மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/009


6. அழகர் மலைப் பிராமி எழுத்துக்கள்

மதுரையிலிருந்து பதின் மூன்று கல் தொலைவில் அழகர் மலை இருக்கிறது. இஃது இப்போது பேர்போன வைணவத் திருப்பதியாக இருக்கின்றது. சங்க காலத்தில் இந்த மலைக்குச் சோலைமலை, பழமுதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, இருக்குன்று என்று பல பெயர்கள் இருந்தன. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் கூறப்படுகின்ற திருமால்குன்றம் என்பது இந்த மலையே. இடைக்காலத்தில் இந்த மலை இடபகிரி என்று பெயர் பெற்றிருந்தது. கடைச் சங்க காலத்தில் இந்த மலையில் கண்ணன்-பலராமன் என்னும் இரு பெருந்தெய்வங்களுக்குக் கோயில் இருந்தது. இந்தத் தெய்வங்களை இளம்பெருவழுதி (கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி) என்னும் பாண்டியன் பாடித் துதித்தார். அந்தப் பாடல் பரிபாடலில் 15ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. மதுரையைச் சூழ்ந்திருந்த எண்பெரும் சமணக் குன்றுகளில் அழகர் மலையும் ஒன்று. சங்க காலத்தில் இந்த மலையின் ஒரு பக்கத்தில், சமண முனிவர்கள் இருந்தனர். அவர்கள் இருந்த குகையும் அதிலுள்ள கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1910ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பிராமி எழுத்துக்கள் ஒன்பது தொடர் மொழிகளாக உள்ளன. இவை 1910ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 70 முதல் 79 எண்ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் குகை கிடாரிப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் மலைமேல் அமைந்திருக்கிறது. இந்தக் குகையில் ஒரு பக்கத்தில் சுனை நீர் இருக்கிறது. இங்குள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

இதன் தொடர் மொழிகளை அறிஞர் சிலர் படித்துள்ளனர். அவர்கள் படித்ததையும் பொருள் கூறுவதையும் பார்ப்போம். (இதன் வரிவடிவத்தைத் திரு.ஐ. மகாதேவன் காட்டியுள்ளார்.) திரு. கிருட்டிணசாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்.1 ‘மா(த) தி (ரை)ய் போ நா குல வானா அ(த)னா அ த(ஆ)ன திரு.சி.நாராயணராவ், இதைப் பிராகிருதமாகப் படித்துப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.2

‘மாத்திரைய்-போநா குலவானா அதனா’அ தானா? (பிராகிருதம்)

"மாட்டர கீ-புத்ராணம் (பௌத்ராணாம்(?) போதாதரம்(?) (குலபாநாம்)

ஆகாநாய (அஸ்தானாய(?) ஆஸ்தாதஸ்ய(?)) தாநானி' (சமற்கிருதம்) ‘மாட்டரகீ என்பவருடைய மக்கள் (பேரர்கள்?) குலத்தலைவர்கள் (குலத்தவருக்கு?) உணவுக்காகக் கொடுத்த தானம்' என்று பொருள் கூறுகிறார்.

திரு.டி.வி.மகாலிங்கம் படித்துப் பொருள் கூறுவது இது.3 'மத்திரை பொன் குலவன் அதன் அதன்' பொன்குலவன் என்பதன் பொருள் பொன் வாணிகன். அதன் அதன் என்பது ஆதனுடைய மகன் அதன். மதிரை (மதுரை)யில் இருந்த பொன் வாணிகன் அதன் உடைய மகன் அதன் இதைச் செய்தான்.

திரு.ஐ.மகாதேவன் இவ்வாறு படிக்கிறார்.4

'மத்திரை பொன் கொலவன் ஆதன் அ தான'. ம(த்)திரையிலிருந்து பொற்கொல்லன் ஆதன் கொடுத்த தானம். நாம் இதைப் படிப்போம். பிராமி எழுத்தின் வாசகம் இவ்வாறு இருக்கிறது.

