மணி பல்லவம் 5/14. வழிகள் பிரிகின்றன

14. வழிகள் பிரிகின்றன

தான் இட்ட கோலத்தைத் தானே மிதித்துக் கொண்டு வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டாள் முல்லை. அவளுடைய சொல்லம்புகளால் தாக்கப் பெற்றுத் தலைதாழ்ந்து போய்த் தன்மனமும் உணர்வுகளும் அவளுக்குப் பட்ட நன்றிக் கடனைத் தீர்க்க வழியின்றி முடிவு தெரியாமல் மனத்தின் உள்ளேயே அழுது புலம்பிடத் தயங்கி நின்றான் இளங்குமரன். அவனுடைய கைகளில் அவள் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போயிருந்த அந்தப் பழைய ஏடும் காய்ந்த பூவும் மலையத்தனை சுமையாய் மாறிக் கொண்டு கனத்தன.

‘நன்றிச்சுமை இவ்வளவு கனமானதா?’ என்று எண்ணியபடியே கையிலிருந்த பொருள்களையும் தரையிதரையிலிருந்த முடிவடையாத கோலத்தையும் பார்த்துக் கொண்டே நின்றான் அவன். தனக்குள்ளே மட்டும் கேட்கிற குரலில் அவன் மனம் பெரிதாய் ஓலமிட்டு அழுதது.

தாழ்ந்துபோன தலை நிமிராமல் முடிவற்ற பல கணங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் கோலத்தை மிதித்துக்கொண்டு இன்னும் நான்கு கால்கள் உள்ளேயிருந்து முன்னால் நடந்து வந்தன. வருகிறவர்கள் யார் என்று அறிவதற்காக அவன் எதிரே நிமிர்ந்து பார்த்தான். உள்ளேயிருந்து வளநாடுடையாரும், அவர் மகன் கதக்கண்ணனும் வந்து நின்று கொண்டிருந்தார்கள்.

அந்தக் கிழவருடைய கண்கள் அவனை நோக்கி நெருப்புக் கோளங்களாகக் கனன்றன. மீசை துடிதுடித்தது. இந்த முதுமையில் இவ்வளவு கோபத்தையும் கொதிப்பையும் தாங்கிக்கொள்ள எனக்கு ஆற்றலில்லை என்பது போல அவருடைய உடல் நடுங்கியது. இந்த நிலையில் அந்தக் கிழட்டுச் சிங்கத்தைப் பார்ப்பதற்கே அவனுக்குப் பயமாயிருந்தது. தன் நாவிலிருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு பேசுவது போல அவருடைய கண்களை நேருக்கு நேர் பாராமல் மூன்றே மூன்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக எண்ணி அவரிடம் பேசினான் இளங்குமரன்:-

“நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும்.”

“உன்னை நான் ஒருக்காலும் மன்னிக்க முடியாது. நீ பெரிய ஞானியாயிருக்கலாம். திருநாங்கூரில் பல ஆண்டுகள் புறஉலக நினைவே இன்றிக் கல்வி கற்றிருக்கலாம். ஆனால் உனக்கு எல்லாவற்றையும் கற்பித்த உன்னுடைய குருவினிடம் நீ ஒன்றுமட்டும் கற்க மறந்து விட்டாய். அதற்குப் பெயர் நன்றி.”

“அதைக் கற்க இன்னொரு பிறவி எடுக்கிறேன் ஐயா! இந்தப் பிறவியில் அது முடியாமல்தான் போய்விட்டது. நினைத்துப் பார்த்தால் நான் உங்கள் குடும்பத்துக்கும் உங்களுக்கும் நிறைய நன்றிக் கடன் பட்டிருப்பது எனக்கே தெரிகிறது. ஆனால் அந்தக் கடனை எந்த விதத்தில் நான் தீர்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே விதத்தில் தீர்ப்பதற்கு இந்தப் பிறவியில் நான் இயலாதவனாகி விட்டேன். இந்தப் பிறவியில் என்னுடைய அனுபவங்கள் எல்லாம் சத்திய சோதனைகளாகிவிட்டன. சத்திய சோதனைகளில் இறங்குகிறவர்கள் தங்களுக்கு மிகவும் வேண்டியவர்களைக்கூட ஏமாறச் செய்து விடும் படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்க முடியாமல் அடைந்துதான் ஆகவேண்டியிருக்கிறது. என்னுடைய குலப்பகைவரான எதிரியை நான் பழி வாங்கும் நோக்குடன் படைதிரட்டிப் புறப்பட மறுத்தபோது என் மாமன் மகனான குலபதிக்கு அது பெரிய ஏமாற்றமா இருந்தது. என் எதிரியை நான் சந்தித்து நியாயம் கேட்கிற முறையில் கொடுமையும் வன்மையும் வேண்டும் என்று எனக்குத் துணையாய்ப் பின் தொடர்ந்த நீலநாகரை நான் மறுத்துத் திருப்பி அனுப்பியபோது அவருக்கு ஏமாற்றமா இருந்தது. உங்கள் மகள் முல்லையை நான் மணம் புரிந்து கொள்ளாமற் போனது உங்களுக்கு ஏமாற்றமாயிருக்கிறது. சத்தியத்தை ஏமாற்றக் கூடாதென்று நாம் ஏதோ செய்தால் அதன் மறுபுறம் அந்தச் செய்கையால் ஏமாறிய மனிதர்கள் வந்து நிற்பதைக் காண்கிறோம். மனிதர்களுக்கு மட்டும் திருப்தியாக நடந்து கொண்டால் சத்தியத்தை ஏமாற்றியதாக முடிகிறது. சத்தியத்துக்குத் திருப்தியாக நடந்து கொண்டுவிட்டதாக நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சமயத்தில் அதே காரணத்தால் தாங்கள் ஏமாறியதாகச் சொல்லிக் கொண்டு மனிதர்கள் வந்து கண்கலங்கி நிற்கிறார்கள்.”

“உபதேசம் போதும்! இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளுவதற்கு நாங்கள் கற்றுத்துறை போகவில்லை. பொது மனிதர்களையும் பொதுவான மனித உறவுகளையும் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களுடைய வாழ்க்கையிலே இரண்டே இரண்டு எல்லைகள்தான் உண்டு. ஒன்று வீரம், மற்றொன்று அன்பு. இந்தக் குடும்பத்தில் எவரும் இந்த விநாடி வரை வீரத்தில் ஏமாறியதில்லை. ஆனால் இன்று இந்தக் குடும்பத்துப் பெண்ணொருத்தி அன்பில் ஏமாறிவிட்டாள். வெற்றியைத் தவிர வேறு வளர்ச்சிகளைக் கண்டறியாத இந்த வீரக்குடியின் வாழ்க்கையில் இன்று என் மகள் காதலிலே தோற்றுப் போய் வீழ்ந்து விட்டாள். இன்று காலையில் உலகத்துக்கெல்லாம் பொழுது விடிந்தது. என் மகளுக்கு மட்டும் இருண்டு போய்விட்டது. உன்னுடைய இதயத்துக்கு உணரும் சக்தி இருந்தால் அறுபட்டு வீழ்ந்த பூங்கொடிபோல உள்ளே அவள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருப்பதை நீயும் உணர முடியும். ஆனால் நீ கல்நெஞ்சன். பகைவர்களுக்கு நல்லவனாகி உறவினர்களை ஏமாற்றும் வஞ்சகன்.

