மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1/பாண்டியன் நெடுமாறன் கால ஆராய்ச்சி
4. பாண்டியன் நெடுமாறன் கால ஆராய்ச்சி[1]
அரிகேசரி மாறவர்மன் என்னும் பாண்டியன் நெடுமாறன் (கூன் பாண்டியன்) காலத்தை ஆராய்வோம். இந்தப் பாண்டியனைத் திரு ஞானசம்பந்தர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். அன்றியும் ஞானசம்பந்தர் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியாரின் நண்பர். ஆகவே, ஞானசம்பந்தர், பாண்டியன் நெடுமாறன், சிறுத்தொண்டர் ஆகிய இவர்கள் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார், மாமல்லன் நரசிம்மவர்மனுடைய சேனைத் தலைவராக இருந்தவர். இவ்வரசன் பொருட்டுச் சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியின் தலைநகரமாகிய வாதாவி நகரத்தின் மேல் படையெடுத்துச் சென்று அந்நகரத்தை வென்றார். வாதாபி நகரம் வெல்லப்பட்டது கி. பி. 642 -இல். இந்தத் தேதி எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது; ஐயப்பாட்டிற்கு இடமில்லாதது. ஆகவே கி. பி. 642- இல் சிறுத்தொண்டர், பாண்டியன் நெடுமாறன், ஞான சம்பந்தர் ஆகிய மூவரும் இருந்தார்கள் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
இம்மூவரில் ஞானசம்பந்தர் வயதில் இளையவர். சிறுத் தொண்டரும் நெடுமாறனும் வயதினால் சம்பந்தருக்கு மூத்தவர்கள். இது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால், சரித்திரப் பேராசிரியர் நீல கண்ட சாஸ்திரி அவர்கள் எழுதிய "பாண்டிய இராச்சியம்" என்னும் ஆங்கில நூலிலே, பாண்டியன் நெடுமாறனான கூன் பாண்டியன் சம்பந்தருக்கு இளையவன் என்று கூறுகிறார்[2]. இது விசித்திரமான வியக்கத்தக்க புதிய செய்தி.
ஞானசம்பந்தர் தமது பதினாறாவது வயதில் இவ்வுலகத்திலிருந்து மறைந்தார். அவர் கூன்பாண்டியனைச் சைவனாக்கியபோது அவருக்கு உத்தேசம் வயது பதினான்கு. 14-வயதுள்ள சம்பந்தருக்குப் பாண்டியன் இளையவனாக இருந்தான் என்றால் அப்போது பாண்டியனுக்கு வயது 12- ஆக இருக்கவேண்டும். பாண்டி மாதேவிக்கு வயது 10-ஆக இருக்கவேண்டும். அப்படியானால் பாண்டியன் நெடுமாறன் 12-வயதுக்கு முன்னரே அரசாட்சி பெற்றிருக்கவேண்டும். இதற்குச் சான்று என்ன? சாஸ்திரியார் இதற்குச் சான்று எங்கே கண்டார்? இலக்கிய நூலிலா அல்லது சாசனங்களிலா? சாஸ்திரியார் சான்று காட்டாமல் மனம்போன படி எழுதிவிட்டார். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசரைப் போல நீண்ட ஆயுளுடன் இருந்தார் என்று தவறாகக் கருதிக் கொண்டு இப்படி எழுதிவைத்தார் போலும்.
12-வயதுடைய பாண்டியன் மதம் மாறியபோது அவன் அரசியான பாண்டிமாதேவிக்கு வயது 10-ஆக இருக்க வேண்டும் என்று கூறினோம். 10-வயதுள்ள பாண்டிமாதேவி 14-வயதுள்ள சம்பந்தரைப் பார்த்து, "நீர் சிறுபிள்ளை, சமணருடன் நீர் எப்படி வாது செய்ய முடியும்?" என்று சொல்லுவாரா? அதற்குப் பதிலாகச் சம்பந்தர்,
"மானினேர் விழிமாதராய் வழுதிக்குமா பெருந்தேவிகேள்
பானல்வா யொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்."
(சம்பந்தர். திருவாலவாய்ப் பதிகம்)
என்று கூறுவாரா? ஆகவே சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவது உண்மைக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமற்றதாகும். மதம் மாறிய பாண்டியன் நெடுமாறன் சம்பந்தரைவிட மூத்தவன் என்பதும் அப்போது அவனுக்கு வயது 25 அல்லது 30-க்குக் குறையாமலிருக்கும் என்பதும் விளங்குகிறது. இது நிற்க;
பாண்டியன் நெடுமாறன் கி.பி. 670-இல் அரசாளத் தொடங்கினான் என்று சாஸ்திரியார் கூறுகிறார்.[3] இந்தத் தேதியும் பொருத்தமாக இல்லை. ஏறக்குறைய 25ஆண்டுகளைக் கூட்டிக் கூறுகிறார். இது பொருத்தமற்றது என்பதைக் காட்டுவோம்.
