மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/007-052

6. பெருஞ்சேரல் இரும்பொறை

செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பிறகு அவனுடைய மூத்த மகனான பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டையரசாண்டான். இவன், தன் இராச்சியத்தில் அடங்காமல் சுதந்தரமாக இருந்த கொங்கு அரசர்களை வென்று அவர்களின் நாடுகளைத் தன்னுடைய இராச்சியத் துடன் சேர்த்துக் கொண்டான். இவன் ‘கொடித் தேர்ப்பொறையன்’, ‘சினப்போர்ப் பொறையன்’, ‘பொலந்தேர் யானை இயல் தேர்ப் பொறையன்’ என்று கூறப்படுகிறான். இவன் ‘புண்ணுடை எறுழ்த் தோள்’ உடையவன். அதாவது, எப்பொழுதும் போர் செய்து அதனால் ஏற்பட்ட புண் ஆறாத வலிமையுடைய தோள்களையுடையவன். தகடூர் நாட்டை வென்றபடியால் இவன், ‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். இவன் வென்ற போர்களில் மூன்று போர்கள் முக்கியமானவை. அவை காமூர்ப் போர், கொல்லிப் போர், தகடூர்ப் போர் என்பவை.

காமூர்ப் போர்

கொங்கு நாட்டில் காமூர் என்னும் ஊர் இருந்தது. அதன் அரசன் கழுவுள் என்பவன். முல்லை நிலமாகிய காமூரில் இடையர்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களின் தலைவனாகிய கழுவுள், பெருஞ்சேரலிரும்பொறைக்கு அடங்காமல் சுதந்தரமாக அரசாண்டான். பெருஞ்சேரல் இரும்பொறை காமூரை வெல்ல எண்ணிக் காமூரின் மேல் போருக்குச் சென்றான். காமூர் பலமான கோட்டையுடையதாக ஆழமான அகழியையும் பலமான மதிற்சுவர்களையுங் கொண்டிருந்தது. பெருஞ்சேரல் இரும்பொறை கழுவுளுடன் போர்செய்து காமூரை வென்றான். கழுவுள் தோற்றுப் பெருஞ்சேரலுக்கு அடங்கினான்.1

காமூர்அரசனாகிய கழுவுள் எளிதில் பணியவில்லை. பெருஞ்சேரல் இரும்பொறைக்குச் சார்பாகப் பதினான்கு வேள் அரசர் போர் செய்து காமூரை வென்றனர். இந்த விபரத்தைப் பரணர் கூறுகிறார்.2 அந்தப் பதிநான்கு வேளிரின் பெயர்கள் தெரியவில்லை.

கொல்லிப் போர்

பெருஞ்சேரலிரும்பொறை செய்து வென்ற இன்னொரு பெரிய போர் கொல்லிப் போர். கொல்லி மலைகளும் கொல்லி நாடும் கொல்லிக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்தன. அதை ஓரி என்னும் அரசன் சுதந்தரமாக அரசாண்டு வந்தான். ஓரி, புலவர்களை ஆதரித்த வள்ளல். பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியுடன் போர் செய்து வென்று அந்த நாட்டைத் தன்னுடைய இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டான், இந்தப் போரின் விபரத்தைச் சங்கப் புலவர்களின் செய்யுள்களிலிருந்தும் அறிகிறோம்.

பெருஞ்சேரல் இரும்பொறை ஓரியின் கொல்லி நாட்டின் மேல் நேரே படையெடுத்துச் செல்லவில்லை. அவன், மலையமான் திருமுடிக்காரியைக் கொண்டு ஓரியை வென்று கொல்லி நாட்டைத் தன் இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டான். கோவலூர் மன்னர்களான மலையமான் அரச பரம்பரையினர் சேர, சோழ, பாண்டியர்களில் யாரேனும் விரும்பினால், அவர்களுக்குச் சேனாதிபதியாக இருந்து போர் செய்வது வழக்கம். மலையமான் திருமுடிக்காரி, பெருஞ்சேரல் இரும்பொறைக்காக ஓரியுடன் போர் செய்து அவனைப் போரில் கொன்று கொல்லி நாட்டைப் (கொல்லிக் கூற்றத்தை) பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். கபிலர், பரணர் முதலான புலவர்கள் இச்செய்தியைக் கூறுகின்றனர்.

