மனோன்மணீயம்: நான்காம்அங்கம், மூன்றாங்களத்தின் கதைச்சுருக்கம்

மனோன்மணீயம்

தொகு

அங்கம் நான்கு

தொகு

மூன்றாங்களம்- கதைச் சுருக்கம்

தொகு
பகல்வேளையில் அரண்மனையில், சீவக அரசன், போரில் பின்னடைந்தது பற்றிக் கவலையுடனும் துன்பத்துடனும் அமர்ந்திருக்கிறான். சேவகர்கள், வாயிலண்டை நின்று, தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். “அரசர் பெருமானுக்கு ஆறுதல் கூறுவோர், அருகில் இல்லையே. நாம் அரசருக்கு, ஆறுதல் கூறுவது எப்படி? இச்சமயம், நாராயணர் இங்கு இருந்தால் ஆறுதல் கூறுவார்” என்று சொல்லிக் கொள்கின்றனர். நாராயணர், இளவரசிக்கு ஆறுதல் சொல்லப்போயிருக்கிறார்” என்றான் ஒருசேவகன். "அவர் இன்று போர்க்களத்தில் செய்த துணிச்சலான செயலினால், நாம் எல்லோரும் உயிர் பிழைத்தோம. இல்லையேல்...” என்று மற்றொரு சேவகன் கூறினான். “அரசர் பெருமான் எழுந்து நிற்கிறார்; ஏதோ சொல்லுகிறார்” என்றான், இன்னொரு சேவகன்.
அரசன், எழுந்து நின்று, தனக்குத் தானே பேசிக்கொள்கிறான்: “இன்னும் உயிரை வைத்திருக்கிறேன்! பாண்டியர் குலத்தின் பெருமை, என்னோடு அழிந்தது! இதற்கு முன்பு போர்க்களம் சென்ற பாண்டியர், வெற்றி பெற்றுத்தான் திரும்பினர்; அல்லது போர்க்களத்தில் உயிர்விட்டனர். இன்று நான், போர்க்களத்தில் பின்னடைந்து ஓடிவந்தேன்! என்போன்ற வீணர் யார்உளர்? இந்த வில் ஏன், வாள் ஏன், எனக்கு?... ஆம்! இந்த வாள், இப்போது, எனக்குப் பயன்படும்!” என்று சொல்லிக்கொண்டு, உறையிலிருந்து, வாளை எடுக்கிறான்.
அரசன் தற்கொலை செய்து கொள்வான் என்று அஞ்சிய சேவகர்கள் அவனிடம் ஓடுகின்றனர். அவ்வமயம், நாராயணன், அவ்விடம் வருகிறான். நிலைமையை உணர்கிறான். “அரசே! இளவரசியார் மனோன்மணியைத் தாங்கள் மறந்துவிட்டீர் போலும்!” என்று கூறுகிறான். அதைக்கேட்ட மன்னன், தற்கொலை செய்து கொள்வதை விடுத்து, மனோன்மணியின் நிலையை உணர்ந்து, மூர்ச்சித்து விழுகிறான். நாராயணனும் சேவகர்களும், குளிர்ந்த நீரைத் தெளித்தும், மெல்ல விசிறியும், அரசனை மூர்ச்சை தெளிவிக்கின்றனர்.
அரசன் தெளிந்து எழுந்து, “குழந்தாய்! குழந்தாய்! மனோன்மணீ!” என்று கூவித் துக்கத்தில் ஆழ்கிறான்.
நாராயணன், “அரசே! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்! தாங்கள் உயிரை விட்டால் இளவரசிக்கு ஆதரவு, யார் உள்ளனர்? தாங்கள் உயிர் விட்டபிறகு, இளவரசியார் உயிரோடிருப்பரோ?” என்று கூறி அரசனைத் தேற்றுகிறான்.
“ஐயோ! நான் என்னசெய்வது? இருதலைக் கொள்ளி எறும்புபோல, என் மனம்துடிக்கிறதே! போரில் புறங்கொடுத்து ஓடிவந்து, இன்னும் உயிரை வைத்துக் கொண்டிருப்பதோ மானம்?”
