மணி பல்லவம் 5/2. குலபதியின் விருந்து
2. குலபதியின் விருந்து
தானும் இளங்குமரனும் குலபதியின் மாளிகைக்குள் அவனோடு செல்வதற்கு முன்னால் முன்னேற்பாடாக வளநாடுடையார் வேறொரு காரியம் செய்தார். பின்புறம் வீதியில் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒவியன் மணி மார்பனையும் அவன் மனைவி பதுமையையும் தங்களிடமிருந்து பிரித்துத் தனியே அனுப்பிவிட்டார்.
“மணிமார்பா! நீயும் உன் மனைவியும் உங்கள் மனம் விரும்பியபடி இன்று மாலைப் போதுவரை இந்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கப்பலுக்கு நேரே திரும்பிப் போய்விடலாம். இந்த இரத்தின வணிகருடைய மாளிகையில் எங்களுக்குச் சில அவசரமான காரியங்கள் இருக்கின்றன. எங்களோடு வந்தால் நீயும் உன் மனைவியும் இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க முடியாமலே போய்விடலாம். மேலும் இந்த மாளிகையில் நாங்கள் கவனிக்க வேண்டிய காரியங்களுக்கு எவ்வளவு போதாகும் என்று உறுதியும் சொல்ல முடியாது. கப்பல் தலைவன் இன்று மாலையே பக்கத்திலிருக்கும் மணிபல்லவத் தீவுக்குப் புறப்பட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறான். நாங்கள் இருவரும் குலபதியின் இந்த மாளிகையிலிருந்து புறப்படுவதற்கு இரவு நடுயாமத்துக்கு மேலும் ஆனாலும் ஆகிவிடலாம். ஒருவேளை புத்த பூர்ணிமைக்காக மணிபல்லவத்துக்கே நாளைக்குக் காலையில் நாங்கள் புறப்பட்டு வந்து சேரும்படி ஆகலாம். நீயும் எங்களோடு காத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாங்கள் வருவதற்குத் தாமதமானாலும் நீ முன்னால் புறப்பட்டுப் போய்விடுவது நல்லது,” என்று தன்னிடம் வளநாடுடையார் சொல்லி வேண்டிக் கொண்டபோது ஓவியன் மணிமார்பனுக்கும் தான் அவ்வாறு செய்வதே நல்லதென்று தோன்றியது. மணிநாகபுரத்தின் அழகிய வீதிகளையும், காட்சிகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவனும் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியோடு சென்றான்.
முதலில் மாளிகை மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்த குலபதியோடும் இளங்குமரனோடும் உள்ளே போகத் தொடங்கியிருந்த வளநாடுடையார் பின்னால் ஒவியனும் அவன் மனைவியும் வந்து கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தவராகத் தான் மட்டும் மறுபடி வீதிக்குத் திரும்பிச் சென்று இவ்வாறு அவர்களைத் தங்கள் குழுவிலிருந்து பிரித்து அனுப்பிவிட்டார். அவரது அந்தச் செய்கைக்காக இளங்குமரன் தனக்குள் வருந்தினான். எனினும், தனக்குப் புதியவனான குலபதி என்னும் இளைஞனை அருகில் வைத்துக் கொண்டு வளநாடுடையாரைக் கடிந்து பேசுவது நாகரிகமாயிராது என்று கருதி இளங்குமரன் தன் வருத்தத்தை மனத்துள்ளேயே புதைத்துக் கொண்டு விட்டான். மனிதர்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் சமமாகப் பாவித்து மதிக்கத் தெரியாதவர்கள் உலகப் படைப்பையும் படைத்தவனையுமே அவமானப்படுத்துவதாக எண்ணி வேதனைப்படுவது அவன் வழக்கம். பழைய நாட்களில் தனக்கு முன் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறு குழந்தையின் துன்பத்தைப் போல் சொல்லிலும் உணர்வுகளிலும் வெளிப்படுத்திக் குமுறியிருப்பான். மனம் முதிர்ந்து பக்குவப்பட்டுவிட்டது என்பதற்கு ஒரே பயன் கணந்தோறும் கண்களுக்கு முன் தென்படுகிற உலகத்துத் துன்பங்களுக்காக இதயத்திலேயே அழுது புலம்புவதுதான். எப்போதும் விடலைப் பருவத்துப் பிள்ளையைப் போல் மனத்தினால் குமுறிக் கண்களால் எதிர்க்க முடிவதில்லை. ஆனால் கண்களால் அழுகிறவர்களைத்தான் உலகம் துக்கம் உடையவர்களாகப் புரிந்து கொள்கிறது. மனத்தினால் அழுதுகொண்டிருப்பவர்களைப் புரிந்துகொள்ள உலகத்திற்கு நீண்ட காலமாகிறது. இப்படி ஒவ்வொரு கணமும் ஒவ்வோர் இடத்திலும் கண்முன் தெரியும் உலகத்துத் துன்பங்களுக்காக மனத்தினால் அழுது தனக்கே அந்தத் துன்பம் வந்தாற்போல் முடிவு தேடித் தவிக்கும் பரந்த சோக அநுபவத்தை இளங்குமரன் பலமுறைகள் அடைந்திருக்கிறான்.
