மதமும் மூடநம்பிக்கையும்/அந்தக்கடவுள் தானா

மதம் 1


அந்தக் கடவுள்தானா ?

பிறப்பும் இறப்பும் அற்ற முழுமுதற் கடவுள் எல்லாப் பொருள்களையும் தோற்றுவித்தார்! அவரே எல்லாவற்றையும் ஆண்டு வருகிறார்! உயிரினம் அவருக்கு அடங்கி நடக்கவும் வேண்டும், நன்றியறிதல் காட்டவும் வேண்டும்! ஆண்டவன் மனிதனிடத்தில் சிலவற்றை எதிர்பார்க்கிறார்! எவன் அவருடைய விருப்பங்களை நிறைவேற்றி வைக்கிறானோ, அவன் மத பக்தனாகிறான் ! இந்தவிதமான மதம் உலகெங்கணும் பெருவழக்காய் இருந்துவருகிறது.

இந்தக் கடவுள் பலிகளைக் கேட்டார் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குருதியைச் சொரிந்த போது, அவர் மிகவும் மகிழ்ச்சியுற்றார் என்றும் பல நூற்றாண்டுகளாகப் பல கோடிக்கணக்கான மக்கள் நம்பி வந்தனர். பிற்பாடு எருது, வெள்ளாடு, வாத்து இவைகளின் குருதியை மட்டும் பெற்றுக்கொண்டே ஆண்டவன் பெருமகிழ்ச்சியுற்றார் என்று கொள்ளப்பட்டது. இந்தப் பலிகள் கொடுத்ததன் காரணமாக அல்லது இவற்றிற்குப் பதிலாகக், கடவுள், மழை, ஞாயிற்றின் வெளிச்சம், அறுவடை முதலியவைகளை வழங்கியதாகவும் கொள்ளப் பட்டது. இப்படிப்பட்ட பலிகளிடாமற் போனால், கடவுள், பஞ்சம், கொள்ளை, நோய், வெள்ளம், நில அதிர்ச்சி ஆகியவைகளை அனுப்பிவிடுவார் என்றும் நம்பப்பட்டது.

கிறித்துவ மதக் கொள்கைப்படி பலி கொள்வதில் கடைசி நிகழ்ச்சியாக நம்பப்பட்டது ஆண்டவன் அவருடைய மகனின் குருதியைப் பெற்றுக்கொண்டதாகும். அவருடைய மகன் கொல்லப்பட்டதற்குப் பிறகு ஆண்டவனாகிய அவர் முழு மனமகிழ்ச்சியடைந்தார், அதற்குப் பிறகு குருதி வேட்கையை அவர் கொள்ளவில்லை என்றும் நம்பப் பட்டது.

ஆண்டவன் வேண்டுதலையைக் கேட்டார்; அதற்குப் பதிலிறுத்தார்; அவர் பாபங்களை மன்னித்தார்; உண்மையான நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களைக் காப்பாற்றினார் என்று இந்தப் பழங் காலங்களிலெல்லாம், இந்தப் பழங்கால மக்கள் எல்லோராலும் நம்பப்பட்டு வந்தது. பொதுவாகச் சொல்லப்போனால், இதுதான் மதம் பற்றிய விளக்கமாகும்.

இப்பொழுது, நம்முன் நிற்கும் கேள்விகள்: எந்தத் தெரிந்த உண்மையின் மீதாவது மதம் கட்டப்பட்டதா? கடவுள் என்று சொல்லப்படும் ஒருவர் இருக்கிறாரா? உங்களையும் என்னையும் படைத்தவர் அவர்தானா ? எந்த வேண்டுதலையாவது எப்பொழுதாவது பதிலிறுக்கப் பட்டதா? குழந்தையோ அல்லது எருதோ பலியிடப்பட்டதன் காரணமாக மனமொழி மெய்களால் காணப்பட முடியாத கடவுளால், எந்த ஒரு நன்மையாவது வந்து சேர்ந்ததா?