'மத்திரைய் பொன் கொல்லன் அதான் அதான்'

‘மத்திரைய்' என்பது கொச்சைச் சொல்லாகத் தெரிகிறது. இது ‘மதுரை’ நகரத்தைக் குறிக்கிறது. இதன் இறுதியில் உள்ள யகரமெய், ஐகார ஈற்றுச் சொல்லுடன் சேர்த்து எழுதப்படுகிற அக்காலத்து வழக்கப்படி எழுதப்பட்டுள்ளது. 'கொல்வன்' என்பதும் கொச்சைச் சொல். இது கொல்லன் என்றிருக்க வேண்டும். ‘பொன் கொல்லன்' என்று படித்துப் பொன் வேலை செய்பவன் என்று பொருள் கொள்ளலாம். அதான் அதான் என்பதும் கொச்சைச் சொல். இது ஆதன் ஆதன் என்றிருக்க வேண்டும். ஆதன் ஆதன் என்பது பொற் கொல்லனுடைய பெயர். கடைசியில் உள்ள குறி அவன் தானம் செய்த பொன்னின் அளவைக் குறிக்கிறது. மதுரைப் பொன் வாணிகனான ஆதன் ஆதன் கற்படுக்கையை அமைக்கக் கொடுத்த பொன்னின் மதிப்பு இவ்வளவு என்பது இதன் கருத்து.

இனி, அடுத்த சொற்றொடரைப் பார்ப்போம். இது 1910 ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பின் 71ஆம் எண்ணுள்ளது.

திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.5

‘ம (ஆ) த தி ரை கொ (பா) புவணிகனா'

திரு. நாராயண ராவ் பிராகிருதமாக்கிப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.6

'மாத்திரை கொ பாபு வாணி கானா?' (பிராகிருதம்)

'மாட்டாக் - கிருதே - பாபு வணிஜாம்?' (சமற்கிருதம்)

கிராமங்களின் வாணிகர்களின் தலைவர்களால் மாட்டாகி சாத்துக்கு (வணிகக்குழுவுக்கு)க் கொடுத்த தானம் என்பது பொருள்.

திரு. டி.வி. மகாலிங்கம் படித்ததும் கூறும் பொருள் இவை.7

'மாத்திரை கொபு புவணிகன்’ கொப்பு (பெண்கள் காதில் அணிகிற கொப்பு என்னும் நகை) வாணிகன் என்பது பொருள்.

இதை நாம் படித்துப் பொருள் காண்போம். இதன் மொழிகள் 'மாத்திரை கெ ஊபு வணிகன்' என்பது. மாத்திரை என்பது முன் வாக்கியத்தில் கூறப்பட்டது போலக் கொள்க. அதாவது மதுரை என்பதன் கொச்சைச் சொல். இதை மதுரை என்று படிக்க வேண்டும். ஐந்தாவது எழுத்து கெ இதை கொ என்றும் படித்துள்ளனர். இந்த எழுத்து இங்குத் தேவையற்றுக் காணப்படுகிறது. ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதியில் ஈகாரம் இட்டு எழுதுவது அக்காலத்து மரபு. இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை வேறு பிராமி வாசகத்திலும் பார்க்கிறோம். மதுரை என்னும் சொல்லின் கடைசியில் எழுத வேண்டிய ஈகார எழுத்துக்கு ஈடாக இந்த கெ எழுத்தைக் கற்றச்சன் தவறாக எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஊபு என்பது உப்பு என்று படிக்க வேண்டும். இதுவும் கொச்சையாக எழுதப்பட்டிருக்கிறது. வாணிகன் என்பதன் பொருள் தெளிவாகத் தெரிகிறது. மதுரை உப்பு வாணிகன் இக் குகையில் கற்படுக்கை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான். அப் பொன்னின் மதிப்பு இதன் கடைசியில் உள்ள குறியினால் குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த தொடர்மொழியை பார்ப்போம். அடுத்த கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம்.

திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.8

'ய கா னா கோ ண தி கா னா

திரு. நாராயணராவ் வழக்கம் போலப் பிராகிருதமாக்கிச் சமற்கிருதம் ஆக்குகிறார்.9

‘ய கானா கொணதி கானா' (பிராகிருதம்) ‘யக்ஷாணாம் கொணர் தி கானாம்' (சமற்கிருதம்) (கொணரத குன்றுகளிலிருந்து வந்தவரும் கொணரத குழுவைச் சேர்ந்தவரும்) எருது வாணிகம் செய்தவருமான வணிகருடைய (யக்ஷருடைய) தானம் என்று பொருள் கூறுகிறார். திரு.டி.வி. மகாலிங்கம் கூறுவது இது.10 ‘வியகன் கணதிகன்' என்பது இதன் மொழிகள். வியகன் என்பது ஒருவருடைய பெயர். கனத்தி என்பது ஒருவகை மரத்தின் பெயர். மர வாணிகம் செய்கிற வியக்கன் என்பது பொருள்.

திரு. ஐராவதம் மகாதேவன் முன்பு கூறப்பட்ட சொற்றொடரை இந்தச் சொற்றொடருடன் இணைத்து ஒன்றாகப் படிக்கிறார்.11

'மா தவிரை கெ ஊபு வாணிகன் வியகன் கணதிகன்' என்று படித்து, ‘ பெரிய தவிரைக்கு (ஸ்தவிரைக்கு) உப்பு வாணிகனான வியகன கணதிகன் கொடுத்த தானம்' என்று பொருள் கூறியுள்ளார்.

இவர், மத்திரை என்பதை மா தவிரை என்று படித்துள்ளார். இவர் இரண்டு தனித்தனி சொற்றோடரை ஒன்றாகச் சேர்த்துப் படிப்பது தவறு. இரண்டும் தனித்தனியே வெவ்வேறு தொடர்கள்.

கிருட்டிணசாத்திரியும் டி.வி.மகாலிங்கமும், ஐ.மகாதேவனும் ஒரு தவறு செய்துள்ளனர். முன் தொடரில் உள்ள ‘மதிரை கெ ஊபு வாணிகன்' என்பதன் இறுதியிலும் அடுத்துள்ள இடகன் கணதிகன் என்பதன் தொடக்கத்திம் இடைநடுவே ஒரு குறி உள்ளது. இந்தக் குறியை இவர்கள் எல்லோரும் பிராமி எழுத்து வி என்று தவறாகப் படித்துள்ளனர். வி என்று தவறாகக் கருதியதை அடுத்து, தொடரின் முதல் எழுத்தாகக் கொண்டு 'வயகன்' என்று படித்துள்ளனர். அது வி என்னும் எழுத்து அன்று. பொன்னின் அளவைக் குறிக்கும் குறியீடு, குறியீடுக்கு அருகில் மூன்று புள்ளி இருப்பதை இவர்கள் ஆழ்ந்து காணவில்லை.

இனி இதை நாம் படித்துப் பொருள் காண்போம்.

'இயகன் கணதிகன்” என்பது இதன் மொழித்தொடர். இதில் முதற் சொல்லாகிய ‘இயகன்’ என்பது ககர ஒற்றெழுத்து விடுபட்டுள்ளது. இதன் சரியான தொடர் ‘இயக்கன்’ என்பது இயக்கன் என்று ஒரு வகை இனத்தார் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தார்கள் (இயக்க இனத்தார் இலங்கையிலும் இருந்தார்கள்) இயக்கன் என்பது யக்ஷன் என்றும் கூறப்படும். 'ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்' தன்னுடைய நண்பர்களில் இயக்கன் என்பவனையும் கூறுகிறான்.12 இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற இயக்கன், இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய பெயரைக் கண்திகன் என்று கல்வெட்டு கூறுகிறது. (கண்திகன் என்பதைக் கண்திகள் என்றும் படிக்கலாம்.)

