன் பேசிய பேச்சையும் இப்போது நினைத்துக் கொண்டாள் வசந்தமாலை. இதை நினைத்தபோது இந்த நினைவுக்கு முரணான காரியத்தைத் தானே சற்றுமுன் செய்திருப்பதை எண்ணி நடுங்கினாள் அவள். தான் செய்த தந்திரமே சுரமஞ்சரியின் பார்வைக்கு இலக்காகியிருக்குமோ என்று சந்தேகமும் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகம் ஏற்பட்ட மறுகணம் ஊன்றுகோலை அப்போது கீழே கொடுத்து அனுப்புகிற எண்ணத்தைக் கைவிட்டாள் வசந்தமாலை. ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவள்போல் திரும்பவும் தன் தலைவியின் அருகே சென்று நின்றாள் அவள். ஊன்றுகோலைத் தந்தை யாரிடம் கொடுத்தனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற வசந்தமாலை மறுபடியும் ஊன்றுகோலுடனேயே திரும்பி வந்து நிற்பதைக் கண்டு சுரமஞ்சரி கேட்டாள்:
“என்னடி வசந்தமாலை? ஏன் ஊன்றுகோலைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டாய்?”
“இதோ பாருங்கள் அம்மா” என்று ஊன்றுகோலை அப்படியே தலைவியின் கைகளில் கொடுத்தாள் தோழி வசந்தமாலை.
“இன்னும் நான் பார்க்க இதில் என்ன இருக்கிறது! இதை மறுபடியும் பார்க்க வேண்டாமென்றுதானே இதை உன்னிடம் கொடுத்து அனுப்பினேன். மறுபடி எதற்காக என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாய்? இன்று நீ ஏன் இப்படித் திடீர் திடீரென்று மாறி மாறி நடந்து கொள்கிறாய்?” -
“மீண்டும் ஒருமுறைதான் இதைப் பாருங்களேன் அம்மா! இப்போது பார்க்கச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. முன்பு பார்த்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்றும் பாருங்கள்.” என்று தன் இதழ்களில் சிரிப்பை வரவழைக்க முயன்றுகொண்டே வசந்த மாலை மறுமொழி கூறியபோது சுரமஞ்சரி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டுப் பின்பு மெல்ல மெல்ல ஊன்றுகோலின் யாளிமுகப் பிடியைக் கழற்றினாள்.
ஊன்றுகோலை அவள் ஒவ்வொரு மரையாகக் கழற்றக் கழற்றப் பிடியோடு சேர்த்துத் தன் நினைவும் ஒவ்வொன்றாகத் திருகப்படுவது போல உணர்ந்தாள் வசந்தமாலை.
சுரமஞ்சரி பிடியை நன்றாகக் கழற்றிக் குழலைக் கவிழ்த்தாள். முகத்தில் சந்தேகமும் பயமும் விளைந்திட மறுபடியும் ஆட்டி அசைத்துக் கொட்டுவது போல் ஊன்று கோலின் குழலைக் கவிழ்த்தாள். கவிழ்க்கப்பட்ட இடத்தில் எந்தப் பொருளும் கவிழவில்லை, சூனியம் தான் இருந்தது. அதே இடத்தின் வெறுமையைப் பார்த்துக்கொண்டே கண்களில் கோபம் பிறக்கத் தலைநிமிர்ந்து வசந்தமாலையின் முகத்தைச் சந்தித்தாள் சுரமஞ்சரி.
“வசந்தமாலை! முன்பு இருந்ததில் இப்போது ஏதாவது குறைகிறதா என்று கேட்டாய் அல்லவா? கேட்டுக்கொள். குறைவது ஒன்றல்ல. ஒரே சமயத்தில் இரண்டு பொருள்கள் குறைகின்றன. முதலில் எனக்கு உன்மேலிருந்த நம்பிக்கை குறைகிறது. இரண்டாவதாக இதில் என்ன குறைகிறதென்று உனக்கே நன்கு தெரியும்!"
இதைக் கேட்டு வசந்தமாலை சிரித்தாள். சிரித்துக் கொண்டே இடுப்பிலிருந்து அதுவரை அங்கே ஒளித்து வைக்கபபட்டிருந்த அந்த ஐம்படைத் தாலியை எடுத்தாள்.
“நம்பிக்கை குறையும்போதே உங்களுக்குக் கோபம் பெருகுகிறதே அம்மா? நாம் தெரிந்துகொள்ளத் தவிக்கும் உண்மைகள் நமக்கு விரைவில் தெரிய வேண்டுமானால் இந்த ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே ஊன்று கோலைத் தந்தையாருக்குத் திருப்பிக் கொடுத்தனுப்ப வேண்டும். ஒரு பொருள் இன்றியமையாததா அல்லவா என்பதையும் அந்தப் பொருளைத் தன்னிடம் வைத்திருப்பவருக்கு அது எவ்வளவு அவசியமென்பதையும் அறிய வேண்டுமானால் அவை அவரிடமிருந்து பிரித்து அவர் வசம் இல்லாமற் செய்து பார்த்தால்தானே அறிய முடியும்? உங்கள் தந்தையார் இந்த ஐம்படைத்தாலியை இவ்வளவு பத்திரமாக வைத்திருப்பதன் இரகசியத்தை நீங்களும் நானும் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இதை அவரிடம் இல்லாமற் செய்வது தான் அம்மா! உங்களிடம் சொன்னால் கோபித்துக் கொள்வீர்களோ என்று பயந்துதான் நானாகவே இந்த வேலையைச் செய்தேன்.”
“எந்த வேலையைப் பிறர் செய்வதால் குழப்பங்கள் வளருகின்றன என்று நான் வருந்தினேனோ அதே வேலையை நீயும் செய்கிறாயடி வசந்தமாலை!”