முதலில் - மக்களாகிய குழந்தைகளை எல்லையற்ற ஒரு பெருங் கடவுள் தான் தோற்றுவித்தாரா?

அறிவில் குறைபாடுடையவர்களை ஏன் இவர் தோற்றுவித்தார்?

உடற்குறையுடையவர்களையும், உதவியற்றவர்களையும் ஏன் இவர் தோற்றுவிக்கவேண்டும் ?

குற்றவாளியையும், மடயனையும், பைத்தியக்காரனையும் இவர் தோற்றுவிக்கக் காரணம் என்ன?

எல்லையற்ற பேரறிவும் - பேராற்றலும் கொண்ட இவர், குறைபாடுகளைத் தோற்றுவித்ததற்கு எந்தச் சமாதானமாவது கூறமுடிகிறதா?

இந்தக் குறைபாடுகளெல்லாம், இவற்றைப் படைத்த ஆண்டவனுக்கு விருப்பமளிக்கவா வந்திருக்கின்றன?

இரண்டாவதாக – எல்லையற்ற ஒரு பெருங் கடவுள் இவ்வுலகத்தை ஆளுகிறாரா?

படைத்தலைவர்களும் பாராளும் மன்னர்களும், பேரரசர்களும் பேரரசிகளும் வாழ்வதற்கு இவர்தான் பொறுப்பாளியா?

தொடுக்கப்படும் எல்லாவித போர்களுக்கும், கொட்டப்படும் எல்லாவகைக் குற்றமற்றவர்களின் குருதிக்கும் இவர் தான் பொறுப்பாளியா?

பன்னெடும் நூற்றாண்டுகளாக இருந்துவரும் அடிமை வாழ்விற்கும். சாட்டையடியால் தழும்புகள் ஏறிநிற்கும் முதுகுகளுக்கும், தாய்களின் அணைப்பிலிருந்து பிடுங்கப் பட்டு விற்கப்படும் குழந்தைகளுக்கும், பிரிக்கப்பட்டுச் சீரழிக்கப்படும் குடும்பங்களுக்கும் இவர்தான் பொறுப்பாளியா?

மதக் குற்றச்சாட்டுக்கும், மத விசாரணைக் குழுவுக்கும், விரல்களை நெரித்துக் கசக்கிடும் விரலாணிக்கும். உடல் முழுதும் புண்ணாக்கிடும் இருப்பு முட்பலகைக்கும் இந்தக் கடவுள் தான் பொறுப்பாளியா?

உறுதியாளரையும் உயர்வாளரையும் அழிக்க, கொடுமையையும் கீழ்மையையும் இந்தக் கடவுள்தான் அனுமதித்தாரா?

நாட்டுப் பற்றுடையோரின் குருதியைக் கொட்ட வைக்கும்படி, கொடுமையாளர்களை இந்தக் கடவுள் தான் அனுமதித்தாரா?

தம்முடைய நண்பர்களைச் சித்ரவதை செய்யவும், கொளுத்தவும், தம் பகைவர்களுக்கு இவர்தான் அனுமதி அளித்தாரா?

இப்படிப்பட்ட கடவுள் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கவர்?

தடுக்கக்கூடிய ஆற்றல் படைத்த எந்த நல்லறிவுடைய மனிதனாவது, தன்னுடைய பகைவர்களால், தன்னுடைய நண்பர்கள் சித்ரவதைச் செய்யப்படுவதையும், கொளுத்தப் படுவதையும் அனுமதித்துக்கொண்டிருப்பானா?

ஆண்டவனுக்குப் பகைவர்களாக உள்ளவர்களைத் தன் நண்பர்களாக ஆக்கிக்கொண்டு, அவர்களை ஆதரித்து வருகிறது ஒரு பூதம் என்று, நாம் அறுதியிட்டுக் கொள்ளலாகுமா?

எல்லையற்ற பேராற்றலும், நல்ல பண்பும் கொண்ட கடவுள்தான் இவ்வுலகை ஆளுகிறார் என்றால், புயற் காற்றுகள், நில அதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள். கொடும் பஞ்சம் ஆகியவை நிலவுவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?