(அழகர் மலைக்குகையில் முனிவர்கள் இருப்பதற்கு அமைக்கப்பட்ட கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களில்) இயக்கன் கண்திகனும் ஒருவன். அவன் அதற்காகச் செலவிட்ட பொன்னின் அளவை இறுதியில் உள்ள குறியினால் அறிகிறோம். இதன் மதிப்பு இவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை.

அடுத்துக் கல்வெட்டைப் பார்ப்போம்.13 இதனுடைய வரிவடிவம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைக் கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.14

1. 'கா ண க அத னா ம (ஓ) கனா அதனா அதானா' திரு. நாராயணராவ்,15

காணக அ தானா (பிராகிருதம்) 'கணகஸ்ய தானானீ (சமற்கிருதம்) கணக்கனுடைய தானம் என்பது பொருள்.

2. 'மோகனா அதனா' அ தானா (பிராகிருதம்) 'மோக்ஷாணாம் ஆஸ்தானாய தானானீ' (சமற்கிருதம்) 'நோய் (துன்பம்) நீக்கும் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள்' என்பது பொருள்.

திரு. மகாலிங்கம் கூறுவது16

கணக அதன் மகன் அதன்' கணக என்பது கணக்கர் அதாவது தத்துவ சாத்திரம் அறிந்தவர். (சாஸ்திரம்) கணக்கு அறிந்த ஆதன் மகன் ஆதன் என்பது பொருள்.

திரு. ஐ. மகாதேவன் படித்துப் பொருள் கூறுவது.17

‘கணக அதன் முகன் அதன அதன’ கணக்கன் அதனுடைய மகன் அதனுடைய தானம் என்பது பொருள்.

இதன் வரிவடிவம் கிடைக்காதபடியால் இதுபற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.

அடுத்த பிராமி எழுத்தைப் பார்ப்போம். இதன் வரிவடிவம் இது.

திரு. கிருட்டிண சாத்திரி18

ஸா (ம ) மி ஸினா மி த தி’

திரு. நாராயணராவ் இந்தத் தொடரையும் இதற்கு அடுத்த இன்னொரு தொடரையும் ஒன்றாக இணைத்து ஒரே மொழித் தொடராக்கிப் பிராகிருதமாகவும் சமற்கிருதமாகவும் கூறுகிறார்.19

ஸாம மிஸினா மித்திருபா ணிதீ வாணிகனா ணட்ட மலானா (பிராகிருதம்)

மைய. மிஸ்ரேண மைத்ரீ - ரூபா நிய்நிஹ் வணிஜாம் நஷ்ட மலானாம்' (சமற்கிருதம்)

பௌத்த மத நம்பிக்கையுடனும் மைத்தீ (நட்பு)யுடனும் இருப்பவரும் ஆன்மாவிலிருந்து மலத்தை (அழுக்கை) நீக்கிய வருமான வாணிகர் தேர்ந்து கொண்ட தர்மம் என்பது இதன் பொருள்.

திரு. டி.வி. மகாலிங்கம் கூறுவது.20 ‘பைமிஸின் மித்தி’ இதை ஸம்மிஸின் என்றும் படிக்கலாம். மித்தி என்பது உறக்கம் என்னும் பொருள் உள்ளது. சைனருடைய சிறு தெய்வங்களில் ஒன்றான ஸங்க்கர் அல்லது மிதியா என்னும் தெய்வத்தின் பெயராகவும் இருக்கலாம். இஃது ஓர் ஆளின் பெயரைக் குறிக்கிறது. திரு. ஐ. மகாதேவன் 21

'ஸாப மிதா ஈன்...பாமித்தி' பிக்குணி....ஸாபமித்தாவினுடைய என்பது பொருள். இதன் மொழித்தொடரைப் பார்ப்போம்.

இது பௌத்தமதப் பெண்ணின் பெயர்போல் தோன்றுகிறது. ஸபமிதி என்பது சுபமிதி ஆக இருக்கலாமோ. சுதமதி என்னும் பௌத்தப் பெண் பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படுகிறது. இந்தப் பெயரின் சரியான வடிவம் தெரியவில்லை. இந்தப் பெயருடையவர் கற் படுக்கை அமைக்கப் பொன் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அடுத்த கல்வெட்டு இது.

