மதமும் மூடநம்பிக்கையும்/இயற்கைக்கு மீறி ஒன்றா

மதம் 3


இயற்கைக்கு மீறிய ஒன்றா?

மதம், எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் பரப்பப்பட்டது; ஆனால் எது எங்கும், எப்பொழுதும் தோல்வியே அடைந்தது!

மதம், மனிதனை ஒருபொழுதும் அருள் நெஞ்சினனாகச் செய்யவில்லை.

மத விசாரணைக் குழுவின் கொடுமைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் !

அடிமை வாழ்வை ஒழிப்பதில், மதம், எந்த அளவுக்குச் சாதனை புரிந்தது?

மதம், லிப்பி - சால்ஸ்பர்ரி - ஆண்டர்சன் வில்லி ஆகியோரின் கொடுமைகளைத் தவிர்க்க எந்த அளவுக்கு வேலை செய்தது?

மதம், அறிவியலுக்கு - ஆராய்ச்சி அறிவுக்கு சிந்தனைக்கு எப்பொழுதும் எதிரியாகவே இருந்து வந்திருக்கிறது.

மதம், மனிதனை விடுதலையுடையவனாக ஒருபொழுதும் செய்யவில்லை.

மதம், மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவோ, பண்புள்ளவனாகவோ, உழைக்கும் திறம் படைத்தவனாகவோ, கொண்டவனாகவோ ஒருபொழுதும் செய்ய வில்லை.

காட்டுமிராண்டிகளை விட, கிருத்தவர்கள், மிக்கப் பண்புடையவர்களாகவும், மிக்க நல்ல எண்ணமுடையவர்களாகவும், மிக்க நாணயமுடையவர்களாகவுமா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்?

காட்டுமிராண்டிகளிடையில் கெட்ட பழக்கங்களும், கொடுமைகளும் நிரம்பி இருப்பதற்கு அவர்களுடைய அறியாமையும், மூட நம்பிக்கையுமே காரணங்களாகும் என்பதை நாம் அறியமாட்டோமா?

இயற்கையின் ஆற்றலையும், அமைப்பையும், ஒருமைப் பாட்டையும் உணர்ந்தவர்களுக்கு, மதம் பொருளற்ற ஒன்றாகவே படும்.

இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருள்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம், அலைகளை விரிவுபடுத்தவோ அல்லது அடக்கிவைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிவிட நம்மால் இயலுமா ? மண்டியிடுதல் நமக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருமா ? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கிக்கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன்மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா?

புற உலகில் காணப்படும் உண்மைகள் எவ்வளவு அழுத்தமானதாகவும், அவசியத்தை ஒட்டி உற்பத்தி ஆக்கப்படுவதாகவும் இருக்கின்றனவோ, அதேபோல், அக உலகில் காணப்படும் உண்மைகளும் இருக்கின்றன அல்லவா? நாம் உடலை எப்படி இயற்கையான தாகக் கருதுகிறோமோ அதே அளவு உள்ளத்தையும் இயற்கையானதாகக் கருதுகிறோம் அல்லவா ?

இயற்கை ஓரு ஆண்டையைக் கொண்டிருக்கிறது; இந்த ஆண்டை வழிபாட்டுரையைக் கேட்பார்; இந்த ஆண்டை தண்டிப்பார், வரங்கொடுப்பார்; அவர் புகழ்ச்சியையும், துதிபாடுதலையும் விரும்புவார்; அவர் ஆண்மையாளரையும், விடுதலையாளரையும் வெறுப்பார் என்ற கோட்பாட்டின் மீதுதான் மதம் கட்டப்பட்டிருக்கிறது. மனிதன் மேலுலகிலிருந்து எந்த நன்மையாவது பெற்றிருக்கிறானா?

நாம் ஓரு கோட்பாட்டைக் கொண்டிருக்கிறோம். என்றால், அதன் அடிப்படைக்கான உண்மைகளை நாம் சொண்டிருக்கவேண்டும். அதற்கான நான்கு எல்லைகளை நாம் கொண்டிருக்கவேண்டும். அதனை ஊகித்தல், உணர்ச்சி கொள்ளுதல், கற்பனைசெய்தல், மனதிற்படல் ஆகியவைகளைக் கொண்டு நாம் உருவாக்கக் கூடாது. முழுத்தோற்றமும் நல்ல அடிப்படையைக் கொண்டிருக்கவேண்டும். நாம் அதனைக் கட்ட முற்படுகிறோம் என்றால், நாம் அதன் அடிப்படையிலிருந்தே துவங்கவேண்டும்.

நான் ஒரு கோட்பாட்டைக் கொண்டிருக்கிறேன்; நான் அதற்கான நான்கு எல்லைக் கற்களையும் கொண்டிருக்கிறேன்.

முதல் எல்லைக்கல், பொருள் அல்லது வஸ்து ஆகும்; அதனைச் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.

இரண்டாவது எல்லைக்கல், ஆற்றல் ஆகும்; அதனையும் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது.

