மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/008

களப்பிரர் காலத்தில் தமிழ்மொழி

கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ் மொழிக்கு அவர்கள் ஆக்கம் அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால், களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழர், தமிழ் மொழியைப் புதிய முறையில் வளர்த்தார்கள்.இந்த முயற்சியில் அக்காலத்துத் தமிழர் மதபேதம் பாராட்டாமல் ஒன்றாக இணைந்து தாய்மொழியை வளர்த்தனர். பௌத்த, சமண, சைவ, வைணவ சமயத்துத் தமிழ்ப் புலவர் அனைவரும் தமிழை வளர்த்தார்கள்.புது வகையான பாக்களும் புது வகையான இலக்கியங்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாக்கப்பட்டன. அந்த வளர்ச்சி புதுமையான வளர்ச்சியாகவே இருந்தது.

வட்டெழுத்து

சங்க காலத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து சங்க காலத்தின் இறுதியில் மாற்றம் அடையத் தொடங்கியது. இந்த மாற்றம் எழுது கருவிகளின் மூலமாக ஏற்பட்ட மாற்றம். பனையோலையும் எழுத்தாணியுமே அக்காலத்து எழுது கருவிகளாக இருந்தபடியால் இந்த மாற்றம் ஏற்பட்டது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராமி எழுத்தின் மாற்றம் முழுமாற்றமாகிப் பையப்பையப் புதுவகையான எழுத்தாயிற்று. இப்புது வகையான எழுத்து வட்டெழுத்து என்று பெயர் பெற்றது. வட்டெழுத்து தமிழ் நாடெங்கும் பரவி வழங்கிற்று. சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் தொண்டை நாட்டிலும் வட்டெழுத்து நெடுங்காலம் வழங்கி வந்தது. வட்டெழுத்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கத்தில் இருந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டெழுத்து வழங்கியது என்பதில் ஐயம் இல்லை.

பிராகிருத மொழியையும் சமஸ்கிருத மொழியையும் எழுதுவதற்காகப் புது வகையான கிரந்த எழுத்துகளைப் பௌத்தரும் சைனரும் உண்டாக்கினார்கள். அந்தக் கிரந்த எழுத்து தென்னிந்தியாவில் குமரி முதல் விந்தியம் வரையில் வழங்கிவந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பிராகிருத, சமஸ்கிருத மொழிச் சொற்கள் பௌத்த, சமண சமயங்களின் வழியாகத் தமிழில் கலந்துவிட்டன.

புது வகைப் பாக்கள்

களப்பிரர் காலத்துக்கு முன்பு கடைச்சங்க காலத்தின் இறுதிவரையில் தமிழில் நான்கு வகைப் பாக்களே இருந்தன. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை.

ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே

என்று தொல்காப்பியம் கூறுகிறது (தொல்காப்பியம், செய்யுளியல் 101).

கடைச்சங்க இறுதிக்காலம் ஏறத்தாழ கி.பி.250 என்று கொள்ளலாம். அதற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன சமயமும் பௌத்த மதமும் தமிழகத்தில் பரவலாகவும் விரைவாகவும் வளர்ந்தன. அவர்களுடைய 'தெய்வ பாஷை' பிராகிருத மொழி. சைன சமயத்தாரின் 'தெய்வ பாஷை' சூரசேனி என்னும் பிராகிருதம். பௌத்த மதத்தாரின் 'தெய்வ பாஷை' பாலி என்னும் பிராகிருதம். பிராகிருத மொழிகள், சமஸ்கிருதம் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னமே இந்தியாவில் வழங்கி வந்தன. சமண சமய நூல்களும் பௌத்த மத நூல்களும் முறையே சூரசேனி, பாலி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. ஆகவே, அந்த மதத்தவர் தங்கள் மத நூல்களைச் சூரசேனியிலும் பாலியிலும் ஓதினார்கள். அந்த மதங்கள் தமிழ்நாட்டில் பெருவாரியாகப் பரவின. களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பிராகிருத மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ப் பா வகையில் புதிய செய்யுட்கள் தோன்றத் தொடங்கின. பிராகிருத மொழிகளோடு சமஸ்கிருத மொழியும் அக்காலத்தில் அந்த மதத்தவரால் பயிலப்பட்டது. இந்த மொழிகளின் தொடர்பு காரணமாகத் தமிழ்ச் செய்யுள் வகையில் புதிய பாவினங்களை உண்டாக்கினார்கள். புதியனவாகத் தோன்றிய பாவினங்கள் தாழிசை, துறை, விருத்தம் எனப் பெயர் பெற்றன.

பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான மூன்று பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள். பழைய ஆசிரியப்பாவோடு ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்றும் வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும், கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்றும் பாவகைகளை வளர்த்தார்கள். பாவினங்களின் அமைப்பு திடீரென்று அமைந்து விடவில்லை. அவை சரியானபடி முழு உருவை அடைவதற்குப் பல ஆண்டுகள், சில தலைமுறைகள் சென்றிருக்க வேண்டும். புத்தம் புதிய முயற்சியில் தொடக்கக் காலத்தில் சில பல குறைகள் இருக்கும் . அக்குறைபாடுகள் நீங்கி நிறைவான வடிவம் அமைவதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். புதிய பாவினங்களைப் புலவர் உலகம் சம்மதித்து ஏற்றுக்கொள்வதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும். இந்தப் புதிய ஆக்கம், தமிழர் சமஸ்கிருத, பிராகிருத மொழிகளைப் பயில வாய்ப்பு ஏற்பட்ட காலத்தில் உண்டான வளர்ச்சியாகும். இந்தப் புதிய முயற்சியில் அக்காலத் தமிழர் தமிழ் மொழியின் தனித்தன்மையும் இயல்பும் கெடாதபடி பார்த்துக் கொண்டார்கள். கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் பிராகிருத - சமஸ்கிருத எழுத்துகளையும் சொற்களையும் அப்படிஅப்படியே சேர்த்துக்கொண்டு கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளின் தூய்மையையும் தனித்தன்மையையும் கெடுத்துக்கொண்டதுபோல, பாவினங்களை அமைத்த காலத்தில் தமிழர் பிராகிருத- சமஸ்கிருத மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் அப்படி அப்படியே எடுத்துக் கொண்டு தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும் கெடுத்து விடவில்லை. பிராகிருத - சமஸ்கிருத மொழிச் சொற்கள் ஓரளவு தமிழில் கலந்தபோதிலும், அச்சொற்கள் தமிழ் மரபுக்கேற்ப கிருதம் பெற்றபடியால் தமிழ், திராவிட இயல்பை இழக்காமல் இருக்கிறது.

புறப்பொருளும் அகப்பொருளும் - புதிய கருத்துக்கள்

பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான பாவினங்கள் உண்டாக்கப்பட்டதைக் கூறினோம். இது தமிழ் மொழியில் ஏற்பட்ட நல்லதோர் ஆக்கமாகும். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மாற்றமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டது. அது அகப்பொருள் புறப்பொருள்களில் உண்டான புதிய கருத்துகள் ஆகும். சங்க காலத்தில் அகப்பொருளையும் புறப்பொருளையும் மக்களின் வாழ்க்கையோடு அமைத்துச் செய்யுட்களைப் பாடினார்கள். போர் வீரர் தங்களுடைய வீரத்தினால் பகைவரை வென்றதைப் பாராட்டிச் சங்கப் புலவர் செய்யுட்களைப் பாடினார்கள். அவ்வாறே, மக்களின் காதல் வாழ்க்கையைச் சிறப்பித்துச் செய்யுட்களை இயற்றினார்கள். இந்தப் பழைய புறப்பொருள் அகப்பொருள்களுக்குப் புதிய கருத்துகள் தோன்றின. புறப்பகைவரைப் போரிலே கொன்று வெற்றிபெறுகிற உலகியல் வெற்றியைவிட அகப்பகையை வென்று வெற்றி கொள்வது சிறந்த உயர்ந்த வெற்றி என்னும் புதிய கருத்தைச் சைனரும் பௌத்தரும் உண்டாக்கினர். மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகைகளை வெல்கிற வெற்றி போர்க்களத்தில் பகைவரைக் கொல்கிற வெற்றியைவிட மேலான வெற்றி என்று புறப்பொருளுக்குப் புதிய கருத்துத் தோன்றிற்று. அகப் பகையை வென்ற அருகரும் (தீர்த்தங்கரரும்) புத்தர் பெருமானும் ஜினர் (வெற்றி பெற்றவர்) என்றும் அந்த வெற்றியே மனிதன் உயர்கதிக்குச் செல்லக்கூடிய சிறந்த வெற்றி என்றும் சைனரும் பௌத்தரும் தங்கள் மதச் சார்பாகப் புறப் பொருளுக்குப் புதுப் பொருள் கூறினார்கள். அதாவது. மாந்தனின் போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதைவிட ஜினர்களின் ஐம்புல வெற்றியைப் பாடுவது சிறந்தது என்னும் கருத்தைத் தோற்றுவித்தனர்.