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இதன் முதல் மூன்று எழுத்துக்களை விட்டுவிட்டு மற்ற எழுத்துக்களைப் படித்து 'வாணிகன் நெடுமலன்' என்று கூறுகிறார். இந்தப் பெயர் இந்தக் குகையில் வசித்திருந்த ஒருவருடைய பெயரைக் கூறுகிறது என்று எழுதுகிறார்.22 திரு.டி.வி.மகாலிங்கம் இதை ‘பணிதி வணிகன் நெடுமலன்’ என்று படித்து, ‘அழகுப் பொருள்களை விற்கும் வாணிகனாகிய நெடுமூலன் என்று பொருள் கூறுகிறார்.23

திரு. ஐராவதம் மகாதேவன் இதை 'பானித வணிகன் நெடுமலன்' என்று படித்து சர்க்கரை வாணிகன் நெடும(ல்)லன்' என்று பொருள் கூறுகிறார்.24

இங்கு நாம் பொருள் காண்போம்.

‘பணித வணிகன் நெட்டு மூலன்' என்பது இதன் தொடர். பணித வணிகன் என்பதற்கு அழகுப் பொருள் விற்பவன் என்றும் சர்க்கரை வாணிகன் என்றும் டி.வி.மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் பொருள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் இந்தச் சொற்கள் வழங்கவில்லை.

னால், பளிதம் என்னும் சொல் வழங்கி வந்தது. ஆகவே இது 'பளிதவணிகன்' என்பதாக இருக்கக் கூடும். பளிதம் என்னும் சொல் பணிதம் என்று பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம். பேச்சு வழக்கில் இருந்தபடியே கல்வெட்டில் எழுதப்பட்டது போலும். பளிதம் என்பது பச்சைக் கர்ப்பூரம். இதை வெற்றிலை அடைக்காயோடு சேர்த்து அக்காலத்தில் அருந்தினார்கள்.

“பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து” என்று மணிமேகலைக் காவியம் (கச்சிமாநகர் புக்ககாதை அடி 243) கூறுகிறது. பாசிலைத் திரையல் - வெற்றிலை, பளிதம் - பச்சைக் கர்ப்பூரம். பௌத்த பிக்குகள் வெற்றிலை யருந்துவது வழக்கம், கர்ப்பூரத்தில் சிலவகை உண்டு. ஒருவகைக் கர்ப்பூரத்தைக் குங்குமம், அகில், சந்தனம் இவற்றை இழைத்த குழம்புடன் சேர்த்து உடம்பில் பூசினார்கள். கர்ப்பூரத்தில் சில வகை உண்டு என்று இதனால் தெரிகிறது. பத்தாம் பரிபாடலில் ‘செங்குங்குமச் செழுஞ்சேறு, பக்கஞ் செய்யகில் பலபளிதம்25 பலபளிதம் பலவாகிய கருப்பூரம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். பரிபாடல் பலபளிதம் என்று கூறுவதைச் சிலப்பதிகாரம் ‘தொகு கருப்பூரம்' என்று கூறுகிறது.26 இந்தப் பளிதங்கள் தமிழ் நாட்டுப் பொருளும் அன்று. பாரத நாட்டுப் பெருளும் அன்று. அவை சாவக நாட்டிலிருந்து (கிழக்கிந்தியத் தீவுகள்) கப்பலில் கொண்டு வரப்பட்டவை.

இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள பணிதம் என்பது பளிதமாக (கர்ப்பூர வகை) இருக்கக்கூடும். எனவே பணித வணிகன் என்பது பளிதவணிகன் ஆக இருக்கலாம். நெடுமூலன் என்பது ‘நெட்டு மூலன்’ என்று தவறாக எழுதப்பட்டிருக்கிறது.