மூன்றாவது எல்லைக்கல், பொருளும் ஆற்றலும் பிரிந்து வாழ என்பதாகும்; ஆற்றலில்லாமல் பொருளெதுவுமில்லை. பொருளில்லாமல் ஆற்றலெதுவுமில்லை.

நான்காவது எல்லைக்கல், எது அழிக்கப்பட முடியாதோ அது உண்டாக்கப்பட முடியாது என்பதாகும்; அதாவது அழிக்க முடியாததை உண்டாக்க முடியாது.

இந்த எல்லைக் கற்கள் உண்மையானவைகள் என்று ஆகுமேயானால், பொருளும் ஆற்றலும் தொடக்கத்திலிருந்து இறுதிவரையில் எல்லையற்றவைகள் என்பது தானே பெறப்படும்; அவைகளை அதிகப்படுத்தவோ, குறைக்கச் செய்யவோ முடியாது.

இதிலிருந்து பெறப்படுவது. ஒன்றும் இதுவரை உண்டாக்கப்படவில்லை, உண்டாக்கப்பட முடியாது என்பதாகும். படைப்பாளர் என்று ஒருவர் ஒருபொழுதும் இருக்கவில்லை, இருக்கவும் முடியாது என்பதாகும்.

இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், பொருள் —ஆற்றல், இவைகளுக்குப் பின்னால் எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு அமைப்போ இருக்கமுடியாது என்பதாகும்.

ஆற்றல் இல்லாமல் அறிவு இருக்க வழியில்லை. பொருளில்லாமல் ஆற்றல் இருக்க வழியில்லை. எனவே, பொருளுக்குப் பின்னால் எந்த ஒரு அறிவோ அல்லது எந்த ஒரு ஆற்றலோ, எவ்வகையிலும் இருக்க வழியில்லை என்பது தானே பெறப்படுகின்றது.

இயற்கைக்கு மீறிய ஒன்று வாழவில்லை, வாழமுடியாது என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. இந்த நான்கு எல்லைக் கற்களும் உண்மைகள் தாம் என்றால், இயற்கைக்கு ஆண்டை என்று ஒருவர் இருக்க முடியாது. பொருளும் ஆற்றலும், தோற்றம்— இறுதியற்றனவாக எல்லையற்றனவாக இருக்கின்றன வென்றால், கடவுள் என்று ஒருவர் இருக்கவில்லை; கடவுள் அண்டத்தைப் படைக்கவோ, ஆட்சிபுரியவோ செய்யவில்லை; வழிபாட்டுரைக்கும் பதிலுரைக்கும் கடவுள் இருக்கவில்லை; அவதிப்பட்டோர்க்கு உதவி புரியும் கடவுள் இருக்கவில்லை; அறியாத மக்களின் துன்பங்களைக் கண்டு இரக்கப்படும் கடவுள் இகுக்கவில்லை; உடலில் தழும்புகள் ஏற்ற அடிமைகள் பற்றியோ, குழந்தைகளிடத்திலிருந்து துண்டிக்கப்பட்ட தாய்மார்களைப் பற்றியோ கவலையுறும் கடவுள் இருக்கவில்லை; சித்ரவதைச் செய்யப்படும் மக்களைக் காப்பாற்றும் கடவுள் இருக்க வில்லை;நெருப்பிலே தள்ளப்படும் தன்னலமற்ற வீரர்களைக் காக்க முன்வரும் கடவுள் இருக்கவில்லை என்பது. தானே பெறப்படும். வேறு சொற்களால் குறிப்பிடவேண்டுமானால், மேலுலகத்திலிருந்து மனிதன் எந்தவித உதவியையும் பெறவில்லை; இடப்பட்ட பலிகளெல்லாம் வெறும் வீண்; வழி பாட்டுரைகளெல்லாம் பதிலுரைக்கப்படாமலேயே, வெறுங்காற்றில் மறைந்தொழிந்தன என்பதை இது தெளிவாக்கிக் காட்டுகின்றது என்னலாம். நான் எல்லாம் அறிந்திருப்பதாகப் பாசாங்கு செய்யவில்லை. நான் எதைச் சரி என்று சிந்திக்கிறேனோ அதையே சொல்கிறேன்.

பொருளும் ஆற்றலும் எல்லையற்ற காலத்திலிருந்து நின்று நிலவி வருகின்றன என்றால், நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து வந்திருக்கின்றன: நடக்கக் கூடியன வெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன; நடக்கக் கூடுவன வெல்லாம் இனி நடைபெறும் என்பது, தானே பெறப்படும்.

அண்டத்தில், இயற்கை எதிர்பார்க்காத வாய்ப்போ, காணாத திடீர் மாற்றமோ ஏற்பட வழியில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதனதன் பெற்றோர்களைக் கொண்டேயிருக்கின்றன.

நிகழாத ஒன்று இருக்க முடியாது நிகழ்காலம், இறந்த காலத்தின் காரியமும், இறந்த காலத்தின் காரணமும் ஆகும்.