“பெருமானடிகளே! உயிரை மாய்த்துக்கொள்வது வீரம் அன்று. பெருந்துன்பம் நேரிட்டபோது, சுற்றத்தாரை விட்டு உயிர்நீப்பது வீரம் அன்று” என்றான், நாராயணன்.
“போர்க்களத்தில் ஓடியவனுக்கு, வீரம் என்ன இருக்கிறது” என்றான் அரசன்.
“இடம், காலம் கருதிப் போரில் பின்னடைவது வீரம்தான். சூழ்ச்சியுடன் சேர்ந்த வீரமே வீரம்! காலம், இடம் கருதிப்பின்வாங்குவது, வீரந்தான்; கண்ணை மூடிக்கொண்டு போரில் உயிர்விடுவது வீரம் அல்ல.”
“போதும் போதும், உமது நியாயம்! என் மகளுக்காக, என் உயிரை வைத்திருக்கிறேன். நான், இப்போது வெறும்மனிதன். அரசனும் அல்லன்; பாண்டியனும் அல்லன்” என்றுகூறிச் சேவகர்களை அழைத்து, “என்னுடன் இருங்கள்... ஏன் நிற்கிறீர்கள்?” என்று கேட்டான்.
சேவகர் மனங்கலங்கிப் “பெருமான் அடிகளே! தாங்கள் கூறுவது என்ன!... என்று கேட்கின்றனர்.
“அரசன் என்றும், அடிகள் என்றும் என்னைக் கூறாதீர். பாண்டியன் போர்க்களத்தில் இறந்து போனான். நான், வேற்று மனிதன்” என்றான் பாண்டியன்.
“அரசர் பெருமானே! வெற்றுரை வழங்காதீர். அதோ பாரும், அவர்கள் கண்ணீர் விடுகின்றனர்” என்றான், நாராயணன்.
“ஏன் வருந்துகிறீர்கள்? வாருங்கள், வாருங்கள்” என்றான், அரசன்.
“சூரியனைக் கண்டால் அல்லவா, தாமரைகள் மலரும்? அரசர்பெருமானே வருந்தினால், எங்களுக்கு வாழ்வு ஏது?” என்றான், சேவகன். அதைக்கேட்ட அரசன் திடங்கொண்டான். சேவகர்களுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினான்: “வீரர்களே! துன்பம் ஏன்? துயரம் ஏன்? போரை இழந்து விட்டோம் என்றா எண்ணுகிறீர்கள்? நமது படை அழியவில்லை; கோட்டையும் அழியவில்லை. இனியும் போர் செய்வோம்! வெல்லுவோம், புகழை நிலைநாட்டுவோம்.”
நாராயணன், “அதற்கென்ன ஐயம்? அரசே! தாங்கள் இப்போது கூறியவை, முழுவதும் உண்மை. நீரின் ஆழத்திற்கு ஏற்பத் தாமரைத் தண்டு உயர்ந்து வளர்ந்து மேலே வருவதுபோல, ஒருவருடைய ஊக்கத்தின் அளவாகத்தான், அவருடைய மேன்மையும் வளர்கிறது. அடிக்க அடிக்க மேலெழும்பும் பந்துபோல, மேன்மேலும் முயற்சி செய்தால், இன்பம் உண்டு. அரசே, தாங்கள் கூறியபடியே மனத்து ஊக்கமும், தளராமுயற்சியும், தகுந்தவர் உதவியும் இருக்குமானால், ஊழையும் வெல்லலாம்; போர்வெல்வதோ அரிது?” என்று கூறினான். அவ்வமயம், குடிலனும் பலதேவனும் அவனிடம் வருகின்றனர்.
அரசன் உற்சாகத்துடன் உயிரோடிருப்பதைக் கண்டு குடிலன் வியப்படைகிறான். ‘தகுந்தவர் உதவி’ என்று நாராயணன் கூறியது என்ன என்று தனக்குள் ஐயுறுகிறான். தான் மிகுந்த வருத்தம் அடைந்தவன்போல முகத்தை வைத்துக்கொண்டு, ஒருபுறம் ஒதுங்கி நிற்கிறான். அரசன், குடிலனையும் பலதேவனையும் கண்டு, அழைக்கிறான். குடிலன், சூதுவாது தெரியாதவன் போலவும், உண்மையாக உழைப்பவன் போலவும் பேசுகிறான். தன்மகன் பலதேவனை அருகில் அழைத்து, அவன் மார்பில் உள்ள காயத்தைக் காட்டுகிறான்.