பளித (பணித) வாணிகனாகிய நெடுமூலன் இந்த மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகப் பொன் கொடுத்தான் என்பது இந்தத் தொடரின் பொருள். அவன் கொடுத்த பொன்னின் மதிப்பு இந்தக் குறியினால் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் குறியின் மதிப்பெண் என்ன என்பது தெரியவில்லை.

அடுத்த கல்வெட்டு இது.

திரு. கிருட்டிண சாத்திரி இதன் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, ‘வாணி கனா யுள னாதன்' என்று படித்துள்ளார்.27 திரு கே.வி. சுப்பிரமணிய அய்யரும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, மற்ற எழுத்துக்களை “வாணிகன் யுளநாதன்” என்று படித்துள்ளார்.28 திரு. நாராயணராவும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டு விட்டுப் படிக்கிறார். அவர் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக இணைத்துப் பிராகிருதமாக்கிப் பிறகு சமக்கிருதமாக்குகிறார்.

'வாணி கானா யுள நாதனா சிகட்ட-மாதன தானா' (பிராகிருதம்)

வணிஜரம் யூ த (-யுவ-) நாதானாம் ஸ்ரீ கண்ட (சிகட்ட) மாத்ருணாம் - தானானி' (சமக்கிருதம்)

ஸ்ரீகண்ட மாத்ருகண (சிகட்ட மாத்ருகண)த்தைச் சேர்ந்த தலைமைச் சாத்து (யுலசாத்து) வாணிகத் தலைவர்களின் தானம் என்று இதற்குப் பொருள் கூறுகிறார்.29

திரு.டி.வி. மகாலிங்கம், 'கொழு வாணிகன் யுளா சாந்தன்' என்று படித்து, ‘தொழுதைலான இரும்புச் சாமான்களை விற்கிற உரை சேந்தன்' என்று பொருள் கூறுகிறார்.30

திரு.ஐ. மகாதேவன் 'கொழு வாணிகன்' என சந்தன் என்று படித்து, இரும்பு வாணிகன் என சந்தன் என்று பொருள் கூறுகிறார்.31

இவர்கள் இருவரும், 'கொழு வாணிகன்...சந்தன்' என்று படித்து திருப்பது சரியே. ஆனால் இடையில் உள்ள இரண்டு எழுத்துக்களை ‘யுள' என்றும் ‘எளி' என்றும் படித்ததில் தவறு காணப்படுகிறது. இது ‘இள’ என்னுஞ் சொல்லாகும். இள என்னும் சொல் கொச்சைத் தமிழில் ‘எள’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இளஞ் சந்தன் என்னும் பெயருள்ள கொழு வாணிகன் மலைக்குகையில் கற்படுக்கை அமைப்பதற்கும் பொன்னைக் கொடுத்தார். அந்தப் பொன்னின் மதிப்புத் தெரியவில்லை.

இதற்கு அடுத்த கல்வெட்டைப் பார்ப்போம். இதன் வரி வடிவம் இது.

திரு. கே.வி. சுப்பிரமணியம் இதை இவ்வாறு படிக்கிறார்.32

‘சிகற மாறன் தான்’ என்று படித்து, சிகற மாறன் என்பவன் புகழ் பெற்ற தச்சன் என்று கூறுகிறார். இவர் மூன்றாம் எழுத்தையும் 5ஆம் எழுத்தையும் வல்லின ‘ற' என்று படிக்கிறார்.

திரு. கிருட்டிண சாத்திரியும், திரு.டி.வி. மகாலிங்கமும் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக்கிப் படிக்கின்றனர். அவர்கள் ஒன்றாக்குவது தவறு. இந்தத் தொடர் இதனோடு முடிகிறது. அந்தத் தொடருடன் தொடர்புள்ளது அன்று.

திரு.ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை வேறு முறையாக வரைந்து காட்டுகிறார்.

இதில் இவர் முதல் எழுத்தாகக் காட்டுங்குறி முந்திய தொடரின் இறுதியைச் சேர்ந்தது. இவர் இந்தக் குறியின் மேற்பகுதியை வைத்துக்கொண்டு அதை ஞ் என்று படிக்கிறார். இது தவறு. இவர் படிப்பது இது.33

ஞ்சி கழு மாறன் தான்' ஞ்சி என்னும் இடத்தில் இருந்த கழுமாறன் கொடுத்த தானம் என்று பொருள் கூறுகிறார்.

