மனோன்மணீயம்-இரண்டாம்அங்கம்-கதைச்சுருக்கம்
மனோன்மணீயம்- நாடகம்
தொகுமனோன்மணீயம்-இரண்டாம் அங்கம்
தொகுஇரண்டாம் அங்கம் கதைச்சுருக்கம்
தொகு- பாண்டியன் சீவகனும் அமைச்சன் குடிலனும், மனோன்மணியின் திருமணத்தைப் பற்றி ஆலோசனை செய்கின்றனர். சேரநாட்டு மன்னன் புருடோத்தமனுக்கு மனோன்மணியை மணம்செய்விக்குமாறு கூறியவர் சுந்தர முனிவரே என்பதைத் தெரிவித்து, அதனை விரைவில் செய்துமுடிக்கவேண்டும் என்று அரசன் கூறுகிறான். திருமணத்தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டவன்போலக் குடிலன் நடித்து, இதுபற்றித் தானும் பல நாள்களாகக் கருதியதுண்டு என்றும், கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதுபற்றிப் பேச நேரமில்லாமற் போயிற்று என்றும், மனோன்மணியை உருவும் திருவும் அறிவும் ஆண்மையும் படைத்த புருடோத்தமனுக்கே மணம் செய்விப்பது தகுதி என்றும், அறியாதவர் பல பேசினாலும் உடனே தூது அனுப்புவதுதான் தகுதி என்றும் அரசனிடம் கூறுகிறான்.
- “அறியாதவர் பலவாறு பேசுவர்” என்பதன் கருத்து என்னவென்று அரசன் கேட்கக் குடிலன், “மணமகன் வீட்டாரே, மணமகளைத் தேடிவருவது உலக வழக்கம்; மணமகள் இல்லத்தார், முதன்முதலில் மணமகன் இல்லத்தைத் தேடிப்போவது வழக்கம் அன்று. ஆனால், அவசரகாரியத்திற்குச் சாத்திரம் சம்பிரதாயம் பார்க்க வேண்டியதில்லை” என்று கூறுகிறான். “உலகவழக்கம் அப்படியானால், நாம் தூது அனுப்பவேண்டியதில்லை. மனோன்மணியை மணஞ் செய்துகொள்ள விரும்பாத அரசர்கள் உண்டோ?” என்று அரசன் கூற, அதற்கு அமைச்சன் கூறுகிறான்: “குமரி மனோன்மணியை விரும்பாத அரசர்கள் யார் உளர்? சோழன், கலிங்கன், கன்னடன், காந்தாரன், மச்சன், கோசலன், விதர்ப்பன், மராடன், மகதன் முதலாய அரசர்கள், மனோன்மணியை மணம்புரிய ஆவல்கொண்டு தவஞ்செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு குறை உண்டு, சேரநாட்டுப் புருடோத்தமனுக்கு மட்டும், எல்லாத் தகுதியும் உண்டு. ஆனால், அவன் கருத்தை அறியாமல் நாம் எப்படித் தூது அனுப்புவது என்பது பற்றித்தான் சிந்திக்கிறேன்.”
- இவ்வாறு அமைச்சன் கூறியதைக் கேட்ட அரசன், புருடோத்தமன் கருத்தை அறியும் உபாயம் யாது என்று வினவ, குடிலன், அதற்கு உபாயம் உண்டு எனக் கூறி அதனை விளக்கிச் சொல்கிறான். “இப்போது சேரமன்னன், ஆட்சிக்குட்பட்டிருக்கிற ’நன்செய் நாடு’ (நாஞ்சில் நாடு) என்று ஒரு நாடு உண்டு. அது முறைப்படி, பாண்டியராகிய உமக்கே உரியது. அது நீர்வளம், நிலவளம் பொருந்திய செழிப்பான நாடு. அங்கு வழங்குவது மலையாள மொழி அன்று; தமிழ்மொழியே. அங்கு வழங்கி வருகிற பழக்கங்களும், தமிழரின் பழக்கவழக்கங்களே. (இந்த நன்செய் நாட்டின் இயற்கை எழிலையும், வளங்களையும், நூலாசிரியர் இங்குக் குடிலன் வாயிலாக நன்கு சிறப்பிக்கிறார்.) இந்நாடு, இப்போது சேரன் ஆட்சியில் இருந்தபோதிலும், அதன் உரிமையை, நாம் விட்டுவிடவில்லை. அதனைக் கைப்பற்றுவதற்காகத்தானே, அதற்கு அருகிலே, இந்தத் ‘திருநெல்வேலிக்கோட்டை’யைக்கட்டினோம்? இப்போது புருடோத்தமனிடம் தூது அனுப்பி, நன்செய் நாட்டைத் திருப்பிக்கொடுக்கும்படி கேட்போம். நமது புதிய கோட்டையின் வலிமையைக் கருதி, அவன் திருப்பிக்கொடுப்பான். அல்லது ஏதேனும் வாதம் தொடங்குவான். அந்தச் சமயத்தில், இரு தரத்தாருக்கும் பொதுவான முறையில், இந்தத் திருமணத்தைப் பேசி முடிப்போம்.”