“இது என்ன காயம்? அம்புபட்ட காயம்போல் தெரியவில்லையே” என்றான் அரசன்.
குடிலன்: “இது அன்பின் அறிகுறி! பகைவரும் பொய்யரும், இக்காயத்தைப் பற்றிப் பலவாறு கூறுவர். உண்மையில்....”
வருந்தாதே! வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகக் கவலைவேண்டாம். நாளைக்கு வெல்லுவோம்” என்று கூறினான், அரசன்.
குடிலன், தன்னுடைய சூதான செயல்களினால் போரில் தோல்வி ஏற்பட்டதை அரசன் தெரிந்து கொள்ளவில்லை என்பதை அறிந்து தைரியம் அடைகிறான். பிறகு அரசனிடம் கூறுகிறான்: “நெடுநாளாகத் தங்கள் பணிவிடைக்காகவே அடியேனுடைய உடல் பொருள் ஆவியை வைத்திருந்தும், இந்தப் போரிலே கொடியவர் சிலர்செய்த சூது காரணமாக, நான், மனத்தடுமாற்றம் அடைந்தேன். அதை நினைக்குந்தோறும், கண்ணில் விழுந்த மண் அரிப்பதுபோல, என் நெஞ்சை அது அரிக்கிறது.” பலதேவனைக் காட்டி, “இதோ! இவன் அடைந்த புண்போல நானும்போரில் புண்ணடையாமற் போனது, எனக்குப் பெருந்துயரமாக இருக்கிறது. தங்கள் கையில் உள்ள வாளினால் என் மார்பிற் குத்தி, என் உயிரைப் போக்கினால், மகிழ்ச்சியோடு சாவேன்” என்றான். “உம்மைப் போல் அரசபக்தி உள்ளவர் யார்?” என்று அரசன் குடிலனைப் புகழ்கிறான்.
இதையெல்லாம் பார்த்தும், கேட்டும் நின்றிருந்த நாராயணன், ‘இதென்ன நாடகம்! இந்தக் கோழைப்பயலுக்கு, மார்பில் புண் எப்படி ஏற்பட்டது! போர்செய்து பட்ட புண், இது அல்ல. இதை அறியவேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போகிறான்.
அப்போது குடிலன் கூறுகிறான்: “அரசனுடைய திருவடிகளில் பணிவிடை செய்யத் தொடங்கிய நாள் முதலாக, எனக்கென, ஒன்றும் கேட்கவில்லை. என் மார்பைப் பிளந்து, அதன் உள்ளே பார்ப்பீரானால், அங்கு, அரசர் பெருமானுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர். அது உண்மையா, இல்லையா என்பதை, அப்பொழுது அறிவீர்கள்” இவ்வாறு கூறி முழந்தாளிட்டுப் பணிந்து அழுகிறான்.
அரசன், “குடிலரே! எழுந்திரும், வருந்தாதீர்! உம்முடைய மனத்துயரத்தை, நான் அறிவேன். சற்று முன்புதான், நானும் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தேன்; நாராயணன், அப்போது வந்து தடுத்திராவிட்டால்...?”
குடிலன், தனக்குள் ‘பாவி! இப்போதும் கெடுத்தான்’ என்று சொல்லிக்கொள்கிறான்.
சீவகன் கூறுகிறான்: “அமைச்சரே! வாளை, உறையில் இடவில்லை; நாளையும் போர் செய்வோம். போருக்கு அஞ்சியா ஓடிவந்தோம்?”
