மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/002

தோற்றுவாய்

கடைச்சங்க காலத்துக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை இன்னதென்று தெரியாமல் சரித்திரத்தில் ‘இருண்ட கால’மாக இருந்தது. கடைச்சங்க காலத்தின் முடிவு ஏறத்தாழ கி. பி. 250 என்று கருதப் படுகிறது. கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயர்கள் சங்கச் செய்யுட்களிலிருந்து கிடைக்கின்றன. சங்க நூல்களில் காணப்படுகிற கடைசி சேர அரசன் பெயர் கோக்கோதை மார்பன் என்பது. இவனைக் கோதை என்று கூறுவர். கோக்கோதை மார்பன், சேரன் செங்குட்டுவனுடைய மகன். இவன் சிறுவனாக இருந்தபோது இவனுக்குக் குட்டுவன் சேரல் என்று பெயர் இருந்தது. தன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப் பாடிய பரணருக்குச் செங்குட்டுவன் உம்பர்காடு என்னும் நாட்டின் வருவாயையும் தன்னுடைய மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகக் கொடுத்தான். (பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பு).

புலவராகிய பரணருக்குச் செங்குட்டுவன் தன்னுடைய மகனான குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் என்பதன் பொருள், புலவரிடத்தில் கல்வி கற்பதற்கு மாணாக்கனாகக் கொடுத்தான் என்பதாகும். இளமையில் குட்டுவன் சேரல் என்று பெயர் பெற்றிருந்த இவன் முடிசூடின பிறகு கோக்கோதை மார்பன் என்று பெயர் பெற்றான் என்று அறிகிறோம்.

கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டைச் சேர அரசர்களின் இளைய வழியினரான பொறையர் அரசாண்டார்கள். கொங்கு நாட்டை ஆ ண்ட கடைசிப் பொறையன் கணைக்கால் இரும்பொறை. இவன் கோக்கோதை மார்பனுடைய தாயாதி உறவினன். இருவரும் சம காலத்தில் இருந்தவர்கள். கணைக்காலிரும்பொறை, சோழன் செங்கணானோடு போர்செய்து தோற்றுப் போரில் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டான். பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் கொங்கு நாட்டையரசாண்டான். அதாவது, சோழன் செங்கணானுக்குக் கீழடங்கிக் கணைக்காலிரும்பொறை அரசாண்டான். ஆகவே, சோழன் செங்காணானும் சேரமான் கோக்கோதை மார்பனும் கணைக்கால் இரும் பொறையும் சமகாலத்தவர் என்று தெரிகின்றனர்.


களப்பிரர் ஆட்சியின் கீழ் அடங்கியிருந்த நாடுகள் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, துளுநாடு கொங்குநாடு, இரேணாடு, ஈழநாடு. தனித்திருந்த நாடு: பல்லவ நாடு

கடைச்சங்க காலத்தின் இறுதியில் பாண்டிய நாட்டையரசாண்டவன் நெடுஞ்செழியன். இந்த நெடுஞ்செழியன், கோவலன் கண்ணகி காலத்திலிருந்த நெடுஞ்செழியன் அல்லன். அவனுக்குப் பிறகு இருந்த நெடுஞ்செழியன். இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று வரலாறு கூறுகிறது. இந்த நெடுஞ்செழியன், சேர நாட்டுக் கடற்கரையோரத்தில் பேரியாற்றின் புகுமுகத்தில் இருந்த முசிறிப்பட்டினத்தை முற்றுகைசெய்து அங்கிருந்த ஒரு தெய்வத் திருமேனியை எடுத்துக்கொண்டு மதுரைக்குப் போனான் (அகநானூறு 57: 14-16; 11-14). இவனுடைய சமகாலத்திலிருந்த சேர அரசன் மேற்சொன்ன கோக்கோதை மார்பனே.