“நீ மணிபல்லவத்திலிருந்து திரும்பி வந்துவிட்ட செய்தியை நான் இங்கு வந்து கூறியவுடனே என் மகள் இன்று காலை இந்த வீட்டின் படிகளில் நீ ஏறி வருவாய் என்று ஆவலோடு எதிர்பார்த்து நேற்றிரவிலிருந்தே எப்போது விடியும் எப்போதும் விடியும் என்று விடிவதற்காகவே இரவெல்லாம் கண் விழித்துக் காத்திருந்து விடிந்ததும் வாயிலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தக் கோலம் இதோ இப்படி முடியாமல் முடிந்துவிட்டது.”

“.......”

சிறிது நேரம் மேலே ஒன்றும் பேசவராத மெளனத் தவிப்புக்குப் பின் வளநாடுடையார் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெறுத்தாற் போல் உள்ளே போய்விட்டார். மீண்டும் அவன் முகத்தைப் பார்த்து அவனோடு பேசும் விருப்பமே இல்லாதவராகத் திரும்பிப் போவது போலிருந்தது அவர் நடை. அப்படிப் போவதற்கு முன் இளங்குமரன் தன் வாழ்க்கைத் துணைவியோடு அவரை வணங்க முற்பட்டதும் வீணாயிற்று. அந்த வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமலே அவர் விரைந்து உள்ளே போய்விட்டார்.

கதக்கண்ணன் மட்டும் தன்னுடைய அகன்ற பெரிய விழிகளிலே கோபம் கனல இளங்குமரனையே இமையாமல் பார்த்துக்கொண்டு நின்றான். அவனுடைய அந்தப் பார்வை இளங்குமரனைச் சுட்டெரித்தது. அவன் கூசி நின்றான். சிறிது நேரத்தில் தந்தையைப் போலவே, கதக்கண்ணனும் வெறுப்போடு உள்ளே திரும்பியபோது பின்புறமிருந்து பழைய நண்பனாகிய இளங்குமரனின் நெகிழ்ந்த குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது:

“கதக்கண்ணா! உன் தந்தையைப் போலவே நீயும் என்னை மன்னிக்க விரும்பவில்லையென்று தெரிகிறது. உன்னாலும் என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. நீலநாகருடைய படைக் கோட்டத்தில் நீயும் நானும் ஒருசாலை மாணவர்களாக இருந்து பயின்ற நாட்களும், அப்போது தொடங்கிப் பழகிய நட்பும், உறவுகளும் மறந்து இப்போது இந்த ஒரே ஒரு கணத்தில் என்னை வெறுத்துப் பிரிகிற துணிவை உன்னால் எவ்வாறு அடைய முடிந்ததோ? இதைக் கண்டு நான் வியப்படைகிறேன். குடி வழி வந்த பரம்பரை வீரம் இப்படிக் கடுமையான துணிவையும் உனக்குத் தந்திருக்கிறதோ என்னவோ? உன்னுடைய இந்த வெறுப்புக்காகவும் நான் வருத்தப்படவில்லை. நீங்கள் வெறும் மனித உறவுகளுக்காக மட்டுமே நட்புச் செய்யத் தெரிந்தவர்கள். அந்த உறவுகள் உடையும்போது உங்கள் மனங்களும் மாறி விடுகின்றன. உங்களுடைய வாழ்வில் வீரமும் அன்புமே உங்களுக்கு எல்லைகள். அதில் ஓர் எல்லையை அழிப்பதற்கு என்னையறியாமலே நான் காரணமாயிருந்திருக்கிறேன். எனக்குப் புரிகிறது. அதற்காக என் மனமும் நோகிறது. மறுபடியும் பிறந்து இந்தப் பழங் கடனைத் தீர்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது தவிர இப்போது நான் வேறொன்றும் முடியாதவனாக இருக்கிறேன். இந்த நிலையில் என்னுடைய வறுமை எனக்கே தெரிகிறது.

முடிந்தால் உன் தங்கை முல்லையிடம் சொல்! நான் என்னுடைய தோள்களிலும் மார்பிலும் பட்டுக்கொண்டு வந்த புண்களை எல்லாம் முன்பு ஒரு காலத்தில் அவள் தன் கைகளால் மருந்திட்டு ஆற்றியிருக்கிறாள். ஆனால் இன்று இந்தக் காலை வேளையில் அவளே என் மனத்தில் உண்டாக்கியிருக்கிற புண்ணை எங்கே எப்படி எந்தப் பிறவியில் ஆற்றிக் கொள்வது என்ற வேதனையோடுதான் நான் போகிறேன் என்று சொல். இதைத் தவிர இப்போது அவளுக்குச் சொல்ல என்னிடம் வேறு ஒன்றுமில்லை.”

இவ்வாறு கூறிவிட்டுச் சுரமஞ்சரியோடு தன் வழியில் விலகி நடந்தான் இளங்குமரன். வீதியில் சிறிது தொலைவு சென்றபின் அவன் மறுபடி திரும்பிப் பார்த்தபோது வரிசையாய் எல்லா வீடுகளின் முன்பும் முழுமையாயிருந்த கோலத்துக்கு நடுவே அந்த ஒரே ஒரு கோலம் மட்டும் அரைகுறையாயிருந்து தனியாய்த் தெரிந்தது. ஆம்! அந்தக் கோலம் முடியவில்லை. அதைத் தொடங்கியவளுக்கே எப்படி முடிப்பதென்று தெரியவில்லை.

அந்த வீதியின் கோடியில் திரும்பியபோது அதுவரை அடங்கிக் கொண்டிருந்த துயரம் கட்டுடைந்து வெடித்தாற் போல் அழுகை பொங்கும் குரலில் சுரமஞ்சரி அவனிடம் கூறினாள்:-

“நான் ஒருத்தி உங்கள் வாழ்வில் குறுக்கிட்டு உங்களை அடைந்ததால் உங்களுக்கு எவ்வளவோ துன்பங்களையெல்லாம் உண்டாக்கிவிட்டேன்.”

இதைக் கேட்டு அவன் சிரித்தான்.

“நானே விரும்பி ஏற்றுக்கொண்ட துன்பம்தானே இது? என்னைத் தோற்கக் கொடுத்து எனக்கு இன்பமாக நானே அங்கீகரித்துக் கொண்ட துன்பம் நீ! இப்போது மட்டும் திடீரென்று உன் மனத்தில் ஏன் இந்தக் கலக்கம் ஏற்படுகிறது? உனக்குக் கிடைத்த வெற்றிக்காக நீயே பயப்படுகிறாயா? என்னோடு வாதிட்டு முறையாக நீ என்னை வென்றதாக நினைத்துப் பெருமை கொள்வதை விட்டு விட்டுப் பேதை போல் நீ ஏன் வருந்துகிறாய்? உன் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை. உனக்குத் தோற்ற இடமே என்னுடைய வாழ்வில் சத்திய சோதனையின் நிறைவான இடமாகவும் இருக்கலாம். அந்த விநாடியில் நான் என்னுடைய சத்தியத்துக்கு மிகவும் அருகே நின்றிருக்கிறேன். என்னுடைய குணங்கள் தோல்வியிலும் நான் வெற்றியே பெற எனக்கு உதவியிருக்கின்றன. ஆற்றோடு மிதந்து வந்த பூமாலை நீராடிக் கெண்டிருந்தவன் மூழ்கி யெழுந்தபோது அவனுக்கு நோக்கமும் எண்ணமும் இல்லாதபடியே அவன் கழுத்தில் நேர்ந்தது போலத்தான் எனக்கு நீயும் கிடைத்திருக்கிறாய்.”