“யார் அஞ்சினார்? அப்படி நினைப்பது தவறு!” நாராயணன் நின்ற இடத்தைப் பார்த்துக்கொண்டே, “ஒரு சிறுவனை, இரண்டுநாள் போர்செய்து வென்றார்கள் என்று பிறர் கூறுவதற்கு அனுகூலமாகச் சிலர் சதிசெய்கிறார்களே என்றுதான் என்மனம் வருந்துகிறது. நாம், களத்தைவிட்டு வந்தது சரி என்று போர்முறையை அறிந்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள். வேட்டைநாய், ஒரே ஓட்டமாய் ஓடிக்கவ்வும். சிங்கம் பதுங்கிப் பாயும்; பாய்ந்தால் குறிதவறாது. நாம், மீண்டு வந்தது, மீனைப் பிடிக்கத் தூண்டிமுள்ளில் இரையை வைத்தது போலாகும். நாளைக் காலை, சேரனையும், அவன் சேனையையும் சின்னாபின்னம் செய்வோம். ஒருவேளை, நமது கருத்தை அறிந்து, இன்று இரவே, அவன் திரும்பிப் போய்விடுவானோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்று சமயத்துக்கு ஏற்றவாறு பேசினான், குடிலன்.
“என்னவானாலும் ஆகட்டும்! நாளைக் காலை போர்செய்வோம்” என்றான், அரசன்.
இச்சமயத்தில், சேரன் அனுப்பிய தூதுவன் ஒருவன் வந்தான். சேரன், சமாதானத்திற்குத் தூது அனுப்பினான் போலும் என்றான், குடிலன். வந்த தூதன், அரசனை வணங்கிக் கூறுகிறான்: “அருளுடைய மனமும், தெளிவுடைய அறிவும், வீரம் பொருந்திய உடம்பும் உடைய என்னுடைய அரசர் பெருமான், என்னைத்தூது அனுப்பினார். இன்று நிகழ்ந்த போரில், யார் வென்றவர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே, ஒருகுடம் தாமிரவரணி நீரும், ஒரு வேப்பமாலையும் என் அரசருக்குக் கொடுத்துத் தாங்களும் அவர் ஆணைக்கு அடங்குவீரானால், வாழலாம். கோட்டை இருக்கிறது என்று கருதிப் போருக்கு வருவது, மண்குதிரையை நம்பி, ஆற்றில் இறங்குவது போலாகும். பொழுது விடிவதற்குள்ளாக வேப்பமாலையும், தாமிரவரணி நீரும் தருவீரானால், போர் நிற்கும்; இல்லையேல், போர் நிகழும். இரண்டில் எது தங்கள் கருத்தோ, அப்படியே செய்யுங்கள்.”
தூதுவன் கூறியதைக் கேட்ட அரசன், “தூதுவா! நன்றாகச் சொன்னாய்! சிறுவனாகிய உன் அரசன், அடுத்த போரில் என்னநேரிடுமோ என அஞ்சி, உன்னைத்தூது அனுப்பினான் என்பது நன்றாகத் தெரிகிறது. நீ கூறியதற்கு விடை இது: சேரன்,தாமிரவரணி நீரையும் வேப்பமாலையையும் பிச்சை கேட்கிறான்: அவன் கேட்கும் பொருள்கள், எனக்குச் சொந்தம் அல்ல; அவை பாண்டியர் பரம்பரைச் சொத்து. அதைக்கொடுக்க நமக்கு உரிமை இல்லை. பொதுச்சொத்தைத் தானம் செய்வது முறையல்ல. நாளை, போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லுக.”
“இந்த மறுமொழியைக் கேட்ட தூதன், “தாங்கள், நிலைமையைச் சற்றும் தெரிந்துகொள்ளவில்லை. உமது வலிமையைப் பெரிதெனத் தவறாகக் கருதுகிறீர். எடுப்பார் கைப்பிள்ளையைப் போல் இருக்கிறீர். இன்று, சொற்ப நேரத்தில், எம் அரசர் வென்றதைச் சிந்தித்துப் பாரும்” என்று கூறினான்.