கோக்கோதை மார்பன், கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணான், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இவர்கள் கடைச்சங்க காலத்தின் இறுதியில் சமகாலத்தில் இருந்த அரசர்கள். இவர்களுக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் சேர, கொங்கு, சோழ, பாண்டிய நாடுகளை அரசாண்டார்கள். இவர்களுடைய பெயர்கள் தெரியவில்லை. இவர்கள் காலத்தில் அயல் நாட்டவர் வந்து இவர்களை வென்று தமிழகத்தைக் கைப்பற்றியரசாண்டார்கள். அவர்கள் களப்பிரர் என்று கூறப் பட்டார்கள். களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றியரசாண்ட வரலாறு மறைந்து போய் நெடுங்காலமாகப் பல நூற்றாண்டு வரையில் தெரியாமல் இருந்தது. கி. பி. 20ஆம் நூற்றாண்டு வரையில் மறைந்து போயிருந்த களப்பிர அரசரைப் பற்றின வரலாற்றுச் செய்தி, பாண்டியருடைய செப்பேடுகள் கிடைத்த பிறகு அவைகளிலிருந்து தெரியவந்தன. திரு. கே. ஜி. சங்கரன் அவர்கள், வட்டெழுத்தில் எழுதப்பட்ட வேள்விக்குடிச் செப்பேட்டை இக்காலத் தமிழ் எழுத்தில் செந்தமிழ்த் திங்களிதழில் வெளியிட்டார். (செந்தமிழ், 20 ஆம் தொகுதி, பக்கம் 205-216). அதன் பிறகு, இந்திய சாசன இலாகா 1923ஆம் ஆண்டில் எபிகிறாபியா இந்திகா என்னும் ஆங்கில வெளியீட்டில் வேள்விக்குடிச் சாசனத்தை ஆங்கில (இலத்தீன்) எழுத்தில் வெளியிட்டது. (Epigraphia Indica, Vol. XVII, 1923 pp. 291-309). சில ஆண்டுகளுக்குப் பிறகு தளவாய்ப்புரச் சாசனம் கிடைத்ததும் இந்தச் செப்பேடுகளிலிருந்து களப்பிர அரசர்களைப் பற்றி அறிகிறோம் (பாண்டியர் செப்பேடுகள் பத்து, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967).

வேள்விக்குடிச் செப்பேடு வெளியான பிறகுதான் களப்பிரரைப் பற்றின செய்தி தெரியவந்தது. அதன் பிறகு களப்பிரரைப் பற்றிப் பல அறிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால், களப்பிரரைப் பற்றின முழு வரலாறு இன்றுங் கிடைக்கவில்லை.

களப்பிரர் வேறு, களம்பாளர் (களப்பாழர்) வேறு என்று சில வரலாற்று அறிஞர்கள் கருதினார்கள். சிலர் இருவரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் திரு. மு. இராக வையங்காரும், களப்பிரரும் களம்பாளரும் ஒருவரே என்று கருதினார்கள். திரு. டி. வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இருவரும் வெவ் வேறு இனத்தவர் என்று கருதினார். பண்டாரத்தார் இதுபற்றி இவ்வாறு எழுதினார்: “அன்றியும் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும் களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரே யாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று” (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவ பண்டாரத்தார்; 'பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி’ என்னும் தலைப்புக் காண்க).

தளவாய்புரச் செப்பேடு கிடைப்பதற்கு முன்பு திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு எழுதினார். அந்தச் செப்பேடு கிடைத்த பிறகு களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெரிந்து விட்டது. வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது. “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்களைந்தும்" என்றும் (வரி 99) “களப்பாழரைக்களை கட்ட மற்றிரண்டோள் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்" என்றும் தளவாய்ப்புரச் செப்பேடு (வரி 131 132) கூறுகிறது. எனவே, களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிக் களப்பிரரைப் பற்றித் தொடர்ந்து ஆராய்வோம்.

களப்பிரர் யார்?

களப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் கூறப்படுகிற இவர்களைக் களப்பிரர் என்று கூறுவோம். களப்பிரர் தமிழர் அல்லர். ஆனால், அவர்கள் ஆரியரோ என்றால் ஆரியரும் அல்லர். அவர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்று திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். “.. அன்னோர் (களப்பிரர்) பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக் கொண்டு ஆதரித்துள்ளமையால் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலர் ஆவர் என்பதும் நன்கு தெரியப்படும் என்று அவர் எழுதுகிறார் (பாண்டியர் வரலாறு, 1969, பக். 32). களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தனர். இந்த மதங்களின் ‘தெய்வ பாஷை' பிராகிருதம் (சூரசேனியும் பாலி மொழியும்) ஆகையால், இயற்கையாகவே இந்தப் பிராகிருத மொழிகளுக்கு ஆக்கம் ஏற்பட்டது. ஆனால், அவர் களுடைய தாய்மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே. களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தவர் அல்லர். அவர்கள் தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர். எனவே, அவர்கள் திராவிட இனத்தவரே.