பௌத்தரும் சைனரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்தை உண்டாக்கியதைப் போல, சைவ, வைணவர் அகப்பொருளுக்குப் புதியதோர் கருத்தைக் கூறினார்கள். மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் காதலித்துப் பெறுகிற சிற்றின்பத்தை விட உயிர்கள் கடவுளைக் காதலித்துப் பெறுகிற பேரின்பம் சிறந்தது என்னும் புதிய கருத்தை அகப்பொருளுக்குக் கற்பித்தார்கள். உயிர்கள் (அதாவது ஆணும் பெண்ணும் ஆகிய உயிர்கள்) தலைவிகள் (காதலிகள்) என்றும் கடவுள் (சிவனும் திருமாலும்) தலைவன் (காதலன்) என்றும் இந்த முறையில் காதலி - காதலன் பாவத்தில் கடவுளிடம் பக்தி செய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடுபேறு) பெறலாம் என்றும் சைவ, வைணவர் அகப்பொருளுக்குப் புதிய கருத்துக் கூறினார்கள். அதாவது, நாயகி- நாயகன் பாவத்தில் அகப்பொருள் கருத்து அமையக் கடவுளின்மேல் பக்திப்பாடல் பாடுவது சிறந்தது என்று கூறினார்கள். ஆனால், பௌத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் நாயகி- நாயகன் பாவத்தில் தங்களுடைய கடவுளின்மேல் அகப்பொருட்டுறையமைந்த செய்யுட்களை இயற்றவில்லை. சைவ, வைணவ சமயத்தார் மட்டும் அகப்பொருட்டுறையமைந்த பாடல்களைத் தங்கள் கடவுளின் மேல் பாடினார்கள். இந்த மாற்றங்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாயின என்று தோன்றுகின்றது.

பக்தி இயக்கம் தோன்றின காலத்திலிருந்து அகப்பொருள் துறைகள் அமைந்த தோத்திரப் பாடல்களைச் சைவ, வைணவர்கள் இயற்றத் தொடங்கினார்கள். இவ்விதப் பாடல்களைச் சங்க காலத்தில் சங்கப் புலவர்கள் பாடவில்லை. பிற்காலத்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருட்டுறை யமைந்த பாடல்களைத் தங்கள் கடவுள்மேல் பாடினார்கள். இந்த மரபு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. சைன, பௌத்தர்களுக்கு இந்தக் கருத்து உடன்பாடில்லை யாகையால் அவர்கள் தங்கள் கடவுளின்மேல் அகப்பொருட்டுறைப் பாடல்களைப் பாடவில்லை.

யாப்பிலக்கண நூல்கள்

பழமையான நால்வகைப் பாக்களுக்குப் புதிதாகப் பாவினங்கள் உண்டாக்கப்பட்டன என்று கூறினோம். புதிய பாவினங்களுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. ஆகவே, யாப்பிலக்கணம் ( செய்யுள் இலக்கணம்) எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் புலவர்கள் புதிதான செய்யுள் இலக்கண நூல்களை எழுதினார்கள். பல செய்யுள் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. அந்தச் செய்யுள் இலக்கண நூல்கள் பிற்காலத் தில் வழக்கிழந்து மறைந்துபோயின. மறைந்துபோன அந்நூல்களைப் பற்றிச் சிறிதளவு, பிற்காலத்து நூலாகிய யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதிலிருந்து அறிகிறோம். மறைந்து போன அந்த நூல்களைப்பற்றி நாம் அறிந்தவரையில் கூறுகிறோம்.

அவிநயம்

அவிநயம் என்னும் இந்த நூலை எழுதியவர் அவிநயனார். இவர் சைன சமயத்தவர் என்று தெரிகிறார். அவிநயனார்யாப்பு என்னும் பெயரும் இதற்கு உண்டு. இராசப்பவுத்திரப் பல்லவ தரையன் என்னும் புலவர் இந்நூலுக்கு உரை எழுதினார். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் இந்த நூல் வழங்கிவந்து பிறகு மறைந்து போயிற்று. இந்த நூலிலிருந்து உரையாசிரியர் சிலர் சில சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.

அவிநயப் புறனடை என்றும் நாலடி நாற்பது என்றும் பெயருள்ள இன்னொரு நூலை அவிநயனாரே எழுதியுள்ளார். இந்நூலும் பிற் காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூற் செய்யுட்கள் சில உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன (இந்த நூல்களைப் பற்றின விவரங்களை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில் காண்க).

காக்கைபாடினியம்

இந்த யாப்பிலக்கண நூலை எழுதியவர் காக்கைபாடினியார். காக்கைபாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர் இருந்தனர். குறுந்தொகை 210ஆம் செய்யுளையும், புறநானூறு 278ஆம் செய்யுளையும். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தையும் பாடினவர் சங்க காலத்துக் காக்கைபாடினியார். காக்கைபாடினியம் என்னும் செய்யுளிலக்கண நூலை எழுதிய இவர் பிற்காலத்திலிருந்த காக்கைபாடினியார், சிறுகாக்கை பாடினியம் என்று இன்னொரு யாப்பிலக்கண நூலும் உண்டு. இந்த நூலை எழுதியவர் சிறுகாக்கைபாடினியார். இந்த இரண்டு செய்யுளிலக்கண நூல்களிலிருந்து சூத்திரங்களைப் பிற்காலத்து உரையாசிரியர் தங்களுடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளனர் (மறைந்து போன தமிழ் நூல்கள்).

நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு என்னும் செய்யுள் இலக்கண நூலை யாப்பருங்கல விருத்தியுரைகாரர் தம்முடைய உரையில் குறிப்பிடுகிறார். இவ்விரண்டும் ஒரே நூலாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த நக்கீரர் சங்க காலத்து நக்கீரர் அல்லர். பிற்காலத்தில் (பக்தி இயக்கம் தோன்றின காலத்தில்) இருந்த நக்கீரர் என்று தோன்றுகிறது.

நத்தத்தம்

இப்பெயருள்ள செய்யுள் இலக்கண நூலை இயற்றியவர் நத்தத்தனார். (இவர் பெயர் நற்றத்தனார் என்றும் இவருடைய நூல் நற்றத்தம் என்றும் கூறப்படுகிறது). தத்தனார் என்பது இவருடைய பெயர் என்பதும் ந என்னும் சொல் சிறப்புப் பெயரை உணர்த்துகிறது என்றும் தோன்றுகிறது. இந்த நூலும் மறைந்து போயிற்று. இந்நூலிலிருந்து சில சூத்திரங்கள் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்.

பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை

இந்த இரண்டு யாப்பிலக்கண நூல்களை எழுதியவர் பல்காப்பியனார். இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்து போயின. இந்நூல்களிலிருந்து சில சூத்திரங்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்).

பல்காயம்

பல்காயனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றினார். இந்நூல் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. இந்நூலிலிருந்து சில நூற்பாக்கள் உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப் பட்டுள்ளன (மறைந்து போன தமிழ் நூல்கள்).

இலக்கிய நூல்கள் (சமணர் இயற்றியவை)

களப்பிரர் ஆட்சிக் காலத்தில், கி.பி. 250 முதல் 575 வரையில் என்னென்ன தமிழ் இலக்கிய நூல்கள் உண்டாயின என்பதற்கு முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் புது வகையான பாவினங்கள் தோன்றின என்பதை அறிந்தோம். புதிய பாக்களினாலே புதிய தமிழ் நூல்கள் பல தோன்றியிருக்க வேண்டும் என்பது உறுதி. நமக்குத் தெரிகிற வரையில் அக்காலத்தில் தோன்றின தமிழ் இலக்கிய நூல்களைக் கூறுவோம்.

நரிவிருத்தம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரப் பதிகத்தில் நரிவிருத்தம் என்னும் நூலைக் கூறுகிறார்.

எரிபெருக்குவர் அவ்வெரி ஈசனது
உருவருக்க மாவது உணர்கிலர்
அரி அயற்கு அரியானை அயர்த்துபோய்
நரிவிருத்தம் தாகுவர் நாடரே
(நாவுக்கரசர் தேவாரம், ஆதிபுராணத் திருக்குறுந்தொகை 7)

நரி விருத்தம் என்பதன் பொருள் நரியின் வரலாறு என்பது (விருத்தம்- விருத்தாந்தம், வரலாறு). விருத்தம் என்பதற்கு விருத்தப் பாவாலான நூல் என்றும் கூறலாம். இந்நூலாசிரியர் திருத்தக்கதேவர் என்று பெயர்பெற்ற புலவர். சோழ அரசர் குலத்தில் பிறந்தவரான திருத்தக்கதேவர் சமண சமயத்துத் துறவியாகிச் சமண சமயத்துத் தேவ கணத்தைச் சேர்ந்திருந்தார். இவர் சீவகன் என்னும் அரசனுடைய வரலாற்றைச் சீவகசிந்தாமணி என்னும் பெயரினால் பாட எண்ணித் தம்முடைய சமய குருவின் அனுமதியைக் கோரினார். சீவகன் சரிதையில் சிற்றின்பச் செய்திகளும் உலகியல் செய்திகளும் அதிகமாக இருப்பதால் அதை எழுத முன்வந்த திருத்தக்கதேவர் தம்முடைய துறவுநிலையில் உறுதியுள்ளவராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்பின குரு. இவரை முதலில் நிலையாமையைப் பற்றிஒரு நூல் எழுதிக்காட்டும்படி கட்டளையிட்டார். அவர் கட்டளையை மேற்கொண்டு எழுதப்பட்டதுதான் நரி விருத்தம். நரிவிருத்தத்தைப் படித்த ஆசிரியர் திருத்தக்க தேவரின் உறுதியான துறவுநிலையை அறிந்து சீவகசிந்தாமணிக் காவியத்தை இயற்றுவதற்கு அனுமதி கொடுத்தார். ஆகவே நரிவிருத்தம், சீவக சிந்தாமணிக்கு முன்னோடியாகச் செய்யப்பட்ட நூல் என்பது தெரிகிறது, நூறு செய்யுட்களைக் கொண்ட நரிவிருத்தம் இப்போதும் இருக்கிறது.

