மனோன்மணீயம்: நான்காம்அங்கம், இரண்டாங்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்

தொகு

அங்கம் நான்கு

தொகு

இரண்டாங் களம்- கதைச் சுருக்கம்

தொகு
கோட்டையைப் பாதுகாக்கக் கோட்டை வாயிலில் நிறுத்தப்பட்ட வீரர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவீரர்கள், தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். இந்த வீரர்கள், அரசனிடம் பேரன்பு கொண்டவர்கள். சாவேறு படையினராகிய இவர்கள், அரசனுக்காக உடலையும் உயிரையும் எந்த நிமிடமும் விடத் தயாராயிருப்பவர்கள். அரசனுக்குத் தீங்கு செய்ய அந்தரங்கத்தில் கருதிக்கொண்டு, வெளிக்கு உண்மையாளனைப் போல நடிக்கும் மந்திரியாகிய குடிலன், இந்தச் சாவேறு வீரர்களை, அரசனுடன் போர்க்களத்தில் இருத்தாமல், கோட்டையில் இருக்கச் செய்தான். ஆனால், இவர்கள் எல்லோரும் போர்க்களத்தில் சென்று போர்செய்யத் துடிக்கின்றனர். கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டியபடியால், ஒன்றும் பேசாமல்,கோட்டையில் காவல் இருக்கின்றனர். இவர்கள் கண்ணும் மனமும், போர்க்களத்தை நோக்கியே இருக்கின்றன. வீரர்கள், தமக்குள் பேசிக்கொண்டனர்:
“அரசர் பெருமானின் போர்க்களப் பேச்சைக் கேட்ட புல்லும் வீரங் கொள்ளும்! இந்தப்படை தோற்றால், வேறு எந்தப்படைதான் வெல்லும்?” என்றான் ஒரு வீரன்.
“முழுதும் கேட்டனையோ?” என்றான், மற்றொரு வீரன்.
“ஆம். முழுவதும் கேட்டேன். இங்கு வர, எனக்குச் சற்றும் மனம் இல்லை. ஆணையை மீறுவது கூடாது என்று வந்தேன். இல்லையேல், போர்க்களத்துக்கே போயிருப்பேன். நமக்குப் பாக்கியம் இல்லை, என்செய்வது? என்றான், முதலில் பேசிய வீரன்.
“பாக்கியம் இல்லை என்பதில்லை; அந்தக் கோணவாய்ச்சடையன், குடிலனிடம் ஏதோ சொல்லி, நம்மையெல்லாம் இங்கே வைத்துவிட்டான்” என்றான், இரண்டாவது வீரன்.
“என்னையும் அவன்கெடுத்தான். சண்டி சங்கரன் பகைவர் சேனையுடன் வந்திருக்கிறான். அவன், ஒருகாலத்தில், என்னையும் என்தாயையும் சந்தையில், பழித்துப் பேசினான். அவனைப் பழிவாங்கலாம் என்று இருந்தேன்” என்றான், மூன்றாவது வீரன்.
“சேரநாட்டினர், பிஞ்சில் பழுத்தவர்கள், வாயாடிகள். அவர்களை எனக்குத் தெரியும். நான் சனார்த்தனம், வைக்கம் முதலான ஊர்களுக்குப் போயிருக்கிறேன்” என்றான், நாலாம் வீரன்.
“சண்டி சங்கரனை நான் விடப்போதில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து, இந்த வாளுக்கு இரையாக்குவேன். அவன் போரில் செத்துக் கிடந்தால், அவன் தலையை நசுக்குவேன்” என்றான், மூன்றாவது வீரன்.
“சீச்சீ! பிணத்துடன் போரிடும் வீரனா நீ! மேலும், பொது எதிரியோடு நாட்டுக்காகப் போரிடுகிறோமே யல்லாமல், சொந்தப் பகைக்காகப் போரிடுகிறோம் இல்லை. நமது சுதந்திரத்தைப் பறிக்கவந்தபடியால், சேரநாட்டினருடன் போர் செய்கிறோம். இல்லையானால், அவர்களுக்கும் நமக்கும் பகை என்ன?” என்று கூறினான், முதல்வீரன்.