களப்பிரரைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அவர்களைப் பற்றித் தங்கள்தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர். பழந் தமிழகத்தின் வடக்கில் இருந்த வேங்கட நாட்டை அரசாண்ட சிற்றரசர் புல்லி என்று கூறப்படுகின்றனர். 'கள்வர் கோமான் புல்லி' என்று அவர்கள் கூறப்படுகிறார்கள். (அகநானூறு 61 : 11-13). கள்வர் என்பதைக் களவர் என்றும் படிக்கலாம். பழைய ஏட்டுச் சுவடிகளில் புள்ளியிட வேண்டிய எழுத்துக்களுக்குப் புள்ளி இடாமலே எழுதும் வழக்கம் இருந்தது. ஆகவே, இந்தச் சொல் களவர் என்பதா கள்வர் என்பதா என்பதை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. இந்தச் சொல்லைக் களவர் என்று கொண்டு திரு. மு. இராகவையங்கார் களவர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்று எழுதினார். (Journal of Indian History, Vol. VII). டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் இதே கருத்தைக் கூறியுள்ளார். வேங்கட நாட்டையாண்ட களவர் அல்லது கள்வர்தான் (புல்லி அரசர்) களப்பிரர் என்று இவர் கூறுகிறார். (The Age of Imperial Unity, Vol. II, Bharatiya Vidya Bhavan, 1951, pp. 223-33). இந்த அறிஞர்கள் கூறுவது ஏற்கத் தக்கது. அன்று. வேங்கட நாட்டிலிருந்த களவர் அல்லது கள்வர் என்பவர் தமிழர். களப்பிரரோ தமிழர் அல்லாத கன்னடர். மற்றும், சங்க காலத்து வேங்கட நாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்து தமிழகத்தின் பகுதியாக இருந்தது. ஆகவே, தமிழராகிய கள்வர் (களவர்) வேறு. கன்னடராகிய களப்பிரராக இவர்கள் இருக்க முடியாது. கள்வர் (களவர்) வேறு, களப்பிரர் வேறு.

பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர, சோழ, பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றி யரசாண்ட களப்பிரர் கருநாட நாட்டுக் கன்னடர் என்பதில் ஐயமில்லை. பாண்டி நாட்டில் இருந்த மூர்த்திநாயனார் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்ட மன்னன் கன்னட நாட்டு அரசன் என்று சேக்கிழார் கூறுகிறார். "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் மன்னர்” என்று அவர் கூறுகிறார் (திருத்தொண்டர் புராணம், மூர்த்திநாயனார் புராணம் 11, 24). 'வடுகக் கருநாடர் மன்னன்' என்பதன் பொருள் வடுக நாடாகிய கன்னட நாட்டைச் சேர்ந்த அரசன் என்பது பிற்காலத்து நூலாகிய கல்லாடம் ‘மதுரை வவ்விய கருநடர் வேந்தன்' என்று கூறுகிறது (கல்லாடம், செய்யுள் 56). கன்னட நாட்டை அக்காலத்தில் ஒரே அரசன் ஆட்சி செய்யவில்லை. வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர் ஆண்டனர். கருநாடர் மன்னர், கன்னட நாட்டில் எந்த ஊரையரசாண்டவன் என்பதைப் பெரியபுராணமும் கல்லாடமும் கூறவில்லை. அவர்கள் கன்னட தேசத்தில் களபப்பு என்னும் நாட்டையாண்ட சிற்றரசர் என்பது கன்னட நாட்டுக் கல்வெட்டுகளிலிருந்தும் கன்னட நூலிலிருந்தும் தெரிகிறது. சந்திரகுப்த மௌரியன் (அசோகச் சக்கரவர்த்தியின் பாட்டன்) அரசாட்சியைத் துறந்து சைன சமயத்தைச் சார்ந்து பத்திரபாகு முனிவருடனும் அவரைச் சார்ந்த சமண சமயத் துறவிகளுடனும் தென்னாட்டுக்கு வந்து களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் தங்கினார்கள் என்று சமண சமய நூலாகிய வட்டாராதனே என்னும் நூல் கூறுகிறது. அவர்கள் கழ்ப்பு நாட்டுக்கு வந்தார்கள் என்று இந்நூல் கூறுகிறது. (வட்டாராதனெ, பத்ரபாஹூ பட்டாரா கெதெ). கழ்பப்பு என்பதும் கள்பப்பு என்பதும் ஒன்றே. கழ்பப்பு (களபப்பு) என்பதைச் சமஸ்கிருதத்தில் கடவப்ர என்று கூறினார்கள். இப்போதைய சிரவண பௌகொள என்னும் பிரதேசமே பழங்காலத்தில் கள்பப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது (கன்னட ஸாஸனகள் ஸாம்ஸ்கிருதிக அத்யயன, கி. பி. 450-1150, டாக்டர் எம். சிதானந்த மூர்த்தி, 1966, பக்கம் 70, 78). களபப்பு நாட்டில் உள்ள சத்திரகிரி மலையின் பழைய பெயர் களபப்பு பெட்ட (பெட்ட - மலை) என்று கூறப்பட்டது (கர்நாடக இதிஹாஸ தர்ஸன (கன்னட தேசத்தின் வரலாறு), டாக்டர் எம். வி. கிருஷ்னராவ், எம். கேசவபட்ட, 1970, பக். 13, 14).

