மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5/023

2. எழுத்து ஆக்கம்[1]

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக் கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்தி விட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங்களையும், கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான். முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது.

எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவது போல வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். தி காலத்திலே சித்திர எழுத்துக்களைப் பல நாட்டினரும் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. எகிப்து தேசத்திலும் சீன தேசத்திலும் அமெரிக்காக் கண்டத்து மெக்ஸிகோ நாட்டிலும் நமது இந்தியா தேசத்திலும் ஆதிகாலத்தில் ஓவிய எழுத்துக்கள் வழங்கி வந்தன.

நமது இந்தியா தேசத்திலே சிந்து நதிக்கரையில் மொஹஞ்சதாரோ, ஹாரப்பா என்னும் பெயருள்ள இரண்டு நகரங்கள் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறந்த நாகரிகம் உள்ள நகரங்களாக இருந்தன. இந்த நகரங்கள் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்து மறைந்துவிட்டன. அண்மைக் காலத்திலே இந்திய அரசாங்கத்து ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த இடங்களைத் தோண்டிக் கிளறிப் பார்த்தபோது அங்கே பலப்பல பொருள்களைக் கண்டெடுத்தார்கள். அப்படிக் கிடைத்த பொருள்களில், ஒருவகையான சித்திர எழுத்துக்கள் எழுதப்பட்ட முத்திரைகளும் ஏராளமாகக் கிடைத்தன. இதனால் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியாவில் சித்திர எழுத்துக்கள் வழங்கிவந்தன என்பது உறுதியாகத் தெரிகிறது.

மொஹஞ்சதாரோவில் காணப்பட்ட சித்திர எழுத்துக்களைப் படித்து அதன்பொருளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்த பூனா பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் ஹீராஸ் பாதிரியார் அவர்கள், இந்த சித்திர எழுத்துக்கள் திராவிட (தமிழ்) மொழியுடன் தொடர்புடையன என்று கூறுகிறார். சில சித்திர எழுத்துக்கள், குறள் வெண்பாவாக அமைந்திருக்கின்றன என்றும் கூறுகிறார். ஆனால், இவர் கருத்தை புராதன புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. மிகப் பழைய காலத்தில் தமிழ்நாட்டிலும் சித்திர எழுத்துக்கள் வழங்கி வந்தன என்றும், அந்த எழுத்துக்களுக்குக் கண் எழுத்து என்றும் ஓவிய எழுத்து என்றும் உரு எழுத்து என்று வேறு பெயர்கள் உண்டு என்றும் தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது.

“காணப்பட்ட உருவம் எல்லாம்
மாணக் காட்டும் வகைமை நாடி
வழுவில் ஓவியன் கைவினைபோல
எழுதப் படுவது உருவெழுத் தாகும்.”

என்று ஒரு பழைய இலக்கண சூத்திரம் கூறுகிறது.

சித்திர எழுத்துக்கள், எழுதுவதற்குச் சிரமமாக இருந்தது. ஓவிய எழுத்து என்றும், கோடு கருத்துக்களைத் தெளிவாகவும் முழுமையாகவும் தெரிவிக்க முடியாதனவாக இருந்தன. ஆகவேகாலக்கிரமத்தில் புதுப்புது எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கடைசியாக இப்போது வழங்குகிற ஒலி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒலி எழுத்துக்கள் எழுதுவதற்குச் சிரமம் இல்லாமலும் கருத்துக்களை முழுதும் தெரிவிக்கக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.

இந்தியா தேசத்தில் பழைய காலத்திலே சிறப்பாக வழங்கி வந்த ஒலி எழுத்துக்கள் இரண்டு. அவை, கரோஷ்டி, பிராமி என்பவை. கரோஷ்டி, இந்தியாவில் வடமேற்குப் பக்கத்தில் மட்டும் வழங்கி வந்தது. பிராமி எழுத்து வட இந்தியா முழுவதும் வழங்கி வந்தது. பிராமி எழுத்தின் உற்பத்தியைப் பற்றிச் சில கதைகள் கூறப்படுகின்றன. பிரமா கண்டு பிடித்தது பிராமி எழுத்து என்பர் சிலர். ரிஷப தீர்த்தங்கரரின் மகளான பிராமி என்பவள் கண்டுபிடித்தது பிராமி எழுத்து என்பர் ஜைனர்கள். கௌதம புத்தர், சித்தார்த்த குமரன் என்னும் பெயரையுடைய சிறுவராக இருந்த போது பிராமி எழுத்தைக் கண்டு பிடித்தார் என்று க்ஷேமேந்திரர் என்பவர் தாம் இயற்றிய புத்த ஜனனம் என்னும் நூரிலே கூறுகிறார். இந்தக் கதைகளை உண்மையான சான்றுகளாகக் கொள்ளாவிட்டாலும், இவற்றிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. அஃது என்னவென்றால், வடஇந்தியாவில் பண்டைக் காலத்தில் பெரிதும் வழக்காற்றில் இருந்துவந்த எழுத்து பிராமி எழுத்து என்பதே. பிராமி எழுத்து கி.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்து வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலே கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கு முந்திய காலத்திலே வழங்கி வந்த தமிழ் எழுத்து இன்னது என்று இப்போது அறிய முடியவில்லை. ஆனால், ஏதோ ஒருவகையான எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதியாகக் கூறலாம். பாண்டிய நாட்டிலே தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம், என்று மூன்று சங்கங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஏற்படுத்தப்பட்டு முத்தமிழ் நூல்கள் ஆராய்ப்பட்டன என்று வரலாறு கூறுகிறது. அந்தச் சங்கங்களிலே சிவபெருமான், முருகக் கடவுள், கிருஷ்ணன், குபேரன் முதலான கடவுள்கள் அங்கத்தினராக இருந்தார்கள் என்பதையும், அந்தச் சங்கங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்று வந்தன என்பதையும் மிகைபடக்கூறல் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், சங்கங்கள் இருந்தன என்பதையும் அவற்றில் முத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்தச் சங்கங்களிலே தமிழ் நூல்கள் ஆராயப்பட்டன என்றால், அதற்கு ஏதோ ஒருவகையான எழுத்துக்கள் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அந்த எழுத்து இன்னது என்பது இதுவரையில் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே வழங்கிவந்த எழுத்து பிராமி எழுத்துத்தான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால், இதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

