மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3/017

நன்னர் வரலாறு

அரசியல் சூழ்நிலை

நம் ஆராய்ச்சிக்குரிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலே துளு நாட்டின் அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது என்பதைக் கூறுவோம். துளுநாட்டின் மேற்கில் அரபிக்கடல் இருந்தது. இக்கடல் வழியாக யவன, அராபிய வாணிகக் கப்பல்கள் துளுநாட்டுத் துறைமுகப்பட்டினங்களாகிய மங்களூர், நறவு முதலிய ஊர்களுக்கு வந்து போயின. துளுநாட்டுக்கு அருகிலே அரபிக் கடலிலே ‘கடல் துருத்தி’ என்னும் சிறு தீவுகள் இருந்தன. அவை துளு நாட்டுக்குரியவாக இருந்தன.

துளு நாட்டின் தெற்கே சேர நாடு இருந்தது. (சேர நாடு, இப்போது மலையாளம் எனப்படும் கேரள நாடாக மாறிப் போயிற்று) சேரர் என்னும் தமிழரசர்கள் சேரநாட்டை யரசாண்டார்கள். சேர மன்னருக்கும் துளு நாட்டு அரசருக்கும் எப்போதும் பகை. அவர்கள் அடிக்கடி ஒருவருக்கொருவர் போர் செய்துகொண்டிருந்தார்கள்.

துளு நாட்டின் கிழக்கே வடகொங்கு நாடும் கன்னட நாடும் இருந்தன. இப்போதுள்ள மைசூர் இராச்சியத்தில் பாய்கிற காவிரி ஆற்றின் தென்கரை வரையில் வடகொங்கு நாடு அக்காலத்தில் பரவியிருந்தது. வடகொங்கு நாட்டில் அக்காலத்தில் பேரரசர் இல்லை. புன்னாடு, எருமை நாடு, அதிகமான் நாடு (தகடூர்) முதலிய சிறுசிறு நாடுகளைச் சிற்றரசர்கள் அரசாண்டனர். ஆகவே. சேர சோழ, பாண்டிய அரசர்களும் துளு நாட்டு அரசரும் வடகொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கொள்ள அடிக்கடி போர் செய்துகொண்டிருந்தார்கள். அக்காலத்தில் வடகொங்கு நாடு இவ்வரசர்களின் போர்க்களமாக இருந்தது.

துளு நாட்டின் கிழக்கே (வடகொங்கு நாட்டுக்கு வடக்கே) கன்னட நாடு இருந்தது. அது அக்காலத்தில் சதகர்ணியரசரின் தக்காணப் பேரரசுக்கு உள்ளடங்கியிருந்தது. (சதகர்ணியரசருக்குச் சாதகர்ணி என்றும் சாதவாகனர் என்றும் நூற்றுவர் கன்னர் என்றும் பெயர்கள் வழங்கின.)

துளு நாட்டின் வடக்கே மேற்குக் கடற்கரையைச் சார்ந்திருந்த நாடுங்கூட அக்காலத்தில் சதகர்ணியரசரின் தக்காண இராச்சியத்துக்குட்பட்டிருந்தது. ஆனால், சாகர் என்னும் மேற்கு சத்ராப் அரசர்கள் அப்பகுதிகளைக் கைப்பற்றினார்கள். அவர்கள் கைப்பற்றிய அப்பகுதிகளை சதகர்ணியரசர் போரிட்டு மீட்டுக்கொண்டனர். மறுபடியும் சத்ராப் அரசர் அப்பகுதியைக் கைப்பற்றினர். மீண்டும் அதைச் சதகர்ணியரசர் மீட்டுக் கொண்டனர். இவ்வாறு அவ்வடபகுதி அடிக்கடி சத்ராப் - சதகர்ணியரசரின் போர்க்களமாக இருந்தது. ஆகவே, துளு நாட்டரசருக்கு அக்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் போர் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கவில்லை. தெற்கே சேர அரசருடனும் தென் கிழக்கே வடகொங்கு நாட்டுடனும் அவர்கள் அடிக்கடி போர் செய்ய வேண்டியிருந்தது.

துளு நாட்டரசர்

துளு நாட்டு (கொங்கணத்து) நன்னருடைய வரலாறு சங்க இலக்கியங்களிலிருந்து சிறிது கிடைக்கிறது. கொங்கணத்து அரசர் கொங்கணங் கிழார் என்று பெயர் பெற்றிருந்தனர். துளு நாடு கொங்கணம் என்றும் கொண்கானம் என்றும் கொண் பொருங்காணம் என்றும் கூறப்பட்டது. அவர்கள் குடும்பப் பெயர் நன்னன் என்பது. அவர்கள் நன்னன் வேண்மான் என்றும் கூறப்பட்டனர். நன்னன் குடும்பப் பெண்டிர்‘ நன்னன் வேண்மாள் என்றும் கூறப்பட்டனர் (சிலம்பு, காட்சிக்காதை 5 ஆம் அடி. அரும்பதவுரை காண்க).

கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் துளு நாட்டை அரசாண்ட நன்ன அரசரைப் பற்றித் தமிழில் சங்க இலக்கியங்களில் மட்டும் கிடைக்கின்றன. வேறு மொழி நூல்களில் இவ்வரலாறுகிடைக்கவில்லை.

