மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/013

இணைப்பு - 4

நக்கீரர் காலம்

சங்க காலத்தில் கி. பி. 200-க்கு முன்பு இருந்த நக்கீரர் வேறு, களப்பிரர் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனார் வேறு என்பதைக் கண்டோம். ஆனால், சில அறிஞர்கள் இரண்டு நக்கீரரும் ஒருவரே என்று கருதிக்கொண்டு இவர்கள் இருவரும் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் இருந்தவர்கள் என்று எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு எழுதுவதற்குக் காரணம் என்னவென்றால், இறையனார் அகப்பொருள் என்னும் களவியலுக்கு உரை எழுதியவர், அந்நூலின் உரைப்பாயிரத்தில், சங்க காலத்து நக்கீரரும் களவியலுக்கு முதன் முதல் உரை கண்ட நக்கீரரும் ஒருவரே என்று கருதும்படி எழுதியுள்ளதுதான். களவியல் உரைப்பாயிரம் கூறுவதை முழு உண்மை என்று இவர்கள் கருதிக்கொண்டு ஆராய்கிறபடியால் இரண்டு வேறு நக்கீரர்களும் ஒருவரே என்று எழுதியுள்ளனர். திரு. எம். எஸ். இராமசாமி அய்யங்கார் தாம் எழுதிய தென்னிந்திய சைன ஆய்வுகள் என்னும் ஆங்கில நூலில் (M. S. Ramaswamy Ayyangar, Studies in South Indian Jainism, 'Date of Nakkirar', 1922) இவ்வாறு எழுதுகிறார்:

“நக்கீரரும் செங்குட்டுவனும் சாத்தனாரும் ஆகிய இவர்கள் சமகாலத்தில், சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நக்கீரர் இறையனாரின் களவியலுக்கு உரை எழுதிய நக்கீரர் ஆவார்; இந்த உரையை அவர் எழுதாமல் வாய் மொழியாகவே கூறினார். ஆசிரியர் - மாணவர் என்னும் வழிமுறையில் பத்துத் தலைமுறை வரையில் இந்த உரை வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்தது. இந்தச் செய்தியை, பின்னர் உரையை ஏட்டில் எழுதி வைத்த ஆசிரியர் கூறுகிறார். உரையை ஏட்டில் எழுதிய உரையாசிரியர் எந்தக் காலத்தில் இருந்தவர் என்பதை, அவர் தம்முடைய உரையில் அடிக்கடி கூறுகிற நெல்வேலியிலும் சங்க மங்கையிலும் போரில் வென்றவனும் அரிகேசரி பராங்குசன் நெடுமாறன் என்னும் பெயர்களைக் கொண்டவனும் ஆகிய பாண்டியன் இருந்த காலத்தைக் கொண்டு தீர்மானிக்கலாம். வேள்விக்குடிச் செப்பேட்டிலிருந்து இந்தப் பாண்டியன் கி. பி. 770இல் வாழ்ந்திருந்த ஜடிலவர்மன் பராந்தகனுடைய தந்தை என்பதை அறிகிறோம். ஆகையினாலே களவியல் உரையை ஏட்டில் எழுதிய ஆசிரியர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வராதல் வேண்டும். இவர் காலத்திலிருந்து பத்துத் தலை முறைகளைக் கணக்கிடுவோமானால், முதல்முதல் உரை கூறிய நக்கீரர் காலம் கி. பி. 5ஆம் நூற்றாண்டு என்றாகிறது. கி. பி. 770இல் இருந்து 10 * 30ஐக் கழிக்க வேண்டும். ஆகவே, இந்த நூற்றாண்டே சங்கம் (கடைச்சங்கம்) இருந்த காலமாகும்.

இவர் ஆராய்ந்து கண்ட முடிவு சரியே. இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரத்தின்படி ஆராய்ந்து, களவியலுக்கு உரை கண்ட நக்கீரர் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்று கூறியது முற்றிலும் சரியே. இதையே நாமும் கூறியுள்ளோம். நக்கீரர் அடிநூல், நக்கீரர் நாலடி நானூறு, கயிலைபாதி காளத்திபாதித் திருவந்தாதி, திரு ஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுக்கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய நூல்களைப் பாடிய (இந்நூல்கள் சைவ சமயத் திருமுறைகளில் ஒன்றான பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன) நக்கீர தேவ நாயனார் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் என்று கூறினோம். ஆனால், இந்த நக்கீரர் கடைச்சங்க காலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனையும் நெடுநல்வாடை முதலான சங்கச் செய்யுட் களையும் பாடிய சங்க காலத்து நக்கீரர்களும் ஒருவரே என்று தெரிகின்றனர். இது வரலாற்றுக்குப் பெரிதும் மாறுபாடாக இருக்கிறது. ஆகவே, இறையனார் அகப்பொருள் உரை இரண்டு வேறு நக்கீரர்களை ஒருவரே என்று இணைத்துக் கூறுவது தவறு என்பது நன்றாகத் தெரிகிறது. சங்க காலத்தில் திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரரை நக்கீரதேவநாயனாருடன் பிணைத்துக் கூறினால் இறையனார் அகப்பொருள் உரைக்குப் பெருமதிப்பு ஏற்படும் என்னும் காரணம்பற்றி இரு நக்கீரர்களையும் ஒருவராகப் பிணைத்துக் கூறினார்கள் போலும். ஆனால் இரண்டு நக்கீரர்களும் வெவ்வேறு காலத்தில் இருந்தவர்கள் என்பதும் இருவரும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும் பின்பும் இருந்த வெவ்வேறு நக்கீரர்கள் என்பதும் தெரிகின்றன.