“அப்படி உங்களை அடைந்தது என் பாக்கியம்தான்.”

பேசிக்கொண்டே நடந்து நடந்து அவர்கள் காவிரிக் கரையை அடைந்திருந்தார்கள். பொழுது நன்றாகப் புலர்ந்துவிட்டது. காவிரிக்கரை மரக் கூட்டங்களில் இளம் கதிரொளி பொன்வெயில் தூவிக் கொண்டிருந்தது.

“இப்படித் தனியாக ஓர் ஆண்பிள்ளையோடு கால்கள் நோவ நடந்து துணை செய்வோரும், தோழிமாரும் இன்றி வந்து காவிரியில் நீராடும் சந்தர்ப்பம் இதற்கு முன் உன் வாழ்வில் என்றுமே நேர்ந்திருக்காது சுரமஞ்சரி...”

“இன்று இவ்வளவு பெரிய துணையோடு நேரவேண்டுமென்பதற்காகவே இதுவரை இப்படி நேரமால் இருந்தது போலும்.”

“தெரிந்துகொள்! இப்படி எதிர்பாராதது நேர்ந்து கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வீதியில் நம்மோடு நெருங்கிய துணையாக வரத் தவிப்பவர்கள்கூட ஏதேதோ கோபதாபங்களால் பாதி வழியிலேயே நின்று போகிறார்கள். துணையாய் எப்போது எதற்காக வந்தார்கள் என்று தெரியாமல் நாமே சிலரை மறந்துவிடுகிறோம். கடைசிவரை உடன் வருவதற்கு எவரேனும் சிலரால்தான் முடிகிறது. இந்த யாத்திரையில் நாமே சிலரை நடுவழியில் தவிக்கத் தவிக்க விட்டுவிட்டு மேலே நடந்து வந்துவிடுகிறோம். அதற்காகக் கலங்கி அந்த இடத்திலேயே நின்று அழிந்துகொண்டிருக்கவும் முடிவதில்லை. கலங்காமல் மேலே நடந்துவிடவும் யிருக்கிறது. அந்தத் தயக்கம் ‘நாம் இன்னும் மனிதர்கள் தான்’ என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடைய கல்வி, மனப்பக்குவம், பயிற்சியடைந்த உணர்வுகள் எல்லாம் அந்த விநாடிகளில் நம்மைக் கைவிட்டு விடுகின்றன. நாம் முயன்று சேர்த்துக்கொண்ட ஞானங்கள் எல்லாம் நம்மிடமிருந்து பிரிந்து நின்று கொண்டு ‘அதோ அதுதான் உன் பிறப்பிலேயே நீ கொணர்ந்த சொந்த ஞானம்’ என்று நம்மிடம் மீதமிருக்கும் புத்தியைச் சுட்டிக் காட்டிச் சிரிக்கின்றன. ஈரேழு பதினான்கு புவனங்களையும் ஆட்டிப் படைக்கிற தவவலிமை பெற்ற பெருமுனிவர்களும் இந்த விதமான தளர்ச்சியைத் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்கள்.”

“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. ஆனால் நிறைகுடமாகிய உங்கள் மனமும் இப்போது எதற்காகவோ கலங்கித் தவிக்கிறதென்று மட்டும் புரிகிறது.”

“உனக்கு அவ்வளவு புரிந்தால் போதும் சுரமஞ்சரி!” என்று கூறிவிட்டுக் காவிரி நீரில் குளிப்பதற்கு இறங்கினான் இளங்குமரன். அவளும் இறங்கினாள்.

இருவரும் நீராடி கரையேறிய வேளையில் “இப்போது என் கண்கள் எதிரே காண்பது கனவில்லையே?’ என்று பழகிய குரல் ஒன்று மிக அருகிலிருந்து அவர்களைக் கேட்டது. இளங்குமரன், சுரமஞ்சரி இருவருமே அந்தக் குரலைப் புரிந்துகொண்டு நிமிர்ந்து பார்த்தார்கள்.

மேலேயிருந்து ஓவியன் மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் காவிரியில் நீராடுவதற்காகப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்களுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைச் சந்தித்த சுரமஞ்சரிக்கு அவனிடம் பேசவும் நலம் தெரிந்து கொள்ளவும் ஆவல் எழுந்தது. அந்த ஆவலும் நாணமும் போராடக் கணவனோடு ஒன்றினாற்போல நின்றாள் அவள். நினைத்த சொற்களைப் பேச வரவில்லை. அதற்குள் ஓவியனே அவர்களை நோக்கிப் பேசினான்:"ஐயா! நீங்கள் இருவரும் இப்படியே சிறிது நேரம் நில்லுங்கள். இந்தக் காட்சி என் கண்களில் நிறையட்டும். உமையொரு பாகனாகச் சிவபெருமான் நிற்பதுபோல் இந்தக் காலை வேளையில் எங்களுக்குக் காட்சியளிக்கிறீர்கள். இந்தப் புனிதமான வைகறை வேளையில் இதைக் கண்ட கண்கள் வாழ்க. ஓவியத்தில் பல முறை இப்படி உங்களை ஒன்று சேர்த்து எழுதி மகிழ்ந்திருக்கிறேன் நான். எனக்குத் திருமணமாகிய சில தினங்களில் நானும் என் மனைவியும் இயற்கை வளம் காண்பதற்காக பொதிகை மலைக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டுப் போயிருந்தோம். அன்று என் மனைவி பதுமை என் மனத்துக்குப் பெரிதும் விருப்பமான ஓவியம் எதையாவது நான் அந்த மலைச் சூழலில் வைத்து வரைய வேண்டுமென்று என்னைக் கேட்டுக் கொண்டாள். என் மனத்தில் முதல் முறையாக நான் பூம்புகாருக்கு வந்து திரும்பிய காலத்திலிருந்து நாளும் இடைவிடாமல் எழுதிக் கொண்டிருக்கிற ஓவியம் எதுவோ அதையே அன்று பொதிகைமலையில் அவளுக்கும் வரைந்து காண்பித்தேன். அந்த ஓவியத்தில் காதலர் இருவர் கற்பனையாய் ஒன்று சேர்ந்திருந்தனர். அவர்கள் மெய்யாகவே ஒன்று சேர்ந்திருப்பதை இன்று நானும் என் மனைவியும் இப்போது எங்கள் கண் எதிரே காண்கிறோம். நீங்கள் இருவரும் வாழ்க்கைப் படகில் இன்று ஒன்றாகவே பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். காதற் படகில் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்வதாக நான் என் மனைவியிடம் முன்பே வரைந்து காட்டி மகிழ்ந்த ஓவியங்கள் கணக்கற்றவை.”