ஹொஸகோட்ட தாலுகாவில் கிடைத்துள்ள பழைய வீரக்கல் சாசனம் கன்னட மொழியில் பழைய கன்னட எழுத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இதில் களப்பிர இராச்சியம் கூறப்படுகிறது. இதன் வாசகம் இது: ஸ்வஸ்திஸ்ரீ மதுராளக் களவர திருராஜ்யதல் மள்ளே கவுண்டரும் சாவா காவுண்ரு துயீநாத பல்கனிளலுதுவ காமூண்ட ஸத்த எர்ரதயக் கர்ளனபூழ்திகம் (Epi. Car., Vol. IX, Hoskote, 13, p. 198). இதனால், களபப்பு நாடு களவர இராச்சியம் என்பது மைசூர் தேசத்தில் இப்போது சிரவணபெளகொள என்று கூறப்படுகிற வட்டாரத்தைச் சேர்ந்திருந்தது என்பது தெரிகிறது. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன (Epi. Car., Vol. X, Chintamani, 9). திருத்தொண்டர் புராணம் கூறுகிற 'வடுகக் கருநாடர் மன்னன் இந்தக் களபப்பு நாட்டைச் சேர்ந்தவன் என்று கருதலாம்.

கருநாட தேசத்தில் இருந்த களப்பிரரின் களபப்பு இராச்சியம் மைசூர் நாட்டைச் சேர்ந்த கோலார் (கோலாலபுரம்) வரையிலும் பரவியிருந்தது. கோலாலபுரத்திலுள்ள நந்தி மலை களப்பிரர் மலை என்று கூறப்படுகிறது. (Epi. Car., Vol. X, Chickbalpur, 9). பழைய தமிழ்ச் செய்யுட்கள், தமிழகத்தை யாண்ட களப்பிரரை நந்தி என்றும் நந்தி மலையை யுடையவர் என்றும் கூறுகின்றன: "நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி,' “புகழ்துறை நிறைந்த பெருவேல் நந்தி.”

கன்னட நாட்டுக் களபப்பு இராச்சியத்தை யாண்ட களப்பிரர் எப்பொழுதும் சுதந்தரராக இருக்கவில்லை. அவர்கள் கடம்பர், கங்கர் போன்ற வேறு அரசர்களுக்கு வெவ்வேறு காலத்தில் அடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது. கடம்ப அரசனான சாகுஸ்தன் (கி. பி. 425- 450) களபோரருக்குப் (களப்பிரர்) பகைவன் என்று பேலூர் தாலுகாவில் ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு எழுத்துக் கூறுகிறது. (Mysore Archaeological Report, 1936, No. 16). களபப்பு நாட்டின் அரசனான திண்டிகன் என்பவன், மேலைக்கங்க அரசனான ஸ்ரீபுருஷனுடைய அனுமதி பெற்று ஒரு தானத்தைக் கொடுத்தான் என்று ஒரு சாசனம் கூறுகிறது. (Mysore Arch. Rep. 1927, No. 118). இதிலிருந்து களபப்பு அரசர் சில காலம் கங்க அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்பது தெரிகிறது. மேற்கூறிய சான்றுகளினாலே கன்னட நாட்டவராகிய களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டையரசாண்டனர் என்பது தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் தமிழகத்தைக் கைப்பற்றிச் சேர, சோழ, பாண்டிய நாட்டையரசாண்டனர் என்று கருதலாம்.

களப்பிரர் எப்போது வந்தனர்?