மனிதர்களைக் கொன்று தின்னும் காட்டு விலங்குகள், கடித்தால் சாகவேண்டிவரும் நச்சுப் பற்களைக் கொண்ட நாகங்கள் ஆகியவை வாழ்வதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?

ஒரு உயிர் மற்றொரு உயிரைக் கொன்று தின்றே வாழ வேண்டும் என்ற உலகம் இருந்து வருவதற்கு நாம் எவ்வாறு சமாதானம் கொள்வது?

எல்லையற்ற பேரருளாளர்தான் கூரிய அலகையும் — நகத்தையும், நச்சுப் பல்லையும் — கொடுக்கையும் கண்டு பிடித்து, அவற்றை உற்பத்திச் செய்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், இரையைக் கொத்தித் தூக்கிச் செல்வதற்கு ஏற்றவண்ணம் கழுகுகளின் இறக்கைகளைப் பக்குவப்படுத்தி வைத்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், வலிவற்றனவும், உதவியற்றனவுமான விலங்கு குகளைக், கொன்று உண்ண வேண்டும் என்று, கொடிய விலங்குகளைப் படைத்தாரா?

எல்லையற்ற நற்பண்பாளர்தான், கணக்கற்ற சாதாரண உயிர்க் கிருமிகள், அவைகளைக் காட்டிலும் உயர்ந்த உயிரினங்களின் சதையைத் தின்று, அதிலேயே வாழ்ந்து. அதிலேயே வளரவேண்டும் என்று அவைகளைப் படைத்தாரா?

எல்லையற்ற பேரறிவாளர்தான், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகள். கண்களிலுள்ள நரம்புகளைத் தின்று வாழவேண்டும் என்று, அவைகளை உற்பத்திச் செய்தாரா?

ஒரு நுண்ணிய கிருமியின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு ஒரு மனிதனைக் குருடனாக்கும் தன்மையை ஓர்ந்து பார்மின் !

உயிர் உயிரைத்தின்று வாழ்வதைச் சிந்தித்துப் பார்மின்! இரையாகும் எண்ணற்ற இரைகளைச் சிந்தித்துப் பார்மின் ! கொடுமையின் பீடத்தில் நையகாரா நீர்வீழ்ச்சி போன்று சொரியப்பட்ட குருதி வெள்ளத்தைச் சிந்தித்துப் பார்மின் !

இப்படிப்பட்ட உண்மைகளையெல்லாம் நேர்நிறுத்திப் பார்க்கும்போது, மதம் என்பதுதான் என்னவாகத் தோன்றுகிறது?

மதம் என்பது அச்சம்!

அச்சம்! கடவுள் பீடத்தைக் காட்டியதும், பலியைக் கொடுத்ததும் அதுதான் !

அச்சம் ! கோயிலை எழுப்பியதும், வழிபாட்டில் மனிதனின் தலையைக் குனியவைத்ததும் அதுதான்!

அச்சம்! முழங்கால்களை மண்டியிடச் செய்ததும், வேண்டுதலையை மொழியச் செய்ததும் அதுதான் !

மதம், அடிமைப் பண்புகளான, பணிந்து நடத்தல், அடங்கியொடுங்கியிருத்தல், தன்னை வெறுத்தல், மன்னித்து விடுதல், எதிர்த்துப் போராடாமை முதலியவற்றைக் கற்பிக்கிறது!

மதப்பக்தியும், அச்சத் தன்மையும் கொண்ட உதடு கள், "அவன் என்னை வெட்டி வீழ்த்துகிறதானாலும், நான் அவனிடம் நம்பிக்கை வைக்கத்தான் செய்வேன்" சொற்றொடரை ஓயாமல் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே யிருக்கின்றன. இதுதான் மனித வீழ்ச்சிக்குக் காரணமாகும் தாழ்வுப் படுகுழியாகும்.

