மனோன்மணீயம்: ஐந்தாம்அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம்
மனோன்மணீயம்
தொகுஅங்கம் ஐந்து
தொகுமுதற்களம்- கதைச் சுருக்கம்
தொகு- அமைச்சன் குடிலன் அரண்மனையில் சுந்தரமுனிவர் அமைத்த சுரங்கவழியைக் கண்டுபிடித்து, அதன் வழியாக இறங்கிச் சென்றான். அவ்வழி, கோட்டைக்கும், சேரமன்னன் இருந்த பாசறைக்கும் இடையேயுள்ள வெளியிடத்தில் கொண்டுபோய் விட்டது. இரவுநேரம். குடிலனுக்குப் புதிய யோசனை உண்டாயிற்று. நேரே, சேரன் இருக்கும் பாசறைக்குச் சென்று, தன் எண்ணத்தைத் தெரிவித்தால், அதற்கு அவன் உடன்படுவான். ஆண்டுதோறும், தாம்பிரபரணி நீரும், வேப்பந்தாரும் அனுப்பிக்கொண்டே இருந்தால், அவன், தன்னையே அரசனாக்குவான் என்று சிந்தித்தான். “பலதேவனுக்கும், மனோன்மணிக்கும் திருமணம் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? இப்பொழுதே, என்னை அவன், எதிர்த்துப் பேசுகிறான். படைவீரர்கள் நம்மை வெறுக்கிறார்கள். சேரனைக் கண்டு வணங்கி நயமாகப் பேசினால், அவன் இணங்கிவிடுவான்! ஆ!ஆ! நமது அறிவே அறிவு! ஊழ் என்றும் தலைவிதி என்றும் பேசுவதெல்லாம வீண்பேச்சு! இந்தச் சுரங்கவழி, நமக்கு நல்லதாக அமைந்தது” என்று நினைத்துக்கொண்டே நடந்தான். நடந்து, சேரன் பாசறைக்கு அருகில் சென்றான்.
- அவ்வமயம் சேரமன்னன் புருடோத்தமன், உறக்கம் இல்லாமல், அங்குத் தன்னந் தனியனாக உலாவிக் கொண்டிருந்தான். அவன், தன் கனவில் அடிக்கடி தோன்றும் நங்கையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டே உலவுகிறான். அவனைக் கண்ட குடிலன் வியப்படைந்தான். “இவன் மனிதன் அல்லன். தேவனோ? கந்தருவன் போலக் காணப்படுகிறான்!” என்று எண்ணினான். சேர அரசன் புருடோத்தமன், மெல்ல நடந்து அவனிடம் வந்தபோது, குடிலனைக் கண்டான். அயலான் என அறிந்து, “யார்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
- “அடியேன், குடிலன்” என்றான், அமைச்சன்.
- “இந்த நேரத்தில், இங்கு வரக் காரணம் என்ன?”
- “அரசே! தங்களிடம் ஒரு வாரத்தை சொல்லவந்தேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல், தாங்கள் எதிர்ப்பட்டீர்கள்!” என்றான், குடிலன்.
- “ வந்த காரியம் என்ன? விரைவில் சொல்!” என்றான், புருடோத்தமன்.
- “அரசே! தங்கள் புகழ், உலகமெங்கும் பரவியுள்ளது. எங்கள் நாட்டையும், தாங்களே அரசாள்வது தகுதி. இன்று நடந்த போரில், மனமில்லாமலே நான் போர் செய்தது, தாங்கள் அறிந்ததே! மக்கள், தங்கள் புகழை எண்ணித் தங்களையே அரசராக ஏற்க விருக்கின்றனர். ஆனால், பாண்டியன், அவர்களைப் போர்செய்யத் தூண்டுகிறான்” என்றான்.
- குடிலன் சூதாக ஏதோ கருதுகிறான் என்று அறிந்த சேரன், “நல்லது! அதனால் உனக்கு வேண்டியது என்ன? சொல்” என்றான்.
- குடிலன் கூறுகிறான்: “ஆண்தகையே! போரில் மாண்டவர் போக, மீண்டவர் உயிரையேனும் காத்தருள வேண்டும். வீணாக மக்கள் மாண்டு போனது, என் மனத்தைத் துன்புறுத்துகிறது. மற்றவர்களையெல்லாம் போரில் மடியாதபடி காத்தருள வேண்டும்!”
