மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/002-052
1. கொங்கு நாட்டு வரலாறு
கொங்கு நாடு
கடைச் சங்க காலத்திலே, 1,800 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகம் ஆறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. அந்தப் பிரிவுகள், துளு நாடு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு, அருவா நாடு, கொங்கு நாடு என்பவை. இந்த ஆறு நாடுகளில் துளு நாடும் சேர நாடும் மேற்குக் கடற்கரையோரத்தில் இருந்தன. துளு நாடு இப்போது தென்கன்னடம் வட கன்னடம் என்று பெயர் பெற்று மைசூர் இராச்சியத்தோடு இணைந்திருக்கின்றது. சேர நாடு இப்போது கேரள நாடு என்று பெயர் பெற்று மலையாளம் பேசும் நாடாக மாறிப் போயிற்று. தமிழகத்தின் தென் கோடியில் பாண்டிநாடு மூன்று கடல்கள் சூழ்ந்த நாடாக இருந்தது. சோழ நாடும் அருவா நாடும் (தொண்டை நாடு) கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ளன. கொங்கு நாடு தமிழகத்தின் இடை நடுவே கடற்கரை இல்லாத உள்நாடாக அமைந்திருந்தது (முன்பக்கப்படம் காண்க).
கொங்கு நாடு இப்போது சேலம் வட்டம், கோயம்புத்தூர் வட்டங்களில் அடங்கியிருப்பதாகக் கூறுவர். பிற்காலத்திலே சுருங்கிப்போன கொங்கு நாட்டைத்தான் அதாவது கோயம்புத்தூர் சேலம் வட்டங்களைத்தான், இக்காலத்தில் கொங்கு நாடு என்று கூறுகின்றோம். ஆனால், சங்க காலத்திலிருந்த கொங்கு நாடு இப்போதுள்ள கொங்கு நாட்டைவிட மிகப் பெரியதாக இருந்தது. பிற்காலத்துச் செய்யுள்கள் கொங்கு நாட்டின் எல்லையைக் குறுக்கிக் கூறுகின்றன.
“வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்கு வெள்ளிப் பொருப்புக் குன்று - கிழக்குக்
கழித்தண்டலை சூழும் காவிரிசூழ் நாடா
குழித்தண் டலையளவே கொங்கு”
என்றும்;
“வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்குக்
குடக்குப் பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
களித்தண் டலைமேவும் காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண் டலையளவே கொங்கு”
என்றும் கூறுகின்றன பழம் பாடல்கள்.
கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் எல்லைகளை இவ்வாறு கூறுகிறது.
“மதிற்கரை கீட்டிசை தெற்குப் பழனி மதிகுடக்குக்
கதித்துள வெள்ளிமலை பெரும்பாலை கவின்வடக்கு
விதித்துள நான்கெல்லை சூழ வளமுற்றும் மேவிவிண்ணோர்
மதித்திட வாழ்வு தழைத்திடு நீள்கொங்கு மண்டலமே”
இவ்வாறு கூறுவன எல்லாம் பிற்காலத்து எல்லைகள். ஆனால், மிக முற்காலத்திலே, கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு பரந்து விரிவாக இருந்தது.
அதன் தெற்கு எல்லைக்கு அப்பால் பாண்டி நாடு இருந்தது. அதன் மேற்கு எல்லை, சையகிரி (மேற்குத் தொடர்ச்சி) மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேரநாடும் துளுநாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழநாடும் தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரியாறு (சீரங்கப்பட்டணம்) வரையில் இருந்தது. இவ்வாறு பழங்கொங்கு நாட்டின் பரப்பும் எல்லையும் மிகப் பெரியதாக இருந்தன.
இப்போது பாண்டி நாட்டுடன் இணைந்து இருக்கிற (மதுரை மாவட்டம் மதுரை வட்டாரத்தில் சேர்ந்திருக்கிற) வையாவி நாடு (பழனிமலை வட்டாரம்) அக்காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியாக இருந்தது. பழனிமலை சங்க காலத்தில் பொதினி என்று வழங்கப் பெற்றது. பொதினி பிற்காலத்தில் பழனியாயிற்று. கொங்கு நாட்டின் தென்கோடியாகிய வையாவி நாட்டை அக்காலத்தில் வையாவிக்கோ என்னும் அரச பரம்பரையார் அரசாண்டார்கள். சேர நாடு, துளுநாடுகளின் கிழக்கே, வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கிற சைய மலைகள் (மேற்குத் தோடர்ச்சி மலைகள்) கொங்கு நாட்டின் மேற்கு எல்லைகளாக அமைந்திருந்தன. யானைமலைப் பிரதேசம் கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. அது அக்காலத்தில் உம்பற்காடு என்று பெயர் பெற்றிருந்தது (உம்பல் - யானை) மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாலைக்காட்டுக் கணவாய், சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் இணைத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது. மற்ற இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைகள் உயரமாக அமைந்து இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்து இல்லாதபடி தடுத்துவிட்டன பாலைக் காட்டுக்கு அருகில் மலைகள் தாழ்ந்து கணவாயாக அமைந்து இருப்பதால் அது சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றது. இந்தக் கணவாய் வழியாகச் சேர அரசர் படையெடுத்து வந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்கள்.
இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சேர்ந்திருக்கிற கரூர் வட்டமும் வேறு சில பகுதிகளும் பழங்காலத்தில் கொங்கு நாட்டில் சேர்ந்திருந்தன. அக்காலத்தில் கருவூர், கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த அந்தப் பகுதிகள், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கும்பினியார் நாடு பிடித்து அரசாளத் தொடங்கிய பிற்காலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன.
பழங்கொங்கு நாட்டின் வடக்கெல்லை மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் நெடுந்தூரம் பரவியிருந்தது என்று கூறினோம். இக்காலத்தில் மைசூர் இராச்சியத்தின் தென்பகுதிகளாக இருக்கிற பல நாடுகள் அக்காலத்தில் வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. பேர்போன புன்னாடு, கப்பிணி ஆற்றங்கரை மேல் உள்ள கிட்டூரைத் (கட்டூர்) தலைநகரமாகக் கொண்டிருந்தது. அது சங்க காலத்தில் வட கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. எருமை ஊரை அக்காலத்தில் அரசாண்டவன் எருமையூரன் என்பவன். எருமை ஊர் பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது. (எருமை - மகிஷம். எருமையூர் - மைசூர். எருமை ஊர், மைசூர் என்றாகிப் பிற்காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் பெயராக அமைந்துவிட்டது.)
இப்போதைய மைசூர் நாட்டில் உள்ள ஹளேபீடு (ஹளே - பழைய, பீடு - வீடு) அக்காலத்தில் துவரை என்று வழங்கப்பட்டது. துவரை, இக்காலத்தில் துவார சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளது. இங்கு ஒரு பெரிய ஏரியும் அதற்கு அருகிலே உள்ள மலையடிவாரத்தில் அழிந்து போன நகரமும் உள்ளன. இந்த நகரம் சங்க நூல்களில் கூறப்படுகின்ற அரையம் என்னும் நகரமாக இருக்கக்கூடும். துவரையையும் அதற்கு அருகில் இருந்த அரையத்தையும் புலிகடிமால் என்னும் அரச பரம்பரை யரசாண்டது. மிகப் பிற்காலத்தில் மைசூரை யரசாண்ட ஹொய்சளர், பழைய புலிகடிமால் அரச பரம்பரையார் என்று தோன்றுகின்றனர். ஹொய்சள என்பது புலிகடிமால் என்பதன் மொழிப் பெயர்ப்பாகத் தெரிகின்றது.
கொங்கு நாட்டின் வடஎல்லை பழங்காலத்தில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மைசூர் நாட்டில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் இருந்தது என்று கூறுவது வெறும் கற்பனையன்று, சரித்திர உண்மையே. அக்காலத்தில் கன்னட நாடு (வடுகநாடு) வடக்கே வெகுதூரம் கோதாவரி ஆறு வரையில் பரவியிருந்தது. இப்போது மகாராட்டிர நாடாக இருக்கிற இடத்தின் தென்பகுதிகள் அக்காலத்தில் கன்னடம் பேசப்பட்ட கன்னட நாடாக இருந்தன. பிற்காலத்தில் மகாராட்டிரர், வடக்கே இருந்த கன்னட நாட்டில் புகுந்து குடியேறினார்கள். காலஞ்செல்லச்செல்ல அந்தப் பகுதி மகாராட்டிர நாடாக மாறிப் போயிற்று. இதன் காரணமாக, மகாராட்டிர பாஷையில் பல கன்னட மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.