நாளங்காடிப் பூத சதுக்கத்தில் முதல் முதலாக இதே ஏழை ஒவியனைச் சந்தித்தபோது இவனுக்கு இரங்க வேண்டும் என்று தன் மனம் நெகிழ்ந்ததை இந்தக் கணத்தில் நினைக்கத் தோன்றியது இளங்குமரனுக்கு. இலஞ்சி மன்றத்துப் பொய்கைக் கரையிலும், உலக அறவியின் நிழலிலும் நிறைந்து கிடந்து உழலும் ஏழைகளையும் நோயாளிகளையும் பார்க்க நேரிடும்போதும் நினைக்க நேரும்போதும் மனத்தினால் அழுது வருந்தியிருக்கிறான் அவன். இந்திர விழா நிறைவு நாளில் கழார்ப் பெருந்துறை நீராடலின்போது சுரமஞ்சரியைக்காப்பாற்றிக் கப்பல் கரப்புத் தீவில் அவளிடம் கருணை கொண்ட போதும், திருநாங்கூரில் குருகுலவாசம் செய்து கொண்டிருந்த போது தன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்காக அழைத்துச் செல்வதற்கு வந்திருந்த முல்லையிடம் மனம் நெகிழ்ந்து பேச முடியாமற் போனபோதும், ‘உங்களுடைய ஞானத்தையும், சான்றாண்மையையும் பார்த்துப் பெருமைப்பட உங்களைப் பெற்றவள் இப்போது அருகில் இருக்க வேண்டும்’ என்று விசாகை பூம்பொழிலில் ஒருநாள் தன்னிடம் கூறியபோதும் இளங்குமரன் மனம் நிறையக் கண்களாய் மாறிக் கலங்கி அழுதிருக்கிறான். அறிவு முதிர்ந்த வழியில் நடந்து போகிறவனின் ஞான யாத்திரையில் கடைசியாகக் கால்கள் நிற்குமிடம் மனத்தின் அழுகையாகிய இந்தக் கருணைதான். எல்லார் மேலும் பரிவும் பாசமும் கொண்டு எல்லாருடைய துக்கத்திற்காகவும் மனத்தால் அழுது தவிக்கும் இந்தப் பரந்த தாய்த் தன்மையே மனிதனுக்கும் அவன் வணங்கும் பரம்பொருளுக்கும் நடுவிலிருப்பதாகச் சொல்லப்படும் தொலைவைக் குறைத்து இருவரையும் அருகருகே நெருங்கச் செய்கிறது. தன்னுடைய மனத்தின் எல்லையெல்லாம் நிறைந்திருந்த இந்தப் பரந்த கருணையை அழவைத்துப் புண்படுத்துவது போல் வளநாடுடையார் மணிநாகபுரத்து வீதியில் ஒவியனைத் தனியே பிரித்து அனுப்பியபோது இளங்குமரன் பெரிதும் புண்பட்டான். ஒவியனிடம் தனக்குள்ள கருணையை அப்போது வெளிப் படுத்துவதனால் குலபதியும் வளநாடுடையாரும் வருந்த நேரிடுமே என்று எண்ணி அழுது புலம்பும் மனத்தோடு சிரித்து மகிழும் முகத்தோடும் நின்றான் இளங்குமரன். அந்த நிலையில் குலபதி அவனிடம் தானே பேசலானான்.