இச்சமயத்தில் நாராயணன், போர்க்கோலத்துடன் குதிரை ஏறி, அவ்விடம் வருகிறான். இவன், கோட்டைக் காவலர்களுக்குத் தலைவன். இவனை வரவேற்கின்றனர், இவனுக்குக் கீழ்ப்பட்ட இரண்டு படைத்தலைவர்கள். இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாராயணன் கேட்க, ஐயாயிரம் வீரர்கள் இருப்பதாகவும், இவ்வீரர்களுக்கு ஏற்ற இடம் இது அல்ல என்றும், போர்க்களம் அனுப்பப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்றும் கூறுகின்றனர்.
“வருந்த வேண்டாம். நமக்குக் கொடுத்த பணியைச் செய்வோம்” என்றான் நாராயணன்.
“வேண்டுமென்றே நம்மையெல்லாம் இங்கு வைத்திருக்கிறார், குடிலர்” என்றான் ஒரு சேனைத்தலைவன்.
“கோட்டைக் காவலுக்கு எத்தனை வீரர் வேண்டும்?” என்று நாராயணன் கேட்க, “இங்கு உள்ளவர்களில் நாலில் ஒரு பகுதியினர் போதும்” என்று விடை கூறுகின்றனர்.
“நல்லது. கால்பகுதியினர் மட்டும் இங்கே கடமை செய்யட்டும். மற்றக் குதிரை வீரர்களை, அணிவகுத்துத் தயாராக வை” என்று நாராயணன் கட்டளையிட்டான். உதவித் தலைவர்கள் அவ்வாறே செய்தனர்.
கோட்டை வாயிலில், குதிரைமேல் அமர்ந்தபடியே, நாராயணன், போர்க்களத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். குடிலன், சாவேறே வீரர்களை அரசன் பக்கத்தில் வைக்காமல் கோட்டைக்குள் வைத்த காரணம், நாராயணனுக்குத் தெரியும். அரசனுக்கு ஏதோ அபாயம் வரப்போகிறது என்பதை அறிந்தான், நாராயணன். போர்க்களத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில், உதவித்தலைவன், குதிரைமேல் அமர்ந்து பார்க்கிறான்.
போர்க்களத்தில், பாண்டிநாட்டுப் படை போர்செய்கின்றது. பாண்டியனுக்கு இடது பக்கத்தில் குடிலன் மகன் பலதேவனும், வலது புறத்தில் குடிலனும் இருந்து போரிடுகின்றனர். போரின் மத்தியில்,திடீரென்று ஒரு குழப்பம் காணப்பட்டது. போர்க்களத்தின்மேல் கண்ணுங் கருத்துமாக இருந்த நாராயணன், தனது உதவிவீரனைப் பார்த்து, “அரசருக்கு ஏதோ ஆபத்துப்போல் தெரிகிறது. குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு, விரைவில், என்னைத் தொடர்ந்து வா” என்று கட்டளையிட்டான். பிறகு, மெல்லிய குரலில், “குடிலனை நம்பாதே” என்று அவன் காதில் சொன்னான். அதற்கு அவ்வீரன், “அதை, நானும் அறிவேன்” என்று சொல்லிக் குதிரைப்படை வீரர்களை அழைத்துக்கொண்டு, விரைவாக, நாராயணனைப் பின்தொடர்ந்து, போர்க்களம் நோக்கிச் சென்றான்.
(மனோன்மணீயம், நான்காம் அங்கம், இரண்டாங்களம் கதைச்சுருக்கம் முற்றிற்று)


பார்க்க:

தொகு

[[]]

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 01

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 02

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 03

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 04

மனோன்மணீயம்-அங்கம் 04-களம் 05