மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/012
9. அரிட்டாபட்டி
அரிட்டாபட்டியிலுள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டைத் திரு. ஐ. மகாதேவன் கீழ்வருமாறு எழுதியுள்ளார்:
கிருட்டிண சாத்திரி கே.வி.சுப்பிரமணிய ஐயர், நாராயணராவ், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் முதல் வரியை (பத்து எழுத்துக்களை) விட்டுவிட்டு மற்றவற்றைப் படித்துள்ளனர். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் படித்து, வெவ்வேறு பொருள் கூறுகின்றனர். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் :
வெ ள (அ) (டை) ய நி கா மா த (ா)
கொ (போ) திர (ய) கா ஸ் தீ கா அ (ரிதெ)
அ ஸா தா னா பி நா க கொடுபி தோ னா
கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்து விளக்கங் கூறுகிறார்.
வெள் அடைய் நிகாமதா கொ
பொதிர் யகாஸீ தி கா அரிதாவ
ஸாதான் கிணாக கொடு பி தோன்.
பொதிர் - புத்திரி. நிகாமதாகொ - நகரத்தாருடைய. யகாஸீதி ― ஒருவருடைய பெயர். கா அரிதா - செய்வித்தார். பிணாகன் - பிணக்கன். ‘வெள்ளடையில் வசிக்கிறவரின் மகளான யக்ஷாஸ்தி (இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைச் செய்தான்’ என்று பொருள் கூறுகிறார்.
திரு. நாராயணராவ் இந்த எழுத்துக்களைப் பிராகிருத மொழியாகப் படித்துப் பிறகு சமற்கிருதமாகக் கற்பித்து அதற்கேற்பப் பொருள் கூறுகிறார். அவற்றை இங்குக் காட்டவில்லை.
திரு. டி.வி. மகாலிங்கம், சுப்பிரமணிய அய்யரைப் பின்பற்றிக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்1.
‘வெள் அடைய நிகமத
கொபிதிர் யக ஸிதிக அரிதெ அ
ஸதன் பிணக கொடுபி தோன்’.
‘வெள்ளடையில் வாசிப்பவரின் மகளான யகஸிதி என்பவள் (இந்தக் குகையை) செய்வித்தாள். ஸாத்தன் பிணக்கன் இதைக் கொத்துவித்தான்.
திரு. ஐ. மகாதேவன், முதல் வரிசைப் பத்து எழுத்துக்களையும் சேர்த்துக் கீழ்வருமாறு படித்துப் பொருள் கூறுகிறார்:2
கணிஇ ந தா ஸீ ரி ய கு வ
வெள் அறைய் நிகமது
காவி தி இய் கா ழி திக அந்தை அ
ஸுதன் பிணாஊ கொடுபி தோன்.
உங்கு (உவ) வசிக்கிற கணி நதாவுக்கு வெள்ளறை நிகமத்து காவிதி காழிதிக அந்தையின் மகன் இந்தப் பிணாவூ கொடுப்பித்தான்.
இவர் ஏறக்குறைய சரியாகவே படித்துள்ளார்.
இவ்வெழுத்துக்களை நாம் படித்துப் பொருள் கூறுவோம்.
'கணிஇ நதா ஸிரி யகுவ்
வெள் அறைய் நிகமது
காவிதிஇய் காழி திக அந்தை அ
ஸுதன் பிணாஊ கொடுபி தோன்.
‘கணி நந்தா ஸிரியற்கு
வெள்ளறை நிகமத்து
காவிதி காழிதி ஆந்தைய
ஸுதன் பிணாவு கொடுபித்தான்!’
விளக்கம் : கணி நந்தாசிரியர் என்பது முன் இரண்டு கல்வெட்டுக்களில் கூறப்படுகிறது. கணி நதி ஆசிரியர் ஆகும். வ் என்பது தேவையற்ற எழுத்து. அதை ‘வெள் அறை’ என்பதோடு சேர்த்துப் படிக்கலாம். வெள் அறை - வெள்ளறை என்று சேர்த்துப் படிக்கலாம். வெள்ளறை என்னும் ஐகார ஈற்றுச் சொல்லுடன் யகரமெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து முறை. நிகமம் என்பது நியமம். இச்சொல், தெரு என்னும் பொருளில் சங்ககாலத்தில் வழங்கப்பட்டது. ‘கருங்கட் கோசர் நியமமாயினும்’ (அகநா. 90 : 12) நியமம் என்பதற்குக் கோயில் என்னும் பொருள் உண்டு. இக்கல்வெட்டுக் கூறுகிற ‘வெள்ளறை நிகமம்’ என்பது ‘வெள்ளறை நியம்’ அஃதாவது வெள்ளறையூரின் அங்காடித்தெரு என்று பொருள் உள்ளது. காவிதி என்பது அரசனால் கொடுக்கப்படும் பட்டப் பெயர். காழிதி ஆந்தை என்பது காவிதி பட்டம் பெற்றவருடைய பெயர். ஆந்தை என்னும் பெயர் சில பிராமிக் கல்வெட்டுக்களில் அந்தை என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆந்தைய’ என்பதன் பொருள் ஆந்தையினுடைய என்பது, அ என்னும் வேற்றுமை உருபு உடைய என்னும் பொருள் உள்ளது. ஸுதன் என்பது வடமொழிச் சொல். மகன் என்னும் பொருள் உள்ளது. பிணா, அல்லது பிணாவு என்பது பின்னப் பட்டது, முடையப் பட்டது என்னும் பொருள் உள்ளது. அல்லது சாமரையைக் குறிக்கிறதா? பிணாவு என்பதன் சரியான பொருள் தெரியவில்லை? கற்படுக்கைகளைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.
