மணி பல்லவம் 5/8. கருத்தில் மூண்ட கனல்
கிளர்ந்த உணர்வுகளும் விம்மிப் பூரிக்கும் தோள்களுமாக இளங்குமரன் எதிரே பார்த்தான். மணிநாகபுரத்து மாளிகையின் ஓவியமாடத்து அறையிலிருந்து நேர்கீழே தணிவாகத் தென்பட்ட முற்றத்தில் எமகிங்கரர்களைப் போன்ற தோற்றமுடைய முரட்டு நாகமல்லர்கள் ஐம்பது அறுபது பேர் - ஆயுத பாணிகளாக அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர். போர்க் கோலம் புனைந்து கொண்டாற் போன்ற தோற்றத்தோடு குலபதியும் அங்கே அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு உட்பக்கம் திரும்பி ஓவிய மாடத்தை நோக்கினான். அங்கே மணிமார்பன் சில ஓவியங்களைப் பிரதி செய்து கொண்டு நிற்பது தெரிந்தது.
‘இந்தக் காரியங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக நிகழ்வதன் நோக்கமென்ன?’ என்று இளங்குமரன் தனக்குள் சிந்திக்கத் தொடங்கியபோதில்,
“எதிரே நிகழ்கிறவற்றையெல்லாம் பார்த்தாய் அல்லவா?” என்று கேட்டுக்கொண்டே அருட்செல்வர் வளநாடுடையாரோடு அங்கு வந்து சேர்ந்தார். அவன் இப்போது புதிதாகத் தெரிந்துகொண்டவற்றால் அந்த முனிவருக்கு அதிக நன்றிக்கடன் பட்டிருந்தான்.
“எப்போதோ நிகழ்ந்து முடிந்தவற்றையெல்லாம் இந்த ஏடுகளில் பார்த்தேன். இப்போது நிகழ்கிறவற்றை என் எதிரே பார்க்கிறேன். இழந்தவற்றுக்காக வேதனைப்படுகிறேன். பெற வேண்டியவற்றுக்காகக் கிளர்ச்சி அடைகிறேன். இவ்வளவையும் தெரிந்துகொண்டபின் உங்கள் மேல் என் நன்றி பெருகுகிறது. என்னை வளர்த்து ஆளாக்கிய காலத்தில் என்னை வளர்ப்பதைத் தவிர வேறு தவங்களைச் செய்ய மறந்திருக்கிறீர்கள் நீங்கள். இது பெரிய காரியம். இதற்குக் கைம்மாறு செய்ய எனக்குச் சக்தியில்லை” என்று முனிவரை நோக்கி அவன் நாத்தழுதழுக்கக் கூறினான். முனிவர் அவன் அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு அன்போடும் பாசத்தோடும் பேசலானார்:-
“கைம்மாறு எதிர்பார்த்துக்கொண்டு நானும் இவற்றையெல்லாம் செய்யவில்லையப்பா, இன்று உன்மேல் நான் கொண்டிருக்கிற இதே அபிமானத்தை உன் தந்தை அமுதசாகரன் வாழ்ந்த காலத்தில் அவன் மேலும் கொண்டிருந்தேன். உன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட கொடுந்துன்பங்கள் என்னை பற்றும் பாசமும் உள்ள வெறும் மனிதனாக்கிவிட்டன. அந்தக் கணத்திலிருந்து நான் உனக்காக மட்டும் தவம் செய்யத் தொடங்கிவிட்டேன். அந்த தவம் இன்று நிறைவேறுகிறது. இனிமேல்தான் என்னுடைய மெய்யான தவங்களை நான் செய்யத் தொடங்க வேண்டும்.”
“உங்கள் தவம் நிறைவேறுகிற விநாடிகளில் என் தவம் அழிகிறது. நான் படித்துப் படித்துச் சேர்த்திருந்த பொறுமை இப்போது எவ்வளவோ முயன்றும் என்னிடம் நிற்காமல் நழுவுகிறது...”