திரு. பி. தி. சீனிவாச அய்யங்கார், தாம் எழுதிய தமிழர் வரலாறு என்ற ஆங்கில நூலில் நான்கு நக்கீரர்கள் இருந்தனர் என்று கூறுகிறார். அவர்களில் முதல் நக்கீரர் திருமுருகாற்றுப் படையையும் பத்துப் பாட்டில் நெடுநல்வாடையையும் சங்கத் தொகைகளில் பல செய்யுட் களையும் பாடியவர். இரண்டாம் நக்கீரர், நாலடி நாற்பது என்னும் செய்யுள் இலக்கணம் எழுதியவர். மூன்றாம் நக்கீரனார், அகப் பொருளுக்கு (இறையனார் அகப்பொருளுக்கு) முதன்முதல் உரை கண்டவர். நான்காம் நக்கீரர், பிற்காலத்தில் (பதினோராந் திருமுறையில்) சைவப் பாடல்களைப் பாடியவர். இந்த நால்வரையும் தமிழ்ப்புலவர்கள் ஒருவர் என்று இணைத்துக் கூறுகிறார்கள் என்று எழுதுகிறார் (P. T. Srinivasa Aiyangar, History of the Tamils, 1929, p. 409)

இவர் கூறுகின்ற நான்கு நக்கீரர்களை இரண்டு நக்கீரர்களாக அடக்கலாம். ஒருவர் சங்கச் செய்யுட்களையும் நெடுநல் வாடையையும் திருமுருகாற்றுப்படையையும் பாடிய கடைச் சங்ககாலத்து நக்கீரர். இவர் கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இரண்டாம் நக்கீரர் நாலடிநாற்பது என்னும் யாப்பிலக்கண நூலை எழுதியவர் என்று யாப்பருங்கல உரைகாரர் கூறுகிறவரும் இறையனார் அகப்பொருள் உரைக்கு முதன்முதல் உரைகண்டவரும் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள தோத்திரப் பாடல்களைப் பாடியவரும் ஆவர்.

திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இறையனார் அகப்பொருள் உரை கூறுகிற நக்கீரர் காலத்தையறிய முடியாமலிருப்பது பற்றித் தம்முடைய பாண்டிய இராச்சியம் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “இறையனார் அகப்பொருளுக்குத் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வந்த நக்கீரனாருடைய உரை, இப்போதுள்ளபடி சங்கச் செய்யுட்களிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு நடக்காத நிகழ்ச்சிகளையும் மேற்கோள் காட்டுகிறது. இந்த மேற்கோள்களிலிருந்து (இவர் காலத்தைப்பற்றி} ஒன்றும் அறிய முடியவில்லை” என்று எழுதுகிறார். மேலும் அவர் எழுதுவது வருமாறு: “தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் சமகாலத்தில் இருந்தவரும் அவனுக்கு வயதில் இளையவருமான நக்கீரரின் காலத்தையறிய இறையனார் அகப் பொருள் உரையில் கூறப்படுகிற பாண்டிய அரசர் காலத்திலிருந்து பத்துத் தலைமுறையைப் பின்னால் கொண்டு கணிக்கும் முயற்சியும்

அவர் காலத்தைத் திருப்திகரமாகக் கூறமுடியவில்லை” (K.A. Nilakanta Sastri, The Pandian Kingdom).

இவர், நக்கீரனாரின் காலத்தை அறியமுடியாத காரணம் என்ன? இறையனார் அகப்பொருளின் உரைப்பாயிரம் பழைய காலத்து நக்கீரரையும் பிற்காலத்து நக்கீரரையும் ஒருவராக இணைத்துப் பொருத்திக் கூறுகிற தவறு காரணமாகக் காலத்தை அறிய முடிய வில்லை. இரண்டு நக்கீரர்களையும் தனித்தனிப் பிரித்துவிட்டுக் கவனித்துப் பார்த்தால் காலத் தெளிவாகத் தெரிகிறது. இறையனார் அகப்பொருளுக்கு உரை கண்ட நக்கீரர் கி. பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவர் என்பதும் தெளிவாகத் தெரிகின்றன.