வடுகக் கருநாடராகிய களப்பிரர் தமிழகத்தைக் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில், ஏறத்தாழ கி. பி. 250இல் அல்லது அதற்குச் சற்றுப் பின்னர் கைப்பற்றினார்கள் என்று கூறினோம். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி, தமிழ்நாட்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது கி. பி. 275இல் என்று கூறுகிறார் (A Comprehensive History of India, Vol. II, Edited by K. A. Nilakanta Sastri, 1956, p. 550). கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டிருக்கவேண்டும் என்று திரு. சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார் (பாண்டியர் வரலாறு, டி. வி. சதாசிவப் பண்டாரத்தார், 1966, பக். 32). திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார், கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று கூறுகிறார். "சங்கம் (வச்சிரநந்தி கி. பி. 470இல் நிறுவின திராவிட சங்கம்) கி. பி. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமைக்கப்பட்டது. கி.பி. 6 ஆம்நூற்றாண்டு தொடங்கினபோது தமிழ்நாட்டின் அரசியல் விரைவாக மாறுதல் அடைந்தது. இந்தக் காலத்தில் தான் களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் நிகழ்ந்தன” என்று அவர் எழுதுகிறார் (Studies in South Indian Jainism, M. S. Ramasami Ayengar, 1922, pp. 52-53). இவர் கூறுவது ஏற்கத்தக்கது அன்று. களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகுதான் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்டதே தவிர, வச்சிரநந்தியின் திராவிட சங்கம் ஏற்பட்ட பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்படவில்லை. ஆகவே, கி. பி. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்று இவர் கூறுவது தவறு. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது என்பதில் ஐயம் இல்லை. மேலும், இராமசாமி அய்யங்கார் இன்னொரு செய்தியையும் கூறுகிறார். “தமிழ்நாட்டில் ஜைன மதத்தை மேலும் உறுதியாக நிலை நாட்டுவதன் பொருட்டு ஜைனர் களப்பிரரைப் படையெடுத்து வருமாறு அழைத்தார்கள் என்று தோன்றுகிறது" என்று இவர் எழுதுகிறார் (Ibid, p. 56). இவ்வாறு இவர் கூறுவதற்குச் சான்று இல்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் தமிழகத்தில் இருந்த அரசியல் சூழ்நிலை கன்னட நாட்டுக் களப்பிரர் தமிழகத்தின் மேல் படையெடுத்து வருவதற்கு ஏற்றதாக இருந்தது. கடைச்சங்க காலத்தில் இருந்த தமிழரசர்களும் குறுநில மன்னர்களும் ஒருவர்மேல் ஒருவர் அடிக்கடி போர் செய்து கொண்டிருந்ததைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். காரணம் இல்லாமலே தங்களுடைய போர் வல்லமையைக் காட்டுவதற்காகவே அரசர்கள் அக்காலத்தில் அடிக்கடி ஒருவர் மேல் ஒருவர் போர் செய்தனர். போர் செய்வது அவர்களின் வழக்கமாகவும் குறிக்கோளாகவும் இருந்தது. தமிழ்நாட்டு வேந்தர்களுக்குள்ளாகவே போர் செய்வதைப் பெருமை யாகக் கருதினார்கள். போர் செய்வதை ஒரு கலையாகவே அமைத்துக் கொண்டனர். அரசர்களின் போர்ச் செயல்களைப் புலவர்கள் புகழ்ந்து பாடினார்கள். போர் முறைகளில் பல முறைகளை வகுத்துக்கொண்டு அதற்குப் புறத்திணை என்றும் புறத்துறை என்றும் போர்க்கலையை வகுத்தனர். போர்த்துறைகளைக் கலையாகவே போற்றிவந்தனர். காரணம் இருந்தாலும் இல்லையானாலும் ஒவ்வொரு அரசனும் போர்செய்துதான் ஆக வேண்டும் என்னும் வழக்கம் ஏற்பட்டு விட்டது. தம்முடைய போர் வெற்றிகளைப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்னும் ஆசை அரசர்க்குள் ஏற்பட்டுவிட்டது. போர்க்களத்துக்குப் போகாமல் அரசன் இறந்துவிட்டால் அவனுடைய உடலைத் தருப்பைப் புல்லின் மேல் கிடத்தி வாளினால் மார்பை வெட்டி 'விழுப்புண்' உண்டாக்கிய பிறகு அடக்கம் செய்த நிலையும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் 'போர்க்களச் சூழ்நிலை' தமிழ்நாட்டையும் தமிழரசர்களையும் பலவீனப்படுத்திவிட்டபடியால், அயல்நாட்டரசர்கள் இதைப் பயன் படுத்திக்கொண்டு படையெடுத்து வரக் காரணமாக இருந்தது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த இந்தச் சூழ்நிலை களப்பிர அரசரைத் தமிழகத்தின் மேல் படையெடுத்து வரத்தூண்டியது. அன்னிய நாட்டவர் படையெடுப்பைத் தடுத்துநிறுத்த ஆற்றல்மிக்க பேரரசர் இல்லாத நிலை களப்பிரரின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படக் காரணமாக இருந்தது.

முன்பு கூறியபடி பாண்டியன் உக்கிரப்பெருவழுதி, சோழன் செங்கணான், சேரமான் கோக்கோதைமார்பன், கொங்கு நாட்டுக் கணைக்கால் இரும்பொறை ஆகியோர் கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த தமிழரசர்கள். இவர்கள் காலத்துக்குப் பிறகு இவர்களுடைய மக்கள் அல்லது உறவினர் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழக் கி. பி. 250 இல் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள் என்று அறிகிறோம்.

களப்பிரர் வென்ற சேர, சோழ, பாண்டிய மன்னரின் பெயர்கள் தெரியவில்லை. மூவேந்தர்களையும் இவர்களின் கீழடங்கியிருந்த சிற்றரசர்களையும் களப்பிரர் வென்றனர் என்று வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. "அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக்கொண்ட”னன் என்று வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் கூறுகிறது (வேள்விக்குடிச் செப்பேடு, வரி 39-40).

களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றின பிறகு 'கடைச்சங்க காலம்’ முடிவடைந்தது. களப்பிரர், மேற்கூறியபடி, கி. பி. மூன்றாம் நூற்றாண் டின் இடைப்பகுதியில் கி. பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள் என்று கொள்வதில் தவறு இல்லை.

