மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/036-052



இலங்கை வரலாறு

1. இராவணன் இலங்கை[1]

தமிழ்நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதிவந்தனர், வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென்இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதிவருகின்றனர் போலும். ‘தென் இலங்கை’ என்பதற்குத் தமிழ்நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென்இலங்கை என்பதற்கு, ‘அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை’ என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ்நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டுவருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம்பெற்றுவிட்டது.

சங்க நூல்கள் கூறுவன

தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். “வென்வேற் கவுரியர் தொன்முதுகோடி, முழங்கிரும் பௌவம் இரங்கு முன்றுறை, வெல்போரிராமன் அருமறைக் கவிந்த பல்வீழ் ஆலம்” (அகநானூறு, 70)

இராமேசுவரத்தைத் தொடர்ந்து இலங்கைத் தீவின் வடபுறம் வரையில் கடலில் காணப்படும் கற்பாறைகளைச் சேது அல்லது அணை என்றும், இவ்வணையை வானரப் படைகள் அமைத்தன என்றும் கதை வழங்கப்படுகிறது. ஆனால், குமரி முனையிலிருந்து இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். “குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை” என்று கூறியிருப்பது காண்க.

நச்சரின்கதை

பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சியில்,

“தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா ழருவிப் பொருபபிற் பொருந”

என வரும் அடிகட்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் பொருந்தாக் கதையொன்றைப் புனைந்துரைக்கிறார்:

“இராவணனைத் தமிழ்நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனா யிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே” என்று உரை எழுதுகிறார். தென்னாட்டை இராவணன் ஆண்டான் என்றும், அகத்தியர் அவனுடன் இசைப்போர் செய்து வெற்றிகொண்டு அவனைத் தமிழ்நாட்டிற்கு அப்புறம் துரத்திவிட்டார் என்றும் இவ்வுரையாசிரியரே தொல்காப்பிய உரையில் எழுதுகிறார். இவர் கொள்கைப்படி, இராவணன் முதலில் தென்னாட்டை (தமிழ்நாட்டை) அரசாண்டான் என்றும், பிறகு இலங்கைக்குப் போய்விட்டான் என்றும் கருத வேண்டியிருக்கிறது. ஆனால், இவர் கூற்றுக்கு இவர் சான்று காட்டினார் இல்லை. எனவே, இது பிற்காலத்தில் இட்டுக்கட்டி வழங்கப்பட்ட கட்டுக்கதை எனக் கருதவேண்டும்.

வால்மீகி கூறுவது

இராமாயணக் கதையே கட்டுக்கதை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இராமாயணம் கட்டுக்கதையாயினும் ஆகுக; அன்றி, உண்மையில் நடைபெற்ற கதையாயினும் ஆகுக. இராமாயணத்தை முதன்முதல் வடமொழியில் இயற்றிய வால்மீகி முனிவர் கூறுகிற இலங்கை, அயோத்தி, கிஷ்கிந்தை முதலிய இடங்களெல்லாம் இந்தியாவில் ஒவ்வோரிடத்தில் இருந்த நிலப்பகுதிகள் என்பது மட்டும் உண்மையே. இதில் சிறிதும் ஐயமில்லை. நமது ஆராய்ச்சிக்கு இராமாயணத்தை உண்மைக் கதை என்றே கொள்வோம். அங்ஙனமாயின், சிங்களத் தீவு இராவணன் ஆண்ட இலங்கையா என்பது கேள்வி. இவ்வாராய்ச்சிக்குக் கம்ப இராமாயணம், துளசி இராமாயணம் முதலிய இராமாயணங்கள் பயன்படா. வால்மீகி முனிவர் இயற்றிய வடமொழி இராமாயணம் மட்டுந்தான் பயன்படும். வால்மீகி முனிவர் இலங்கையைப் பற்றிக் கூறும் குறிப்புகள் இரண்டு உள. அவை:

1. இராவணனுடைய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இருந்தது.
2. சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன், சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் ஏற்றிக்கொண்டு, திரிகூடமலையைச் சூழ்ந்திருந்த ‘சாகரத்தை’க் கடந்து இலங்கைக்குச் சென்றான்.

