மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/031-052

7. வற்கடம்

நரசிம்மவர்மன் காலத்தில் பல போர்கள் நடந்தன. சளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசி, பலமுறை பல்லவநாட்டில் படையெடுத்து வந்தான். அந்தப் போர்களில் அவனை எதிர்த்து நரசிம்மவர்மன் போராடி வெற்றிபெற்றான். அல்லாமலும், நரசிம்மவர்மன் புலிகேசியின் தலைநகரமான வாதாபிநகரைத் தாக்குவதற்குச் சேனையைத்திரட்டி அந் நகரத்தைத் தாக்கி வெற்றிபெற்றான். சளுக்கியருடன் நிகழ்ந்த போர்கள் அல்லாமல் சோழர், பாண்டியர், சேரர், களபரருடனும் போர்செய்து வென்றான் என்று கூறப்படுகிறான். போரினால் நாட்டிற்கு வறுமையும் துன்பமும் உண்டாகும். அடிக்கடி பல்லவநாட்டில் நடைபெற்ற போரின் காரணமாகப் பொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்க வேண்டும். அதனுடன் மழை பெய்யாமல் வற்கடமும் உண்டாயிற்று. இதனால், நாட்டில் விளைவு குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. நரசிம்மவர்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப்பற்றி, இவன் காலத்தில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தமது தேவாரங்களில் குறிப்பிடுகிறார்கள்.

“கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பூன்னெடுங் காலம் மழைதான் மறக்கினும் பஞ்சழண்டென்
றென்னோடும் சூளறும் அஞ்சல்நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்னெடுங் குன்றம் ஒன்றுண்டு கண்டீர்! இப்புகலிடத்தே”

என்றும்,

“தப்பில் வானம் தரணி கம்பிக்கி லென்
ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
செப்பமாஞ் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனாருளர்; அஞ்சுவ தென்னுக்கே!”

என்றும் திருநாவுக்கரசர், நாட்டில் அரசர்கள் சீறிப் போர் செய்ததையும் மழைபெய்யாமல் பஞ்சம் உண்டானதையும் குறிப்பிடுகிறார். திருஞானசம்பந்தர்,

“விலங்கலமர் புயல் மறந்து முன்சனிபுக்கு
        ஊன் சலிக்கும் காலந்தானும்
கலங்கலிலா மனப் பெருவண்மை யுடைய
        மெய்யர் வாழ் கழுமலமே.”

என்று, வானத்தில் கோள் மாறியபடியினால் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டதைக் குறிப்பாகக் கூறுகிறார்.

இவ்விரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணம், இவ் விருவரும் திருவீழிமிழலையில் தங்கியிருந்த போது வற்கடம் நேரிட்டதென்றும், அதற்காக நாயன்மார்கள் இருவரும் கவலைகொள்ள சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு நாள்தோறும் கொடுத்துவந்தார் என்றும், அக்காசைக் கொண்டு இருவரும் தத்தம் மடங்களில் நாள்தோறும் அடியார்களுக்கு அமுதளித்தார்கள் என்றும், பஞ்சம் நீங்கும் வரையில் சிவபெருமான் இவர்களுக்குப் பொற்காசு அளித்து வந்தார் என்றும் கூறுகிறது:

“சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து
        சிலநாட் சென்றதற் பின்
மாரிசுருங்கி வளம் பொன்னி நதியும்
        பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவருகி நிலவும்
        பலமன் னுயிர்க ளெலாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர்
        வறுமை பரந்ததால்.”

“வையம் எங்கும் வற்கடமாய்ச்
        செல்ல உலகோர் வருத்தழற
நையும் நாளில் பிள்ளையார்
        தமக்கும், நாவுக்கரசருக்கும்

கையில் மானும் மழுவுமுடன்
        காணக் கனவில் எழுந்தருளிச்
செய்ய சடையார் திருவீழி
        மிழலையுடையார் அருள்செய்வார்.”

“கால நிலைமை யால் உங்கள்
        கருத்தில் வாட்டமுறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்
        களிக்க அளிக்கின் றோம்என்று
கோலங் காண எழுந்தருளிக்
        குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு
        வைத்தார் மிழலை நாயனார்.”