நன்னர்களில் மூன்று அரசரைப் பற்றிச் சில செய்திகள் சங்க நூல்களிலிருந்து தெரிகின்றன. அந்த மூன்று அரசரும் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இருந்தவர் எனத் தெரிகின்றனர். இவர்களுக்கு முன்பிருந்த நன்னர்களைப் பற்றியும் பின்பு இருந்த நன்னர்களைப் பற்றியும் ஒன்றுந் தெரியவில்லை. இந்த மூன்று நன்னர்களை முதலாம் நன்னன், இரண்டம் நன்னன், மூன்றாம் நன்னன் என்று பெயர் இட்டு ஆராய்வோம்.

முதலாம் நன்னன் (ஏறத்தாழ கி.பி. 100 முதல் 125)

இவன் போரில் சிறந்த வீரனாக இருந்தான். பிண்டன் என்னும் வலிமிக்க சிற்றரசனுடன் போர் செய்து அவனை வென்றான். அந்தப் போர் எங்கு நடந்தது, அந்தப் பிண்டன் என்பவன் யார் என்பன தெரியவில்லை. பரணர் என்னும் புலவர் இச்செய்தியைக் கூறுகிறார்.

உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல்
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ...

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

(அகம் 152: 9-12)

இந்த நன்னன் வேறு அரசர்களுடன் போர் செய்து அவர்களை வென்றான் என்று கூறப்படுகிறான். இவன் வென்ற வேறு அரசர் பெயர் கூறப்படவில்லை. தான் போரில் வென்ற அரசருடைய மனைவியரின் கூந்தலை மழித்து அக்கூந்த லினால் கயிறு (முரற்சி) திரித்தான் என்று கூறப்படுகிறான். இச்செய்தியை பரணர் என்னும் புலவரே கூறுகிறார்.

விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

கூந்தல் முரற்சியிற் கொடிதே

(நற்.270:8-10)

இவன் இரவலருக்கு யானைகளைப் பரிசு வழங்கினான்.

இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

(அகம்152:11-12)

இவன் பெண் கொலை புரிந்த நன்னன் என்றுங் கூறப்படுகிறான். அச்செய்தி இது:

இவனுக்குரிய தோப்பு ஒன்றில் மாமரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஓரமாகச் சிற்றாறு ஒன்று பாய்ந்து கொண்டிருந்தது. அந்த மரத்திலிருந்த மாங்கனியொன்று சிற்றாற்றில் விழுந்து நீரில் மிதந்து கொண்டு போனதைச் சிறிது தூரத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒரு பெண் மகள் எடுத்துத் தின்றாள். அப்பெண் அக்கனியைத் தின்ற செய்தியை நன்னன் அறிந்தான். சினங்கொண்டு அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான்.

அரசருக்குரிய பொருள்களைக் களவு செய்தவருக்கு அக்காலத்தில் கொலைத் தண்டனை விதிப்பது வழக்கம். பாண்டியனுடைய பொற்சிலம்பைக் களவு செய்தான் என்று (பொய்யாகக்) குற்றஞ்சாட்டப்பட்ட கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது, அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த இந்தச் சட்டங் காரணமாகத்தான்.

அரசனாகிய நன்னனுடைய மாங்கனி என்பதையறியாமல், நீரில் மிதந்து வந்த மாங்கனியை எடுத்துத் தின்ற குற்றத்துக்காக அப்பெண்ணுக்குக் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப் பெண்ணின் தந்தை நன்னனை வேண்டிக்கொண்டான். அப்பெண் அறியாமல் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுமென்றும், அந்தக் குற்றத்துக்குத் தண்டமாகத் தொண்ணூற்றொன்பது யானைகளையும் அப்பெண்ணின் எடையளவு பொன்னையுங் கொடுப்பதாக வும் அப்பெண்ணைக் கொல்லாமல் விடவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான். நன்னன் அவ்வேண்டுகோளுக்கு உடன்படாமல் அப் பெண்ணைக் கொன்று விட்டான். இக்கொடுஞ்செயலினால் மக்கள் அவனை வெறுத்துப் ‘பெண் கொலை புரிந்த நன்னன்’ என்று தூற்றினார்கள். இச்செய்தியைப் பரணர் என்னும் புலவர் கூறுகிறார்.

மண்ணிய சென்ற ஒண்ணுதுல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற் றொன்பது களிற்றொடு அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல

வரையா நிரையத்துச் செலீஇயரோ

(குறுந்தொகை292:1-6)

இக்கொடுஞ்செயலினால் இவன் மீது வெறுப்படைந்தனர் கோசர் என்னும் இனத்தார். கோசர் போர்த்தொழில் செய்பவர். அவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து நன்னனுடைய மாமரத்தை வெட்டி விட்டனர்.

அரசனுடைய மாமரத்தை அவனுடைய ஆட்சிக் குட்பட்ட மக்கள் வெட்டினார்கள் என்றால், அச்செயல் அரசனை அவமானப்படுத்தும் செயலாகும். கோசர் ஏதோ காரணத்தைக் கண்டுபிடித்து அக்காரணத்தை ஆதாரமாகக் கொண்டு நன்னனுடைய மாமரத்தை வெட்டிவிட்டனர். இச்செய்தியையும் பரணரே கூறுகிறார்.

