மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/014


11. கருங்காலக்குடி பிராமி எழுத்து

மதுரை வட்டத்தின் மேலூருக்கு வடக்கே எட்டுக்கல் தொலைவில் கருங்காலக்குடி இருக்கிறது. இவ்வூருக்கு அருகில் இருக்கிற குன்றுகளில் ஒன்று ‘பஞ்சபாண்டவர் குட்டு’ என்று கூறப்படுகிறது. குன்று என்னும் சொல் குட்டு என்று கூறப்படுவது கவனிக்கத்தக்கது. இந்தக் குன்றில், இடைக்காலத்தில் செதுக்கியமைக்கப்பட்ட அருகக் கடவுளின் திருமேனிகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இவை நம்முடைய ஆராய்ச்சிக்கு உரியவை அல்ல. இந்தக் குன்றின்மேலே இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த குகையும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் இருக்கின்றன. இவை 1909 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல்வெட்டெழுத்து 1911 ஆம் ஆண்டின் தொகுதியில் 561ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குகையையும் பிராமி எழுத்தையும் பற்றி 1912ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் 57 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அறிக்கையிலேயே இந்தப் பிராமி எழுத்தின் நிழற்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.1

இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து பதினொரு எழுத்துக்களைக் கொண்ட சிறு வாக்கியம். இந்த எழுத்தின் வரிவடிவம் கீழே காட்டப்பட்டுள்ளது. வலப்புறத்தில் இரண்டாவது எழுத்து தெளிவாக இல்லாமல், கல்லில் உள்ள புரைசலோடு சேர்ந்து வட்டவடிவமாகக் காணப்படுகிறது.

திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார் :

‘(ஏ) ட்டு யர (உ) ர அரி தினா பாளி’ (வலப்புறத்து இரண்டாம் எழுத்தை இவர் வடமொழி ட்ட என்னும் எழுத்து என்று கருதுகிறார்) முதல் ஐந்து எழுத்துக்களும் ஓர் ஊரின் பெயரைக் குறிக்கின்றன. கடைசி இரண்டு எழுத்துக்கள் ‘பாளி’ என்பது, என்று இவர் விளக்கங்கூறியுள்ளார்.2

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்:

‘எட் டுய ரூ ர அரிதின் பாளி’

முதல் சொல்லின் இறுதியில் ன் சேர்ந்து எட்டியூரன் என்று படித்து ‘எட்டியூர் அரிதின் என்பவருடைய குகை’ என்று விளக்கங்கூறியுள்ளார்.3

திரு. நாராயண ராவ், ‘எட்டு யார ஹாரீ தானாம் பாலி-(கி?)’ என்று சமற்கிருதப்படுத்தி எழுதினார்.4

திரு. ஐராவதம் மகாதேவன், வலப்பக்கத்து இரண்டாம் எழுத்தை ழை என்று படித்துள்ளார். (இவ்வெழுத்துடன் கலந்துள்ள புரைசல் இவ்வாறு கருதும்படி இருக்கிறது) இவர் கீழ்க்கண்டவாறு படித்துப் பொருள் கூறுகிறார்:

‘எழை ஊர் அரிதின் பாளி’

எழையூர் அநிதி என்பவருடைய ஆசிரமம்’5 திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், ‘எட்டுய உர அரிதித பாளி’ என்று படித்து ‘(எ)ட்டு யூர் அரிதின் பாளி’ என்று சொல் பிரித்து, ‘எட்டுயூர் (எட்டியூர்) அரிதின் (ஹரித என்பவரின்) படுக்கை’ என்று பொருள் கூறுகிறார்.6

இந்தக் கல்வெட்டின் வலப்புறத்து இரண்டாவது எழுத்து புரைசலுடன் கலந்து தெளிவாகத் தெரியவில்லை. இதை வட்டவடம் என்று கொண்டு சமற்கிருத இரண்டாவது ட்ட என்னும் எழுத்து என்று கருதினார். திரு. கிருட்டிண சாத்திரி. திரு. ஐ. மகாதேவன் இதை ழை என்று கொண்டார். இது தமிழ் டகர எழுத்து. இதை,

எ டய் ஊர் அரிதின பாளி

என்று படிக்கலாம். எடய் என்பது எட்டிய் என்று இருக்க வேண்டும். டகரம் இரட்டித்து ட்டி என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் இதனொடு யகரமெய்(ய்) சேர்ந்திருப்பதுதான். இகர ஈற்றுச் சொற்களின் இறுதியில்(ய்) யகரமெய் சேர்த்து அக்காலத்தில் எழுதப்பட்டிருப்பதை வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் பார்க்கிறோம். ஆகவே, இந்த முதற்சொல் எட்டி

என்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, டகரம் புரைசலோடு சேர்த்திருப்பதனால் இதன் சரியான வடிவம் தெரியவில்லை. இதை ‘எட்டிய்’ என்று படிக்கலாம்.

இரண்டாவது சொல் ஊர் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. மூன்றாவது சொல் அரிதின என்பது. இதை அரிதின் என்று படிப்பதை விட அரிதின என்று படிப்பதே சரி என்று தோன்றுகிறது. அரிதின என்பது அரிதியின் உடைய என்றும் பொருள் உள்ளது. என்பது உடைய இ அது என்னும் ஆறாம்வேற்றுமை உருபுச் சொற்கள். பாளி என்பது பாழி என்னும் பொருள் உள்ள சொல். எட்டியூர் அநிதியினுடைய பாழி என்பது இதன் வாக்கிய அமைதி. எட்டியூரில் வாழ்ந்த அரிதி என்பவர் இந்தப் பாழியை (குகையை)க் கொடுத்தார் என்பது கருத்து.


அடிக்குறிப்புகள்

1. Annual Report on South Indian Epigraphy for 1912 Plate facing p. 57.

2. Proceedings and Transactions of the First All Indian Oriental Conference p. 208 - 217 Poona 1919.

3. Proceedings and Transactions of the Third All Indian Oriental Conference, Madras, 1924.

4. New India Antiquary Vol. I.

5. P. 63 Seminar on Inscriptions 1966.

6. P. 213 Early South Indian palaeography.