இக்காலத்தில் உள்ள கன்னட (மைசூர்) நாட்டின் தென் பகுதிகள் அப்பழங் காலத்தில், தமிழ் நாடாக (வடகொங்கு நாட்டின் பகுதியாக) இருந்தன. வடக்கேயிருந்த கன்னட நாட்டில் மராட்டியர் புகுந்து குடியேறியபோது, கன்னடர் தெற்கே வடகொங்கு நாட்டு எல்லையில் புகுந்து குடியேறினார்கள். மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு வடக்கிலிருந்து வடக்கே கோதாவிரி ஆறு வரையில் பழங்காலத்தில் கன்னட நாடு பரவியிருந்தது என்று கூறுவதற்குக் கன்னட இலக்கண நூல் சான்று கூறுகின்றது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிருபதுங்க அரசன் (கி.பி. 850 இல்) இயற்றிய கவிராஜ மார்க்கம் என்னும் கன்னட இலக்கண நூலில், பழங் கன்னட நாட்டின் எல்லை கூறப்படுகின்றது. அதில் கன்னட நாட்டின் அக்காலத் தென் எல்லை மைசூரில் பாய்கிற காவிரி ஆறு என்று கூறப்படுகின்றது.
காவேரியிந்த மா கோதாவரி வரமிர்ப நாடதா கன்னட தொள்
பாவிஸித ஜனபதம் வஸுதாவளய விலீன விஸத விஷய விஸேஷம்
(கவிராஜ மார்க்கம் 1-36)
இதனால் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கன்னட நாட்டின் எல்லை காவிரி ஆறு (மைசூர் நாட்டில் பாயும் காவிரி ஆறு) என்று தெளிவாகத் தெரிகின்றது. 9 ஆம் நூற்றாண்டிலே இது கன்னட நாட்டின் தென் எல்லையாக இருந்தது என்றால் அதற்கு முற்பட்ட சங்க காலத்தில் (கி.பி. 200 க்கு முன்பு) பழைய கன்னட நாட்டின் தென் எல்லை காவிரி ஆற்றுக்கு வடக்கே இருந்திருக்கவேண்டுமென்பதில் ஐயம் என்ன? கன்னடர், தமிழகமாக இருந்த வடகொங்கு நாட்டில் வந்து பரவியதும், பிற்காலத்தில் அந்தப் பகுதிகள் கன்னட மொழியாக மாறிப்போனதும் பிற்காலத்தில் (கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு) ஏற்பட்டவையாகும். எனவே, நமது ஆராய்ச்சிக்குரிய கடைச் சங்க காலத்தில் கொங்கு நாடு, மைசூர் நாட்டுக் காவிரி ஆற்றுக்கு அப்பால் வடக்கே வெகுதூரம் பரவி யிருந்தது என்பதும் அந்த எல்லைக்குள் இருந்த புன்னாடு பகுதியும் கொங்கு நாட்டில் அடங்கியிருந்தது என்பதும் நன்கு தெரிகின்றன.
கொங்கு நாடு நெய்தல் நிலமில்லாத (கடற்கரையில்லாத) உள்நாடு என்று கூறினோம். அங்கு மலைகள் அதிகம். எனவே, அங்கே குறிஞ்சி நிலம் அதிகமாயிருந்தது. காடும் காட்டைச் சேர்ந்த முல்லை நிலங்களும் அதிகம். நெல்பயிரான மருத நிலங்களும் இருந்தன. கொங்கு நாட்டிலிருந்த ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றின் முழு விபரங்கள் சங்க நூல்களில் கிடைக்கவில்லை; சில பெயர்கள் மட்டும் தெரிகின்றன. நமக்குக் கிடைத்துள்ள வரையில், சங்க இலக்கியங்களில் கூறப்படுகின்ற கொங்கு நாட்டின் இடங்களைக் கீழே தருகிறோம்.
உம்பற் காடு (யானை மலைக்காடு)
இது கொங்கு நாட்டின் தென்மேற்கிலுள்ள யானை மலைப்பிரதேசம் (உம்பல் -யானை). இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி வட்டத்தை அடுத்திருக்கின்றது. யானை மலைகள் சராசரி 7, 000 அடி உயரமுள்ளவை. யானைமுடி மிக உயரமானது. அதன் உயரம் 8,837 அடி. இங்குள்ள காடுகளில் யானைகள் அதிகமாக இருந்தது பற்றி யானை மலைக்காடு (உம்பற் காடு) என்று பெயர் பெற்றது.
சேர நாட்டு அரசர் கொங்கு நாட்டைப் பிடிக்கத் தொடங்கினபோது முதல் முதலாக யானை மலைப்பிரதேசத்தைப் பிடித்தார்கள். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் உம்பற் காட்டை வென்று கைப்பற்றினான். இவன், ‘உம்பற்காட்டைத் தன்கோல் நிரீஇயினான்’என்று பதிற்றுப்பத்து மூன்றாம் பத்துப்பதிகங் கூறுகின்றது. அவனுடைய தமயனாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (செங்குட்டுவனுடைய தந்தை) தன்மீது 2 ஆம் பத்துப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்தான் (இரண்டாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு) சேரன் செங்குட்டுவன் தன்மீது ஐந்தாம் பத்துப் பாடிய பரணர்க்கு உம்பற்காட்டு வாரியை (வருவாயை)க் கொடுத்தான் (ஐந்தாம் பத்துப் பதிகம் அடிக்குறிப்பு). இதனால் யானை மலைப் பிரதேசங்களைச் சேர மன்னர் கைப்பற்றி இருந்தார்கள் என்பது தெரிகின்றது. உம்பற் காட்டில் பல ஊர்கள் அடங்கியிருந்தன.
ஓகந்தூர்
இது கொங்கு நாட்டிலிருந்த ஊர். இது இருந்த இடம் தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் இந்த ஊரைத் திருமால் கோயிலுக்குத் தானஞ் செய்தான் என்று பதிற்றுப்பத்து ஏழாம் பத்துப் பதிகங் கூறுகிறது.
கருவூர்
இது கொங்கு நாட்டில் மதிலரண் சூழ்ந்த ஊர். ஆன் பொருநை யாற்றின் கரைமேல் அமைந்திருந்தது. இது சேரரின் கொங்கு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது. சேரர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, தங்கள் சேர நாட்டுத் தலைநகரமான கருவூரின் பெயரையே இதற்கு இட்டனர் என்று தோன்றுகிறது. இதற்கு வஞ்சி என்றும் வேறு பெயர் உண்டு. இவ்வூரில் வேண்மாடம் என்னும் பெயருள்ள அரண்மனையை யமைத்துக்கொண்டு ‘இரும்பொறை யரசர்’ கொங்கு நாட்டை யரசாண்டனர். இப்போது இந்தக் கருவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர் வட்டத்தில் இருக்கிறது.
ஏறத்தாழ கி.பி. 150 இல் இருந்த தாலமி (ptolemy) என்பவர் தம்முடைய நூலில் இதைக் கரொவுர (Karoura) என்று கூறுகின்றார். இவ்வூர் உள்நாட்டில் இருந்தது என்றும் கேரொபொத்ரருக்கு (கேரள புத்திரர்க்கு) உரியது என்றும் கூறுகின்றார். இக்கருவூர் உள்நாட்டில் இருந்ததென்று கூறுகிறபடியால், கடற்கரைக்கு அருகில் இருந்த சேர நாட்டுக் கருவூர் அன்று என்பதும், கொங்குநாட்டுக் கருவூரைக் குறிக்கின்றது என்றும் தெரிகின்றன. மேலும், இக்கருவூரில் உரோம் தேசத்துப் பழங்காசுகள் கிடைத்திருப்பது இவ்வூரில் யவன வாணிகத் தொடர்பு இருந்ததைத் தெரிவிக்கின்றது.
சங்க காலத்தின் இறுதியில் கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரண்டு கருவூர்கள் இருந்தன. ஒன்று மேற்குக் கடற்கரையில் சேரரின் தலைநகரமாக இருந்த கருவூர். இன்னொன்று கொங்கு நாட்டில் இருந்த இந்தக் கருவூர். இவ்விரண்டு கருவூருக்கும் வஞ்சி என்று வேறு பெயரும் உண்டு. இரண்டு கருவூர்களையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், ஒரே கருவூர் இருந்ததாகக் கருதிக்கொண்டு, சேரர் தலைநகரமாகிய கருவூர் வஞ்சி, சேரநாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா என்று சென்ற தலைமுறையில் அறிஞர்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இது பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் இரு தரத்தாராலும் எழுதப்பட்டன. ஒரே காலத்தில் இரண்டு (கருவூர்) வஞ்சி மாநகர்கள், சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இருந்தன என்பதை அறியாதபடியால் இந்த ஆராய்ச்சி நடந்தது. கொங்கு நாட்டையாண்ட சேர அரசர் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் கருவூர் கொங்கு நாட்டின் தலைநகரமாக இருந்தது. இது ஒரு பெரிய வாணிக நகரமாகவும் இருந்தது. சங்கப் புலவர்களில் சிலர் இவ்வூரினராவர்.