வெள்ளறை யங்காடித் தெருவில் வசிக்கிற காவிதி காழிதி ஆந்தையினுடைய மகன் கணிநந்தாசிரியற்கு ‘பிணாவு’ கொடுப்பித்தான் என்பது இதன் கருத்தாகும்.
அரிட்டாபட்டி 5
அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இது:திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்:
- ச (ா) ந தா ரி தா னா கொடுபி தோ ன
திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்:3
- ச (ா)ந த ரி த ன கொ ட்டு பி தொ ன
திராவிடியில் இதை இவ்வாறு படிக்கலாம். சந்த ரிதன் கொட்டுபிதோன். சந்தரிதன் என்பவன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படிக்கிறார்:
சாந்தாரி தன் கொடு பி தோன் சந்தாரிதன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. கே. வி. சுப்பிரமணிய அய்யர் இதை ‘சான தாரிதான் கொட்டுபி தோன்’ என்று படிக்கிறார். ஆனால் இவர் இன்னொரு சொற்றொடரையும் இதனோடு சேர்த்துப் படிக்கிறார். அது பொருத்தமாக இல்லை. திரு. நாராயணராவ் கூறுவதற்கும் இதற்கும் பொருத்தம் இல்லை. இதன் வாசகத்தை சாந் தாரிதன் கொடுபித்தோன் என்று படிக்கலாம். இந்தக் கற்படுக்கையைச் சாந்தாரிதன் என்பவன் கொடுத்தான் என்பது பொருள். ‘கொடு பித்தோன்’ என்று எழுதவேண்டியது ‘கொட்டு பி தோன்’ என்று எழுதப்பட்டுள்ளது. கு வை ட்டு என்றும் த்தோ என்பது என்பது தோ என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளன.
அரிட்டாபட்டி 6
அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு கல்வெட்டு இது:
திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்:
- வௌ அ டை நி காமா தோ ர கொடி (ஒர)
திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்:
- வெள் - அடை நிகாமதோர் கொடி ஓர்.
வெள் - அமை என்பது வெள்ளடை என்னும் ‘ஊர்ப் பெயர்’. நிகாமம் என்பது நிகமம். வணிகர் என்பது இதன் பொருள். கொடியோர் என்பது கொட்டுவித்தான் என்னும் சொல். இவ்வாறு கூறுகிற இவர் வேறு பிராமி எழுத்துக்களோடு இதையும் இணைத்துப் பொருள்கூறுகிறார். ஆனால் அது பொருந்தவில்லை.
திரு. நாராயணராவ் இதையும் வேறு கல்வெட்டையும் இணைத்து வழக்கம்போல பிராகிருதமாக்கிப் பிறகு அதைச் சமற்கிருதப்படுத்திக் கூறுகிறார். அவர் கூற்றுக்கும் இந்த எழுத்துக்கும் தொடர்பில்லையாகையால் அதைக் கூறாதுவிடுகிறோம்.
திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள்கூறுகிறார்.4
வெள் - அடை நிகமத்தோர் கொடி ஓர்.
வெள் - அடை என்பது வெள்ளடை. இஃது ஓர் இடத்தின் பெயர். நிகமதோர் என்பது வணிகச்சாத்தர். கொடியோர் - என்பது கோடியர் (விறலியர்). கோடர் என்பது நாகர். (கார்கோடன் என்னும் பாம்பின் பெயரிலிருந்து உண்டானது.) கோடர் என்னுஞ்சொல் ‘வெள்ளடை என்னும் ஊரில் உள்ள நிகமத்தோர் வாணிகக் குழு)வைச் சேர்ந்த கோடிஓர் (நாகர் இனத்துப் பெண்)’ என்று பொருள்கூறுகிறார்.
திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.5
‘வெள் - அறை நிகமதோர் கொடி ஓர்’ என்று படித்து, வெள்ளறையில் உள்ள வாணிகச் சாத்தைச் சேர்ந்தவர் இதைக் கொடுத்தார்கள் என்று பொருள் கூறுகிறார். இதை இவ்வாறு படிக்கலாம்:
வெள் அறை நிகமதோர் கொடிஓர்
‘இதை (இந்தக் கற்படுக்கையை)க் கொடுத்தவர் வெள்ளறை வாணிகக் குழுவினர்’ என்பது இதன் பொருள்.
விளக்கம் : இந்தக் கல்வெட்டில், இடப்புறத்திலிருந்து நான்காவதாக உள்ள எழுத்தை ஒருவரைத் தவிர மற்றெல்லோரும் தவறாகவே படித்துள்ளனர். எச். கிருட்டிணசாத்திரி, கே.வி. சுப்பிரமணய அய்யர், நாராயணராவ், டி.வி. மகாலிங்கம் ஆகிய எல்லோரும் இந்த எழுத்தை டை என்று தவறாகப் படித்துள்ளனர். ஐ. மகாதேவன் மட்டும் றை என்று சரியாகப் படித்துள்ளார். இந்த எழுத்தின் அடிப்பகுதி கீழ்நோக்கி வளைந்திருப்பதே இது றை என்பதை ஐயமில்லாமல் தெரிவிக்கின்றது. ஆகவே, முன் கூறியவர் எல்லோரும் இது டை என்று கொண்டு வெள்ளடை என்று படித்தது தவறு. திரு.ஐ. மகாதேவன் றை என்று கொண்டு வெள்அறை (வெள்ளறை) என்று படித்ததே சரியாகும். வெள்ளறை என்பது ஓர் ஊரின் பெயர். அந்த ஊர் கற்பாறைகள் உள்ள இடத்தில் இருந்திருக்க வேண்டும். (அறை என்றால் பாறை. வெள்அறை - வெள்ளைப் பாறை)
அரிட்டாபட்டி 7
அரிட்டா பட்டி கிராமத்தின் வடமேற்கே அரை மைல் தொலைவில் கழிஞ்சமலை என்னும் பாறைக்குன்று இருக்கிறது. இந்தக் குன்றின் கிழக்குப்பக்கத்தில் உள்ள குகையின் வாயில் மேற்பாறையில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இதை டாக்டர் கே.வி. இராமனும், திரு.ஒய். சுப்பராயலும் அண்மையில் கண்டுபிடித்தனர்.6
இருபத்தைந்து எழுத்துள்ள இந்தக் கல்வெட்டு ஒரு வரியாக எழுதப்பட்டுள்ளது: இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே தரப்படுகிறது; இந்த எழுத்துக்கள் கண்ணால் பார்த்துக் கையால் வரையப்பட்டவை (மையொற்றுப்படி அன்று) ஆகவே இதில் ஒரு சில தவறுகள் இருக்கவுங்கூடும்.