நன்னன்
நறுமா கொன்று ஞாட்பிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே

(குறுந்தொகை73:2-5)

(குறிப்பு :இச்செய்யுளில் ‘நறுமாகொன்று’ என்று இருப்பதைத் தவறாகப் பொருள் செய்துகொண்டார் சரித்திரப் பேராசிரியர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள். கோசர்,

நன்னனுடைய பட்டத்து யானையைக் கொன்றுவிட்டனர் என்று அவர் எழுதியுள்ளார்1, மா என்பதற்கு விலங்கு (யானை) என்றும் பொருள் உண்டாகையால் அவ்வாறு அவர் எழுதி விட்டார். அது தவறு. மா என்பது இங்கு மாமரத்தையே குறிக்கும்.)

கடல் துருத்திக் குறும்பர்

நன்னனுடைய துளு நாட்டுக்கு அருகிலே கடலிலே ஒரு சிறு தீவு இருந்தது. (இத்தீவைப் பற்றி முன்னமே கூறியுள்ளோம்.) அத்தீவில் குறும்பனாகிய ஒரு வீரன் இருந்தான். அவன் அந்தத்தீவில் கடம்ப மரத்தைக் காவல்மரமாக வைத்துக் கொண்டிருந்தான். அவன் தன்னைச் சார்ந்த வீரர்களுடன் சேர்ந்து, அக்காலத்தில் ரோமாபுரியிலிருந்து வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுக்கு வந்துகொண்டிருந்த யவனக் கப்பல்களைக் கொள்ளையடித்து அக்கப்பல்கள் சேரநாட்டுக்கு வருவதைத் தடுத்துக்கொண்டிருந்தான். இவ்வாறு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. இந்தக் தீவிலிருந்த குறும்பச் சிற்றரசன் நன்னனுக்குக் கீழடங்கியவன். நன்னனுடைய தூண்டுதலினாலே அக்குறும்பன் யவனக் கப்பல்களைச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வராதபடி கொள்ளையடித்துக் கொண்டிருந்தான். கி. பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்த பிளைனி என்னும் யவனர், இவ்விடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்ததை எழுதியிருக்கிறார்.

கடல் துருத்தியில் (கடல் தீவில்) இருந்துகொண்டு யவன வாணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தபடியால், யவன வாணிகக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டது. யவனக் கப்பல்கள் துளுநாட்டுக் கடற்கரையைக் கடந்துதான் சேரநாட்டுக்கு வரவேண்டும். யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வருவது தடைப்பட்டபடியால் சேரநாட்டு வாணிகம் பெரிதும் குறையத் தொடங்கிற்று. இதனால், கடல் துருத்தியில் (தீவில்) இருந்த குறும்பரை அடக்கவேண்டியது சேர அரசனின் கடமையாக இருந்தது.

கடற் போர்

அக்காலத்தில் சேரநாட்டையரசாண்ட சேரஅரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன். இந்த நெடுஞ்சேரலாதனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (சேரன் செங்குட்டுவன்), ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இளங்கோஅடிகள் என்பவராவர். இதனைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து, 5ஆம் பத்து, 6ஆம் பத்துப் பதிகங்களினாலும் சிலப்பதிகாரம் வரந்தருகாதை (171-181) பதிகம் இவற்றின் உரைகளினாலும் அறிகிறோம்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடல் தீவிலிருந்த குறும்பனை அடக்குவதற்காக அவன் மேல் படையெடுத்தான். இவன், கடற்படை யொன்றைத் தன் மகனாகிய செங்குட்டுவன் தலைமையில் அனுப்பினான். அக்காலத்தில் இளவரசனாக இருந்த செங்குட்டுவன் கடற்படையோடு சென்று கடல் தீவிலிருந்த குறும்பருடன் போர்செய்து அவர்களை வென்று அவர்கள் காவல் மரமாக வளர்த்து வந்த பேர்போன கடம்ப மரத்தைத் துண்டு துண்டாக வெட்டி அதனால் முரசுசெய்தான். கடல் குறும்பர்கள் அடியோடு ஒழிந்தனர். அதன் பிறகு யவனக் கப்பல்கள் வாணிகத்தின் பொருட்டுச் சேர நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வாணிகஞ் செய்தன.

கடல் துருத்திப் போர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில், அவன் மகனான சேரன் செங்குட்டுவன் இளவரசனாக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அதனால் கடற்போரை வென்றவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் சேரன் செங்குட்டுவன் என்றும் பதிற்றுப் பத்து 2 ஆம் பத்தும் 5 ஆம் பத்தும் கூறுகின்றன. செங்குட்டுவன், கடற்போரைத் தானே முன்னின்று நடத்தி வெற்றிபெற்ற படியால் அவன் ‘கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற்போரை வென்ற செய்தியைப் பதிற்றுப்பத்து 2ஆம் பத்து இவ்வாறு கூறுகிறது:

பவர் மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
நாரரி நறவின் ஆர மார்பின்

போரடு தானைச் சேர லாத

(2ஆம் பத்து 1:12-16)

என்று கூறுகிறது.

இதில், ‘திரள் பூங்கடம்பின் கடியுடை முழு முதல் துமிய ஏய்’ என்று கூறப்படுவது காண்க (ஏய்- ஏவி). நெடுஞ்சேரலாதன் கடற்போரைச் செய்யத் தன் மகனை ஏவினான் என்பதும் தான் நேரில் அப்போரைச் செய்யவில்லை என்பதும் இதனால் தெரிகின்றன.

இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்

நெடுஞ்சே ரலாதன் வாழ்க அவன் கண்ணி

(2ஆம் பத்து 10;2-5)

என்று நெடுஞ்சேரலாதன் தன் கடற்போர் வென்ற செய்தி கூறப்படுகிறது. நெடுஞ்சேரலாதனுடைய மகனான கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் இக்கடற்போரை நேரில் சென்று நடத்தி வெற்றி பெற்றதைப் பதிற்றுப்பத்து 5ஆம் பத்துச் செய்யுட்கள் கூறுகின்றன.

தானை மன்னர்
இனி யாருளரோ நின்முன்னு மில்லை
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவளி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேலிடுபு

முழங்கு திரைப் பனிக்கடல் மறுத்திசினோரோ

(5ஆம் பத்து 5: 17-22)

இதில், கடற்போரைச் செய்தவர் செங்குட்டுவனுக்கு முன்னர் ஒருவருமிலர் என்று கூறப்படுவது காண்க. இதனால், கடற்போரைத் தன் தந்தையின் பொருட்டு முன்னின்று நடத்தியவன் செங்குட்டுவனே என்பது தெளிவாகத் தெரிகின்றது.

செங்குட்டுவன் கடற்போரைச் செய்ததைக் கூறுகிற செய்யுட்கள் வேறு சில உள்ளன. அவற்றையெல்லாம் இங்குக் காட்ட வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.

சேர அரசர் கடல் தீவிலிருந்த குறும்பரை வென்றதற்கும் துளு நாட்டு நன்னருக்கும் என்ன பொருத்தம், என்ன தொடர்பு என்று வாசகர்கள் கருதக்கூடும்.

கடல் தீவில் இருந்த குறும்பருக்கும் துளு நாட்டு நன்னருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.2 இரண்டு காரணங்களைக் கொண்டு இருவருக்கும் தொடர்புண்டென்பதை யூகிக்கலாம். கடல்தீவு மிகச் சிறியது. அத்தீவிலிருந்தவர் தங்கள் தீவுக்கு அடுத்திருந்த நாட்டினரின் உதவி இல்லாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு உடையவர் அல்லர் என்பது முதல் காரணம். அந்தக் கடல்தீவு துளு நாட்டுக்கு அருகில் இருந்தபடியால் துளு நாட்டு அரசரின் ஆதிக்கத்தில் அது இருந்திருக்க வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.

எனவே, துளு நாட்டு நன்னனின் ஆதிக்கத்திலிருந்த கடல்தீவுக் குறும்பர், நன்னனுடைய ஏவுதலின்மேல், யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகங்களுக்குப் போகாதபடி குறும்பு செய்திருக்க வேண்டும், இக்காரணம் பற்றித்தான் சேர மன்னர் கடல் தீவுப் போரைச் செய்தது பற்றி இங்குக் கூறவேண்டியதாயிற்று.

முதலாம் நன்னனுடைய வரலாறு முழுமையும் தெரியவில்லை. ஆனால், அவனுக்கும் சேரஅரசருக்கும் பரம்பரையாகப் பகைமை இருந்தது என்பது தெரிகிறது. இவன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனின் சமகாலத்தவனாதலால், அவன் இருந்த காலமாகிய கி.பி. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் இருந்தவனாதல் வேண்டும். அதாவது உத்தேசமாகக் கி.பி 100 முதல் 125 வரையில் முதலாம் நன்னன் இருந்தான் என்று கொள்ளலாம்.

இரண்டாம் நன்னன் (ஏறத்தாழ கி.பி. 125-150)

முதலாம் நன்னனுக்குப் பிறகு அவன் மகனான நன்னன் இராண்டாமவன் துளு நாட்டை யரசாண்டான். இவன் துளு இராச்சியத்தில் எல்லையை விரிவுபடுத்த முயன்றான். அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியையுங் கண்டான். சேர இராச்சியத்தின் வடக்கிலிருந்த சேரருக்கு உரிய பூழிநாட்டை வென்று அதைத் தன் துளு நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். மேலும், இவனுடைய துளு நாட்டுக்குக் கிழக்கே இருந்த கொங்கு நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றவும் முயற்சி செய்தான்.

இவனுடைய சேனைத் தலைவன் மிஞிலி என்பவன். மிஞிலி சிறந்த போர் வீரன். இவன் பாரம் என்னும் ஊரில் இருந்தான்.

முதலாம் நன்னன் காலத்துக்கு முன்பிருந்தே சேர அரசர் தென்கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றித் தங்கள் சேர இராச்சியத்தோடு சேர்த்துக்கொண்டனர். அக்காலத்தில் கொங்கு நாட்டைச் சிறுசிறு குறுநில மன்னர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பேரரசர் இருந்தது போலக் கொங்கு நாட்டில் பேரரசன் இல்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த கொங்கு நாட்டைச் சேர அரசரும் துளு நாட்டு அரசரும் முறையே தென் கொங்கு நாட்டையும் வடகொங்கு நாட்டையும் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக்கொண்டிருந்தார்கள். சேர அரசரும் துளு மன்னனும் கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதைக் கண்ட சோழ, பாண்டிய அரசர்களும் கொங்கு நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்தார்கள். இவ்வாறு, கொங்கு நாடு கடைச்சங்க காலத்தின் இறுதியில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டில்) தமிழ் அரசர்களின் பொதுப் போர்க்களமாக இருந்தது.