கண்டிரம்
இப்பெயரையுடைய ஊர் கொங்கு நாட்டிலிருந்தது. அது எந்த இடத்திலிருந்தது என்பது தெரியவில்லை. கண்டிர நாட்டில் பெரிய மலையொன்று தோட்டிமலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டீரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவன் நள்ளி என்னும் பெயருடையவன். தோட்டிமலையையும் அதன் அரசனாகிய நள்ளியையும் வன்பரணர் கூறுகின்றார்.1
கண்டிர நாட்டின் சோலைகளிலே காந்தள் முதலிய மலர்கள் மலர்ந்தன என்று பரணரும் கபிலரும் கூறுகின்றனர் (அகம் 152: 15-17, 238: 14-18). நள்ளியின் கண்டிர நாட்டுக் காடுகளில் இடையர் பசு மந்தைகளை வளர்த்தனர் என்றும், அவ்வூர் நெய்க்குப் பேர் போனது என்றும் காக்கைபாடினியார் கூறுகிறார்.[1] கண்டிரத்துக் காட்டில் யானைகளும் இருந்தன. கண்டிர நாட்டில் நள்ளியின் பெயரால் நள்ளியூர் என்று ஓர் ஊர் இருந்ததைக் கொங்கு நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகின்றது.
கட்டி நாடு
கட்டி நாடு என்பது தமிழகத்தின் வடக்கேயிருந்தது. அது கொங்கு நாட்டைச் சேர்ந்தது. கட்டி நாட்டையாண்ட அரசர் பரம்பரையார் ‘கட்டியர்’, ‘கட்டி’ என்று பெயர் பெற்றிருந்தனர். கட்டி நாட்டின் வட எல்லை வடுக (கன்னட) நாட்டின் எல்லை வரையில் இருந்தது. கட்டி நாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம் (வேறு மொழி கன்னட மொழி) பேசும் தேசம் இருந்தது. கட்டி நாடு வடகொங்கு நாட்டில் இருந்தது. கட்டியரசு பரம்பரை விசயநகர அரசர் காலத்திலும் இருந்தது.
காமூர்
இதுவும் கொங்கு நாட்டிலிருந்த ஊர். இங்கு இடையர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவன் கழுவுள். கழுவுளின் காமூரில் பலமான கோட்டையிருந்தது. அது ஆழமான அகழியையும் உயரமான கோட்டை மதிலையுங் கொண்டிருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை காமூரை வென்று அதைத் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். பெருஞ்சேரலிரும்பொறை காமூரை முற்றுகையிட்டபோது வேளிர்கள் (சிற்றரசர்) அவனுக்கு உதவியாக இருந்தார்கள்.
குதிரைமலை
இது கொங்கு நாட்டிலிருந்த மலை. இதை ‘ஊராக் குதிரை’ என்று கூறுகிறார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் (ஊராக்குதிரை சவாரி செய்யமுடியாத குதிரை. அதாவது குதிரைமலை). ‘மைதவழ் உயர் சிமைக் குதிரைமலை’ என்று இம்மலையை ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார் (அகம் 143 : 13). குதிரை மலையையும்அதனைச் சார்ந்த நாட்டையும் பிட்டங்கொற்றன் அரசாண்டான். இம்மலையில் வாழ்ந்த குறவர்கள் மலைச்சாரலில் தினையரிசியைப் பயிர் செய்து அந்த அரிசியைக் காட்டுப் பசுவின் பாலில் சமைத்து உண்டார்கள் (புறம் 168: 1-14). குதிரைமலை, உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததென்று கருதுகின்றார்.
நன்றாமலை
இது கொங்கு நாட்டில் இருந்த மலை. இந்த மலையின் மேலிருந்து பார்ப்பவர்களுக்கு இதைச் சூழ்ந்துள்ள ஊர்கள் தெரிந்தன ஆகையால் இது ‘நாடுகாண் நெடுவரை’ என்று (பதிற்று. 9 ஆம் பத்து5:7) கூறப்படுகின்றது. “நாடுகாண் நெடுவரையென்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஓக்கமுடைய” மலை என்று இதற்குப் பழைய உரையாசிரியர் விளக்கம் கூறுகின்றார்.
செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் 7 ஆம் பத்துப் பாடியபோது அவருக்கு அவ்வரசன் இந்த மலைமேலிருந்து கண்ணிற் கண்ட நாடுகளைக் காட்டி அந்நாடுகளின் வருவாயை அவருக்குப் பரிசாக அளித்தான் என்று 7 ஆம் பத்து அடிக்குறிப்புக் கூறுகின்றது. “பாடிப் பெற்ற பரிசில், சிறுபுறமென நூறாயிரங் காணங்கொடுத்து நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாங் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்று அடிக்குறிப்புக் கூறுகின்றது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தர் காலத்தில் இவ்வூர் திருநணா என்று பெயர் வழங்கப்பட்டது.
விச்சி நாடு
சங்க காலத்துக் கொங்கு நாட்டிலே இருந்த ஊர்களில் விச்சி என்பதும் ஒன்று. பச்சைமலை என்று இப்போது பெயர் வழங்குகிற மலை அக்காலத்தில் விச்சிமலை என்று பெயர் பெற்றிருந்தது. சேலம், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் விச்சிமலை (பச்சைமலை) இருக்கின்றது. இந்த மலை ஏறக்குறைய 200 மைல் நீளம் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்துக்குமேல் ஏறத்தாழ 2000 அடி உயரம் உள்ளது. மலையின் மேலே வேங்கை, தேக்கு, கருங்காலி, சந்தனம், முதலிய மரங்கள் உள்ளன. விச்சி நாட்டு மலைப் பக்கங்களில் பலா மரங்கள் இருந்தன என்று கபிலர் கூறுகிறார் (புறம் 200 :1-2) விச்சி மலைமேல் ‘ஐந்தெயில்’ என்னும் கோட்டையிருந்தது. அது காட்டரண் உடையதாக இருந்தது. விச்சி நாட்டையரசாண்ட பரம்பரையாருக்கு விச்சிக்கோ என்று பெயர் இருந்தது. கொங்குச் சேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை வென்று விச்சி நாட்டைக் கைப்பற்றினான் என்று 9ஆம் பத்துப் பதிகங் கூறுகின்றது.
வெள்ளலூர்
கோயம்புத்தூருக்குத் தென்கிழக்கில் ஐந்து மைல் தூரத்தில் இவ்வூர் இருக்கின்றது. இங்குப் ‘பழங்காலத்துப் பாண்டு குழிகள்’ உள்ளன. இந்தப் பண்டவர் குழிகளிலிருந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. 1842ஆம் ஆண்டில் இவ்வூரில் பழங்காசுப் புதையல் ஒரு மண்பாண்டத்தில் கிடைத்தது. அப்புதையலில் 522 உரோம் தேசத்து நாணயங்கள் இருந்தன. அந்தக் காசுகளில் உரோமாபுரிச் சக்கரவர்த்திகளான அகஸ்தஸ், தைபீரியர், கலிகுல்லா, கிளாடியஸ் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை கி.பி. முதல் நூற்றாண்டில் வழங்கப்பட்ட காசுகள். இதிலிருந்து அக்காலத்தில் இந்த ஊரில் யவனருடன் வியாபாரத் தொடர்பு இருந்தது என்பது தெரிகின்றது.
வையாவி நாடு
இது கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. ஆவி நாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வைகாவூர் என்றும் வையாபுரி என்றும் பெயர் வழங்கப்பட்டது. இது இப்போது மதுரை மாவட்டத்து மதுரை தாலுகாவில் இருக்கின்றது. பழனி மலை வட்டாரம் பழைய வையாவி நாடாகும். வையாவி நாட்டின் தலைநகரம் பொதினி. ஆவி (வையாவி) நாட்டையாண்ட அரசர்‘வேள்ஆவிக்கோமான்’ என்று பெயர் பெற்றனர்.3 பொதினி என்னும் பெயர் இப்போது பழனி என்று மருவி வழங்குகிறது. வேள்ஆவி அரசர்கள் சேர அரசர் பரம்பரையில் பெண்கொடுத்து உறவு கொண்டார்கள். வையாவிக்கோப்பெரும்பேகனும் வேள் ஆவிக் கோமான் பதுமனும் இவ்வூரை ஆண்ட அரசர்கள். வையாவிக் கோப்பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார், நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இதனால் இவர்கள் சம காலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது. வேளாவிக்கோமான் பதுமனுடைய மகள் ஒருத்தியைக் குடக்கோ நெடுஞ்சேரலன் மணஞ் செய்திருந்தான் (4ஆம் பத்துப் பதிகம், 6ஆம் பத்துப் பதிகம்). இன்னொரு மகளைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் (குடக்கோ நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பி) மணஞ் செய்திருந்தான் (8ஆம் பத்துப் பதிகம்).
கொல்லி மலையும் கொல்லிக் கூற்றமும்
கொங்கு நாட்டுப் பேர்போன கொல்லிமலையைச் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. கொல்லிமலையை இந்தக் காலத்தில் சதுரகிரி என்று பெயர் கூறுகிறார்கள். பார்வைக்குச் சதுர வடிவமாக அமைந்திருப்பதனால் சதுரகிரி என்று பெயர் பெற்றது. கொல்லிமலை, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்திலும் நாமக்கல் வட்டத்திலும் அடங்கியிருக்கின்றது. ஏறக்குறைய 180 சதுர மைல் பரப்புள்ளது. கொல்லிமலைகள், கடல் மட்டத்துக்கு மேலே 00 அடி முதல் 4000 அடி வரையில் உயரம் உள்ளன. கொல்லி மலைகளில் வேட்டைக்காரன் மலை (ஆத்தூர் வட்டம்) உயரமானது; அது கடல் மட்டத்துக்கு மேலே 4663 அடி உயரமாக இருக்கிறது.