“அப்படி நழுவ வேண்டுமென்றுதான் இவ்வளவு காலம் நானும் காத்திருந்தேன். இதோ கீழே உன்னுடைய தாய்மாமன் மகனாகிய குலபதி பட்டினப்பாக்கத்து ஏழடுக்கு மாளிகையையே இரவோடிரவாகச் சூரையாடிக் கொள்ளையிட வேண்டுமென்று படை திரட்டிக் கொண்டு நிற்கிறான். நீ யாரைச் சந்தித்துப் பழிவாங்க வேண்டுமோ அவனிடம் காண்பிப்பதற்காக உன் நண்பனான ஓவியன் மணிமார்பனைக் கொண்டு இந்த ஓவியங்களைப் பிரதி செய்யச் சொல்லியிருக்கிறேன். நீ போகும்போது இவற்றையும் உன்னோடு கொண்டு போ. குலபதியும் அந்த நாகமல்லர்களும் உன்னோடு பூம்புகாருக்கு வருகிறார்கள். வளநாடுடையாரும் ஒவியனும் வேறு வருகிறார்கள். பூம்புகாரில் நீலநாகரும் இருக்கிறார்.”
“ஏன் நீங்கள் வரவில்லையா?”
“நான் இனிமேல் பூம்புகாருக்கு வருகிற எண்ணமில்லை. உனக்கு இவற்றையெல்லாம் உணர்த்தியபின் இன்று என் மனச்சுமை குறைந்துவிட்டது. இந்த விநாடியிலிருந்து நான் மெய்யாகவே எல்லாப் பாசங்களையும் உதறிய பூரணத் துறவியாகிவிட்டேன். இங்கேயே சமந்த கூடத்துக் காட்டில் எங்காவது போய்க் கடுமையான தவவிரதங்களில் இனி ஈடுபட எண்ணியிருக்கிறேன். இன்று இப்போது நீ எனக்குச் செய்ய முடிந்த கைம்மாறு, என் வழியில் நான் போவதற்கு விடுவதுதான். மறுபடி உன்னைக் காண வேண்டுமென்று எனக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போது நானே உன்னைத் தேடிக் கொண்டு வருவேன்.கடமை நிறைவேறிய பின்னும் பற்றுப் பாசங்களை உதிற முடியாமல் நான் இருந்து விடுவேனாயின் என்னுடைய துறவு நெறி பொய்யாகிவிடும்.”
‘சுவாமீ! நீங்கள் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டுப் போகிற போக்கில் நான் எதையும் உதற முடியாமல் என்னைக் கோபதாப உணர்ச்சிகளில் பிணைத்துவிட்டுப் போகிறீர்களே? இது நியாயமா?”
“நன்றாக விடுபட வேண்டுமானால் நன்றாகக் கட்டுண்டுதான் தீர வேண்டும். நீ இப்போது கட்டுப்படுவதும் அப்படித்தான். இரும்புக் கவசங்களாலும், ஆயுதங்களாலும் கட்டுண்டு உடம்போடும் விடுபட்ட மனத்தோடும் நீலநாகர் வாழவில்லையா? அப்படி நீயும் வாழ்வாய் எனக்கு விடை கொடு.”
அருட்செல்வருடைய பிரிவு வேதனையைக் கொடுத்தாலும் இளங்குமரன் அவருடைய விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க விரும்பாமல் விடை கொடுத்தான். எட்டு அங்கமும் தோய வீழ்ந்து வணங்கி அவருடைய பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டான். மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு அவர் சமந்தகடத்திற்கு புறப்பட்டுப் போனார். அனலும் வெப்பமும் மிகுந்த நேரத்தில் எங்கிருந்தாவது நல்ல குளிர் காற்றுச் சில்லெனப் புறப்பட்டு வருவதுபோல் வேதனையும் துன்பமும் படுகிறவர்களின் வாழ்க்கையில் உதவி புரிவதற்கென்றே இப்படிச் சில ஞானிகள் நடுவாக வந்து பொறுப்புடனே துணை செய்துவிட்டுப் போகிறார்கள். இப்படிப் பயன் கருதாமல் உதவி செய்ய வருகிறவர்கள் கடவுளின் பிரதிநிதிகளாயிருக்க வேண்டும் என்று அருட்செல்வரைப் பிரிந்தபோது இளங்குமரன் எண்ணினான். எல்லாம் புரிந்துகொண்டு எவற்றை உணர வேண்டுமோ அவற்றை உணர்ந்து கிளர்ச்சியுற்ற மனத்தோடு நின்ற இளங்குமரன் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சி மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்தான். படிப்படியாக நடந்து மலையேறி வந்தவன் உயரத்தில் போய் நின்று கொண்டு இனிமேல் போவதற்கு இதைவிட உயரமானது எதுவுமில்லையே என்று மலைப்போடு நடந்து வந்து வழியைத் திரும்பிப் பார்ப்பது போலிருந்தது அந்த நிலை.