வாதாபி நகரம் அழிக்கப்பட்ட கி. பி. 642-இல் சிறுத்தொண்டர் வாழ்ந்தவர். இதனைச் சாஸ்திரியாரும் ஒப்புக்கொள்கிறார். வாதாபிப் போர் முடிந்தவுடன் சிறுத்தொண்டர், சேனைத்தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு கணபதீச்சரத்தில் சைவத்தொண்டு செய்து வந்தார். அக்காலத்தில் அவருக்குச் சீராளன் என்னும் குழந்தை பிறந்தான். அக்குழந்தையின் ஐந்தாவது வயதில் ஞானசம்பந்தர் சிறுத்தொண்டர் இல்லஞ் சென்று சந்தித்தார். அப்போது ஞானசம்பந்தருக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கலாம். இவற்றைப் பெரிய புராணத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். வாதாபிப் போர் நிகழ்ந்த பத்து ஆண்டுகட்குப் பிறகு சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்ததாகக் கொள்ளலாம். அந்த ஆண்டு கி. பி. (642 + 10 =) 652 - ஆகும். இரண்டு ஆண்டுக்குப் பிறகு, உத்தேசம் கி. பி. 654-இல் சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கினார்.
உத்தேசம் கி.பி. 670-இல் பாண்டியன் நெடுமாறன் அரசாட்சியை ஏற்றுக்கொண்டான் என்று நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார். சம்பந்தர் பாண்டியனைச் சைவனாக்கியது உத்தேசம் கி. பி. 654-இல் என்று மேலே காட்டினோம். 670-இல் பட்டம் பெற்ற பாண்டியனை, 652-இல் எவ்வாறு சம்பந்தர் சைவனாக்கியிருக்க முடியும்? பாண்டியன் அரச பதவியிலிருந்தபோதுதான் சம்பந்தர் அவனைச் சைவனாக்கினார்; பட்டம் பெறுவதற்கு முன்பு அல்ல. சம்பந்தரோ 16-ஆண்டு மட்டும் உயிர்வாழ்ந்திருந்தவர். சம்பந்தர் தமது 12-ஆவது வயதில் கி. பி. 652- இல் சிறுத்தொண்டரைச் சந்தித்தார். 14-ஆவது வயதில் கி. பி.654-இல் பாண்டியனைச் சைவனாக்கினார். பிறகு தொண்டைநாட்டுக்குத் தலயாத்திரை சென்றார். தலயாத்திரை முடிய 11/2 அல்லது 2-ஆண்டு சென்றிருக்கும். பிறகு சீகாழிக்கு வந்தார். அப்போது இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. அஃதாவது 16-ஆவது வயதில் உத்தேசம் கி. பி. 656-இல் திருமணத்தின்போதே உலக வாழ்க்கையிலிருந்து மறைந்தார்.
சாஸ்திரியார் கூறுவதுபோல 670-இல் பாண்டியன் பட்டத்துக்கு வந்தான் என்றால், 656-இல் மறைந்த சம்பந்தர் எப்படிப் பாண்டியனை மதமாற்றியிருக்க முடியும்? ஆகவே, சாஸ்திரியார் பாண்டியன் நெடுமாறனுக்கு அமைத்த ஆட்சி ஆண்டு தவறாகிறது. நெடுமாறன் ஆட்சிக்கு வந்த ஆண்டு உத்தேசம் கி. பி. 652-க்கு முன்னதாக இருக்கவேண்டும் என்று விளங்குகிறது.
(ஞானசம்பந்தர் கி. பி. 656-இல் மறைந்தார் என்று கூறினோம். இவருக்கு முன்னரே இவருடைய நண்பர்களாகிய சிறுத்தொண்டரும் திருநாவுக்கரசரும் உலகத்திலிருந்து மறைந்தார்கள். எப்படி என்றால், ஞானசம்பந்தர் திருமணத்திற்கு அவருடைய நண்பர்களான நாயன்மார்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால் சிறுத்தொண்ட நாயனாரும் திருநாவுக்கரசு நாயனாரும் வரவில்லை. வாராத காரணம் இவ்விருவரும், திருமணத்திற்கு முன்னரே சிவபதவியடைந்ததுதான். இவ்விரு நாயன்மாரும் உத்தேசம் கி. பி. 655-இல் மறைந்தவராதல் வேண்டும்.)
எனவே, எல்லோரும் ஒப்புக்கொண்டதும் சந்தேகத்துக்கு இடமில்லாததும் ஆன வாதாபி அழிந்த கி. பி. 642-ஐ அடிப்படையாகக் கொண்டு, அப்போரில் சம்பந்தப்பட்ட சிறுத்தொண்டர் அவருக்கு நண்பரான ஞானசம்பந்தர், சம்பந்தரால் சைவனாக்கப்பட்ட நெடுமாறன் இவர்களின் காலத்தை ஆராய்ந்து பார்த்தால், பாண்டியன் நெடுமாறன் அரசாட்சிக்கு வந்தது கி. பி. 652-க்கு முன்னதாக வேண்டும் என்பது திட்டமாகத் தெரிகிறது. ஆகவே சாஸ்திரியார் கி. பி. 670-இல் நெடுமாறன் ஆளத்தொடங்கினான் என்பது தவறாகிறது.