எல்லையற்ற பெருஞ் சங்கிலியில் பிளவு ஏற்படவோ, கரணையொன்று காணாமற் போகவோ செய்யவில்லை; இனியும் செய்யாது. நட்சத்திரங்களின் அளவும் அமைப்பும், உலகங்களின் தட்பவெப்ப நிலை, பல்லேறு வகைப்பட்ட மர வகைகள் - விலங்கு இனங்கள், எல்லாவித உணர்ச்சி- அறிவு - மனச்சான்று, எல்லாவித விருப்புகள்-வெறுப்புகள் எல்லாவித நன்மைகள்-தீமைகள் எல்லாவித எண்ணங்கள் - கனவுகள், எல்லாவித நம்பிக்கைகள் -அச்சங்கள் இவையெல்லாம் அவசியத்தை யொட்டி எழுந்தனவாகும். இத்த எண்ணற்ற பொருள்களிலும் அவைபற்றிய தொடர்புகளிலும், இயற்கை விதிகளுக்கு மாறுபட்ட ஒன்று, இந்த அண்டத்தில் இருக்க முடியாது.

பொருளும் - ஆற்றலும் எல்லையற்ற காலந்தொட்டு இருந்து வருகின்றன வென்றால், மனிதன் அறிவுடைய படைப்பாளர் எவரையும் கொண்டிருந்ததில்லை; மனிதன் தனிப்படைப்பைச் சேர்ந்தவனல்லன், என்று நாம் எளிதிற் கூறலாம்.

நாம் ஏதாவது அறிந்திருக்கிறோம் என்றால், ஜெஹோவாவாகிய கடவுட் குயவனார், களிமண்ணைப் பிசைந்து, ஆண்- பெண் வடிவங்களைச் செய்யவில்லை; பிறகு அவர்களின் உடல்களில் ஊதி உயிர்க்காற்றை எழுப்பி, அவர்களைப் பிறப்பிக்கச் செய்யவில்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம்.

நமது முதல் பெற்றோர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதை நாம் அறிவோம், அவர்கள் இவ்வுலகைச் சேர்ந்தவர்கள் என்பதையும், இங்கேயே உற்பத்தி செய்யப் பட்டவர்கள் என்பதையும், எந்தக் கடவுளின் ஊதுதலிலிருந்தும் அவர்களின் வாழ்வு பிறக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். ஏதாவது நாம் அறிந்திருக்கிறோமென்றால், இந்த அண்டம இயற்கையானது என்பதையும், ஆண்களும் - பெண்களும் இயற்கையாகவே உற்பத்தி யாக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் இப்பொழுது நன்கு அறிவோம். நாம் நம் முன்னோர்களை அறிவோம்; அவரது வழிவழித் தலைமுறையினரை அறிவோம்.

சங்கிலியின் எல்லாக் கரணைகளையும், புல்வகையி லிருந்து மனித வகை வரையிலுள்ள இறுபத்தாறு கரணைகளையும் நாம் அறிந்திருக்கிறோம்.

நாம் இந்தச் செய்திகளை அறிந்தது, வேத நூல்களிலிருந்தல்ல. நாம், எலும்புக்கூடுகள் கூறும் உண்மைகளிலிருந்தும், வாழும் உயிரினங்களின் வடிவங்களிலிருந்தும் அவற்றை அறிகிறோம்

மிகச்சாதாரண உணர்ச்சியற்ற அணுத்திரள்களிலிருந்து உயிரணுதோன்றி, அந்த உயிரணு நீர்க்கோத்தவொன்றாகி, அது இரண்டாகப் பிரிந்து, பிரிந்தவொன்று புழுவாகிப், பின் நீண்ட- பருத்த புழுவாகிப் பின் முதுகு எலும்புடையனவாகிப், பின் நீர்வாழ்வனவாகிப், பின் ஊர்வனவாகிப் பின் பறப்பனவாகிப், பின் நடப்பனவாகிப், பின் விலங்குகளாகிப், பின் குரங்காகிப், பின் வாலில்லாக் குரங்காகிப், பின் கொரில்லாவாகிப். பின் மந்தியாகிப், பின் மனிதனாகி வளர்ந்து வந்திருக்கும் வழி வழித் தலைமுறை வரலாற்றை நாம் அறிந்திருக்கிறோம்.

வாழ்வு நடந்துவந்த வழியை நாம் அறிகிறோம் முன்னேற்றத்தின் அடிச்சுவடுகளை நாம் அறிகிறோம். அவைகள் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் சங்கிலியின் கடைசிக் கரணையையும் நாம் அறிகிறோம். இவற்றிற்கெல்லாம், நாம் மற்றெல்லோரைக் காட்டிலும், மிகச்சிறந்த உயிர் நூல் வல்லுநராகிய ஏனெஸ்ட்ஹெக்கேலுக்கு மிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே, இப்பொழுது, நாம் அண்டம் இயற்கையானது என்பதை உணருகிறோம். இயற்கைக்கு மீறிய வொன்று இருப்பதை மறுக்கிறோம்.