சீவகசிந்தாமணி

நரிவிருத்தத்தைப் பாடிய திருத்தக்கதேவர் தம்முடைய ஆசிரியரின் அனுமதிப்படி சிந்தாமணிக் காவியத்தை இயற்றினார். இது சீவகசிந்தாமணி என்றும் மணநூல் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரக் காவியத்துக்கு அடுத்த படி, சிறந்த காவியமாகப் போற்றப்படுகிறது. புதிய விருத்த யாப்பினால் இயற்றப்பட்ட முதல் காவியம் இது. சீவகசிந்தாமணியின் தலைவனான சீவக குமாரன் வர்த்தமான மகாவீரரின் காலத்தில் இருந்தவன். மகாவீரர் நிர்வாண மோட்சம் அடைந்து இப்போது 2500 ஆண்டுகள் ஆகின்றன. எனவே, சீவகனும் அந்தக் காலத்தில் இருந்தவன் ஆவன்.

இவ்விடத்தில் ஒரு செய்தியை விளக்கிக் கூறவேண்டும். சீவக குமாரன். பல்லவ தேசத்தின் அரசன் மகளை மணஞ்செய்தான் என்று கூறப்படுகிறான். பல்லவ தேசம் என்பது எது என்பதை அறியவேண்டும். பல்லவ அரசர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலத்தை கி.பி.6ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பாக அரசாண்டதை வரலாற்றினால் அறிகிறோம். கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்த சீவகன் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த பல்லவ அரசன் மகளை மணஞ்செய்ய இயலுமா? "படுமழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும், தடமலர்க் குவளை பட்டந் தழுவிய யாணர் நன்னாடு" (1185) என்றும், "கோங்குபூத்துதிர்ந்த குன்றிற் பொன்னணி புளகம் வேய்ந்த, பாங்கமை பரும யானைப் பல்லவ தேச மன்னன்” (2253) என்றும், “பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேயமன்னன், சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானோ" (2278) என்றும் பல்லவ தேசமும் பல்லவ தேய மன்னனும் சீவகசிந்தாமணியில் கூறப்படுகிறனர். இங்குக் கூறப்பட்ட பல்லவ தேசம் தமிழ்நாட்டில் இருந்த பல்லவ தேயம் அன்று. சீவகன் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் பல்லவ தேசமும் பல்லவ அரசரும் இருந்திலர். இதில் கூறப்படுகிற பழைய

பாரசீக தேசமாகும். பழைய பாரசீக தேசத்தை யாண்டவர் பஃலவர் என்றும் அந்த நாடு பஃலவ நாடு என்றும் கூறப்பட்டது. பஃலவ தேசம் என்றது தமிழில் பல்லவதேசம் என்றாயிற்று. சீவகசிந்தாமணி கூறுகிற பல்லவ தேசம் பழையபாரசீக நாடாகிய பஃலவ தேசம் ஆகும்.

சீவகசிந்தாமணி களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சமண சமயம் ஓங்கி வளர்ந்திருந்த காலத்தில், கி.பி. 5அல்லது 6ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.1

எலிவிருத்தம், கிளிவிருத்தம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய தேவாரப் பதிகத்தில் எலிவிருத்தம், கிளி விருத்தம் என்னும் இரண்டு நூல்களைக் கூறுகிறார். “கூட்டினார் கிளியின் விருத்தம் உரைத்ததோர் எலியின் தொழில், பாட்டு மெய்கொலிப் பக்கமே செலுத்தும்” (திருவாசகம் 5). நரிவிருத்தம் போன்று இந்த நூல்களுள் சமண சமய நூல்களே. இந்த நூல்கள் பிற்காலத்தில் மறைந்து போயின. இந்நூல் செய்யுட்களில் கலித்துறைச் செய்யுட்களும் பயின்றுள்ளன என்பது தெரிகின்றது. "குண்டலகேசி விருத்தம் கிளி விருத்தம் எலிவிருத்தம் நரிவிருத்தம் முதலாயுள்ளவற்றுள் கலித்துறைகளும் உளவாம்” என்று வீரசோழிய உரையாசிரியர் எழுதி உள்ளார்.

விளக்கத்தார் கூத்து

இது கூத்து நூல். இதைச் செய்தவர் விளக்கத்தார் (விளக்கத்தனார்) என்னும் புலவர், இந்த நூல் பிற்காலத்தில் மறைந்துவிட்டது. இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் தம்முடைய உரையில் மேற்கோள் காட்டியுள்ளார் (இணைப்பு 1இல் முதல் செய்யுள் காண்க). இந்தக் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் இவர் அச்சுதன் என்னும் களப்பிர அரசனை வாழ்த்துகிறார்.

அடுதிறல் ஒருவ நிற் பரவுதும், எங்கோன்
தொடுகழற் கொடும்பூண் பகட்டெழு மார்பிற்
கயலொடு கிடந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் பேர்வேல் அச்சுதன்
ஒன்றுகடல் உலகம் முழுவதும்
ஒன்றுபு திகிரி யுருட்டுவே னெனவே

இதனால், இந்த நூல் களப்பிர அரசன் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இந்த நூலின் வரலாற்றை மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில் காண்க.

பெருங்கதை

பெருங்கதை என்னும் இந்த நூலுக்கு மாக்கதை என்றும் உதயணன் கதை என்றும் சுருக்கமாகக் கதை என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றியவர் கொங்குநாட்டில் வாழ்ந்திருந்த கொங்குவேள். இதனால் இதனைக் கொங்குவேள் மாக்கதை என்றும் கூறுவர். கொங்குவேள் கொங்குநாட்டு விசயமங்கலம் என்னும் ஊரில் இருந்தவர். பெருங்கதையின் தொடக்கமும் அதன் முதற்காண்டமும் இறுதிக் காண்டமும் இப்போது கிடைக்கவில்லை. இவற்றைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் கிடைத்துள்ளன. இந்த நூலில் திரி சொற்கள் அதிகம். சற்றுக் கடினமான நடைதான். மணிமேகலை காவியம் போலவே பெருங்கதையின் செய்யுட்கள் ஆசிரியப் பாவாலானவை. இப் பாக்களின் இறுதியில் மணிமேகலை காவியம் போன்றே ‘என்’ என்று முடிகின்றன. இந்த நூலைக் கொங்குவேள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில்இருந்த திருமங்கையாழ்வார் பெருங்கதையைப் படித்திருக்கிறார் என்பது அவருடைய சிறிய திருமடல் என்னும் செய்யுளில் பெருங்கதையின் தலைவியாகிய வாசவதத்தையைப் பற்றிக் கூறுவதிலிருந்து அறிகிறோம்.

ஆரானும் ஆதானும் அல்லன் அவள்காணீர்
வாரார் வனமுலை வாசவ தத்தை என்று
ஆராலும் சொல்லப் படுவாள்- அவளுந்தன்
பேராயம் எல்லாம் ஒழியப் பெருந்தெருவே
தாரார் தடந்தோள் தனைக்காலன் பின்போனாள்
ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே
(திருமங்கையாழ்வார், சிறுத்திருமடல்)

கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட மணிமேகலை காவியத்தில் பெருங்கதையின் குறிப்புக் காணப்படுகிறது (மணி மேகலை 15:58-66). அக்காலத்திலேயே பெருங்கதையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் காலத்தில் கொங்குவேளின் பெருங்கதை எழுதப்படவில்லை. வேறு யாரோ எழுதிய பெருங்கதையை அவர்கள் அறிந்திருந்தனர்.

பெருங்கதையின் மூல நூல் பிருஹத்கதை என்பது (பிருஹத் கதை - பெருங்கதை). பிருஹத்கதையை குணாட்டியர் என்னும் புலவர் பைசாச பாஷையில் எழுதினார். குணாட்டியர் தக்கண தேசத்தை அரசாண்ட சாதவாகன அரசனுடைய அமைச்சராக இருந்தவர். சாதவாகன அரசர்களாகிய சதகர்ணியாரைத் தமிழர் நூற்றுவர்கன்னர் என்று கூறினார்கள். ஏறத்தாழக் கி.பி. முதல் நூற்றாண்டில் குணாட்டியர் என்னும் அமைச்சர் பிருஹத்கதையைப் பைசாச பாஷையில் எழுதினார். இது விந்தியமலைத் திராவிட இனத்தைச் சேர்ந்த மொழி என்பர். பைசாச பாஷை என்பது பிராகிருத பாஷையைச் சேர்ந்தது. பிருஹத்கதையின் பெரும் பாகம் அழிந்து போயிற்று. எஞ்சி இருக்கும் பகுதியே இப்போதுள்ள பெருங்கதை.