அருகில் இருந்த குடிலன், தூதுவனைப் பார்த்து, “நீ தூதுவன். கொண்டுவந்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுமொழியைக் கொண்டுபோக வேண்டியவன் நீ. பழிச்சொற்களைப் பேசினால், உன் உயிர் போய்விடும்; உடனே போய்விடு” என்று கூறினான். “அப்படியே! இனிப் போரையன்றி வேறொன்றில்லை” என்று கூறித் தூதுவன் போய் விடுகிறான்.
சீவகன், “நீரும் தாரும் வேண்டுமாம்! மானம் போனபின், வாழ்வு எதற்கு? இதுகாறும், பாண்டியர்குலம் ஒருவருக்கும் அடிபணிந்ததில்லை. ஆற்றுநீரும், வேப்பமாலையும் கொடுத்துவிட்டு நாணம் இல்லாமல் உயிர்வாழ்வதைவிட, உயிர்விடுவதே மேல். குடிலரே! எதுவாயினும் ஆகட்டும். போருக்குச் செல்வோம். இப்போது, மனோன்மணியைக் கண்டு, அவளைத் தேற்றிவருவோம். நான் வருமளவும், இங்கேயே இரும்” என்று சொல்லி, இளவரசி மனோன்மணியைக் காணச்சென்றான்.
அரசன் சென்றபிறகு குடிலன், “இனி என்ன? உனக்குக் கேடுகாலந்தான். இரண்டுமுறை நீ தப்பினாய். அந்தத் தப்பிலிப்பயல் நாராயணன், உன்னைத் தப்பச்செய்து, என் சூழ்ச்சியைக் கெடுத்தான்” என்று சொல்லித் தன்மகன் பலதேவனைப் பார்த்து, “இதற்கெல்லாம் காரணம்...” என்று கூறியபோது, பலதேவன் குறுக்கிட்டு, இதுபோல உன் நெஞ்சில் வேல் பாய்ந்தால்,உனக்குத் தெரியும்” என்று கூறினான்.
குடிலன் “ அது, உன்னால் ஏற்பட்டது” என்றான்.
பலதேவன், “அரசனைக் குத்திக் கொல்ல எண்ணினாய்; ஊழ்வினை, என்னைக் குத்திவிட்டது. அது யார் பிழை?” என்றான்.
குடிலன், “உன் பாழான வாயைத் திறக்காதே. ஊரிலே பகை வைத்துக்கொள்ளாதே என்று பலமுறை சொன்னேன். பகையை உண்டாக்கிக்கொண்டு, ஊழ்வினை ஊழ்வினை என்கிறாய்.”
பலதேவன், “காதல் செய்வது பகை உண்டாக்குவதோ? பாவி!”
குடிலன், “நீயும் உன்காதலும்! பேய்ப்பயல்! உன்னை நினைக்கும்போதெல்லாம், என் மனம் எரிகிறது. அருமையாகச் சேர்த்த பணத்தையெல்லாம் பாழ்படுத்திக் கொண்டு...”
பலதேவன், “பணம் பணம் என்று பதைக்கிறாய், பிணமே! என் நெஞ்சில் புண்பட்டு நிற்கிறேன், வீணாகப் பேசாதே” என்று சினந்து பேசிவிட்டுப் போய்விடுகிறான்.
குடிலன், “இதுவும் தலைவிதி! இவனுடன் பேசிப் பயன் என்ன? நான்செய்த சூழ்ச்சிகளெல்லாம் பாழாயின! போகட்டும்! இனிப் புதுவழியைக் காணவேண்டும். ஆம். நாராயணன் இருக்கும் வரையில், நமது நோக்கம் ஒன்றும் நிறைவேறாது. அவனை ஒழிக்கும் உபாயம் என்ன?” என்று தனக்குள் கூறிக்கொண்டே செல்கிறான்.

மனோன்மணீயம், நான்காம் அங்கம்: மூன்றாம் களத்தின் கதைச்சுருக்கம் முற்றிற்று.

தொகு

பார்க்க:

தொகு

IV:01

IV:02

IV:03

IV:04

IV:05