முதன் முதலாகப் பட்டினப்பாக்கத்துப் பெருமாளிகைத் தோட்டத்தில் அந்த பெருநிதிச் செல்வர் தன்னைச் சந்தித்ததையும் தன் கழுத்தின் வலதுபக்கத்துச் சரிவில் கருநாவற்பழம் போலிருந்த கருப்பு மச்சத்தை உற்றுப் பார்த்தபின், ‘அருட்செல்வ முனிவர் நலமாயிருக்கிறாரா?’ என்று குறும்புத்தனமாகத் தன்னை நோக்கிக் கேட்டதையும், தான் அன்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஒற்றைக் கண்ணன் தன்னை இரகசியமாகப் பின்தொடர்ந்ததையும் இப்போது வரிசையாக நினைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டான் இளங்குமரன். இந்த எண்ணங்களையும் தன் குடியின் ஒருதலைமுறை உயிர்களும் செல்வங்களும் அந்தப் பெருநிதிச் செல்வனால் அழிக்கப்பட்டிருப்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பார்த்தபோது அவனுடைய கருத்தில் கனல் மூண்டது. அந்த விநாடியில் அத்தகைய புதிய உணர்வுகளைத் தாங்கிக் கொண்டிருக்கும்போது தன் முகம் எப்படியிருக்கிறதென்று ஓவிய மாடத்தில் பதித்திருந்ததொரு கண்ணாடியில் பார்த்தான் இளங்குமரன். உணர்ச்சிகளின் சிறுமை எதுவும் படியாமல் பளிங்குபோல் இருந்த அவன் முகம் சற்றே கறுத்திருந்தது. இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்ததனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் ஒருபுறமும், இவை தெரிந்ததனால் இழந்த உணர்ச்சிகளை எண்ணி வருந்தும் வருத்தம் ஒருபுறமுமாக இளங்குமரன் சிறிது போது மலைப்படைந்து நின்றான். தன் தாயும் தந்தையும் சந்திப்பதாக வரையப்பட்டிருந்த ஒவியத்தின் அருகே சென்று சில விநாடிகள் கண்ணிமையாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் கீழேயிருந்த ஏடுகளை எடுத்துப் பார்த்துத் தன் தந்தையின் சுவை நிறைந்த கவிதைகளைச் சிறிது நாழிகை உணர்ந்து மகிழ்ந்தான். கீழே போய்க் குலபதியை அழைத்துக் கொண்டு வந்து நின்றார் வளநாடுடையார்.