இதன் வாசகத்தை இவ்வாறு படித்துள்ளனர்:
- ‘நெல்வெளி இய் சழிவன் அதனன் வொளியன் மு ஸ கை கொடுவன்’
நெல்வெளி வழிவன் (செழியன்) அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகை கொடுவன். கொடுவன் என்பதன் பொருள் கொடுத்தவன் என்றும், கொத்துவித்தவன் என்றும் பொருள்படும். பாண்டியரின் கீழ் தலைவனாக இருந்த நெல்வெளிசெழியன் அதனன் ஒளியன் (அல்லது வளியன்) முஸகையைச் செய்து கொடுத்தான் என்பது கருத்து.
இவர்கள் படித்துள்ளதில் சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கிறது. நெல்வெளி என்பதை நெல்வேலி என்றும் அதனன் என்பதை ஆதன் என்றும் ஒளியன் அல்லது வளியன் என்பதை வெளியன் என்றும் மாற்றி, நெல்வேலி சழிவன் ஆதன் வெளியன் முஸகை கொடுவன் என்று படிப்பது சரி என்று தெரிகிறது. இதற்கு விளக்கம் வருமாறு:
1. நெல்வெளி இய் பிராமி வெ எழுத்தை வே என்றும் படிக்கலாம். பிராமி ளி க்கும் லி க்கும் வேற்றுமைதான் உண்டு. லியின் வலப்புறத்தின் பக்கத்தில் கீழே வளைவான சிறுகோடு இட்டால் ளி யாகும். அக்கோடு இடாவிட்டால் லியாகும். மேல்காட்டிய எழுத்தில் ளி என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்து எழுதப்பட்டதாகையால் இதில் தவறும் இருக்கலாம். இந்த எழுத்தை லி என்றே கொள்வோம். ஏனென்றால் நெல்வேலி என்று ஊர் இருக்கிறது. நெல்வெளி என்று ஊர் இருந்ததாக இதுவரையில் தெரியவில்லை. ஆகையால் வரலாற்றுப் புகழ்வாய்ந்த நெல்வேலி என்றே கொள்வோம். நெல்வேலி என்பது நெல்வெலிஇய் என்று எழுதப்பட்டுள்ளது. இகர ஈற்றுச் சொற்களில் இகரத்தையும் யகர மெய்யையும் இட்டு இவ்வாறு எழுதுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, நெல்வேலிஇய் என்பதை நெல்வேலி என்றே படிக்க வேண்டும்.
2. சழிவன். இதன் சரியான உருவம் செழியன் என்பதாகும். செழியன் என்பது பேச்சுவழக்கில் சழிவன் என்று மருவி வழங்கிற்றுப்போலும். செழியன் என்பது பாண்டியரின் பொதுப் பெயர்.
3. அதனன். இதில் இரண்டு றன்னகரங்கள் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. அதன் என்பது இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அதன் என்பது ஆதன். பிராமி அகர எழுத்தின் மத்தியில் வலப்பக்கமாகச் சிறு கோடு அமைத்தால் ஆகாரம் ஆகும். அமைக்க வேண்டிய அந்தக்கோட்டை அமைக்காதபடியால் அதன் என்று இருக்கிறது, இது கற்றச்சரின் தவறு. மேட்டுப்பட்டி பிராமிக் கல்வெட்டிலும் இந்தத் தவறு காணப்படுகிறது. அங்கும் ஆதன் என்னும் சொல் அதன் என்றும் ஆந்தை என்னுஞ் சொல் அந்தை என்றும் எழுதப்பட்டுள்ளன. விக்கிரம மங்கலம், அழகர் மலையிலும் இவ்வாறே ஆதன், ஆந்தை என்பவை அதன், அந்தை என்று எழுதப்பட்டுள்ளன. ஆதன், ஆந்தை என்பதே சரியாகும். இந்தக் கல்வெட்டிலும் அதன் என்றிருப்பதை ஆதன் என்றே படிக்கவேண்டும்.
4. வொளியன்: வொளியன் என்றும் வளியன் என்றும் இதனைப் படித்துள்ளனர். ஒளியன் என்பதை ஒளியர் என்னும் இனத்தாரோடு ஒப்பிடுகின்றனர். வளியன் என்றும் இன்னொரு மொழித்தொடரைக் கூறுகின்றனர். இரண்டு மொழித் தொடரும் தவறு என்று தோன்றுகிறது. இதன் சரியான வாசகம் வெளியன் என்பது. பிராமி எழுத்துத் தலைமேல் கோடுஇட்டால் வொ ஆகும். அக்கோட்டையே இடப்பக்கத்தில் மட்டும் இட்டால் வெ ஆகிறது. அதை வெ என்றே கொள்கிறோம். கண்ணால் பார்த்து எழுதியபடியால் இதில் தவறு இருக்கலாம். வெளியன் என்பதே சரியான சொல். ஏனென்றால், சங்க காலத்தில் வெளியன் என்னும் பெயருள்ளவர் இருந்தனர். வெளிமான், வெளியன் வேண்மான், வெளியன் தித்தன், வீரை வெளியன் என்னும் பெயர்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டிலும் வெளியன் என்னும் பெயர் காணப்படுவது பொருத்தமானதே.