“ஐயா! இந்த முத்துமாலை மேலேயிருந்து உங்கள் தோளில் விழுந்தபோது காண்பதற்கு அந்தக் காட்சி எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா? பொன்னிற் செய்து பின்பு மெருகிட்டுப் புனைந்தாற் போன்ற உங்கள் தோள்களிலேயே மறுபடி இதைக் காண வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது எனக்கு தயைக்கூர்ந்து இந்த மாலையை இப்படிக் கையில் வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாகக் கழுத்தில் அணிந்துகொள்ள வேண்டும் நீங்கள்.”
அப்போது அந்த விநாடி வரை வீதியில் வளநாடுடையார் மணிமார்பனிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக்கொண்டிருந்த இளங்குமரன் குலபதியின் இந்தச் சொற்களைக் கேட்டுத் திரும்பினான். இம்முறை தான் முதன் முதலாய்க் கூர்ந்து கவனிப்பதுபோல் அந்த மணிநாகபுரத்து இளைஞனை அவன் நன்றாகப் பார்த்தான். நீண்டு வளர்ந்திருந்த குடுமியை முடிப்பாக அள்ளிச் செருகியிருந்த தோற்றம் அந்த நாகநாட்டு இளைஞனின் முகத்துக்கு மிகவும் அழகாயிருந்தது. இளமை அரும்பும் பருவத்து முக அழகு தவிர நீண்டு வடிந்த அளவான செவிகளில் நாகர்த்தினங்கள் பதித்த காதணிகளையும் அழகுற அணிந்திருந்தான் அவன். ஆண் மகனாக இருந்தாலும் அவன் சிரிக்கும்போது முத்துதிர்வது போல நளினமானதொரு கவர்ச்சியும் அந்த முகத்தில் வந்து பொருந்தியது. தோற்றத்தில் அதிக உயரம் இல்லா விட்டாலும் அவனுக்கு அமைந்த உயரமே அவனை அழகனாகத்தான் காண்பித்தது. சில நிழல் மரங்களைப் பார்த்தால் உடன் அங்கே உட்கார வேண்டும் என்று ஆசை வருவதைப்போல் குலபதியின் முகத்தை ஒருமுறை பார்க்கிறவர்களுக்குச் சிறிது நேரம் வேறு காரியங்களை மறந்து அந்த முகத்தை மட்டும் பார்க்கலாம் என்று தோன்ற முடியும் எனப் புரிந்துகொண்டான் இளங்குமரன். தன் முகத்தை இளங்குமரன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் குலபதி சுறுசுறுப்பாக வேறு ஒரு காரியம் செய்தான். இளங்குமரனுடைய யிைலிருந்த முத்து மாலையை அவனது விரல்களின் பிடியிலிருந்து சிரித்துக் கொண்டே மெல்ல விடுவித்துத் தன் கைகளாலேயே அவனுடைய கழுத்தில் அணிவித்தான். இளங்குமரனால் அந்தப் பிள்ளையின் செயலை மறுக்க் முடியவில்லை.
“வாருங்கள்! இனி. நாம் உள்ளே போகலாம்’ என்று சொல்லிக் கொண்டே அப்போது வளநாடுடையாரும் வீதியிலிருந்து திரும்பி வந்தார். மீண்டும் மூன்று பேருமாக அந்த மாளிகைக்குள் துழையும்போது வளநாடுடையார் கூறினார்
“இளங்குமரா! இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நீ திருநாங்கூரில் இருந்த காலத்தில் நான் வந்து உன்னை மணிபல்லவத்துக்கு அழைத்தபோதே, நீ இங்கு வந்திருந்தால் நம்முடைய குலபதிக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். அப்போது நீ வராததனால் நான் மட்டும் தனியாக இந்தத் தீவுக்கு வந்திருந்தேன். குலபதியையும் அவனுக்கு மிகவும் வேண்டியவராகிய மற்றொருவரையும் இங்கே சந்தித்தேன். அப்படிச் சந்தித்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொற்களில் அடக்க முடியாது. அதே மகிழ்ச்சியை இன்னும் சிறிது நேரத்தில் நீயும் அடையப் போகிறாய்.”
இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் மாளிகையின் நடுக்கூடத்தை அடைந்திருந்தார்கள். தளத்தில் எங்கு நோக்கினும் முத்தும், மணியும், பவழமுமாகப் பதித்திருந்ததனால் அந்த மாளிகையின் ஒவ்வொரு அணுவிலும் அது ஒர் இரத்தின வணிகருடையது என்பதை நினைவூட்டும் அழகு அமைந்திருந்தது. இரத்தின வாணிகன் குலபதியைப் பற்றியும், மணிநாகபுரத்தில் அவனுக்குள்ள பெருமை களைப் பற்றியுமே, வளநாடுடையார் விவரித்துச் சொல்லிக் கொண்டு வந்தாரே ஒழிய இன்ன வகையில் அவனுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டது என்றோ, அவன் இன்னான் என்றோ விவரமாகக் கூறவில்லை. குலபதியின் அந்த மாளிகையைச் சுற்றிப் பார்த்தபோது தன்னோடு மணி மார்பனும் அங்கு வந்திருக்க வேண்டும் என்று அதன் அழகுகளை நோக்கிக்கொண்டே எண்ணினான் இளங்குமரன். ஒர் ஒவியன் தன்னுடைய கண்கள் நிறையக் கண்டு மகிழ வேண்டிய பேரெழில் மாளிகையாயிருந்தது அது. மணிமார்பன் தன் உடனில்லையே என்பதை ஒவ்வொரு கணமும் இளங்குமரன் அங்கு உணர முடிந்தது.
அந்த மாளிகையின் முற்றத்தில் உள்ள பூங்காவிலிருந்தே நாகதெய்வக் கோட்டத்துக்குள் போவதற்கான வழி ஒன்றும் அமைந்திருந்தது. இளங்குமரனும், வளநாடுடையாரும் நீராடித் துய்மை பெற்ற பின் அவர்களை நாகதெய்வ வழிபாட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான் குலபதி, அந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு மாளிகைக்குத் திரும்பியதும் குலபதி இளங்குமரனுக்கும் வளநாடுடையாருக்கும் அறுசுவை விருந்து படைத்தான். பொன்னும், மணியும், முத்துக்களும், இரத்தினமுமாகப் பார்க்கும் இடமெல்லாம் ஒளி நிறைந்து தோன்றினாலும் அந்த மாளிகையில் ஏதோ ஒரு குறை இருப்பதாய்ப் புறத்தோற்றத்தில் தெரிந்தும், தெரியாததான ஒரு நிலையை இளங்குமரன் உணர்ந்தான். அந்தக் குறையைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் இளங்குமரா! இந்த உணவு விருந்தைக் காட்டிலும் பெரிய விருந்து ஒன்றை இன்னும் சிறிது நாழிகையில் குலபதி உனக்கு அளிக்கப் போகிறான். பலநாள் பசியைத் தீர்க்கப் போகிற உணவு அது!’ என்று பேச்சைத் திருப்பிப் புதிய கவனத்திற்கு மாற்றினார் வளநாடுடையார். அதுவரை மெளனமாய் அமர்ந்து பசியாறிக்கொண்டிருந்த இளங் குமரன், “அது என்ன அப்படிப் புதுமையான உணவு ?” என்று அவரைக் கேட்டான். அவனுடைய கேள்விக்கு வளநாடுடையார் மறுமொழி கூறவில்லை. அதற்குள் குலபதியே முந்திக்கொண்டு கூறினான்.
“விருந்து என்றாலே புதுமையானதென்றுதான் பொருள். உண்ணும் பொருளும் பசியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள பழைய பழக்கம் தான். அதுவே பழகிய பழக்கமும் ஆகிறது. ஆனால் உண்கிற இடமும் உபசாரம் செய்கிற மனிதர்களும் புதுமையாக இருந்தால் அதை விருந்து என்கிறோம். நானோ இன்று புதுமையான பொருள்களையே உங்களுக்குக் காட்டப்போகிறேன். அந்தப் புதிய பொருள்கள் உங்களுடைய பழைய விருப்பங்களைத் தீர்க்கிறவையாகவும் அமையலாம். இந்தப் பழம் பெரும் மாளிகையில் ஒவியமாடம் என்று ஒரு பகுதியிருக்கிறது. அதில் இந்த மாளிகைக்குள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்ந்து முடிந்தவர்களின் ஒவியங்களும் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், வாழும்போது புனைந்து கொண்ட பொருள்களும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாளிகையின் ஓவிய மாடத்தில் ஓவியங்களாக இருப்பவர்களில் ஒருவர்கூட இந்தத் தீவின் எல்லையில் இறந்ததில்லை. துயரம் நிறைந்த வாழ்க்கையின் பழைய தலைமுறை நினைவுகளையும், பழையவர்கள் சேர்த்து வைத்த செல்வத்தையும் நுகர்ந்துகொண்டு இந்தக் குடிசையின் கடைசித் தளிராக நான் மட்டும்தான் மீதமிருக்கிறேன். உங்களைப் போன்ற ஞானிகள் அந்த ஓவிய மாடத்தைப் பார்ப்பதானால் எனக்கு ஏதேனும் புதிய நற்பயன் நேரலாமோ என்னவோ?"என்று குலபதி கூறும்போது அவனுடைய இனிமையான குரல் நலிந்திருந்தது. சொற்கள் துயரந் தோய்ந்து பிறந்தன.