“தம்பீ! குலபதியின் இரகசியப் படையிலிருக்கும் மல்லர்கள் ஒவ்வொருவரும் பத்து எதிரிகளை அடித்துக் கொல்லுகிற ஆற்றலுடையவர்கள். இவர்களோடு நாம் எல்லோரும் இன்று மாலையே பூம்புகாருக்கு கப்பலேற வேண்டும்” என்று வளநாடுடையார் கூறியபோது சில கணங்கள் இளங்குமரன் மெளனமாயிருந்தான். பின்பு ஒவ்வொரு சொல்லாகச் சிந்தித்துப் பேசுகிறவனைப் போலப் பேசினான்:
“ஐயா! யாருடைய வெறுப்பினால் என்னுடைய குடி இப்படிச் சீரழிந்ததோ அவருடைய செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அவற்றை நமது கப்பல் நிறைய நிரப்பியபின் பூம்புகாரிலிருந்து இரவோடிரவாகத் திரும்பிவிட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் போலிருக்கிறது. என் விருப்பம் அது அன்று. இவ்வளவு கெடுதலும் செய்வதற்குக் காரணமாக அந்த மனத்தில் இருந்த தீய எண்ணங்களை ஒவ்வொனறாக வெளியேற்றிப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். பெண் சம்பந்தமாக ஏமாறியவர்களும், பொன் சம்பந்தமாக ஏமாறியவர்களும் அந்த ஏமாற்றத்துக்குக் காரணமாயிருந்தவர்கள் மேல் எவ்வளவு குரோதமுற முடியும் என்பதற்கு இந்த மனிதர் உதாரணமாயிருக்கிறார். என் தந்தையையும் தாயையும் இவர் அழித்துவிட்டதாக எண்ணிக் கொண்டிருப்பது தான் பேதைமை. உலகத்தில் பாடும் குலத்தின் கடைசிக் கவியின் கடைசிக் குரல் ஒலிக்கிற வரை அதில் என் தந்தையின் கருத்தும் தொனித்துக் கொண்டிருக்கும். உலகத்துப் பெண் குலத்தின் ஒவ்வொரு தலைமுறைப் பேரழகிலும் என் தாயின் அழகும் எங்கோ ஓரிடத்தில் எழில் பரப்பிக்கொண்டிருக்கும். படைப்பின் செல்வங்களிலிருந்து எதையும், எந்த மனிதர்களும் திருடி ஒளித்துவிடவோ, அழித்து நிர்மூலம் செய்துவிடவோ முடியாது. என் தாய்மாமன் காலாந்தக தேவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுவிட்டதாகத் திருப்திப்படலாம். இதோ அவரைப் போலவே அரும்பு மீசையும் அழகிய தோற்றமுமாக விளங்கும் குலபதியின் முகத்தில் தெரிகிற கவர்ச்சி அவரைத்தானே நினைவூட்டுகிறது, என் தாய் மாமனுடைய ஓவியத்தை இந்த மாடத்தில் பார்த்தபோது ஒரு தொடர்பும் தெரியாமலே குலபதியின் முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன் நான். மனிதன் பிறரையும் பிறருடைய எண்ணங்களையும் கொல்ல முடியும். அந்த எண்ணங்களும் அதே எண்ணங்களைக் கொண்ட புதிய பரம்பரையும் தோன்றுவதைத் தடுக்க முடியாது. இவற்றையெல்லாம் அறியத் தவித்துத் தவித்து அந்த அறியும் ஆசையே என்னுடைய கருத்தில் கனன்று கொண்டிருந்த காலத்தில் இவை எனக்குத் தெரியவில்லை. குருகுல வாசம் செய்து ஞானப்பசி தீர்ந்து, கல்வியினாலும் தத்துவ மயமான எண்ணங்களாலும் அந்தக் கனல் அவிழ்ந்துபோய் மனத்தில் அது இருந்த இடம் குளிர்ந்திருக்கும் என்று நான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் இத்தனை காலமான பின்பும் அது அழியாமல் நீறுபூத்த நெருப்பாக அடிமனத்தில் என்னுள் எங்கோ எரிந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு காலம் எப்படி எவருக்குக் கடமைப்பட்டிருந்தாலும் தாம் ஒரு துறவி என்ற நினைப்பை இழந்துவிடாமல் ஒரே ஒரு கணத்தில் எல்லாப் பற்றுப் பாசங்களையும் உதறிவிட்டு