ஓரியின் குதிரைக்கு ஓரி என்றும், காரியின் (மலையமான் திருமுடிக்காரியின்) குதிரைக்கு காரி என்றும் பெயர். இவ்விருவரும் தத்தம் குதிரை மேல் அமர்ந்து போர் செய்தனர் என்று இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுகிறார் (“காரிக் குதிரை காரியொடு மலைந்த, ஓரிக்குதிரை ஓரியும்” - சிறுபாண். 110- 111). இந்தப் போரில் ஓரி இறந்து போனான். வெற்றி பெற்ற காரி, ஓரியின் ஊரில் புகுந்தான்.3 கல்லாடனார் இதை இன்னும் தெளிவாக விளக்கிக் கூறுகிறார். முள்ளூர் மன்னனாகிய காரி ஓரியைப் போரில் கொன்று கொல்லி நாட்டை வென்று அதைச் சேரலனுக்குக் கொடுத்தான் என்று கூறுகிறார்.4 இங்குச் சேரலன் என்பவன் பெருஞ்சேரல் இரும்பொறையாவான்.

இப்போர் பரணரின் காலத்தில் நடந்தது. சேரன் செங்குட்டுவனை 5ஆம் பத்தில் பாடிய பரணர் இப்போர் நடந்த காலத்தில் இருந்தவர். அவர் ஓரியின் கொல்லியைப் பாடினார்.5 அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால், பரணர் காலத்திலேயே ஓரிக்குரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரலிரும் பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.

8ஆம் பத்துப் பதிகம், பெருஞ்சேரலிரும்பொறை ‘கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை’ போர்வென்றான் என்று கூறுகிறது. இதற்குப் பழைய உரை இவ்வாறு விளக்கங் கூறுகிறது: “இதன் பதிகத்துக் கொல்லிக் கூற்றமென்றது, கொல்லி மலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. நீர்கூர்மீமிசை யென்றது அந்நாட்டு நீர்மிக்க மலையின் உச்சியை.”

தகடூர்ப் போர்

கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றின பிறகு பெருஞ் சேரலிரும்பொறை தகடூர் அதிகமான்மேல் படையெடுத்துச் சென்று தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அப்பொழுது பாண்டியனும் சோழனும் அதிகமானுக்கு உதவியாகச் சேனைகளை யுதவினார்கள். தகடூர்ப் போர் நிலைச் செருவாகப் பல காலம் நடந்தது. பெருஞ்சேரலிரும்பொறைக்கு அவனைச் சார்ந்த சிற்றரசர் பலர் துணை நின்றார்கள். கொல்லி நாட்டை வென்ற மலையமான் திருமுடிக்காரி இந்தப் போரிலும் பெருஞ்சேரலிரும்பொறையின் பக்கம் இருந்து போர் செய்தான். தகடூர்க் கோட்டை பலம் பொருந்தியதாக இருந்தபடியாலும் அதன் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மகனான பொருட்டெழினியும் போரில் புறங்கொடா வீரர்களாக இருந்தபடியாலும் அதை எளிதில் வெல்ல முடியவில்லை. அதிகமானுடைய சேனைத்தலைவன் பெரும்பாக்கன் என்பவன். தகடூர்ப் போர்க்களத்தை நேரில் கண்ட புலவர்கள் அரிசில் கிழார், பொன்முடியார் முதலியவர்கள் கடைசியில் தகடூரைப் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். அந்த வெற்றியை அரிசில்கிழார் அவன்மேல் 8ஆம் பத்துப் பாடிச் சிறப்பித்தார்.6

தகடூர்ப் போரை பற்றித் தகடூர் யாத்திரை என்னும் நூல் இருந்தது. அது சென்ற 19ஆம் நூற்றாண்டில் மறைந்து விட்டது.7

பெருஞ்சேரலிரும்பொறை தன் ஆட்சிக் காலத்தில் சில நாடுகளைக் கைப்பற்றித் தன்னுடைய இராச்சியத்தைப் பெரிதாக்கினான். அவன் தன்னை 8ஆம் பத்தில் பாடிய அரிசில் கிழாரைத் தன்னுடைய அமைச்சராக்கினான் (8ஆம் பத்துப் பதிகச் செய்யுள்).