கொல்லிமலைகளில் ஊர்கள் உள்ளன. பல அருவிகளும் உள்ளன. மலையிலேயே தினை, வரகு, ஐவன நெல் முதலிய தானியங்கள் பயிரிடப்பட்டன. மலைகளில் மூங்கிற் புதர்களும், சந்தனம், கருங்காலி, தேக்கு முதலிய மரங்களும் வளர்ந்தன. அக்காலத்தில் தேக்கு மரம் இல்லை. பலா மரங்கள் இருந்தன.4கொல்லிமலைத் தேன் பேர் போனது.
பிற்காலத்து நூலாகிய கொங்கு மண்டல சதகமும் கொல்லிமலையைக் கூறுகிறது.
“முத்தீட்டு வாரிதி சூழுல கத்தினின் மோகமுறத்
தொத்தீட்டு தேவர்க்கு மற்றுமுள்ளோர்க்குஞ் சுவைமதுரக்
கொத்தீட் டியபுதுப் பூத்தேனும் ஊறுங் குறிஞ்சியின் தேன்
வைத்தீட் டியகொல்லி மாமலை யுங்கொங்கு மண்டலமே”
கொங்கு நாட்டிலே மற்ற இடங்களில் கிடைத்தது போலவே கொல்லிமலையிலும் விலையுயர்ந்த மணிகளும் கிடைத்தனவாம்.5 கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் பேர் போன ‘கொல்லிப் பாவை’ என்னும் உருவம் அழகாக அமைந்திருந்ததாம். பெண் வடிவமாக அமைந்திருந்த அந்தப் பாவை தெய்வத்தினால் அமைக்கப் பட்டதென்று கூறப்படுகிறது.6 இயற்கையாக அமைந்திருந்த அழகான அந்தக் கொல்லிப் பாவை, காற்றடித்தாலும் மழை பெய்தாலும் இடியிடித்தாலும் பூகம்பம் உண்டானாலும் எதற்கும் அழியாததாக இருந்தது என்று பரணர் கூறுகிறார்.7
கொல்லி மலையில் கொல்லிப் பாவை இருந்ததைப் பிற்காலத்துக் கொங்கு மண்டல சதகமும் கூறுகிறது.
“தாணு முலகிற் கடன் முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருது மலர்ப்
பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை
வாணகை யாலுள் ளுருக்குவதுங் கொங்கு மண்டலமே”
இப்படிப்பட்ட கொல்லிப் பாவை இப்போது என்ன வாயிற்று என்பது தெரியவில்லை. இப்போதுள்ள பொய்ம்மான் கரடு போன்று கொல்லிப்பாவையும் உருவெளித் தோற்றமாக இருந்திருக்கக்கூடும்.
கொல்லிமலை வட்டாரம் ‘கொல்லிக்கூற்றம்’ என்று பெயர் பெற்றிருந்தது. சங்க காலத்தில் கொல்லிக் கூற்றத்தையும் கொல்லி மலைகளையும் ஓரி என்னும் அரச பரம்பரையார் ஆட்சி செய்து வந்தார்கள். கடை எழுவள்ளல்களில் ஓரியும் ஒருவன். ஓரி அரசருக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றத்தைப் பிற்காலத்தில் கொங்கு நாட்டுச் சேரர் கைப்பற்றிக் கொண்டு அரசாண்டனர். இந்த வரலாற்றை இந்நூலில் வேறு இடத்தில் காண்க.
திருச்செங்கோடு
கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மலை இது. செங்கோட்டு மலையில் நெடுவேளாகிய முருகனுக்குத் தொன்றுதொட்டுக் கோவில் உண்டு. அக்காலத்தில் முருகன் எழுந்தருளியிருந்த இடங்களில் செங்கோடும் ஒன்று என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்
(குன்றக் குரவை)
என்று கூறுவது காண்க. பழைய அரும்பதவுரையாசிரியர், ‘செங்கோடு - திருச்செங்கோடு’ என்று உரை எழுதியுள்ளார். மதுரையை விட்டு வெளிப்பட்ட கண்ணகியார் பதினான்கு நாள்களாக இரவும் பகலும் நடந்து சென்று “நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப், பூத்தவேங்கைப் பொங்கர்க்கீழ்”த் தங்கியபோது அவர் உயிர் பிரிந்தது என்று சிலப்பதிகாரம் (கட்டுரை காதை 190 -91) கூறுகிறது. அந்த நெடுவேள்குன்றம் என்பது திருச்செங்கோடுமலை என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார். மீண்டும் வாழ்த்துக் காதையில், கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டிய செய்யுளில்,
வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
என்னோடுந் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்
என்று கூறுகின்றார். இதற்கு உரை எழுதிய பழைய அரும்பத உரையாசிரியர் “வென்வேலான்குன்று - செங்கோடு. நான் குன்றில் வந்து விளையாடுவேன்; நீங்களும் அங்கே வாருங்களென்றாள்” என்று விளக்கங் கூறுகிறார்.
இதனால், அரும்பதவுரையாசிரியர் காலத்தில் கண்ணகியார் உயிர்விட்ட இடம் திருச்செங்கோடுமலை என்ற செவிவழிச் செய்தி இருந்தது என்பது தெரிகின்றது. கொங்குச் சேரரின்கீழ் இருந்த கொங்கிளங்கோசர், செங்குட்டுவன் சேர நாட்டில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்த பிறகு தாங்களும் கொங்கு நாட்டில் கண்ணகிக்கு விழாச் செய்தார்கள் என்று சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறுகின்றது. கொங்கிளங்கோசர் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததும் திருச்செங்கோட்டு மலையில் என்று தோன்றுகிறது.
பழைய அரும்பதவுரையாசிரியருக்குச் சில நூற்றாண்டுக்குப் பிறகு இருந்த அடியார்க்குநல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியர், கண்ணகியார் உயிர் நீத்த இடம் திருச்செங்கோடுமலை என்று அரும்பதவுரையாசிரியர் கூறியிருப்பதை மறுக்கிறார். சிலப்பதிகாரப் பதிகம் மூன்றாவது அடியில் வரும் ‘குன்றக்குறவர்’ என்பதற்கு உரை எழுதுகிற அவர் கண்ணகியார் உயிர்விட்ட இடம் சேர நாட்டில் உள்ள செங்குன்று என்றும், கொங்குநாட்டுத் திருச்செங்கோடு அன்று என்றுங் கூறுகிறார். அவர் எழுதுவது: “குன்றக்குறவர் ஏழனுருபுத் தொகை. குன்றம் கொடுங்கோளூருக்கு அயலதாகிய செங்குன்றென்னு மலை. அது திருச்செங்கோடென் பவாலெனின், அவரறியார். என்னை? அத்திருச்செங்கோடு வஞ்சிநகர்க்கு (சேரநாட்டு வஞ்சி நகர்க்கு) வடகீழ்த்திசைக் கண்ணதாய் அறுபதின் காதவாறு உண்டாகலானும் அரசனும் (செங்குட்டுவன்) உரிமையும் மலை காண்குவமென்று வந்து கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையினென்க.”
பழைய அரும்பதவுரையாசிரியர் கூறுவதையும் அடியார்க்குநல்லார் கூறுவதையும் ஆராய்வதற்கு இப்போது நாம் புகவில்லை. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு மலையில், கண்ணகியார் உயிர் நீத்தார் என்று பழைய செவிவழிச் செய்தி அரும்பதவுரையாசிரியர் காலத்தில் இருந்தது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. அரும்பதவுரையாசிரியர், திருச்செங்கோட்டில் கண்ணகியார் உயிர் நீத்தார் என்று கூறுதற்குக் காரணம் இருக்க வேண்டும். இல்லாமல் அவர் கூறியிருக்க மாட்டார்.
நன்றா மலை
இந்த மலையின் உச்சியிலிருந்து பார்ப்பவருக்கு இதனைச் சுற்றிலுமுள்ள ஊர்கள் நன்றாகத் தெரிந்தன. ஆனது பற்றி இது ‘நாடு காண் நெடுவரை’ என்று கூறப்பட்டது. “தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கில், கோடுபல விரிந்த நாடுகாண் நெடுவரை” (9ஆம் பத்து 5:7.) “நாடுகாண் நெடுவரை என்றது தன்மேல் ஏறி நாட்டைக் கண்டு இன்புறுவதற்கு ஏதுவாகிய ஒழுக்கமுடைய மலை என்றவாறு, இச்சிறப்பானே இதற்கு, நாடுகாண் நெடுவரை என்று பெயராயிற்று” என்று இதன் பழைய உரை கூறுகிறது.
செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் 7ஆம் பத்தைப் பாடிய கபிலருக்கு அவ்வரசன் இந்த நன்றாமலை மேலிருந்து பரிசில் வழங்கினான் என்று ஏழாம்பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகின்றது. “பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றாவென்னுங் குன்றேறி நின்றுதன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ” என்பது அந்த வாசகம்.