சில களப்பிர அரசர்கள்

களப்பிரர் முன்னூறு ஆண்டுகள் அரசாண்டார்கள். அவர்களுடைய ஆட்சிமுறை எப்படி இருந்தது, அவர்களுடைய ஆட்சி செங்கோல் ஆட்சியாக இருந்ததா, அடக்கி அரசாண்டார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் எத்தனை பேர் அரசாண்டார்கள், அவர்களுடைய பெயர் என்ன என்னும் வரன்முறையான சரித்திரம் கிடைக்க வில்லை. சங்க காலத்துச் சேர, சோழ, பாண்டியர் வரலாறே வரன் முறையாகக் கிடைக்காத போது அன்னியராகிய களப்பிரரைப் பற்றின வரன்முறையான வரலாறு எப்படிக் கிடைக்கும்? முன்னூறு ஆண்டு ஆட்சிக் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த செப்பேடுகளோ கல்வெட்டுகளோ இதுவரையில் ஒன்றேனும் கிடைக்கவில்லை. அவர்கள் வழங்கின காசு அவர்கள் காசுகளை வெளியிட்டிருந்தால் ஒன்றேனும் இதுவரையில் கிடைக்கவில்லை. அக்காலத்தில் வரலாறு எழுதும் வழக்கமும் இல்லை. அவர்கள் கட்டின கோயில் கட்டடங்களோ சிற்பங்களோ எதுவும் காணப்படவில்லை. ஆகவே, அவர்களுடைய வரலாற்றையறிவதற்கு யாதொரு சான்றும் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒன்றிரண்டு இலக்கியச் சான்றுகள் மட்டுங் கிடைக்கின்றன. அவ்வளவுதான்.

-

களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்
கொடியும் கழுகுமிவை கூடி - வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை
போமாறு போமாறு போமாறு போம்

என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர)அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க் களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்துமடியுமாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர் களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.

மற்றும் நான்கு பழைய வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிறது. அந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை:

சேர மன்னன் பாடியது:

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும்,
செந்நெல் தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர்
முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை
அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்
அரச ரவதரித்த வந்நாள் - முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை

வெட்டிவிடும் ஓசை மிகும்
பாண்டிய மன்னன் பாடியது:
குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் - முறைமையால்,
ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சத! முன்
வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்
கிடகர் வடகடலென் றார்த்தார் - வடகடலர்
தென்கடலென் றார்த்தார் தில்லையச் சுதானந்தன்
முன்கடை நின்றார்க்கும் முரசு

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர் என்று தோன்றுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இன்னொரு தமிழ்ச் செய்யுள் ஒன்று இன்னொரு களப்பிர அரசனை அச்சுதன் என்று கூறுகிறது. ஆகையால், களப்பிர அரசர்கள் ஒவ்வொருவரும் அச்சுதன் என்று பெயர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது.

சேர, சோழ, பாண்டியர் களப்பாளரைத் (களப்பிரரைத்) தமிழ்ச் செய்யுளில் பாடினபடியால், களப்பிரரும் தமிழரசரே என்று பி. டி. சீனிவாச அய்யங்கார் கூறுகிறார் (History of the Tamils, 1929, p.535) இவர் கூற்றுத் தவறு. களப்பிரர் தமிழரல்லர்; கன்னடர் என்பதில் ஐயமில்லை.

யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கண நூலின் விருத்தியுரையாசிரியர் தம்முடைய உரையில் நான்கு அழகான செய்யுட்களை மேற்கோள் காட்டியுள்ளார். அந்தச் செய்யுட்கள் களப்பிர அரசரைப் பற்றியவை (இணைப்பு 1 காண்க). அச்செய்யுட்களில் ‘கெடலரு மாமுனிவர்' என்று தொடங்குகிற செய்யுள் அச்சுதன் என்னும் களப்பிர அரசனைக் காத்தருளவேண்டும் என்று திருமாலை வேண்டுகிறது (‘புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன், தொன்றுமுதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டுவோன் எனவே').

‘அலைகடற் கதிர்முத்தம்’ என்று தொடங்கும் இன்னொரு செய்யுள், களப்பிர அரசன் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறுபெற்றான் என்றும் அந்த அரசனை அருகக் கடவுள் காத்தருளவேண்டும் என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள் ஒரு களப்பிர அரசனுடைய ஆற்றல், கொற்றம், வீரம் முதலியவற்றைப் புகழ்கிறது. அதில் அந்தக் களப்பிர அரசன் ‘அச்சுதர்கோ' என்று கூறப்படுகிறான். அதாவது, அச்சுத குலத்தில் பிறந்த அரசன் என்று கூறப்படுகிறான்.

‘நலங்கிளர் திருமணியும்’ என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணவன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான். சேர, சோழ, பாண்டியர் களப்பிர அரசனைப் பாடிய பாடல்களில் களப்பிரன் அச்சுதன் என்று கூறப்பட்டதை முன்னமே கண்டோம்.