கொங்கு நாட்டைச் சேர்ந்த உம்பற்காடு (யானை மலைப் பிரதேசம்) என்னும் பிரதேசத்தைச் சேரர் முதலில் கைப்பற்றினர். உம்பர் காட்டை வென்று அங்குத் தன் ஆட்சியை நிறுவினவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் (3 ஆம் பத்து, பதிகம்) கொங்கு நாட்டின் ஒரு பகுதியான கொல்லிக் கூற்றத்தை அக்காலத்தில் ஓரி என்னும் சிற்றரசன் அரசாண்டான். அப்போது, சேர அரசன், மலையமான் திருமுடிக்காரி என்பவனைத் தன் சேனைத் தலைவனாகக் கொண்டு அவன் மூலமாக ஓரியைக் கொன்று ஓரியின் கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றினான். இவ்வாறு சேரர் கொங்கு நாட்டில் ஆதிக்கம் பெறுவது சோழ, பாண்டியருக்கு விருப்பமில்லை. மேலும், கொல்லிக் கூற்றத்துக்கு அருகில் இருந்த கொங்கு நாட்டின் மற்றொரு சிற்றரசனாகிய தகடூர் அதிகமான், சேரரும் துளு நாட்டு நன்னரும் கொங்கு நாட்டைக் கைப்பற்றிக் கடைசியில் தன்னையும் வென்றுவிடுவார்கள் என்று அஞ்சினான். இவ்வாறிருந்த போது பசும்பூண் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னன், தென் கொங்கு நாட்டில் சேர அரசர் முன்னமே கைப்பற்றியிருந்த ஊர்களைத் தவிர ஏனைய ஊர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

பசும்பூண் பாண்டியன்

பசும்பூண் பாண்டியனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிலர் தவறாகக் கருதுகிறார்கள். பசும்பூண் பாண்டியன் வேறு, நெடுஞ்செழியன் வேறு. தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பசும்பூண் செழியன் என்னும் பெயரும் உண்டு (புறம் 76: 9). பசும்பூண் செழியன் வேறு, பசும் பூண் பாண்டியன் வேறு. நெடுஞ்செழியனுக்கு மூன்று தலைமுறைக்கு முன்பு இருந்தவன் பசும்பூண் பாண்டியன். இதற்குச் சங்க நூல்களில் சான்றுகள் உள்ளன. இச்சான்றுகளைக் காட்டி விளக்குவதற்கு இது இடம் அன்று.

பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். பசும்பூண் பாண்டியன், கொங்கு நாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவர்களில் முக்கியமானவன், தகடூரை யரசாண்ட அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த நெடுமிடல் அஞ்சி என்பவன். பாண்டியனுக்குக் கீழடங்கிய நெடுமிடல் அஞ்சி அப்பாண்டியனுடைய சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டின் சில பகுதிகளை வென்று கைப்பற்றிக் கொண்டதை,

வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி
நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்

என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ...

கொங்கு நாட்டுச் சிற்றரசர்களில் முதன்மையானவர் தகடூர் அரசரான அஞ்சியரசர்கள். அவ்வரச பரம்பரையில் வந்த நெடுமிடல் அஞ்சி, பசும்பூண் பாண்டியனுக்குக் கீழடங்கியதோடு அப் பாண்டியனுடைய சேனாதிபதியாகவும் அமைந்துவிட்டது கண்டு கொங்கு நாட்டார் அவனை வெறுத்தார்கள்.

அக்காலத்தில் சேர நாட்டு மன்னர் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு அமையாமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சங்க காலத்திலே கொங்கு நாட்டைச் சிற்றரசர் பலர் ஆட்சி செய்திருந்தார்களே தவிர முடியுடைய பேரரசர் ஒருவரும் ஆட்சி செய்ய வில்லை. ஆகவே, சேர, சோழ, பாண்டிய அரசர் அச்சிற்றரசர்களை எளிதில் வென்று கொங்கு நாட்டைச் சிறிதுசிறிதாகக் கைப்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

கொங்கு நாட்டைக் கொஞ்சங்கொஞ்சமாகச் சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே, அது காரணமாகச் சேர அரசர், பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான். அவ்வாறு நடந்த சில போர்களில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம்.

நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து
(பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11)

என்றும்

நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்(அகம் 266: 12)

என்றும் கூறுவது காண்க.

பாண்டியனின் துளு நாட்டுப் போர்

துளு நாட்டு நன்ன அரசர் தங்கள் நாட்டுக்கு அருகில் இருந்த வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் பெற முயன்றார்கள் என்று கூறினோம். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் பகைவராயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அவனுடைய சேனைத் தலைவனான அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்கருகில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். இதை

கறையடி யானை நன்னன் பாழி
ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க்
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி,
புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர்
வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு
(அகம் 142:9-14)

என்று அகப்பாட்டுக் கூறுகிறது.

அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் இறந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது.

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவான் கொங்கர் ஆர்ப்பு
(குறுந். 393; 3-6)

என்று அச்செய்யுள் கூறுவது காண்க.

பசும்பூண் பாண்டியனுடைய துளு நாட்டுப் போர் தோல்வியாக முடிந்தது. துளு நாட்டரசன் நன்னன் இரண்டாமவன் வெற்றி பெற்றான். அதன்பிறகு பசும்பூண் பாண்டியனுடைய செய்தி ஒன்றும் தெரியவில்லை.