- இவ்வாறு சூழ்ச்சியாகக் குடிலன் பேசியதை, அரசன், உண்மையெனக் கருதி, “இது நல்ல உபாயந்தான், மெத்த மகிழ்ச்சி” என்று கூறுகிறான். குடிலன், இந்தக் காரியம் கைகூட வேண்டுமானால், தூது போகிறவர், திறமையுள்ளவராயிருக்க வேண்டும். பெருமானடிகளே, தகுந்த தூதனைத் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் என்று கூறுகிறான். அதற்கு, அரசன், “உமது மகன் பலதேவன் இருக்கிறானே”, அவன், முன்னமே சில தடவைகளில், பகையரசர்களிடம் தூது சென்றிருக்கிறான் அல்லவா? அவனையே தூது அனுப்பலாம்” என்று கூறுகிறான். குடிலன், நினைத்த காரியம் கைகூடிற்று என்று மனத்தினுள் மகிழ்ச்சி கொண்டு, அதை வெளியில் காட்டாமல், “அடியேனுடைய உடல் பொருள் ஆவி சுற்றம் யாவும், அரசர் பெருமானுக்குரியனவே. பலதேவனைத் தூது அனுப்பலாம். ஆனால், அவன் இளைஞன், இப்பெரிய காரியத்துக்கு அவனைத் தூது அனுப்புவது தகுமோ என்று யோசிக்கிறேன்” என்று மனமில்லாதவன் போலக் கூறுகிறான்.
- வெள்ளையுள்ளம் படைத்த அரசன், “பெரிய காரியம் ஆனால் என்ன? சேரனிடம் சொல்லவேண்டியவைகளை யெல்லாம் முறையாகச் சொல்லியனுப்பினால், பலதேவன் நன்றாக எடுத்துக் கூறுவான். இந்தத் துன்பங்களையெல்லாம் உணராமல், பித்துக்கொள்ளி நடராசனைத் தூது அனுப்பும்படி, நமது குருநாதர் கூறுகிறார்” என்று சொன்னான். “அரசர் பெருமானே! அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். துறவிகளுக்குத் தூதின் பெருமை என்ன தெரியும்? கோவிலைக் கட்டு, குளத்தை வெட்டு என்று சொல்லத்தெரியுமே தவிர, அரசதந்திரம், அவர்களுக்குத் தெரியாது. அரசர்களிடம் தூதுசெல்ல, நடராசனுக்கு என்ன தகுதி உண்டு? பெண்களிடம் தூது செல்லத் தகுதியுடையவன் அவன்” என்றான் குடிலன். காலம் கடத்தாமல், உடனே பலதேவனைத் தூது அனுப்புக என்று அரசன் கூற, “கட்டளைப்படியே, இன்றே அனுப்புகிறேன்” என்று கூறி, விடைபெற்றுச் சென்றான் அமைச்சன்.
- தனித்து அமர்ந்திருக்கும் பாண்டியன், “கூர்த்த மதியுள்ள குடிலனை நமது அமைச்சனாகப் பெற்றது நமது பாக்கியம்” என்று தனக்குள்ளே பேசிக் கொள்கிறான். அவ்வமயம், நகரப் பிரபுக்கள் சிலரும் நாராயணனும், அவ்விடம் வருகிறார்கள். அரசன், அவர்களிடத்திலும், தன் அமைச்சனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான். “சற்று முன்புதான், நமது அமைச்சருடன், அரசியல் காரியமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய அறிவே அறிவு என்று அரசன் புகழ்ந்து கூறுகிறான். இதனைக் கேட்ட பிரபு ஒருவர், “அதற்கென்ன ஐயம்! குடிலனுடைய அறிவுக்கு எல்லையுண்டா? தேவகுருவும், அசுரகுருவுங் கூட, இவரிடம் வந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். குடிலனுடைய அறிவும் திறமையும், அரசருக்குத் தீமை பயக்கும் என்று நாராயணன், தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். மற்றொரு பிரபு, “அரசர் பெருமானிடத்திலும் அரச குடும்பத்தினிடத்திலும் அமைச்சருக்கு இருக்கிற பக்தி சொல்லி முடியாது. இராமரிடம் அனுமானுக்கு இருந்த பக்தி போன்றது, அவருடைய பக்தி” என்று மெச்சிப் பேசினார். “இதுவும் முழுப்பொய்; அரசர் இதனையும் உண்மை என நம்புவார்” என்று தனக்குள் பேசிக்கொண்டான், நாராயணன்.