நன்றா என்னும் பெயர் பிற்காலத்தில் நணா என்று மாறி வழங்கிற்று. திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் திருநணா என்னும் திருப்பதியைப் பாடியுள்ளார். சுவாமி பெயர் சங்கமுக நாதேசுவரர், தேவியார் வேதமங்கையம்மை. பவானி ஆறு காவிரியாற்றுடன் சேருமிடமாகையால் இந்த இடம் பவானி கூடல் என்று பெயர் வழங்கப்படுகிறது. இப்போது ஊராட்சிமலை என்று பெயர் கூறப்படுவது நன்றாமலையாக இருக்குமோ? இது ஆராய்ச்சிக்குரியது.
படியூர்
கொங்கு நாட்டிலிருந்த படியூர் விலையுயர்ந்த மணிகளுக்குப் பேர் போனது. இப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவில் படியூர் இருக்கிறது. வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டில் விலையுயர்ந்த நீலக்கற்கள் கிடைத்தது போலவே படியூரிலும் நீலக்கற்கள் (Beryl) கிடைத்தன. சங்கச் செய்யுள்களில் படியூரைப் பற்றிக் காணப்படவில்லை. ஆனால், கொங்கு நாட்டில் விலையுயர்ந்த திருமணிகள் கிடைத்ததை அக்காலத்துப் புலவர்கள் கூறுகின்றனர். கொங்கு நாட்டில் உழவர் நிலத்தை உழுகிற போது சில சமயங்களில் திருமணிகள் கிடைத்தன என்று அரிசில் கிழார் கூறுகிறார். “கருவி வானம் தண்தளி சொரிந்தெனப் பல்விதை உழவில் சில்லேராளர் ... ... இலங்கு கதிர்த்திருமணி பெறூஉம், அகன்கண் வைப்பின் நாடுகிழவோயே” (பதிற்று. 8ஆம் பத்து 6: 10 - 15). இதற்குப் பழைய உரைகாரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “தண்டளி' (மழை) சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறூம் நாடெனக் கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக் கோடலேயன்றி உழுத இடங்கள் தோறும் ஒளியையுடைய திருமணிகளை எடுத்துக் கொள்ளு நாடெனவுரைக்க.” கபிலரும் கொங்கு நாட்டில் மணிக்கல் கிடைத்ததைக் கூறுகிறார். “வான் பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம், அகன் கண்வைப்பின் நாடுகிழ வோனே” (7 ஆம் பத்து 6:18 - 20). “திருமணி பெறுவார் அந்நாட்டாராகக் கொள்க” என்பது பழைய உரை.
பொதுவாகக் கொங்கு நாட்டில் திருமணிகள் கிடைத்ததைப் புலவர் கூறினாலும் சிறப்பாகப் படியூரில் கிடைத்ததை அவர்கள் கூறவில்லை. ஆனால் அக்காலத்து யவனர்கள் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து படியூரில் திருமணிகள் கிடைத்ததையும் அதை யவன வாணிகர் கப்பல்களில் வந்து வாங்கிக்கொண்டு போனதையும் அறிகிறோம். பிளைனி (Pliny) என்னும் யவனர் இச்செய்தியை எழுதியுள்ளார். இவர் படியூரை படொரஸ் (Paedoros) என்று கூறுகின்றார். படொரஸ் என்பது படியூரென்பதன் திரிபு. இச்சொல்லின் இறுதியில் அஸ் என்னும் விகுதியைச் சேர்த்திருக்கிறார். (படியூரைப்பற்றி Indian Antiquary Vol. V. p. 237 இல் காண்க). இந்தப் படியூர் மணிச் சுரங்கத்தைப் பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. மிகப் பிற்காலத்தில் கி.பி 1798 இல் இவ்வூர்வாசிகள் மறைவாக மணிக் கற்களை எடுத்தனர் என்று கூறப்படுகின்றது. இதை எப்படியோ அறிந்த ஒரு ஐரோப்பியன் கி. பி. 1819 - 20 இல் இந்தச் சுரங்கத்தை வாடகைக்கு எடுத்துத் தோண்டியதில் அந்த ஒரே ஆண்டில் 2196 மணிகள் (Beryls) கிடைத்தனவாம். அவை, 1201 பவுன் மதிப்புள்ளவையாம். பிறகு இந்தச் சுரங்கத்தில் நீர் சுரந்து அகழ முடியாமற் போய்விட்டது (Rice, EP. Car IV P.4).
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியிலும் நீலக்கற்கள் கிடைத்தன.
புகழியூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் என்னும் புகழியூர் இருக்கிறது. இவ்வூருக்கு இரண்டுக் கல் தொலைவிலுள்ள ஆறு நாட்டார் மலை என்னும் குன்றில் இயற்கையாயுள்ள குகையிலே கற் படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. பிராமி எழுத்து கி.பி. முதல் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவை. பிராமி எழுத்துச் சாசனங்களில் ஒன்று கடுங்கோ என்னும் இரும்பொறையரசன் இளங்கோவாக இருந்த காலத்தில் செங்காயபன் என்னும் முனிவர் இந்தக் குகையில் வசிப்பதற்காகக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. கோ ஆதன் சேரலிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் என்றும் அவனுடைய மகன் இளங்கடுங்கோ என்றும் இந்தக் கல்வெட்டெழுத்துக் கூறுகிறது. இங்கு வேறு சில பிராமிக் கல்வெட்டெழுத்துகளும் உள்ளன.
ஆறு நாட்டார் மலைக்கு ஏழுகல் தூரத்தில் அர்த்தநாரிபாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூர் வயல்களுக்கு இடையில் பெரிய கற்பாறை ஐவர் சுனை என்று பெயர் பெற்றிருக்கிறது. இங்கு ஒரு நீர் ஊற்றுச் சுனையும் ஐந்து கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தக் கற்படுக்கைகள் கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. இங்கு அக்காலத்தில் முனிவர்கள் தங்கித் தவம் செய்தனர் என்பது தெரிகிறது.
புன்னாடு
புன்னாடு, சங்க காலத்தில் வடகொங்கு நாட்டில் இருந்தது. இக்காலத்தில் இது மைசூர் இராச்சியத்தின் தெற்கில் ஹெக்கட தேவன தாலுகாவில் சேர்ந்திருக்கிறது. சங்க இலக்கியங்களிலே புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் கூறப்படுகின்றன. காவிரி ஆற்றின் உப நதியாகிய கபிணி ஆற்றைச் சூழ்ந்து புன்னாடு இருந்தது. கபிணி ஆறு கப்பிணி என்றும் கூறப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டாகிக் கிழக்குப் பக்கமாகப் பாய்ந்து (மைசூரில் நரசபூருக்கு அருகில்) காவிரியுடன் சேர்கிறது. பிற்காலத்தில் இது புன்னாடு ஆறாயிரம் என்று பெயர் பெற்றிருந்தது. சங்க காலத்தில் புன்னாட்டைச் சிற்றரசர் ஆண்டு வந்தனர். புன்னாட்டின் தலைநகரமான கட்டூர், கபிணி ஆற்றங்கரைமேல் அமைந்திருந்தது. பிற்காலத்தில் கட்டூர், கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது, இன்னும் பிற்காலத்தில் கித்திபுரம் என்றும் பிறகு கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது.
புன்னாட்டில் அந்தக் காலத்திலேயே ஒரு வகையான நீலக்கல் கிடைத்தது. அந்தக் கற்கள் புன்னாட்டுச் சுரங்கத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டன. நவரத்தினங்களில் ஒன்றான இந்தக் கல் அந்தக் காலத்தில் உலகத்திலேயே புன்னாட்டில் மட்டுந்தான் கிடைத்தது. அக்காலத்தில் பேர் பெற்றிருந்த உரோமாபுரி சாம்ராச்சியத்து மக்கள் இந்தக் கற்களை அதிகமாக விரும்பினார்கள். ஆகவே, தமிழ்நாட்டுக்கு வந்த யவன வாணிகர் இந்த நீலக் கற்களையும் பாண்டிநாட்டு முத்துக்களையும் சேரநாட்டு மிளகையும் வாங்கிக்கொண்டு போனார்கள். புன்னாட்டு நீலக்கற்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் ஒரு குறிப்பும் காணப்படவில்லை. ஆனால், மேல்நாட்டவரான தாலமி (Ptolemy) என்னும் யவனர் எழுதியுள்ள பூகோள நூலில் இதைப்பற்றிக் கூறியுள்ளார். ஸிடொஸ்தொமஸ் (Psedostomse) என்னும் இடத்துக்கும் பரிஸ் (Beris) என்னும் இடத்துக்கும் இடையே நீலக்கல் (Beryl) கிடைக்கிற பொவுன்னட (Pounnata) என்னும் ஊர் இருக்கிறது. என்று அவர் எழுதியுள்ளார். பொவுன்னட என்பது புன்னாடு என்பதன் கிரேக்க மொழித் திரிபு என்று அறிஞர்கள் கண்டுள்ளனர். (‘Mysore and Coorg from Inscriptions’, z. Rice, Indian Culture, III., pp. 10, 146; Roman Trade With Deccan', Dr. B.A. Saletore in Proceedings of the Deccan History Conference First Hyderabad Session, 1945 pp. 303 - 317). நீலக்கல் வாணிகத்தினால் புன்னாட்டாருக்குப் பெரும் வருவாய் கிடைத்தது.