பிருகத்கதையைத் தமிழில் எழுதியவர் கொங்குவேள் என்னும் சைனர். சைனர்கள் பிராகிருத பாஷைகளைக் கற்றவர்கள். எப்படி என்றால் சைன சமய நூல்கள் பிராகிருத பாஷையில் எழுதப்பட்டுள்ள படியால் அக்காலத்து சைனர் பிராகிருத பாஷையையும் நன்கு கற்றிருந்தார்கள். அந்த முறையில் சைனராகிய கொங்குவேள் நேரே, பைசாச பாஷையில் எழுதப்பட்ட குணாட்டியரின் பெருங்கதையைப் படித்து அதைத் தமிழில் பெயர்த்தெழுதினார் என்பதில் தவறு இல்லை. துர்வினிதன் என்னும் கன்னட நாட்டு அரசன் குணாட்டியருடைய பிருகத்கதையை வடமொழியில் பெயர்த்து எழுதினான் என்றும் அந்த வடமொழியிலிருந்து கொங்குவேள் பெருங்கதையைத் தமிழில் எழுதினார் என்றும் சிலர் கூறுவர். இவர்கள் கூற்று ஏற்கத்தக்கதன்று. பிராகிருத பாஷையை அறிந்தவரான சைனராகிய கொங்குவேள்,நேரே பைசாச பாஷையிலிருந்து பெருங்கதையைப் பெயர்த்தெழுதினார்.

நூல்களும் கருத்துகளும் (சொற்களும்கூட) சமஸ்கிருதத்தில் வந்த பிறகுதான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் முட்டாள் தனமான மூடக்கொள்கை, ஆராய்ச்சி இல்லாத சமஸ்கிருதப் பண்டிதர்களிடம் இருந்து வருகிறது. இந்த மூடத்தனத்தைத் தமிழப் பண்டிதர் சிலர் உண்மை எனக் கருதிக்கொண்டுள்ளனர். பௌத்த, சைனர் காலத்தில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் நூல்களும் கருத்துகளும் வெளிவந்தன. சமஸ்கிருதம் போலக் காணப்படுகின்ற பல சொற்கள் உண்மையில் பிராகிருத மொழியிலிருந்து தமிழில் வந்தவை. சைனப் புலவர்களில் தமிழ், பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை நன்கு கற்றவர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். சைன சமயத்துத் தமிழராகிய கொங்குவேள் பிராகிருதப் பாஷையைக் கற்றவராகையினால் அவர் பைசாச மொழியிலிருந்த பிருகத்கதையை நேராகத் தமிழில் எழுதினார்.

களப்பிரர் காலத்தில் பௌத்த மதமும் சிறப்புற்றிருந்தது. அக் காலத்தில் பௌத்தர்களும் நூல் எழுதினார்கள். அவர்களுடைய நூல்கள் முழுவதும் மறைந்து போயின.

இலக்கிய நூல்கள் (சைவ சமய நூல்கள்)

சமண சமய நூல்களைப் பற்றி மேலே கூறினோம். இனி, களப்பிரர் காலத்தில் தோன்றிய சைவ இலக்கியங்களைப் பற்றிக் கூறுவோம். தமிழ்நாட்டில், முக்கியமாகப் பாண்டிநாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பரவி ஆதிக்கம் செலுத்தியதைக் கண்ட சைவ சமயத்தார் தங்கள் சமயம் ஓங்கி வளர வழிவகைகளைத் தேடிக் கடைசியில் பக்தி என்னும் புதிய இயக்கத்தை உண்டாக்கினார்கள் என்று கூறினோம். அகப்பொருளுக்குப் பேரின்பத் தொடர்பான கருத்தைக் கற்பித்து மாந்தருக்கும் (உயிர்களுக்கு) கடவுளுக்கும் தெய்வீகக் காதலைப் பொருத்தி அதைப் பக்தியுடன் இணைத்தார்கள். இந்தப் புதிய கொள்கைக்கு ஆதாரமாக ஒரு நூல் வேண்டுமல்லவா? அதற்காக இறையனார் அகப்பொருள் என்றும் களவியல் என்றும் பெயருள்ள ஒரு நூலை எழுதினார்கள். அது தெய்வீகக் களவியலுக்கு ஆதார நூல் என்று கூறினார்கள். அந்த நூலைச் சிவபெருமானே (இறையனார்) இயற்றினார் என்று கூறினார்கள் ( இது பற்றி இணைப்பு 3 காண்க). இனி அக்காலத்தில் உண்டான சைவ சமய நூல்களைப் பார்ப்போம்.

மூத்த திருப்பதிகங்கள்

திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்ட படியால் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று கூறப்படும் இந்தப் பதிகங்களைப் பாடியவர் காரைக்கால் அம்மையார் என்னும் அடியார். இவர் அறுபத்து மூன்று சைவ அடியார்களில் ஒருவர். இவருடைய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில், காரைக்கால் அம்மையார் புராணத்தில் காண்க. திருப்பதிகங்களைப் பாடியவர் திருநாவுக்கரசு நாயனார். அவர் காலத்திலே திருப்பதிகங்களைப் பாடியவர் அவருக்கு வயதில் இளையவராகிய திருஞான சம்பந்த மூர்த்திநாயனார். இவர்கள் பாடிய பதிகங்களுக்குத் தேவாரத் திருப்பதிகங்கள் என்பது பெயர். இவர்களுக்கு முன்பு முதன்முதலாகத் திருப்பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையாரே. ஆகையினால், அம்மையார் பாடிய திருப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகங்கள் என்று பெரியோர் பெயரிட்டுள்ளனர். அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டே. இவற்றில் முதலாம் மூத்ததிருப்பதிகம் ‘கொங்கை திரங்கி நரம்பெழுந்து’ என்று தொடங்கும் பதிகம். இதன் பண் நட்டபாடை. இந்தப் பதிகம் பதினொரு செய்யுட்களைக் கொண்டது. இரண்டாவது மூத்த திருப்பதிகம் ‘எட்டி இலவம் ஈகை சூரை' என்று தொடங்குவது. இதன் பண் இந்தளம். இதுவும் பதினொரு பதிகங்களைக் கொண்டது. காரைக்கால் அம்மையார் 7ஆம் நூற்றாண்டிலிருந்த திருநாவுக்கரசருக்கு முந்தியவர் ஆகையால் இவர் கி.பி 5 அல்லது 6ஆவது நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டும். பழைய தேவாரப் பதிப்புகளில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களை முதலில் அச்சிட்டுப் பிறகு மற்ற தேவாரப் பதிகங்களை அச்சிடுவது வழக்கமாக இருந்தது.

திருவிரட்டை மணிமாலை

இதனையியற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. இது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் ஆக இரண்டு செய்யுட்களால் ஆனது, அந்தாதியாகப் பாடப்பட்டது. இருபது செய்யுட்களைக் கொண்டது.

அற்புதத் திருவந்தாதி

இதை இயற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. நேரிசை வெண்பாவினால் அந்தாதியாக நூற்று ஒன்று செய்யுட்களைக் கொண்ட நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது.

காரைக்கால் அம்மையார் இயற்றிய இந்தத் தோத்திரப் பாடல்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.

கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி

இது நேரிசை வெண்பாவினால் அந்தாதித் தொடையாகச் செய்யப்பட்ட நூறு செய்யுட்களையுடையது. கயிலை மலையிலும் காளத்திமலையிலும் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் நக்கீரதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்திலிருந்த நக்கீரர் அல்லர்; களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த மற்றொரு நக்கீரர்.

திரு ஈங்கோய்மலை எழுபது

ஈங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மேல் பாடப்பட்ட எழுபது வெண்பாக்களால் ஆன நூல். இதில் 49 முதல் 61 வரையில் உள்ள பதின்மூன்று பாடல்கள் மறைந்து போயின. இந்த நூலைப் பாடியவரும் நக்கீரதேவ நாயனாரே.

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

இது திருவலஞ்சுழியில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்மேல் பாடப்பட்ட தோத்திர நூல். அகவல், வெண்பா, கலித்துறை என்னும் மூன்றுவகைச் செய்யுட்களினால் அந்தாதித் தொடையமையப் பாடப்பட்ட பதினைந்து செய்யுட்களையுடையது. இதுவும் நக்கீரதேவ நாயனாரால் இயற்றப்பட்டது.

திருவெழுகூற்றிருக்கை

இது அகவற்பாவினால் இயற்றப்பட்ட 56 அடிகளைக் கொண்டது. கடைசியில் ஒரு வெண்பாவையும் உடையது. இச்செய்யுளை யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் ஒழிபு இயல் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். அதில் இதனை, இணைக்குறள் ஆசிரியப்பா என்று கூறுகிறார். பதினோராந் திருமுறையில் அச்சிடப்பட்டுள்ள இந்தச் செய்யுளுக்கும் யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள இச்செய்யுளுக்கும் பாடபேதங்கள் உள்ளன. இதனை இயற்றியவர் நக்கீரதேவநாயனார்.

