மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/021
18. ஐயர்மலை பிராமி எழுத்துக்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழித்தலை வட்டத்தில் ஐயர்மலை என்னும் ஊரில் ஐயர்மலை இருக்கிறது. திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள குழித்தலை நிலையத்திலிருந்து ஆறு கல் தொலைவில் இந்த மலை இருக்கிறது. ஐவர் மலை என்னும் ஊர் இனாம் சத்திய மங்கலத்தைச் சார்ந்தது. ஐயர்மலை என்னும் பெயர் பிற்காலத்தில் அமைந்தது போலத் தோன்றுகிறது. இதன் பழைய பெயர் ‘ஐவர்மலை’என்றிருக்கவேண்டும். ஏனென்றால் பழைய மலைக் குகைகள் ஐவர்மலை என்றும், பாண்டவமலை என்றும், பஞ்ச பாண்டவமலை என்றும் வேறு சில இடங்களில் பெயர் கூறப்படுவதை அறிகிறோம். மலையில் உள்ள குகைக் குன்றுகள் பாண்டவரோடு இணைத்துப் பெயர் கூறப்பட்டன. ஆகவே ஐயர்மலை என்று இப்போது கூறப்படுகிற பெயர் பழங்காலத்தில் ஐவர்மலை என்று இருந்து பிற்காலத்தில் ஐயர்மலை என்று வழங்குகிறதுபோலத் தோன்றுகிறது.
ஐயர்மலை என்னும் இவ்வூரின் நடுவில் இருக்கிற ஐயர்மலை மேல் ஒரு சிவன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை இரத்தின கிரீசுவரர் கோயில் என்று கூறுகிறார். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த மலைக்கு வாட்போக்கிமலை என்று பெயர் வழங்கி வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய தேவாரத்தில் வாட்போக்கிமலையில் எழுந்தருளியுள்ள இரத்தினகிரீசுவரரையும் சுரும்பார் குழலியம்மையையும் பாடியுள்ளார்.1 இந்த மலைக்கு மாணிக்கமலை, இரத்தினகிரி என்னும் பெயர்களும் உண்டு.
நம்முடைய ஆராய்ச்சிக்கு உரிய பிராமி எழுத்துக் கல்வெட்டு இந்த மலையின் உச்சியில் இருக்கிறது. இந்த மலைமேல் வேறு இடத்தில் மூன்று இடங்களில் கற்படுக்கைகள் உள்ளன. இவை கடைச் சங்க காலத்தில் கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை. மூன்று இடங்களில் உள்ள கற்படுக்கைகளுக்கு இவ்வூரார் ‘மஞ்சனமெத்தை’ என்று பெயர் கூறுகிறார்கள். முதல் மஞ்சன மெத்தை, இரண்டாம் மஞ்சன மெத்தை. இவற்றுக்கு மேலேயுள்ளதை மூன்றாம் மஞ்சன மெத்தை என்று பெயர் கூறுகிறார்கள். இந்தப் பெயர் ‘மஞ்சமெத்தை’ என்றிருக்க வேண்டும். மஞ்சன மெத்தை என்று கூறுவது பாமரர் பகர்ச்சி என்று தோன்றுகிறது. மஞ்சனம் என்றால், குளித்தல் நீராடுதல் என்பது பொருள்; மஞ்சம் என்பதற்கு இருக்கை, படுக்கை, உட்காரும் இடம் என்றும் பொருள். ஆகவே, கற்படுக்கை என்னும் பொருளில் மஞ்ச மெத்தை (மஞ்சம்-படுக்கை. மெத்தை- நிலை) என்று வழங்கப்பட்டுப் பிற்காலத்தில் மஞ்சன மெத்தை என்று தவறாக வழங்கப்படுகிறது என்பது தெரிகிறது. உயரத்தில் உள்ள மூன்றாவது மஞ்ச மெத்தையில் ஆறு கற்படுக்கைகளும் நம்முடைய ஆராய்ச்சிக்குரிய பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இந்தக் கல்வெட்டு அண்மையில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எழுத்துக்களின் வரிவடிவம் இது:2
ப னை து றை வெ ஸ ன அ த ட அ ன ம
இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கலாம்.
பனைதுறை வெஸன் அதடஅனம்.
இது மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியம். அவை பனைதுறை வெஸன் அதடஅனம் என்பவை இதனை விளக்குவோம்: முதல் நான்கு எழுத்துக்கள் பனைதுறை என்பவை. பனைதுறை என்பது ஓர் இடத்தின் பெயர். அடுத்த சொல்லில் கூறப்படுகிற வெஸன் என்பவர் இவ்வூரில் இருந்தவர் என்று தெரிகிறது. இரண்டாவது சொல் ‘வெஸன்’ என்பது. இதை வேஸன் என்றும் படிக்கலாம். வேஸன் என்பதில் ஸ என்பது வடமொழி எழுத்து. வெஸன் அல்லது வேஸன் என்பது தமிழ்ப் பெயராகத் தோன்றவில்லை; இவர் பௌத்தராகவோ, சைனராகவோ இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இந்தப் பெயருக்கு அடுத்துள்ள ‘அதடஅனம்’ என்னும் சொல்லைக்கொண்டு, இவர் இந்த கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார் என்று தெரிகிறது. மூன்றாவது சொல்லாகிய அதட அனம் என்பது தவறாக எழுதப்பட்டிருக்கிறது. அகரத்தை அடுத்துள்ள தகர எழுத்து நிகரமாக எழுதப்பட வேண்டும். அதற்கு அடுத்த டஅ என்னும் எழுத்துக்களை டா என்றும் எழுதியிருக்க வேண்டும். ஆனால், அக் காலத்து வழக்கப்படி டஆ என்று எழுதப்பட்டுள்ளது. இதை டா என்று படிக்க வேண்டும். டா என்பதிலும் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்து ட்டா என்று எழுதப்பட வேண்டும். ட் என்னும் டகர ஒற்று
விடுபட்டிருக்கிறது. தவறாக எழுதப்பட்டுள்ள இந்தச் சொல்லை அதிட்டாடனம் என்று திருத்திப் படிக்க வேண்டும்.
சித்தன்னவாசல் பிராமிக் கல்வெட்டிலும் இந்தச் சொல், அதிடஅனம் என்று எழுதப்பட்டிருக்கிறது. (சித்தன்னவாசல் பிராமி எழுத்து காண்க.) ஆனால் புகழியூர் கல்வெட்டில் இந்தச் சொல் அதிட்டானம் என்று சரியாக எழுதப்பட்டிருக்கிறது. அதிட்டானம் என்பது தமிழ்ச் சொல் அன்று. அது பிராகிருத மொழியாகவோ அல்லது சமற்கிருத மொழியாகவோ இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதிட்டானம் என்பது இருக்கை நிலை என்னும் பொருள் உள்ளது போலத் தோன்றுகிறது.
பனைதுறை என்னும் ஊரினரான வெஸன் என்பவர் முனிவர்களுக்காக இந்தக் கற்படுக்கைகளை அமைத்தார் என்பது இந்தக் கல்வெட்டின் கருத்து.
அடிக்குறிப்புகள்
1. அப்பர் தேவாரம்: இரண்டாம் திருமுறை ― திருவாட்போக்கி தேவாரம்.
2. ‘கொங்கு’ 15, 8. 73, தேனடை 3. தேனீ 8, பக். 201-203.