சாகரம் என்பது கடலன்று

வால்மீகி முனிவர் கூறியுள்ள இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, இராவணன் ஆண்ட இலங்கை, சிங்களத் தீவாகிய இலங்கை அன்று என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம். என்னை? சிங்களத் தீவாகிய இலங்கை திரிகூடமலையின் உச்சியில் இல்லை; இது ஒரு தீவாக உள்ள கழுதைபூட்டிய வண்டியைச் செலுத்திக்கொண்டு போகக் கூடியபடி அவ்வளவு சிறிய கடல் (சாகரம்), அன்று சிங்கள் இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல். மலையின் உச்சியில் இருந்த ராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்த ‘சாகரம்’ உண்மையில் கடல் அன்று; ஏரிபோன்ற சிறிய நீர்நிலையாகும். கிருஷ்ணராஜ சாகரம், இராம சாகரம், இலக்ஷ்மண சாகரம் என்று பெயருள்ள ஏரிகள் சில இப்போதும் உள்ளன. அவைபோன்று சிறு நீர்நிலைதான் இராவணனுடைய இலங்கையைச் சூழ்ந்திருந்தது என்பது ஆராய்ச்சி வல்லார் துணிபு.

பரதமசிவ ஐயர் கூற்று

இராவணன் ஆண்ட இலங்கையானது, மத்திய இந்தியாவில் உள்ள இந்த்ரனா மலையுச்சியில் இருந்ததென்றும், இம்மலையைச் சூழ்ந்து மூன்று புறத்திலும் ஹிரான் என்னும் ஆறு பாய்கிறதென்றும், மாரிக்காலத்தில் இவ்வாறு பெருகி மலைமுழுவதும் (அகழிபோல்) சூழ்ந்து ஒருபெரிய ஏரிபோல ஆகிறதென்றும், இதுவே வால்மீகி முனிவர் தமது இராமாயணத்தில் கூறிய ‘சாகரம்’ என்றும், மற்றும் பல சான்றுகளைத் தேசப்படத்துடன் காட்டுகிறார் திரு. டி. பரமசிவ ஐயர் அவர்கள். இவர் ஆங்கிலத்தில் இயற்றியுள்ள “இராமாயணமும் இலங்கையும்” என்னும் நூல் காண்க. இந்த இடம் விந்திய மலையை அடுத்து இருந்ததென்று கூறுகிறார்.1

பந்தர்கரின் முடிவு

திரு. பந்தர்கர் என்பவர், தாம் எழுதிய “தண்ட காரண்யம்” என்னும் கட்டுரையில், மகாராட்டிர தேசந்தான் பண்டைக் காலத்தில் தண்டகாரண்யமாக இருந்தது என்றும், இலங்கை, கிஷ்கிந்தை முதலியன மத்திய இந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கில் இருந்தன என்றும் கூறுகின்றார்.2

ஹிராலால் ஆராய்ச்சி

திரு. ஹிராலால் என்பவர், தாம் எழுதிய “இராவணன் இலங்கை இருந்த இடம்” என்னும் கட்டுரையில் இச்செய்திகளைக் கூறுகிறார்: “விந்தியமலையைச் சார்ந்த மேகலா மலைத்தொடரின் அமரகண்ட சிகரத்தில் இராவணன் இலங்கை இருந்தது; கொண்டர், ஓரானர், சபரர் முதலிய குறிஞ்சிநில மக்கள் அவ்விடங்களில் வாழ்கின்றனர். இவர்களில் கொண்டர் தம்மை இராவண வமிசத்தினர் என்று கூறிக்கொள்வதோடு, 1891 இல் எடுத்த ஜனக்கணக்கில் தம்மை இராவணவம்சம் என்றே பதிவு செய்துள்ளனர். 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த இவர்களுடைய அரசன் ஒருவன், தனது பொன் நாணயத்தில், தன்னைப் ‘புலத்திய வமிசன்’ என்று பொறித்திருக்கிறான். இதனால், கொண்டர் இராவண குலம் என்று சொல்லிக்கொள்வது உறுதிப்படுகிறது. ஓரானர் என்னும் இனத்தவர் பண்டைய வானரர் இனத்தைச் சேர்ந்தவர். கொண்டர்களுக்கும் சபரர்களுக்கும் பகை இருந்தபடியால், சரபர் இராமன் பக்கம் சேர்ந்தனர். (இராமனுக்கு விருந்திட்ட சபரி என்பவள் சபரர் குலத்தைச் சேர்ந்தவள். இது அவள் இயற்பெயர் அன்று; குலப்பெயர்.) இராமன் இலங்கைக்குக் கடந்துசென்ற ‘சாகரம்’ கடல் அன்று; ஏரியாகும்.” இவ்வாறு இவர் தம்முடைய கட்டுரையில் கூறுகிறார்.3