வடஇந்தியாவில் வழங்கிவந்த பிராமி எழுத்து தமிழ் நாட்டிற்கு எப்படி வந்தது? பிராமி எழுத்தைத் தென் இந்தியாவிலே பரவச் செய்தவர்கள் பௌத்தபிக்ஷுக்கள் ஆவர். கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி, பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்வதற்காகப் பல நாடுகளுக்கும் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட பிக்ஷுக்கள் இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சென்று பௌத்த மதப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் தம் பௌத்தமதக் கொள்கைப்படி அந்தந்த நாட்டுத் தாய்மொழியிலே பௌத்தமதக் கொள்கைகளை பிரசாரம் செய்துவந்தார்கள் என்றாலும், அவர்கள் எல்லா நாடுகளிலும் ஒரேவிதமாகப் பிராமி எழுத்தே வழங்கி வந்தார்கள். இவ்விதமாகப் பௌத்த பிக்ஷுக்களால் முதல்முதல் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிராமி எழுத்து புகுத்தப்பட்டு வழக்காற்றில் வந்தது. அன்றியும் அசோகச் சக்கரவர்த்தி, தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே பல இடங்களில் அரச சாசனங்களைக் கல்வெட்டுகளில் எழுதி அமைத்திருக்கிறார். அந்தச் சாசனங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தச் சாசனங்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கின்றன. இதனால், அசோக சக்கரவர்த்தி காலத்திலே, அதாவது கி.மு. 3-ஆம் நூற்றாண்டிலே பிராமி எழுத்து தென் இந்தியாவிலும் வழங்கப்பட்டது என்பது நன்கு விளங்குகின்றது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில், சுமார் 600 ஆண்டுகளாகப் பிராமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கிவந்தது. இதற்கு எபிகிராபி சான்றுகள் தமிழ் நாட்டிலே, முக்கியமாகப் பாண்டிய நாட்டிலே மலைக்குகைகளிலும், மலைப் பாறைகளிலும் காணப்படுகின்றன. அழகர்மலை, கழுகுமலை, நாகமலை, சித்தர்மலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங் குளம், முத்துப்பட்டி, அரிட்டாபட்டி, குன்னக்குடி, மருகால்தலை, ஆறுநாட்டார்மலை முதலிய இடங்களில் காணப்படும் தமிழ்ச் சாசனங்கள் பிராமி எழுத்தினாலே எழுதப்பட்டவை. இவைகளைத் தவிர வேறு புதிய எபிகிராபி சான்று இப்போது கிடைத்திருக்கிறது. புதுச்சேரிக்குத் தெற்கே 2 மைல் தூரத்தில் கடற்கரையோரத்திலே அரிக்கமேடு என்னும் ஒரு மேடு இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ஆர்க்கியாலஜி இலாகா அதிகாரிகள் இந்த மேட்டைக் கிளறித் தோண்டிப் பார்த்தார்கள். இங்கிருந்து பல பொருள்கள் அகப்பட்டன. அப்பொருள்களுடன், பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இவை தமிழ்மொழியாக இருக்கின்றன. அரிக்கமேடு, இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே, அதாவது கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்தது என்று ஆர்க்கியாலஜி இலாகா ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தச் சான்றுகளினாலே, கி.மு. 3- ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டிலே தமிழர் பிராமி எழுத்தை வழங்கி வந்தார்கள் என்பது ஐயம் இல்லாமல் தெரிகிறது. தமிழர் பழைமையாக எழுதியிருந்த பழைய எழுத்தைக் கைவிட்டு புதிதாகப் பிராமி எழுத்தை எழுதத் தொடங்கியபோது, தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ள, ழ, ற, ன என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்தில் இல்லாதபடியினால், இவ்வெழுத்துக்களைப் பழைமையாக வழங்கி வந்த எழுத்துக்களில் இருந்தபடியே வழங்கி வந்தார்கள் போலும்.