சம்பந்தர் - சிறுத்தொண்டர்-நெடுமாறன் இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வளவு முரண்பாடான குழப்பங்களைத் தமது நூலில் எழுதிவைத்த சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார், இன்னொரு தவறையும் செய்து வைத்தார். தமது "பாண்டிய இராச்சியம்" என்னும் நூலில், இரண்டு வெவ்வேறு அரசர்களை ஒருவராகப் பிணைத்துக் கூறுகிறார். வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படுகிற அரிகேசரி மாறவர்மனையும் (இவனே கூன் பாண்டியன்), சின்னமனூர் பெரிய சாசனம் கூறுகிற அரிகேசரி பராங்குசனையும் வெவ்வேறு அரசராகக் கொள்ள வேண்டியிருக்க, சாஸ்திரியார் இருவரையும் ஒரே அரசனாகக் கொண்டார். அரிகேசரி மாறவர்மனும் அரிகேசரி பராங்குசனும் முறையே பாட்டனும் பேரனும் ஆவார்கள். சாஸ்திரியார் இருவரையும் ஒருவனாக இணைக்கிறார். ராவ்பகதூர் H. கிருஷ்ண சாஸ்திரியும்,[4] ழூவோ தூப்ராய் அவர்களும்[5] இந்த இரண்டு அரசர்களையும் பாட்டனும் பேரனும் ஆகக்கொண்டு ஆராய்கிறார்கள். இதுவே சரியாகும்.
கூன்பாண்டியனாகிய அரிகேசரி நெடுமாறன் காலத்தை சாஸ்திரியார் கி. பி. 670 - முதல் 710 - வரையில் என்று கணக்கிடுகிறார். இது தவறு என்பதை மேலே காட்டினோம். பாட்டனையும் பேரனையும் ஒரே ஆளாகக் கருதிக்கொண்டு அதன்படி கணக்குப்போட்டதனால் ஏற்பட்ட தவறே இது. பாட்டனையும் பேரனையும் வெவ்வேறு அரசராகக் கொண்டு காலத்தைக் கணக்கிட்டால் கூன்பாண்டியனுடைய காலம் கி.பி.650-முதல் 675- வரையில் என்பது ஆகும். வாதாபி கொண்ட கி.பி. 642-ஐ ஆதாரமாகக்கொண்டு மேலே நாம் ஆராய்ந்துகண்ட முடிவும் இந்தக் காலத்தை ஒத்திருக்கிறது. பாண்டியன் நெடுமாறன் கி.பி. 650-இல் முடிசூடினான் என்பதைவிட கி. பி. 645-இல் முடிசூடினான் என்று கொள்வதே பொருத்தமானது.கிருஷ்ண சாஸ்திரி, ழுவோ தூப்ராய் பட்டியல்
வேள்விக் குடி செப்பேடு
1. கடுங்கோன்
│
2. மாறவர்மன் அவனி
சூளாமணி
│
3. செழியன் சேந்தன்
│
4. அரிகேசரி மாறவர்மன்
(கூன்பாண்டியன்)
│
5. கோச்சடையன்
│
6. தேர்மாறன்
இராஜசிம்மன் - |
│
7. ஜடிலன் பராந்தகன்
சின்னமனூர் பெரிய செப்பேடு
1. அரிகேசரி பராங்குசன்
│
2. ஜடிலன்
│
3. இராஜசிம்மன் - II
│
4. வரகுணமகாராசன் - I
│
5. மாறன். ஏகவீரன்.
ஸ்ரீவல்லபன்.
பரசக்கரகோலாகலன்
│———————————│
வரகுணன் - || பராந்தக
வீரநாராயணன்
சடையன்
|
இராஜசிம்மன் - III
நீலகண்ட சாஸ்திரி பட்டியல் வேள்விக் குடி செப்பேடு
1. கடுங்கோன்
│
2. மாறவர்மன் அவனி
சூளாமணி
│
3. சேந்தன்
│
4. அரிகேசரி மாறவர்மன்
│
5. கோச்சடையன்
│
6. மாறவர்மன்
ராஜசிம்மன் - I
│
7. ஜடில பராந்தகன்
சின்னமனூர் பெரிய செப்பேடு
1. அரிகேசரி பராங்குசன்
│
2. ஜடிலன்
│
3. ராஜசிம்மன்
│
4. வரகுணமகாராசன்
│
5. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன்
│———————————│
6. வரகுணவர்மன் 7. பராந்தகன் வீரநாராயணன்
│
மாறவர்மன் இராஜசிம்மன் - II
பாண்டிய அரசர் பரம்பரையை, வேள்விக்குடி சாசனம் சின்னமனூர்ச் செப்பேட்டுச் சாசனம் இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு ராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரியாரும், ழூவோ தூப்ராய் அவர்களும், K.A. நீலகண்ட சாஸ்திரியும் முறைப்படுத்திய பட்டியலைக் மேலே காணலாம். நீலகண்ட சாஸ்திரி. பட்டியலில் இரண்டு ராஜசிம்மர் மட்டும் காணப்படுகின்றனர். மற்றப்பட்டியலில் மூன்று இராஜசிம்மர்கள் காணப்படுகின்றனர்.