- உன் அரசனிடம் ஏன் இதைச் சொல்லவில்லை?” என்று கேட்டான், புருடோத்தமன்.
- “சொல்லிப் பயன் என்ன? அவர், சொல்புத்தியும் கேளார்; அருள்உள்ளம் இல்லாதவர். இன்று மாலையில் தாங்கள் விட்ட தூது வார்த்தையையும் ஏற்றுக் கொண்டாரில்லை. மக்களைப் போர்க்களத்தில் அனுப்பிக் கொன்று, நாட்டைச் சுடுகாடாக்கப் பார்க்கிறார். அடியேனுக்கு ஒரு வார்த்தை சொன்னால், பாண்டியனையும், கோட்டையையும், ஒரு நொடியில், தங்கள் வசம் ஒப்புவிக்கிறேன்.”
- இதைக்கேட்ட சேரன், ‘பாதகன், விசுவாச காதகன்!’ என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான்.
- குடிலன் தொடர்ந்து மேலும் சொல்லுகிறான்: “அரசே! பாண்டிய அரசன், தங்கள் கைவசமானால், அங்கு உள்ளவர் ஒருவரும், தங்களை எதிர்க்க மாட்டார்கள். திருநெல்வேலி தங்களுக்குரியதாய் விட்டால், மதுரையும், தங்களுக்குக் கீழ்ப்பட்டுவிடும். பாண்டிய நாடு, தங்கள் அடிக்கீழ் ஒதுங்கும். அரசர் பெரும! அடியேனுக்கு அரசபதவி மட்டும் அருள் செய்வீரானால், தாங்கள் விரும்பியது போல, ‘நீரும் தாரும்’, என் தலைமேல் சுமந்துகொண்டு, தங்கள் வாயிலில் கொண்டுவந்து தருவேன். இராமன் வென்ற இலங்கையை விபீடணன் காத்தது போலப் பாண்டிநாட்டைக் காத்திடுவேன்!” என்றான்.
- புருடோத்தமன், இவன் தந்திரசாலி, சாமர்த்தியமாகப் பேசுகிறான், என்று எண்ணிக்கொள்கிறான்.
- குடிலன், “அரசனுடைய அந்தப்புரத்திற்குப் போக, ஒருவரும் அறியாத ஒரு சுரங்கவழி உண்டு. அவ்வழியாய்ப் போனால், அரசனைச் சிறைப்பிடிக்கலாம்” என்றான்.
- புருடோத்தமன், “உண்மைதானா?” என்று கேட்டுக்கொண்டே, “யார் அங்கே...” என்று அழைத்தான். சற்றுத் தூரத்திலிருந்து, சேனாபதி அருள்வரதன், விரைந்து வந்து வணங்கினான். “கைகால்களுக்குத் தளையிட விலங்குகள் கொண்டுவா” என்றான், புருடோத்தமன்.
- குடிலன், “அரசர் பெருமானே! அடியேன் கூறுவது, முழுவதும் உண்மை.” என்று கூற,
“சுரங்கவழி எங்கே இருக்கிறது? நீ, அவ்வழியாகத்தான் வந்தாயோ?” என்று கேட்டான், சேரன்.
- “அருகிலேயே இருக்கிறது. அவ்வழியாகத்தான் வந்தேன்” என்றான், குடிலன்.
- அருள்வரதன், சில வீரர்களுடன், விலங்குகளைக்கொண்டுவர, சேரன், குடிலனைச் சுட்டிக் காட்டிப் “பூட்டுங்கள்!” என்று ஆணையிட்டான்.
- வீரர்கள், குடிலனுக்கு, விலங்கு பூட்டினார்கள். “அரசே! நான் ஓடமாட்டேன். எனக்கு ஏன் விலங்கு? அருள் கூர்ந்து எனக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டினான், குடிலன்.
- சேரன், “வாயை மூடு! சேரன், வஞ்சகமாக வெல்லமாட்டான்! போர்க்களத்திலே, அரசர்களை வென்று சிறைப்பிடிப்பான். நல்லது. நட. சுரங்கவழியைக் காட்டுக” என்று கட்டளையிட்டான். குடிலன், சுரங்கவழியைக் காட்டி முன்நடக்க, சேவகர்களும் அருள்வரதனும் புருடோத்தமனும், பின்தொடர்ந்து சென்றனர்.
ஐந்தாம் அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம் முற்றியது
தொகுV
தொகு
மனோன்மணீயம் மூலம்(முதல்அங்கம்-பாயிரம்)