கி. பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்திருந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். அவர் பேர் போன பௌத்தப் பெரியார். அவர் பாலி மொழியில் புத்தவம் சாட்டகதா, அபிதம்மாவதாரம், வினயவினிச்சயம், உத்தரவினிச்சயம், ரூபாரூபவிபாகம், ஜினாலங்காரம் முதலான நூல்களை எழுதியுள்ளார். சோழ நாட்டுப் பூத மங்கலம் என்னும் ஊரில் வேணுதாசர் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்த போது வினயவினிச்சயம் என்னும் நூலை களம்ப (களப்ர) அரசன் காலத்தில் இவர் எழுதி முடித்ததாக இவர் அந்த நூலில் கூறியுள்ளார் (‘Contemporary Buddha Gosha’ A. P. Buddha Datta, University of Ceylon Review, 1945, Vol. III, No. 1, pp. 34-70).

பஸாத ஜனனே ரம்மே பாஸாதே வஸதா மயா
புத்தஸ்ஸ புத்தஸீஹேன வினயஸ்ஸ வனிச்சயோ
புத்தஸீஹம் ஸமுத்திஸ்ஸ மம ஸத்தி விஹாரிம்
கதோ யம் பன பிக்கூனம் ஹிதத்தாய ஸமாஸதோ
வியைஸ்ஸாவ பொத்தந்தம் ஸுகேனே வாசிரேன ச
அச்சுதச்சுத விக்கந்தே களப்ப குலநந்தனே
மஹிம் ஸமனு ஸாஸந்தே ஆர்த்தோ ச ஸமாபிதோ

இதில் அச்சுத விக்கந்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறப்படுகிறான்.

இந்தச் சான்றுகளினாலே களப்பிர அரசர் வைணவர் என்றும் வைணவப் பெயராகிய அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்டிருந்தார்கள் என்பதும் தெரிகின்றன.

களப்பிர அரசர் தொண்டை நாட்டைத் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளை வென்று அரசாண்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இவர்கள் சேர, சோழ, பாண்டியரின் கொடிகளைத் தங்களுடைய கொடிகளாகக் கொண்டிருந்தனர் என்பதைக் ‘கெடலருமா முனிவர்' என்று தொடங்கும் செய்யுளினால் அறிகிறோம் (இணைப்பு 1 காண்க). அந்தச் செய்யுளின் இறுதிப் பகுதி இவ்வாறு கூறுகிறது.

அடுதிறல் ஒருவ! நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழில் மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவோன் எனவே

இதனால், கயல் (மீன்), சிலை (வில்), கொடுவரி (புலி) ஆகிய அடையாளங்களைக் களப்பிரர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது. அதாவது, பாண்டியனுடைய மீன் கொடியையும் சேரனுடைய வில் கொடியையும் சோழனுடைய புலிக் கொடியையும் களப்பிரர் தங்களுடைய கொடியாகக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகிறது. சேர, சோழ, பாண்டியரின் அடையாளங்களைக் கொண்டிருந்தபடியால் இம்மூன்று நாடுகளையும் அவர்கள் கைப்பற்றி அரசாண்டார்கள் என்று ஐயமறத் தெரிகின்றது.

களப்பிரர் எத்தனை பேர் அரசாண்டார்கள் அவர்கள் நாட்டுக்கு என்னென்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. பாண்டி நாட்டில் மதுரையைத் தலைநகரமாக்கிக்கொண்டு களப்பிரர் அரசாண்டதை அறிகிறோம். உறையூர், காவிரிப் பூம்பட்டினங்களிலும் இருந்து சோழ நாட்டைக் களப்பிரர் அரசாண்டனர் என்பதும் தெரிகின்றது. தில்லையில் (சிதம்பரம்) இருந்தும் அரசாண்டதையறிகிறோம். சோழநாட்டிலே களப்பாள் என்னும் ஊரில் ஒரு களப்பாளன் இருந்ததையறிகிறோம். சேரநாட்டில் எந்த ஊரில் இருந்து களப்பிரர் ஆட்சி செய்தனர் என்பது தெரியவில்லை. களப்பிரர் ஆட்சி, தொண்டைமண்டலத்தைத் தவிர ஏனைய தமிழ்நாடெங்கும் இருந்தது என்பது தெரிகிறது. களப்பிரர் தமிழ்நாட்டைக் கைப்பற்றிய போதே பல்லவ அரசர் தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆகவே, களப்பிரர் ஆட்சி தொண்டைநாட்டில் ஏற்படவில்லை. அவர்களுடைய ஆட்சி தென்பெண்ணையாற்றுக்குத் தெற்கே சேர, சோழ, பாண்டிய நாடுகளில் இருந்தது.

களப்பிர அரசனுக்குக் கீழ், அவனுக்கு அடங்கிக் களப்பிர குலத்து அரசர் சேர, சோழ, பாண்டிய நாடுகளை யரசாண்டனர் என்பது தெரிகிறது.