“மணிமார்பா! நீ பரிசுத்தமான கலைஞன். அதனால் தான் உன்னுடைய பழைய கற்பனைகள் எல்லாம் இன்று உன் கண்களே காணும்படி மெய்யாக மலர்கின்றன. இதோ என் பக்கத்தில் நாணி நிற்கிற பெருமாளிகைப் பெண் இப்படி என்னை அடைந்ததற்காக நன்றி செலுத்த வேண்டியவர்கள் யாராவது இருப்பார்களானால் அது நீ மட்டும்தான். நீண்ட காலத்துக்கு முன்பு அன்று இந்திர விழாக் கூட்டத்தில் நீ என்னைச் சந்தித்தபோது என் உருவத்தை ஒரே ஒருமுறை வரைந்து கொள்வதற்கு மட்டும் உன்னிடம் நான் இணங்கினேன். ஒன்றும் தெரியாத அப்பாவிக் கலைஞனைப் போலிருந்து கொண்டே என் வாழ்க்கையை இப்படி வேறுவிதமாக மாற்றி வரைந்து முடித்திருக்கிறாய் நீ! யாரை அதிகமாக வெறுத்தேனோ அவளுக்குப் பக்கத்திலேயே இன்று இப்படி நெருங்கி நின்று விடும்படியான சந்திப்புக்கள் தொடக்கத்தில் அன்று உன் காரணமாகவே நேர்ந்தன.

இன்று இவ்வளவு காலத்துக்குப் பின்பு எண்ணிப் பார்க்கும்போது நான் உனக்கும் சிறிது தோற்றுப் போயிருப்பதை உணர்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு சுரமஞ்சரி என்க்கு எழுதிய மடலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, இப்படிப் பெண்களின் அன்பினால் உலகத்தில் மகாகாவியங்கள். பிறந்திருக்கின்றன ஐயா!’ என்று நீ என்னிடம் கூறியபோது அப்படி மகா காவியங் களைப் படைக்கின்ற அன்பை அந்த ஏழடுக்கு மாளிகையிலிருந்து எதிர்பார்க்க முடியாது’ என மறுமொழி கூறி உன்னை மறுத்தேன் நான். அன்பின் சக்தி அளப்பரியது. அதற்குமுன் சாதாரண உணர்வுகள் தோற்றுவிடுகின்றன. ஒரு காலத்தில் இதே பெண்ணின் சிரிப்புக்கு - நீங்கள் தோற்றுப்போனால்கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்’ என்று அன்றைக்கு என்னிடம் அறைகூவி விட்டு அதன் விளைவாக நான் உணர்ச்சி வசப்பட்டு உனக்குச் செய்த துன்பத்தையும் நீ ஏற்றுக் கொண்டு போயிருந்தாய். சொன்னபடியே இன்று எங்களை இந்தக் கோலத்தில் சேர்த்துப் பார்த்த பின்பும் நீ ஆச்சரியப்படாமல்தான் நிற்கிறாய். நேற்றிரவு நீலநாகரை அழைத்துக் கொண்டு பட்டினப்பாக்கத்து மாளிகைக்கு வந்தபோதும் நீ என் நிலைகளைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. இன்று இந்த மாறுதலைக் கண்டும் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாய்!”

“அப்படி எல்லாம் என் வார்த்தைகளுக்குப் பெரிய பெரிய அர்த்தங்களைக் கற்பிக்காதீர்கள். ஏரல் எழுத்துப் போல் நான் நினையாததெல்லாம் நினைத்துத் திட்டமிட்டதை ஒப்பத் தற்செயலாக நடந்திருக்கின்றன. அந்தப் பெருமாளிகைச் செல்வருக்கும் உங்களுக்கும் உள்ள பகைமைகள் உங்களுக்கே நன்றாகத் தெரிந்த பின்பும் நீங்கள் இப்படி விட்டுக் கொடுத்துக் கருணை மறவராக நிற்பதுதான் இந்த வாழ்வுக்குக் காவியப் பெருமையைத் தருகிறது. ஆனால் நீலநாகரைப் போன்றவர்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.”

“அவர் இதை ஒப்புக்கொள்ளாததற்கும் அவருக்கு என் மேலுள்ள அன்புதான் காரணம் மணிமார்பா! அவர் ஒரு பெரிய மலைச்சிகரம். அதே உயரத்துக்கு நீ வேறு சிகரங்களைத் தேடக்கூடாது. எல்லா மனிதர்களுடைய மனத்தையும் அந்தச் சிகரத்தின் உயரத்தினால் அளக்கவும் முயலக்கூடாது. கருங்கல்லாய் இறுகிப் போயிருக்கும் அந்தச் சிகரத்தின் உச்சியிலிருந்துகூடப் பாசமும், அன்பும் ஊறிப் பெருகுவதுண்டு.”

“உண்மைதான் ஐயா! வயிற்றுப் பசியும் கவலைகளும் இல்லாத உலகம் ஒன்று ஏற்பட்டால் அங்கே அன்புதான் விலை மதிப்பற்ற செல்வமாக இருக்கும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்பிழந்து போகும். மற்ற எல்லாச் செல்வங்களும் மதிப்போடு இருக்கிற காரணத்தால்தான் சில சமயங்களில் பசி, கவலை, குரோதங்களினால் அன்பைப் பற்றி மறந்து போகிறோம். இந்தப் பெரு மாளிகைச் சகோதரியாருடைய தந்தையும் அவரைச் சேர்ந்தவர்களும் இத்தனை காலம் குரோதத்தினால்தான் அன்பை மறந்து போயிருந்தார்கள் போல் இருக்கிறது. ஆனால் இப்போது உங்களருகே நாணி நிற்கும் இந்தச் சகோதரியார் தன் குடும்பத்தின் வரலாற்றையே மாற்றி விட்டுப் புது வழியில் உங்களோடு இறங்கி வந்துவிட்டார்” என்று கூறிக்கொண்டே நீராடுவதற்காக கீழே படிகளில் இறங்கினான் மணிமார்பன்.

அவனும் பதுமையும் நீராடிவிட்டு வருகிறவரை இளங்குமரனும் சுரமஞ்சரியும் கரையில் காத்திருந்தார்கள்.

தன்னருகே நீராடிய ஈரம் புலராமல் மேகக் காடாய்ச் சரிந்த சுரமஞ்சரியின் கூந்தலிலிருந்து கிளரும் நறுமணங்களை உணர்ந்து இளங்குமரன் தன் கண்களால் அவளை நன்றாகப் பார்க்கத் தொடங்கியபோது, எல்லா அணிகலன்களையும் இழந்த பின்பும் பிறந்தபோதே உடன் பிறந்து, வளர்ந்தபோதே உடன் வளர்ந்து நிறைந்த இயற்கை வனப்புகளையே போதுமானவைகளாகக் கொண்டு பேரழகியாய் மணந்து கொண்டிருந்தாள் அவள். இவற்றில் தெரியும் அழகு மிகுதியா? நாணம் மிகுதியா?’ என்று பிரித்துக் காண முடியாத கவர்ச்சி நிறைந்த கண்கள், நான் கனிந்திருக்கிறேன்! நான் கனிந்திருக்கிறேன்’ என்பதைச் சொல்ல மொழியின்றித் துடிப்பதுபோல மெல்ல அசையும் செல்லச் செவ்விதழ்களின் நகைக் கனிவு வார்த்தைகளால் பேச முடியாததைப் பேசும் நளினமான சிரிப்புஇவ்வளவும் நிறைந்து தோன்றினாள் சுரமஞ்சரி. காலைக் கதிரொளியில் அவள் முகமும் கைகளும் பாதங்களும் மெருகிட்ட செம்பொன்னாகி மின்னின.