அருட்செல்வர் விடை பெற்றுக் கொண்டு போய் விட்டார் பார்த்தீர்களா? அப்படி என்னால் போக முடியவில்லை என்பதை உணரும்போதே நான் ஏதோ ஒருவிதத்தில் பக்குவப்படவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பக்குவத்தை அடைவதற்கு இந்தச் சோதனையை நான் ஏற்றுக்கொள்வது அவசியம்தான். ஆனால், இந்தச் சோதனையில் நான் தனியாகப் புகுந்து வெளியேற வேண்டுமென்று விரும்புகிறேனே ஒழியப் பிறருடைய துணைகளை விரும்பவில்லை. குலபதியின் இரகசியப் படையிலிருக்கிற மல்லர்களும், குலபதியும் நம்மோடு, பூம்புகாருக்கு வரவே கூடாது.நான் ஒரு கவியின் மகன். கவிகள் வார்த்தைகளாலேயே பிறருடைய உணர்ச்சிகளையும் மனத்தையும் வென்றுவிடும் சத்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய சொற்களே அவர்களுக்குப் பெரிய ஆயுதங்கள். நான் என்னுடைய குலப்பகைவனைத் தனியே நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன். அப்படிச் சந்திக்கப் புறப்படுவதற்காக இன்று மாலைவரை தாமதம் செய்ய வேண்டியதுகூட அநாவசியம். நான் இந்த விநாடியே புறப்படுகிறேன்” என்று கூறிக்கொண்டே தன் தாயின் ஓவியத்தருகே இருந்த ஏடுகளையும், தான் முதல் நாளிரவு படித்திருந்த ஏடுகளையும் எடுத்துக்கொண்டு சில சித்திரங்களைப் பிரதி செய்துகொண்டிருந்த மணிமார்பன் அருகே சென்றான் இளங்குமரன்.
அவன் அதுவரை கூறியவற்றைக் கேட்டு மனக்குழப்பம் அடைந்திருந்த குலபதி, “ஐயா! இதென்ன என்னுடைய அத்தையின் அருமைப் புதல்வர் திடீரென்று இப்படி எல்லாத் திட்டங்களையும் மாற்றுகிறாரே! என்னையும் நான் இத்தனை காலமாக இந்தக் காரியத்திற்காகவே சோறிட்டு வளர்த்த இந்த மல்லர்களையும் பூம்புகாருக்கு வரக் கூடாதென்கிறாரே இவர்? என் அத்தையும் அவள் நாயகரான கவிஞர் அமுதசாகரும் என் தந்தையாரும் அந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைச் செல்வரிடம் போய்த் தனிமையில் உயிரைப் பறிகொடுத்த வேதனைகள் போதாதென்று இவரும் போய் அப்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது” என்று கலக்கத்தோடு வளநாடுடையாரிடம் கூறினான்.
“அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது குலபதி ! இளங்குமரனுக்குச் சிறுவயதிலிருந்தே இப்படிப் பிடிவாத குணம் உண்டு. நடுவில் ஒடுங்கியிருந்த அந்தக் குணம் இப்போது மறுபடி மெல்லத் தோன்றுகிறதோ என்னவோ? எப்படி இருந்தாலும் நீ இப்போது அவன் சொற்படியே நடந்துகொள்வதுதான் நல்லது. நானும் மணிமார்பனும் எப்படியும் அவனோடு பூம்புகாருக்குச் செல்வோம்.அங்கே நீலநாகரைச் சந்தித்து அவரிடம் கலந்தாலோசித்த பின் இளங்குமரனுக்குப் பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் அவனுக்கும் தெரியாமலே செய்துவிடுவோம். தவிர அறிவாளிகளின் பிடிவாதம் நல்ல முடிவைத்தான் தருமென்று என் அனுபவத்தில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நீயும், உன்னைச் சேர்ந்த மல்லர்களும் எங்களோடு வர வேண்டாம். இளங்குமரனுடைய போக்குப்படியே போய்க் காரியத்தைச் சாதிக்கலாம்” என்று குலபதிக்கு மறுமொழி கூறினார் வளநாடுடையார். குலபதியும் அரை மனத்தோடு அதற்கு இணங்கினான்.