மூர்த்தியார்

பாண்டிய நாட்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சில காலம் மூர்த்திநாயனார் என்னும் ஒரு வணிகர் அரசாண்டதைப் பெரிய புராணம் கூறுகிறது. மதுரையை ஆண்ட களப்பிர அரசன் பிள்ளைப் பேறு இல்லாமல் இறந்துபோனான். அவன் சைவ சமயத்துக்கு இடையூறுகளைச் செய்தவன். அவன் இறந்தபோது, அமைச்சர்கள் பட்டத்து யானையின் கண்ணைத் துணியினால் கட்டி மறைத்து நகரத்தில் போகவிட்டனர். அந்த யானை யாரைத் தன்மேற் ஏற்றிக் கொண்டு வருகிறதோ அவரை அரசனாக்கிப் பட்டம் கட்டுவது அக் காலத்து மரபு. நகர வீதிகளில் சென்ற யானை சொக்கநாதர் ஆலயத் தருகில் நின்றுகொண்டிருந்த மூர்த்தியாரைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு சென்றது. அமைச்சர்கள் அவருக்கு முடிசூட்டி அரசனாக்கத் தொடங்கினார்கள். மூர்த்தியார் தமக்குப் பொன்முடி வேண்டாம் என்று மறுத்து விட்டார். சிவனடியார் ஆகையால், அவர் திருநீற்றையும் உருத்திராக்கத் தையும் சடை முடியையும் அணிந்து பட்டங்கட்டப் பெற்றார். அதனால் அவர் 'மும்மையால் உலகாண்ட மூர்த்தியார்' என்று கூறப்பட்டார். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணத்தில் (மூர்த்திநாயனார் புராணம்) காணலாம். மூர்த்தியார் எத்தனை யாண்டுகள் அரசாண்டார், அவருக்குப்பிறகு களப்பிரர் ஆட்சி மீண்டும் எப்படி மதுரையில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது நிகழ்ந்த காலமும் தெரியவில்லை.

கூற்றனார்

சோழ நாட்டை யரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும் கூற்றுவ நாயனார் என்றுங் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் (கூற்றுவ நாயனார் புராணம்) அறிகிறோம். 'ஆர் கொண்ட வேற்கூற்றன் களந்தைகோன் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத் தொண்டத்தொகையில் இவரைக் கூறுகிறார். இவர் களப்பாளன் (களப்பிரன்) குலத்தவர் என்று திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி கூறுகிறார் (திருத்தொண்டர் திருவந்தாதி 47).

நாதன் திருவடியே முடியாகக் கவித்து நல்ல
போதங் கருத்திற் பொதிந்தமை யாலதுகை கொடுப்ப
ஓதந்தரு வியஞான மெல்லாம் ஒரு கோலின் வைத்தான்
கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே

களப்பிர அரசர்கள் பொதுவாகச் சைன சமயத்தவர் என்றாலும், அவர் குலத்தைச் சேர்ந்த கூற்றுவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சோழநாட்டிலிருந்த இவர், சோழ அரசர்களுடைய முடியைத் தரித்து அரசாள வேண்டும் என்று விரும்பினார். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரச பரம்பரையார் களப்பிரருக்குக் கீழடங்கியிருந்தார்கள். அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடிஒன்று ஒழியஅரசர் திருவெல்லாம்' உடையராக இருந்த கூற்றுவர், சோழ அரசருடைய பழைய முடியைத் தரித்து அரசாள விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியைக் கொண்டு தனக்கு முடிசூட்டும்படி கேட்டார். அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடி சூட்டமாட்டோம்' என்று சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர் எல்லோரும் சேர நாட்டுக்குப் போய்விட்டார்கள் (கூற்றுவ நாயனார் புராணம் 4, 5).

மல்லல் ஞாலம் புரக்கின்றார்
    மணிமா மவுலி புனைவதற்கு
தில்லைவா ழந்தணர் தம்மை
    வேண்ட அவரும் 'செம்பியர் தம்
தொல்லை நீடுங்குல முதலோர்க்
    கன்றிக் கட்டோம்முடி' என்று
நல்கா ராகிச் சேரலன்தன்
    மலைநா டனைய நண்ணுவார்

ஒருமை உரிமை தில்லைவா
   ழந்தணர்கள், தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமைபுரி
   காவல் கொள்ளும்படி இருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
   சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐயுற வால்மனந் தளர்ந்து
   மன்றுள் ஆடும் கழல்பணிவார்

இதனால், கூற்றுவனார், முடிசூடாமலே சோழ நாட்டை யரசாண்டார் என்று தெரிகின்றது.

ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளாகத் தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்துகொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்கள் எத்தனை பேர், அவர்களுடைய பெயர் என்ன, அவர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் நடந்த நிகழ்ச்சிகள் எவை என்னும் வரலாறு ஒன்றும் தெரியவில்லை.