எத்தனை அழகுகள்! எத்தனை அழகுகள்! அத்தனை அழகுகளையும் புதிதாய் இன்றுதான் புரிந்துகொள்வது போல் அவளைப் பார்த்தான் இளங்குமரன்.

இப்போது மூன்றாவது முறையாகவும் அவனுடைய பார்வையே அவளைப் புதுமணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது.

“சுரமஞ்சரி ! உன்னுடைய நாணமே உனக்குப் பெரிய அணிகலன்.”

“அது உங்களுடைய பார்வையிலிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. உங்கள் கண்களின் பார்வையாலேயே நான் அலங்கரிக்கப்படுகின்றேன்....”

“அப்படியானால் வேறுவிதமான அலங்காரங்களுக்கு நீ ஆசைப்படவில்லை போலும்." இந்தச் சொற்களைக் கேட்டு அவளுடைய இதழ்களில் அதுவரை சுரந்திருந்த நகை சற்றே மலர்ந்து புன்னகை யாய்ப் பிறந்தது. பின்பு பெருநகையாகவும் வளர்ந்தது. மெல்ல நெகிழ்ந்த பவழச் செவ்வாயில் பற்கள் முத்துக்களாய் ஒளி வீசின. விடிகாலையில் ஒவ்வோர் இதழாய் மலரும் பூவைப்போல் அவள் முகத்தில் உணர்ச்சிகள் மலர்ந்து கொண்டும் மணந்து கொண்டும் நின்றன. கன்னங்களில் குங்குமச் சிவப்பு பரவியது. கால் விரல் தரையைக் கிளைக்கலாயிற்று.

‘இன்று இந்த வேளையில் தன் முன் இப்படி நாணிக் குலைந்து நிற்கிற இதே பெண்தானா நேற்று அப்படியெல்லாம் ஆற்றல் வாய்ந்த சொற்களைத் தேடித் தனக்கு முன் வாதிட்டாள்?’ என்று எண்ணி வியந்தான் இளங்குமரன். அவள் அழகுகள் ஒவ்வொன்றும் இப்போதுதான் புரிந்த புதுமைகளாய் அவன் மனத்தில் நிறைந்தன.

மணிமார்பனும் அவன் மனைவியும் நீராடிவிட்டுக் கரைக்கு வந்தபின்பு எல்லாருமாக அங்கிருந்து ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலைக்குப் புறப்பட்டுப் போனார்கள். எல்லாரும் படைகலச் சாலைக்குள் நுழைகிறபோது சுரமஞ்சரி மட்டும் வாயிலிலேயே தயங்கி நின்றாள்.

முன்பு ஒருநாள் பின்னிரவு வேளையில் நகரமே உறங்கிக் கிடந்த பேரமைதியினிடையே வசந்தமாலையும் தானுமாகத் தேர் ஏறி வந்து இதே படைகலச் சாலையில் இளங்குமரனைத் தேடியபோது, வாயிற்கதவருகே நின்று தன்னைத் தடுத்த அந்த இரும்பு மனிதரை நினைத்துக் கொண்டு பயந்தாள் அவள்.

சுரமஞ்சரி மருண்டு போய்த் தயங்கி நிற்பதன் காரணம் இளங்குமரனுக்குப் புரிந்தது.

“பயப்படாமல் என்னோடு உள்ளே வா. உலகத்தில் எல்லாரும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்கள் தாம். நீலநாகரும் அகற்கு விதிவிலக்கில்லை. நீ இப்போது இங்கே என் வாழ்க்கைத் துணையாகி என்னுடனே வருகிறாய்...” என்று இளங்குமரன் அவளைக் கைப்பற்றி உள்ளே அழைத்துக்கொண்டு போனான்.

அவனையும் சுரமஞ்சரியையும் சேர்த்துப் பார்த்ததும் நீலநாகர் வெறுப்போடு அலட்சியமாகத் தலையைக் குனிந்துகொண்டார். பின்பு இளங்குமரனிடம் நேருக்கு நேர் பேச விரும்பாதவர் போல மணிமார்பனை விளித்துப் பேசினார்:-

“மணிமார்பா! உன்னுடைய நண்பன் இப்போது இங்கே எதற்காக வந்திருக்கிறான்? தன்னுடைய தோல்வியைக் கொண்டாடுவதற்காக இப்படி இங்கே திரும்பி வந்திருக்கிறானா என்று அவனைக் கேள்!”

“எந்தத் தோல்வியைச் சொல்கிறீர்கள்?” என்று இளங்குமரனே சிரித்தபடி அவரை எதிர்க்கேள்வி கேட்டான். எனினும் அவர் அவன் பக்கம் திரும்பாமலே பேசினார். முதலில் இருந்த கடுமை மட்டும் சற்றே குறைந்து விட்டாற் போல அவருடைய பேச்சு அவனை நோக்கியே பிறந்தது.

“இதே ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் கற்றுப் பயின்று உரமேறிய இணையற்ற வீரமும், திருநாங்கூர் அடிகளிடம் குருகுலவாசம் செய்து பெற்ற வரம்பிலா ஞானமும் இப்படி இந்தப் பகைவன் மகளின் வளை சுமக்கும் கைகளுக்காகத் தோற்றுப்போய் விட்டாற் போலிருக்கிறது. இந்தத் தோல்விக் கோலத்தை நானும் காண வேண்டும் என்று என் முன்னாலே வந்து இப்படி நிற்க வெட்கமாக இல்லையா உனக்கு ?”