“விண்ணின் றிழிந்த விமானத்தின்
        கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்டகையார்
        தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறுங்காசு
        படிவைத் தருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன்அமுது
        செய்தங் கிருந்தார் இருவர்களும்.”1

“மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி
        மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்குஞ் சிறப்பில்வரும் பூசை யரற்றா
        மிக்க பெரும் பசிஉலகில் விரவக்கண்டு
பண்ணமரும் மொழியுமையாள் முலையின் ஞானப்
        பாலறா வாயருடன் அரசும் பார்மேல்
நண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங்
        கவலைவருமோ என்று கருத்திற் கொண்டார்.”2

அப்போது சிவபெருமான் இவர்கள் கனவில் தோன்றி இவ்வாறு உரைத்தாராம்:

“உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த துய
        உறுபசிநோய் உமையடையா தெனினும் உம்பால்
நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மைவாட்டம்
        நீங்குதற்கு உத்தமமோர் காசு நீடும்
இலகுமணிப்பீடத்துக் குணக்கு மேற்கும்
        யாமளித்தோம் உமக்கிந்தக் காலந் தீர்ந்தால்
அலகில் புகதீர்! தவிர்வதாகும் என்றே
        அருள்புரிந்தார் திருவீழிமிழலை ஐயர்.”3

அடுத்தநாள் காலையில் கோவிலுக்குச் சென்றபோது இரண்டு பொற்காசுகள் பலிபீடத்தில் இருப்பதை இருவரும் கண்டார்கள். அக் காசைக்கொண்டு இருவரும் தத்தம் மடத்தில் சிவனடியார்களுக்கு அமுது ஊட்டுவித்தனர். இவ்வாறு பஞ்சம் நீங்கும் வரையில் நாள் தோறும் இவர்களுக்குப் பொற்காசு கிடைத்துவந்தது.

இந்த வற்கடமும் பஞ்சமும் கி. பி. 640-க்கு 650-க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

சம்பந்தரும் அப்பரும் குறிப்பிடுகிற பஞ்சம் இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்டது என்று சிலர் கூறுவர்.4 இவர்கள், அப்பரும் சம்பந்தரும் இராஜசிம்ம பல்வன் காலத்தில், கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார்கள். இராஜசிம்மன் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தையே இவர்கள் தமது தேவாரத்தில் குறிப்பிடுவதாக இவர்கள் கருதிக்கொண்டு, அப்பரும் சம்பந்தரும் இவ்வரசன் காலத்தில் கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் அப்பரும் சம்பந்தரும் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதனால் இவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. பஞ்சங்கள் பல காலங்களில் ஏற்படக்கூடும். இராஜசிம்மன் காலத்துப் பஞ்சத்தை இவர்கள் தேவாரத்தில் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஆகவே இவர்கள் இராஜசிம்மன் காலத்தவர் என்றும் முடிவுகட்டுவது, ஏனைய சான்றுகளுக்கு மாறுபட்ட கருத்தாகும். அக்காலத்தில் பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்ட தற்குக் காரணம் சில உண்டு. அடிக்கடி அரசர்கள் போர் செய்தபடியினாலே, பயிர்த்தொழில் கவனிக்கப்படாமல், குடியானவர் சேனையில் சேர்ந்திருக்கக்கூடும். போரினால், உணவுப் பொருள்கள்மக்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் சேனைகளுக்கு அதிகப்பகுதி செலவாயிருக்கும். மழை பெய்யாமலும் விளைச்சல் குன்றியிருக்கும். பௌத்தமதமும் சமண சமயமும் பெருகியிருந்த படியினாலே, இந்த மதங்களில் துறவிகள் அதிகமாக இருந்தபடியால், உணவுப் பண்டங்களை உண்டாக்கும் தொழிலில் ஆட்கள் குறைந்து உணவுப் பண்டங்கள் உற்பத்தி செய்ய முடியாமலிருக்கலாம். அதுபோல, பிராமணர்கள் உழவுத்தொழில் முதலிய முக்கியத் தொழில்களில் ஈடுபடாமல் இருந்தனர். வேறு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைக் கொண்டுவரப் போக்குவரவு சாதனங்கள் குறைவாகவும் தாமதமாகவும் இருந்தது. மற்றொரு காரணமாகும். போர்களினாலே நிலங்கள் அழிக்கப்பட்டதும் ஒரு காரணமாகும். இவ்வாறு பல காரணங்களினாலே அக் காலத்தில் பஞ்சம் உண்டாகியிருக்கக்கூடும்.

அடிக்குறிப்புகள்

1. திருநாவுக்கரசர்: 255, 256, 258.

2. திருஞானசம்பந்தர் புராணம் - 562.

3. திருஞானசம்: 564.

4. C. Minakshi: Administration and Social life under the Pallavas. PP. 117, 118., K.A.N. Sastri. Pandian Kingdom.