“ஐயா! நீங்கள் உங்களை அறியாமலே மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்களே! சற்று முன்பு எங்களைப் பின்பற்றித் தன் மனைவியோடு இந்த வீதியில் வந்தாரே; அவர் பாண்டிய நாட்டின் சிறந்த ஓவியர். உங்கள் ஓவிய மாடத்தை அவர் பார்ப்பதானால் எவ்வளவோ நன்மைகள் ஏற்படும். அவரை ஊர் சுற்றிப் பார்க்க அனுப்புமுன் இங்கே அழைத்து வந்து உங்கள் ஓவிய மாடத்தைக் காண்பித்திருந்தால் நான் மகிழ்ச்சி கொண்டிருப்பேன். இந்தக் கலை விருந்தை உண்பதற்கு ஏற்றவன் நான் இல்லை. அந்த ஓவியர்தான்! அவரை வீதியிலிருந்தே, இந்த மாளிகைக்குள் அழைக்காமல் அனுப்பிவிட்டு இப்போது என்னை மட்டும் உங்கள் ஓவிய மாடத்துக்கு அழைக்கிறீர்களே?” என்று கேட்டான் இளங்குமரன்.
அவனுடைய இந்தக் கேள்வியைச் சிரித்தவாறே ஏற்றுக்கொண்ட குலபதி, “விருந்தை உண்பதற்கு ஏற்றவர் யார் எனத் தீர்மானம் செய்ய வேண்டிய பொறுப்பு விருந்திடுகிறவனுக்கு உண்டாயின், நான் உங்களை மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கிறேன்” என்று மறுமொழி பகர்ந்தான். குலபதியின் இந்த மறுமொழியே ஒருவிதத்தில் புரிந்தும் பலவிதத்தில் புரியாமலும், ஏதோ ஒரு புதிர் போலிருந்தது இளங்குமரனுக்கு.
“நம்முடைய குலபதி உன் கழுத்தில் முத்துமாலையை அணிந்தபோதே உன்னைத் தன்னுடைய நெருக்கமான உறவினனாகவும் தேர்ந்தெடுத்து வரித்துக் கொண்டாயிற்றே. “தம்பீ!” என்று சொல்லி அதையே இன்னும் பெரிய புதிராக்கினார் வளநாடுடையார்.
“கையிலேயே வைத்துக் கொண்டிருந்த அரும்பொருள் எங்காவது தானாக நழுவி விழுகிறாற்போல் நான் மாடத்தில் நின்றபோது என் கையிலிருந்த முத்துமாலையோடு எனது மனமும் உங்களிடம் நழுவி விட்டது ஐயா !” என்று மேலும் உயர்வாகச் சொல்லி அந்த விருந்தைச் தன் சொற்களின் மதிப்பினாலும் சுவையுடைய தாக்கிச் சிறப்பித்தான் குலபதி.
அந்த அன்பையும் ஆவலையும் மறுக்க முடியாமல் உண்ணும் விருந்து முடிந்ததும், காணும் விருந்தாகிய ஓவிய மாடத்தைக் காண்பதற்காக அவர்களோடு சென்றான் இளங்குமரன். என்ன காரணத்தாலோ அந்த மாளிகையின் ஓவியமாடத்தை அவன் கண்டிப்பாய்க் காண வேண்டுமென்பதில் வளநாடுடையாரும் குலபதியும் பிடிவாதமாக இருந்தார்கள் என்பது மட்டும் அவனுக்கே புரிந்தது.