“வெட்கமாக இல்லை. பெருமையாகத்தான் இருக்கிறது. என் பெருமைக்குக் குறைவின்றி நானே விரும்பித் தோற்ற தோல்விதான் இது. இந்தத் தோல்வியில் எந்த விதமான தாழ்வையும் நான் உணரவில்லை. பெருமைப் படத்தக்க தோல்வி இது. எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் துணிவைப் போல எல்லாவற்றையும் விட்டு விடுகிற துணிவும் வீரனுக்கு இருக்க வேண்டும் என்று நீங்களே என்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறீர்கள். யாரை மிக எளிதாக நம்மாலே வென்றுவிட முடியும் என்று நாம் உணர்கிறோமோ அவர்களுக்கே தோற்றுப்போய், விட்டுக் கொடுத்து விடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. பரிபூரணமான தெய்வீக இன்பம் அது. இந்த விதமான தோல்விக்குக் காரணமாக இருப்பது நமது கருணைதானே ஒழியப் பலவீனமன்று. தங்களால் வெல்ல முடிந்தவர்கள் மேலும் கருணை கொண்டு அவர்கள் தங்களுக்கு ஒப்பான நிலையில் தங்களை எதிர்த்து வெற்றி பெற முடியாததை எண்ணி இரங்கி அவர்களுக்கும் வெற்றி மகிழ்ச்சியை அளித்துப் பார்க்கலாமே என்ற பெருந்தன்மையோடு தோற்கிற தோல்வியைச் சான்றோர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தத் தோல்வி சான்றாண்மையின் இலக்கணம். இதில் வெற்றியைவிட அதிகமான சுகம் உண்டு. அந்தச் சுகத்தை இப்போது நான் அடைந்து விட்டேன்.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
என்று சால்பின் பண்பு சொல்லப்பட்டிருக்கிறது. பெரிய காரியங்களைச் சாதிப்பதற்காகவே மனத்தை ஆள வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். பிறருக்காக விட்டுக் கொடுத்துத் தியாகம் செய்கிற இந்தத் தோல்வி பெரிய காரியமில்லை என்று நீங்கள் எப்படிக் கூற முடியும்? அன்பையும் வீரத்தையும் தவிர, எங்கள் வாழ்வுக்கு வேறு எல்லைகள் இல்லை என்கிறார் வளநாடுடையார்! நீங்களோ நெகிழ்ச்சியில்லாத முரட்டு வீரம் ஒன்றைத் தவிர உங்கள் வாழ்வுக்கு வேறு எல்லையே இல்லை என்கிறீர்கள். தியாகப் பண்பு என்ற ஒன்று எனது வாழ்க்கையின் இணையற்றதொரு பேரெல்லையாக இருப்பதை நீங்களெல்லாம் மறந்துபோய் விட்டீர்களோ? என்னவோ? நெகிழ்ச்சியே சிறிதும் இல்லாத கொடுமை மறவராக நீங்கள் உங்களுடைய வாழ்க்கையைப் பழக்கிக் கொண்டுவிட்டீர்கள்.”

"என்னை நான் அப்படிப் பழக்கி வைத்துக் கொண்டிருந்தது உண்மைதான்! ஆனால் உன்மேல் பாசமும் அன்பும் கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து அந்த இறுகிய குணத்தினின்றும் நான் என்னைத் தளர்த்திக் கொள்ளும்படி ஆகிவிட்டது. அப்படித் தளர்த்திக்கொள்ள நேராமல் நான் என் போக்கிலேயே இருந்திருந்தால் எவ்வளவோ விதங்களில் எனக்கு நன்றாயிருக்கும். உன் மேல் அன்புகொண்ட காரணத்தால் எனக்கு உண்டாகிய கவலைகள் ஏற்பட்டிருக்காது. நான் என்னுடைய கடமைகளைத் தவிர வேறு எந்தவிதமான உலக பந்தங்களிலும் சிக்கியிருக்கமாட்டேன். உன்னைப் போல் அழகும் வீரமும் ஞானமும் நிறைந்த இளைஞன் ஒருவனை என் மாணவனாக இந்த வாழ்க்கை வழியில் சந்தித்திருக்கா விட்டால் நான் எந்த மனிதன் மேலும் அன்பு, நெகிழ்ச்சி. பாசம், நமக்கு வேண்டியவனுக்கு இன்ன இடத்திலே இன்னது நேரிட்டுவிடுமோ என்ற கவலை இவற்றையெல்லாம் உலகத்தில் நான் உணர்வதற்குக் காரணமாக இருந்த முதல் மனிதன் நீ கடைசி மனிதனும் நீதான்.

“மறுபடியும் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீ மீண்டும் என் வாழ்க்கையில் குறுக்கிடாதே. அன்பையும் பாசங்களையும் என்னை உணரச் செய்யாதே. கடுமையான வீரத் துறவியாகவே என்னை வாழவிடு. உன்னைச் சந்திப்பதற்கு முன்பு எப்படியிருந்தேனோ அப்படிக் கர்ம வீரனாக வாழவிடு. நீ இங்கிருந்தால் எனக்கு உன்மேல் ஏற்பட்டுவிட்ட பாசங்களாலேயே நான் என் வழியில் கடுமையான இறுக்கத்தோடு வாழ முடியாமல் போய்விடலாம். உன்னுடைய வாழ்வு எப்படியிருந்தாலும் நீ மலர்ந்த மனத்தைப் பெற்றவன். கட்டுகளுக்கு நடுவேயும் விடுபட்டு வாழ முடிந்தவன். நான் இப்போது எதை உன்னுடைய தோல்வியாக நினைத்து ஏளனம் செய்கிறேனோ அதையே நீ உன்னுடைய வெற்றியாக என்னிடம் நிரூபிக்கிறாய். அப்படி நிரூபிப்பதற்கு நீ கற்றிருக்கிற கல்வியும், தத்துவங்களும் உனக்குத் துணை செய்கின்றன. நீ நிரூபிப்பதை மறுப்பதற்கு என்னிடம் சொற்கள் இல்லை...”

“எப்படியோ கோபத்தோடு பேச்சைத் தொடங்கிக் கொதித்தவர் இறுதியில் இப்படித் தன்னை நோக்கிக் கண் கலங்கி நின்றபோது, இளங்குமரனுக்கு அவருடைய உண்மை நிலை புரிந்தது. அந்தப் பெரு வீரருடைய கண்களையும் கலங்கச் செய்துவிட்ட பாவத்துக்கு வருத்தியவனாகிய அவன் தயங்கி நின்றான். முல்லையைப் போலவே இவரும் வேறு ஒருவிதமான அன்புப் பிடிவாதத்தினால்தான் தன்னிடம் இந்தச் சினமும் இந்தக் கலக்கமும் அடைந்து நிற்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. தன்மேல் அவர் வைத்துவிட்ட அன்பே அவரை இந்த இரண்டுங்கெட்ட நிலைக்கு ஆளாக்கி வேதனைப் படுத்துகிறது என்பதை அவன் விளங்கிக்கொண்டான்.

அந்த நிலை விளங்கியவுடனே தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. அப்படி உணர்ந்த உடனே சுரமஞ்சரியோடு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் அவன்.

பின்பு நிதானமாக எழுந்து நின்றுகொண்டு, “எங்களுக்கு விடை தந்தருளுங்கள் ஐயா! உங்களுடைய கடுமையான வீர வாழ்க்கைக் கடமை மறுபடி உங்களுடைய கிடைக்கட்டும். கடுமையான வாழ்க்கையினால் இந்தச் சோழநாட்டுக்கு அந்த ஆயிரமாயிரம் புதிய வீரர்கள் தோன்ற வேண்டும். அதற்கு நான் ஒருவன் தடையாக இருக்க விரும்பவில்லை. என்மேல் அன்பு கொள்வதன் காரணமாக வீரர்களைத் தோற்றுவிக்கிற பெருவீரரின் மனம் அப்படிச் சலனமடைய நேர வேண்டாம்” என்று நெகிழ்ந்த மனத்தோடு அவரை வேண்டிக்கொண்டு தன் மனைவியுடனே புறப்பட முற்பட்டான் இளங்குமரன்.

நீலநாகர் இளங்குமரனுக்காக மட்டும் இதுவரை சற்றே நெகிழ்ந்து திறந்திருந்த தம் மனத்தின் உணர்ச்சிக் கதவுகளை இப்போது நன்றாக இறுக்கி அடைத்துக் கொண்டு மறுபடியும் கர்ம வீரராக மாறி அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தார். அப்படி விடை கொடுத்த போது அவர் கண்களில் நீர் கலங்கவில்லை. மனத்தில் எந்தப் பாசமும் இல்லை. சலனங்களே இல்லாமல் மனம் தெளிந்திருந்தது. இளங்குமரனும் சுரமஞ்சரியும் படைக் கலச் சாலையிலிருந்து வெளியேறியபோது மணிமார்பனும் அவன் மனைவியும் கூட அவர்களோடு சேர்ந்தே புறப்பட்டு விட்டார்கள்.