மதம், தன்னம்பிக்கை — விடுதலை வேட்கை — மனிதத் தன்மை — உறுதி - தற்காத்தல் போன்ற பண்புகளை ஒருபோதும் மனிதனுக்குக் கற்றுக்கொடுப்பதில்லை.

மதம், கடவுளை ஆண்டையாகவும், மனிதனை அவருக்கு அடிமையாகவும் ஆக்குகிறது. அடிமை வாழ்வை இனிமையாக ஆக்குவதால், ஆண்டை பெருந்தகையாளராக ஆகிவிடமாட்டார்! இந்தக் கடவுள் இருக்கிறார் என்றால், அவர் நல்லவர் என்பதை நாம் எப்படி அறிவது? அவர் அருள் பரிபாவிப்பவர் என்பதை நாம் எப்படி நிருபிப்பது? அவர் மக்க ளாகிய குழந்தைகளைப்பற்றி எவ்வகையில் கவலைப்படுகிறார். என்பதை நாம் எப்படித் தெளிவது? இந்தக் கடவுள இருக்கிறார் என்றால், அவருடைய கோடானுகோடி ஏழைக் குழந்தைகள், நிலத்தை உழுவதையும், விதை விதைப்பதையும், நாத்து நடுவதையும் அவர் பல தடவை பார்த்திருக்கிறார்; அப்படிப் பார்த்தபோதெல்லாம், அவர்கள் தம் வாழ்க்கையை ஈடேற்ற, விளையப்போகும் கதிர் மணிகளை நம்பியிருந்தனர் என்பதை நன்கு அறிவார்; அப்படியிருந்தும் இந்த நல்லவர் — அருளாளர் — கடவுள் மழையைப் பெய்விக்காமலேயே நிறுத்திவிட்டிருக்கிறார். மனிதன் நட்ட செடிகளெல்லாம் காய்ந்து அழிந்து போனதை அவர் பார்த்தார்; ஆனால் அவர் மழையை அனுப்பவில்லை. வறண்ட நிலத்தை வாடிய கண்களால், மக்கள் நோக்கிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார்; அப்படியிருந்தும் அவர் மழையை அனுப்பவில்லை தங்களிடத்திலுள்ள சிறிது உணவைக் கொஞ்சம், கொஞ்சமாக அவர்கள் தின்று கொண்டு வந்ததைப் பார்த்தார் ; பிறகு அவர்கள் பட்டினியால் வாடும் நாட்களையும் பார்த்தார்: அவர்கள் மெதுவாக அழிந்து வருவதையும் பார்த்தார்; அவர்கள் பட்டினியைப் பார்த்தார் ; அவர்களது குழிவிழுந்த கண்களைப் பார்த்தார்: அவர்களுடைய வேண்டுதலைகளைக் கேட்டார்; அவர்கள் தாம் வைத்திருந்த விலங்குகளையே அடித்துத் தின்றதையும் பார்த்தார்; தாய்மார்களும், தந்தைமார்களும் பசியால் பைத்தியம் பிடித்ததையும், தங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொன்று தின்றதையும் பார்த்தார்; மேலேயுள்ள வானம் வெண்கலத்தகடு போலவும், கீழேயுள்ள தரை இருப்புத்தகடு போலவும் அவர்களுக்குக் காணப்பட்டதையும் அவர் பார்த்தார்; அப்படியிருந்தும் அவர் மழையை அனுப்பவில்லை. இரக்கம் என்னும் பூ இந்தக் கடவுளின் இதயத்தில் மலர்ந்தது என்று நாம் சொல்ல முடியுமா? மக்களாகிய குழந்தைகளைப்பற்றி அவர் கவலைப்பட்டார் என்று நாம் கூற முடியுமா? அவருடைய அருளுள்ளம் என்றும் நிலைத்து நிற்கும் தன்மையது என்று நாம் இயம்ப முடியுமா?