5. மூஸகை. இச்சொல் தமிழ்ச்சொல் அன்று என்றும், பிராகிருத மொழிச்சொல் என்றும் இதன் சரியானபொருள் விளங்கவில்லை என்றும் கூறினோம். இந்தப் பிராகிருத மொழிச் சொல்லைப் பௌத்த பிக்குகளிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். இச்சொல் இங்கு, இந்த மலைக்குகையைக் குறிக்கிறது போலும்.
கொடுவன்: கொடுத்தவன் என்பதன் தவறான வாசகம். இவன் செழியனின் (பாண்டியனுடைய) கற்றச்சன் என்று தோன்றுகிறான்.
நெல்வேலியில் இருந்த செழியன் ஆதன் வெளியன் என்னும் பெயர்பெற்ற கற்றச்சன் இந்த ‘முஸகை’யைச் செய்து கொடுத்தான் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்தாகும்.
அரிட்டாபட்டி கழுகுமலை
மதுரை மாவட்டம் மதுரை தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டிக் கிராமம். (இவ்வூருக்கு மாங்குளம் என்றும் பெயர் உண்டு) அரிட்டாபட்டி மதுரையிலிருந்து வடகிழக்கே 14வது கல்லில், மேலூருக்கும் அழகர் மலைக்கும் இடையில் இருக்கிறது. அரிட்டாபட்டியைச் சேர்ந்த மாங்குளம் என்னும் ஊரில் கழுகுமலை என்னுங் குன்றுகள் உள்ளன. கழுகுமலைக்கு ஊவாமலை என்னும் பெயருங் கூறப்படுகிறது. கழுகுமலையின் கிழக்குத் தாழ்வரையில் ஐந்து குகைகளும் அக்குகைகளில் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. பழங்காலத்தில் பௌத்த சமய முனிவர்கள் இந்தக் குகைகளில் தங்கியிருந்து தவஞ்செய்தார்கள் என்பதை இங்குள்ள கற்படுக்கைகள் தெரிவிக்கின்றன. கற்படுக்கைகள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்றும், இங்குள்ள இரண்டு குகைகளின் மேற்புறத்தில் இரண்டு பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்களை ஆராய்வதற்கு முன்னர், அரிட்டாபட்டி, கழுகுமலை என்னும் பெயர்களின் வரலாற்றை அறியவேண்டும்.
அரிட்டாபட்டி
அரிட்டாபட்டி என்னும் பெயர் பௌத்த சமயத் தொடர்புடையதாகத் தெரிகிறது. இலங்கையை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட தேவனாம்பிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அமைச்சன் அரிட்டன் (அரிஷ்டன்) என்பவன். அரிட்டனை மகாஅரிட்டன் என்றுங் கூறுவர். தேவனாம்பிய திஸ்ஸன் காலத்தில் பாரதநாட்டை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி இலங்கையில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ் செய்யப் பௌத்த பிக்குகளை அனுப்பினார். தேவனாம்பிய திஸ்ஸன் அசோக சக்கரவர்த்தியிடத்தில் அமைச்சனான அரிட்டன் தலைமையில் ஒரு தூதுக்குழுவை அனுப்பினான். அசோகசக்கரவர்த்தி புத்த கயையிலிருந்து (போதி) அரச மரக்கிளையையும் பிக்குணி சங்கமித்திரையையும் இலங்கைக்குக் கடல்வழியாகக் கப்பலில் அனுப்பியபோது அவர்களை அழைத்துக்கொண்டு இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்தவனும் அமைச்சனான அரிட்டனே. பிற்காலத்தில் அரிட்டன் பௌத்த மதத்தைச் சேர்ந்து பௌத்த பிக்குவாகிப் பௌத்தமதப் பிரசாரஞ் செய்தார். அவர் பாண்டி நாட்டுக்கு வந்து மாங்குளத்தில் தங்கினார். அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அரிட்டாபட்டி என்று பெயர் வந்தது. அஃதாவது அரிட்டர் இருந்த ஊர் என்பது பொருள்.
கழுகுமலை
அரிட்டாபட்டியில் உள்ள குன்றுகளுக்குக் கழுகுமலை என்று பெயர் உண்டு. அரிட்டரும் இவருடைய சீடர்களும் இந்த மலைக்குக் கழுகுமலை என்று பெயர் இட்டிருக்கவேண்டும். பௌத்த பிக்குகள் தாங்கள் தங்கியுள்ள மலைக்குகைகளுக்குக் கழுகுமலை என்று பெயர் இடுவது வழக்கம். பௌத்த மதத்தை உண்டாக்கின கௌதமபுத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில், இராசக்கிருக நகரத்துக்கு அருகில் இருந்த கிஜ்ஜரகூடமலைக் குகையில் அடிக்கடி போய்த் தங்குவது வழக்கம். இந்த மலையில் கழுகுகள் இருந்தபடியால் அதற்கு கிஜ்ஜரகூடமலை என்று பெயர் இருந்தது (கிஜ்ஜரம் - கழுகு.)
பகவன் புத்தர் கிஜ்ஜரகூட மலையில் தங்கியிருந்ததை நினைவுகூர்ந்து அவருடைய மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் தாங்கள் தங்கியிருந்த மலைகளுக்குக் ‘கழுகுமலை’ என்று பெயரிட்டார்கள். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக் குன்றமும் (கழுகுக் குன்றம் என்பது கழுக்குன்றம் என்று மருவிற்று) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கழுகுமலையும் மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் கழுகுமலையும் பௌத்த மதத் தொடர்புடையவை. அக்காலத்தில் பௌத்த பிக்குகள் இந்த மலைகளில் தங்கியிருந்தபடியால் இந்த மலைகளுக்குக் கழுகுமலை என்று பெயராயிற்று. ஆகவே, அரிட்டாபட்டிக் கழுகுமலையில் காணப்படுகிற கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் பௌத்த சமயத் தொடர்புடையவை.