வெற்றிகளைப்பெற்ற பெருஞ்சேரலிரும்பொறை தன்னுடைய குலதெய்வமாகிய அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டு வணங்கினான். தான் வென்ற பகையரசரின் யானைகளுடைய தந்தங்களை அறுத்து அந்தத் தந்தங்களினால் கட்டில் (ஆசனம்) செய்து அதன்மேல் கொற்றவையை இருத்தித் தன்னுடைய வெற்றி வாளில் படிந்துள்ள இரத்தக் கறையைக் கழுவினான். இவ்வாறு வெற்றிவிழாக் கொண்டாடுவது அக்காலத்து வழக்கம். இச்செய்தியை இவனை 8ஆம் பத்தில் பாடியவரும் இவனுடைய அமைச்சருமாகிய அரிசில்கிழார் கூறுகிறார்.8

இவ்வரசன் தெய்வ பக்தியுள்ளவன் அறநெறியறிந்தவன். தன்னுடைய வயது சென்ற புரோகிதனுக்கு அறநெறி கூறி அவனைத் தவஞ் செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.9

பெருஞ்சேரலிரும்பொறைக்கு மக்கட் பேறில்லாமலிருந்து பிறகு இவனும் இவனுடைய அரசியும் நோன்பிருந்து விரதம் நோற்று வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றார்கள் என்று 8ஆம் பத்து 4ஆம் செய்யுள் கூறுகிறது.10 இதில், இவனுடைய மகன் பெயர் கூறப்படவில்லை. அவன் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை என்று கருதப்படுகிறான்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை பதினேழு ஆண்டு அரசாண்டான் என்று 8ஆம் பத்துப் பதிகக் குறிப்புக் கூறுகிறது. இவன் ஏறத்தாழ கி.பி. 137 முதல் 154 வரையில் அரசாண்டான் என்று கருதலாம். இவன், சேரன் செங்குட்டுவன் சேரநாட்டையரசாண்ட காலத்தில் இருந்தவன். அவனுடைய தாயாதித் தமயன் முறையினன். இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன். சேரன் செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்திலேயே பெருஞ்சேரலிரும்பொறை இறந்து போனான்.

பெருஞ்சேரல் இரும்பொறை, தன்மேல் 8ஆம் பத்துப் பாடிய அரிசில்கிழாருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தான். (அரிசில் கிழார் காண்க.) இவன், மோசிகீரனார் என்னும் புலவரைப் போற்றினான். அப் புலவர் இவனுடைய அரண்மனையில் சென்று இவனைக் கண்டார் கண்டபிறகு, அரண்மனையில் இருந்த முரசு வைக்கும் கட்டிலின் மேல் படுத்து உறங்கிவிட்டார். முரசு கட்டில் புனிதமாகக் கருதப்படுவது. அவர் அதன்மேல் படுத்து உறங்குவதைத் தற்செயலாகக் கண்ட அரசன், அரண்மனைச் சேவகர் இதனைக் கண்டால் புலவருக்குத் துன்பஞ் செய்வார்கள் என்று கருதி, அவ்வாறு நேரிடாதபடி தான் அவர் அருகில் நின்று கவரியினால் வீசிக்கொண்டிருந்தான். விழித்துக் கொண்ட புலவர், நடந்ததையறிந்து தம்முடைய செயலுக்குப் பெரிதும் வருந்தினார். அரசனுடைய பெருந்தன்மையைப் புகழ்ந்து பாடினார் (புறம் 50). அச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறை முரசுக்கட்டில் அறியாதேறிய மோசிகீரனாரைத் தவறு செய்யாது அவன் துயிலெழுந் துணையும் கவரி கொண்டு வீசியானைப் பாடியது” என்று கூறுகிறது.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. “குண்டுகண் அழிய குறுந்தண் ஞாயில், ஆரெயில் தோட்டி வௌவினை ஏறொடு, கன்றுடை யாயந்தரீ இப் புகல்சிறந்து, புலவுவில் இளையர் அங்கை விடுப்ப, மத்துக் கயிறாடா வைகற் பொழுது நினையூஉ, ஆன்பயன் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப், பதிபாழாக.” (8ஆம் பத்து 1: 12-18)

2. “வீயா விழுப்புகழ் விண்தோய் வியன்குடை, ஈரெழு வேளிர் இயைந்தொருங் கெறிந்த, கழுவுள் காழூர்.” (அகம். 135: 11-13).