இந்தக் கடவுள் 'மிகவும் நல்லவர்' ஏனென்றால், அவர் பெரும் புயற்காற்றை அனுப்பி, ஊர்களையெல்லாம் பாழ் படுத்தி வயல்களிலெல்லாம் தந்தைமார்கள்—தாய்மார்கள் குழந்தைகள் ஆகியோரின் உருவழிந்த பிணங்களால் நிரப்பினார் என்று நாம் நிரூபிப்பதா? அவர் நிலத்தைப் பிளக்கச் செய்து, ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை அதனால் விழுங்கச் செய்தார் என்றோ, அல்லது அவர் எரிமலைகளைக் கொண்டு, நெருப்பு ஆறுகளை அவற்றினின்றும் பீறிட்டுக் கிளம்பச்செய்து, மக்களை மூழ்கடித்தார் என்றோ எடுத்துக்காட்டி, அவரது. 'நல்ல தன்மையை' நாம் நிரூபிப்பதா? நாம் அறிந்த இந்த உண்மைகளி லிருந்து, கடவுளின் 'நல்ல தன்மையை' நாம் ஊகித்துக் கொள்ளலாகுமா?

இந்தத் துக்கங்கள் நடைபெறாமலிருந்திருக்குமேயானால், ஆண்டவன், உலகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று, நாம் ஐயப்பாடு கொண்டிருப்போமா? பஞ்சமும் கொள்ளை நோயும், புயற்காற்றும் நில அதிர்ச்சியும் இல் லாமலிருந்திருக்குமேயானால் ஆண்டவன் நல்லவரல்லர் என்று, நாம் நினைத்திருப்போமா?

மதவாதிகளின் கருத்துப்படி, கடவுள் எல்லா மக்களையும். ஒரேமாதிரியாகப் படைக்கவில்லை என்று கொள்ள வேண்டும். அறிவில், நிலையில், நிறத்தில் வேறுபாடு கொண்ட பல இனங்களை அவர் உண்டாக்கினார் என்றால், இதில் நல்ல தன்மை இருந்ததா, நல்ல அறிவுடைமை இருந்ததா?

உயர்ந்த இனங்கள், தங்களைத் தாழ்ந்த இனங்களாகப் படைக்காததற்காகக், கடவுளுக்கு நன்றியறிதல் தெரிவிக்க வேண்டாமா? ஆம்; தெரிவிக்க வேண்டும் என்று நாம் கூறினால், பிறகு நான் மற்றொரு கேள்வி கேட்கிறேன் தாழ்ந்த இனங்கள், தாங்கள் உயர்ந்த இனங்களாக ஆக வில்லை என்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டுமா? அல்லது அவர்கள், தங்களை விலங்குகளாகப் படைக்கவில்லையே என்பதற்காகக், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டாமா?

கடவுள், இந்தப் பல்வேறு வகைப்பட்ட இளங்களைப் படைத்தபொழுதே உயர்ந்த இனம் தாழ்ந்த இனத்தை அடிமைப்படுத்தும் என்பதை அறிவார்; தாழ்ந்த இனத்தினர் கைப்பற்றப்படுவர், இறுதியில் அழிக்கப்படுவர் என் பதையும் அறிவார்!

கடவுள் இதைச் செய்தார் என்றால், சிந்தப்படப் போகும் குருதி வெள்ளத்தை அவர் அறிந்தார் என்றால், தாங்கப்போகும் வேதனைகளை அவர் அறிந்தார் என்றால், வெட்டப்பட்ட பிணக் குவியல்கள் கணக்கற்ற வயல்களில் நிரம்பிக்கிடந்ததை அவர் பார்த்தார் என்றால், அடிமை களின் குருதி ஒழுகும் முதுகுகளை அவர் கண்டார் என்றால், குழந்தைகளை யிழந்த தாய்மார்களின் உடைந்த இதயங்களை அவர் நோக்கினார் என்றால், இவையெல்லாவற்றையும் அவர் பார்த்தார்.