பெருந்தேவபாணி

இது அறுபத்தேழு அடிகளைக் கொண்ட ஆசிரியப் பாவாலானது. இதன் இறுதியில் ஒரு வெண்பாவும் உண்டு. இதனை இயற்றியவரும் நக்கீரதேவநாயனாரே.

கோபப்பிரசாதம்

இது தொண்ணூற்றொன்பது அடிகளைக் கொண்ட அகவற் பாவாலான நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது. நக்கீர தேவநாயனாரால் இயற்றப்பட்டது.

காரெட்டு

இது எட்டு வெண்பாக்களால் ஆன சிறு நூல். காருக்கும் (மழைக்கும்) சிவபெருமானுக்கும் உவமை கூறுமுகத்தான் சிவனை வாழ்த்துகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவ நாயனாரால் இயற்றப்பட்டது.

போற்றிக் கலிவெண்பா

கலிவெண்பாவினால் சிவபெருமானைப் போற்றிக் கூறுகிறது இந்நூல். இதுவும் நக்கீரதேவநாயனாரால் இயற்றப்பட்டது.

திருக்கண்ணப்பதேவர் திருமறம்

நூற்று ஐம்பத்தெட்டு அடிகளைக் கொண்ட அகவற்பாவினா லானது. இந்நூல் கண்ணப்ப நாயனார் சிவபெருமானிடம் பக்தி (அன்பு) செய்து முக்திபெற்ற வரலாற்றைக் கூறுகிறது. இறுதியில் ஒரு வெண்பாவையும் உடையது. நக்கீர தேவநாயனாரால் பாடப்பட்டது.

இந்தச் செய்யுட்களைப் பாடிய நக்கீரதேவநாயனார், சங்க காலத்தில் இருந்த நக்கீரர் அல்லர். ஆனால், அவரும் இவரும் ஒருவரே என்று கூறுகின்றனர். இது தவறான கருத்து. நக்கீர தேவநாயனார் பாடிய மேற்காட்டிய செய்யுட்கள் எல்லாம் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. பதினோராந் திருமுறையை முதன்முதலாக அச்சிற்பதிப்பித்த திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் அவர்கள், “மதுரைக் கடைச்சங்கத்துத் தெய்வப் புலவர்களுளொருவ ராகிய நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த கயிலை பாதி காளத்தி பாதித் திருவந்தாதி" என்று ஏட்டுச் சுவடியில் இருந்தபடியே எழுதியுள்ளார். கடைச்சங்க காலத்தில் இருந்த சங்கப் புலவரான நக்கீரரைப் பிற்காலத்தில் (களப்பிரர் காலத்தில்) இருந்த நக்கீரதேவநாயனார் என்பவருடன் இணைத்து இருவரும் ஒருவரே என்று கூறுவது பொருந்தாது. சங்க காலத்து நக்கீரருக்குத் தேவர் என்றும் நாயனார் என்றும் சிறப்புப் பெயர்கள் இருந்ததில்லை.

கடைச்சங்க காலத்துப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் “நக்கீரதேவ நாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை" என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சங்க காலத்து நக்கீரரையும் பிற்காலத்திலிருந்த நக்கீரதேவ நாயனாரையும் சைவ சமயத்தவர் பிற்காலத்தில் ஒருவரே என்று தவறாகக் கருதினார்கள். (திருமுருகாற்றுப்படை கடைச் சங்க காலத்திலிருந்த நக்கீரரால் இயற்றப்பட்டது. திருமுருகாற்றுப்படை பிற்காலத்து நூல் என்று சிலர் கருதுவர். இவர்கள் கருத்துத் தவறானது (இணைப்பு 4 'நக்கீரர் காலம்' காண்க). (திருமுருகாற்றுப்படை கடைச்சங்க காலத்தில் இருந்த நக்கீரரால் இயற்றப்பட்டது. அது பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டா)

நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு என்னும் இரண்டு செய்யுள் இலக்கண நூல்களைப் பற்றி முன்பு கூறினோம். அந்நூற்களின் ஆசிரியராகிய நக்கீரரே, இங்கு கூறப்பட்ட நக்கீர தேவநாயனார் என்று தோன்றுகிறது. நக்கீரதேவநாயனார் வேறு, நக்கீரர் வேறு என்பதையறிய வேண்டும்.

திருக்கண்ணப்பதேவர் திருமறம்

நக்கீரதேவநாயனார் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் திருமறம் என்னும் நூலை மேலே கூறினோம். இந்தத் திருக்கண்ணப்ப தேவர் திருமறத்தைப் பாடியவர் கல்லாட தேவ நாயனார். இது முப்பத்தெட்டு அடிகளைக்கொண்ட அகவற் பாவாலானது. கண்ணப்ப நாயனாருடைய பக்தியைப் புகழ்ந்து பேசுகிறது இந்நூல். இந்தச் செய்யுள், சைவத் திருமுறைகளில் ஒன்றான பதினோரந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. கடைச்சங்க காலத்தில் இருந்த கல்லாடதேவ நாயனார் வேறு. அகநானூற்றில் ஏழு செய்யுட்களையும் குறுந்தொகையில் ஒரு செய்யுளையும் புற நானூற்றில் ஐந்து செய்யுட்களையும் பாடிய கல்லாடனார் என்னும் சங்கப் புலவர், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் இருந்தவர். அந்தப் பாண்டியனை நேரில் பாடியவர். கண்ணப்ப தேவர் திருமறம் பாடிய கல்லாடதேவநாயனார் பிற்காலத்தில் (களப்பிரர் அரசர் காலத்தில்) இருந்தவர். இருவரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு புலவர்கள். இருவரையும் ஒருவராகக் கருதுவது தவறு.

மூத்த நாயனார் இரட்டை மணிமாலை

இது, மூத்தநாயனார் (ஆனைமுகன்) மேல் பாடப்பட்ட வெண்பாவும் கலித்துறையும் ஆகிய செய்யுட்களினால் செய்யப்பட்ட இருபது செய்யுட்களையுடைய அந்தாதி நூல். இதனைச் செய்தவர் கபிலதேவ நாயனார். இது பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை

வெண்பாவும் கலித்துறையும் ஆகிய இரண்டு வகைச் செய்யுட்களினால் சிவபெருமான் மேல் பாடப்பட்ட தோத்திர நூல். முப்பத்தேழு செய்யுட்களைக் கொண்டது. கபிலதேவ நாயனாரால் பாடப்பட்டது. பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் திருவந்தாதி

வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகச் செய்யப்பட்ட நூறு செய்யுட்களைக் கொண்ட தோத்திரநூல். கபில தேவநாயனார் செய்தது. இதுவும் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மூன்று செய்யுட்களையும் (மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் இரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி பாடியவர் கபிலதேவநாயனார். இவர் கடைச்சங்க காலத்தில் இருந்த கபிலர் அல்லர். பிற்காலத்தில் இருந்த கபிலதேவ நாயனார். சங்க காலத்தில் இருந்த கபிலர் ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணையையும் கலித்தொகையில் குறிஞ்சிக்கலியையும் பாடியவர். அகநானூற்றில் பதினெட்டுச் செய்யுட்களையும், குறுந்தொகையில் இருபத்தேழு செய்யுட்களையும், புறநானூற்றில் இருபத்தெட்டுப் பாடல்களையும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும் பாடினார். மற்றும் பதிற்றுப்பத்து ஏழாம்பத்தைச் செல்வக்கடுங்கோ வாழியாதன் மேல் பாடியுள்ளார். அவர் வேறு, களப்பிரர் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த கபிலதேவநாயனார் வேறு. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலைச் செய்தவர் கபிலதேவநாயனாரே. சங்க காலத்தில் மூத்த நாயனார் (கணபதி, பிள்ளையார்) வணக்கம் ஏற்படவில்லை. மூத்த நாயனார் இரட்டை மணிமாலையை ஆனைமுகன் மேல் பாடிய கபிலதேவ நாயனார் பிற்காலத்தவர் என்பது வெளிப்படை, இவர் இயற்றிய இன்னா நாற்பது என்னும் நூலைப் பற்றிப் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பில் இந்நூலில் வேறு இடத்தில் காண்க.

வித்துவான் திரு. வேங்கடராஜுலு ரெட்டியாரும் இக்கருத்தையே கூறுகிறார். “பிற்காலத்து நூல்களிலேயே முதலில் விநாயக வணக்கம் காணப்படுகின்றது. இவற்றால், கி.பி.6ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் விநாயக வழிபாடு நடைபெற்றிலது என்பது அறியலாகும். ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்’ என்னும் நூலிலும் இவ்வாறே கூறப்பட்டுள்ளது. இவற்றால், பண்டைத் தமிழ்ப் புலவராய் விளங்கிய கபிலர், தமது காலத்தில் வழக்காற்றிலில்லாத கடவுளை வழிபட்டுப் பாடியுள்ளார் என்று கூறுதல் பொருத்த முடையதாகாது. அன்றியும் இரட்டை மணிமாலை போன்ற பிரபந்தங்களும் அவர் காலத்தில் தோன்றியிருக்கவில்லை. கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களும் கபிலர் காலத்தில் வழங்கவில்லை. அவ்வாறே பிரபந்தங்கள் பலவும், கபிலர் வாழ்ந்த காலத்தில் வழங்கின என்றல் பொருந்தாதே. அவை, அவர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளின் பின்னர்த் தோன்றியனவே. ஆசிரியர் நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவேயாதலறிக. இவையெல்லாவற்றையும் ஆராயாது பெயரொற்றுமையொன்று மட்டும் கருதி, கபிலதேவநாயனாரைக் கபிலர் என்றும் பழம் புலவர் என்றும் கோடல் மயக்க உணர்வேயாகும்" (வித்துவான் வே. வேங்கட ராஜுலு ரெட்டியார், கபிலர், 1936, பக்கம் 45).

“பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலைச் செய்தவரும் கபிலதேவநாயனாரே. இவர் இந்நூலில் கபிலர் என்று கூறப்படுகின்றார். இவர் சங்க காலத்துக் கபிலர் அல்லர். மூத்த நாயனார் இரட்டைமணிமாலை, இவற்றைச் செய்தவரே இந்தக் கபிலர் என்று தோன்றுகிறது" (மேற்படி நூல், கபிலரகவல் தலைப்பில்).

சிவபெருமான் திருவந்தாதி

பரணதேவநாயனார் இயற்றியது சிவபெருமான் திருவந்தாதி. இது நூறு வெண்பாக்களினால் அந்தாதித் தொடையாகப் பாடப்பட்டுள்ளது. பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வந்தாதியின் கடைசியில் இதன் சிறப்பைக் கூறுகிற வெண்பா ஒன்று காணப்படுகிறது. இவர் சங்க காலத்தில் இருந்த பரணர் அல்லர். பக்தி இயக்கக் காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த நக்கீரதேவ நாயனார், கல்லாட தேவநாயனார், கபிலதேவநாயனாரைப் போலவே இந்தப் பரண தேவநாயனாரும் பிற்காலத்தில் இருந்தவர்.

சங்க காலத்துப் பரணர் அகநானூற்றில் 34 செய்யுட்களையும் குறுந்தொகையில் 16 பாடல்களையும் நற்றிணையில் 12 செய்யுட்களையும் புறநானூற்றில் 13 செய்யுட்களையும் பாடியுள்ளார். மற்றும் சேரன் செங்குட்டுவன் மேல் பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தைப் பாடினார். சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட் சென்னியையும் வையாவிக் கோப்பெரும் பேகனையும் பாடியுள்ளார். அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடைச்சங்க காலத்தில் இருந்தவர். சிவபெருமான் திருவந்தாதி பாடிய இந்தப் பரணதேவநாயனார் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்.இவர் வேறு, அவர் வேறு.

கீழ்க்கணக்கு நூல்கள்

இதுவரையில் களப்பிரர் காலத்தில் சைவ, சமண சமயத்தவர் எழுதிய தமிழ் நூல்களைக் கூறினோம். களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட வேறு நூல்களும் உள்ளன. அவை கீழ்க்கணக்கு நூல்கள். கீழ்க் கணக்கு நூல்களைப் பதினெட்டாகப் பிற்காலத்தில் தொகுத்துள்ளனர். பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்களில் காலத்தால் முற்பட்டவையும் பிற்பட்டவையும் உள்ளன. ஆனால், அவைகளில் பெரும்பான்மையானவை களப்பிரர் ஆட்சிக்காலத்துக்குள்ளாக எழுதப்பட்டவை. பதினெண் கீழ்கணக்கு நூல்களாவன: 1. நாலடியார், 2. நான்மணிக் கடிகை, 3. இன்னாநாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார்நாற்பது, 6. களவழிநாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமாலை நூற்றைம்பது, 9. திணைமாலை ஐம்பது, 10. திணை மொழி ஐம்பது, 11. ஐந்திணை எழுபது, 12. முப்பால் (திருக்குறள்), 13. திரிகடுகம், 14. ஆசாரக்கோவை, 15. சிறுபஞ்ச மூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை. இந்தக் கீழ்க்கணக்குப் பதினெட்டு நூல்களில் திருக்குறள், களவழி நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய மூன்றும் கடைச்சங்க காலத்தில் கி.பி 250க்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள். நாலடியார். என்னும் நூல் கி.பி. 7ஆம் நூற்றாண்டில், களப்பிரர் ஆட்சிக்குச் சற்றுப் பின்பு எழுதப்பட்டது. பிற பதினான்கு நூல்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் 6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் போன்ற சிலர் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 8 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டன என்று கூறுவர் (P. T. Srinivasa Aiyangar, History of the Tamils). இவர் கூறுவது தவறு. இதுபற்றிய ஆய்வுரையை இணைப்பு 5இல் காண்க.

கீழ்கணக்கு என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். மாந்தர் தம்முடைய உலக வாழ்க்கையில் அடையவேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பயன்களாகும். இந்த நான்கு பயன்களில் வீடு (மோட்சம்) என்பது மறுமையில் பெறப்படுவது. மற்ற அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் இம்மையில் (இவ்வுலக வாழ்க்கையில்) அடையப் படுவன. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் கூறுகிற நூல்களுக்குக் கீழ்கணக்கு என்று பெயர் கூறினார்கள். இதைப் பழைய உரையாசிரியர்களும் திருநாவுக்கரசரும் கூறியுள்ளனர். அவற்றைக் காட்டுவோம். பேராசிரியர் என்னும் உரையாசிரியர், தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளில் 547 ஆம் சூத்திரத்துக்கு உரையில் இவ்வாறு கூறுகிறார்;

வனப்பியல் தானே வகுக்குங் காலை
சின்மென் மொழியாற் றாய பனுவலொடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே

“தாய பனுவலொ” டென்பது அறம் பொருள் இன்பமென்னும் மூன்றிற்கும் இலக்கணஞ் சொல்லும்; வேறிடையிடை அவையன்றியும் தாய்ச் செல்வ தென்றவாறு. அஃதாவது பதினெண் கீழ்க்கணக்கென உணர்க. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானும் ஒரே செய்யுள் வந்தவானும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவானும், அறம் பொருள் இன்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்று வருமாறும் கார்நாற்பது களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க."

திருநாவுக்கரசு சுவாமிகள் கீழ்க்கணக்கைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். திருக்குறுந்தொகை இன்னம்பர் பதிகத்தில் அடிகள் இவ்வாறு கூறுகிறார்;

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அலற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

இம்மை வாழ்க்கையில் அறம், பொருள், இன்பங்களைப் பெற்று மறுமைக்கு அடையவேண்டிய கடவுள் வழிபாட்டைச் செய்யாதவர்களைக் கடவுள் கணக்கு எழுதிவைக்கிறார் என்று கூறுகிறார். அறம், பொருள், இன்பம் என்னும் இம்மைப் பயன்களைக் கீழ்க்கணக்கு என்று கூறுவது காண்க.

அடிநிமிர் வில்லாச் செய்யுட் டொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது கீழ்க்கணக் காகும்

என்பது பன்னிருபாட்டியல்.

உலக வாழ்க்கையில் பெறவேண்டிய அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் கீழ்க்கணக்கு என்று கூறப்பட்டதைக் கண்டோம். இனி, களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களைக் கூறுவோம்.

நான்மணிக்கடிகை

இது 104 செய்யுட்களையுடையது. விளம்பிநாகனார் என்பவரால் செய்யப்பட்டது. இப்பெயரைக் கொண்டு இவர் விளம்பி என்னும் ஊரில் இருந்தவர் என்பது தெரிகிறது. ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகளைக் கூறுகிறபடியால் நான்மணிக்கடிகை என்று பெயர் பெற்றது. இவர் வைணவ சமயத்தவர் என்பது இந்நூல் கடவுள் வாழ்த்தினால் அறிகிறோம்.

மதிமன்னு மாயவன் வாண்முகம் ஒக்கும்
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ணொக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம்

என்பது இந்நூலின் கடவுள் வாழ்த்து.

இன்னா நாற்பது

இன்னாதவைகளைத் (துன்பந்தருகிற செயல்களை) தொகுத்துக் கூறுகிறபடியால் இந்நூல் இன்னாநாற்பது என்று பெயர்பெற்றது. நாற்பது வெண்பாக்களையுடையது. தனியாகக் கடவுள் வாழ்த்து ஒன்றைப் பெற்றுள்ளது. சிவபெருமான், பலராமன், மாயவன் (திருமால்), சத்தியான் (வேலாயுதனாகிய முருகன்) ஆகியோரைக் கடவுள் வாழ்த்தில் இதன் ஆசிரியர் கூறுகிறார்.

முக்கட் பகவன் அடிதொழாதார்க் கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளாது ஒழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா
சத்தியான் தாள்தொழா தார்க்கு

என்பது இந்நூல் கடவுள் வாழ்த்து.

இதன் ஆசிரியர் பெயர் கபிலர். இந்த ஆசிரியரும் முன்பு கூறப்பட்ட கபிலதேவநாயனார் என்பவரும் ஒருவரே. இந்தக் கபிலர் (கபிலதேவநாயனார்) சங்க காலத்தில் பாரிவள்ளலின் நண்பரும் அவ்வள்ளல் இறந்த பிறகு செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்து 7ஆம் பத்தில் பாடியவருமான சங்க காலத்துக் கபிலர் அல்லர். இந்தக் கபிலர் களப்பிரர் காலத்தில் இருந்த கபிலர். இந்தக் கபிலரும் மூத்தநாயனார் இரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி முதலான செய்யுட்களை இயற்றிய கபிலதேவநாயனாரும் ஒருவரே.