***

அன்று மாலை பூம்புகார் நகரம் நான்கு பேர்களுக்குத் தன் எல்லையிலிருந்து மானசீகமான விடைகொடுத்தது. இந்த நால்வரும் தன் மண்ணின் மேல் நின்றும் நடந்தும் ஆடியும் ஒடியும் பழகிய நாட்களை அந்தப் பழம் பெரும் நகரம் என்றுமே மறக்க முடியாதுதான். இவர்கள் அங்கு வாழ்ந்த நாட்களில் இவர்களுக்கு ஏற்பட்ட சுகதுக்கங்களும் வெற்றி தோல்விகளும் அந்த நகரத்துக்கு நன்றாக நினைவிலிருக்கும். அதன் மண்ணிலும் காற்றிலும் அந்த நிகழ்ச்சிகள் சுவடுகளாய் அழியாமல் மணந்து கொண்டேயிருக்கும்.

ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவி பதுமையும், பாண்டிய நாட்டுக்குப் புறப்பட்டார்கள். “நண்பனே! மறுபடியும் வாழ்க்கை வீதியில் எங்காவது என்றாவது சந்திப்போம்” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத் தான் இளங்குமரன். சுரமஞ்சரி நன்றி நிறைந்த கண்களால் ஒவியனை நோக்கிக் கைகூப்பினாள். அவர்கள் செல்ல வேண்டிய வழிகள் பிரிந்தன. வீதியில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும்தான். நெருங்கிப் பழகிய பலபேர்களுடைய வழிகளிலிருந்து இவர்களும் இவர்களுடைய வழி களிலிருந்து அந்தப் பல பேரும் இன்று இந்த மாலை வேளையில் இப்படிப் பிரிந்து விலகிப் போய்விட்டார்கள். மறுபடி சந்திக்க நேர்கிற வரை இவையெல்லாமே பிரிவு தான். மறுபடி சந்தித்தாலும் அதன்பின்னும் மறுபடி பிரிவு இருக்கும். இப்படிச் சந்திப்பும் பிரிவும்தான் வாழ்க்கை சந்தித்தால் பிரிவதையும், பிரிந்தால் சந்திப்பதையும் தவிர்க்க முடியாது.

“விரைவில் வருகிறேன், கவலைப்படாதே” என்று மணிநாகபுரத்திலிருந்து தான் புறப்பட்டு வரும்போது தன் தாய் மாமன் மகனான குலபதியிடம் கூறிவிட்டு வந்திருந்த சொற்களை நினைவு கூர்ந்தவனாகத் தன் துணைவி சுரமஞ்சரியோடு மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டான் இளங்குமரன்.

அன்று மாலை இளங்குமரன் சுரமஞ்சரியோடு கப்பல் ஏறுவதற்காகப் பூம்புகார்த் துறையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அப்போதுதான் மணிபல்லவத்திலிருந்து வந்து கரை சேர்ந்த கப்பல் ஒன்றிலிருந்து விசாகை எதிரே இறங்கி வந்துகொண்டிருந்தாள். இந்தச் சந்திப்பு வியக்கத் தக்கவாறு அங்கே நேர்ந்தது. இளங்குமரன் சுரமஞ்சரியை விசாகைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டுத் தன் வாழ்வில் நிகழ்ந்த புது மாறுதல்களை எல்லாம் அவளிடம் சொன்னான்.

அவையெல்லாவற்றையும் கேட்டுவிட்டு விசாகை புன்முறுவல் பூத்தாள். பின்பு அவனை நோக்கிச் சொல்லலானாள்:

“இப்போது நாம் இங்கே எதிரெதிர்த் திசைகளில் எதிரெதிர் வழிகளில் பிரிவதற்காக இந்த மாலை வேளையில் விடை பெறுகிறோம். நெடுங்காலத்துக்கு முன் இப்படி ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும் என்றுதான் என் தந்தை என்னைச் சுயம்வர மண்டபத்துக்குள் அழைத்துப் போய் நிறுத்தினார். அன்று நான் இந்த வாழ்வின் வாயிற்படிக்கருகே போய் விட்டுத் திரும்பி வேறு வழியில் வந்தேன். நீங்களோ இதற்கு எதிர் வழியிலிருந்து நடந்து வந்து இந்த வழிமேல் நின்றுகொண்டீர்கள். உங்களை வாழ்த்துகிறேன். உங்களுடைய இந்தத் தோல்விக்கும் எல்லையற்ற கருணைதான் காரணமாக இருக்கிறது. இதே வாழ்க்கையோடு இந்த உலகத்தில் நான் தனியாக என்னால் முடிந்த அறங்களைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த உடம்பில் உயிரும், கைகளில் பிச்சைப்பாத்திரமும் இருக்கிற வரை விசாகையின் தருமம் குறைவில்லாமல் நடைபெறும். நீங்களும் இல்லற வாழ்வில் உங்களால் முடிந்த தருமங்களைச் செய்யுங்கள். என் துறவு நெறி நான் மட்டும் தனியாகச் செய்கிற அறம். உங்கள் மனைவாழ்வோ நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து செய்கிற அறம். ஆகவே நீங்கள் தான் என்னைக் காட்டிலும் அதிகமான அறங்களை இனிமேல் உலகத்துக்குச் செய்ய வேண்டும்.

“நான் புத்த பூர்ணிமைக்காக யாத்திரை புறப்பட்டு வருகிறபோதெல்லாம் மணிநாகபுரத்துக்கும் வந்து உங்களைக் காண்பேன். நான் கூறியபடியே அலைகளைக் கடந்து அலைகளின் நடுவே போய் நீங்கள் வாழப் போகிறீர்கள். நீங்கள் பிறந்த தீவைப் போலவே உங்கள் வாழ்வும் தத்துவமாக நிலைத்து நிற்கட்டும். ஞானிகள் மணிபல்லவத் தீவைச் சக்தி பீடமாகக் கூறுகிறார்கள். முறையாகச் சுற்றி நிலை திரும்புகிற தேர்போல உங்கள் வாழ்வு அங்கே போய் நிறைகிறது” என்று கூறி விசாகை அவர்களை வாழ்த்தி விடை கொடுத்தாள்.

அப்போது, விசாகை தன்னைப் பிரிந்து செல்வதற்கு இருந்த அந்தக் கடைசி விநாடியில் இளங்குமரன் அவளிடம் ஓர் உதவி கோரினான்.

“அம்மையாரே! பாத்திரத்திலிருந்து இட முடியாத பிச்சை ஒன்று இந்தக் கடைசி விநாடியில் உங்களிடமிருந்து எனக்கு வேண்டும்.”

“என்ன பிச்சை அது?”

“பசிக்கிற வயிறுகளுக்கும், தவிக்கிற மனங்களுக்கும் ஆறுதல் அடையத்தக்க நிறைவு உங்களிடமிருந்தே கிடைக்க வேண்டும். இந்தப் பூம்புகாரின் புறவீதியில் உங்களுடைய ஆறுதலுக்காக ஒரு பேதைப் பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். முதலில் நீங்கள் அவளுடைய துக்கத்தைப் போக்க வேண்டும். அதன்பின் அவளை வேறு விதமான வாழ்க்கைக்குத் துணியும்படி பயிற்ற வேண்டும்?”