புன்னாட்டையடுத்து அதற்கு மேற்கில் இருந்தது துளு நாடு. அக்காலத்தில் துளு நாட்டை யரசாண்ட நன்னன் என்னும் அரசன் புன்னாட்டைக் கைப்பற்றிக்கொள்ள எண்ணி அதன்மேல் போர் செய்ய எண்ணினான். புன்னாட்டின் நீலக்கல் வாணிகம் நன்னனைக் கவர்ந்த காரணத்தால் அந்த வாணிகத்தின் ஊதியத்தைத் தான் பெறுவதற்கு அவன் எண்ணினான் என்று தெரிகிறது. இச்செய்தி தெரிந்தவுடன், நன்னனுடைய பகையரசனான சேரநாட்டுக் களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்பவன் தன்னுடைய சேனைத் தலைவனாகிய வெளியன் வேண்மான் ஆய்எயினான் என்பவனைத் துளு நாட்டு நன்னனுக்கு எதிராகப் புன்னாட்டு அரசனுக்கு உதவிசெய்ய அனுப்பினான். ஆய் எயினன் புன்னாட்டு அரசனுக்கு உதவியாகச் சென்று, அவனை அஞ்ச வேண்டாம் என்று உறுதிமொழி கொடுத்ததோடு நன்னனுடைய துளு நாட்டின் மேல் படை எடுத்துச் சென்றான். நன்னனுடைய சேனாதிபதியான மிஞிலி என்பவன் பாழிப்பறந்தலை என்னும் இடத்தில் ஆய்எயினனுடன் போர் செய்தான். அந்தப் போரில் ஆய் எயினன் இறந்து போனான். “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென, யாழிசை மறுகிற் பாழியாங்கண், அஞ்சலென்ற ஆஅ யெயினன், இகலடு கற்பின் மிஞிலியொடு தாக்கித் தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது” (அகம் 396: 2-6). “வெளியன் வேண்மான் ஆஅயெயினன், அளியியல் வாழ்க்கைப் பாழிப்பறந்தலை, இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு, நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென” (அகம் 208:5 -9). பிறகு, சேர அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலுக்கும் நன்னனுக்கும் நடந்த போரில் நன்னன் தோற்றான். துளு நாடு, சேரன் ஆட்சிக்குக் கீழடங்கிற்று.
புன்னாட்டு அரசனும் கொங்கு நாட்டுச் சேரருக்குக் கீழடங்கினான். புன்னாட்டின் தலை நகரமான கட்டூரின் மேல், பெரும்பூண் சென்னி என்னும் சோழ அரசனுடைய சேனாதிபதி படையெடுத்துச் சென்றான். அந்தச் சேனாதிபதியின் பெயர் பழையன் என்பது. சோழ நாட்டுக் காவிரிக்கரையில் இருந்த போர் என்னும் ஊரில் பழையன் பரம்பரையார் சோழரின் படைத் தலைவராகப் பரம்பரை பரம்பரையாக இருந்தனர். (அகம் 326: 9 - 12). பழையன் கட்டூரின்மேல் படையெடுத்து வந்தபோது, கொங்குச் சேரனுக்குக் கீழடங்கியிருந்த நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்னும் சிற்றரசர்கள் பழையனுடன் போர் செய்து அவனைப் போர்க்களத்தில் கொன்றுவிட்டனர். இவ்வாறு சோழனுடைய கட்டூர்ப் படையெடுப்பு தோல்வியாக முடிந்தது. “நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி. பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென” (அகம் 44: 7 – 11). இதற்குப் பிறகு புன்னாட்டின் வரலாறு தெரியவில்லை.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரையில் புன்னாட்டு அரசர் பரம்பரை புன்னாட்டை யரசாண்டு வந்தனர். ஸ்கந்தவர்மன் என்னும் புன்னாட்டு அரசனுக்கு ஆண்மகன் இல்லாதபடியால் அவனுடைய ஒரே மகளைக் கங்க அரசனான அவனிதனுடைய மகனான துர்வினிதன் மணம் செய்து கொண்டான். துர்வினிதன் கி. பி. 482 முதல் 517 வரையில் கங்க நாட்டை யரசாண்டான். புன்னாட்டு அரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்ட இவன் புன்னாட்டைத் தன்னுடைய கங்க இராச்சியத்தோடு இணைத்துச் சேர்த்துக் கொண்டான் (Mysore from inscriptions by B. Leuies Rice. 1909). புன்னாட்டின் வரலாறு இவ்வாறு முடிவடைகிறது.
எருமையூர் (எருமை நாடு)
எருமையூரையும் அதனை யரசாண்ட எருமையூரனையும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. இது வட கொங்கு நாட்டின் வட எல்லையில் இருந்தது. “நாரரி நறவின் எருமையூரன்” என்றும் (அகம் 36 :17) “நேராவன்றோள் வடுகர் பெருமகன். பேரிசை எருமை நன்னாடு” என்றும் (அகம் 253 : 18 - 19) கூறுவது காண்க. எருமையூரன் குடநாட்டையும் (குடகு நாட்டை) அரசாண்டான் என்பது “நுண்பூண் எருமை குடநாடு” (அகம் 115: 5) என்பதனால் தெரிகின்றது (எருமை - எருமையூரன்).
எருமை நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தது. “நேரா வன்றோள் வடுகர் பெருமகன், பேரிசை எருமை நன்னாட் டுள்ளதை, அயிரி ஆறு” (அகம் 253: 18 - 20), “கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, அயிரை யாற்றடைகரை வயிரின் நரலும் காடு” (அகம் 177 : 10 - 11). இந்த அயிரி ஆறு, சேர நாட்டில் அயிரி மலையில் தோன்றுகிற அயிரி ஆறு (பெரியாறு) அன்று.
தலையாலங்கானம் என்னும் ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும் போர் செய்தபோது சோழ, சேரர்களுக்குத் துணையாக இருந்த ஐந்து வேள் அரசர்களில் எருமையூரனும் ஒருவன் (அகம் 36 :13 - 20). எருமையூரன் வடுகர் பெருமகன் என்று கூறப்படுகின்றான்.
ஹொய்சள அரசர் காலத்திலும் எருமை என்னும் பெயர் இவ்வூருக்கு வழங்கப்பட்டிருந்ததென்பதை அவ்வரசர்களுடைய சாசன எழுத்திலும் காண்கிறோம் (Erumai = Erumainadu of Tamil Literature and Erumainadu of the Hoysala Records, Epi. Car., X c. w. 20).
எருமையூர் என்னும் பெயர் பிற்காலத்தில் மைசூர் என்று வழங்கப்பட்டது. எருமை என்பதற்குச் சமஸ்கிருதச் சொல் மகிஷம் என்பது. எருமை ஊர் மகிஷஊர் என்றாகிப் பிறகு மைசூர் என்றாயிற்று. மைசூர் (எருமையூர்) என்னும் இவ்வூரின் பெயர் மிகமிகப் பிற்காலத்தில் கன்னட தேசம் முழுவதுக்கும் பெயராக மைசூர் என்று அமைந்துவிட்டது.
துவரை (துவார சமுத்திரம்)
இதுவும் இப்போதைய தெற்கு மைசூரில் இருக்கும் ஊர். இப்போது ஹளெபீடு என்று பெயர் பெற்று இருக்கிறது. (ஹெளெ பழைய, பீடு - வீடு. அதாவது, பழைய படைவீடு என்பது பொருள். படைவீடு - பாடிவீடு, பாசறை). இப்பொழுதும் துவரையில் துவாரசமுத்திரம் என்னும் பெரிய ஏரி இருக்கின்றது. இங்கு அரையம் என்னும் ஊரில் இருங்கோவேள் அரச பரம்பரையார் இருந்து அரசாண்டார்கள். அந்த அரையம் என்னும் நகரம் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு பிரிவாக இருந்தது. இருங்கோவேள் அரசர் புலிகடிமால் என்று பெயர்பெற்றிருந்தார். (இந்தப் புலிகடிமால் அரசராகிய இருங்கோவேள் அரசரின் சந்ததியார் பிற்காலத்தில் ஹொய்சளர் என்று புதுப்பெயர் பெற்றுச் சிறப்பாக அரசாண்டார்கள் என்று தோன்றுகின்றது.) பாரி வள்ளல் என்னும் அரசனுடைய பரம்பு நாட்டை மூவேந்தர் வென்றுகொண்ட பிறகு, பாரியின் மகளிராகிய அங்கவை, சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசனிடம் அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்துவிட்டான். (இச்செய்திகளையெல்லாம் புறம் 201, 202 இல் காண்க.) தலையாலங்கானத்தில் சேரனும் சோழனும் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போர் செய்தபோது சேர, சோழர்களுக்கு உதவியாக இருந்த ஐந்துவேள் அரசர்களில் இருங்கோவேளும் ஒருவன். “தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான்” (அகம் 36 : 18 - 19). இருங்கோவேளுடன் எருமையூரனும் அப்போரில் கலந்து கொண்டான்.