இளங்குமரன் பயணத்திற்கு முன்பு நீராடிவிட்டுத் தூய்மையாக வந்து தன் பெற்றோர்களின் ஓவியத்தை வணங்கினான். தாய் மாமனாகிய காலாந்தக தேவனுடைய ஓவியத்தையும் வணங்கினான். பின்பு மணிமார்பனை நோக்கி, “நீ பிரதி செய்த ஓவியங்களை எடுத்துக்கொண்டு புறப்படு” என்றான்.
அப்போது குலபதி இளங்குமரன் அருகே வந்து, “ஐயா! பட்டினியாக வெறும் வயிற்றோடு போகாதீர்கள். இது உங்கள் மாளிகை. இங்கே நிரம்பிக் கிடக்கும் செல்வங்களையெல்லாம் ஆளவேண்டியவர் நீங்கள். என்னையும் இந்த மாளிகையின் செல்வங்களையும் தான் கைவிட்டு விட்டுப் போகிறீர்கள். நானும் என் வீரர்களும் உங்களோடு பூம்புகாருக்கு வரக்கூடாதென்றும் பிடிவாதமாக மறுக்கின்றீர்கள். மறுபடியும் நான் உங்களை எப்போது சந்திக்கப்போகிறேனோ? இன்று புறப்படுமுன் என்னோடு அமர்ந்து பசியாறிவிட்டுச் செல்லுங்கள்” என்று நெகிழ்ந்த குரலில் வேண்டிக்கொண்டான்.
சில கணங்கள் அந்த நெகிழ்ச்சிக்குக் கட்டுப்பட்டு ஒன்றும் சொல்லாத் தோன்றாமல் தயங்கி நின்றான் இளங்குமரன். அந்த வேண்டுகோளைச் சொல்லியவனுடைய முகத்தையும், அதைக் கேட்டுத் தயங்கி நிற்பவனுடைய முகத்தையும் பார்த்து அந்த விநாடியில் அங்கே சூழ்ந்து நின்ற எல்லாருடைய மனங்களும் தவித்துக் குமுறி மெளனமாகவே உள்ளுக்குள் அழுதன.
தயங்கி நின்ற இளங்குமரன் மெல்ல நடந்து போய்க் கண்கலங்கி எதிரே நின்றுகொண்டிருந்த குலபதியைத் தோளோடு தோள் சேரத் தழுவிக்கொண்டு அவனை நோக்கிப் புன்சிரிப்புடனே சொல்லலானான்:
“குலபதி என்னுடைய பசி மிகவும் பெரியது. அது மிக நீண்ட காலத்துப் பசி, பல பிறவிகளாக நிறையாமலே வருகிற பசி. அதன் ஒரு பகுதி திருநாங்கூரில் நான் குருகுல வாசம் செய்தபோது நிறைந்தது. இன்னொரு பகுதி பூம்புகாரில் சமயவாதிகள் அணிவகுத்து நின்ற ஞான வீதியில் அவர்களை நான் சந்தித்து வென்றபோது நிறைந்தது. இன்னொரு பகுதி இந்தத் தீவுக்கு வந்து என் குடிப்பிறப்பைப் பற்றி நான் தெரிந்துகொண்ட பின்பு நிறைந்தது. இனி மீதமிருக்கிற பசியும் நான் பூம்புகாருக்குப் போனவுடன் நிறைந்துவிடும். இந்த முறை என் பிறவி முழுமையடைந்துவிட வேண்டுமென்று நான் இடைவிடாமல் மனத்திற்குள்ளேயே விடுபட்டுப் பறப்பதற்குத் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் உடம்பில் அதிகமான சக்தியும் இரக்கமும் ஓடி நான் யாரைச் சந்தித்து,நியாயம் கேட்க வேண்டுமோ அவரிடம் என் அந்தரங்கத்துக்கு மாறாக நடந்துகொண்டுவிட நேருமோ என்ற பயத்தினால் அந்தச் சோதனை முடிகிறவரை விரதமிருக்க எண்ணுகிறேன். ஆகவே என்னை உண்பதற்கு அழைக்காதே. எனக்கு விடை கொடு.”