கிபியின் கூற்று

திரு. கிபி என்பவர் தாம் எழுதிய “அமரகண்டக் மலையில் இருந்த இராவணனுடைய இலங்கைக்குச் சுற்றுப் புறத்திலிருந்த மக்கள்” என்னும் கட்டுரையில், இராவணனுடைய இலங்கை மத்திய இந்தியாவில் இருந்ததென்றும், அதற்கு அருகிலே தண்டகாரண்யம், சித்திரகூடம், அகத்திய ஆசிமரம், பஞ்சவடி, கிரௌஞ்சம், பம்பை, கிஷ்கிந்தை, அயோத்தி முதலியன இருந்தனவென்றும் தேசப்படத்துடன் விளக்குகிறார்.4

இராமதாசர் கூற்று

திரு. இராமதாஸ் என்பவர், இராவணன் இலங்கையும் அமர்தீபமும் ஒன்று என்றும், இது அமரகண்டக் மலையில் இருந்தது என்றும், நருமதை, மகாநதி என்னும் இரண்டு ஆறுகள் உண்டாகிற மேட்டுநிலப் பகுதியே இந்த இடம் என்றும் கூறுகிறார். அன்றியும், மத்திய இந்தியாவில் மத்திய மாகாணத்தில் உள்ள கூயி இனத்தார் ராவணன் மரபினர் என்றும், அமரகண்டக் மலைகள் உள்ள கொண்டவானா என்னும் இடத்தில் உள்ள கொண்டு, கூயி, கோய் என்னும் இனத்தார் இராவணன் மரபினர் என்றும் கூறுகிறார்.5

தீட்சிதர் கூற்று

திரு. தீட்சிதர் என்பவர், சிங்களத் தீவாகிய இலங்கையும் இராவணன் ஆண்ட இலங்கையும் வெவ்வேறு இடங்கள் என்று கூறுகிறார்.6

மிஷ்ரா கூறுவது

திரு. மிஷ்ரா என்பவர், இராவணன் இலங்கை, ஆந்திரதேசத்தில் கடற்கரையைச் சேர்ந்த ஓர் இடம் என்கிறார். 7

வதர் கூறுவது

திரு. வதர் என்பவர், இராவணன் இலங்கை பூமியின் மத்திய இடமாகிய உஷ்ணமண்டலத்தில் இருந்ததாகக் கூறுகிறார்.8

இலங்கைகள் பல

இதுகாறும் காட்டிய சான்றுகளால், சிங்களத் தீவாகிய இலங்கை, இராமாயணத்தில் கூறப்படும் இராவணன் ஆண்ட இலங்கை அன்று என்பதும், இரண்டும் வேறிடங்கள் என்பதும் விளங்குகின்றன. ஆனால், எக்காரணத்தினாலோ, சிங்களத் தீவை இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் தவறாகக் கருதிவருகிறார்கள். இந்தத் தவறான எண்ணம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இதற்குக் காரணம் இலங்கை என்னும் பெயர் ஒற்றுமையேயாகும். 'இலங்கை' என்னும் பெயருடைய ஊர்கள் பல உள்ளன என்பதைப் பலர் அறியார். இலங்கை என்னும் பெயருள்ள ஊர்களைக் கீழே தருகிறோம்.

கீழ்க்கோதாவரி மாவட்டம் சோடவரம் பிரிவில் பூசுலலங்கா, தேமுடு லங்கா என்னும் ஊர்களும், கிருஷ்ணா மாவட்டம் கைகலூரு தாலுகாவில் சொவ்வாட லங்கா என்னும் ஊரும் உள்ளன. தமிழ்நாட்டில், தென் ஆற்காடு, மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் மாவிலங்கை (கீழ் மாவிலங்கை, மேல்மாவிலங்கை) என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரைச் சங்க காலத்தில், ஓவியப் பெருமகன் நல்லியக்கோடன் என்னும் அரசன் ஆண்டான் என்பதைப் பத்துப்பாட்டுச் சிறுபாணாற்றுப்படையினால் அறிகிறோம்:

“தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
 நன்மா விலங்கை மன்ன ருள்ளும்
 மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள்
 உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்”

என்று வருதல் காண்க (சிறுபாண். அடி 119-122)

“பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
 இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்”

என்றும் (புறம். 176)

“நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
 வில்லி யாதன்”

