மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/005-052


4. அந்துவஞ்சேரல் இரும்பொறை

உதியஞ்சேரலுடைய தம்பி, அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன். அந்துவஞ்சேரல் இரும்பொறை உதியஞ்சேரலுடைய தாயாதித்தம்பி. இவன் தளராத ஊக்கத்தோடு போர் செய்து தென்கொங்கு நாட்டில் சில நாடுகளைக் கைப்பற்றினான். இதனால், “மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று கூறப்பட்டான் (7 ஆம் பத்துப் பதிகம்).

இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றினபோது இவனுக்கு உதவியாக இருந்தவன் இவனுடைய தமயன் மகனான பல் யானைச் செல்கெழு குட்டுவன். இதனை,

“மாகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்”

(3ஆம் பத்து 2: 15 -16) என்பதனால் அறிகிறோம். இவன் காலத்தில் கொங்கு நாட்டில் சேர இராச்சியத்தை அமைப்பதற்குக் கால் இடப்பட்டது என்று கருதலாம். கொங்கு நாட்டையரசாண்ட பொறையர் அரசர்களில் இவனே முதலானவன் என்று தோன்றுகிறான்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டுக் கருவூரை வென்று அதைத் தன்னுடைய தலைநகரமாக்கிக் கொண்டான். அங்கு வேண்மாடம் என்னும் அரண்மனையை அமைத்துக் கொண்டு அங்கிருந்து அரசாண்டான். அப்போது அவன் ‘சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். நரிவெரூஉத்தலையார் அவனை நேரில் கண்டு பாடினார் (புறம். 5). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று நின் உடம்பு பெறுவாயாகென, அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்ற நரிவெரூ உத்தலையார் பாடியது” என்று கூறுகிறது.

இந்தக் கொங்கு நாட்டுக் கருவூர் வேறு, சேரநாட்டுக் கடற்கரையிலிருந்த கருவூர் வேறு. அந்துவன் சேரல் இரும்பொறை இந்த ஊரை வென்றபோது இதற்குச் சேர நாட்டுத் தலைநகரமாகிய கருவூரின் பெயரையே சூட்டினான். சேர நாட்டுக் கருவூருக்கு வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது போலவே இந்தக் கொங்கு நாட்டுக் கருவூருக்கும் வஞ்சி என்று வேறு ஒரு பெயர் இருந்தது.1

கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கருவூர் வேண்மாடத்தில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவருடன் இருந்தபோது, சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி அவ்வூர் வழியாக யானை மேல் வந்தான். அது கண்ட பெருஞ்சேரல் இரும்பொறை, சோழன் தன்மேல் போருக்கு வருகின்றானோ என்று ஐயங்கொண்டான். அப்போது அருகிலிருந்த சோழ நாட்டுப் புலவரான உறையூர் முடமோசியார், சோழன் போருக்கு வரவில்லை என்று கூறி இவனுடைய ஐயத்தை நீக்கினான் (புறம். 13). இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து பாடியது” என்று கூறுகிறது.

அந்துவஞ் சேரல் இரும்பொறையும் கருவூர் ஒள்வாட் பெருஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே. இவர்கள் வெவ்வேறு அரசர் என்று கே.ஜி.சேஷ ஐயர் கருதுகிறார்.2 அவர் கருத்து தவறென்று தோன்றுகிறது.

அந்துவன் பொறையனுடைய அரசியின் பெயர் பொறையன் பெருந்தேவி என்பது. அவள் ஒருதந்தை என்பவனின் மகள். இவர்களுக்குப் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இதனை

“மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற்கு ஒரு தந்தை
யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ...
செல்வக் கடுங்கோ வாழியாதன்”

என்னும் 7ஆம் பத்துப் பதிகத்தினால் அறிகிறோம்.

(‘இதன் பதிகத்து ஒருதந்தை யென்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடைய பெயர்’ என்று பழைய உரை கூறுகிறது.) சேர அரசரின் இளையபரம்பரையைச் சேர்ந்த அந்துவன் பொறையன் கொங்கு இராச்சியத்தை அமைத்தான்.

அந்துவன் பொறையன், தன்னுடைய மகனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு ஆவிநாட்டுச் சிற்றரசனாகிய வேளாவிக் கோமான் மகளாகிய பதுமன்தேவி என்பவளைத் திருமணஞ் செய்வித்தான். அவனுடைய தாயாதித் தமயனாகிய உதியஞ்சேரலும் தன்னுடைய மகனாகிய (இமயவரம்பன்) நெடுஞ்சேரலாதனுக்கு மேற்படி வேளாவிக் கோமானின் இன்னொருமகளைத் திருமணஞ் செய்வித்திருந்தான். எனவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோ வாழியாதனும் மணஞ் செய்திருந்த மனைவியர் தமக்கை தங்கையர் என்பது தெரிகின்றது.

அந்துவன் பொறையனுக்கு அந்துவஞ்செள்ளை என்று ஒரு மகள் இருந்தாள் என்று திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஊகிக்கிறார்.3 இவர் கூற்றுக்குச் சான்று இல்லை; வெறும் ஊகமாகக் கூறுகிறார்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை, வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் செய்து இறந்துபோனான் என்று திரு. கே.ஜி சேஷையர் கருதுகிறார். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் அந்துவஞ் சேரலும் ஒருவரே என்று அவர் கருதுகிறார்.4 ஆனால், அந்துவஞ் சேரலும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்கு அவர் சான்று காட்டவில்லை. புறம் 62, 63 ஆம் செய்யுட்களின் அடிக்குறிப்புகள், “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்தாரைப் பாடியது” என்று கூறுகின்றன. அந்துவஞ் சேரலும் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் ஒருவரே என்பதற்குச் சான்று இல்லை. சேஷையா ஊகம் சரியன்று என்று தோன்றுகிறது.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. சங்க காலத்தில் இரண்டு கருவூர்கள் இருந்ததை யறியாமல், சென்ற தலைமுறையில் சில ஆராய்ச்சிக்காரர்கள் ‘கருவூர் சேர நாட்டிலிருந்ததா கொங்கு நாட்டிலிருந்ததா’ என்பது பற்றி வாதங்கள் நிகழ்த்திக் கட்டுரைகள் எழுதினார்கள். சங்ககாலத்தில் சேரநாட்டிலும் கொங்கு நாட்டிலும் வெவ்வேறு கருவூர்கள் இருந்ததை அவர்கள் அறியவில்லை.

2. (P. 36. Cera Kings of the Sangam period K.G. Sesha Aiyer. (1937).

3. (PP. 506, 507, A Comprehensive History of India, Edited by K.A. Nilakanta Sastri).

4. (P. 37, 51, Cera Kings of the Sangam Period).