“இந்த மாளிகையும் இதன் செல்வங்களையும் ஆள வேண்டியவன் நான் என்று நீ கூறுகிறாய். என்னுடைய சிறு பருவத்திலிருந்தே இந்த வகையான செல்வங்கள் மதிப்புள்ளவையாக எனக்குத் தோன்றவில்லை. நான் தவச்சாலையில் ஒரு முனிவருடைய வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம். அந்தத் தவச்சாலையும் பூம்புகாரின் மயானத்தருகே அமைந்திருந்தது. மனிதனுடைய ஆசைகளும், நினைவுகளும், கனவுகளும் நம்பிக்கைகளும் அழிந்து மண்ணோடு கலந்து விடுகிற பூமியில் நடந்து நடந்து அந்த மண்ணின் குணமே எனக்குப் படிந்துவிட்டதோ என்னவோ? எனக்காகப் பிறரை அநுதாபப்பட விடுவதுகூட என் தன்மானத்துக்கு இழுக்கு என்று கருதி மானமே உருவாக நான் நிமிர்ந்து நின்ற நாட்களும் என் வாழ்வில் உண்டு.'எல்லோருக்காகவும் எல்லா வேளைகளிலும் அநுதாபப்படும் மனம் தான் ஞானபூமி’ என்று நானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தனது எண்ணத்தில் தவம்செய்த நாட்களும் என் வாழ்வில் உண்டு. என்னுடைய வாழ்க்கையே ஒவ்வொரு பருவத்திலும் எனக்குப் பாடமாக வாய்த்திருக்கிறது. ஆனால் எல்லாப் பருவத்திலும் சேர்ந்து நான் மொத்தமாக அலட்சியம் செய்த ஒரு பொருள் செல்வமும் சுகபோகங்களும்தான். துக்கமயமான அநுபவங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி எந்த வேளையிலும் நெருப்பில் இளகும் பொன்னாக ஒளிர வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று தன் மனத்தைத் திறந்து பேசினான் இளங்குமரன்.
மேலே ஒன்றும் கேட்கத் தோன்றாமல் குலபதியின் நாக்கு அடங்கிவிட்டது. வளநாடுடையாரும், மணிமார்பனும், அவன் மனைவி பதுமையும் உடன்வர இளங்குமரன் அன்று நண்பகலில் பூம்புகாருக்குக் கப்பலேறினான். சங்குவேலித் துறைக்கு வழியனுப்ப வந்திருந்த குலபதி இளங்குமரனுக்கு விடைகொடுக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட்டான்.
“ஐயா! என் அத்தையின் புதல்வராகிய நீங்கள் உங்கள் வாழ்வின் ஒரு பருவத்தில் முரட்டு வீரராக வாழ்ந்திருக்கிறீர்கள்! மற்றொரு பருவத்தில் கல்விக் கடலாகப் பெருகியிருக்கிறீர்கள். பின்பு ஞானியாக நிறைந்திருக்கிறீர்கள்! இறுதியில் நெருப்பிலே இளகும் பொன்போலச் சான்றாண்மை வீரராக உயர்ந்திருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் என் குடும்பப் பெருமையாக நான் எண்ணிப் பூரிக்கிறேன். ஆனால் மறுபடி எப்போது உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்து சேரப் போகிறீர்கள்? வேற்று மனிதர் வந்து தங்குவது போல இரண்டு நாள் வந்து இருந்துவிட்டுப் பிரிவையும் ஆற்றாமையையும் எனக்கு அளித்துவிட்டுப் போகிறீர்களே? இது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா?” என்று குலபதி குமுறியபோது, “விரைவில் வருகிறேன் கவலைப்படாதே!” என்று கூறி அருள்நகை பூத்தான் இளங்குமரன்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்துப் பூம்புகார்த் துறையில் வந்து இறங்கிய போதுதான் இளங்குமரன் குலபதியின் வேண்டுகோளையும் சொற்களையும் இரண்டாம் முறையாக நினைவு கூர்ந்தான்.