சுமார் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலே பிராமி எழுத்து மறைந்து வட்டெழுத்து என்னும் புதுவகையான எழுத்து வழங்கத் தொடங்கிற்று. வட்டெழுத்தும், பிராமி எழுத்திலிருந்து உண்டானதுதான். அக்காலத்தில் பனையோலையும், எழுத்தாணி யும் எழுதுகருவிகளாக இருந்தன. பிராமி எழுத்தைப் பனையோலையில் எழுத்தாணியால் எழுதும்போது, அவ்வெழுத்தின் உருவம் மாறுதல் அடைந்து கடைசியில் வட்டெழுத்தாக மாறிவிட்டது. பண்டைக் காலத்தில் சரநாடு என்னும் பெயருடன் தமிழ்நாடாக இருந்து இப்போது மலையாள நாடாக மாறிப்போன கேரள நாட்டிலே முற்காலத்தில் வழங்கி வந்த கோலெழுத்து என்பதும் வட்டெழுத்தின் திரிபேயாகும். வட்டெழுத்து தமிழ் நாட்டில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10– ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தது. பிறகு வட்டெழுத்து மறைந்து இப்போது வழக்காற்றில் இருந்து வருகிற கிரந்த எழுத்து வழங்கி வருகிறது.

கிரந்த எழுத்தை உண்டாக்கினவர்கள் தென்னாட்டில் இருந்த பௌத்தரும் ஜைனரும் ஆவர். பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதநூல்களை மாகதி, அர்த்தமாகதி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதியிருந்தார்கள். அவர்கள் தமிழிலே தனித்தமிழ் நூல்களை எழுதியதோடு, தமது மதச்சார்பான நூல்களை பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் மொழியில் உள்ள சொற்களைக் கலந்து மணிப்பிரவாள நடையில் வசன நூல்களை எழுதினார்கள். மணிப்பிரவாள நூல்களை எழுதுவதற்கு, தமிழில் க்ஷ, ஜ, ஷ, ஹ, ஸ முதலான எழுத்துக்கள் இல்லாதபடியினாலே, இவ்வெழுத்துக்களை எல்லாம் அமைத்துக் கிரந்த எழுத்து என்னும் ஒருவகை எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தினாலே மணிப்பிரவாள நூல்களையும், பிராகிருத சமஸ்கிருத நூல்களையும் எழுதினார்கள். இந்தக் கிரந்த எழுத்தையும் அவர்கள் பிராமி எழுத்தில் இருந்துதான் உண்டாக்கினார்கள்.

இவ்வாறு பௌத்த ஜைனர்களாலே உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்து முதலில் அந்த மதத்தினரால் பயிலப்பட்டு வந்தது. பின்னர், பிற்காலத்துச் சோழ அரசர்கள் இந்தக் கிரந்த எழுத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். ஆகவே, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட ராஜராஜன் (முதலாவன்) பாண்டிய நாட்டை வென்று அந்த நாட்டிலும் கிரந்த எழுத்தை வழங்கத் தொடங்கினான் என்பதற்கு எபிகிராபி சான்று இருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்திலே, பாண்டி நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்து மறைந்து கிரந்த எழுத்து வழங்கத் தொடங்கியது. இந்தக் கிரந்த எழுத்துக் கி.பி. 10-ஆம் நுற்றாண்டு முதல் இப்போதும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து பிராமி எழுத்து தமிழ் நாட்டிலே வழங்கத் தொடங்கி, அதுவே காலக்கிரமத்தில் வட்டெழுத்தாகவும், கோலெழுத்தாகவும், கிரந்த எழுத்தாகவும் வெவ்வேறு உருவம் அடைந்து இன்றளவும் வழங்கி வருகிறது.

தமிழ் எழுத்து மட்டுந்தான் பிராமி எழுத்திலிருந்து உண்டாயிற்று என்று நினைக்கவேண்டாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி, தேவநாகிரி முதலிய எழுத்துக்கள் எல்லாம் பிராமி எழுத்திலிருந்தே உண்டானவை. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள எல்லா மொழி எழுத்துக்களும் லத்தீன் எழுத்து எவ்வாறு தாய் எழுத்தாக இருந்ததோ அது போன்று, இந்திய மொழியில் உள்ள எழுத்துக்களுக்கெல்லாம் தாய் எழுத்தாக இருந்தது பிராமி எழுத்தேயாகும்.

  1. ✽அகில இந்திய வானொலியில், சென்னை நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது. இசைவு பெற்று வெளிவருகிறது.
    ✽ செந்தமிழ்ச் செல்வி.சிலம்பு. 25. 1949. வெளி வந்தது.