குறிப்பு : சங்கச் செய்யுளில் இவ்வளவு தெளிவான நல்ல சான்று இருந்துங்கூட, அதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், கிருஸ்து சகாப்தத்தின் தொடக்கக் காலத்தில் மைசூருக்கு எருமை நாடு என்று பெயர் இருந்ததில்லை என்று ஒரு சரித்திரக்காரர் எழுதுகிறார். பழைய கர்நாடகம்: துளுவ நாட்டு வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பாஸ்கர் ஆனந்த சாலிதொரெ என்பவர் இதுபற்றி இவ்வாறு எழுதுகிறார்: “எருமை நாட்டுக்கு மேற்கில் துளு நாடு இருந்தது என்று அகம் 294 ஆம் செய்யுள் கூறுகிறது. கிருஸ்து சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மைசூருக்கு அந்தப் பெயர் (எருமை நாடு என்னும் பெயர்) இருந்தது என்பதற்குச் சான்று இல்லை என்று கூறலாம். சங்க காலத்துப் புலவர்கள் கர்நாடக தேசத்தின் பழைய பெயர்களைக் கூறாத படியினாலே - உதாரணமாகக் கழபப்பு (இப்போதைய சந்திரகிரிமலை), புன்னாடு, குந்தளநாடு முதலியன - கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் மைசூர் (எருமைநாடு) மகிஷ மண்டலத்தைக் குறிக்கிறது என்னும் கருத்தை ஒதுக்கிவிடலாம். ஆகவே, அகம் 294 ஆம் செய்யுள் பழைய துளு நாட்டின் பழமையைத் தீர்மானிப்பதற்கு உதவவில்லை”8
இவ்வாறு இவர் நன்றாக ஆராயாமலும் விஷயத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமலும் எழுதுகின்றார். முதலில் இவர் மேற்கோள் காட்டுகிற அகம் 294 ஆம் செய்யுளில் துளு நாட்டைப் பற்றியோ எருமை நாட்டைப் பற்றியோ ஒன்றும் இல்லை. இவர் குறிப்பிட விரும்புவது அகம் 15ஆம் செய்யுள் என்று தோன்றுகிறது. இந்தச் செய்யுளில் துளு நாடு குறிப்பிடப்படுகிறது. கர்நாடக தேசத்தின் (கன்னட தேசத்தின்) பழைய ஊர்ப்பெயர்களைச் சங்க நூல்கள் கூறவில்லை என்று இவர் சுட்டிக்காட்டுகிறார். சங்கப் புலவர்கள் சந்தர்ப்பம் நேர்ந்த போது சில ஊர்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லா ஊர்ப்பெயர்களையும் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை. சாலித்தொரே அவர்கள் கூறுவது போல, புன்னாட்டின் பெயரைச் சங்கப் புலவர் கூறாமல் விடவில்லை. அந்தப் பெயரைக் கூறவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தபோது புன்னாட்டின் பெயரைக் கூறியிருக்கிறார்கள். சேரன் செங்குட்டுவனைப் பாடிய பரணர் என்னும் சங்ககாலப் புலவர், துளு நாட்டு அரசர் நன்னன் என்பவன் புன்னாட்டின் மேல் போர் செய்ததைக் கூறுகிறார் (அகம் 266:2). “பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென.” சாலிதொரே அவர்கள் இதையறியாமல், சங்கச் செய்யுளில் புன்னாட்டின் பெயர் சொல்லப்படவில்லை என்று கூறுவது பொய்யாகிறது. புன்னாடு, எருமைநாடு (மைசூர்), துளு நாடு முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படுவதைச் சாலித்தொரே அவர்கள் அறியாமல் தவறாக எழுதியுள்ளதைப் பிழையெனத் தள்ளுக.
பூழி நாடு
இது கொங்கு நாட்டைச் சேர்ந்தது அன்று. சேரநாட்டைச் சேர்ந்தது. இங்குத் தோண்டி, மாந்தை என்னும் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன. இத்துறைமுகங்கள் கொங்குச் சேரருக்கு உரியதாக இருந்தபடியால் இது பற்றி இங்குக் கூறுகிறோம். பூழி நாடு, சேர நாட்டுக்கும் துளு (கொங்கணம்) நாட்டுக்கும் இடையில் கடற்கரையோரமாக இருந்தது. பூழி என்றால் புழுதிமண் என்பது பொருள். பெரும்பாலும் புழுதி மண்ணாக இருந்தபடியால் இந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று பெயர் கூறப்பட்டது. பூழி நாடு கடற்கரையோரமாக அமைந்திருந்ததை அம் மூவனாரின் குறுந்தொகைச் செய்யுளினால் அறிகின்றோம்.
“யாரணங் குற்றனை கடலே; பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழைத் திரையலை
நள்ளென் கங்குலுங் கேட்டும்நின் குரலே.”
(குறுந். 163)
பூழி நாட்டின் கிழக்குப் பக்கத்தில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்குச் செருப்பு என்பது பெயர். அந்த மலையைச் சார்ந்து காடுகளும் முல்லை நிலங்களும் புல்வயல்களும் இருந்தன. அங்கு ஆடுமாடுகளை வளர்த்துக் கொண்டு ஆயர்கள் வாழ்ந்து வந்தனர். மலைக்காடுகளில் விலையுயர்ந்த கதிர்மணிகளும் கிடைத்தன.
முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பிக்
கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறூஉம்
மிதியல் செருப்பில் பூழியர் கோவே!
(3ஆம் பத்து 1:20 - 23)
(கோவலர் -ஆயர், இடையர். ஆபரப்பி - பசுக்களை மேயவிட்டு. கல் - மலை. மிதியல் செருப்பு - காலுக்கு அணியாத செருப்பு, அதாவது செருப்பு என்னும் மலை.)
“மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள்மேய லாரும்
மாரி எண்கின் மலைச் சுரம்.”
(நற். 192 :3.5)
(துரு -ஆடு மாடுகள். எண்கு - கரடி. சுரம் - காட்டுவழி)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பியாகிய பல்யானைச் செல்கழு குட்டுவன் (நார்முடிச் சேரலுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனுக்கும் சிற்றப்பன்), பூழியர்கோ (பூழி நாட்டின் அரசன்) என்று கூறப்படுகிறான் (3 ஆம் பத்து 1: 20 - 23). இவன் பூழி நாட்டையாண்டதோடு கொங்கு நாட்டின் சில ஊர்களை வென்றான். பூழி நாட்டை 25 ஆண்டு அரசாண்ட பிறகு இவன் அரசைத் துறந்து காட்டுக்குத் தவஞ் செய்யப் போய்விட்டான் (3 ஆம் பத்துப் பதிகம்).
ஆதிகாலம் முதல் சேரருக்கு உரியதாக இருந்த பூழி நாட்டை அதன் வடக்கிலிருந்த துளு நாட்டு நன்னன் கைப்பற்றிக் கொண்டான். அதனால், சேரர் தாங்கள் இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. சேர நாட்டையரசாண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நன்னனோடு போர் செய்து அவனை வென்று தனக்குக் கீழடக்கிக்கொண்டதோடு அவன் கைப்பற்றி யிருந்த பூழி நாட்டையும் மீட்டுக்கொண்டான்.
“ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பில்
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து. (4ஆம் பத்து, பதிகம்)
“குடா அது
இரும்பொன் வாகை பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன, வளம்.” (அகம். 199:18-23)
பூழி நாட்டுக்குக் கொங்கானம் என்று பெயர் இருந்ததென்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கே.ஜி.சேஷ ஐயர் முதலியோர் கூறுவது தவறு.9 கொங்காண நாட்டரசனாகிய நன்னன் பூழி நாட்டை வென்று சிலகாலம் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான். ஆனால், பூழி நாட்டுக்குக் கொங்காணம் என்று பெயர் இருந்ததில்லை.
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் பூழிநாட்டை மீட்டுக் கொண்டதையறிந்தோம். ஆனாலும், பூழிநாடு சேர அரசர்களுக்கு இல்லாமல் கொங்குச்சேரருக்கு உரியதாக இருந்து வந்தது. ஏனென்றால், உள்நாடாகிய கொங்கு நாட்டுக்குக் கடற்கரையும் துறைமுகமும் இல்லாதபடியால், கொங்கு நாட்டையரசாண்ட கொங்குச் சேரர்களுக்குத் துறைமுகப்பட்டினம் வேண்டியதாக இருந்தது. கொங்கு நாட்டையடுத்து மேற்கிலிருந்த பூழி நாட்டிலே தொண்டி, மாந்தை என்று இரண்டு துறைமுகப்பட்டினங்கள் இருந்தபடியால் இத்துறைமுகங்களையுடைய பூழி நாட்டைச் சேர அரசர், கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேர நாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத்துறைமுகங்களையும் பூழிநாட்டைச் சேர அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங்களையும் பூழி நாட்டைச் சேர அரசர் கொங்கு நாட்டுச் சேரர்களுக்குக் கொடுத்தனர். சேரர்களின் சேரநாட்டில் பேர்போன முசிறித் துறைமுகம் இருந்தபடியால் அவர்கள் இந்தத் துறைமுகங்களையும் பூழி நாட்டையும் கொங்குச் சேரர்களுக்குக் கொடுத்தார்கள் என்று தெரிகின்றது. பிறகு, பூழிநாடும் அதன் துறைமுகப் பட்டினங்களும் கொங்குச் சேரர்களிடம் இருந்தன.