அரிட்டாபட்டிக் கழுகுமலைகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளிலே தெற்குக் குகையின் வாயிலுக்குமேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அதற்கு அருகில் கீழ்புறக் குகையின் உட்புற வாயிலுக்குமேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்த இரண்டு கல்வெட்டெழுத்துக்களும் நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன் பெயரைக் கூறுகின்றன. தமிழ்நாட்டிலே பாண்டியன் பெயரைக் கூறுகிற மிகப் பழைய கல்வெட்டெழுத்து இதுவே.
நெடுங்காலமாக மறைந்து கிடந்த இந்தக் கல்வெட்டெழுத்து 1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குகையின் வாயிலுக்கு மேற்பாறையில் ஒரே வரியாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வரிவடிவம் இது: (கீழே காண்க.)
இக்காலத்து எழுத்தில் இதை இவ்வாறு எழுதலாம்.
- க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம ஈதா நெ டி ஞ ச ழி யா ன
- ஸ ல க ன இ ள ஞ சா டி க ன த ந தை ய் ச டி கா ன செ யி ய பாளிய்
புள்ளி இடவேண்டிய எழுத்துக்குப் புள்ளியிட்டால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது:
- க ணி ய் நந் தா ஸி ரி ய கு அன தமம் ஈதா நெடி ஞ் சழியான்
- ஸலகன் இளஞ் சாடிகன் தந்தைய் சடிகான் செயிய பானிய்
இதில், நந்தாஸிரியகு என்பதில் உள்ள ஸகரமும் தமம் என்பதிலுள்ள தகரமும் ஸலகம் என்பதில் உள்ள ஸகரமும் பிராகிருத வடமொழி எழுத்துக்கள்.
இந்தக் கல்வெட்டை அறிஞர்கள் சிலர் படிக்கமுயன்று தங்களுக்குத் தோன்றியபடி படித்துப் பொருள்கூறியுள்ளனர். அவர்-கள் படித்துப் பொருள் கூறியதைப் பார்ப்போம். திரு.எச்.கிருட்டிண சாத்திரி இதைக் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:7
- காணிய ந(ா)ந தாஸிரியகு அனா பாம இ தா ந டி ஞ சாட்டியனா
- ஸால(ா) கானா ஈஸாஞ் சாடிகானா தாநதைய சாடிகான செஇயா பாளிய
இவ்வாறு படித்த இவர் ழி யை ட்டி என்று படித்துள்ளார். சாழியன் என்பதைச் சாட்டிகன் என்று படித்து, இஃது இக்கல்வெட்டில் இரண்டு இடங்களில்வருகிற சாடிகன் என்பதன் வேறுவடிவம் என்று கூறுகிறார். கடைசியில் வருகிற செயிய என்பது சைத்யானி என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார். இறுதியில் இருக்கிற பாளிய் என்பது பால்ய என்னுஞ் சொல்லின் திரிபு என்கிறார்.
திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இந்தக் கல்வெட்டெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:8
“கா ணியன் நடா ஸிரி யகு அன தமாம இதர நடிஞ்
சாறியன் ஸாலாகன் இளஞ்சாறிகன் தாந்தைய்
சாறிகான் செ இய பாளிய்”
காணியன் என்பது கரணியன். கரணியன் என்பது அநுலோம (கலப்பு) சாதியைக் குறிக்கிறது. நடா என்பது நாத (தலைவன்) என்னும் பொருள் உள்ள சொல். யகுஅன் என்பது யக்ஷன் என்னுஞ் சமற்கிருதச் சொல். பாளிய் என்பது பாழி.
“கரணி குலத்தில் பிறந்த புகழ்பெற்ற தலைவனான ஸ்ரீயக்ஷன் இந்தத் தருமத்தைச் செய்தான். இந்தச் சத்தியியத்தை அமைத்தவன் நெடுஞ்சாறிகளின் மைத்துனனும் (சட்டகன்) இளஞ்சாறிகளின் தந்தையுமான சாடிகன்.”
திரு.சி. நாராயணராவ் இந்தக் கல்வெட்டெழுத்தைப் பிராகிருதமொழி என்று தவறாகக் கருதிக்கொண்டு முதலில் பிராகிருதமாகப் படிக்கிறார். பிறகு அந்தப் பிராகிருதத்தைச் சமற்கிருதமாக அமைக்கிறார்.9
“காணிய நா நதா ஸிரியகு அநா காமம்
இதர நடிஞா சாட்டியந ஸ் இயகா நா இளாந
சாடிகா ந தாநதைய; சாடிகாந சே இய பாளிய” (பிராகிருதம்)
“கணகாநாம் நாதா(நாம்) ஸ்ரீயக்ஷாணாம் தர்மம்,
இதா நர்திநாம் ஸார்த வாஹகநரம் ஸிம்
ஹலாநாம் ஸ்ரேஷ்டிகா நாம் சைத்ய பாலிகா” (சமற்கிருதம்)
திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்.10
“காணிய நாந்தாஸிரி யகஅன் தமாம்
இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான்
இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்”
(இவ்வாறு படித்துப் பிறகு இதன் வாசகத்தை இவ்வாறு அமைக்கிறார்)
“கணிய நந்த - (ஆ) ஸிரியக உவன் த(ம்)மம்
இத(உ)அ நெடிஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகள்
தந்தைய் சடிகன் செஇய பளிய்”
(இதற்கு இவர் இவ்வாறு பொருள்கூறுகிறார்)
அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தன் என்னும் துறவிக்குப் படைக்கப்பட்டது. நெடுஞ்செழியனின் மைத்துனனும் (ஸாலகன்) (மைத்துனியின் கணவன்) இளஞ்சடிகளின் தந்தையுமான சடிகனால் இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது.