“அப்படியல்ல அம்மா! ‘இது என்ன இரகசியம்’ என்று ஒன்றும் புரியாமல் மனத்தில் எண்ணி எண்ணிக் குழப்பம் அடைவதைக் காட்டிலும் நம்முடைய குழப்பங்களைத் தந்திரத்தினாலேயே தீர்த்துக்கொள்ள முயல்வது நல்லதுதானே?”
சுரமஞ்சரி பதில் பேசாமல் மெளனமாகத் தோழியின் கையிலிருந்த அந்தப் பொன் ஆரத்தைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தாள்.
“நாளைக்கு விடிந்ததும் இன்று ஊன்றுகோலை மட்டும் தந்தையாரிடம் சேர்த்துவிடும்படி கொடுத்தனுப்புகிறேன். ஆரத்தை இங்கேயே வைத்துக்கொள்கிறேன். மற்ற இடங்களில் தேடித்தேடித் தவித்தபின் அவர் இங்கேயும் வருவார். அப்போதுதான் இது அவருக்கு எவ்வளவு அவசியமென்று நமக்குத் தெரியும்” என்றாள் வசந்தமாலை.
“எப்படியோ உனக்குத் தோன்றுவதுபோல் செய்” என்று வேண்டாவெறுப்பாகக் கூறிவிட்டு உறங்கச் சென்றாள் சுரமஞ்சரி. மறுநாள் வைகறையில் அவள் கண் விழித்தபோது அவள் செவிகளில் ஒலித்த வார்த்தைகள் தோழியுடையனவாக இருந்தன.
“அம்மா போது விடிந்ததும் முதல் வேலையாக ஐம்படை ஆரத்தை உள்ளே வைக்காமலே அந்த ஊன்று கோலைக் கொடுத்து அனுப்பிவிட்டேன். நகைவேழம்பரும் இன்று காலையில் கடற்பயணத்திலிருந்து வந்து விட்டாராம், உங்கள் தந்தையாரும் நகைவேழம்பரும் கீழே ஏதோ கடமையாகப் பேசிக் கொண்டிருந்ததனால் உள்ளே போவதற்குப் பயந்து தந்தையாருடைய பள்ளியறை வாயிலிலேயே அவர் பார்வையில் படுகிற இடமாகப் பார்த்து ஊன்றுகோலை வைத்துவிட்டு வந்ததாகப் பணிப்பெண் கூறினாள்” என்றாள் வசந்தமாலை. சுரமஞ்சரி அதைக் கேட்டுவிட்டுத் தான் எந்தவிதமான உணர்வும் அடைந்ததாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
“வசந்தமாலை ? இன்றிலிருந்து என்னிடம் இத்தகைய குழப்பமான எண்ணங்களைப் பற்றியே பேசாதே. நேற்றிரவு நீண்ட நேரம் சிந்தனை செய்தபின் நான் ஒரு புதிய முடிவுக்கு வந்திருக்கிறேன். இன்று இந்த விநாடியி லிருந்து என்னுடைய வாழ்க்கையில் எனக்குப் புதிய நாள் விடிகிறது. புதிய நோக்கம் புலர்கிறது. தந்தை யாருடைய ஊன்றுகோலுக்குள் இருந்த ஐம்படைத் தாலியின் இரகசியத்தைத் தெரிந்துகொள்வதைவிட அதிக ஆவலோடு தெரிந்துகொள்ள வேண்டிய வேறு துறைகளில் இப்போது என் மனம் செல்கிறது.”
“அப்படி உங்கள் ஆவலைக் கவர்ந்த துறைகள் என்ன?” என்று கேட்கும் விருப்பமும் ‘இப்போது நம்தலைவி இருக்கும் நிலையில் இதைக் கேட்கலாமா வேண்டாமா’ என்று பயமுமாகச் சுரமஞ்சரியைப் பார்த்தாள் வசந்தமாலை. அப்போது சுரமஞ்சரியின் முகமானது பொழுது புலர்கின்ற நேரத்தில் அழகுகள் யாவும் ஒன்று சேர்ந்து மங்கலமாய் நிறைந்தாற் போல அமைதியாயிருந்தது. எதற்காகவும் பரபரப்புக் காட்டாதது போன்ற நிறைவு அவளுடைய கண்களில் தெரிந்தது.
அதிகாலையில் தோன்றி வளர்கின்ற நேரத்து ஒளிக்கே உரிய சுறுசுறுப்போடு மாடத்தில் நுழையும் செங்கதிர்க் கற்றைகளிலே பட்டு அவளுடைய முகமும் கைகளும், பாதங்களும் நெருப்பிலே குளித்து இளகும் பொன் வெள்ளமாய்த் தெரிந்தன.
“மன்னிக்க வேண்டும் அம்மா! போது விடிந்து எழுந்ததும் எழுந்திராததுமாகச் சொல்லி மனத்தைப் புண்படுத்திவிட்டேன் போலிருக்கிறது. நீங்கள் ஆசைப்படுகிற புதிய துறைகளில் உங்கள் நாட்கள் பெருக வேண்டும். வளர்ந்து பொலிக உங்கள் ஆவல். உங்கள் மனத்துக்கு விருப்பம் இருக்குமானால் தயை கூர்ந்து எனக்கும் அதைப்பற்றிச் சொல்லுங்கள். இப்போது விருப்பமில்லாவிட்டால் விருப்பம் வருகிறபோது என்னிடம் சொன்னால் போதும்” என்று பணிவாகக் கூறி வணங்கிவிட்டு அப்பாற் சென்றாள் தோழி வசந்தமாலை.