இன்னாநாற்பது பாடிய கபிலரும் மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை,சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்ற நூல்களைப் பாடிய (பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டவை) கபிலதேவநாயனாரும் வெவ்வேறு கபிலர்கள் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். இவர் மூன்று கபிலர்களைக் கூறுகிறார். சங்க காலத்தில் இருந்த கபிலர், அவருக்குப் பிறகு இன்னாநாற்பது பாடிய கபிலர், மூத்தநாயனார் இரட்டை மணிமாலை முதலான நூல்களை இயற்றிய கபிலதேவநாயனார் ஆகிய மூன்று கபிலர்கள் என்று கூறுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம், கபில தேவநாயனார் மூத்த பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாடியிருப்பதும் சிவபெருமான் திருவந்தாதியில் திருச்சிராப்பள்ளி மலையில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதாகக் கூறியிருப்பதும் ஆகும். அதாவது, மூத்தபிள்ளையார் (கணபதி) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் மாமல்லன் காலத்தில், சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) வாதாபியிலிருந்து கணபதி உருவங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் முதல் முதலாகக் கணபதி வணக்கத்தை உண்டாக்கினார் என்று பொதுவாகக் கூறப்படும் கருத்தை உடன்பட்டு, மூத்த பிள்ளையார் இரட்டைமணிமாலை பாடியிருப்பதனாலும் அந்தாதியில் திருச்சிராப்பள்ளிமலையில் சிவனுக்குக் கோயில் இருந்ததைக் கூறியிருப்பதனாலும், (திருச்சி மலையில் முதலாம் மகேந்திரவர்மன் ஒரு குகைக்கோவிலை அமைத்தான் என்பது கொண்டும்) சதாசிவ பண்டாரத்தார் கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கருதுகிறார் (பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600,1965).

மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சேனாதிபதியான பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனார்) இரண்டாம் புலிகேசியின் நகரமான வாதாபியை வென்று அங்கிருந்து கணபதி உருவங்களைக் (வாதாபி கணபதி) கொண்டுவந்து கணபதீச்சரம் என்னும் ஊரில் கணபதிக்குக் கோவில் கட்டினார் என்பது வரலாற்றறிஞரின் பொதுவான கருத்து. ஆனால், சிறுத்தொண்ட நாயனாருக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கணபதி வழிபாடு தமிழகத்தில் இருந்தது என்று இப்போது ஆராய்ச்சியினால் அறியப்படுகிறது. மற்றும், கபிலதேவநாயனாரின் சிவபெருமான் திருவந்தாதியில் சிவபெருமான் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருப்பதாகக் கூறியிருப்பது கொண்டு, அந்த மலையைக் கூறுகிற கபிலதேவநாயனார் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று திரு. சதாசிவபண்டாரத்தார் கருதுகிறார். சிவபெருமான் திருவந்தாதியில் காவிரி வந்தேறு மறுகிற்சிராமலையெங் கோமான் என்று சிராமலையில் இருந்த சிவபெருமானைக் கபிலதேவ நாயனார் கூறினார் (சிவபெருமான் திருவந்தாதி, செய்யுள் 42). இதில், மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோவிலைத்தான் இவர் கூறுகிறார் என்றுகருத வேண்டியதில்லை. அதற்கு முன்பு அம்மலைமேல் இருந்த சிவன் கோவிலைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆகவே, கபிலதேவ நாயனாரும், இன்னா நாற்பது கபிலரும் வெவ்வேறு கபிலர்கள் என்று கருதுவது வேண்டா. இருவரும் ஒருவரே என்பது எம்முடைய கருத்து.

இனியவை நாற்பது

இந்த நூலை இயற்றியவர் பெயர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனர். இது நாற்பது வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடையது. மாந்தர் செய்யவேண்டிய இனிய (நல்ல) செயல்களைக் கூறுகிறது இந்நூல். இதன் கடவுள் வாழ்த்து இது:

கண்மூன் றுடையான் தாள்சேர்தல் கடிதினிதே
தொன்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

திரிகடுகம்

இது நூறு வெண்பாக்களையும் ஒரு கடவுள் வாழ்த்தையும் உடைய நூல். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகளைத் தனித்தனியே பொடி செய்து, இப்பொடிகளைச் சம அளவாகச் சேர்த்து, அமைக்கப்பட்ட மருந்து திரிகடுகம் என்பது. இதைத் திரிகடுகு சூரணம் என்றும் கூறுவர். இது காரமாக இருக்கும். இதனால் இது திரிகடுகம் (மூன்று காரமான பொருள்) என்று பெயர் பெற்றது. இதை நாள்தோறும் காலையில் சிறு அளவாக உட்கொண்டால் உடல் நோயை நீக்கி நலம் உண்டாக்கும். திரிகடுகமாகிய சுக்கு, மிளகு, திப்பிலியைச் சமனளவாகச் சிதைந்து நீர்விட்டுக் காய்ச்சிய கியாழத்தையும் உட்கொள்ளலாம். திருகடுகக் கியாழமும் சூரணமும் உடல் நோயைப் போக்குவதுபோல, திரிகடுகம் என்னும் இந்நூலைப் படிப்பவரின் உள்ள நோய் (மனநோய்) நீங்கும் என்னும் கருத்தினால் இந்நூல் திரிகடுகம் என்று பெயர் பெற்றது. ஒவ்வொரு செய்யுளிலும் மும்மூன்று கருத்துகள் கூறப்படுகின்றன. இதன் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது:

கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருத்தம் சாய்த்ததூஉம்- நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப் பூவண்ணன் அடி

ஆசாரக் கோவை

இந்நூல் நூறு செய்யுட்களையும் ஒரு சிறப்புப் பாயிரத்தையும் உடையது. இந்நூல் வெண்பாவின் வகைகளான குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசைவெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பாக்களால் அமைந்த நூல். மனிதர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களைத் தொகுத்து இதில் இதன் ஆசிரியர் கூறுகிறார். இதன் ஆசிரியர் பெருவாயில் முள்ளி என்பவர். கயத்தூர்ப் பெருவாயில் முள்ளி என்று கூறப்படுவதால், இவர் கயத்தூரைச் சேர்ந்த பெருவாயில் என்னும் ஊரில் இருந்தவர் என்று கருதலாம். புதுக்கோட்டையில் அன்னவாயில், சித்தன்னவாயில், பெருவாயில் என்னும் ஊர்கள் உள்ளன. ஆகவே, இவர் சிறப்புப்பாயிரம் இது:

ஆரெயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி
ஆரிடத்துத் தானறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறனாய மற்றவற்றை
ஆசாரக் கோவைஎனத் தொகுத்தான்; தீராத்
திருவாயிலாய திறல்வண் சயத்தூர்ப்
பெருவாயில் முள்ளி என்பான்

பழமொழி நானூறு

முன்றுறையரையர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நானூறு வெண்பாக்களை யுடையது. ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழி கூறப்படுகிறது. எனவே, இதில் நானூறு பழமொழிகள் கூறப்படுகின்றன. இந்தப் பழமொழிகள் எல்லாம் இந்நூலாசிரியர் காலத்துக்கு முன்பு (களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு) வழங்கி வந்தவை. இந்நூலாசிரியர் ஆருகத மதத்தைச் சேர்ந்தவர்.

பிண்டியின் நீழற் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும்- கொண்டினிதா
முன்னுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுவை வெண்பா இவை!

என்பது இந்நூல் தற்சிறப்புப்பாயிரம்.

சிறுபஞ்சமூலம்

இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப்பாயிரச் செய்யுட்களையும் உடையது. பஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்கள். அவை கண்டக்கத்திரிவேர், சிறுவழு துணைவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் என்பவை. இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்பட்டு நோயாளிகளுக்குத் தரப்பட்டது. இந்தச் சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்து ஐந்து பொருள்கள் கூறப்படுகின்றன. இவை உடல் நோயைத் தீர்க்கிற சிறுபஞ்சமூலம் போன்று மன நோயைத் தீர்ப்பன ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது. இந் நூலாசிரியரின் பெயர் காரியாசான். இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது:

முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்
பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி
மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா
வெண்பா உரைப்பான் சில

ஏலாதி

எண்பத்தேழு பாடல்களையுடைய இந்த நூலை எழுதியவர் பெயர் கணிமேதாவியார். கணி என்னும் சிறப்புப் பெயர், இவர் வானநூலைக் கற்றவர் என்பதைத் தெரிவிக்கிறது. வான நூலைப் பயின்றவர்கட்குக் கணி, கணியன் என்று பழங்காலத்தில் பெயர் இருந்தது. கணிதமேதாவியார் தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு வானநூலையும் கற்றிருந்தார் என்பது தெரிகிறது. ஏலாதி என்பது, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை போன்று ஒரு மருந்தின் பெயர். ஏலம், இலவங்கப்பட்டை, நாகேசசுரம், மிளகு, திப்பிலி, சுக்கு என்று ஆறு வகையான சரக்குகளை மருத்துவ நூல் கூறும் அளவுப்படி ஒன்றாகச் சேர்த்துச் செய்யப்பட்ட சூரணத்துக்கு ஏலாதி என்பது பெயர். ஏலாதி என்னும் பெயருடைய இந்த நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஆறு பொருள்கள் கூறப்படுகின்றன. இவர் சமண சமயத்தவர்.