திரு.டி.வி. மகாலிங்கம் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு படித்துப் பொருள்கூறுகிறார்.11
“கணிய நந்த ஸிரிய் கு அன் ஏமம் இத
நெடிஞ் சழியன் ஸலகன் இளஞ்சடிசன் தந்தைய்
சடிகன் செய் பாளிய்”
(இவ்வாறு படித்துப் பிறகு சில சொற்களுக்கு விளக்கங்கூறுகிறார்) கணி-சோதிடன். நந்த என்பது குபேரனுடைய நிதிகளில் ஒன்றின் பெயர். அல்லது குபேரனுடைய ஓர் ஊழியனின் பெயர். ஸிரிய் என்பது ஸ்ரீ. குஅன் என்பது ஒருவனுடைய பெயர். அது குபேரனுடைய பெயர். இது குஹ்ய, குஹ்யக என்னு இயக்கரைக் குறிக்கிறது. ஏமம் என்பது ஹேமம் என்பதன் திரிபு. இதற்குப் பொன் என்பது பொருள். இவ்வாறு சில சொற்களுக்கு விளக்கங்கூறினபிறகு இவ்வாறு பொருள் கூறுகிறார். “நந்த ஸிரி குபேர (நந்த ஸ்ரீயக்ஷ) என்னும் சோதிடனால் கொடுக்கப்பட்ட பொன்னைக்கொண்டு இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது என்று முடிக்கிறார்.
இந்தப் பிராமி எழுத்து வாசகத்தையும் இதன் பொருளையும் நாம் ஆராய்வோம்.
“காணி ய் நாந்தா ஸிரிய்கு அன தமாம்
ஈதா நெடிஞ் சாழியான் ஸாலாகான்
ஈளஞ் சாடி கான் தாந்தைய் சடிகான்
செ ஈ யா பா ணிய்”
இதில் சில எழுத்துக்கள் நெடிலாக எழுதப்பட்டுள்ளன. பட்டிப்பரோலு கல்வெட்டின் வாய்பாடுப்படி,12 நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாக அமைத்துப் படித்தால் இதன்வாசகம் இவ்வாறு அமைகிறது:
“கணிய் நத்தஸிரிக்கு அன தமம்
ஈதா நெடிஞ்சழியன் ஸலகன்
ஈளஞ் சடிகன் தந்தைய் சடிகன்
செஈய பளிய்”
இதன் பொருளைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்கிக் கூறவேண்டும். கணிய்-ஈற்றில் யகரமெய் சேர்த்து எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லின் சரியான வாசகம் கணி என்பது. இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகரமெய் சேர்த்து எழுதுவது அக்காலத்து வழக்கம். கணி என்பதன் பொருள் வான நூலை அறிந்தவர் (கோள்களைக் கணிப்பவர்) என்பது. கணியன் பூங்குன்றனார் என்னும் பெயரைக் கருதுக. கணியன் பூங்குன்றனார் நற்றிணை 226ஆம் செய்யுளையும் புறம்.192ஆம் செய்யுளையும் பாடியவர். இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற கணி என்பவர் வானத்திலுள்ள கோள்களைக் கணிப்பவர். நந்தஸிரிய்கு என்பது தவறாகக் கற்றச்சனால் எழுதப்பட்டுள்ளது. இதன் சரியான சொல் நந்தியாசிரியற்கு என்றிருக்க வேண்டும். நந்தியாசிரியர் என்பது இந்தக் குகையில் வசித்த முனிவரின்பெயர். அவர் வானநூலைக் கணிக்க வல்லவர் ஆகையால் ‘கணிந்தியாசிரியர்’ என்று கூறப்பட்டார்.
அன என்றிருப்பது ஆன என்றிருக்க வேண்டும். இது கற்றச்சன் செய்த பிழை. தமம் என்றிருப்பது தம்மம் என்றிருக்க வேண்டும். இதன் பொருள் தர்மம் (அறம்) என்பது. ஈதா என்பது ஈந்தான் என்றிருக்கவேண்டும். இந்தத் தர்மத்தை ஈந்தவன் என்பது இதன் பொருள். நெடிஞ்சழியன் என்று எழுதப்பட்டிருப்பது நெடுஞ் செழியன் என்றிருக்கவேண்டும். செ என்னும் எழுத்தை ச என்று எழுதியிருக்கிறான் கற்றச்சன். ஸலகன் என்னும் சொல் பிராகிருத மொழிச் சொல். இதன் பொருள் தெரியவில்லை. ஐ.மகாதேவன் இதற்கு கசலன் (மைத்துனியின் கணவன்) என்று பொருள் கூறுகிறார். இது சரி என்று தோன்றவில்லை. கேசவன் (சேனைத் தலைவன்) என்னும் சொல் இப்படித் தவறாக எழுதப்பட்டதோ என்று ஐயமாக இருக்கிறது.
இளஞ்சடிகன். இது பாண்டியன் நெடுஞ்செழியனுடை சேவகன் பெயர். தந்தைய் என்னும் சொல்லின் ஈற்றில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. இகர ஈறு ஐகார ஈற்றுச் சொற்களின் இறுதியில் யகர மெய் இட்டு எழுதுவது அக்காலத்து வழக்கம். அதன் படி தந்தை என்னும் இச் சொல்லின் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப் பட்டிருக்கிறது. சடிகன் என்பது இளஞ்சடிகனுடைய தந்தையின் பெயர் செயிய என்பது செய்த என்னும் பொருள் உள்ளது. பளிய் என்பது ‘பள்ளி' என்பதன் திரிபு. இகர மெய்யீற்றுச் சொல்லாகையால் இதன் இறுதியில் யகரமெய் இட்டு எழுதப்பட்டிருக்கிறது. பள்ளி என்பது பௌத்த சைன சமயத்துத் துறவிகள் தங்கியிருக்கும் இடம்.