பாண்டியன் போர் முடிந்த பிறகு துளு நாட்டின் மேல் சேரன் போர்தொடுத்தான். சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தனக்கு அடங்காமலும் தனக்கு எதிராகப் போர் செய்துகொண்டுமிருந்த நன்னனை அடக்குவதற்காகத் துளு நாட்டின் மேல் போர் தொடுத்தான்.

சேரன் போர்

நன்னன் இரண்டாமவன் தன் மேல் படையெடுத்துவந்த சேரனுடன் போர் செய்யவேண்டியவனானான். இந்தப் போர் மிகக் கடுமையாக இருந்தது. சேரன் நன்னனை அடியோடு அழிக்க வேண்டும் என்னும் உறுதியுடன் படையெடுத்துப் போய்ப் போர் செய்தான். சேரன் நன்னனை அழிக்கவேண்டிய காரணங்கள் மூன்று இருந்தன.

முதலாவது, நன்ன அரசர், சேர நாட்டுக்கு வரும் யவன வாணிகக் கப்பல்களைச் சேர நாட்டுக்கு வராதபடி தடுத்துக் குறும்பு செய்து கொண்டிருந்தார்கள். இந்தக் குறும்பை நார் முடிச்சேரலின் தந்தையராகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (முதலாம் நன்னன் காலத்தில்) வென்றான் என்பதை மேலே கூறினோம்.

இரண்டாவது காரணம், நன்னன் இரண்டாமவன் சேர நாட்டுக்குரிய பூழி நாட்டைப் பிடித்துக் கொண்டான். இது களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் காலத்தில் நடந்தது. ஆகவே, இழந்த பூழி நாட்டை மீட்டுக்கொள்ள வேண்டியது சேரனுடைய கடமையாக இருந்தது.

மூன்றாவது காரணம், நன்னன் வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டைக் கைப்பற்றிக்கொண்டதாகும். அக்காலத்தில் புன்னாடு நீலக்கல் சுரங்கங்களுக்குப் பேர் பெற்றிருந்த செழிப்பான நாடாக இருந்தது. புன்னாட்டு நீலக் கற்களை உரோம தேசத்தார் விரும்பி வாங்கினார்கள். தமிழகத் துறைமுகங்களுக்கு வந்த யவனக் கப்பல் வாணிகர் சேர நாட்டு மிளகையும் புன்னாட்டு நீலக்கற்களையும் அதிக விலைகொடுத்து வாங்கிக்கொண்டு போனார்கள். கி.பி. 140க்கும் 169க்கும் இடையில் இருந்த தாலமி என்னும் யவனர் தமது நூலில் புன்னாட்டு நீலக்கற்களைப் பற்றியும் எழுதியுள்ளார். அவர் புன்னாட்டைப் பௌன்னாட என்று கூறுகிறார். புன்னாடு உள்நாட்டிலிருந்தது என்றும் அங்கு நீலக்கற்கள் கிடைத்தன என்றும் அந்நாட்டைக் கடற் கொள்ளைக்காரர் அரசாண்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார்.

கடற்கொள்ளைக்காரர் அரசாண்டனர் என்று தாலமி கூறுவது, துளு நாட்டு நன்னர்களையாகும். நன்ன அரசர்கள் கடற் கொள்ளைக்காரரை ஆதாரித்தவர்கள். யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுக்கு வராதபடி கடற்கொள்ளைக்காரர்களைக் கொண்டு அவர்கள் தடுத்து வந்தார்கள். கடற்கொள்ளைக்காரரை ஆதரித்த நன்னன் புன்னாட்டைக் கைப்பற்றியிருந்தபடியால், புன்னாட்டைக் கடற்கொள்ளைக்காரர் அரசாண்டனர் என்று தாலமி கூறினார் போலும்.

புன்னாட்டின் தலைநகரம் கிட்டூர் என்பது. அதைச் சங்கச் செய்யுள் கட்டூர் என்று கூறுகிறது (அகம் 44: 10;9 ஆம் பத்து; 2:2; 10:30). பாசறைக்கும் கட்டூர் என்பது பெயர். ஆனால் இந்தக் கட்டூர் பாசறை அன்று. கட்டூராகிய கிட்டூர் பிற்காலத்தில் கிட்டிபுரம் என்று வழங்கப்பட்டது. அவ்வூர், காவிரி ஆற்றின் கிளை நதியாக கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்தது. புன்னாடு பிற்காலச் சரித்திரத்தில் ‘புன்னாடு ஆறாயிரம்’ என்று பெயர் பெற்றிருந்தது. (சங்க காலத்தில் வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த புன்னாடு இப்போது மைசூர் இராச்சியத்துடன் இணைந்திருக்கிறது)

நீலக்கல் சுரங்கத்துக்குப் பேர் போன புன்னாட்டைத் துளு நாட்டு நன்னன் கைப்பற்றிக்கொண்டபடியால், கொங்கு நாட்டில் அவனுடை ஆதிக்கம் பெருகும் என்றும் அதனால் தன்னாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிந்தான் சேர மன்னன். ஆகவே, களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல், நன்னனை அடக்கத் துளு நாட்டின் மேல் படையெடுத்தான். நன்னனுடைய பிடியிலிருந்து புன்னாட்டை விடுவிப்பதற்காகப் புன்னாட்டின் காப்பாகச் சேரன் நன்னன்மேல் படையெடுத்துச் சென்றான்.