3. “பழவிறல், ஓரிக்கொன்ற ஒரு பெருந் தெருவில், காரி புக்க நேரார் புலம்போல், கல்லென்றன்றால் ஊரே.” (நற். 330:4-7).

4. “முள்ளூர் மன்னன் கழல்தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரீக்கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி”. (அகம். 209: 12-15).

5. ‘ஓரி, பல்பழம் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகம். 208: 21-22) என்றும், ‘கைவண் ஓரிகானம்’ (புறம். 199: 3) என்றும், ‘வல்வில் ஓரி கானம்’ (நற். 6:9) என்றும், ‘மாரி வண்மகிழ் ஓரி கொல்லி’ (நற். 265:7) என்றும் கூறியுள்ளார். இவ்வாறு ஓரியின் கொல்லியைக் கூறின பரணர் இன்னொரு செய்யுளில் ‘வெள்வேல் களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி’ (அகம். 62: 12-13) என்று கூறுகிறார். அது பொறையனுக்கு (பெருஞ்சேரல் இரும்பொறைக்கு) உரியதென்று கூறுகிறார். இதனால் பரணர் காலத்திலே ஓரிக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உரியதாயிற்று என்பது தெரிகிறது.

6. “பல்பயன் நிலைஇய கடறுபடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம்பூரிந்து காக்கும், வில்பயில் இரும்பில் தகடூர் நூறி”. (8 ஆம் பத்து 8: 7-9) “பல்வேல் தானையதிக மானோடு, இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத், துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத், தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய, அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறை”. (8ஆம் பத்து, பதிகம்.) 6. “பல்பயன் நிலைஇய கடறுபடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம்பூரிந்து காக்கும், வில்பயில் இரும்பில் தகடூர் நூறி”. (8 ஆம் பத்து 8: 7-9) “பல்வேல் தானையதிக மானோடு, இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத், துகள்தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத், தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய, அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறை”. (8ஆம் பத்து, பதிகம்.)

7. (இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும்புத்தகத்தில் காண்க). 7. (இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும்புத்தகத்தில் காண்க).

8. “கொல் களிற்றியானை பெருத்தம் புல்லென, வில்குலையறுத்துக் கோலின் வாரா, வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்தவர், அரசுவா வழைப்பக் கோடறுத்தியற்றிய, அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபில், கடவுள் அயிரை.” (8ஆம் பத்து 9:10-18). 8. “கொல் களிற்றியானை பெருத்தம் புல்லென, வில்குலையறுத்துக் கோலின் வாரா, வெல்போர் வேந்தர் முரசு கண் போழ்ந்தவர், அரசுவா வழைப்பக் கோடறுத்தியற்றிய, அணங்குடை மரபிற் கட்டின் மேலிருந்து, தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து, நிறம்படு குருதி புறம்படின் அல்லது, மடையெதிர் கொள்ளா அஞ்சுவரு மரபில், கடவுள் அயிரை.” (8ஆம் பத்து 9:10-18).

9. “முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபாடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” (8ஆம் பத்து 4: 24: 28) “நரைமூதாள னென்றது புரோகிதனை”. பழைய உரை). தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பசும்பூட் பொறையன் என்றும் (அகம். 308: 4) பெரும்பூட் பொறையன் என்றும் (குறும். 89:4) சிறப்புப் பெயர் உண்டு. 9. “முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை. வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கென, வேறுபாடு நனந்தலை பெயரக், கூறினை பெருமநின் படிமை யானே” (8ஆம் பத்து 4: 24: 28) “நரைமூதாள னென்றது புரோகிதனை”. பழைய உரை). தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பசும்பூட் பொறையன் என்றும் (அகம். 308: 4) பெரும்பூட் பொறையன் என்றும் (குறும். 89:4) சிறப்புப் பெயர் உண்டு.

10. (‘சால்பும் செம்மையும் உளப்படப் பிறிவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வன் பெற்றனை’ (8ஆம் பத்து. 19-21). 10.(‘சால்பும் செம்மையும் உளப்படப் பிறிவும், காவற் கமைந்த அரசுதுறை போகிய, வீறுசால் புதல்வன் பெற்றனை’ (8ஆம் பத்து. 19-21).