இரண்டு வரிவடிவங்களிலும் எழுத்து மாறுபாடுகள் காணப்படுகின்றன. ஐ.மகாதேவன் ஞ் என்று தவறாகக் காட்டுகிற எழுத்து முதல் வரிவடிவத்தில் இல்லை. அது ஞ் அன்று, ஒரு வகைக் குறியீடு என்று முன்னமே கூறினோம். முன் வரிவடித்தில் மூன்றாவது எழுத்து வல்லின ற போன்று இருக்கிறது, மகாதேவனுடைய வரி வடிவத்தில் இந்த எழுத்து ம என்று காட்டப்படுகிறது. முந்திய வடிவத்தில் ஆறாவது எழுத்து அ போன்று இருக்கிறது. மகாதேவனுடைய வரிவடிவத்தில் அந்த எழுத்து (7-வது எழுத்து) ன போல இருக்கிறது. கல்வெட்டு எழுத்தில் மைப்படி ஒற்றி எடுத்திருந்தால் ஒரே மாதிரிதான் இருக்கும். ஐ. மகாதேவன் மை ஒற்றி எடுக்காமல் கண்ணால் பார்த்து எழுதினார் என்று தோன்றுகிறது. ஆகவே வரிவடிவில் வேறுபாடு காணப்படுகிறது. ஆகவே இந்தக் கல்வெட்டின் சரியான வரி வடிவம் தெரிகிற வரையில் இதைப் படிக்காமல் விடுகிறோம்.

இதற்குப் பிறகுள்ள பிராமி எழுத்துக்களை எபிகிறாபி இலாகாவும் ஐ. மகாதேவனும் வேறு வேறு விதமாகக் காட்டுகின்றனர்.

இதிலிருந்து இக் கல்வெட்டுக்களை முழுவதும் படி எடுக்கவில்லை என்பதும், ஐராவதம் மகாதேவன் ஏறக்குறைய முழுவதும் படி எடுத்துள்ளார் என்பதும் தெரிகின்றன. முதலில் கொடுக்கப்பட்ட தொடரில் ‘அணிய் கொடுபித்தவள் அணகன்' என்று முடிகிறது. ஐ. மகாதேவன் கொடுக்கும் தொடர் "தார அணிய் கொடுபித அவன் கஸபன் அத்விரஅ வரு(ஊ?)ம் குடு பிதோ” என்று இருக்கிறது. முதலில் காட்டப்பட்டதில் ‘அணகன்’ என்னுஞ் சொல், இரண்டாவது தொடரில் இல்லை. இரண்டாவதில் உள்ள கஸபன் என்னும் பெயர் முதல் தொடரில் இல்லை.

அழகர்மலைக் குகையில் கற்படுக்கைகளை அமைக்கப் பலர் பொருளுதவி செய்துள்ளனர். இன்னின்னார் இவ்வளவு இவ்வளவு பொருள் உதவினார்கள் என்பதும் அவர்களின் பெயர்கள் இன்னின்ன என்பதும் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. அழகர் மலையில் உள்ள இன்னொரு பிராமிக் கல்வெட்டின் வரிவடிவத்தினை34 திரு. ஐ. மகாதேவன் இவ்வாறு படிக்கிறார்.