முதற்போர்

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், தன்னுடைய உறவினனும் சேனைத் தலைவனும் ஆகிய வெளியன் வேண்மான் ஆய்எயினன் என்பவன் தலைமையில் தன் சேனையைத் துளு நாட்டின் மேல் போர் செய்ய அனுப்பினான். வெளியன் வேண்மான் ஆய்எயினன் நன்னன் மேல் படையெடுத்துச் சென்றான். அவனை நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் இடத்தில் எதிர்த்தான். கடுமையாக நடந்த அந்தப் போரில் ஆய்எயினன் இறந்து போனான். அதனால், சேரன் தோல்வியடைந்தான். இதனை,

பொலம்பூண் நன்னன் புன்னாடு கடிந்தென
யாழிசை மறுகிற் பாழி யாங்கண்
அஞ்ச லென்ற ஆஅய் எயினன்
இகலடு கற்பின் மிஞிலியோடு தாக்கித்
தன்னுயிர் கொடுத்தனன் சொல்லிய தமையாது
(அகம்396: 2-6)

என்பதனாலும்,

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவிற் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென
(அகம் 208:5-9)

என்பதனாலும்,

ஒன்னார்

ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ
முருகுறழ் முன்பொடு பொருதுகளஞ் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென
(அகம் 181: 3-7)

என்பதனாலும்,

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருதுகளம் பட்டென
(அகம்148: 7-8)

என்பதனாலும் அறிகிறோம்.

இரண்டாம் நன்னனுடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் இப்போர்களை வென்றான். இந்த மிஞிலி, பாரம் என்னும் ஊரின் தலைவன் என்று முன்னமே கூறினோம். இவன், பாண்டியன் சேனாபதியாக அதிகமான் நெடுமிடல் அஞ்சியையும், சேரன் படைத் தலைவனான வெளியன் வேண்மான் ஆய் எயினனையும் போரில் வென்றதை மேலே கூறினோம்.

இரண்டாம் போர்

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் துளு நாட்டின் மேல் செய்த முதற் போரிலே தோல்வியடைந்தான். ஆனாலும். அவன் போர் முயற்சியை விட்டுவிடவில்லை. தானும் தன்னுடைய தம்பியாகிய சேரன் செங்குட்டுவனும் இளையதம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் முனைந்து நின்று இரண்டாம் முறையாகத் துளு நாட்டின் மேல் போர் செய்தார்கள். இது மும்முனைப் போராக இருந்தது. நார்முடிச்சேரல் துளு நாட்டின் தென்பகுதியில் நன்னனை எதிர்த்தான். சேரன் செங்குட்டுவன் துளு நாட்டின் மேற்குக் கடற்கரையோரமாகச் சென்று துளு நாட்டை எதிர்த்தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் துளு நாட்டின் கிழக்குப் பக்கத்தை வடகொங்கு நாட்டில் (புன்னாட்டில்) இருந்து எதிர்த்தான்.

இப்போர் நிலைச்செருவாகச் சிலகாலம் நடந்தது. இந்த மும்முனைப் போரில் நன்னன் இரண்டாவன் தோல்வியடைந்தான். நன்னனும் அவனுடைய சேனாதிபதியாகிய மிஞிலியும் போரில் இறந்து போனார்கள். இப்போர் கடம்பின் பெருவாயில் (வாகைப்பெருந்துறை) என்னும் இடத்தில் நடந்தது. இரண்டாம் போர் நார்முடிச்சேரலுக்கு முழு வெற்றியாக இருந்தது. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், தான் இழந்திருந்த பூழி நாட்டை மீட்டுக்கொண்டதோடு துளு நாட்டையும் தனக்குக் கீழ் படுத்தினான். நார்முடிச் சேரல் துளு நாட்டுப் போரில் அடைந்த வெற்றியைப் பதிற்றுப்பத்து 4ஆம் பத்து இவ்வாறு கூறுகிறது.

ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பிற்
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை யழித்து அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச்

செருப்பல செய்து செங்களம் வேட்டு (பதிகம் 5-11)

பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாகைக் கடிமுதற் றடித்த
தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்
(4ஆம் பத்து 10:14-16)

நார்முடிச் சேரலின் தம்பியாகிய சேரன் செங்குட்டுவன், இப்போரில் துளு நாட்டின் கடற்கரைப் பகுதியில் இருந்த வியலூர், கொடுகூர் என்னும் ஊர்களைக் கைப்பற்றிய செய்தியைக் கீழ்க்கண்ட செய்யுள்களினால் அறிகிறோம்:

உறுபுலி யன்ன வயவர் வீழச்
சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி
அக்கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து
(5ஆம் பத்து:10-12)

கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின்
சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின்
(சிலம்பு, நடுகல்.114-115)

இப்போரின் போது செங்குட்டுவன், துளு நாட்டின் துறை முகப்பட்டின மான நறவு என்னும் பட்டினத்தையும் பிடித்தான்.

இவ்வாறு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தன் தம்பியருடன் சேர்ந்து துளு நாட்டை வென்று அடக்கினான். இவ் வெற்றியைக் கல்லாடனார் மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய
வலம்படு கொற்றந் தந்த வாய்வாள்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடுதந் தன்ன வளம்
(அகம்199:18-23)

பிறகு, துளு நாடு சேரரின் ஆட்சிக்குட்பட்டது.