இது கல்வெட்டின் கருத்து இது: கணியரும் நந்தி என்னும் பெயரையுடையவருமான ஆசிரியருக்கு அறமாக இந்த மலைக்குகை கொடுக்கப்பட்டது. இதைக் கொடுத்தவன் (பாண்டியன்) நெடுஞ்செழியன். அரசனுடைய சேவகனாகிய இளஞ்சடிகனுடைய தந்தையான சடிகன் என்பவன் இந்தப் பள்ளியை (கற்படுக்கைகளை) அமைத்தான்.
கணி நந்தாசிரியர் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய குரு என்று தெரிகிறார். இந்தப் பாண்டியன் நெடுஞ்செழியன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன்.
அரிட்டாபட்டிக் கழுகுமலையில், இன்னொரு குகையில் இன்னொரு பிராமி எழுத்துக் கல்வெட்டு இதே பாண்டியன் நெடுஞ்செழியனால் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டும் 1906ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
முன் கல்வெட்டை ஆராய்ந்த அறிஞர்கள் இந்தக் கல்வெட்டை ஆராயவில்லை. எச்.கிருட்டிண சாத்திரியும், கே.வி.சுப்பிரமணிய அய்யரும், சி.நாராயணராவும், டி.வி.மகாலிங்கமும் இந்தக் கல்வெட்டைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. இந்தக் கல்வெட்டு இருக்கிறது என்றுகூட அவர்கள் குறிப்பிடவில்லை. முன் கல்வெட்டெழுத்துப் போன்றே இந்தக் கல்வெட்டும் பாண்டியர் வரலாற்றுக்கு மிக முக்கியமானது.
திரு. ஐ.மகாதேவன் இந்தக் கல்வெட்டைப்பற்றி எழுதியுள்ளார். அவர் இந்தப் பிராமி எழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்:13
“காணிய் நாந்தா அஸிரிய் ஈகுவ அன்கே தம்மாம்
ஈத்தா நெடுஞ்சாழியான் பானா அன் காடால அன்
வாழுத்திய் கொட்டு பித்தா அ பர்ஸிஇய்”
திரு.ஐ.மகாதேவன் இதை இவ்வாறு படித்துப் பொருள்கூறுகிறார்:
‘கணிய்’ நந்தா ஆஸிரிய்கு உவன் தம்மன்
ஈத்தா நெடுஞ்சழியன் பணவன் கடலன் வழுத்திய்
கொட்டுபித்த பளிஇய்'
இதற்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:
‘அங்கு (உவன்) வசிக்கிற கணியன் நந்தா ஸிரியற்குத் தருமம்.
நெடுஞ்செழியனி பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுத்தி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’
(இவர் இதையே இன்னொரு வகையாகவும் படிக்கிறார்)
‘அங்கே வசிக்கிற கணி நந்தாஸிரியற்கு கொடுக்கப்பட்டது. நெடுஞ்செழியன் பணவன் (பஞ்சவன்) கடலன்வழுதி இந்தப் பள்ளியைக் கொடுப்பித்தான்’.
(இதற்கு இவர் இவ்வாறு விளக்கங்கூறுகிறார்)
‘பண’ என்பது ‘பஞ்ச’ என்பதன் திரிபு. பணவன் என்பது பஞ்சவன் என்னும் பொருளுள்ளது. பஞ்சவன் என்பது பாண்டியர்களுக்குப் பெயர். கடலன் என்பதும் பாண்டியனுடைய பெயர். கடல்களுக்குத் தலைவன் என்பது இதன்பொருள். கடலன் என்பதைக் கடல் நட்சத்திரத்தில் (சதய நட்சத்திரத்தில்) பிறந்தவன் என்றும் கொள்ளலாம். கடல் நட்சத்திரம், கடல் தெய்வமாகிய வருணனுடன் தொடர்புள்ளது. பிறந்த நட்சத்திரத்தின் பெயரை அரசர்களுக்கு இடுவது வழக்கம். வழுதி என்பது பாண்டியருக்குரிய சிறப்புப் பெயர். இவ்வாறு இவர் இந்தக் கல்வெட்டெழுத்துக்கு இரண்டு பொருள்களைக் கூறுகிறார். கணியன் நந்தி ஆசிரியருக்கு நெடுஞ்செழியனுடைய பணயன் (ஊழியன்) ஆன கடலன் வழுதி இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது ஒரு பொருள். நெடுஞ்செழியன் பஞ்சவன் கடலன் வழுதி என்னும் பெயருள்ள பாண்டியன், கணி நந்தி ஆசிரியர்க்கு இந்தப் பள்ளியைக் கொடுத்தான் என்பது இன்னொரு பொருள்.
இந்தப் பிராமிக் கவ்வெட்டெழுத்தை நாம் படித்துப் பொருள் காண்போம். பட்டிப் பரோலு எழுத்தின் வாய்பாட்டுப்படி நெட்டெழுத்துக்களைக் குற்றெழுத்தாகக்கொண்டு படித்தால் இதன் வாசகம் இவ்வாறு அமைகிறது:
“கணிதி நந்த அஸிரிய் இகுவ் அன்கெ தம்மம்
ஈத்தா நெடுஞ்செழியன் பணஅன் கடலஅன்
வழுத்திய் கொட்டுபித்த அ பளிஇய்”
இந்தக் கல்வெட்டின் கருத்தைக் கூறுவதற்கு முன்பு இதிலுள்ள சொற்களை விளக்க வேண்டியிருக்கிறது.