இல்லறநூல் ஏற்ற துறவறநூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து-நல்ல
அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியுங்
கணிமேதை செய்தான் கலந்து

என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள்.

கார் நாற்பது

இது நாற்பது வெண்பாக்களையுடைய நூல். இது, அகப்பொருளில் முல்லைத்திணையைக் கூறுகிறது. அலுவல் காரணமாக வெளியூருக்குச் சென்ற தலைவன் தான் கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவிக்குக் (காதலிக்கு) கூறிச்சென்றான். அவன் சொன்ன கார் காலம் வந்ததும் அவன் திரும்பி வராதபடியால் தலைவி கவலைப்பட்டாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறினாள். கடைசியில் காதலன் திரும்பி வந்தான். இவற்றைக் கூறுகிறது இந்தச் செய்யுள். இதனை இயற்றிய ஆசிரியர் பெயர் மதுரைக் கண்ணன் கூத்தனார்.

பொருகடல் வண்ணன் புளைமார்பில் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந் தாலிக்கும் போழ்து

என்பது இந்நூலின் பாயிரச் செய்யுள்.

ஐந்திணை ஐம்பது

அகப்பொருளைப் பற்றிய ஐந்திணைகளும் பத்துப்பத்துப் பாக்களினால் இயற்றப்பட்டதாதலின் இந்நூல் ஐந்திணை ஐம்பது என்று பெயர் பெற்றது. இதைப் பாடியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர். இதன் பாயிரச் செய்யுள்,

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வன்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியார்த்த
ஐந்திணை யைம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்

என்று கூறுகிறது. இதில் செந்தமிழ் என்பது அகப்பொருளைக் குறிக்கிறது. தமிழ் என்பதற்கு அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு. அகப்பொருளைத்தான் இச்செய்யுள் செந்தமிழ் என்று கூறிகிறது.

திணைமொழி ஐம்பது

அகத்திணை ஐந்துக்கும் திணையொன்றுக்குப் பத்துச் செய்யுளாக அமைத்து ஐம்பது பாக்களினால் இயற்றப்பட்டது இந்நூல். இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார். இவருடைய தந்தையாரின் பெயர் சாத்தந்தையார். ஆகவே, இவர் சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேர்ந்தனார் என்று கூறப்பட்டார்.

ஐந்திணை எழுபது

இந்நூலும் அகப்பொருள் ஐந்திணைகளைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகளுக்கு எழுபது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பெயர் மூவாதியார். இதன் கடவுள் வாழ்த்துக் கணபதியாகிய பிள்ளையாருக்குரியது.

எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்து நல்குமால் -கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு

என்பது இதன் கடவுள் வாழ்த்து.

இந்தப் பிள்ளையார் கடவுள் வாழ்த்து இந்நூலாசிரியர் செய்ததன்று என்றும் பிற்காலத்தவர் யாரோ செய்தமைத்தது என்றும் திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம் இது: “பிள்ளையாரென்று வழங்கப்பெற்று வரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ்நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக்கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக்கடவுள் வாழ்த்துச் செய்யுள் நூலின் புறத்தேயுள்ளமையும் அதற்குப் பழைய உரை காணப்படாமையும் இவ்வுண்மையை நன்கு வலியுறுத்துதல் அறியற்பாலதாம்” (சதாசிவப் பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 250-600, பக்கம் 65).

விநாயகர் வழிபாடு தமிழகத்தில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மாமல்லன் நரசிம்மவர்மன் காலத்தில் அவ்வரசனுடைய சேனாதிபதியான பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனார்) காலத்தில் முதன் முதலாக உண்டாயிற்று என்னும் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு பண்டாரத்தார் அவர்கள் இவ்வாறு கூறுகிறார். விநாயகர் வணக்கம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் உண்டாயிற்று என்னும் கருத்து அண்மைக் காலத்தில் இருந்தது. ஆனால், கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பே களப்பிரர் ஆட்சிக் காலத்திலேயே ஏற்பட்டிருந்தது என்பது இப்போது ஆராய்ச்சியினால் தெரிகிறபடியால் இக்கடவுள் வாழ்த்து இந்நூலுக்கு உரியதே எனக் கொள்ளலாம் (இது பற்றி இன்னா நாற்பது என்னும் தலைப்பில் விளக்கிக் கூறியிருப்பது காண்க). பண்டாரத்தார் அவர்களே இந்நூலாசிரியராகிய மூலாதியார் "கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் ஆவார்" என்று கூறுகிறபடியால், இந்நூல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது என்பது தெளிவாகிறது.

திணைமாலை நூற்றைம்பது

இதுவும் அகப்பொருள் ஐந்திணைகளைக் கூறுகிற நூல். குறிஞ்சிக்கு 31 செய்யுளும் நெய்தலுக்கு 31 செய்யுளும் பாலைக்கு 30 செய்யுளும் முல்லைக்கு 31 செய்யுளும் மருதத்துக்கு 30 செய்யுளும் ஆக 153 செய்யுட்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், நூலின் பெயரிலிருந்து 150 செய்யுட்கள்தாம் இதற்குரியவை என்று தோன்றுகிறது. எஞ்சியுள்ள மூன்று செய்யுட்கள் பிற்காலத்து இடைச் செருகலாக இருக்குமோ, அல்லது, நூலாசிரியரே இச்செய்யுட்களையும் இயற்றியிருக்கலாமோ என்று ஐயம் ஏற்படுகிறது.

இந்நூலாசிரியரின் பெயர் கணிமேதாவியார். இவரே ஏலாதி என்னும் நூலின் ஆசிரியர் என்பதை முன்பு அறிந்தோம். இந்நூலின் பாயிரம் இது:

முனிந்தார் முனிவொழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியற் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா வின்றமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து

இந்தப் பாயிரத்தைப் பற்றித் திரு. சதாசிவபண்டாரத்தார் தம்முடைய கருத்தைக் கூறியுள்ளார்கள். “அதனை (பாயிரத்தை) நோக்குமிடத்து, இவ்வாசிரியர் காலத்தில் அகப்பொருளாகிய களவியலை வெறுத்துக் கொண்டிருந்த ஒரு குழுவினர் நம் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதும் அவர்கட்கு அதன் சிறப்பினை விளக்கி அவர்கள் கொண்டிருந்த வெறுப்பினைப் போக்க வேண்டியே இவ்வினிய நூலை இவர் இயற்றியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன."

சைவ வைணவருக்கும் பௌத்த சமணருக்கும் அகப்பொருள் பற்றிக் கருத்து வேற்றுமை அக்காலத்தில் இருந்தது. பக்தி இயக்கம் தோன்றிய அக்காலத்தில் அகப்பொருளுக்குப் பேரின்பக் (தெய்வ) காதல் கொள்கையைச் சைவ, வைணவ சமயத்தார் புதியதாகக் கற்பித்துத் தங்கள் சமயத்தில் செய்யுட்களை இயற்றினார்கள். ஆனால், இந்தக் கொள்கையைப் பௌத்த சமயத்தாரும் சமண சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளாமல் இக்கொள்கைக்கு மாறுபட்டிருந்தார்கள்.

இந்தப் பாயிரச் செய்யுளில் ‘ஈடிலா இன்தமிழால் யாத்த திணைமாலை' என்று கூறப்படுகிறது. இதில்‘இன்தமிழ்' என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது. என்பது தெரிகிறது. ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் பாயிரச்செய்யுளில் செந்தமிழ் என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது என்பதைக் காண்டோம்.2

கைந்நிலை

இதுவும் அகத்திணை பற்றிய நூல். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடல்களையுடைய அறுபது வெண்பாக்களைக் கொண்ட சிறு நூல். இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இச்சிறு நூலிலுள்ள சில வெண்பாக்கள் அழிந்து மறைந்துபோயின. இந்த நூலை 1931ஆம் ஆண்டு திரு. அநந்தராமையர் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டார்கள். இதுவும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் (மயிலை சீனி. வேங்கடசாமி, 19-ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், 1962; பதினெண் கீழ்க்கணக்கு வரலாற்றைக் காண்க).

அடிக்குறிப்புகள்

1. சீவகசிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலர், 1952, பக்கம் 217. சீவக சிந்தாமணி கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் என்று இந்நூலாசிரியர் முன்பு எழுதியது தவறு. ‘செந்தமிழ்ச் சிந்தாமணி - கால ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் சிந்தாமணி எழுதப் பட்டதென்று இந் நூலாசிரியர் எழுதியுள்ளார். அது தவறு என்பதும் கி.பி. 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இப்போது தெரிகிறது.

2. அகப்பொருளுக்குத் தமிழ்என்னும் பெயர் இருந்தது என்பதை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய ‘தமிழ் அகம்’ என்னும் கட்டுரையில் காண்க: Journal of Tamil Studies, No.3, Sep. 1973.