- அவ்வமயம் அங்கு இருந்த சேவகன், அரசனை வணங்கித் தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றிக் காட்டி, “அரசர் பெருமான், நேற்று, அடியேனிடம் திருமுகம் கொடுத்து அனுப்பியபோது, திருமணச்செய்தியை அறிந்து மகிழ்ச்சியடைந்து, அதற்கு அடையாளமாக, இந்த முத்துமாலையை, அமைச்சர், அடியேனுக்கு வெகுமதியாக அளித்தார்” என்று கூறினான். இதைக்கேட்டு, ஏதோ அரசருக்குப் பொல்லாங்கு செய்யக் குடிலன் எண்ணியிருக்கிறான் என்பது இதனால் நன்கு தெரிகிறது என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறான், நாராயணன்.
- “பாருங்கள், அமைச்சருடைய அரச பக்தியை! இராமனுக்குப் பரதன் போலவும், முருகனுக்கு வீரவாகு தேவர் போலவும், அரசர் பெருமானிடம் சுவாமி பக்தியுள்ளவர் ‘குடிலர்’ என்று மற்றொரு பிரபு, கருத்துக்கூறினார். நாராயணன் வெளியே போய், தனது மூக்கில் கரிபூசிக்கொண்டு, உள்ளே வருகிறான். அவனது மூக்கைக் கண்டு அரசன் நகைத்து, “என்ன நாராயண! உனது மூக்குக் கரியாயிருக்கிறது” என்று கேட்டான். “புறங்குன்றி கண்டனைய ரேனும், அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்னும் திருக்குறளை நினைவுறுத்துவதற்காக, இப்படிச் செய்து கொண்டேன்” என்று விடை கூறுகிறான், நாராயணன். இதைக்கேட்டு, எல்லோரும் நகைக்கிறார்கள். பிறகு, பிரபுக்கள், அரசனிடம் விடைபெற்றுச் செல்கிறார்கள்.
- அரசன் நாராயணனைப் பார்த்து, “உனக்கென்ன பைத்தியமா? ஆமாம்! நடேசனுடைய தோழன்தானே? அவனைப்போல நீயும் பைத்தியக்காரன்தான்!” என்று கூற, நாராயணன், “எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான், வேறாகும் மாந்தர் பலர்” என்று திருக்குறளினால் விடையளிக்கிறான். “திருக்குறள் எதற்கும் இடமளிக்கும். அதை விடு” என்று கூறி, அரசன், சேவகனுடன் செல்கிறான்.
- நாராயணன், தனியே இருந்து, தனக்குள்ளே சிந்திக்கிறான். “வெள்ளையுள்ளம் படைத்த அரசன், குடிலனை, முழுதும் நம்பியிருக்கிறான். குடிலனோ, சூதுவாது அறிந்த சுயநலக்காரன். இவனை எல்லோரும் நல்லவன் என்றே நம்புகிறார்கள். இவனுடைய கள்ள உள்ளத்தை அறிந்தவர்களும், இவனுடைய கள்ளத்தனத்தை, வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள். அரசாட்சி, ‘நெருப்பு ஆறும் மயிர்ப்பாலமும்’ போன்றது. அரசர்பெருமான், விழிப்பாக இருந்தால் பிழைப்பார்; இல்லையேல், படவேண்டியதைப் பட்டே தீரவேண்டும். அரசருக்கு உதவிசெய்து அரசகாரியங்களைச் செம்மையாகவும், முறையாகவும், நேர்மையாகவும் செலுத்தவேண்டுவது, அமைச்சர் கடமை. அதைவிட்டு, இந்த அமைச்சன், அரசனைக் கவிழ்த்து, ஆட்சியைக் கைப்பற்றக் கள்ளத்தனமாகச் சூழ்ச்சிகளைச் செய்கிறான். அந்தோ! இவனுடைய சூதுவாதுகளை வெளிப்படுத்துவது எப்படி? வெளிப்படையான சான்றுகளைக் காட்டினால்தானே நம்புவார்கள்? சூழ்ச்சிக்காரர்கள், சான்றுகள் தெரியும்படியா காரியம் செய்கிறார்கள்? அரசர், குடிலனுடன் ஏதோ மந்திராலோசனை செய்ததாகக் கூறினார்; நடேசன் பெயரையும் குறிப்பிட்டார். அரசருக்கு ஏதோ ஆபத்து வரும்போல் தோன்றுகிறது.” இவ்வாறு தனக்குள் நாராயணன், எண்ணிக்கொண்டே போகிறான்.
முற்றிற்று
தொகுபார்க்க
தொகு- மனோன்மணீயம்- ஆசிரியமுகவுரை, கதைச்சுருக்கம்.