கணிய்: இந்தச் சொல்லை முன் கல்வெட்டில் விளக்கினோம். மறுபடியும் இங்கு விளக்கவேண்டியதில்லை. நந்த அஸிரிய் நந்தி ஆசிரியர் என்பதை இவ்வாறு எழுதியுள்ளார். இதுவும் முன்னமே விளக்கப்பட்டது. இகுவ் அனகே. இதன் சரியான உருவம் தெரியவில்லை. ‘இவனுக்கு’ ‘இவனுக்குரிய’ என்னும் பொருளுள்ளதாகத் தோன்றுகிறது. தம்மம் : இது பாலி (பிராகிருத) மொழிச் சொல். சமற்கிருதத்தில் இது தர்மம் என்று எழுதப்படும். இதன் பொருள் அறம் என்பது. இந்தச்சொல் முன் கல்வெட்டில் தமம் என்று எழுதப்பட்டுள்ளது. ஈத்தா அ நெடுஞ்சழியன்: ‘ஈத்தான் நெடுஞ்செழியன்’ என்று எழுத வேண்டியது இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. ஈத்தான் - ஈந்தவன், கொடுத்தவன். செழியன் என்பது சழியன் என்று தவறாக எழுதப்பட்டுள்ளது. செழியன் என்பது பாண்டியனுடைய பெயர். பணஅன் என்பது பணயன் என்று எழுதப்படவேண்டும். பணயன் என்றும் பணயகாரன் என்றும் பாண்டியரின் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும், எழுதப்பட்டுள்ளன. பணயன் என்பதன் பொருள் அரசருடைய தச்சன் என்பது. அரசருடைய தச்சனைப் பெருந்தச்சன் என்றும் கூறுவர். இச்சொல் இங்குப் பாண்டியனுடைய கற்றச்சனைக் குறிக்கிறது. பாண்டியனுடைய கற்றச்சன் இந்தக் குகையில் கற்படுக்கைகளை அமைத்தவன். கடலன் என்பது பணயனான கற்றச்சனுடைய இயற்பெயர். கடலன் என்னும் பெயர் சங்க காலத்தில் பெயராக வழங்கப்பட்டது. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் சங்ககாலத்தில் இருந்தார். அவர் அகநானூறு 72ஆம் செய்யுளைப் பாடினவர். வழுத்தி என்பது வழுதி என்றிருக்க வேண்டும். வழுதி என்பது பாண்டியரின் பொதுப்பெயர். பாண்டியன், பணயன் கடலனாகிய கற்றச்சனுக்கு வழுதி என்று சிறப்புப் பெயர் அளித்திருந்தான் என்பது தெரிகிறது. கொட்டு பித்த அ என்பது கொத்துவித்த (பாறையைக் கொத்திக் கற்படுக்கையைச் செய்வித்த) என்னும் பொருளுடையது. இறுதியில் அகர எழுத்து மிகையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இச்சொல் கொத்துவித்த என்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பளிஇய் என்பது பள்ளி என்று எழுதப்படவேண்டும். கற்றச்சன் இவ்வாறு எழுத்துக்களை விட்டும் சேர்த்தும் வெட்டியிருக்கிறான்.
சோதிடத்தில் வல்லவரான அரச குருவாகிய நந்தி ஆசிரியருக்கு இந்த மலை தானமாகக் கொடுக்கப்பட்டது. இதைத் தானங்கொடுத்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். பாண்டியனுடைய பணயனாகிய கடலன் வழுதி இக்குகையில் கற்படுக்கைகளைக் கொத்துவித்தான் என்பது இக்கல்வெட்டின் கருத்து.
இந்த இரண்டு கல்வெட்டுக்களிலிருந்து அறியப்படுவது: ஆசிரியராகிய (குருவாகிய) கணி நந்தி என்பவருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இரண்டு மலைக்குகைகளைத் தானஞ் செய்தான். இரண்டு குகைகளைத் தானஞ் செய்தபடியாலே, அவருக்குப் பல சீடர்கள் இருந்தனர் என்பது தெரிகிறது. நெடுஞ்செழியனுடைய சேனைத் தலைவனுடைய தந்தையான சடிகன் முதற்குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான். பாண்டியனின் பணயகாரனாகிய கடலன்வழுதி இரண்டாவது குகையில் கற்படுக்கைகளைச் செய்வித்தான்.
அடிக்குறிப்புகள்
1. P. 211. Early South Indian Palaeography.
2. P. 60 No. 3 Seminar on Inscriptions 1966.
3. 209-210. Early South Indian Palaeography.
4. P. 210-211. Early South Indian Palaeography.
5. P. 61 Seminar on Inscriptions 1966.
6. A New Tamil Brahmi Inscription. The Sunday Standard, Madras. Sunday Septem- ber, 26, 1971.
7. The Caverns and Brahmi Inscriptions of Southern India by H.Krishna Sastri, pp. 327-348.
Proceedings and Transactions of the First Oriental Conference, Poona (5, 6, 7 November 1919.)
8. PP. 290 - ..... Proceedings and Transactions of the Third All India Oriental Conference (1924).
9. The Brahmi Inscriptions of South India C.Narayana Rao pp. 362-376. New Indian Antiquary Vol. I. 1938 - 39.
10. P. 60 Texts and Transactions of Tamil Brahmi Inscriptions I. Mahadevan Seminar on Inscriptions Madras 1966. Historical Tamil-Brahmi Inscriptions paper read at the 1st World Tamil Seminar Conference held at KwalaLampur 1966.
11. PP. 207-209 Early South Indian Palaeography. T.V. Mahalingam Madras 1967.
12. Battiprolu Script, Epigraphia Indica Vol. II. pp. 323 - 24.
13. P. 60 Test and Translations of Tamil Brahmi Inscriptions. Seminar on Inscriptions 1966. Historical Tamil-Brahmi Inscriptions. I. Mahadevan. Paper read at the 1st World Tamil Seminar Conference held at KwalaLampur 1966.