என்றும் (புறம். 379) நன்னாகனார் என்னும் புலவர் தொண்டை நாட்டிலிருந்த இலங்கையைக் கூறுகிறார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில் கீழ்திருவிலங்கை என்னும் ஊரும், முதுகுளத்தூர் தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஊரும், பரமகுடி தாலுகாவில் மற்றொரு மாவிலங்கை என்னும் ஊரும் உள்ளன. செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளூர் தாலுகாவில் புதுமாவிலங்கை என்னும் ஊரும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும் உள்ளன. மேற்கூறிய இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, பரமகுடி தாலுகாவில் மாவிலங்கை என்னும் இனாம் கிராமமும், சிவகங்கை தாலுகாவில் மாவிலங்கை என்னும் ஜமீன்கிராமமும் திருவாடானை தாலுகாவில் மாவிலங்கை என்னும் பெயருள்ள ஜமீன், இனாம் ஆகிய இரண்டு கிராமங்களும் உள்ளன.

கேரள நாட்டில் பாதாள லங்கா என்னும் இடமும், தென் கன்னட மாவட்டமாகிய துளுநாட்டில் மூல்கி என்னும் ஊருக்கு அருகில் வளலங்கா என்னும் இடமும் இருந்தன என்று தெரிகின்றன. இவையாவும் இலங்கை என்னும் பெயரால் முடிவது காண்க. அன்றியும், ஆறுகள் கடலுடன் கலக்கிற இடத்தில் பல கிளைகளாகப் பிரிந்து ஏற்படுகிற டெல்ட்டா (Delta) என்று சொல்லப்படுகிற தீவுகளுக்கு ஆந்திர நாட்டில் லங்கா என்று பெயர் கூறப்படுகிறதென்று தெரிகிறது.

ஆகவே, இராவணன் ஆண்ட ஊர் ஒன்றுக்கு மட்டுந்தான் இலங்கை என்று பெயர் உண்டு என்று கருதுவது தவறு. பண்டைக் காலத்தில், இலங்கை என்னும் பெயருள்ள பல ஊர்கள் இருந்தன என்பதற்கு மேலே சான்றுகள் காட்டப்பட்டன.

முடிவுரை

எனவே, தமிழ்நாட்டுக்கு அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைக்கும் இராவணன் ஆண்ட இலங்கைக்கும் தொடர்பு இல்லை என்பதும், இத்தொடர்புடைய கதைகள் பிற்காலத்தில் கற்பிக்கப்பட்டவை என்பதும் தெளிவாகின்றன. இலங்கையின் புராதன நூலாகிய மகாவம்சம் என்னும் நூலில் இராவணன், இலங்கை என்னும் பெயர்களே கூறப்படவில்லை. இராவணன் ஆண்ட இலங்கை, இப்போது மராட்ட நாடு உள்ள பகுதியில், விந்தியமலையைச் சார்ந்த இடத்தில் இருந்தது என்பது ஆராய்ச்சியாளரின் முடிபு. அங்ஙனமாயின், மலையமலை, பாண்டியனுடைய கபாடபுரம் முதலியவை வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுகின்றனவே என்றால், இந்தச் சுலோகங்கள் இடைச் செருகல்களாகும். வடமொழியிலே இராமாயணத்திலும், பாரதத்திலும், வேறு நூல்களிலும் பல இடைச் செருகல் சுலோகங்கள் காலந்தோறும் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது.

அடிக்குறிப்புகள்

1. "Ramayana and Lanka" by T. Paramasiva Ayyar, Bangalore.

2. "Dandakaranya" by Dr. D.R. Bhandarkar, Jha Commemoration Volume.

3. The Situation of Ravana's Lanka" by Dr. Hiralal, Jha Commemoration Volume.

4. "Inhabitants of the Country around Ravana's Lanka in Amarakantak:" by M.V.

Kibe. A Volume of Eastern and Indian Studies, presented to Professor F.W.

Thomas. Edited by S.M. Katre and P.K. Gode.

 "Ravana:'s Lanka located in Central India" by Sardar M. V. Kibe. Indian Historical Quarterly. Vol. IV.

 "Cultural Descendants of Ravana" by M. V. Kibe, pages 264-266. A Volume of Studies in Indology.

5. "Ravana's Lanka" by G. Ramadas. The Indian Historical Quarterly, Vol. IV, Pages. 281; Vol. Vï pages. 284, 555.

6. "Ceylon and Lanka are Different" Quarterly Journal of Mythic Societyï Vol. XVIII.

7. "The Search for Lanka" by Mishra. Maha Kosala Historical Society's Paper, Vol. I.

8. "Situation of Ravana's Lanka on the Equator" by V.H. Vadar. Quart. Jour., Mythic Society, Vol. XVII.

  1. சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) என்ற நூலில் இடம்பெற்ற கட்டுரை.