நன்னன் மூன்றாவன் (ஏறத்தாழ கி. பி. 150-180)

இரண்டாம் நன்னனுடைய மகனான மூன்றாம் நன்னன் சேரருக்கு அடங்கித் துளுநாட்டையரசாண்டான். அவன், தான் சேரனுக்கு அடங்கியவன் என்பதற்கு அடையாளமாக நன்னன் உதியன் என்று பெயர் பெற்றிருந்தான். நன்னன் என்பது துளு நாட்டு அரசரின் குடிப் பெயர். உதியன் என்பது சேரநாட்டு அரசரின் குடிப்பெயர். எனவே, நன்னன் உதியன் என்பதற்குச் சேரர் ஆட்சிக்கு உட்பட்ட நன்னன் என்பது பொருள். ‘நன்னன் உதியன் அருங்கடிப்பாழி’ (அகம் 258:1)

சேரர் துளு நாட்டைத் தமது ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்த பிறகு புன்னாடும் அதன் தலைநகரமான கட்டூரும் சேரர் ஆட்சிக்குட்பட்டன.

நன்னன் மூன்றாவன் சேர அரசர்களுக்கு அடங்கித் துளு நாட்டை யரசாண்டான். பெரும்பூட்சென்னி என்னும் சோழன் வட கொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் படையெடுத்துச் சென்றபோது, சேர அரசன் சார்பாக அக்கட்டூர்ப் போரில் சோழனை எதிர்த்த சிற்றரசர்களில் இந்த நன்னன் உதியனும் ஒருவன் என்று தெரிகிறான். கட்டூரின் மேல்படையெடுத்துவந்த பெரும் பூட் சென்னியின் சேனைத்தலைவனாகிய பழையன் என்பவனை எதிர்த்தவர்கள் இந்த நன்னனும் ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை என்பவர்களும் ஆவர்.

நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி
துன்னருங் கடுந்திறல் கங்கன், கட்டி
பொன்னணி வல்விற் புன்றுறை என்றாங்கு
அன்றவர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டென
(அகம் 44:7-11)

நன்னன் மூன்றாவனுக்குப் பிறகு துளு நாட்டை யரசாண்டவர் யார் என்பது தெரியவில்லை. மூன்றாம் நன்னனுடைய பரம்பரையினரே தொடர்ந்து ஆண்டிருக்கக்கூடும். துளு நாட்டை வென்ற பிறகு நார்முடிச் சேரல் செங்குட்டுவன் இவர்களின் தம்பியாகிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், துளு நாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய நறவு (நாறாவி) என்னும் பட்டினத்தில் தங்கியிருந்தான் என்று கூறப் படுகிறான்.

அறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடை மறவர்
பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கடல் ஊதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே
(6ஆம் பத்து 10:8-12)

துளு நாட்டு நன்னரைப் பற்றிச் சங்க நூல்களில் இவ்வளவுதான் காணப் படுகின்றன. நன்னருடைய வரலாறு இவ்வளவோடு முற்றுப் பெறுகிறது.

குறிப்பு: நன்னன் என்னும் பெயருள்ள வேறு சிற்றரசர்களும் இதேகாலத்தில் (கி. பி. 2ஆம் நூற்றாண்டு) இருந்தனர். அவர்களைத் துளுநாட்டு நன்ன அரசர்கள் என்று தவறாகச் சிலர் கூறுகிறார்கள். தொண்டைநாட்டில் பல்குன்றக் கோட்டத்தில் செங்கண்மா என்னும் ஊரின் அரசனான செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன்மீது பாடப்பட்டது மலைபடு கடாம் என்னும் கூத்தர் ஆற்றுப்படை. இந்த நன்னன் வேறு, துளு நாட்டு நன்னன் வேறு. நன்னன் ஆஅய் (அகம் 356:19) என்பவனுந் துளு நாட்டு நன்னன் அல்லன். நன்னன் என்னும் பெயர் ஒற்றுமையினால் அப்பெயருள்ளவர் எல்லோரையும் துளு நாட்டு வேள் அரசராகிய நன்னருடன் சேர்த்தல் கூடாது.

அடிக்குறிப்புகள்

1. Beginnings of South Indian History, S. Krishnaswamy Ayyangar. pp. 84,85.

2. நன்னனுடைய ஏழில்மலை கடற்கரைக்கு அருகிலே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இந்த மலை, கடலில் 27 மைல் தூரம் தெரிகிறது. இம்மலைமேலிருந்து பார்த்தால் கடலில் தூரத்தில் வருகிற கப்பல்களைக் காணலாம். சங்க காலத்துக்கு மிகப் பிற்காலத்திலே, இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னே போர்ச்சுகல் தேசத்திலிருந்து இந்தியாவுக்கு முதல்முதல் வந்த வாஸ்கோ-ட-காமா என்பவன், இந்தத் துளு நாட்டு ஏழில் மலையைக் கடலில் தூரத்தில் வரும் போதே கண்டு இதன் அடையாளத்தைக் கொண்டு இதன் அருகில் கண்ணனூரில் வந்து தங்கினான். ஏழில் மலைக் கருகில் கடல் கொள்ளைக்காரர்கள் இருந்தார்கள் என்று பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த மேல் நாட்டு யாத்திரிகர்கள் எழுதியிருக்கிறார்கள். எனவே, கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து (கடைச்சங்க காலத்திலிருந்து) துளு நாட்டில் கடற்கொள்ளைக்கரார் இருந்தனர் என்று கருதலாம்.