‘வேண் பளி ஈ அறுவை வணிகன் என அ அடன்’ என்று படித்து வேண் பள்ளி துணி வாணிகன் என(வ) ஆதன் என்று பொருள் கூறுகிறார். இதை நாம் படிப்போம். இதை வேண்பனி அல்லது வெண்பனி என்றும் படிக்கலாம். பள்ளி என்பது பளி என்று எழுதப்பட்டுள்ளது. ஈகார எழுத்து இகர ஈற்றில் முடிகிற பள்ளி (பளி)யுடன் இணைத்து அக்காலத்து முறைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. இதற்குப் பொருள் இல்லை. வேண்பள்ளி அல்லது வெண்பள்ளி ஓர் ஊரின் பெயர். அறுவை என்பது துணிக்குப் பெயர். இச் சொல் சங்க காலத்தில் வழங்கப் பட்டது. அறுவை வாணிகன் என்பது துணி வாணிகன். (இளவேட்டனார் என்னும் புலவர் மதுரையில் அறுவை வாணிகம் செய்தவர். அவர் பாடிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன).35 ‘எளஅ' என்பது எளைய என்பது. இளைய என்னும் சொல் எளய என்று கொச்சையாக எழுதப்பட்டுள்ளது. அடன் என்பது வாணிகனுடைய பெயர். எளய அடன் என்பது இவருடைய முழுப்பெயர். அடன் என்பது ஆட்டன் என்னும் பெயர். இது கொச்சையாக அடன் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆட்டன் அத்தி' என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. இளம் ஆட்டன் என்பது ஆட்டனுடைய தம்பி என்னும் பொருளில் வழங்கிற்று. இளங்கண்ணன், இளநாகன், இளங்கௌசிகன், இளவேட்டன், இளங்கடுங்கோ, இளஎயினி, இளங்குட்டுவன் முதலான பெயர்களைக் காண்க.

வெண்பள்ளி ஊரில் இருந்த அறுவை வாணிகனான இள ஆட்டன் இந்தக் குகையில் கற்படுக்கை அமைக்கும் செலவுக்காகப் பொன் கொடுத்தான். அந்தப் பொன்னின் மதிப்பு இந்தப் பெயரின் இறுதியில் ஒரு குறியினால் காட்டப்பட்டுள்ளது.

அடிக் குறிப்புகள்

1. 1st All India Oriental Conference 1919.

2. Proceedings and Transaction of the 10th All India Oriental Conference, Tirupati 1940, New Indian Antiquary Vol. page 362 - 76.

3. P.240 - 41 Early South Indian Palaeography.

4. P.63 Seminar on Inscriptions 1966.

5. Proceedings of the All India Oriental Conference 1919.

6. New Indian Antiquary Vol. I.

7. P.241. Early South Indian Palaeography.

8. First All India Oriental Conference 1919.

9. New Indian Antiquary Vol. I.

10. P.241. Early South Indian Palaeography.

11. P.63 Seminar on Inscriptions 1966.77

12.

"பொய்யா யாணர் மையற் கோமான்
மாவனும், மன்னெயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
கண்போல் நண்பிற் கேளிரொடு" – புறநா. 71 : 11 - 15.

13. 73 of 1910.

14. First All India Oriental Conference, Poona 1919.

15. New Indian Antiquary Vol. I.

16. P.241. Early South Indian Palaeography.

17. P.63. Seminar on Inscriptions 1966.

18. 1st All India Oriental Conference 1919.

19. New Indian Antiquary Vol. I.

20. P.242-43 Early South Indian Palaeography.

21. P.63 Seminar on Inscriptions 1966.

22. Third All India Oriental Conference 1924.

23. P.242-43 Early South Indian Palaeography.

24. P.63 Seminar on Inscriptions 1966.

25. பரிபாடல் 10 ஆம் பாடல் அடி 81–82

26. சிலப் : ஊர்காண்காதை, வரி 109.

27. 1st All India Oriental Conference.

28. Third All India Oriental Conference.

29. New Indian Antiquary Vol. I.

30. P.243. Early South Indian Palaeography.

31. P.64 Seminar on Inscriptions 1966.

32. Third All India Oriental Conference.

33. P. 64 Seminar on Inscriptions 1966.

34. No.43 Corpus of the Tamil Brahmi Inscriptions 1157-73 Seminar on Inscriptions 1966. R. Nagaswamy (Edited By).

35. அகநா. 56, 126, 230, 254, 272, 302. குறுந். 185, நற்றிணை 33, 157, 221, 344; புறநா. 329.