பார்த்தார் அறிந்தார் என்றால், அவரைவிட வேறு கொடூரமான 'பூதத்தை' நாம் கருதிப்பார்க்க முடியுமா?

பின் ஏன் நாம் சொல்லவேண்டும், கடவுள் நல்லவர் என்று?

அழுத்தமான சுவர்களுக்கிடையிலே, உறுதியும் உள்ளன்பும் கொண்ட மாவீரர்கள், தங்கள் இறுதி மூச்சை விடும்படி செய்யப்பட்ட இருட்டறைகள்; சிறந்தவர்களின் குருதிக்கறை படிந்து, அதனால் புகழடைந்த தூக்குமரங்கள்; தழும்புகள் ஏறியும், குருதியைக் கசியவிட்டுக்கொண்டும் காணப்பட்ட முதுகுகளையுடைய அடிமைகள்; தீச்சுடரையே ஆடையாக உடுத்திக்கொண்டு, உண்மைக்காக உயிர் நீத்த உத்தமர்கள் ; முள்ளாணிப் பலகையில் சித்ரவதைச் செய்யப்பட்ட மேலோர்கள்; மூட்டுகள் கழற்றப்பட்டுத் தசைகள் கிழிக்கப்பட்டவர்கள்: கிழிக்கப்பட்டவர்கள்: நீதிமான்களின் வெட்டப்பட்ட தலைகள், குருதி ஒழுகிய உடலங்கள்; உண்மைக்குப் பரிந்து பேசியோரின் பிடுங்கப்பட்ட கண்கள்; போராடிப் போராடி எந்தப் பலனும் பெறாமல் மாண்டொழிந்த எண்ணற்ற நாட்டுப் பற்றுடையோர் : தொல்லைகள் கொடுக்கப்பட்டு, அடிக்கப்பட்டுக் கண்ணீர் வடித்து வடித்துக் காலந் தள்ளிய மனைவிமார்கள்; ஒதுக்கித் தள்ளப்பட்ட குழைந்தைகளின் நடுங்கும் முகங்கள்; இறந்த காலங்களில் கொன்று குவிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள்; கொடுங்காற்றுக்கும் பேரலைக்கும் அகப்பட்டுச்செத்தொழிந்தோர்; வெள்ளப்புனலுக்கும் வெந்தழலுக்கும் இரையானோர்; கொடிய விலங்குகளுக்கு உணவானோர்; பேரிடியால் தாக்கப்பட்டோர்; எரிமலையின் நெருப்புக் குழம்பில் பட்டெறிந்தோர்; பஞ்சத்தில் அடிபட்டோர் ; பிளேக் நோயால் பாதிக்கப்பட்டோர்; தொத்து நோயால் தொல்லைப்பட்டோர் ; குருதியைக் குடித்துக் கொப்பளித்த வாய்கள்; நஞ்சை ஏந்தியிருந்த நச்சுப்பற்கள்; பல உயர்ந்தவர்களின் உடலில் காயங்கள் உண்டுபண்ணித், தசைகளைக் கிழித்தெறிந்த அலகுகள்; கோழைத்தன்மையின் வெற்றிகள் ; குற்றத்தின் கோலோச்சும் வெறித்தன்மை; கொடுமை அணிந்துகொண்டிருந்த முடிகள்; குருதிக்கறை படிந்த கைகளோடு இறுகத் தழுவும் அங்கிப் பட்டை அணிந்த ஆணவக்காரர்கள்; உரிமை வேட்கை உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டதற்காகக் கடவுளுக்கு - கற்பனை பூதத்துக்கு- நன்றிசெலுத்திய குருமார்கள்; பயங்கர இறந்த காலத்தின் இந்த நினைவுக் குறிப்புகள், இப்பொழுதும் இருந்துவரும் இந்தக் கொடுந்துன்பங்கள், அச்சமூட்டும் இந்த உண்மைகள், மனித சமுதாயத்தைக் காக்கவும் வாழ்த்தவுமான விருப்பமும் ஆற்றலும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறுக்கின்றனவே!