கொங்கு நாட்டரசர்கள் பூழியர்கோ என்றும் பூழியர் மெய்ம்மறை என்றும் கூறப்பட்டனர். செல்வக்கடுங்கோ வாழியாதன்,
“ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர்மருப் பியானைச் செருமிகு நோன்றாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்” (புறம்.387-28-30)
என்று கூறப்படுகின்றான். அவனுடைய மகனான தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை ‘பூழியர் மெய்ம்மறை’ (8ஆம் பத்து 3: 13) என்று கூறப்படுகின்றான். அவனுக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை ‘பூழியர் கோவே’ என்றும் (9ஆம் பத்து 4:6) ‘பூழியர் மெய்ம்மறை’ என்றும் (9ஆம் பத்து 10:27) கூறப்படுகின்றான். இதனால் கொங்குச் சேரர் பூழி நாட்டையும் அதனைச் சேர்ந்த மாந்தை, தொண்டி என்னுந் துறைமுகப்பட்டினங்களையும் வைத்திருந்தனர் என்பது தெரிகின்றது.
பூழி நாடு மேற்குக் கடற்கரையோரத்தில் துளுநாட்டுக்குத் தெற்கிலும் சேரநாட்டுக்கு வடக்கிலும் அமைந்திருந்ததையறிந்தோம். இந்த நாட்டின் இயற்கை வளத்தையும் இங்கிருந்த தொண்டித் துறைமுகத்தையும் குறுங்கோழியூர்கிழார் கூறுகின்றார்.
“குலையிறைஞ்சிய கோள்தாழை,
அகல்வயல் மலைவேலி
நிவந்த மணல் வியன்கானல்
தெண்கழிமிசைத் தீப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந” (புறம். 17:9 - 13)
கடலை மேற்கு எல்லையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும் கொண்ட இந்த நாடு, தாழை (தென்னை) மரச்சோலைகளும் அகன்ற நெல் வயல்களும் கடற்கரை உப்புக்கழிகளும் உடையதாய், தொண்டித் துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது என்று இதனால் தெரிகின்றது.
மாந்தை
பூழி நாட்டில் மாந்தை என்னுந் துறைமுகப்பட்டினம் இருந்ததும், அது தொன்றுதொட்டுச் சேரருக்குரியதாக இருந்ததும் அறிந்தோம். துறைமுகப்பட்டினமாக இருந்தபடியால் அங்கு அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். அதனால், சேரர்களுக்குச் சுங்க வருவாய் கிடைத்தது. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார்.
“வலம்படு முரசிற் சேரல் ஆதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலந் தினத் துறந்த நிதியம்” (அகம். 127 : 3 -10)
மாந்தைப் பட்டினம் மரந்தை என்றுங் கூறப்பட்டது.
“குரங்குகளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை யன்ன என்நலம்” (அகம். 376 : 17 - 18)
எதுகை நோக்கி இவ்வாறு சில பதிப்புகளில் மரந்தை என்று கூறப்பட்டது. சில பதிப்புகளில் இது ‘மாந்தை’ என்றே பதிப்பிக்கப்பட்டுள்ளது.
“குட்டுவன் ... .. ... .. கடல்கெழு மாந்தை” (நற்.395:4-9)
என்றும், ‘குட்டுவன் மாந்தை’ (குறுந். 34:6) என்றும், ‘துறைகெழு மாந்தை’ (நற் 35: 7) என்றும் இது கூறப்படுகிறது. செல்வக்கடுங்கோ வாழியாதன், மாந்தரன் என்று கூறப்படுகின்றான். “பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரம், பொறையன் கடுங்கோப்பாடிச் சென்ற, குறையோர் கொள்கலம்போல” (அகம். 142 : 3-6.) அவனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறை ‘விறல்மாந்தரன் விறல் மருக’ என்று (9ஆம் பத்து 10 : 13) கூறப்படுகின்றான். இதனால், மாந்தைத் துறைமுகப்பட்டினம் செல்வக்கடுங்கோ வாழியாதன் காலத்திலிருந்து கொங்குநாட்டுத் துறைமுகமாக இருந்தது என்று தெரிகின்றது.
தொண்டி
சங்க காலத்தில் தமிழகத்தில் இரண்டு தொண்டித் துறைமுகப்பட்டினங்கள் இருந்தன. ஒன்று, கிழக்குக் கடற்கரையில் பாண்டியருக்கு உரியதாக இருந்தது. மற்றொன்று, மேற்குக் கடற்கரையில் பூழி நாட்டில் சேரருக்கும் பொறையருக்கும் உரியதாக இருந்தது. கொங்கு நாட்டையரசாண்ட பொறையர்களுக்குத் துறைமுகப்பட்டினம் இல்லாதபடியால், அவர்கள் தொண்டியைத் தங்களுடைய துறைமுகப்பட்டினமாகக் கொண்டிருந்தார்கள். சங்கச் செய்யுள்கள் தொண்டிப்பட்டினத்தைக் கூறுகின்றன. “வெண்கோட்டியானை விறல்போர்க் குட்டுவன், தெண்திரைப் பரப்பில் தொண்டி முன்துறை” (அகம். 290, 12 :18) என்றும், “திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை” என்றும் (குறுந். 128 : 2). “வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந” என்றும் (9ஆம் பத்து 4 :21), “திண் தேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (அகம் 60:7), “கல்லெண் புள்ளியன் கானலந் தொண்டி” என்றும் (நற். 195:5), “அகல் வயல், அரிநர் அரிந்தும் தருவநர்ப் பெற்றும், தண்சேறு தாய் மதனுடை நோன்றாள், கண்போல் நெய்தல் போர் விற்பூக்கும். திண்டேர்ப் பொறையன் தொண்டி” என்றும் (நற். 8: 5 - 9) இந்தப் பட்டினம் கூறப்படுகிறது.
தொண்டிப் பட்டினத்தைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது. கோட்டை வாயிலின் கதவில் மூவன் என்பவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தது என்று நற்றிணைச் செய்யுள் கூறுகிறது. “மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்தியகதவில், கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல், தெறலருந்தானைப் பொறையன்” (நற் 18: 2 -5). யவனர்கள் தொண்டியைத் ‘திண்டிஸ்’ (Tindis) என்று கூறினார்கள்.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. ‘இரும்பு புனைந்தியற்றாப் பெரும் பெயர் தோட்டி. அம்மலை காக்கும் அணி நெடுங்குன்றில், பளிங்கு வகுத்தன்ன தீநீர் நளிமலை நாடன் நள்ளி’ (புறம்: 150: 25-28) (கோட்டி - யானைப்பாகர் யானைகளை அடக்கி நடத்துகிற ஓர் ஆயுதம். இது இரும்பினால் செய்யப்படுவது. அந்தப் பெயரையுடைய இந்த மலை ‘இரும்பு புனைந்து இயற்றா தோட்டி’ எனப்பட்டது.
2. ‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி - கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் - ஆயர், இடையர்)
3. “முருகன் நன்பேர் நெடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி” (அகம். 1:3-4) “முழபுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி, பொன்னுடைய நெடுநகர்ப் பொதினி” (அகம். 61: 15-16).
4. “பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம். 208:22) “செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி.” (நற். 201:5)
5. “தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன், பன்மணிக் குவையெடும் விரைஇக் கொண்பெனச், சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை, ஓங்கிருங் கொல்லிப் பொருநன்” (புறம், 152: 28–31) “பகல்செலப், பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப், பெருமரங்கொன்ற கால்புகுவியன்புனத்து, எரிமருள் கதிர திருமணியிமைக்கும், வெல்போர்வானவன் கொல்லிக் குடவரை (அகம். 213: 111-5).
6. “கடவுள் எழுதிய பாவை”. (அகம் 62:15) “தெய்வம் எழுதிய வின்மான் பாவை” (நற். 185– 10)
7. “செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித் தெய்வங்காக்கும் தீதுநீர் நெடுங்கோட் அவ்வெள்ளருவிக் குடவரையகத்துக் கால் பொரு திடிப்பினும் கதமுறை கடுகினும், உருமுடன் நெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலங்கிளறினுந் திருநலவுருவின், மாயர் இயற்கைப் பாவை”. (நற்றினை. 201: 5-11).
8. (Ancient karnataka. Vol. I. History of Tuluva. Baskar. Anand Saletore 1936)
9. P. 33. Cera kings of the sangem period K.G. Sesha Aiyar 1937. “சங்க காலச் சிறப்புப் பெயர்கள்” பக்கம் 258, 335. “வேளிர் வரலாறு” பக்கம். 65.
- ↑ 2. ‘திண்தேர் நள்ளி கானத்து அண்டர் பல்லா பயந்த நெய்’ (குறும் 210: 1-2) (நள்ளி - கண்டிரக்கோ அரசன் பெயர், அண்டர் - ஆயர், இடையர்)