“யார் அந்தப் பேதைப் பெண்?”

“வீரசோழிய வளநாடுடையார் மகள் முல்லை. அவளைச் சந்தித்து அவளுடைய துன்பங்களுக்கு நீங்கள் அடிக்கடி ஆறுதல் கூற வேண்டும்.”

“அவளுக்கு என்ன துன்பம்?”

“உங்களைப் போன்ற புனிதவதிகளுக்குப் பெரிதாகப் படாத துன்பம் அது! அந்தத் துன்பத்தை என் சொற்களால் நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. அப்படிச் சொல்வதற்கு நானும் என் மனமும் கூசி நிற்பதற்குரிய செய்தி அது. அந்தப் பெண்ணின் துன்பங்களுக்கு இனிமேல் உங்கள் வார்த்தைகள்தான் மருந்தாக வேண்டும். ஆனால் இந்த வேண்டுகோளை நான் உங்களிடம் வேண்டியதாக அவளுக்குத் தெரியலாகாது.”

“புரிகிறது! துக்கமும் வேதனையும் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தின் பொது வழிகளிலிருந்து பிரித்து என்னுடைய வழியில் நான் அழைத்துக்கொண்டு போவதற்கு ஒரு பெண்ணை நீங்கள் எனக்குச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அவளை அந்த வழியில் அழைத்துச் செல்ல எனக்கு ஒரு மறுப்பும் இல்லை. இந்த உதவியை அவசியம் உங்களுக்கு நான் செய்கிறேன்” என்று ஒப்புக் கொண்டாள் விசாகை, தன் கண்களின் பார்வையாலேயே புண்ணியத்தைப் பரப்பவல்ல அந்தத் தெய்வீகப் பெண்ணுக்கு இப்போது மீண்டும் வணக்கம் செலுத்தி விடை கொடுத்தான் இளங்குமரன். சுரமஞ்சரியும் பயபக்தியோடு விசாகையை வணங்கினாள். “நீ கொடுத்து வைத்தவள் பெண்ணே! எவராலும் வெல்ல முடியாத மனத்தை உன் அறிவினால் வென்றிருக்கிறாய்” என்று தன்னை வணங்கிய சுரமஞ்சரியை வாழ்த்திவிட்டுச் சென்றாள் விசாகை.

இளங்குமரன் சுரமஞ்சரியோடு அந்தக் கப்பலில் ஏறிய போது பூம்புகார் நகரின்மேல் அந்திமாலை சூழ்ந்து கவிந்து கொண்டிருந்தது. நகர வீதிகளின் மாடங்களில் எல்லாம் அந்தி விளக்குகள் மின்னத் தொடங்கியிருந்தன.

“இந்த நகரத்தையும் இதன் உறவுகளையும் விட்டுப் பிரிவதனால் உன் மனம் எந்த விதத்திலும் கலங்க வில்லையா, சுரமஞ்சரி?”

“நான் அடைந்திருப்பது பெரிதாக இருக்கும்போது இழந்ததை எண்ணி வருந்த முடியாது.”

“இழந்ததை எண்ணி வருந்தத்தான் வேறு ஒருத்தி இருக்கிறாளே” என்று கூறியபடி இளங்குமரன் சுரமஞ்சரியைச் சோதனை செய்யும் குறிப்போடு அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய கண்களில் கலக்கம் தெரிந்தது. அதே கலக்கத்தை அப்போது தன் கண்களுக்கு முன் அங்கே இல்லாத இன்னொரு முகத்திலும் கற்பனை செய்து பார்த்தான் அவன். அந்தக் கற்பனையே வேதனை அளிப்பதாயிருந்தது.

கப்பல் நகர்ந்தது. கரை மெல்ல மெல்ல விலகியது. விசாகையின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டான் அவன். எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள் அவை !

‘முறையாகச் சுற்றி நிலைதிரும்புகிற தேர்போல் உங்கள் வாழ்க்கை அங்கே போய் நிறைகிறது’.

அப்போது சுரமஞ்சரி மெல்லிய குரலில் அவனைக் கேட்டாள்:

“நம்முடைய பயணம் எப்போது முடியும்? என்றைக்கு நாம் கரை சேருவோம்?”

“எந்தப் பயணத்தைப் பற்றிக் கேட்கிறாய் சுரமஞ்சரி? நம்முடைய இந்தப் பயணம் இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும். அதற்கு அப்புறம்தான் நம்முடைய சொந்தப் பயணம் தொடங்குகிறது. அந்தப் பயணத்திலிருந்து நாம்

ம-80 கரை சேர எவ்வளவு காலமாகுமோ? விசாகையைப்போல் நான் தனியாகவே நடத்த முடியாமல் போய்விட்ட பயணம் அது. இனிமேல் அதற்காகக் கவலைப்பட்டும் பயனில்லை. நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீரவேண்டுமென்று அருட்செல்வ முனிவர் அன்றொரு நாள் சிரித்தபடியே என்னிடம் கூறிவிட்டுப் போனார். அந்த சில வார்த்தைகளுக்குள் இவ்வளவு பெரிய விளைவுகள் அடங்கியிருக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. உன்னை ஏற்றுக் கொண்டதோடு என் பாசங்கள் முடிந்து விடவில்லை. இனிமேல்தான் ஒவ்வொரு பாசமாகத் தொடரப்போகிறது, என் தாய்மாமன் மகனான குலபதி மணிநாகபுரத்தில் எனக்காகவே என்னை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பான். நாமும் அங்கே போய்த்தான் இனிமேல் வாழப் போகிறோம். நம்முடைய வாழ்க்கையைப் பார்த்தே இனி அவன் தன்னுடைய பழைய துக்கங்களை எல்லாம் மறந்து விடுவான்....” என்று கூறி நெட்டுயிர்த்தான் இளங்குமரன்.

கடலில் அலைகள் கரிந்து சரிந்து மீண்டுகொண்டிருந்தன. பூம்புகார் தொலைவில் மங்கியது. அதன் சதுக்க நினைவுகள் அவர்கள் மனங்களில் தங்கின. தன்னருகே கரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்று கொண்டிருந்த சுரமஞ்சரியை நோக்கிச் சிரித்தான் இளங்குமரன்.

அவனுடைய அந்தப் பார்வை அவளை மணப் பெண்ணாக அலங்கரிக்கத் தொடங்கியது. அதற்கு நாணி நிமிர்ந்தும் நிமிராமலும் நளினமாகத் தலையைச் சாய்த்து கடைக்கண்களால் அவனைக் காண முயன்றாள் அவள்.

அவள் அப்படிப் பார்க்க முயன்ற முகம் எதுவோ அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை பிறந்தது. அவனுடைய கண்பார்வையினால் அவள் மலர்ந்து நின்றாள். பின்பு அந்த மலர்ச்சி வாடவே இல்லை. அப்படியே நெடுங்காலத்துக்கு வாழ்கின்ற நித்தியமான மலர்ச்சியாய் அது வளர்ந்தது.